Monday, May 18, 2015

நிச்சயமாக நாங்கள் எழுவோம்!


(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீத்தாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டதையொட்டி, `ப்ரண்ட்லைன்’ ஏட்டின் சார்பில் வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன் மற்றும் குணால் சங்கர் ஆகியோர் நடத்திய நேர்காணல்.)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சீத்தாராம் யெச்சூரி பல்வேறு வழிகளில் அரசியல் ஆளுமை நிறைந்தவராவார். 1990களின் முற்பகுதியில் ஒரு நிகழ்வு. இது அன்றைய ஊடகங்களில் அதிகமாக அடிபடவில்லை. அப்போது பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் சீத்தாராம் யெச்சூரியிடம் தன்னுடைய தூதுக்குழுவினர் மூலமாக ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நாட்டின் சமூக-அரசியல் குறித்து நன்கு புரிந்துணர்வைப் பெற்றுள்ள யெச்சூரி தன்னுடைய அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். “கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படிச் செயல்படுகின்றன என்பது முதுபெரும் காங்கிரஸ்காரரான அவருக்கு நன்கு தெரிந்திருக்கும்’’ என்று கூறி ஒரு கணம் கூட யோசிக்காமல் அந்தக் கோரிக்கையை சீத்தாராம் யெச்சூரி நிராகரித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற ஒரு கட்சியில் தான் இருப்பது மத்திய அமைச்சராகவோ அல்லது அதற்கு இணையான பதவிகளை வகிப்பதற்கோ அல்ல என்றும் மாறாக நாட்டு மக்களின் நலன்களுக்கு சேவை செய்வதற்காகவே என்றும் கூறினார்.
இந்நிகழ்வு ஒட்டுமொத்தத்தில் தற்போது 62 வயது நிறைந்த சீத்தாராம் யெச்சூரியின் இரு முக்கிய குணங்களை எடுத்துக்காட்டுகிறது. முதலாவது, அரசியல் எதிரிகள் உட்பட அனைத்துக் கட்சியினரும் அவரை அங்கீகரித்து, ஏற்றுக்கொண்டிருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இரண்டாவது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் அரசியல் குறிக்கோள்கள் மீது அவருக்கிருக்கும் உறுதியை உயர்த்திப்பிடிக்கிறது. இவ்விரு குணங்களின் காரணமாகத்தான் பிற்பட்ட ஆண்டுகளில் பிரதமர் தேவகவுடா தலைமையில் 1996ல் அமைந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் போதும், 2004ல் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின்போதும் அவற்றின் குறைந்தபட்ச திட்டங்களை உருவாக்குவதில் சீத்தாராம் யெச்சூரி முக்கிய காரணியாக இருந்தார்.
ஆளும் கூட்டணியின் ஒட்டுமொத்த திட்டத்திற்குள் மக்கள் நலம் சார்ந்த நிகழ்ச்சிநிரலை சேர்ப்பதில் சீத்தாராம் யெச்சூரியின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். சீத்தாராம் யெச்சூரி பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டவுடனேயே `ப்ரண்ட்லைன்’ சார்பில் அவரைச் சந்தித்தோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டின் அரசியல், ஸ்தாபன மற்றும் நடைமுறை உத்திகளை எப்படி முன்னெடுத்துச் செல்லப் போகிறீர்கள் என்று கேட்டோம். பேட்டியின் சாராம்சங்கள் வருமாறு:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேர்தல் வெற்றி, அரசியல் செல்வாக்கு மற்றும் ஸ்தாபனப் பிடிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ள  நிலையில் நீங்கள் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்றிருக் கிறீர்கள். ஆக்கப்பூர்வமான மாற்றங்களைக் கொண்டுவர எவ்வகையில் தங்கள் புதிய பங்கு இருந்திடும்?
சீத்தாராம் யெச்சூரி :
சந்தேகமில்லாமல் இது ஒரு பெரிய பொறுப்புதான், ஆக்கப்பூர்வமான மாற்றங்களைக் கொண்டுவந்து கட்சியை முன்னுக்குக் கொண்டு செல்வது மிகப்பெரியதொரு சவால்தான். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகளில், இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில், இக்கடமைகள் அனைத்தும் தனிநபர் ஒருவரால் மட்டும் - அவர் எவ்வளவுதான் முக்கியமானவராக இருந்த போதிலும் - மேற்கொள்ளப்படுவதில்லை.
கட்சி ஒட்டுமொத்தமாக, கூட்டாகத்தான் இக்கடமையை எடுத்துக்கொள்கிறது. நாங்கள் கூட்டுப் பொறுப்பு என்கிற சிந்தனைக்கு உதட்டளவில் சேவை செய்பவர்கள் அல்லர். கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டில், நாங்கள் கட்சி மற்றும் நாட்டின் முன் உள்ள சவால்களை எதிர்கொள்வது என்று தீர்மானித்திருக்கிறோம். கணிசமான அளவிற்கு விவாதங்களை நடத்தியபின்னர், நம்முன் உள்ள பிரதானக் கடமை நம்மை வலுப்படுத்திக் கொள்வது என்றும், இடதுசாரி சக்திகள் மத்தியில் பெரிய அளவிற்கு ஒற்றுமையைக் கட்டுவது என்றும், அதன் மூலம் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒட்டுமொத்த அரசியல் நடவடிக்கைகளையும் விரிவாக்குவது என்றும் முடிவுகள் எடுத்திருக்கிறோம்.
ஆனால், அரசியல்-நடைமுறை உத்தி தொடர்பாக கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப் பட்டுள்ள புதிய நுட்பமான மாற்றங்கள் கட்சியையும், இடதுசாரி ஒற்றுமையையும் கட்டுவதற்கே, பிரதானமாக அழுத்தம் கொடுத்திருக்கிறது. மதச்சார்பற்ற சக்திகளின் ஒரு விரிவான கூட்டணியை உருவாக்குவது என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது போன்றே தெரிகிறது. இத்தகைய உத்தி நீண்டகாலத்திற்கு நீடிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கக்கூடிய நிலையில், சங் பரிவாரம் மற்றும் பாஜக ஆகியவற்றால் தலைமை தாங்கப்படும் இந்துத்துவா சக்திகள் பாசிச திசைவழியில் மிகவும் வேகமாக சென்று கொண்டிருக்கக்கூடிய நிலையில் இது சாத்தியமா?
அரசியல் நடைமுறை உத்தி என்பது மாறிக்கொண்டிருக்கும் அரசியல் நிலைமையுடன் சேர்ந்து மாறக்கூடிய ஒன்றேயாகும். இன்றைய நடப்பு அரசியல் பின்னணியில், கட்சியின் அடிப்படைக் கடமை உண்மையில் எங்களை வலுப்படுத்திக் கொள்வதேயாகும்.
ஏனெனில், எங்கள் நாடாளுமன்ற அல்லது தேர்தல் வெற்றிகூட எங்களுடைய அரசியல் மற்றும் ஸ்தாபன வலிமையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெறும் எங்கள் போராட்டங்களை பரஸ்பரம் சரியாகப் பொருத்துவதன் தேவை குறித்தும் மாநாட்டில் நாங்கள் விவாதித்திருக்கிறோம். சுயேச்சையாக எங்களை நாங்கள் வலுப்படுத்திக் கொள்ளாமல், மதச்சார்பற்ற சக்திகள் மத்தியில் விரிவான அளவில் கூட்டணிகளை உருவாக்குவது என்பதைக் கூட எங்களால் அடைந்திட முடியாது.
உண்மையில், பெரிய அளவில் எங்கள் வலிமையை நாங்கள் காட்டாவிடில் அத்தகைய கூட்டணிகள் கூட உருவாகாது. ஆயினும், பிரச்சனை என்ற அடிப்படையில் மதச்சார்பற்ற அமைப்புகளுக்கு மத்தியில் கூட்டு முயற்சிகள் காரியசாத்தியமாகலாம். உதாரணமாக, நிலம் கையகப்படுத்தல் சட்டமுன்வடிவைப் பொறுத்தவரை அநேகமாக அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டு நடவடிக்கைகள் நடைபெற்றிருக்கின்றன.
நீங்கள் குறிப்பிட்டதைப்போல, பாசிச சக்திகள் தலைதூக்கியுள்ள பின்னணியில் இத்தகைய கூட்டு முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், இந்துத்துவா மதவெறி விசிறிவிடப்படுதல் மற்றும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக இத்தகைய கூட்டு முயற்சிகளை உருவாக்கிட கட்சி முன்முயற்சிகளை மேற்கொள்ளும். ஆயினும், இவ்வனைத்துப் பிரச்சனைகளுக்கும் அனைத்துக் கட்சிகளும் எங்களுடன் வரும் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது. உதாரணமாக, நிலம் கையகப்படுத்தல் சட்டமுன்வடிவுக்கு எதிராக எங்களுடன் கை கோர்த்தவர்கள் அனைவருமே, நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் சட்டமுன்வடிவு அல்லது நிலக்கரிச் சுரங்கங்களை மறு ஏலத்திற்கு விடுதல் போன்ற பிரச்சனைகளில் எங்களுடன் வரவில்லை.
உங்கள் புதிய உத்தியானது மாநிலக் கட்சிகளுடன் தேர்தல் கூட்டணிகள் பொறுத்தவரை, அநேகமாக முற்றிலுமாக தடை விதித்திருப்பதுபோல் தோன்றுகிறதே?
இத்தகைய கூட்டணிகளை அமைப்பதில் மாநிலங்கள் சில நெகிழ்வுத்தன்மையைப் பெற்றிருக்கின்றன. மாநாட்டில் விவாதத்தின்போது தோழர் பிரகாஷ் காரத் தன் தொகுப்புரையில் சுட்டிக் காட்டியதைப்போல, நீங்கள் மாநில அளவில் நெகிழ்வுத் தன்மையையும், தேசிய அளவில் இறுகிய தன்மையையும் பெற்றிருக்க முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், விஷயங்கள் பரஸ்பரம் பரிசீலிக்கப்பட வேண்டியவைகளாகும்.
ஒவ்வொரு விஷயத்தையும் அதன் குறிக்கோளை அடைவதற்காக தெளிவான முறையில் அலசப்பட வேண்டும். தேர்தல் ஆதாயங்களை மட்டுமே கொண்டு அவற்றைப் பார்க்கக் கூடாது.
2004ல் மதவெறி சக்திகளை எதிர்த்து முறியடித்திட, இடதுசாரிகள் பல்வேறுவிதமான மதச்சார்பற்ற சக்திகளையும் இணைத்துக் கூட்டணி அமைப்பதற்கு ஒரு கருவியாக இருந்தார்கள். வகுப்புவாத அச்சுறுத்தல் இப்போது பெரிய அளவில் முன்வந்திருக்கிறது. 2004இல் மேற்கொள்ளப்பட்டது போன்ற பங்கினை எதிர்காலத்தில் இடதுசாரிகள் மேற்கொள்வார்கள் என்று நீங்கள் முன்னுணர்கிறீர்களா?
2004ஆம் ஆண்டும் தனித்த ஒரு நிகழ்வு அல்ல. 1990களின் முற்பகுதியிலிருந்தே இடதுசாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளையும் திரும்பிப்பாருங்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது உட்பட, நரசிம்மராவ் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் இவற்றில் அடங்கும். இன்றைய அரசியல் பின்னணியில், மதச்சார்பின்மை மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை முக்கியத்துவம் பெறுகின்றன. அவை வெகுஜன இயக்கங்கள் உட்பட பல்வேறு வடிவங்களிலும் பிரதிபலிக்கின்றன. அடல் பிகாரி வாஜ்பாயியின் ஆறு ஆண்டு கால தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின்போது அது மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது. அதனையொட்டி மிகப்பெரிய அளவில் உருவான அரசியல் இயக்கம்தான் 2004 நிகழ்ச்சிப் போக்குகளுக்கு இட்டுச் சென்றது. இவ்வாறு இது ஒரு நீண்ட நெடிய முயற்சியாகும், மாறாக திடீரென்று ஏற்பட்ட ஒன்று அல்ல. இப்போதுள்ள நிலைமையைத் துல்லியமான வார்த்தைகளில் சொல்வதென்றால், பாஜக அபரிமிதமான பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருக்கிறது என்று கூறுகிற அதே சமயத்தில் அது பெற்றுள்ள வாக்காளர்களின் வாக்கு சதவீதம் வெறும் 31 சதவீதமேயாகும். இதன் பொருள், வாக்காளர்களில் மூன்றில் இரு பங்கினர் பாஜகவிற்கும் அதன் கொள்கைகளுக்கும் எதிராக வாக்களித்திருக்கிறார்கள் என்பதாகும். எனவே பாஜகவின் வெற்றி இந்த உண்மையைப் பார்க்க விடாமல் எங்கள் கண்களை மூடிவிடவில்லை. பாஜக-விற்கு இருந்த தேர்தல் அனுகூலத்தை முறியடிக்கக்கூடிய விதத்தில் தற்போது ஜனதா பரிவார் என்ற அமைப்பின்கீழ் ஜனதா கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்வதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலைமைகள் மற்ற மாநிலங்களிலும் வளரும். அவ்வாறு வளர்ந்தால், நாங்களும் அது தொடர்பாக விவாதிப்போம். ஆனால், நாங்கள் இப்போது கூறுவது என்னவென்றால், நாங்கள் அடிப்படையில் அழுத்தம் கொடுக்க வேண்டிய அம்சம் இவை அல்ல, மாறாகக் கட்சியைக் கட்டுவது என்பதுதான். கட்சியை நன்கு வலுப்படுத்தி, அதன் கொள்கைகளை நாடாளுமன்றத்திற்கு வெளியேயான இயக்கங்களுடன் அனைத்து மட்டங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதேயாகும்.
இதன் பொருள் இப்பிரச்சனைகளின் மீது அனைத்து சிவில் சமூகக் குழுக்களுடனும் பெரிய அளவில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கை என்று எடுத்துக் கொள்ளலாமா?
ஆம். நாங்கள், இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்று சொல்கிறபோது அதன் பொருள் இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணிகளை வலுப்படுத்த வேண்டும் என்பது மட்டுமல்ல, மாறாக நாட்டில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் பலவற்றுடன் மிகப்பெரிய அளவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள இடதுசாரி ஆதரவாளர்களையும் கணக்கில் கொண்டுதான் இதனைக் கூறுகிறோம். இது நிலம் கையகப்படுத்தல் சட்டமுன்வடிவு போன்ற பிரச்சனைகளின் மீது ஏற்கனவே நடைபெறத் துவங்கிவிட்டது.
ஆம் ஆத்மி கட்சி உருவாகியிருப்பது உண்மையில் புதியதொரு அம்சம். கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டின் தீர்மானங்களில் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி குறித்தும், அது தில்லிவாழ் மக்களின் மனதையும், இதயங்களையும் ஈர்த்துள்ளது குறித்தும் குறிப்பிட்டு எந்தப் பகுதியும் காணப்படவில்லை. மாநாட்டின் விவாதங்களில் இது குறித்து ஏதேனும் இருந்ததா? இதிலிருந்து கட்சியின் அகில இந்திய மாநாடு படிப்பினைகளைப் பெற்றதா?
உண்மையில், கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கு முன்பே இதிலிருந்து நாங்கள் படிப்பினைகளைப் பெற்றிருக்கிறோம். அடிப்படையான படிப்பினை என்பது மக்களைப் பாதிக்கக்கூடிய உண்மையான பிரச்சனைகளைப் தேர்வு செய்து அதன் அடிப்படையில் இயக்கத்தைக் கட்டுவதாகும். அரசியல் நடைமுறை உத்தி தீர்மானத்தை நீங்கள் பார்த்தீர்களேயானால், நாடு தழுவிய அளவிலான பிரச்சனைகள் மீது மட்டும் இயக்கங்களையும் பிரச்சாரங்களையும் மேற்கொள்ளக்கூடாது, ஸ்தல மட்டத்தில் உள்ள பிரச்சனைகளையும் அடையாளம் கண்டு இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்பதாகும். ஆம் ஆத்மி கட்சி இதைத்தான் செய்திருக்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களின் பிரச்சனைகளை அடையாளம் கண்டுள்ளது. இது எங்களுக்குத் தெரியாததல்ல. ஆனாலும் அதனை வலுவாக அமல்படுத்த வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கிறோம்.
இமாச்சலப்பிரதேசத் தலைநகரான சிம்லா போன்ற இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனைச் செய்திருப்பதுபோல் தோன்றுகிறதே. அதன் காரணமாகத்தான் அங்கே மாநகராட்சித் தேர்தல்களிலும் அது வெற்றி பெற்றிருக்கிறது...
ஆம், அது ஒரு நல்ல அம்சம். இதேபோன்று பல இடங்களிலும் நாங்கள் செய்திருக்கிறோம். உண்மையில், கிராம மக்களுக்கு சாலை வேண்டுமா அல்லது கிணறு வேண்டுமா என்று மாநில மையத்தில் முடிவு எடுப்பதற்குப் பதிலாக, கிராம மக்களுக்கு சுயாட்சி அளித்து அவர்களிடமே கேளுங்கள்,’’ என்று ஜோதிபாசு அடிக்கடி கூறுவார். ஆம், இந்தக் கருத்தாக்கம் எங்களிடம் எப்போதுமே உண்டு, இவ்வாறு செய்வதில் சில அனுபவங்களையும் நாங்கள் பெற்றிருக்கிறோம். ஆயினும் இதனைப் புதிய சூழ்நிலைகள் மற்றும் புதிய தேவைகளின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனை வலுவான முறையில் கவனம் செலுத்தி, அமல்படுத்த வேண்டியிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வது என்பது மட்டுமல்ல, எங்கள் அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான வழியும் இதுவேயாகும். மேலும் ஆம் ஆத்மி கட்சி சமீப காலங்களில் உள்கட்சிப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ள அக்கட்சியின் அரசியல் குறித்துச் சுட்டிக்காட்டப்படுவதும் தேவையாகும். ஆம் ஆத்மி கட்சி நாட்டு மக்கள் சம்பந்தப்பட்ட இரு முக்கிய பிரச்சனைகளில் தெளிவில்லாமல் இருக்கிறது என்றே நாங்கள் கருதுகிறோம். வகுப்புவாதம் மற்றும் நவீன தாராளமய சீர்திருத்தங்கள் குறித்து அது தன் நிலையை இன்னமும் வெளிப்படுத்திடவில்லை. அக்கட்சியின் தலைவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படாததற்கு இது முக்கிய காரணமாகும். எனவே, ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினையில் இதுவும் ஒன்றாகும். ஸ்தலப் பிரச்சனைகளில் மட்டும் கவனம் செலுத்தி மக்களைத் திரட்டுவது மட்டும் போதுமானதல்ல. இவற்றை பெரிய அளவிலான அரசியல் திசைவழியுடன் இணைக்காது இருப்பீர்களேயானால் இவை குறையுடையவகளேயாகும்.
மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள தோல்விகளை எதிர்கொள்வதற்கும், கட்சி ஊழியர்கள் மீது அங்கு நேரடியாகத் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதற்கு எதிராகவும் என்ன திட்டங்கள் தீட்டியிருக்கிறீர்கள்? நிலைமைகளைச் சமாளிப்பதற்கு கட்சியின் மாநிலக் குழுவுக்கு மத்திய தலைமை ஆதரவாக இல்லை என்கிற முறையில் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றனவே.
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதுபோன்ற நிலைமைகளை முன்னரும் சந்தித்திருக்கிறது. எங்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருப்பது, திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமல்ல. 1970களில் காங்கிரஸ் கட்சியும் இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சியை ஒழித்துக்கட்ட முயன்றது. 1972இல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பின்னர் 2009இல் திரிணாமுல் காங்கிரஸ் அதைச் செய்திருக்கிறது. இதற்காக மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்றுபடுத்தினார். ஒரு பக்கத்தில் மாவோயிஸ்ட்டுகளையும், மறுபக்கத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரையும் அவர் ஒன்று சேர்த்தார். பிற்போக்கு சக்திகளின் இத்தகைய பெரும் கூட்டணி ஒரு கூட்டுக் கலவையாகி, நாங்கள் வன்முறையாளர்கள் என்ற விதத்தில் பிரச்சாரத்தைப் பரப்பியது. குறிப்பாக கட்சிக்கும் மக்களுக்கும் இடையே இருந்த இணைப்பைக் குறி வைத்துத் தாக்கினார்கள். எனவே, இது ஒருவிதமான வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எங்களால் இதுநாள் வரையிலும் காப்பாற்றப்பட்டு வந்த மக்கள், எங்களால் காப்பாற்றப்பட வேண்டியவர்கள், தற்போது இந்த இணைப்புச் சங்கிலி இல்லாதிருப்பதைக் கண்டு என்ன நடக்கிறது என்றே புரிந்துகொள்ள முடியாமல் தத்தளிக்கிறார்கள். மத்தியில், பாஜக ஆட்சியிலிருப்பதைப் பார்க்கிறார்கள். அவர்கள், திரிணாமுல் காங்கிரசால் ஏவப்படும் ரவுடியிசத்திலிருந்து தங்களைப் பாதுகாப்பார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் கடந்த ஒன்பது மாத காலத்தில் மோடி அரசாங்கத்தின் ஆட்சி அனுபவத்தில் இந்நிலைமையும் மாறிக் கொண்டிருக்கிறது. இப்போது எங்கள் ஸ்தாபனத் தொடர்புகளைப் புதுப்பிக்கும் பணி தொடங்கி இருக்கிறது. இதனைக் கெட்டிப்படுத்துவதற்குச் சில காலமாகலாம். ஆனால் நிச்சயமாக இதிலிருந்து நாங்கள் மீள்வோம் என்று நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கும், அடுத்த அகில இந்திய மாநாட்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், கட்சியில் நிலவும் கோஷ்டிப்பூசல்களுக்கு எதிராக நெறிப்படுத்தும் இயக்கம் பற்றி பேச்சுக்கள் அடிபடும். ஆனால், தொடர்ந்து வரும் அறிக்கைகள் அத்தகைய இயக்கங்கள் வலுவாக அமைந்துவிடவில்லை என்பதையே காட்டுகின்றன. உண்மையில், இத்தகைய போக்குகளில் பல கட்சியின் உயர்மட்ட அளவிலேயே தோன்றி இருப்பதாக ஒரு கருத்து தற்போது உருவாகி இருக்கிறதே.
இத்தகைய போக்குகளைக் கையாளுகையில், எங்கள் நோக்கங்கள் எப்போதும் நல்லவிதத்திலேயே இருந்திருக்கின்றன. ஆனால், ஆயினும், இவற்றை அமல்படுத்தும் சமயங்களில் விரும்பத்தக்க விளைவுகள் ஏற்படாமல் இருந்திருக்கின்றன. இப்போது, இவற்றை ஆழமாக அமல்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறோம். 2015 முடிவதற்கு முன்பாக இதுதொடர்பாக ஆழமாகப் பரிசீலிப்பதற்காக கட்சியின் பிளீனத்தை நடத்திடத் திட்டமிட்டுள்ளோம்.
தமிழில்: ச.வீரமணி


No comments: