Showing posts with label Brinda Karat. Show all posts
Showing posts with label Brinda Karat. Show all posts

Sunday, July 5, 2015

இரண்டரை ஆண்டு இனிய நினைவுகள் : பிருந்தா காரத்



பிருந்தா காரத்

{பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏட்டில் வெளியானஅனைத்துக் கட்டுரைகள் குறித்தும்நன்கு ஆய்வு செய்து, அவற்றில் எந்த இடத்தில் தவறு அல்லது அது எப்படி கூர்மையான முறையில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றுதன் கருத்துக்களை முன்வைப்பார்தோழர் சுந்தரய்யா.}
பீப்பிள்ஸ் டெமாக்ரசி தன் 50ஆம் ஆண்டு தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. பீப்பிள்ஸ்டெமாக்ரசி 1972ஆம் ஆண்டில் அதன் ஏழாவது ஆண்டு தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோதுதான் நான் பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஆசிரியர் குழுவில் இணைந் தேன். நான் ஆசிரியர் குழுவில் இணைந்ததைத் தொடர்ந்து காப்பி, பிஸ்கட்டுகள் பரிமாறப்பட்டன. சுற்றிலும் ஒரே கொண்டாட்டம்தான். அப்போதுதான் பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் பணியாற்றிய அனைவருக்கும் நான் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டேன். ஆயினும் அந்த சந்தோஷமான சூழல் ஒருசில நிமிடங்களிலேயே மறைந்தது. கட்வா ரயில் நிலையத்தில் தோழர் மகாதேவ் பானர்ஜி என்கிற இளம் தோழர் ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட செய்தி எங்களுக்குக் கிடைத்து,
அந்தச் சூழலையே மிகவும் துயரத்தில் ஆழ்த்தி விட்டது. எங்கள் கூட்டம் கலைவதற்கு முன்னர் கொலை செய்யப்பட்ட தியாகிக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் மவுனம் அனுசரித்து எங்கள் கூட்டத்தை அன்றைய தினம் முடித்துக் கொண்டோம். அந்த சமயத்தில் மேற்கு வங்கத்தில் அரைப் பாசிச அராஜகம் மிகவும் தலைவிரித்தாடியது. தோழர்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளின் கீழ் வேலை செய்யத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். `இந்த வசதி எனக்கில்லை அந்த வசதி எனக்கில்லை’ என்று எவரும் எவரிடமும் முறையிடும் சூழலே கிடையாது. பீப்பிள்ஸ் டெமாக்ரசி அலுவலகம் மிகவும் சிறியதோர் இடத்தில் இருந்தது. இரு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஓர் அறை ஆசிரியர் குழுத் தோழர்கள் அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. மற்றோர் அறையை நிர்வாகப் பிரிவுத் தோழர்கள் பகிர்ந்துகொண்டார்கள். நிர்வாகப் பிரிவுத் தோழர்களுக்கு லீலா சுந்தரய்யா வழிகாட்டினார்.
வங்கதேச அகதிகள் பற்றி
கல்கத்தா பல்கலைக்கழகத்தின் மாணவர் கிளையில் நான் என் பணியைத் தொடர்ந்து செய்து வந்ததால், பீப்பிள்ஸ் டெமாக்ரசி அலுவலகத்திற்கு ஆரம்பத்தில் வாரத்தில் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை வந்து கொண்டிருந்தேன். 1970இல் நான் கட்சியில் சேர்ந்ததிலிருந்தே பீப்பிள்ஸ் டெமாக்ரசிக்கு அவ்வப்போது எழுதிக் கொண்டிருந்தேன். முறையாகநான் பதிவு செய்த முதல் அறிக்கை என்பது 1971இல் வங்க தேச யுத்தத்தின் விளைவாக புலம்பெயர்ந்து வந்திருந்த அகதிகள் முகாம்கள் குறித்து எழுதியதாகும்.
