பிருந்தா காரத்
{பீப்பிள்ஸ் டெமாக்ரசி
ஏட்டில் வெளியானஅனைத்துக் கட்டுரைகள் குறித்தும்நன்கு ஆய்வு செய்து, அவற்றில் எந்த
இடத்தில் தவறு அல்லது அது எப்படி கூர்மையான முறையில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றுதன்
கருத்துக்களை முன்வைப்பார்தோழர் சுந்தரய்யா.}
பீப்பிள்ஸ் டெமாக்ரசி தன் 50ஆம் ஆண்டு தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
பீப்பிள்ஸ்டெமாக்ரசி 1972ஆம் ஆண்டில் அதன் ஏழாவது ஆண்டு தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோதுதான்
நான் பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஆசிரியர் குழுவில் இணைந் தேன். நான் ஆசிரியர் குழுவில் இணைந்ததைத்
தொடர்ந்து காப்பி, பிஸ்கட்டுகள் பரிமாறப்பட்டன. சுற்றிலும் ஒரே கொண்டாட்டம்தான். அப்போதுதான்
பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் பணியாற்றிய அனைவருக்கும் நான் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டேன்.
ஆயினும் அந்த சந்தோஷமான சூழல் ஒருசில நிமிடங்களிலேயே மறைந்தது. கட்வா ரயில் நிலையத்தில்
தோழர் மகாதேவ் பானர்ஜி என்கிற இளம் தோழர் ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட
செய்தி எங்களுக்குக் கிடைத்து,
அந்தச் சூழலையே மிகவும் துயரத்தில் ஆழ்த்தி விட்டது. எங்கள் கூட்டம் கலைவதற்கு
முன்னர் கொலை செய்யப்பட்ட தியாகிக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் மவுனம் அனுசரித்து எங்கள்
கூட்டத்தை அன்றைய தினம் முடித்துக் கொண்டோம். அந்த சமயத்தில் மேற்கு வங்கத்தில் அரைப்
பாசிச அராஜகம் மிகவும் தலைவிரித்தாடியது. தோழர்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளின்
கீழ் வேலை செய்யத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். `இந்த வசதி எனக்கில்லை
அந்த வசதி எனக்கில்லை’ என்று எவரும் எவரிடமும் முறையிடும் சூழலே கிடையாது. பீப்பிள்ஸ்
டெமாக்ரசி அலுவலகம் மிகவும் சிறியதோர் இடத்தில் இருந்தது. இரு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
ஓர் அறை ஆசிரியர் குழுத் தோழர்கள் அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. மற்றோர் அறையை
நிர்வாகப் பிரிவுத் தோழர்கள் பகிர்ந்துகொண்டார்கள். நிர்வாகப் பிரிவுத் தோழர்களுக்கு
லீலா சுந்தரய்யா வழிகாட்டினார்.
வங்கதேச அகதிகள் பற்றி
கல்கத்தா பல்கலைக்கழகத்தின் மாணவர் கிளையில் நான் என் பணியைத் தொடர்ந்து
செய்து வந்ததால், பீப்பிள்ஸ் டெமாக்ரசி அலுவலகத்திற்கு ஆரம்பத்தில் வாரத்தில் 2 அல்லது
3 நாட்களுக்கு ஒருமுறை வந்து கொண்டிருந்தேன். 1970இல் நான் கட்சியில் சேர்ந்ததிலிருந்தே
பீப்பிள்ஸ் டெமாக்ரசிக்கு அவ்வப்போது எழுதிக் கொண்டிருந்தேன். முறையாகநான் பதிவு செய்த
முதல் அறிக்கை என்பது 1971இல் வங்க தேச யுத்தத்தின் விளைவாக புலம்பெயர்ந்து வந்திருந்த
அகதிகள் முகாம்கள் குறித்து எழுதியதாகும்.
ஆனால் 1972 இறுதியில் அல்லது 1973 துவக்கத்தில்தான் நான் பீப்பிள்ஸ் டெமாக்ரசி
ஏட்டில் முழுநேர ஊழியரானேன். அவசர நிலைப் பிரகடனம் செய்யும் வரை நான் அங்கே பணியாற்றினேன்.
பின்னர் கட்சி என்னை தில்லிக்கு கட்சி மையத்தில் பணியாற்றப் பணித்ததால், நான் தில்லி
வந்துவிட்டேன். இவ்வாறு சுமார் இரண்டரை ஆண்டு காலம் பீப்பிள்ஸ் டெமாக்ரசி குழுவில்
நான் செயல்பட்டேன்.அந்த சமயத்தில் தோழர் எம். பசவபுன்னையா ஆசிரியர். அவர் லேக் பிளேசில்
தங்கி இருந்தார். பீப்பிள்ஸ் டெமாக்ரசி அலுவலகம் லேக் பிளேசில் இருந்தவரை வாரந்தோறும்
நடைபெறும் கூட்டங்களில் அவர் பங்கேற்பது வழக்கம் என்று எனக்குக் கூறப்பட்டிருந்தது.
ஆயினும் நான் சேர்ந்த சமயத்தில் பீப்பிள்ஸ் டெமாக்ரசி அலுவலகம் பெனியாபுகூர்
என்னுமிடத்திற்கு மாற்றப்பட்டபின், அநேகமாகக் கூட்டங்களில் தோழர் பி.சுந்தரய்யாதான்
பங்கேற்றார். உண்மையில் பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் பணியாற்றியது அறிவை விருத்தி செய்து
கொள்ளக் கூடிய விதத்தில் அற்புதமான அனுபவமாக அமைந்திருந்தது.
சுந்தரய்யாவின் அறிவுரை
பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஆசிரியர் குழுவிலேயே நான்தான் மிகவும் இளையவள்.
அப்போது என் வயது 25தான். மிகவும் இளநிலை ஊழியராகவும் இருந்தேன். நான் அரசியல்ரீதியாகவும்,
ஸ்தாபனரீதியாகவும் வளர்ந்திட ஆசிரியர் குழுவில் பணியாற்றிய அனைத்துத் தோழர்களும் உதவினார்கள்.
அப்போது நான் சோனாலி வர்மா என்ற புனைபெயரில் வாராந்திரக் கூட்டங்களில் எடுக்கப்படும்
முடிவுகளின்படி பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் எழுதிக்கொண்டிருந்தேன். தோழர் சுந்தரய்யா
ஆறு வாரங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்வார்.
இடைப்பட்ட காலத்தில் வெளியான பீப்பிள்ஸ் டெமாக் ரசி இதழ்களில் முக்கிய
அடிக்குறிப்பிட்ட பக்கங்கள் சிலவற்றுடன் அவர் வந்து கலந்து கொள்வார். பீப்பிள்ஸ் டெமாக்ரசியில்
வெளியான அனைத்துக் கட்டுரைகள் குறித்தும் நன்கு ஆய்வு செய்து, அவற்றில் எந்த இடத்தில்
தவறு அல்லது அது எப்படி கூர்மையான முறையில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தன் கருத்துக்களை
முன்வைப்பார். கட்சியின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்காத எதுவும் கட்சியின் அதிகாரப்பூர்வ
ஏட்டில் வரக்கூடாது என்பதில் அவர் மிகவும் தெளிவாக இருந்தார். அதேபோல் போராட் டங்களை
மிகைப் படுத்தி வர்ணிக்கக்கூடாது என்பதற் கும் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.
இதுதொடர்பாக ஒரு சம்பவத்தை நினைவு கூர் கிறேன். பீகாரில் நடைபெற்ற பேரணி/ஆர்ப்பாட்டம்
குறித்து முதல் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது.
50 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் பேரணி என்று தலைப்பிடப்பட்டிருந்தது.
தோழர் பி.சுந்தரய்யா இது குறித்துக் கூறுகையில் “எப்படி இவ்வாறு அச்சுப்பிழை ஏற்படுத்த
அனுமதித்தீர்கள்?’’ என்றார். “இதில் என்ன அச்சுப்பிழை இருக்கிறது?’’ என்று எங்களுக்கெல்லாம்
ஒரே குழப்பம். பின்னர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது தோழர் அமர் தா எழுந்து,
“இல்லை தோழர், செய்தியை வாசிக்கும் வாசகர்கள் உற்சாகம் கொள்வார்கள் என்பதற்காக நான்தான்
5,000 என்பதை 50,000 என்று மாற்றினேன்’’ என்றார். எங்களுக்கு வந்த சிரிப்பை மிகவும்
கஷ்டப்பட்டுஅடக்க முயற்சித்தும் முடியாமல் அனைவரும் சிரித்துவிட்டோம். தோழர் பி.சுந்தரய்யாவும்
சிரித்துக்கொண்டே, “இவ்வாறு செய்வது என்பது நம் வாசகர்களை மட்டுமல்ல, நம்மையும் நாமே
முட்டாள்களாக்கிக் கொள்வது போன்றதாகும்,’’ என்றார்.
ஜோதிபாசுவின் வழிகாட்டல்
ஒருதடவை எங்கள் வாராந்திரக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தபோது தோழர்
ஜோதிபாசுவும் வந்து கலந்து கொண்டார். அவர்தான் பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் முதல் ஆசிரியர்.
அறையில் பார்வையாளர்கள் வந்தால் அமர்வதற்காக நாங்கள் போட்டு வைத்திருந்த பழைய பிரம்பு
நாற்காலி ஒன்றில் அமர்ந்துகொண்டு, ஒரு கட்டுரை குறித்து விமர்சனம் செய்தார், சில அச்சுப்பிழைகளைச்
சுட்டிக்காட்டினார், பின்னர் வேலையெல்லாம் எப்படி இருக்கிறது என்று கேட்டறிந்தார்.
எங்கள் கிளையிலிருந்த அனைத்துத் தோழர்களுடனும் ஒரு மாபெரும் தோழர் மிகவும்
எளிமையுடன் கலந்துரையாடியது எங்களுக்கெல்லாம் மிகவும் உத்வேகத்தை ஊட்டியது. எங்களுக்கு
அண்டைவீட்டுக்காரர்களாக ஹரிகிருஷ்ண கோனாரும் அவரது குடும்பத்தினரும் வசிந்து வந்தார்கள்.
சில சமயங்களில் எங்களுக்கு அவர்கள் மாம்பழங்களைக் கொடுத்து அனுப்புவார்கள். தோழர் ஹரிகிருஷ்ண
கோனாரே சில சமயங்களில் எங்கள் அறைக்கு வருவார். அவரிடம் அவரது போராட்டஅனுபவங்களைக்
கேட்டுத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எங்களுக்கு அப்போது கிடைக்கும்.
அனைத்தையும் குறித்துக் கொள்வோம். பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் பணியாற்றும்
அனைத்துத் தோழர்களுக்கும் அவரவர்களுக்கென்று சொந்த அனுபவங்கள் ஏராளம் உண்டு. என்னைப்
பொறுத்தவரை பெனியாபுகூரில் சிறிய அலுவலகத்தில் நான் பணியாற்றிய இரண்டரை ஆண்டு காலத்தில்
கட்சியின் குரலாக பீப்பிள்ஸ் டெமாக்ரசியை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியத்தை தலைவர்கள்
வலியுறுத்தி வந்தது உட்பட நிறைய விஷயங்களுடன், கட்டுப்பாடு குறித்தும், குழுச்செயல்பாடு
(team work) குறித்தும், கொடுத்த வேலையைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவேண்டிய
முக்கியத்துவம் குறித்தும் நிறையவே கற்றுக்கொண்டேன்.
-தமிழில்: ச.வீரமணி
No comments:
Post a Comment