2008ஆம்
ஆண்டு நடைபெற்ற மாலேகான் வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் சிறப்பு அரசுக் குற்றத்துறை
வழக்குரைஞர் திருமதி ரோகிணி சலியான் வெளிப்படுத்தி
இருக்கும் விவரங்கள் மிகவும் ஆழமான மற்றும் அமைதியைக் குலைக்கும் விளைவுகளை உண்டாக்கக்
கூடியவைகளாகும். திருமதி சலியான் கூற்றுப்படி தேசியப் புலனாய்வு ஏஜன்சியின் அதிகாரி ஒருவர் அவரைச் சந்தித்து, இந்த வழக்கை மேலோட்டமாக
நடத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் இந்த வழக்கில் ஆஜராக
வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். இரண்டாவது மலேகான் வெடிகுண்டுத்
தாக்குதலில் நான்கு முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள், 79 பேர் காயம் அடைந்தார்கள். மகாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு ஹேமந்த் கர்காரே தலைமையில் இச்சம்பவம் குறித்து புலனாய்வு
செய்தபோது இப்பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஓர் இந்துத்துவா தீவிரவாதக் குழுவே பொறுப்பு
என்பதைக் கண்டறிந்தது. புலனாய்வு தீவிரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து பிரக்யா தாகூர்,
லெப்டினன்ட் கர்னல் புரோஹித் மற்றும் பலர் கைது செய்யப்பட்டார்கள். பின்னர், இந்துத்துவா
பயங்கரவாதிகளின் வலைப்பின்னலின் பல்வேறு கண்ணிகள்தான் 2006ஆம் ஆண்டில் மலேகான் வெடிகுண்டு
தாக்குதல், 2007இல் ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி வெடிகுண்டுத் தாக்குதல். 2007இல்
ஆஜ்மீர் ஷரீப் வெடிகுண்டுத் தாக்குதல், 2007இல் சம்ஜுதா எக்ஸ்பிரஸ் வெடிகுண்டுத் தாக்குதல்
மற்றும் 2008இல் மொடாசா வெடிகுண்டுத் தாக்குதல்களுக்குக் காரணம் என்று வெளிக்கொண்டுவந்தது.
இவர்களது வலைப்பின்னல் விரிவடைந்தது. ஆர்எஸ்எஸ் - விசுவ இந்து பரிசத்திற்கு மிகவும்
வேண்டியவரான “ஸ்வாமி’’ ஆசிமானந்த் கைது செய்யப்பட்டார்.
மலேகான், மெக்கா மசூதி மற்றும் ஆஜ்மீர் ஷரீப் வெடிகுண்டுத் தாக்குதல்கள் சம்பவங்களையொட்டி
ஏராளமான முஸ்லீம் இளைஞர்கள் பொய்யாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
என்பது நினைவுகூரத் தக்கது.
பிரக்யா
தாகூரும் மற்றவர்களும் கைது செய்யப்பட்ட சமயத்தில் பாஜகவும் ஆர்எஸ்எஸ்-உம் அதனைக் கண்டித்ததும்,
இந்து “சாமியார்கள்’’ வேண்டும் என்றே அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு, பொய்யாகக் குற்றம்
சாட்டப்பட்டிருக்கிறார்கள் என்று கூறின. மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர இவ்வழக்குகள்
அனைத்திலும் தேசியப் புலனாய்வு ஏஜன்சி தன்னுடைய விசாரணை நத்தை வேகத்தில் நகர்த்தத்
தொடங்கி, அவற்றை முழுமையாகக் கிடப்பில் போட முடிவு செய்திருப்பது வெளிப்படையாகவே தெரியத்
தொடங்கிவிட்டது. பயங்கரவாதக் குற்றங்களைச்
செய்த கயவர்களைப் பாதுகாத்திட அரசு மிகவும் வெறித்தனமான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதை
ரோகிணி சலியான் மிகவும் துணிந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். சங் பரிவாரத்தின்
வக்கிரத்தனமான வாதங்களின்படி முஸ்லீம்கள் மட்டும்தான் பயங்கரவாதிகள், இந்துக்கள் அல்ல.
மேலும்
மோடி அரசாங்கம் அரச பயங்கரவாதத்தையும் தூக்கிப்பிடிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் இஷ்ரத் ஜஹன் என்கவுண்டர் கொலை என்பது மாநில அரசின் காவல்துறை அமைப்புகளால்
மேற்கொள்ளப்பட்ட படுமோசமான கொலை என்பது மெய்ப்பிக்கப்பட்டு விட்டது. உச்சநீதிமன்றத்தின்
கட்டளைக்கிணங்க இவ்வழக்கை விசாரித்த மத்தியப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), குஜராத் போலீஸ்
அதிகாரிகள் மட்டுமல்லாது, சில உளவுத்துறை அதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று முடிவுக்கு
வந்தது. அரசின் விதிகளின்படி, மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்த அதிகாரிகள் மீது வழக்குத்
தொடர வேண்டுமானால் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். எனவே மத்தியப் புலனாய்வுக் கழகம்
அரசின் அனுமதியைக் கோரியது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இதன்மூலம், இஷ்ரத் கொலை வழக்கு மிக மோசமான முறையில்
நீர்த்துப்போகச் செய்யப்பட்டு விட்டது. பாஜக அரசாங்கம் இவ்வாறு குஜராத் மாநிலத்தில் அன்றைக்கிருந்த மோடி
அரசாங்கத்தின் அசிங்கமான முகத்தோற்றத்தைப் பூசி மெழுகிட இன்றைக்குள்ள மத்திய மோடி அரசாங்கம்
முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பயங்கரவாதம்
குறித்த அரசாங்கத்தின் மதவெறிக் கண்ணோட்டமும், இந்துத்துவா பயங்கரவாதிகள் புரிந்த தாக்குதல்
சம்பவங்கள் சம்பநத்மான வழக்குகளை நீர்த்துப்போகச் செய்திட அது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும்
மிகவும் ஆபத்தான முன்னறிகுறிகளாகும். இந்தத் தாக்குதல்களில் எண்ணற்ற முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள்.
இவ்வழக்குகளில் நியாயம் கிடைக்காது என்கிற செய்தி அவர்களின் குடும்பங்களுக்குச் சென்றிருக்கிறது.
இந்துத்துவா மத வெறியர்களுக்கும் ஒரு செய்தி சென்றடைந்திருக்கிறது. ஆனாலும் அது வேறுவிதமானது.
அதாவது, “நாம் புரியும் கொலைபாதகச் செயல்களினால் விளையும் பாதிப்புகளிலிருந்து கேடயமாக
இருந்து நம்மைக் காப்பாற்ற இங்கே ஓர் அரசாங்கம் இருக்கிறது,’’ என்பதே அந்தச் செய்தியாகும்.
(ஜூலை 1, 2015)
தமிழில்: ச.வீரமணி
No comments:
Post a Comment