Sunday, May 10, 2015

நாடாளுமன்ற ஜனநாயகம் சீர்குலைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது

சமீபத்தில் நடந்து முடிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாடு, நாடும் நாட்டு மக்களும் எதிர்கொள்கின்ற பாஜக தலைமையிலான மோடி அரசாங்கம் ஏவியுள்ள, திரிசூலம் போன்ற மும்முனைத் தாக்குதல்கள் குறித்து எச்சரித்துள்ளது. மோடி அரசாங்கம் அடாவடித்தனமான முறையில் நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்துவதுடன், இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற அடித்தளங்கள்மீது தாக்குதல்களைத் தொடுக்கும் விதத்தில் மதவெறிப் பிரச்சாரங்களையும் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
அத்துடன் தற்போது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மிகவும் புனிதமாகக் கருதப்பட்டு வந்த நம் ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளையும் சிதைத்து சின்னாபின்னப் படுத்துவதன் மூலம் ஓர் எதேச்சதிகார ஆட்சிமுறையை நோக்கி முன்னேறிக்கொண்டுமிருக்கிறது. இவ்வாறு இவை மூன்றும் சேர்ந்து நம்முன் பெரும் சவால்களாக முன்னிறுத்தப்பட்டுள்ளன.
நிலைக்குழுக்களின் நிலை...
நம் ஜனநாயக அமைப்புகள் சிதைக்கப்பட்டு சின்னாபின்னப்படுத்தப்படுகின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிகைப்படுத்திக்கூறுவதாக சிலர் நினைத்தார்கள். தற்போது நாடாளுமன்றத்தில் பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் பார்க்கும் எவரும் அது எந்த அளவிற்கு வேகமாக எதேச்சதிகாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை நன்கு தெரிந்து கொள்ள முடியும்.
நாட்டு மக்களில் வெறும் 31 சதவீதத்தினரே தனக்கு வாக்களித்திருந்த போதிலும்கூட, நம் நாட்டின் தேர்தல்நடைமுறையின்படி, மக்களவையில் அது பெரும்பான்மை பெற்றதைப் பயன்படுத்திக் கொண்டு, நாடாளுமன்றத்தின் ஆய்வுக்கோ அல்லது ஒரு அர்த்தமுள்ள விவாதத்திற்கோ முன்வராமல் மிக முக்கியமான பல சட்டங்களை தகர்த்துத் தரைமட்ட மாக்க அது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படும் முக்கிய சட்டமுன்வடிவுகள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுக்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இந்நாடாளு மன்ற நிலைக்குழுக்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் இடம்பெற்றிருப்பார்கள்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய சட்டங்கள் குறித்தும் தங்கள் கருத்துக்களை அதன் சாதகமான மற்றும் பாதகமான அம்சங்கள் குறித்தும் தங்கள் கருத்துக்களை இந்நிலைக்குழுக்களில் இவர்கள் எடுத்து வைப்பார்கள். இதன்காரணமாக இச்சட்டமுன்வடிவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பரிந்துரைகளை இந்நிலைக்குழுக்கள் அளித்திடும். தேவைப்பட்டால் இச்சட்டமுன்வடிவுகள் வலுவானவைகளாகவோ அல்லது அனைவராலும் ஏற்கத்தக்கவைகளாகவோ உருவாக்குவதற்காக, அவற்றை மாற்றி அமைத்திடவோ அல்லது மறுபரிசீலனை செய்திடவோ அரசாங்கத்திற்கு இந்நிலைக்குழுக்கள் பரிந்துரைகளும் செய்யும். ஆனால் பாஜக தலைமையிலான அரசாங்கம் அமைந்த பிறகு, அது மக்களவையில் முக்கியமான சட்டங்கள் அனைத்தையுமே தனக்குள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தித் தகர்த்துத் தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கிறது. இதனைத்தான் கடந்த காலத்தில் நாம், “பெரும்பான்மையின் கொடுங்கோலாட்சி’’ என்று குறிப்பிட்டோம்.
கெட்ட முன்னறிகுறி
இவர்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் முக்கியமான எந்தவொரு சட்டமுன்வடிவும் கூட நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு, பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படவில்லை. இதன் விளைவாக, அவை மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்படும்போது, அவை முறையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதற்காக தெரிவுக் குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இயல்பாக இது வழக்கமற்ற ஒன்றேயாகும். எனினும் கடந்த ஒருசில மாதங்களில் மட்டும் மாநிலங்களவை பல்வேறு சட்டமுன்வடிவுகள் மீது ஆறு தெரிவுக்குழுக்களை அமைத்திருக்கிறது. மாநிலங்களவை ரியல் எஸ்டேட் தொடர்பான சட்டமுன்வடிவை முழுமையாக ஆய்வு செய்வதற்காக ஒரு புதிய தெரிவுக்குழுவுக்கு அனுப்பி இருக்கிறது. இதுவரை பின்பற்றப்பட்டுவந்த நாடாளுமன்ற நடைமுறைகளை எல்லாம் ஜனநாயக விரோதமான முறையில் தூக்கி எறிவதோடு மட்டும் பாஜக திருப்தி அடைந்துவிட வில்லை. மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் விவாதங்களில் பங்கேற்கும்போது பாஜக அரசாங்கத்தின் அல்லது பிரதமர் மோடியின் நோக்கங்கள் குறித்து விமர்சனங்கள் செய்யும்போது நேரடி ஒலிபரப்பையே `ஸ்விட்ச் ஆப்’ செய்திட மக்களவை சபாநாயகர் ஆணைபிறப்பிக்கிறார் என்று கூறப்படுகிறது. இவை அனைத்துமே உண்மையில் கெட்ட முன்னறிகுறிகளேயாகும். நாடாளுமன்ற நடைமுறை களை மீறிச் செயல்படுவது என்பது நிச்சயமாக எதேச்சதிகாரத்தை நோக்கிச் செல்லும் வழியேயாகும். நிச்சயமாக இது நம் குடியரசின் ஜனநாயக அடித்தளங்களை அழிப்பதற்கே இட்டுச்செல்லும். வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நம் உயர்ந்தோங்கிய சமூகத்தின் சமூக நல்லிணக்கத்தை அழித்து ஒழிக்கக்கூடிய விதத்தில், வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை அரக்கத்தனமாகப் பின்பற்றுவதோடு இது இணையும்போது, நிச்சயமாக நம் அரசமைப்புச் சட்டக் குடியரசு ஒழுங்கின் அடித்தளங்கள் மீது இது மிகப்பெரிய அளவில் தாக்குதல் தொடுப்பதற்கே இட்டுச் செல்லும்.
கள்ள முயற்சி
மாநிலங்களவையில் பாஜக சிறுபான்மைக் கட்சியாக இருப்பதால், மக்கள் மீது அதிக அளவில் சுமைகளை ஏற்றி அந்நிய மற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வசதி செய்து கொடுப்பதற்காக பொருளாதாரச் சீர்திருத்தங்கள் சம்பந்தப்பட்ட புதிய சட்டமுன்வடிவுகளை மாநிலங் களவைக்குக் கொண்டுவராமல் மக்களவையிலேயே நிறைவேற்றிக் கொள்வதற்காக அவற்றை நிதிச் சட்டமுன்வடிவுகளுடன் இணைத்து நிறைவேற்றிட பாஜக அரசாங்கம் கள்ளத்தனமான முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. ஆயினும் இத்தகைய முயற்சி களையும் எதிர்க்கட்சிகள் முறியடித்துவிட்டன. எனவே பாஜக அரசாங்கம் இத்தகைய முயற்சிகளையும் விலக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டுவிட்டது. நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின்படி “நிதிச் சட்டமுன்வடிவு’’ ஆக இருந்தால் அச்சட்டமுன்வடிவு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட வேண்டிய தேவை இல்லை. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்திற்குத் திருத்தங்கள், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் அல்லது பணப் பட்டுவாடா சட்டம் போன்றவை அரசமைப்புச் சட்டத்தின்படி நிதிச் சட்டமுன்வடிவுகள் இல்லை என்றபோதிலும், இவற்றையும் நிதியுடன் சம்பந்தப்படுத்தி, நிதிச் சட்டமுன்வடிவுகள் என்ற போர்வையில் மக்களவையிலேயே நிறைவேற்றிக் கொள்வதற்கான இழிமுயற்சிகளில் பாஜக அரசாங்கம் இறங்கி இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் 110ஆவது பிரிவு நிதிச் சட்டமுன்வடிவு குறித்து மிகவும் தெளிவாகவே வரையறுத்திருக்கிறது.
கூட்டு அமர்வு மிரட்டல்
ஆயினும் இதனை மீறி பாஜக தனக்கு மக்களவையில் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக இத்தகைய இழிமுயற்சிகளில் இறங்கியபோதிலும் அது தன் முயற்சியில் தோல்வி அடைந்துவிட்டது. அரசாங்கம் அத்தகைய முன்மொழிவுகளை விலக்கிக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. பாஜக, தன்னுடைய முக்கியமான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் சம்பந்தப்பட்ட சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வினைக் கூட்டுவோம் என்று மிரட்டுவது தொடர்கிறது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளில் ஒன்றில் ஒருசட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, மற்றோர் அவையில் அது நிராகரிக்கப்பட்ட பின்னர்தான் கூட்டு அவையைக் கூட்ட முடியும். ஆயினும், மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவை அவற்றை ஆய்வுக்கு உட்படுத்துவதற்காக தெரிவுக்குழுக்களுக்கு அனுப்பினால், அதன் அறிக்கைகள் வரும் வரைக்கும் நாடாளுமன்றத்தின் கூட்டு அவையைக் கூட்ட முடியாது. இதுதான் இப்போது நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
வளைக்க முடியாது...
பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடர்பான முக்கியமான சட்டங்களை நிறைவேற்ற முடியாமல் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக் கின்றன என்று பாஜக இப்போது பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. இதில் அது வெற்றி பெற முடியாது. நாடாளுமன்ற நடைமுறைகளை ஓரங்கட்டுவதோ, ஜனநாயக நெறிமுறைகளைத் தங்கள் இஷ்டத்திற்கு வளைத்துக் கொள்வதோ சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றுவதற்கான மார்க்கமாக இருக்க முடியாது. தேசிய நாளேடு ஒன்று இது குறித்து மிகவும் தெளிவாகவே தன்னுடைய தலையங்கத்தில் விமர்சித்திருக்கிறது: “நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சில படிப்பினைகளை இந்த அரசாங்கம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்பது தெளிவாகி இருக்கிறது. எதிர்க் கட்சிகள் மட்டும் உரிய நேரத்தில் இதனைச் சரிசெய்யா திருந்திருந்தால், முழுமையாகக் கேடு ஏற்படும்வரை இது தொடர்ந்திருக்கும்.’’ (தி இந்து, மே 6, 2015)
ஆயினும், ஆர்எஸ்எஸ்சும் அதன் அரசியல் அங்கமாகத் திகழும் அரசாங்கத்தில் உள்ள பாஜகவும் பின்பற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரல் எதிர்க்கட்சிகள் இவ்வாறு வெற்றி பெற்றிருப்பதை ஏற்றுக்கொள்ளாது. தற்போதைய நவீன மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, தாங்கள் விரும்பக்கூடிய விதத்தில் ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் “இந்து ராஷ்ட்ரமாக’’ மாற்றும்வரை தங்கள் காரியங்களை அவை தொடர்ந்து கொண்டே இருக்கும். நாட்டு மக்களின் ஒன்றுபட்ட உறுதியும், போராட்டங்களில் அவர்கள் காட்டும் வலுவான ஒன்றுமையும்தான் இன்றைக்கு நம் முன் உள்ள இந்தியாவை அழித்திட அவர்கள் மேற்கொண்டுள்ள இழிமுயற்சிகளுக்கு முடிவு கட்டும்.
(மே 6, 2015)
- தமிழில்: ச. வீரமணி


No comments: