Sunday, April 12, 2015

வலிமை மிக்க கட்சியை கட்டுவோம்!


வரவிருக்கும் காலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியால் பின்பற்றப்பட வேண்டிய அரசியல்-நடைமுறை உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டின் வரைவு அரசியல் தீர்மானம் விளக்கி இருக்கிறது. சர்வதேச மற்றும் தேசிய நிலைமைகளைப் பகுப்பாய்வு செய்திருப்பதுடன், இன்றுள்ள நிலைமைகள் என்ன என்பதையும் சுட்டிக்காட்டி, அவற்றின் அடிப்படையில் கட்சி மேற்கொள்ள வேண்டிய அரசியல் - நடைமுறை உத்தி மற்றும் பணிகள் என்ன என்பது குறித்தும் குறிப் பிட்டிருக்கிறது.
வலதுசாரிகளின் தாக்குதல்
இந்தியாவில் 2014 மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் உரு வாகியுள்ள நிகழ்ச்சிப் போக்குகள் மற்றும் புதியஅரசியல் நிலைமைகள் குறித்தும் தீர்மானம்கவனம் செலுத்தியுள்ளது. பாஜக பெரும்பான் மை பெற்று மோடி அரசாங்கம் அமைந்திருப்பது வலதுசாரித் தாக்குதலுக்கு வழிவகுத்துத்தந்துள்ளது. இத்தாக்குதல்கள் இரு விதங் களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முத லாவதாக, நவீன தாராளமயக் கொள்கைகளை உந்தித்தள்ளுவதில் காட்டும் வெறித்தனமான ஆர்வம். இரண்டாவது, இந்துத்வா மதவெறி சக்திகளின் பன்முகப்பட்ட நடவடிக்கைகள்.
நிச்சயமற்ற நிதி மூலதனம்
இவ்வாறு இந்தியாவில் வலதுசாரித் திருப்பம் ஏற்பட்டிருப்பதற்கு சர்வதேச நிலைமையின் இரு அம்சங்கள் நேரடியான காரணி களாக அமைந்திருக்கின்றன. 2008ம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியிலிருந்து எப்போது மீள்வோம் என்று தெரியாது நிச்சயமற்ற தன்மை தொடர்கிறது. இத்தகைய நிலைமையானது, சர்வதேச நிதி மூலதனத்தையும், ஏகாதிபத்தியத் தையும் உலக அளவில் நவீன தாராளமயக் கொள்கைகளை மேலும் தீவிரமாக உந்தித்தள்ள இட்டுச் சென்றிருக்கிறது. இத்தகைய நட வடிக்கைகளை மேற்கொண்டு வந்ததன் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நிலைமைகளிலிருந்து மீள்வதற்காக இந்திய ஆளும் வர்க்கங்களும் வழிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றன.
சீனாவுக்கு எதிரான அமெரிக்கத் திட்டம்
சீனாவைக் கட்டுப்படுத்துவதற்காக ஆசியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரஅமெரிக்க முயற்சிகளை மேற்கொண்டிருக் கிறது. இத்தகைய அமெரிக்காவின் செயல்உத்தி நடவடிக்கைகளில், இந்தியா ஒருகேந்திரமான பாத்திரத்தை வகிக்க வேண் டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா வுடன் மிகவும் நெருக்கமான கேந்திரக் கூட் டணி நடவடிக்கைகள் வலதுசாரிப்பக்கம் போவதற்கு ஒரு தூண்டுவிசையாக அமைந் திருக்கிறது.
அவசரச் சட்ட ஆட்சி
மோடி அரசாங்கத்தின் கடந்த பத்து மாதகால ஆட்சி, பெரு முதலாளிகளின் கட்டளைக் கிணங்க நடந்துகொண்டு உறுதிப்படுத்தி இருக்கிறது. பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டிற்குத் திறந்து விட்டிருப்பது, நிலக்கரித்துறையை பொதுத்துறையிலிருந்து தனியாருக்கு மிகப்பெரிய அளவில் தாரை வார்த்திருப்பது, நிலம் கையகப்படுத்தல் சட்டத்தைத் திருத்தி அதன் மூலம் அதிக நிலத்தை கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்க முன்வந்திருப்பது -
ஆகிய அனைத்தும் நவீன தாரளமயக் கொள்கைகளை முன்னிலும் வேக மாக எடுத்துச் செல்வதற்கான தெளிவான அறிகுறிகளாகும்.அதேபோன்று நாட்டிலுள்ள ஒருசிலர் சுகபோகமாக வாழ்வதற்கு, நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்கக்கூடிய விதத்தில் சிக்கனநடவடிக்கைகள் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற நவீன தாராளமயக் கொள்கை யின்மீதும் மோடி அரசாங்கம் நம்பிக்கை வைத் திருக்கிறது. பொதுச் செலவினங்களைக் குறைத்திருப்பதும், சுகாதாரம், கல்வி மற்றும் சமூகத்துறைகளுக்கு அளித்துவந்த பட்ஜெட் ஒதுக்கீடுகளை வெட்டிக் குறைத்திருப்பதும் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது நேரடித் தாக்குதலை விளைவிப்பவைகளாகும். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் சுருக்கப்பட்டிருக்கிறது, குழந்தைகள் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்துத் திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் பாதியாக்கப்பட்டிருக்கின்றன. உணவுப் பாதுகாப்புச் சட்டம், வன உரிமைகள் சட்டம் போன்றசில சட்டங்களில் மக்களுக்கு அளிக்கப்பட் டிருந்த ஒருசில உரிமைகளும் பறிக்கப்பட் டிருக்கின்றன. தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவந்து தொழிலாளர் களின் உரிமைகளைப் பறித்திடவும் மோடிஅரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டி ருக்கிறது. மோடி அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிற அவசரச்சட்ட ஆட்சி, அரசாங்கம் எதேச்சாதிகாரத்தை நோக்கி விரைவாக சென்றுகொண்டிருப்பதை எடுத்துக் காட்டும் எச்சரிக்கை மணியாகும்.
அதிகரிக்கும் பதற்றம்
வலதுசாரித் தாக்குதலின் மற்றோர் அம்சம், இந்துத்வா திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக பல்வேறு வடிவங்களில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருவதாகும். பாஜக அரசாங்கம் ஆர்எஸ்எஸ்-சுடன் மிகவும் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுவதன் காரணமாக சமூகத்தில் பல்வேறு பிரிவினரும் மிகவும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்த நிலைமைகளில் மிகப் பெரிய அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஆராய்ச்சி மற்றும் கலாச்சார நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரல் அறிமுகப்படுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் கீழ் இயங்கும் பல்வேறு அமைப்புகளும் பசுவதை, ‘காதல் ஜிகாத்’ மற்றும் வங்கதேசத்தினர் ஊடுருவல் போன்ற பல்வேறு பிரச்சனைகளைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு, நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பதற்ற நிலைமைகளை அதிகரித்திட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
அமெரிக்கக் கூட்டணி
அதிகார மையத்தின் வலதுசாரித் திருப் பம், மோடி அரசாங்கத்தின் அயல்துறைக் கொள்கையிலும் பிரதிபலிக்கத் தொடங்கி இருக்கிறது. அணிசேராக் கொள்கையிலிருந்து வெகு தூரம் விலகி வந்திருப்பது, அயல்துறைக் கொள்கை யில் அமெரிக்க ஆதரவு நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பது 1990களின் ஆரம்பத்தில் நவீன தாராளமயக் கொள்கைகளைத் தொடங்கிய போதே ஆரம்பித்துவிட்டன. மோடி அரசாங்கம் அவற்றை முன்னிலும் வேகமாக முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவுடன் ஐமுகூ அரசாங்கம் கொண்டிருந்த கேந்திர கூட்டு உறவுகளை மோடி அரசாங்கம் மேலும் தீவிரமானமுறையில் மேற்கொண்டு வருகிறது. இந்திய - அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் மேலும் பத்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியாவுக்கு வருகை தந்த சமயத்தில் ஆசியா - பசிபிக்மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் குறித்த ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.
இது, அமெரிக்கா ஆசியாவில் மேற்கொள்ளவிருக்கும் அடாவடி நடவடிக்கை களுக்கு இந்தியா பக்கபலமாக நிற்கும் என் பதைத் தெளிவு படுத்துகிறது. மேலும் மோடி ஜப்பானுடனும், ஆஸ்திரேலியாவுடனும் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் கட்டி யெழுப்பவும் கோரி இருக்கிறார். இவ்வாறு ஏற்படும் உறவுகளுடன், அமெரிக்காவின் அணுகுமுறையும் சேர்ந்து அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் கூட்டணி அமை வதற்கு வழிவகுத்திருக்கிறது.
முறியடிப்பது எப்படி?
வரைவு தீர்மானத்தின் சாரம், இவ்வாறு தொடுக்கப்பட்டுள்ள வலதுசாரித் தாக்குதலை எப்படி முறியடிப்பது, அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறை உத்தி என்ன என்பவை களேயாகும். நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறை உத்தி,மக்கள் திரளின் பல்வேறு பிரிவினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மீது இயக்கங் களையும் வெகுஜனப் போராட்டங்களையும் கட்சியும், வெகுஜன அமைப்புகளும் வளர்த்திட வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. எண்ணற்ற வெகுஜன அமைப்புகள், தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் இயக்கங்களையும், போராட்டங் களையும் வளர்த்தெடுப்பதற்கான திசைவழியை வரைவு தீர்மானம் அளித்திருக்கிறது.
தத்துவார்த்தப் போராட்டம்
வரைவு தீர்மானம், இந்துத்வா சக்திகள் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டியதன் முக்கியத்துவத்தை கூறுகிறது. மதவெறி சக்திகள், சமூகரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் மற்றும் கல்வி அமைப்புகள் என பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த முன்வந்திருப்பதை முறியடிப்பதற்கான உத்திகளைத் துல்லியமான முறையில் உரு வாக்க வேண்டியதன் அவசியத்தை அர சியல் -
நடைமுறை உத்திகளுக்கான ஆய்வறிக்கை சுட்டிக்காட்டி இருந்தது. இதன்அடிப்படையில், கட்சிக்கும், வர்க்க மற்றும்வெகுஜனஅமைப்புகளுக்கும் ஐந்து பரிந் துரைகளை வரைவு தீர்மானம் அமைத்துத் தந்திருக்கிறது. இவற்றில், மதவெறி சக்திகளுக்கு எதிராக தத்துவார்த்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக கட்சியின் அறிவுஜீவிகள் மற்றும் கலாச்சாரப் பகுதியினரை ஒருங் கிணைத்தல், ஜனநாயக மதச்சார்பற்ற கல்வி யைப் பாதுகாத்திட கல்வி முறையில் தலையிடல், சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கை களுக்குத் திட்டமிடல், குறிப்பாக தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளில் இவற்றை மேற்கொள்ளுதல், மதவெறி சக்திகளால் கட்டவிழ்த்து விடப்படும் சாதிய மற்றும் மூடத்தனமான பழக்கவழக்கங்களுக்கு எதிராக கலாச்சார மற்றும் சமூக நடவடிக்கைகளை வளர்த்தெடுத்தல், நிறைவாக, பழங்குடியினர் பகுதிகளிலும் தலித்துகள் மத்தியிலும் ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கை களை எதிர்த்து முறியடிக்கக்கூடிய விதத்தில் அமைப்பை வளர்த்தெடுத்தல் ஆகியவையும் அடங்கும்.
பாஜக எதிர்ப்பே பிரதானம்
பாஜக மற்றும் மோடி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதே பிரதானக்கடமை என அரசியல் நிலைப்பாடு வகுக்கப்பட்டிருக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவும், மக்களின் வாழ் வாதாரங்களைப் பாதுகாப்பதற்கான போராட் டங்களுடன் ஒருங்கிணைப்பதுடன், மத வெறிக்கு எதிராகவும் மற்றும் பாஜக-ஆர்எஸ்எஸ் பரிவாரங்களுக்கு எதிரான அர சியல்-தத்துவார்த்த போராட்டங்களையும் ஒருங் கிணைத்திடவும் அறைகூவி அழைக்கிறது.
காங்கிரஸ் எதிர்ப்பும் தொடரும்
பாஜகவிற்கு எதிராக போராட்டத்தின் பிரதான திசை வழி இருந்திடும் அதே சமயத்தில், நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றி வந்த காங்கிரசை எதிர்ப்பதும் தொடரும். காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளும் மற்றும் அதன் ஊழலும் தான் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு உதவியுள்ளது. எனவே, காங்கிரசுடன் எவ்விதமானப் புரிந்துணர்வோ அல்லது தேர்தல் கூட்டணியோ வைத்துக் கொள்வதை கட்சி யின் அரசியல் நிலைப்பாடு நிராகரிக்கிறது.
இடதுசாரி ஜனநாயக மேடை
அரசியல் நிலைப்பாடு ஒரு புதியதிசை வழியையும் தற்போது சேர்த்துக் கொண்டிருக்கிறது. அதாவது, பிராந்தியக் கட்சிகளின் தலைமையில் உள்ள மாநில அரசாங்கங்கள் பின்பற்றும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதையும் வலியுறுத்தியுள்ளது. மாநிலக் கட்சிகளின் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அரசியல் மற்றும் கொள்கைகளை எதிர்க்க வேண்டும் என்பதையும் அரசியல் நிலைப்பாடு உறுதிப்படுத்தி இருப்பதுடன்
அதன் அடிப்படையில் தொழிலாளி வர்க்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் ஜனநாயக மேடையைச் சுற்றி அணிதிரட்ட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருக் கிறது. இதுவரை கடைப்பிடித்து வந்த அரசியல் - நடைமுறை உத்தியை மறு ஆய்வு செய்ததன் வெளிப்பாடு இதுவாகும்.
இடது ஜனநாயக முன்னணிவரைவு தீர்மானம், இடது ஜனநாயக முன்னணியின் வடிவம் எத்தகைய தாக இருக்க வேண்டும் என்பதையும் வரையறுத்திருக்கிறது. 10வது அகில இந்திய மாநாட்டிற்குப்பின்னர், முதன்முறையாக, இவ்வாறு ஒரு வரையறையை வரைவு தீர்மானம் அளித்திருக்கிறது. அது வருமாறு: `தற்போது, இடது ஜனநாயக முன்னணிக்குள் ஈர்க்கப்பட முடிகின்ற சக்திகளின் மையமாக, இடதுசாரி கட்சிகள் மற்றும் அவற்றின் வர்க்க, வெகுஜன அமைப்புகள், இடதுசாரி குழுக்கள் மற்றும் அறிவுஜீவிகள்; பல்வேறு கட்சிகளில் சிதறிக் கிடக்கின்ற சோசலிஸ்டுகள்; காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளுக்குள் இருக்கும் ஜனநாயகப்பூர்வமான பிரிவினர்; பழங்குடியினர், தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர் ஆகிய பிரிவினரின் ஜனநாயகப்பூர்வமான அமைப்புகள்; ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரச்சனைகளை கையிலெடுத்துச் செயல்படும் சமூக இயக்கங்கள் ஆகியவை அமையும். முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ கட்சிகளின் கொள்கைகளுக்கு நேர்விரோதமான, முற்றிலும் மாறுபட்டதொரு திட்டத்தின் அடிப்படையில் இந்தச் சக்திகள் அனைத்தையும் ஒரு கூட்டு மேடையை நோக்கி அணிதிரட்டுவதன் மூலமே இடது ஜனநாயக அணியை நோக்கிய இயக்கமானது முறையானதொரு கட்டமைப்பிற்கு வழிகோலும். இந்த வகையிலான ஒரு நடவடிக்கைதான் பொதுவான கோரிக்கை சாசனத்துடன் பல்வேறு வகையான வர்க்க, வெகுஜன அமைப்புகள் அடங்கிய பொதுமேடை ஒன்றை உருவாக்குவதாக அமையும்.’’
சுயேச்சையான பலத்தைப் பெருக்குவோம்!
அரசியல் நிலைப்பாடு, கட்சியின் சுயேச் சையான வலுவை அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அழுத்தமாகக் கூறியிருக்கிறது. கட்சியும், இடதுசாரி சக்திகளும் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ள இன்றைய சூழ்நிலை யில், கட்சியின் சுயேச்சையான வலுவைத் தக்கவைத்துக்கொண்டு மேலும் விரிவுபடுத்த வேண்டியது மிகவும் முக்கியமாகும். கட்சியின் சுயேச் சையான வலுவை அதிகரித்திட ஒன்றுபட்ட போராட்டங்களும் கூட்டு இயக்கங்களும் ஒரு முக்கியமான தேவையாகும்.
மக்கள் பிரச்சனைகள், தேசிய இறையாண்மையைப் பாதுகாத்தல், மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இயக்கங்கள் ஆகியவற்றின் மூலம் ஒன்றுபட்ட மேடைகளும், வெகுஜன இயக்கங்களும் இதரஜனநாயக சக்திகளுடனும் காங்கிரஸ் அல்லாதமதச்சார்பற்ற கட்சிகளுடனும் நடத்தப்பட வேண் டும். வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகள் இவ்வாறு ஒன்றுபட்ட இயக்கங்கள் நடத்துவதன் நோக்கமே, காங்கிரஸ், பாஜக மற்றும் இதர முதலாளித்துவக் கட்சிகளின் பின் உள்ள மக்களை கூட்டு இயக்கத்திற்குள் கொண்டுவர முயல்வதேயாகும்.
இடதுசாரி ஒற்றுமையை பலப்படுத்துவோம்!
இடது மற்றும் ஜனநாயக முன்னணியைப் படிப்படியாக அமைத்திடுவதை நிறைவேற்று வதற்கு, இடது மற்றும் ஜனநாயக சக்திகளை அணிதிரட்டிட வேண்டியது அவசியம். கட்சியின் தேர்தல் உத்திகள் கட்சியை வலுப்படுத்துவதற்கும், இடது மற்றும் ஜனநாயக சக்தி களை அணிதிரட்டுவதற்கும் உதவக்கூடிய விதத்தில் இருக்க வேண்டும். கட்சியின் சுயேச்சையான வலுவை அதிகரித்திட வேண்டும், விரிவாக்கிட வேண்டும், இடதுசாரி ஒற்று மையை வலுப்படுத்திட வேண்டும் மற்றும் இடதுசாரி மற்றும் ஜனநாயகக் கூட்டணியை அமைத்திட வேண்டும் என்பவைகளே அர சியல் நடைமுறை உத்தியின் ஆணி வேராக அமைந்திருக்கிறது.
உள்ளூர் பிரச்சனைகளில் போராடுவோம்!
கட்சியை சுயேச்சையானமுறையில் விரி வாக்கம் செய்வதற்கு வர்க்க மற்றும் வெகுஜன இயக்கங்களை வளர்த்தெடுப்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியமாகும். ஸ்தலப்பிரச்சனைகள் மீது தொடர்ந்து போராட்டங்கள் மேற்கொள்வது, நவீன தாராள மயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத் துடனான இணைப்புச் சங்கிலியாக அமையும்! கட்சி சமூகப் பிரச்சனைகள் மீதும் நேரடியாகத் தலையிட்டு, போராட்டங்களைத் தன் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெகுஜன செல்வாக்கை விரிவுபடுத்துவோம்!
கட்சியின் சுயேச்சையான வலுவை விரிவுபடுத்துவது என்பது, மேற்கு வங்கத்திலும் வெகுஜன ஆதரவு தளத்திலும் அரிப்புஏற்பட்டிருப்பதை சரி செய்து முன்னேறு வது என்றும் பொருளாகும். கட்சி, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திலும், திரிணா முல் காங்கிரசின் வன்முறை வெறியாட்டங் களைத் தடுத்து நிறுத்துவதற்கான போராட்டத் திலும் ஏற்பட்டிருக்கும் நிலைமைகளை முறித்துக்கொண்டு முன்னேறவும், மக்களின்வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் பிரச்சனை களின் மீது மக்களைத் திரட்டிடவும், மதவெறியர்களின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை முறியடித்து முன்னேறவும் வேண்டியிருக் கிறது.
கேரளாவிலும் கட்சி தன் ஆதரவு தளத்தைகெட்டிப்படுத்துவதுடன், இடது ஜனநாயக முன்னணியை வலுப்படுத்திடவும் வேண்டியிருக்கிறது. திரிபுராவில், கட்சி தன் ஆதரவு தளத்தை விரிவுபடுத்தி இருக்கிறது. இடது முன்னணிஅரசாங்கம் மேற்கொண்டுள்ள நற்பணிகள் அங்கே கட்சியின் செல்வாக்கு விரிவடை வதற்கு உதவி இருக்கிறது. இந்த செல்வாக்கை மேலும் கெட்டிப்படுத்திடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மத்தியில் உள்ள பாஜக அரசாங்கத்தின் தாக்குதல்களிலிருந்து இடது முன்னணி அரசாங்கத்தைப் பாதுகாத்திடவும் மிகவும் விழிப்புடன் இருந்திட வேண்டும்.
அனைத்து இடதுசாரிகளையும் ஒருங்கிணைப்போம்!
இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்து வது என்பதும் வரைவு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மற்றுமொரு பணி யாகும். இதற்கு அனைத்து இடதுசாரிக் கட்சிகளையும், குழுக்களையும் மற்றும் தனிநபர் களையும் ஒரு பொதுவான இடதுசாரி மேடைக்குக் கொண்டுவந்து, அதனை விரிவுபடுத்துவதும் அவசியமாகும். தற்சமயம், ஆறுஇடதுசாரிக் கட்சிகள் கூட்டு நடவடிக்கை களுக்கு ஒன்றிணைந்திருக்கின்றன. இதனை மேலும் விரிவான இடதுசாரி மேடையைக் கட்டக்கூடிய விதத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது தேவை.
- தமிழில் : ச. வீரமணி


1 comment:

nerkuppai thumbi said...

கம்யூனிசக் கொள்கைகளை பதிவில், பின்னூட்டத்தில் விவாதிக்க முடியாது தான். எங்காவது துவங்க வேண்டு அல்லவா?

இடது சாரி ஆதரவு குறைந்து வருவதற்கு தர்க்க ரீதியான காரணங்கள் என்ன என்று உங்கள் பகுத்தாய்வு சொல்கிறது: மோடியின் மோடி வித்தை : மக்களை சொல்விளையாட்டால் ஏமாற்றுவது; ( மக்கள் ஏமாந்து விட்டனர்) காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைகளின் தோல்வி; இதைத் தவிர எதாவது உண்டா? ஜாதி அரசியல் இந்த அளவு இந்தியா முழுவதும், குறிப்பாக தமிழகத்தில் ஓங்கி நிற்பதற்கு இடது சாரி பதில் என்ன? ரஷியா, சீனா, போலந்து, செகொலச்லாவாகியா முதலிய நாடுகள் கம்யூனிசத்தை விட்டு விலகி ஏன் வெகு தூரம் சென்றன? அந்த தோல்விகளின் படிப்பினை என்ன? நம் வர்க்க ,பேதம், போராட்டம், சுரண்டல் அணுகுமுறையை மறு பரிசீலனை செய்து இடது சாரிக் கொள்கைகளை மேம்படுத்தி இருக்கிறோம் என்று எந்த இடது சாரித் தலைவரும் .பேசவில்லை. பதிவர் சீதாராம் யெச்சூரி பிரகாஷ் காரத் இல்லை தான். இருந்தாலும் கட்சியின் கொள்கையை ஓரளவு சொல்லலாம் அல்லவா?