பாஜக அரசாங்கம், பாகிஸ்தான் குறித்து ஒரு சரியான நிலைபாட்டை எடுப் பதில்,
தன் சொந்த மூர்க்கத்தனமான மனப்பான்மைக்கும், நேர்மாறான எதார்த்த நிலைகளுக்கும் இடையே
சிக்கிக் கொண்டிருக் கிறது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளைச் சேர்ந்த பிரதமர்களும்
ரஷ்யா வில் உஃபா என்னுமிடத்தில் ஜூலை 10 அன்று சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியதும்
மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்றுள்ள நிகழ்வுகளுக்குப்பின்னர் இருநாடுகளின் தரப்பில்
வெளியிடப் பட்டுள்ள கூட்டறிக்கையும் இதைத்தான் புலப்படுத்துகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்சனைகளையும் விவாதித்திட
இரு தரப்பினரும் தீர்மானித்திருப்பதாக கூட்டறிக்கை கூறுகிறது. பயங்கர வாதம் சம்பந்தப்பட்ட
பிரச்சனைகளை விவாதிப்பதற்காக இருநாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திக்க இருக்கிறார்கள்;
இருநாடுகளுக்கும் இடையே எல்லைக் கோட்டை ஒட்டி யுள்ள பிரதேசங்களில் அமைதியை நிலைநாட்டுவது
சம்பந்தமாக விவாதிப்பதற் காக, இரு நாடுகளின் ராணுவ இயக்குநரகங்களின் தலைவர்கள் சந்திக்க
இருக் கிறார்கள்; மும்பை வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்கான வழிவகைகளைக் காண்பதற்கும்
இருதரப்பினரும் விவாதிக்க இருக்கிறார்கள்; இந்தியச் சிறைகளில் உள்ள பாகிஸ்தான் மீனவர்களும்
அதேபோல் பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களும் கைப் பற்றப்பட்டுள்ள அவரவர்களுடைய
படகு களும் 15 நாட்களுக்குள் விடுவிக்கப்படும்.
2016ல் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ‘சார்க்’ நாடுகளின் உச்சிமாநாட்டில்
பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மோடி அரசாங்கம் பொறுப்பேற்ற
சமயத்தில், நவாஸ் செரீப் உட்பட ‘சார்க்’ நாடு களைச் சேர்ந்த அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும்
அழைப்பு விடுத்து அவர்கள்வந்து கலந்து கொண்டது, இந்தியா தன் அண்டை நாடுகளுடன் உறவுகளை
மேம்படுத்திக் கொள்வதற்கு அரசு ஆழமான முறையில் முயற்சிகளை மேற்கொண் டிருக்கிறது என்ற
நம்பிக்கைகளை அளித்தது. ஆயினும், பாகிஸ்தான் தொடர்பாக இந்தியா மேற்கொண்டுள்ள நிலைபாடு
அந்த நம்பிக்கைகளை முற்றிலும் தகர்த்து விட்டது. மோடி அரசாங்கம், 2014 ஆகஸ்டில் அயல்துறைச்
செயலாளர்கள் அளவில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைகளை திடீரென்று தன்னிச்சையாக முறித்துக்
கொண்டது. அப்போது அதற்கு மோடி அரசாங்கத்தால் கூறப்பட்ட காரணம், பாகிஸ்தான் ஹை கமிஷனர்
ஹரியத் தலைவர்களைச் சந்தித்திருந்தார் என்பதாகும். இந்த ஆட்சேபணையில் எவ்விதச் சாரமும்
கிடையாது. ஏனெனில் கடந்தகாலங்களில் இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தைகளின்
போதுகூட இதுபோன்ற நிகழ்வுகள் நடந் திருக்கின்றன. பாஜக, இவ்வாறு பாகிஸ்தானைப் பொறுத்தவரை
ஓர் முரட்டுத்தனமான நிலையை எடுத்தது.
பாஜக, 2014 ஆகஸ்டில் நடைபெற்ற அதனுடைய தேசியசெயற்குழுக் கூட்டத்தில்,
பயங்கர வாதமும், பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளும் இணைந்து செல்ல முடியாது என்று
அறிவித்தது. அது மேலும், “பயங்கரவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுவிட்டது’’
என்றுஉறுதியாகத் தெரிந்தபின்னரே, பாகிஸ் தானுடன் அமைதி மற்றும் நட்புறவுகள் இருக்கும்
என்று கூறியது.பேச்சுவார்த்தைகள் திடீரென்று நின்றுவிட்டது மட்டுமல்ல, எல்லைகளில் நிலைமை
மேலும் மோசமடைந்துள்ளன.
2014 அக்டோபரில் மிக அதிகமான அள வில் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடுகளும்,
பீரங்கித் தாக்குதல்களும் நடை பெற்றுள்ளன. இவற்றில் அப்பாவி மக்கள் எண்ணற்றோர் இரு
நாடுகளிலும் இறந்துள்ளனர். மோடி அரசாங்கம் மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்திருக்கிறது.
மிகவும் மூர்க்கத்தனத்துடன் பழி வாங்குவோம் என்று சூளுரைத் திருக்கிறது. பயங்கரவாதத்திற்கு
முற்றுப்புள்ளி வைக்காமல் பேச்சுவார்த்தைகள் கிடையாது என்கிற நிலை நீடித்திருக்க முடி
யாது. எதார்த்த நிலைமைகளைப் பார்க்கத் தவறக்கூடாது. அவற்றைப் பார்க்கா மல், பாகிஸ்தானுடன்
பதற்றத்தை அதிகப்படுத்திக் கொண்டிருப்பதும், உறவு களில் முறிவினை ஏற்படுத்திக் கொண்டிருப்பதும்
ஒட்டு மொத்த தெற்காசியா விலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இது, அண்டை
நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கு எதிராகச் சென்றுகொண்டிருக்கிறது.
மேலும், இது பொருளாதாரத்தை மீட் டெடுப்பது தொடர்பாக உள்நாட்டில் மேற்கொண்டுவரும்
முயற்சிகளுக்கும், உலகஅளவில் இந்தியாவை ஒரு பொறுப்புமிக்க பெரிய அளவிலான அரசாகநிலைநிறுத்துவதற்கு
மேற்கொள்ளப் பட்டுள்ள முயற்சிகளுக்கும் குந்தகம் விளைவிக்கும். இதற்கிடையில் ஷாங்காய்
ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் உறுப்புநாடுகளாக அனுமதிக்கப்படும்
வாய்ப்புகளையும் மோடி அரசாங்கம் எதிர்கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் சேர்ந்துதான்
உஃபா சந்திப்பிற்கான முயற்சிகளுக்கு பங்களிப்பினைச் செய்திருப்பதுபோல் தோன்றுகிறது.
இவ்வாறு உஃபா சந்திப்பு எதிர்பாரா ஒன்று என்ற போதிலும்கூட, ஓர் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையேயாகும்.
ஆயினும், பாகிஸ்தான் குறித்த பாஜகவின் முரட்டுத்தனமான நிலைபாடு இப்போதும் தொடர்கிறது.
உஃபா சந்திப்பு தொடர்பாக வெளியான அறிக்கைகள் குறித்து அது வெளியாகிய ஒருசிலநாட்களுக்குள்ளாகவே,
இருதரப்பாரிட மிருந்தும் வெவ்வேறான விளக்கங்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்தியாவில், பாஜக அதனை ஒரு வெற்றி போல சித்தரித்துக் கொண்டிருக்கிறது.
அதன் செய்தியாளர், “பாகிஸ்தான், முதன்முறையாக, பயங்கரவாதம் குறித்தஇந்தியாவின் வரையறையை
ஏற்றுக்கொண்டிருக்கிறது,’’ என்று பிரகடனம் செய்திருக்கிறார். பயங்கரவாதத்தை சமாளித்திடாவிட்டால்
பாகிஸ்தானுடன் எவ்விதமான பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்கிற பாஜகவின் நிலைபாட்டிற்கு
இது ஒத்துப்போகிறது. பாகிஸ் தான் பிரதமருக்கு தேசியப் பாதுகாப்பு மற்றும் அயல் விவகாரங்களுக்கு
ஆலோசகராக இருக்கும் சர்தாஜ் அசிஸ் இதுதொடர்பாகக் கூறுகையில், நீண்டகாலமாக நிலுவையில்
இருந்து வரும் காஷ்மீர், சர் கிரீக் மற்றும் சியாச் சின் பிரச்சனைகள் அனைத்தும் விவாதிக்கப்பட
வேண்டியவை என்று கூறியிருக் கிறார்.
அவர் மேலும், இவற்றை அதிகாரி கள் அளவில் பேச்சுவார்த்தைகள் நடத்து வதன்
மூலமே சிறப்பாகச் செய்திட முடி யும் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு இருநாடுகளிலிருந்தும்
முரண்பட்ட கருத்துக்கள் வந்துகொண்டிருக்கும் அதே சமயத்தில், இரு நாடுகளுக்கு இடை யிலான
எல்லையில் மீண்டும் எல்லைதாண்டிய துப்பாக்கிக் குண்டு தாக்கு தல்கள் நடந்தன. இந்தியாவின்
எல்லைப் பகுதிக்குள்ளிருந்து வந்த ஒருவரைத்தான் நாங்கள் சுட்டோம் என்று பாகிஸ்தான்
தரப்பில் கூறப்படுகிறது. அதனை இந்தியா கடுமையாக மறுத்திருக்கிறது.‘ஐமுகூ அரசாங்கம்
பாகிஸ்தான் அரசாங்கத்துடன் அடிக்கடி பேச்சுவார்த்தை கள் நடத்தியதன் மூலம் இந்தியாவின்
நலன்களை அடகு வைத்துவிட்டது’ என்று பாஜக, ஐமுகூ அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டிய பின்னர்,
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை எப்படித் தொடங்குவது என்பது குறித்து ஒரு தெளிவான பார்வை
இல்லாமல் பாஜக அரசாங்கம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
பேச்சு வார்த்தைகள் பயனளிக்கவில்லை என்றால் மாற்று வழிகளைக் காண வேண்டிஇருக்கும்.
சர்தாஜ் அசிஸ் “பேச்சு வார்த்தைகளை முழுமையாக மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்,’’
என்றுகூறியிருக்கிறார். காஷ்மீர் பேச்சு வார்த்தைகளுக்கான நிகழ்ச்சிநிரலில் இல்லை என்று
மோடி அரசாங்கம் பாவனை செய்ய முடியாது. உண்மை யில், உஃபா சந்திப்பு முடிவில் வெளியாகி
யுள்ள அறிக்கை, நிலுவையில் உள்ளஅனைத்துப்பிரச்சனைகள் சம்பந்தமாகவும் விவாதிக்கப்படும்
என்று தான் குறிப்பிடுகிறது. சர் கிரீக் மற்றும்சியாச்சின் பிரச்சனைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில்
முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றபோதிலும், அவற்றின்மீது தீர்மானகரமான முறையில் முடிவினை
மேற்கொள்ளக்கூடிய அளவிற்கு ஆட்சியாளர்களுக்கு அரசியல் உறுதி இல்லை என்பதே அனைவரும்
அறிந்த உண்மை. மத்திய ராணுவ அமைச்சர் பாரிக்கர் சமீபத்தில் பயங்கரவாதம், பயங்கரவாதத்தால்
முறியடிக்கப் படும் என்று கூறியதைப் பார்த்தோம்.
இவ்வாறு, பயங்கரவாதத்தைப் பொறுத்த வரை, பொருத்தமில்லாத அறிக்கைகளை விட்டு
பாஜக, பிரச்சனையை மேலும் மோசமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு, ஜூன் மாதத்தில்,
வங்கதேசம் சென்றிருந்தபோது, பிரதமர் மோடி, “இந்தியாவில் பயங்கரவாதத்தை பாகிஸ் தான்
ஊட்டிவளர்க்கிறது,’’ என்று பாகிஸ்தானைத் தாக்கிப் பேசியதைப் பார்த் தோம். இதன்காரணமாக,
மோடியின் பேச்சுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் பாகிஸ்தான் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்தியாவுடன் உறவுகளை மேம் படுத்திக் கொள்ள பாகிஸ்தான் அரசாங்கம் எடுத்திடும் நடவடிக்கைகளுக்கு,
பாகிஸ் தானுக்குள்ளே இயங்கும் சில சக்திகள் முட்டுக்கட்டை போட முயற்சிக்கும் அதே சமயத்தில்,
இங்கே மோடி அரசாங்கம் செய்ய வேண்டியது என்னவெனில், தன்னுடைய முரட்டுத்தனமான பாகிஸ்தான்
எதிர்ப்பு நிலைபாட்டை கைவிடுவதேயாகும். தேவைப்படுவது என்ன வெனில், முந்தைய ஐமுகூ-1
அரசாங்கக் காலத்தின் போது காஷ்மீர் மற்றும் இதர பிரச்சனைகள் தொடர்பாக மேற் கொள்ளப்பட்ட
விவாதங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களைப் பற்றிக்கொண்டு தொடர்ந்து அது செயலாற்றிட வேண்டும்.
இத்துடன், இந்தியாவைக் குறிவைத்துச் செயல்படும் தீவிரவாத-பயங்கரவாதக் குழுக்களைக் கட்டுப்படுத்திட
துல்லிய மான நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் நாம்
வலியுறுத்த வேண்டும். வசிரிஸ்தான் பகுதியில் ஜிகாதி குழுக்களின் வலைப்பின்னலுக்கு எதிராக
பாகிஸ் தான் ராணுவம் தன் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. அதேபோன்று பாகிஸ்தான் அரசாங்கம்,
பஞ்சாப்பைத் தளமாகக் கொண்டு இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா
மற்றும் ஜமாத்-உத்-தாவா இயக்கங்களின் வலைப்பின்னல்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்
என்று இந்தியா நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே
சுமுகமான பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு, பாகிஸ்தானுக்குள் இயங்கும் தீவிரவாத-பயங்கரவாத
சக்திகள் எப்படி குந்தகம் விளைவிக் கின்றனவோ அதேமாதிரி பாஜக/ஆர் எஸ்எஸ் தலைமையின் மனோபாவமும்
இதனை முன்னெடுத்துச் செல்வதற்குப் பெரிதும் முட்டுக்கட்டையாக இருக் கிறது.
ஜூலை 23, 2015
தமிழில்: ச. வீரமணி
No comments:
Post a Comment