Monday, July 6, 2015

வேகமாகப் பரவும் ஊழல் கறை


ஊழல், உறவினர்களுக்குச் சலுகை மற்றும் சலுகை சார் முதலாளித்துவம் ஆகிய ஊழல் கறை மோடி அரசாங்கத்திலும், பாஜக மாநில அரசுகளிலும் இருப்பது இப்போது வெளியே வரத் தொடங்கி இருக்கின்றது. நரேந்திர மோடியும், பாஜகவும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஐமுகூ அரசாங்கத்தின் கீழ் நடைபெற்ற பிரம்மாண்டமான ஊழல்களை முன்னிறுத்தின. நரேந்திர மோடி, காங்கிரஸ் ஆட்சியின்கீழ் நடைபெற்ற ஊழல் மற்றும் சூறையாடல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று உறுதி அளித்திருந்தார். பாஜக அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவடைந்ததற்குப்பின்னர் மதுரா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், நாட்டைக் கொள்ளையடித்தவர் களுக்கு நல்ல காலம் கிடையாது, அவர்களுக் குக் கெட்ட காலம்தான் என்றார். மேலும் அவர், “எங்கள்ஆட்சியில் கடந்த ஓராண்டு காலத்தில் ஊழல்கள் அல்லது உறவினர்களுக்குச் சலுகை என்று ஏதேனும் சொல்ல முடியுமா?’’ என்றும் பீற்றிக் கொண்டார்.
பலூனில் ஓட்டை...
இவ்வாறு தற்பெருமை அடித்துக்கொண்ட பின், ஒருசில நாட்களிலேயே, இவர்கள் சவடால் அடித்த நேர்மை மற்றும் சுத்தமான அரசாங்கம் என்கிற பலூனில் ஓட்டை விழுந்துவிட்டது. மத்திய அமைச்சரவையின் மூத்த அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மிகவும் அருவருப்பான செயல் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இவ்வாறு அமைச்சரின் தரும சிந்தைக்கு ஆளாகிஆதரவினைப் பெற்ற நபர் வேறு யாருமல்ல, ஐபிஎல் கிரிக்கெட் ஊழல் `புகழ்’ லலித் மோடி என்பவர்தான். அமைச்சர், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு லலித் மோடி வழக்கு குறித்துபரிந்துரைத்திடுவதற்காக, முறையாகப் பின்பற்றப்பட வேண்டிய அனைத்து நடைமுறை களையும் புறந்தள்ளியது மட்டுமல்ல, அவரது கணவரும் மகளும் லலித் மோடியின் சார்பில் வாதிடும் வழக்குரைஞர்களாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு தன் அமைச்சரவை சகாவிற்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க பிரதமர் பிடிவாதமாக மறுத்து வருவதுடன், மோடியும் பாஜக தலைமையும் அவரது தவறான செயல்களை நியாயப்படுத்தி அவரைப் பாதுகாத்து வருகிறார்கள். லலித் மோடி விவகாரத்தில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, அந்த நபரைப் பாதுகாத்திட எப்படியெல்லாம் செயல்பட்டிருக் கிறார் என்ற விவரங்கள் வெளியாகி நிலைமைகளை மேலும் கறையாக்கியுள்ளன. வசுந்தரா ராஜே, ராஜஸ்தான் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, லலித் மோடி இங்கிலாந்தில் தங்கி இருப்பதற்காக அளித்துள்ள விண்ணப்பத்தில், அப்பேர்வழிக்கு நற்சான்று வழங்கி சாட்சிக் கையொப்பம் இட்டிருக்கிறார். இதில் மிகவும் மோசமான சங்கதி என்னவெனில், அவ்வாறு தான் கையொப்பமிட்டிருப்பதைக் கமுக்கமாக வைத்துக் கொள்ளுமாறும், இந்திய அதிகாரிகளுக்கு இத்தகவலை தெரிவிக்காமல் மறைத்துவிடுமாறும் அவர் அதில் கேட்டுக் கொண்டிருப் பதாகும்.
தேசவிரோத நடவடிக்கை
வசுந்தரா ராஜேயும் அவரது மகன் துஷ்யந்த்சிங்கும் (இவர் மக்களவை உறுப்பினர்) லலித்மோடியுடன் கொண்டுள்ள தொடர்பு என்பதுசலுகை சார் முதலாளித்துவப் பிணைப்புக்குரிய அனைத்து குணாதிசயங்களையும் கொண்டதாகும்.
துஷ்யந்த் நிறுவனத்தின் பங்குகளை அதன் பெயரளவேயான விலைமதிப்பை (face value-வை) விட பத்தாயிரம் மடங்குகள் விலை கொடுத்து லலித் மோடி வாங்கியிருக்கிறார் என்ற சங்கதி இதனை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஒரு நபர், தான் அளித்த நற்சான்றிதழ் குறித்து இந்திய அரசின் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவேண்டாம் என்றும் அதனை ரகசியமாகவைத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருப்பதானது அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும். இதுபோன்ற சமாச்சாரங்களை பாஜக பரிவாரங்கள் வழக்கமாகத் தேசவிரோத நடவடிக்கைகள் என்று அழைத்திடும்.
