அகர்தலா வந்திருந்த பிரதமரை அதிகாரப்பூர்வ மரியாதை நிமித்தமாக திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் வரவேற்றபோது, அவருக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவதூறை வீசி எறிந்து வெகுகாலம் ஆகிவிடவில்லை. அதே மம்தா பானர்ஜிதான் இப்போது பிரதமர் மோடி கொல்கத்தா வருகை தந்தபோது, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளித்திருக்கிறார். அவர்கள் இருவருக்கும் இடையே புதிதாக ஏற்பட்டுள்ள உறவானது, 2014 மக்களவைத் தேர்தலின்போது அவர்களுக்கிடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்பை வரலாற்றின் பதிவேடுகளில் மூட்டை கட்டி வைக்கப்பட்டுவிட்டது என்பதைத் தெளிவுபடுத்திவிட்டது.
இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால், மத்தியில் உள்ள மோடி அரசாங்கத்துடன் ஓர் `அரசியல் ஒப்பந்தம்’ ஏற்பட்டால் மட்டுமே முடியும். தற்போது இந்த ஊழல்கள் தொடர்பாக அக்கட்சிக்கு இருந்து வரும் நிர்ப்பந்தங்களிலிருந்து மீள வேண்டுமானால் இது அவசியமாகும்.
புதிய பேரம் உருவாகியுள்ளது
இவ்வாறான நம் ஊகத்தை பிரதமர் மோடியின் உரையே உறுதிப்படுத்தி இருக்கிறது. அசன்சாலில் அவர் உரையாற்றுகையில், நிலக்கரி, அலைக்கற்றை வரிசை போன்று ஐமுகூ அரசாங்கத்தின் அனைத்து ஊழல்களையும் நினைவுகூர்ந்த அதே சமயத்தில், சாரதா சீட்டு நிதிநிறுவன ஊழல் குறித்து குறிப்பிட வசதியாக மறந்துவிட்டார். மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்ட இதே மோடிதான்,
இந்த சாரதா சீட்டு நிதிநிறுவன ஊழலைச் சுட்டிக்காட்டி திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராகவும் அக்கட்சியின் முதலமைச்சருக்கு எதிராகவும் பிரச்சாரத்தை மேற்கொண்டவர். உண்மையில், தில்லியில் மார்ச் 9 அன்று பிரதமர், மேற்கு வங்க முதல்வரைச் சந்தித்ததைத் தொடர்ந்து, சிபிஐ, சாரதா ஊழல் புலன் விசாரணைகளை நத்தை வேகத்தில் நடத்தத் துவங்கிவிட்டது. அதேபோன்று சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நகராட்சித் தேர்தல்கள் நடைபெற்ற சமயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பெரிய அளவில் மோசடிகளை செய்வதற்கு வசதி செய்து தரும் விதத்தில், பெயரளவில் மத்தியப் படைகளை அனுப்பி வைத்ததையும் பார்த்தோம்.
இதற்கு முன்பு மேற்கு வங்க முதல்வர் பிரதமரை பட்ஜெட்டுக்கு முந்தைய கலந்தாலோசனைக்காக சந்திக்க வரவில்லை. (மத்திய நிதி அமைச்சரைக்கூட சந்திக்க மறுத்துவிட்டார்.) இப்போது அவற்றுக்கு நேரெதிராக நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, ஒரு ‘புதிய பேரம்’ உருவாகியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. மேற்குவங்க முதல்வரும் தனது பங்கிற்கு, இதற்கு முன்பு பாஜக மற்றும் தனிப்பட்ட முறையில் பிரதமருடன் கொண்டிருந்த அனைத்துவிதமான பகைமை உணர்வுகளையும் கைவிட்டுவிட்டார். இருவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் மிகவும் சுமூகமான முறையில் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.
நஸ்ருல் மஞ்ச் அரங்கத்தில் பொது மக்கள் மற்றும் ஊடகங்கள் இல்லாது, சுமார் 30 நிமிடங்களுக்கு இச்சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. பின்னர் இருவரும் ஆளுநர் மாளிகையில் உணவு அருந்தி இருக்கிறார்கள். மாநிலங்களவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடையாது என்பதால், நிலுவையில் உள்ள முக்கியமான சட்ட முன் வடிவுகளை நிறைவேற்றிட திரிணாமுல் காங்கிரசின் ஆதரவை, பிரதமர் கோரி இருக்கிறார். சமீபத்தில், நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் சட்டமுன்வடிவு மற்றும் நிலக்கரி ஒதுக்கீடுகள் சட்டமுன்வடிவு ஆகியவை நிறைவேறுவதற்கு மோடி அரசாங்கத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் உதவியது.
இதற்கு முன் கடுமையாக எதிர்த்து வந்த பொருள்கள் மற்றும் சேவைகள் வரி சட்டமுன்வடிவிற்கு ஆதரவு அளித்திடவும் இப்போது ஒப்புக்கொண்டிருக்கிறது. இவ்வாறு இரு கட்சிகளுக்கும் இடையே `பயன்கள்’ பரஸ்பரமானவைகளாகும். பிரதமர் மோடி, சமீபத்திய அரசியல் வரலாற்றைக்கூட, குறிப்பாக, மத்திய அரசுக்கும் மேற்குவங்க மாநில அரசுக்கும் இடையேயான உறவுகளைக் கூட, மாற்றி அமைத்திடும் வேலையில் இறங்கி இருக்கிறார். அசன்சாலில் அவர் இந்திய இரும்பு மற்றும் உருக்கு கம்பெனி விரிவாக்கத் திட்டத்தைத் துவக்கி வைக்கும் நிகழ்வின்போது உரையாற்றுகையில், மாநிலத்தில் ஆட்சி செய்த இடதுமுன்னணி தொழில்மயத்திற்கு உதவவில்லை என்றும், அடல் பிகாரி வாஜ்பாயி தலைமையிலான முன்னாள் பாஜக அரசாங்கம் அளிக்க முன்வந்த உதவியையும் இடது முன்னணி அரசாங்கம் ஒதுக்கித் தள்ளிவிட்டது என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார்.
ஆனால் உண்மை என்ன? இந்திய இரும்பு மற்றும் உருக்கு கம்பெனியின் ஒட்டுமொத்த நவீனமயமும் இடது முன்னணி அரசாங்க காலத்தில்தான் தொடங்கியது. இது தொடர்பாக அடல் பிகாரி வாஜ்பாயி அரசாங்கம் எவ்வித உதவியையும் செய்ய மறுத்துவிட்டது. இடதுசாரிகள் வெளியே இருந்து ஆதரவு அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்து ஐமுகூ-1 அரசாங்கத்தின் காலத்தில்தான் மத்திய அரசின் உதவியைக் கட்டாயப்படுத்தி பெற முடிந்தது. அந்த சமயங்களில் எல்லாம், மேற்கு வங்கத்தில், அன்றைய மேற்கு வங்க அரசாங்கம் மேற்கொண்ட இஸ்கோ நவீனமயம் உட்பட அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் திரிணாமுல் காங்கிரஸ் எதிர்த்தது.
பிரதமர் மோடி, தற்போது பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை, புதிய திட்டங்கள் என்ற பெயரில் படாடோபமாக அறிவித்திருக்கிறார். இவை அனைத்துமே முந்தைய அரசாங்கங்கள் பின்பற்றிய திட்டங்கள்தான். புதிய பெயர்களைச் சொல்லி அறிவித்திருக்கிறார். இந்த சமயம் அவர் மூன்று திட்டங்களை - பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா, ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் அடல் பென்ஷன் திட்டம் - என்னும் மூன்று திட்டங்களை மிகுந்த வாணவேடிக்கைகளுடன் அறிவித்திருக்கிறார்.
இவ்வாறு திட்டங்களை அறிவிக்கும்போது அவர், கடந்த அறுபதாண்டுகளில் நாட்டில் உருப்படியாக எதுவுமே நடக்கவில்லை என்றும், தான் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்புதான் மக்களுக்கான நலத்திட்டங்கள் எல்லாமே தொடங்கி இருப்பதாகவும் சரடு விட்டிருக்கிறார். பிரதமர் மேலும் கூறுகையில், “ஏழைகளுக்காக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போதிலும், வங்கிகளில் ஏழைகள் எவருமில்லை’’ என்றும் அடுக்குமொழியில் அளந்திருக்கிறார். “80 இலிருந்து 90 சதவீதம் வரையிலான மக்களுக்கு ஓய்வூதியமோ இன்சூரன்சோ கிடையாது’’.
பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தையும் கோடிக்கணக்கான புதிய வங்கிக் கணக்குகளும் திறக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். ஆனால், இப்போதும்கூட நாட்டின் 120 கோடி மக்கள் தொகையில் 15 கோடி மக்களுக்குத்தான் வங்கிக் கணக்கு உண்டு. இதில் மிகவும் மோசமான விஷயம், இவ்வாறு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கு நபர்களுக்கு ரொக்க இருப்பே கிடையாது என்பதாகும். மோடி அறிவித்திருக்கும் மேற்கண்ட மூன்று திட்டங்களுமே வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே, நடைமுறையில் நாட்டிலுள்ள மக்களில் 90 சதவீதத்தினர் இத்திட்டங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விடுகிறார்கள். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பல திட்டங்களும் இவ்வாறு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்குத்தான் பொருந்தும்.
இத்திட்டங்கள் எதற்கும் எவ்விதமான பட்ஜெட் ஒதுக்கீடோ அரசாங்க நிதி ஒதுக்கீடோ கிடையாது என்பது அனைத்தையும் விட மோசமான விஷயமாகும். இதன் பொருள், இத்திட்டங்கள் அனைத்துமே மக்கள் அளித்திடும் நிதியைக் கொண்டு அவர்களுக்கு உதவிடும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதேயாகும்.
மோசடி பென்சன் திட்டம்உதாரணமாக, `அடல் பென்ஷன் யோஜனா’ என்னும் ஓய்வூதியத் திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முறைசாராத் தொழிலாளர்கள் 18 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் மாதா மாதம் அளிக்கும் தொகையிலிருந்து அவர்களுக்கு 60 வயது ஆன பின்னர், அவர்கள் அளித்திடும் பங்களிப்பின் அடிப்படையில், குறைந்தபட்சம் 1000 ரூபாய்க்கும் 5000 ரூபாய்க்கும் இடையே ஒரு தொகையை அளிக்கும் திட்டமாகும். அதாவது, ஒரு நபர் குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு மாதா மாதம் ஒரு தொகையை அளித்திட வேண்டும். இவ்வாறு இவர்கள் அளிக்கும் தொகைக்கு வட்டி எதுவும் சேர்க்கப்பட மாட்டாது. இவர்கள் அளித்த தொகையிலிருந்து ஒரு தொகை ஓய்வூதியமாக இவர்களுக்கு அளிக்கப்படுமாம். மேலும், தற்போது நாட்டில் மக்கள் உயிர்வாழ்வது என்பது சராசரி 65.5 வயதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. அப்படியெனில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் மாதா மாதம் தொகையை ஒருவர் செலுத்தினால், அவர்களுக்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு இவ்வாறு இவர்கள் ஓய்வூதியம் அளிப்பார்கள். இவ்வாறுதான் பிரதமர் மோடியும்மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், மக்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைக ளாக படாடோபமான விளம்பரங்களுக்கு இடையே அறிவித்துள்ள பல திட்டங்களின் லட்சணங்களாகும். பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் “கர் வாப்ஸி’’ (வீட்டிற்குத் திரும்புவோம்) திட்டத்தை அமல்படுத்துவதில் பெற்றி பெற்றிருக்கிறார் என்றும் இதற்கு திரிணாமுல் காங்கிரசின் அரசியல் சந்தர்ப்பவாதம் உதவி இருக்கிறது என்றும் எண்ணற்ற பேச்சுகள் நாடாளுமன்றத்தின் நடைக்கூடங்களில் உலா வருகின்றன. கடந்த காலங்களில் மேற்குவங்கத்திற்குள் நுழைய பாஜகவிற்கு வழியேற்படுத்தித் தந்தது திரிணாமுல் காங்கிரஸ்தான். மம்தா பானர்ஜியே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் ஆரம்பத்தில் ரயில்வே துறைக்கும், பின்னர் நிலக்கரித்துறைக்கும் கேபினட் அமைச்சராக இருந்திருக்கிறார். முந்தைய இடதுமுன்னணி அரசாங்கத்திற்கு எதிராக வன்முறை மற்றும் பயங்கரவாத பிரச்சாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஈடுபட்டிருந்த சமயத்தில் அதற்கு ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்களிடமிருந்து தாராளமாய் ஆதரவு கிடைத்து வந்தது. இப்போது மீண்டும் மத்திய அரசாங்கமும், பாஜக வும் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரசால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அராஜகம், வன்முறை மற்றும் பயங்கரவாத அரசியலுக்குப் பங்காளிகளாகி இருப்பது தெள்ளத்தெளிவாகி இருக்கிறது.மத்திய அரசும், மேற்குவங்க மாநில அரசும் மக்கள் விரோதக் கொள்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதன் காரணமாக மக்களின் சுமைகள் மேலும் அதிகரித்துவரும் நிலையில், இவ்விருவருக்கும் இடையிலான கடைந்தெடுத்த அரசியல் சந்தர்ப்பவாதம் மாநிலத்தில் மதவெறியைக் கூர்மைப்படுத்துவதற்கும் இட்டுச் சென்றுள்ளது. வரவிருக்கும் காலங்களில் மிகவும் மட்டரகமான இக்கூட்டுக் கலவையை எதிர்கொள்ள வேண்டிய அச்சுறுத்தலுக்கு மேற்கு வங்க மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நாடு முழுதும் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக எண்ணம் கொண்ட மக்களின் ஆதரவு இல்லாமல் மேற்கு வங்க மக்களுக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய அச்சுறுத்தலை முறியடித்திடவோ, நாட்டையே விழுங்குவதிலிருந்து தடுத்திடவோ முடியாது. இத்தகைய அச்சுறுத்தலின் சவாலை நாம் அனைவரும் ஒன்றுபட்டு முறியடித்திடுவோம்.
மே 13, 2015
தமிழில் : ச.வீரமணி
No comments:
Post a Comment