ஆனால் 1972 இறுதியில் அல்லது 1973 துவக்கத்தில்தான் நான் பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏட்டில் முழுநேர ஊழியரானேன். அவசர நிலைப் பிரகடனம் செய்யும் வரை நான் அங்கே பணியாற்றினேன். பின்னர் கட்சி என்னை தில்லிக்கு கட்சி மையத்தில் பணியாற்றப் பணித்ததால், நான் தில்லி வந்துவிட்டேன். இவ்வாறு சுமார் இரண்டரை ஆண்டு காலம் பீப்பிள்ஸ் டெமாக்ரசி குழுவில் நான் செயல்பட்டேன்.அந்த சமயத்தில் தோழர் எம். பசவபுன்னையா ஆசிரியர். அவர் லேக் பிளேசில் தங்கி இருந்தார். பீப்பிள்ஸ் டெமாக்ரசி அலுவலகம் லேக் பிளேசில் இருந்தவரை வாரந்தோறும் நடைபெறும் கூட்டங்களில் அவர் பங்கேற்பது வழக்கம் என்று எனக்குக் கூறப்பட்டிருந்தது.
ஆயினும் நான் சேர்ந்த சமயத்தில் பீப்பிள்ஸ் டெமாக்ரசி அலுவலகம் பெனியாபுகூர் என்னுமிடத்திற்கு மாற்றப்பட்டபின், அநேகமாகக் கூட்டங்களில் தோழர் பி.சுந்தரய்யாதான் பங்கேற்றார். உண்மையில் பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் பணியாற்றியது அறிவை விருத்தி செய்து கொள்ளக் கூடிய விதத்தில் அற்புதமான அனுபவமாக அமைந்திருந்தது.
சுந்தரய்யாவின் அறிவுரை
பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஆசிரியர் குழுவிலேயே நான்தான் மிகவும் இளையவள். அப்போது என் வயது 25தான். மிகவும் இளநிலை ஊழியராகவும் இருந்தேன். நான் அரசியல்ரீதியாகவும், ஸ்தாபனரீதியாகவும் வளர்ந்திட ஆசிரியர் குழுவில் பணியாற்றிய அனைத்துத் தோழர்களும் உதவினார்கள். அப்போது நான் சோனாலி வர்மா என்ற புனைபெயரில் வாராந்திரக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளின்படி பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் எழுதிக்கொண்டிருந்தேன். தோழர் சுந்தரய்யா ஆறு வாரங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்வார்.
இடைப்பட்ட காலத்தில் வெளியான பீப்பிள்ஸ் டெமாக் ரசி இதழ்களில் முக்கிய அடிக்குறிப்பிட்ட பக்கங்கள் சிலவற்றுடன் அவர் வந்து கலந்து கொள்வார். பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் வெளியான அனைத்துக் கட்டுரைகள் குறித்தும் நன்கு ஆய்வு செய்து, அவற்றில் எந்த இடத்தில் தவறு அல்லது அது எப்படி கூர்மையான முறையில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தன் கருத்துக்களை முன்வைப்பார். கட்சியின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்காத எதுவும் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏட்டில் வரக்கூடாது என்பதில் அவர் மிகவும் தெளிவாக இருந்தார். அதேபோல் போராட் டங்களை மிகைப் படுத்தி வர்ணிக்கக்கூடாது என்பதற் கும் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். இதுதொடர்பாக ஒரு சம்பவத்தை நினைவு கூர் கிறேன். பீகாரில் நடைபெற்ற பேரணி/ஆர்ப்பாட்டம் குறித்து முதல் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது.
50 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் பேரணி என்று தலைப்பிடப்பட்டிருந்தது. தோழர் பி.சுந்தரய்யா இது குறித்துக் கூறுகையில் “எப்படி இவ்வாறு அச்சுப்பிழை ஏற்படுத்த அனுமதித்தீர்கள்?’’ என்றார். “இதில் என்ன அச்சுப்பிழை இருக்கிறது?’’ என்று எங்களுக்கெல்லாம் ஒரே குழப்பம். பின்னர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது தோழர் அமர் தா எழுந்து, “இல்லை தோழர், செய்தியை வாசிக்கும் வாசகர்கள் உற்சாகம் கொள்வார்கள் என்பதற்காக நான்தான் 5,000 என்பதை 50,000 என்று மாற்றினேன்’’ என்றார். எங்களுக்கு வந்த சிரிப்பை மிகவும் கஷ்டப்பட்டுஅடக்க முயற்சித்தும் முடியாமல் அனைவரும் சிரித்துவிட்டோம். தோழர் பி.சுந்தரய்யாவும் சிரித்துக்கொண்டே, “இவ்வாறு செய்வது என்பது நம் வாசகர்களை மட்டுமல்ல, நம்மையும் நாமே முட்டாள்களாக்கிக் கொள்வது போன்றதாகும்,’’ என்றார்.
ஜோதிபாசுவின் வழிகாட்டல்
ஒருதடவை எங்கள் வாராந்திரக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தபோது தோழர் ஜோதிபாசுவும் வந்து கலந்து கொண்டார். அவர்தான் பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் முதல் ஆசிரியர். அறையில் பார்வையாளர்கள் வந்தால் அமர்வதற்காக நாங்கள் போட்டு வைத்திருந்த பழைய பிரம்பு நாற்காலி ஒன்றில் அமர்ந்துகொண்டு, ஒரு கட்டுரை குறித்து விமர்சனம் செய்தார், சில அச்சுப்பிழைகளைச் சுட்டிக்காட்டினார், பின்னர் வேலையெல்லாம் எப்படி இருக்கிறது என்று கேட்டறிந்தார்.
எங்கள் கிளையிலிருந்த அனைத்துத் தோழர்களுடனும் ஒரு மாபெரும் தோழர் மிகவும் எளிமையுடன் கலந்துரையாடியது எங்களுக்கெல்லாம் மிகவும் உத்வேகத்தை ஊட்டியது. எங்களுக்கு அண்டைவீட்டுக்காரர்களாக ஹரிகிருஷ்ண கோனாரும் அவரது குடும்பத்தினரும் வசிந்து வந்தார்கள். சில சமயங்களில் எங்களுக்கு அவர்கள் மாம்பழங்களைக் கொடுத்து அனுப்புவார்கள். தோழர் ஹரிகிருஷ்ண கோனாரே சில சமயங்களில் எங்கள் அறைக்கு வருவார். அவரிடம் அவரது போராட்டஅனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எங்களுக்கு அப்போது கிடைக்கும்.
அனைத்தையும் குறித்துக் கொள்வோம். பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் பணியாற்றும் அனைத்துத் தோழர்களுக்கும் அவரவர்களுக்கென்று சொந்த அனுபவங்கள் ஏராளம் உண்டு. என்னைப் பொறுத்தவரை பெனியாபுகூரில் சிறிய அலுவலகத்தில் நான் பணியாற்றிய இரண்டரை ஆண்டு காலத்தில் கட்சியின் குரலாக பீப்பிள்ஸ் டெமாக்ரசியை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியத்தை தலைவர்கள் வலியுறுத்தி வந்தது உட்பட நிறைய விஷயங்களுடன், கட்டுப்பாடு குறித்தும், குழுச்செயல்பாடு (team work) குறித்தும், கொடுத்த வேலையைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவேண்டிய முக்கியத்துவம் குறித்தும் நிறையவே கற்றுக்கொண்டேன்.
-தமிழில்: ச.வீரமணி


Tuesday, March 9, 2010

பெண்கள் அரசியலுக்கு வருவது கலாச்சாரத்திலும் மாற்றத்தைக் கொண்டுவரும்-பிருந்தா காரத்



புதுதில்லி, மார்ச் 10-
பெண்கள் அரசியலுக்கு வருவது நாட்டின் கலாச்சாரத்திலும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் செவ்வாய் அன்று மகளிர் இடஒதுக்கீடு சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டது. அப்போது நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பிருந்தா காரத் பேசியதாவது:
‘‘இந்திய அரசியலின் முகத்தோற்றத்தையே நிச்சயமாக மாற்றி அமைக்கப் போகிற வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சட்டமுன்வடிவினை ஆதரித்துப் பேச முன்வந்திருக்கும் இத்தருணத்தில் இச்சட்டமுன்வடிவிற்கு என் கட்சியின் சார்பிலும் நான் இத்தனை ஆண்டு காலம் செயல்பட்டு வந்த மகளிர் அமைப்புகளின் சார்பிலும் எவ்விதமான நிபந்தனைகளுமின்றி முழு ஆதரவினை முழுத் திருப்தியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக இது நாட்டைச் சிறப்பான முறையில் மாற்றியமைத்திடும் என்று நம்புகிறேன். இச்சட்டமுன்வடிவானது, இத்தனை ஆண்டு காலமாக அரசியல் அரங்கில் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த பாகுபாடுகளை நீக்குவதற்கு உதவிடும் என்பதோடு மட்டுமல்லாமல், ஜனநாயக நடைமுறைகளையும் ஆழமான முறையில் விரிவாக்கிடும் என்றும் நம்புகிறேன்.
இச்சட்டமுன்வடிவைக் கொண்டு வருவதற்காகக் கடந்த 13 ஆண்டுகளாக மகளிர் அமைப்புகள் போராடி வந்தன. இதற்கு எதிராக எண்ணற்ற மோசமான விமர்சனங்களையும் நாம் எதிர்கொண்டோம். சமூக அவலங்களை சீர்திருத்தக்கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்போதெல்லாம் இத்தகைய எதிர்ப்புகள் கிளம்பும் என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம். டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் நாடாளுமன்ற மக்களவையில் கூறிய வார்த்தைகளை இத்தருணத்தில் நினைவுகூர்கிறேன்.
இந்து சீர்திருத்தச் சட்டமுன்வடிவின் மீது நீண்ட நெடிய விவாதம் நடைபெற்றது. அப்போது அதற்குக் கடும் எதிர்ப்பு இருந்தது. அப்போது அவர், ‘‘பெண்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, எந்த ஒரு நாடும் முன்னுக்குப் போக முடியாது’’ என்றார். அதனை இப்போது நினைவுகூர்கிறேன்.
இதனை நான் ஏன் கூறுகிறேன் என்றால், நம் நாட்டில் மாபெரும் சமூக சீர்திருத்தவாதிகளில் பலர் ஆண்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். இப்போது இந்தச் சட்டமுன்வடிவும் ஜனநாயக எண்ணம் படைத்த ஆண்களின் ஆதரவுடன்தான் நிறைவேற்றப்பட இருக்கிறது. எனவே இந்தச் சட்டமுன்வடிவை ஆதரிக்கும் இந்த நாட்டில் உள்ள, இந்த அவையில் உள்ள அனைத்து ஆண்களையும் பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன்.
இந்தச் சட்டமுன்வடிவு இன்று நிறைவேற்றப்படுகிறது என்றால் அதற்கு எண்ணற்றோர் தங்கள் பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் இன்றையதினம் நினைவுகூர மறக்க மாட்டோம்.
இந்தச் சட்டமுன்வடிவு இன்றையதினம் உயிருடன் இருக்கிறதென்றால் அதற்கு மகளிர் அமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகள்தான் காரணம். அவை அனைத்து அரசியல் கட்சிகளையும் அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருந்தன. எனவே அனைத்து மகளிர் அமைப்புகளுக்கும் இந்த சமயத்தில் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சட்டமுன்வடிவைக் கொண்டு வந்ததற்காக அனைத்து மகளிர் அமைப்புகளின் சார்பாகவும் பிரதமருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இச்சட்டமுன்வடிவு தொடர்பாக இரண்டு, மூன்று முக்கிய அம்சங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவைக்கு வர வேண்டும், அவர்கள் நியமனம் மூலம் வரக்கூடாது. அதுவே ஜனநாயகத்தினை வலுப்படுத்திடும்.
இந்திய அரசியலில் கடந்த இருபதாண்டு காலமாக, பல மாநிலங்களில் பெண்கள் பஞ்சாயத்துக்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார்கள். பெண்களாகிய நாங்கள் தற்சமயம் பஞ்சாயத்துக்களில் மூன்றில் ஒரு பங்கு அல்ல, அதற்கும் மேல் 40 விழுக்காடு அல்லது 50 விழுக்காடு வரை அங்கம் வகிக்கிறோம். அதே போன்று சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் எங்கள் திறமையின் மூலமாக, எங்கள் தியாகங்களின் மூலமாக மூன்றில் ஒரு பங்கை விஞ்சுவோம், 40 விழுக்காடு அல்லது 50 விழுக்காடு அளவிற்கு வருவோம். இது சத்தியம்.
பெண்கள் தேர்தல் அரசியலுக்கு வருவது என்பது நிச்சயமாக அரசியல் களத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்பது நிச்சயம்.
பெண்கள் அரசியலுக்கு வருவதானது, நம் கலாச்சாரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். நம் நாட்டில் பாரம்பர்யம் என்ற பெயரில், கலாச்சாரம் என்ற பெயரில் பழம் பஞ்சாங்கப் பழக்க வழக்கங்கள் மற்றும் மூட நம்பிக்கைகள் திணிக்கப்படுகின்றன. பொது வாழ்வில் ஏராளமான அளவில் பெண்கள் பங்கேற்கும்போது இந்நிலைமைகள் மாறும் என்று நான் நம்புகிறேன். பெண்களை, பாரம்பர்யத்தின் பெயரால், கலாச்சாரத்தின் பெயரால் பிணைத்து வைத்திருக்கும் பல்வேறு தளைகள் அறுபடும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு பிருந்தா காரத் கூறினார்.
(ச.வீரமணி)

Sunday, March 7, 2010

உலக மகளிர் தினத்தின் நூறாவது ஆண்டு - பிருந்தா காரத்




நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1910 ஆகஸ்ட் 27 அன்று கோபன்ஹேகனில் நடைபெற்ற சர்வதேச சோசலிஸ்ட் மகளிர் மாநாட்டில் புரட்சி வீராங்கனை கிளாரா ஜெட்கின், தன் சக தோழர் அலெக்சாண்ட்ரா கொல்லன்டாய் மற்றும் இதர தோழர்களுடன் இணைந்து ‘‘சர்வதேச மகளிர் தினம்’’ அனுசரிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

வரலாறு படைத்திட்ட தீர்மானம்

தீர்மானத்தில் கூறப்பட்டிருந்ததாவது: ‘‘ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கின்ற அரசியல் மற்றும் வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர் வர்க்கத்தின் கீழ் இயங்கும் தொழிற்சங்க ஸ்தாபனங்களின் ஒத்துழைப்புடன் அனைத்து நாடுகளிலும் உள்ள சோசலிஸ்ட் மகளிர், ஒவ்வோராண்டும் மகளிர் தினத்தைக் கொண்டாடுவார்கள். அதன் தலையாய குறிக்கோள், மகளிர்க்கான வாக்குரிமையைப் பெற உதவுவதேயாகும். இந்தக் கோரிக்கையை, சோசலிஸ்ட் கட்டளைக்கிணங்கப் பெறப்பட வேண்டும். மகளிர் தினம் சர்வதேச குணாம்சத்துடன் அமைந்திட வேண்டும். அதற்கான தயாரிப்புப் பணிகள் மிகவும் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.’’ மகளிர்க்கான வாக்குரிமையானது, சோசலிசத்திற்கான போராட்டத்தை வலுப்படுத்தும் எனக் கருதப்பட்டது.

முதல் மகளிர் தினம்

தொழிற்சங்கங்கள், சோசலிஸ்ட் கட்சிகள், உழைக்கும் பெண்கள் மன்றங்கள் மற்றும் பின்னிஷ் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று பெண்கள் அடங்கிய பதினேழு நாடுகளைச் சேர்ந்த நூறு பெண் பிரதிநிதிகள் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினார்கள். அடுத்த ஆண்டு - அதாவது 1911இல் - கோபன்ஹேகன் முன் முயற்சியின் விளைவாக ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க், ஸ்விட்சர்லாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் அணிவகுத்தார்கள். 1848 புரட்சியைக் கொண்டாடும் மார்ச் 19 அப்போது மகளிர் தினத்திற்கான நாளாகத் தெரிவுசெய்யப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் மகளிர் தின அணிவகுப்புகள் மிக எழுச்சியுடன் நடைபெற்றன.

ஜார் ஆட்சி புரிந்த ரஷ்யாவிலும் பிப்ரவரி கடைசி ஞாயிறில் மகளிர் அத்தினத்தை அனுசரித்தார்கள். (அன்றைக்கு ரஷ்யாவில் புழக்கத்தில் இருந்த ஜூலியன் காலண்டர்படி அன்றையதினம் கொண்டாடப்பட்டது. உலகில் உள்ள மற்ற நாடுகளில் புழக்கத்திலிருந்த கிரிகோரியன் காலண்டர்படி அன்றைய தேதி மார்ச் 8 ஆகும்.) அமெரிக்காவில், சோசலிஸ்ட் பெண்கள் 1908இலேயே தேசிய மகளிர் தினத்தைக் கொண்டாடத் துவங்கிவிட்டார்கள். உண்மையில் உலகில் கொண்டாடப்பட்ட முதல் மகளிர் தினம் இதுவேயாகும். அப்போது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது மகளிர் வாக்குரிமை மற்றும் பொருளாதார உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார்கள். ஆடை ஆயத்தத் தொழிலகங்களில் பணியாற்றி வந்த பெண்கள் போலீஸ் அடக்குமுறையையும் மீறி வீரஞ்செறிந்த வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தினார்கள். அந்த சமயத்தில் ஏகாதிபத்தியங்கள் உலக யுத்தத்திற்கான முஸ்தீபுகளில் இறங்கியிருந்தன. உலகம் முழுதுமிருந்த பெண்கள் யுத்தத்திற்கெதிராக அமைதிக்காக அறைகூவல் விடுத்தார்கள். 1913இல்தான் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8-க்கு மாற்றப்பட்டது.

ஆனால், அடுத்த ஆண்டு, உலக யுத்தம் மூண்டது. 1915 மற்றும் 1916 ஆம் ஆண்டுகளில் மகளிர் தினத்தைக் கொண்டாட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், போரில் ஈடுபட்டிருந்தவர்கள் அமைதிக்காகக் குரல் கொடுத்தவர்கள் மீது அடக்குமுறையை ஏவினார்கள். ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. அலெக்சாண்ட்ரா கொல்லன்டாய் கூற்றின்படி அப்போது நார்வேயில் மட்டும்தான் மார்ச் 8 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிந்தது. சில பெண் பிரதிநிதிகள் கூடி, மிகவும் துணிவுடன் அமைதிக்கான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

அடுத்து, மாபெரும் 1917 வந்தது. ரஷ்யாவில் ஜாரின் ஆட்சிக்கெதிராகப், பெட்ரோகிராடில் புயல் அடித்துக்கொண்டிருந்த சமயத்தில், பெண் தொழிலாளர்கள் மார்ச் 8 பேரணி/ஆர்ப்பாட்டத்திற்காகப் பெண்களை அணிதிரட்டிக் கொண்டிருந்தார்கள். பெண் தொழிலாளர்கள், ராணுவ வீரர்களின் மனைவிமார்கள், தொழிலாளர் வர்க்கத்தின் குடும்பப் பெண்கள், பட்டினிக் கொடுமைக்கு ஆளானோர் அனைவரும் பெட்ரோகிராட் தெருக்களில் அணிவகுத்தார்கள். அவர்கள் யுத்தத்திற்கெதிராகக் குரல் கொடுத்தார்கள். தங்களுக்கு அமைதி வேண்டும் என்றும், உணவு வேண்டும் என்றும் குரல் கொடுத்தார்கள். இவர்களது குரலுக்குத் தொழிலாளர்களும், ராணுவத்தினரும் ஆதரவு நல்கியதை அடத்து பெட்ரோகிராடின் வீதிகளில் வீறுகொண்டு உணர்ச்சி முழக்கங்களுடன் முன்னேறினார்கள். மார்ச் 8 அன்று பெட்ரோகிராட் பெண்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுதும் மக்களின் எழுச்சியைப் பன்மடங்குப் பெருகச் செய்து, புரட்சிகர நிகழ்வுகளை ஏற்படுத்தி, உலகின் முதல் சோசலிஸ்ட் குடியரசு உதயமாவதற்கு இட்டுச் சென்றது. பெட்ரோகிராட் பெண்களும் மற்றும் ஜார் ஆட்சி செய்த ரஷ்யாவில் மற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பெண்களின் ஆர்ப்பாட்டங்களும், ‘‘பெண்களின் பங்களிப்பு இல்லாமல் மாபெரும் சமூகப் புரட்சிகள் சாத்தியமில்லை’’ என்று மாமேதை காரல் மார்க்ஸ் 1868 டிசம்பர் 12அன்று லுட்விக் குடேல்மான் என்பவருக்கு எழுதியிருந்த கடிதத்தின் வாசகங்ளை சரி என்று மெய்ப்பித்தன.

பிந்தைய வளர்ச்சிப் போக்குகள்

பின்னர், 1922இல் முதல் தொழிலாளர் அரசு மார்ச் 8 மகளிர் தினத்தை விடுமுறை தினமாகப் பிரகடனம் செய்தது. அதே ஆண்டு சீனாவிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகளிர் தினக் கொண்டாட்டங்கள் உலகம் முழுதும் வளர்ந்து வந்தன. இந்தியாவில் 1931இல் சமத்துவத்திற்கான ஆசியப் பெண்களின் மாநாடு லாகூரில் நடைபெற்ற சமயத்தில் முதன்முறையாகக் கொண்டாடப்பட்டது. அப்போது பெண்களுக்கு சமத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும், நாடுகளுக்கு விடுதலை கோருவதுடன் பெண்களின் சமத்துவத்தையும் இணைத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1960களுக்குப் பின்னர் சோசலிஸ்ட் நாடுகளிலிருந்த பெண்கள் மற்றும் அனைத்து நாடுகளிலும் இருந்த இடதுசாரி மகளிர் அமைப்புகளும் மகளிர் தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடத் துவங்கின. இதனையடுத்து, பெண்கள் சர்வதேச ஜனநாயக சம்மேளனத்தின் தலைவர் கேட்டுக்கொண்டதை அடுத்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும் 1975இல் மார்ச் 8 தினத்தை சர்வதேச மகளிர் தினமாக அதிகாரபூர்வமாகப் பிரகடனம் செய்து, தீர்மானம் நிறைவேற்றியது. இன்று உலகம் முழுதும் அனைத்து நாடுகளும் மார்ச் 8 அன்று மகளிர் தினத்தைக் கொண்டாடி வருகின்றன. இது வரவேற்கப்பட வேண்டிய அம்சமே என்றாலும், மார்ச் 8 உருவான வரலாற்றை - அதன் சோசலிச மற்றும் சமூகப் பின்னணியை, அதிலும் குறிப்பாக உழைக்கும் பெண்கள் முதலாளித்துவ சுரண்டல் அமைப்புக்கு எதிராகக் குரல் கொடுத்த வரலாற்றை - நீர்த்துப்போகச் செய்திட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இடம் தந்திடக் கூடாது.

இரண்டு அம்சங்கள்

மார்ச் 8 - மகளிர் தின வரலாற்றின் இரு அம்சங்கள் நமக்கு இன்றைக்கும் பொருந்தக் கூடியதாகும். இதில் முதலாவதும் மிகவும் முக்கியமானதும் முதலாளித்தவ சுரண்டலுக்கு எதிரான போராட்டத்திலும், சோசலிச மாற்றுக்கான போராட்டத்திலும் பெண் தொழிலாளர்களை அணிதிரட்டுவதாகும். ஐரோப்பா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் உழைக்கும் பெண்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்களிலிருந்து தொழிலாளர் வர்க்கப் பெண்களின் கேந்திரமான பங்களிப்புக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கின்றன. ஆரம்ப நாட்களில் தொழிற்சாலைகளில் பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களின் பணிநிலைமைகள் மிகவும் மோசமாக இருந்தன. பெண்கள் மற்றும் குழந்தைகளின் உழைப்பு முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய விதத்தில் உபயோகப்படுத்தப்பட்டன.

" மார்க்ஸ் மூலதனத்தின் முதல் தொகுதியில், ‘‘...எனவே, எந்திர சாதனங்களைப் பயன்படுத்திய முதலாளிகள் முதலில் நாடிச்சென்றது பெண்கள், குழந்தைகளின் உழைப்பையே. எந்திரம் என்பது மனித உழைப்புக்குப் பதிலாக நிறுத்தப்பெற்ற அசுர அமைப்பு. எனினும் ஒவ்வொரு பாட்டாளிக் குடும்ப உறுப்பினரும் மூலதனத்தின் நேரடி ஆளுகையின்கீழ் உழைப்பாளி எனப் பதிவு செய்யப்பட்டனர். வயது வேற்றுமை, ஆண்/பெண் பால் வேற்றுமை எதைப்பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை. மூலதனத்திற்காக அனைவரும் கட்டாயமாக உழைப்பாளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டனர்’’ என்று எழுதுகிறார். பெண் தொழிலாளர்களுக்கு எதிரான சுரண்டலுக்கு எதிராகப் பெண் தொழிலாளர்களை அணிதிரட்ட அவர்கள் மத்தியில் வேலை செய்த சோசலிஸ்ட்பெண் தலைவர்கள் மிகவும் முனைப்பாக செயல்பட்டார்கள். மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் தலைமையின்கீழ் நடைபற்ற முதலாவது கம்யூனிஸ்ட் அகிலம், பெண் தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் போராடுவதற்கான வியூகங்களை வகுத்துக் கொடுத்தது. மேலும் ஒவ்வொரு தொழிற்சாலையில் உள்ள பெண் தொழிலாளர்கள் நிலைமைகள் குறித்தும் ஆய்வு செய்திட ஆழமான கேள்வித்தாளையும் வெளியிட்டது. அதுநாள்வரையில் அடிமைகள் போல் வேலை செய்து வந்த பெண்கள் மற்றம் குழந்தைத் தொழிலாளர்களுக்கும் 8 மணி நேர வேலை உட்பட பல கோரிக்கைகள் உருவாக்கப்பட்டன. கிழக்கு லண்டனில் இருந்த தொழிற்சாலைகளில் பணியாற்றிய பெண் தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்திடும் பணியில் மார்க்ஸ் புதல்வி எளியானார் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார்.

1988இல் லண்டனில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் வேலை பார்த்த பெண்கள் - இளம் பதின்மரிலிருந்து வயது முதிர்ந்த மூதாட்டி வரை - முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவர்களது வேலை நிறுத்தத்திற்கு அனைத்துத் தொழிற்சங்கங்ளும் ஆதரவு அளித்தன. வேலை நிறுத்தப்போராட்டம் பல முக்கிய சலுகைகளுடன் வெற்றி பெற்றது. இவ்வெற்றியானது பெண் ஊழியர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளித்தது. இதேபோன்று அமெரிக்காவிலும் பெண்தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டு எண்ணற்ற வெற்றிகளைப் பெற்றனர்.

ஆரம்ப காலத்தில் மகளிர்க்கென்று தனியே மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டுமா என்கிற கருத்து, ஆண் தொழிலாளர்கள்மத்தியில் இருந்தது. 1920இன் பிற்பகுதியில் தோழர் லெனின், தோழர் ஜெட்கின்னுடன் உரையாடிய சமயத்தில், சோசலிஸ்ட் அமைப்புகளிலும் தொழிற்சங்கங்களிலும் பெண்களுக்கென்று தனி அமைப்புகள் இருப்பதை விமர்சித்தவர்களை, தொழிலாளர் வர்க்கத்திற்குள்ளேயே பெண்களுக்குத் தனி அணுகுமுறையைக் கடைப்பிடித்திட வேண்டும் என்பதை அங்கீகரிக்காதவர்களைக் கடுமையாச் சாடினார். அப்போது அவர்சொல்லிய விமர்சனங்கள் இன்றைக்கும் பொருந்தக் கூடியதேயாகும்.

நவீன தாராளமயப் பொருளதாரக் கொள்கை கடைப்பிடிக்கப்படும் இன்றைய காலகட்டத்தில், பெண் தொழிலாளர்களும், கிராமப்புறத்தில் இருக்கின்ற பெண்கள் உட்பட ஏழைப் பெண்களின் நிலைமைகளும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அரசு, தன் சமூகப் பொறுப்புக்களைக் கைகழுவி விட்டுவிட்டதன் விளைவாகவும், பொருள்களின் விலைகளை சந்தை சக்திகளிடம் ஒப்படைத்து விட்டதன் காரணமாகவும், பணவீக்கம் அதிகரித்திருக்கிறது, வேலையின்மையும், வேலையிறக்கமும், குறைந்த ஊதியங்களும் பெண்களைக் கடுமையாகப் பாதித்துள்ளன. இதன் காரணமாக பெண்கள் மற்றும் சிறுமிகள் மத்தியில் ஊட்டச்சத்துக் குறைவு என்பது அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. எனவேதான் இக்கொடுமைகளுக்கு எதிராக பெண்களை அணிதிரட்ட வேண்டிய அவசிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

உலகில் முதன்முதலாகப் பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தது, சோவியத் யூனியன்தான். இப்போது நம் நாட்டில் மகளிர்க்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33 விழுக்காடும், உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காடும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று பேசப்பட்டு வருகிறது.

இவ்வாறு மகளிர் தினம் கொண்டாடப்பட நூறு ஆண்டுகளுக்கு முன், கோபன்ஹேகனில் முயற்சிகளை மேற்கொண்ட 100 பெண்கள், நூறாண்டுகள் கழித்து இந்த அளவிற்கு உலகம் முழுதும் மகளிர் தினம் கொண்டாடப்படும் என்று கற்பனை செய்திருக்க மாட்டார்கள். ஆயினும் அவர்கள் அன்றைய தினம் வைத்திட்ட முழக்கங்கள் இன்றைக்கும் பொருந்துகிறது.

சர்வதேச மகளிர் தினம் என்பது முதலாளித்துவ நுகத்தடியில் பிணைக்கபட்டிருந்த பெண்களை விடுவிப்பதற்கான போராட்டத்தின் ஓர் அடையாளமாகும். அதே சமயத்தில் நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்தும் இன்றைய சமூக அமைப்பில் மிகவும் மோசமான முறையில் ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டலுக்கு ஆட்பட்டுள்ள உழைக்கும் பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், கிராமப்புறமற்றும் நகர்ப்புறங்களில் முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களின் உரிமைகளுக்காக அணிதிரட்டுவதன் மூலமாகவே சமூகத்தில் தற்போது நிலவும் சமத்துவமின்மையை மாற்றியமைத்திட முடியும். வரும் மார்ச் 8 அன்று மகளிர் தினத்தின் நூற்றாண்டு தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடும் அதே சமயத்தில், இவர்களுக்கான போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்ல, சபதமேற்போம்.

மார்ச் 8 மகளிர் தினம் நீடூழி வாழ்க!
தோழர் கிளாரா ஜெட்கின் நீடூழி வாழ்க!
தமிழில்: ச.வீரமணி