ஆனால் ராஜே தவறேதும் செய்யவில்லை என்றுபாஜக தலைமையும், பிரதமர் மோடியும் நாணமற்ற முறையில் அதனைத் துடைத்தெறியத் தீர்மானித்திருக்கிறார்கள். இவர்கள் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் “உறவினர் களுக்கான சலுகை” (nepotism) மற்றும் ஊழல் குறித்து பாஜக தலைவர்கள் இவையெல்லாம் “குடும்ப உறவுகள்” என்றும் “தனிப்பட்ட முறையிலான கடன் பரிவர்த்தனைகள்” என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். மத்தியில் பாஜக அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஓராண்டில் ஊழலற்ற ஆட்சியை அளித்திருக்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில்தான் பாஜகவின் மூத்த தலைவர்கள் (ஒருவர் மத்திய அமைச்சர், மற்றொருவர் முதலமைச்சர்) சம்பந்தப்பட்டுள்ள இவ்விரு ஊழல் நிகழ்வு களும் வெளிவந்திருக்கின்றன.
வியாபிக்கும் ஊழல்கள்...
இவ்வாறு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பது ராஜஸ்தான் முதல்வர் மட்டுமல்ல. மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ் சௌகான் தலைமையிலான பாஜக அரசாங்கமும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் வியாபம் ஊழல் அவக்கேட்டை மூடி மறைத்திட முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. தொழிற்கல்வித் தேர்வு வாரியம் நடத்திடும் தேர்வுகளில் மிக உயர்ந்த மட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் சம்பந்தப்பட்டதே இந்த வியாபம் ஊழலாகும். மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்று இது தொடர்பாகப் புலனாய்வு செய்துகொண்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நிலுவையில் இருக்கும் காலத்தில் இந்த ஊழலுடன் சம்பந்தப்பட்ட (குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது சாட்சிகள்) 40க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள் என்பது நம்பமுடியாத வகையில் நடந்துள்ளது.ஆயினும் இந்த விவகாரத்தைக் குழிதோண்டிப் புதைத்திட பாஜக அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. நீண்டகாலமாக ஆட்சியிலிருக்கும் மத்தியப் பிரதேச பாஜக அரசாங்கம் இவ்வாறு வியாபம் விவகாரத்தில் அவக்கேட்டைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறதென்றால், ஓராண்டேயான மகாராஷ்டிரா பாஜக அரசாங்கமும் பாஜக அமைச்சர்கள் பங்கஜா முண்டே மற்றும் வினோத் தாவ்டே சம்பந்தப்பட்டுள்ள இரு ஊழல் புகார்களில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இவ்விரு அமைச்சர்களும் முறையே எவ்விதமான டெண்டரும் கோராது,நடைமுறை விதிகளை முறையாகப் பின்பற்றாது, 206 கோடி ரூபாய் மற்றும் 191 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை வழங்கி இருக்கிறார்கள்.
அதானிக்கு வழங்கும் சலுகைகள்
மத்தியிலும் மாநிலங்களிலும் உள்ள பாஜக அரசாங்கங்கள் மிகவும் விரைவான முறையில் இவ்வாறு ஊழல் சகதியில் புரண்டு கொண்டிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. பெரு முதலாளிகள்-அரசியல்வாதிகள்-அதிகார வர்க்கத்தினரின் பிணைப்புடன் நடைபெற்றுவரும் நவீன தாராளமய ஆட்சிமுறையில் ஊழல் பின்னிப்பிணைந்த ஒன்று. இத்தகைய அமைப்பில் சலுகை சார் முதலாளித்துவம் இயல்பாய் அமைந்திருக்கும். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதற்கு கவுதம் அதானிக்கு வழங்கியுள்ள சலுகைகள் இதனைத் தெள்ளத் தெளிவாகக் காட்டும். உண்மையில், முந்தைய ஆட்சியாளர் களைவிட இவர்கள் மேலும் மூர்க்கத்தனமான முறையில் நவீன தாராளமயக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லவும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்திடவும் அவற்றின் மூலம் பல மடங்குஊழல் செய்யவும், பொதுச் சொத்துக் களைச் சூறையாடவும் துடித்துக் கொண்டி ருக்கிறார்கள். நரேந்திர மோடி வேண்டுமென்றே இந்தக் காட்சிகளையெல்லாம் பார்க்க மறுத்துக் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறார். இதற்கு அவர் வரவிருக்கும் காலங்களில் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
(ஜூலை 1, 2015)
தமிழில்: ச.வீரமணி


No comments: