Monday, May 11, 2015

வியத்தகு வளர்ச்சிப் பாதையில் திரிபுரா--சையது நக்வீ




மனிதவள வளர்ச்சித் திட்டங்களில் உலகமேவியக்கும் விதத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது திரிபுரா. சமூக முன்னேற்ற அட்டவணை யில் உள்ள 133 நாடுகளில் இந்தியா 101ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறது என்கிற சங்கடமான செய்தி வெளியாகியுள்ள அதே சமயத்தில், திரிபுரா மட்டும் அனைவரும் வியந்து போற்றும் வண்ணம் சமூக முன்னேற்றத்தில் பல முனை களிலும் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. 

மனிதவள வளர்ச்சி அட்டவணையில் இந்திய மாநிலங்களில் கேரளம் இப் போதும் முன்னணியில் உள்ள மாநிலமாக இருந்த போதிலும், சமீப ஆண்டுகளில் மற்ற பல்வேறு முனைகளில் அது கறை படிந்த மாநிலமாக மாறியிருக்கிறது. தமிழ்நாடு போன்று சில மாநிலங் கள் முன்னேறியிருந்தபோதிலும் அவை ஊழல் படிந்த மாநிலங்கள் என்ற பெயர்களையும் தட்டிச்சென்றுள்ளன. குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரை ஊடகங்கள் என்னதான் அதனைத் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுகிற போதிலும், முழுமையாக ஆய்வுகள் மேற்கொண்ட பின்னர்தான் இறுதித் தீர்ப்பினை வழங்கிட முடியும். 

ஊடகங்களின் பாராமுகம்

ஆயினும், நம் நாட்டில் ஒரு மாநிலம் மனித வள வளர்ச்சித் திட்டங்களில் அளப்பரிய சாதனைபடைத்திருக்கிறது என்றால் அது திரிபுரா மாநிலம்மட்டும்தான். ஆனால் இது குறித்து எவரும் விவாதித்திட வில்லை. 40 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட அது ஒரு சிறிய மாநிலம் என்ற காரணத்தால்தான் அவ்வாறு விவாதிக்கப்படவில்லையா?  (சிக்கிம் மற்றும் கோவா மாநிலங்கள்தான் இதனைவிடச் சிறியவைகளா கும்.) அல்லது, கடந்த 37 ஆண்டு காலத்தில் 32 ஆண்டு காலம் இடது முன்னணியின் கீழ் அங்கே ஆட்சி இருப்பதுதான் ஊடகங்கள் முகம் சுளிப்பதற்குக் காரணமா? திரிபுரா தொடர்பாக வெளிவந்துள்ள பதிவுகள் பல அம்சங்களில் பிரமிக்கத் தக்கவைகளாகும்.  

நாட்டில் மிக அதிக அளவு எழுத்தறிவு பெற்றவர்கள் வாழும் மாநிலமாக (96 சதவீதம்) திரிபுரா மிளிர்கிறது. குஜராத்தில் எழுத்தறிவு விகிதம் 83 சதவீதம் மட்டுமே. அதேபோன்று நீண்டகாலம் உயிர் வாழ்பவர்கள் குறித்த பதிவும் போற்றத்தக்கது. இம்மாநிலத்தில் ஆண்கள் 71 வயது வரையிலும் பெண்கள் 73 வயது வரையிலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குஜராத்தில் முறையே இது 64 மற்றும் 66 மட்டுமே. 

திரிபுராவில் இவை எப்படி சாத்தியமாயின? அங்கே நல்ல அரசியலுடன் நல்ல அரசாட்சியும் இருக்கிறது. திரிபுரா மாநிலத்தில் மூன்று அடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பு மிகச்சிறப்பாக இயங்குவதுடன், மாநிலத்தில் மூன்றில் இரு பங்கு பகுதிகளிலும், திரிபுராவின் பழங்குடியினர் பகுதிகளிலும் இயங்கிடும் சுயாட்சி மாவட்டக் கவுன்சில்கள் மத்திய, மாநில அரசுகளின் அனைத்துத் திட்டங்களையும் அனைத்து மக்களிடமும் மிகவும் எளிதாகக் கொண்டு சென்று விடுகின்றன. இதுதான் அம்மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாகும். நீண்ட காலம் மகாராஜாக்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்த திரிபுராவின் மக்கள் தொகை யில்  பழங்குடியினர்தான் பெரும்பான்மையினராக இருந்து வந்தார்கள்.  ஆனால், கிழக்கு பாகிஸ்தான் (பின்னர் வங்க தேசம்) உருவானபின்னர்,  திரிபுராவைச் சுற்றி மன்னர் சமஸ்தானங்களில் வாழ்ந்து வந்த வங்காளிகள் திரிபுராவிற்குள் புலம்பெயர்ந்தனர். இதனைத் தொடர்ந்து திரிபுராவில் பழங்குடியினர் எண்ணிக்கை (இங்கே மொத்தம் 19 வகை பழங்குடியினர் வாழ்கிறார்கள்)  சிறுபான்மையாக மாறிவிட்டது. இன்றைய தினம் இங்கே 70 சதவீதத்தினர் வங்காளிகள். 30 சதவீதத்தினர் பழங்குடியினராவார்கள். 

இங்கே ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி தாங்கள்அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக,  வங்காளிகள் வாக்கு வங்கியைத் தக்க வைத் துக் கொள்வதற்காக,  பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தி யது.  ஏதேனும் குற்றம் குறை காணப்பட்டால் அதற்கு ஏதேனும் ஒரு பழங்குடியினம் மற்றோர் பழங்குடியினத்தைக் காரணம் கூறுவது வழக்கமாக இருந்து வந்தது. 

கல்விக் கண் திறப்பு
இத்தகு சூழ்நிலையில்தான்  பழங்குடியினத்தில் உதித்த மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் தசரத் தேவ் அனைத்துப் பழங்குடியின மக்களின் எதிர்கால வாழ்வு குறித்து  சிந்தித்தார். பழங்குடியின மக்களுக்குக் கல்வி அவசியம் என்பதை அறிந்து 1945இலேயே ஜன சிக்சா அபியான் என்னும் பழங்குடியினர் மத்தியில் கல்விக்கான பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது ஆட்சி செய்து வந்த மகாராஜாவை நிர்ப்பந்தித்து 500 ஆரம்பப் பள்ளிகளுக்கு அங்கீகாரத்தைப் பெற்றார். அவை பின்னர் பல்கிப் பெருகி இன்றைய தினம் அம்மாநிலத்தில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு பள்ளிக்கூடம் என்ற விதத்தில் அமைந்திருக்கிறது.  இவ்வாறு விரிந்தஅளவில் அவர்கள் கல்வி கற்றதன் பயனாய் அவர்களில் பெரும்பாலானவர்கள் கம்யூனிசத்தை நோக்கி ஈர்க்கப் பட்ட அதே சமயத்தில், அங்கிருந்த வங்காளிகளோ காங்கிரசை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.
இவ்வாறு காங்கிரஸ் கட்சி பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தி திரிபுரா மக்கள் மத்தியில் வங்காளிகள் - பழங்குடியினர் பாகுபாட்டை ஏற்படுத்திக் கொண்டிருந்த சமயத்தில்தான் நிருபன் சக்ரவர்த்தி போன்ற தலைவர்கள் உருவாகி, மாநிலத்திற்குள் வங்காளிகள் - பழங்குடியினர் இடையே இருந்த பாகுபாடுகளைப் போக்கிட வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தார்கள்,  வங்காளிகள் - பழங்குடியினர் ஒற்றுமை இல்லையென்றால் இருதரப்பினருமே முன்னேற முடியாது என்பதை அவர்கள் மத்தியில் உணர்த்தினார்கள்.   பழங்குடியினர் - பழங்குடியினரல்லாதவர் ஒற்றுமை ஓங்குக என்ற முழக்கத்தை மாநிலம் முழுதும் கொண்டு சென்றார்கள். 1940கள், 1950களிலேயே கம்யூனிசத் தத்துவத்தைத் தழுவிக்கொண்ட பழங் குடியினர் இம்முழக்கத்தை உடனடியாகப் பற்றிக் கொண்டுவிட்டார்கள். வங்காளிகளில் சிலரும் இம்முழக்கத்தின் பக்கம் சாய்ந்தார்கள். வங்காளிகள் - பழங்குடியினர் ஒற்றுமை என்னும் மேடை இடதுசாரிகள் மூலமாகப் படிப்படியாக விரிவாகிக் கொண்டிருந்த அதே சமயத்தில், காங்கிரசாரோ வங்காளிகள் குறித்து மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்கள். திரிபுரா மாநில சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 50 தொகுதிகளை இடது முன்னணி கைப்பற்றி இருக்கிறது உண்மையே என்ற போதிலும், மொத்தம் உள்ள வாக் காளர்களில் 36 சதவீதத்தினர் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதும்,  இதில் பெரும்பகுதி காங்கிரசுக்கு சென்றிருக்கிறது என்பதும் உண்மையாகும்.  

இரண்டே இரண்டு தகரப் பெட்டியுடன்...

1978 முதல் 1988 வரை பத்தாண்டு காலம் திரிபுராவில் இடது முன்னணியின் முதல்வராக இருந்த நிருபன் சக்ரவர்த்தி, ஆட்சி முடிந்து தன்னுடைய அதிகாரப்பூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறிய சமயத்தில், இரண்டே இரண்டு தகரப் பெட்டிகளில் தன்னுடைய உடைகள், புத்தகங்கள், முகச்சவரம் செய்துகொள்ளும் பொருட்களுடன் வெளியேறினார். முதல்வரின் இல்லத் திற்குத் தேவையான மளிகை சாமான்கள் ரேசன் கார்டு மூலம்தான் வாங்கப்பட்டு வந்திருக்கிறது.    நவீன முதலாளித்துவம் அநேகமாக அவரை ஒரு மனிதராகவே ஏற்றுக்கொள்ளாது. ஏனெனில் அவருக்கு வங்கிக் கணக்கே கிடையாது.

திரிபுரா மாநிலத்தில் கடந்த 17 ஆண்டுகளாக முதல்வராக இருந்து வரும் அவரது சீடரான மாணிக் சர்க்காரும் அவரைப்போன்றே மிகவும் எளிமையானவராவார். தன் இல்லத்திலிருந்து அலுவலகத்திற்கு பல சமயங்களில் நடந்தே சென்று விடுவார். பள்ளிக்கூட ஆசிரியையாக இருக்கும் அவரது வாழ்க்கைத் துணைவி பள்ளிக்கூடத்திற்கு ஒரு ரிக்சாவில்தான் செல்கிறார்.  மாணிக் சர்க்கார் மத்திய - மாநில அரசுகளின் பெரிய திட்டங்கள் அனைத்தையும் ஆய்வு செய்திட நேரம் ஒதுக்குகிறார் என்பதைக் கண்டபோது மிகவும் வியப்பாகத்தான் இருந்தது.  

நான் அவரை, தாகூர் புகைப்படத்துடன் மிகவும் எளிமையாக அமைந்திருந்த அவரதுஅலுவலகத்தில் சந்தித்தபோது, அவர் தங்கள் மாநிலத் தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்ததை முழுமையாகப் பரிசீலனை செய்திருந்தார். “நாங்கள் இத்திட்டத்தின்கீழ் மொத்தம் உள்ள 100 நாட்களில் 85 நாட்களுக்கான வேலையை ஏற்கனவே அளித்து விட்டோம்’’ என்று புன்முறுவலுடன் அந்த எளிய முதல்வர் கூறினார். “மகாராஷ்ட்ராதான் நாட்டில் அதிக நாட்கள்வேலை அளித்த அடுத்த மாநிலமாகும். அதுவும் இதுவரை 50 நாட்களுக்குத்தான் வேலை அளித்திருக்கிறது.’’

அமைதிப்பூங்கா

மத்திய, மாநில அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் இம்மாநிலத்திற்கு இணையாக  வேறெதுவும் இல்லை. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், தாய்-சேய் பாதுகாப்பு, மின்விநியோகம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, சாலைகள் அமைத்தல், குக்கிராமங்களையும் இணைத்தல் என எதுவாக இருந்தாலும் திரிபுராவிற்கு இணை யாக வேறெந்த மாநிலத்தையும் கூற முடியாது. இவை அனைத்தும் சேர்ந்து மாநிலத்தை ஓர் அமைதிப் பூங்காவாக மாற்றி இருக்கிறது. அதன் காரணமாகத்தான் மாநிலத்தின் காவல்துறைத் தலைவரான கே. நாகராஜ், “அநேகமாக மாநிலத்தில் குற்றங்கள் நடைபெறுவது என்பதே அருகிப்போய் விட்டன,’’ என்று கூறி இனிய அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை பயங்கரவாதிகளின் அட்டகாசங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயந்து கொண்டிருந்த ஒரு மாநிலத்தில் இத்தகையதோர் அதிசயம் நடந்திருக்கிறது. “காவல்துறையினருக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே பரிபூர்ணமான முறையில் ஒருங்கிணைப்பு இருப்பதே இதற்குக் காரணமாகும்.’’

பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரையில் இணையற்ற விதத்தில் அம்மாநிலம் சிறந்து விளங்கிய போதிலும், கல்லூரிக் கல்வி மற்றும் தொழில் கல்வியில் அந்த அளவிற்கு அது வளர்ச்சி பெறவில்லை.  மாநிலத்தின் மூன்று பக்கங்களும் வங்க தேசத்தால் சூழப்பட்டுள்ள தால் இதற்கு அது பெரிதும் வங்க தேசத்தையே சார்ந் திருக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. இந்திய - வங்க தேச நட்புறவு இதற்குப் பெரிதும் உதவும். 

நன்றி: தி ஹான்ஸ் இந்தியா,

தமிழில்: ச.வீரமணி

No comments: