Saturday, October 18, 2008

சங்பரிவாரக் கும்பலின் காட்டுமிராண்டி நடவடிக்கைகளுக்கு எதிராக
















புதுடில்லி, அக்.18-
சங் பரிவாரக் கும்பல் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொண்டிருக்கும் காட்டுமிராண்டித்தனமான அட்டூழியங்களுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் மற்றும் மதச்சிறுபான்மையினரின் பரந்த மேடையைக் கட்டிடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கூறினார்.
தலைநகர் டில்லியில் உள்ள மாவலங்கார் அரங்கத்தில் சனியன்று மாலை வகுப்புவாதம் மற்றும் ஜனநாகத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராகச் சிறப்புமாநாடு நடைபெற்றது. மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவகவுடா, தெலுங்கு தேசக் கட்சியின் சார்பில் எர்ரநாயுடு, டில்லி கிறித்துவ கவுன்சில் செக்ரடரி ஜெனரல் ஜான் தயால், ஜாமியா மிலியா பல்கலைக் கழகத் துணை வேந்தர் நூருல் ஹாசன், மூத்த பத்திரிகையாளர் குல்தீப்நய்யார், இளம் பத்திரிகையாளர் சீமா முஸ்தபா மற்றும் டில்லி ஆர்ச் பிஷப் வின்சென்ட் கன்செஸ்ஸா மற்றும் பலர் உரையாற்றினார்கள். சிறப்பு மாநாட்டில் நிறைவுரையாற்றியபோது பிரகாஷ்காரத் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
மதச்சிறுபான்மையினரைக் காப்பதற்கான போராட்டம் என்பது, நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டம். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என்று பொருள். பல்வேறு மாநிலங்களிலும் சங்பரிவாரக் கும்பல் மதச்சிறுபான்மையினருக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்டுள்ள காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை அம்மாநில அரசுகள் தடுத்திடத் தவறிவிட்டன. மத்திய அரசும் உரியமுறையில் தலையிட மறுக்கிறது.
தேசப்பற்று என்ற பெயரில் பஜ்ரங்தளம் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராயில்லை.
காங்கிரஸ்கட்சி தலைமையில் உள்ள ஐமுகூ அரசாங்கம் இதே பாதையைத் தொடருமானாலும் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் மேலும் அது செல்வாக்கு இழக்கும் என்பது நிச்சயம்.
பெரும்பான்மை மதவெறியர்களின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட, ஒரு வழிமுறையாக இன்று இத்தகைய பரந்த மேடை டில்லியில் உருவாகி இருக்கிறது. இதுபோன்று நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரந்த மேடையைக் கட்டிடுவோம்.
இவ்வாறு மதச்சார்பற்ற சக்திகளும், மதச்சிறுபான்மையினரும் ஒன்றுபட்டால் நாட்டின் மதச்சார்பின்மையைக் காத்திட முடியும், நாட்டின் ஜனநாயகத்தைக் காத்திட முடியும், நாட்டின் மதச் சிறுபான்மையினரையும் காத்திட முடியும், பெரும்பான்மை மதவெறி சக்திகளின் அட்டூழியங்களுக்கு மிக எளிதாக முற்றுப்புள்ளி வைத்திட முடியும். அந்தத் திசைவழியில் இன்று டில்லியில் தொடங்கியுள்ள இந்தத் திசைவழியில் முன்னேறுவோம்.
இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.
தொடர்ந்து மதச்சிறுபான்மையினரைக் காத்திட உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், மதவெறித் தீயை உசுப்பிவிடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும், பயங்கரவாத நடவடிக்கைசகளில் ஈடுபடும் அனைத்து அமைப்புகள் மீதும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Wednesday, October 15, 2008

சிங்கூர்: மக்கள் விரோத அரசியலைத் தோற்கடித்திடுவோம்





மேற்கு வங்கத்தில் இடது முன்னணிக்கு எதிரான சக்திகள், திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மமதா பானர்ஜி தலைமையில், சிங்கூரிலிருந்து டாடா கார் உற்பத்தித் தொழிற்சாலையை விரட்டியடிப்பதில் துரதிஷ்டவசமாக வெற்றி பெற்றுள்ளன.
இவ்வாறு, இழப்பீட்டுக் காசோலையை பெற மறுத்த பத்து சதவீதத்தினருக்கும் குறைவானவர்களின் ஆதரவுடன், அப்பகுதி மக்களுக்கு முன்னேற்றகரமான வாழ்வாதாரத்தையும், எதிர்கால சுபிட்சைத்தையும் அதேபோன்று தொழில்மயத்தையும் கடுமையாகப் பாதித்திருக்கின்றனர். நாம் இப்பகுதியில் முன்பே குறிப்பிட்டிருந்ததைப்போல, நந்திகிராம் மற்றும் சிங்கூரில் இவர்கள் மேற்கொண்ட சீர்குலைவு வன்முறைகள் அரசியலையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இந்தப் போராட்டங்களின் மூலமாக திரிணாமுல் காங்கிரசும், மற்ற எதிர்க்கட்சிகளும் தங்களுடைய ஆதரவுத் தளத்தை வலுப்படுத்திக்கொள்ள முயல்கின்றன. இறுதியாக, எத்தகைய அரசியல் தங்களுக்குத் தேவை என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் மேற்கு வங்க மக்களேயாவர்.
மமதா பானர்ஜி, நானோ கார் உற்பத்தித் திட்டத்தை மட்டும் வங்கத்திலிருந்து விரட்டியடிக்கவில்லை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதானக் கட்சியான பாஜகவின் விசுவாசமிக்க கூட்டணிக்கட்சி என்ற முறையில், நானோ திட்டத்தை குஜராத்தில் அமைப்பதற்கும் வசதி செய்து கொடுத்திருக்கிறார். அவர் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிப்பதன் மூலம், பாஜகவின் நரேந்திர மோடி அரசாங்கம் முஸ்லீம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்டுள்ள மதவெறிப் படுகொலைகளை, சரி என்று ஏற்றுக்கொள்கிறார் என்பதை நினைவிற் கொள்க.
வங்கத்திலிருந்து, டாடா தன்னுடைய நானோ கார் உற்பத்தித் திட்டத்தை வேறிடத்திற்கு ஏன் எடுத்துச் சென்றுள்ளார் என்பது குறித்தெல்லாம் சற்றும் கவலைப்படாமல், பெரு முதலாளிகளின் கார்பரேட் ஊடகங்கள், தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி மீது அவதூறை வாரி இறைப்பதைக் குறைத்துக் கொள்ளவே இல்லை. ‘‘மமதாவை மட்டும் குறை சொல்லாதீர்கள்’’ என்று தி எகனாமிக் டைம்ஸ் அலறுகிறது. வேறு சிலர் சற்றே தணிந்த குரலில் குறை சொன்னாலும், மார்க்சிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும்தான் இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிவருகின்றன. பிசினஸ் ஸ்டாண்டர்ட் இதழ் மமதா பானர்ஜியை, கோலியத்திற்கு எதிராகப் போராடிய டேவிட் போன்றவர் என்றும், தி இந்துஸ்தான் டைம்ஸ் ஏடு அவரை ‘‘இந்தியாவின் காப்பாளர்’’ என்றும் புகழாரம் சூட்டியிருக்கின்றன. இதனை அந்த ஏடு ‘‘நிலத்தை ஒப்படைக்க விரும்பாத விவசாயிகளை’’ காவல்துறையினர் கண்மூடித்தனமாக அடிக்கும் வீடியோ படத்தின் கீழ் வந்த அடிக்குறிப்பை ஆதாரமாகக் காட்டி தன் புகழாரத்தை நியாயப்படுத்தி இருக்கிறது. அவ்வாறு ஒரு சம்பவம் நடந்ததற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்ற போதிலும், இத்தகைய இழிவான செயல்களில் அவை இறங்கின.



இதுபோன்ற சித்தரிப்புகள் நமக்கு 1970களின் ஆரம்ப காலங்களில் வியட்நாமுக்கு எதிராக சைகோனை அமெரிக்க ராணுவத்தினர் முற்றுகையிட்ட சமயங்களில், பாங்காக்கிலிருருந்த பிரஸ் கிளப் ‘‘நேரில் கண்ட காட்சிகளாக’’ வெளியிட்ட சாட்சியங்களைத்தான் நினைவுபடுத்துகின்றன. ஆனால் நடந்தது என்ன? இறுதியில் அமெரிக்காவின் இராணுவத்தினை, நிர்மூலமாக்கி, சைகோனையும் நாட்டின் பிற பகுதிகளையும் அமெரிக்காவிடமிருந்து வென்றெடுத்தது வியட்நாம்.
இடதுசாரிகளுக்கு எதிராக இத்தகைய கடுஞ்சொற்களை இவை பிரயோகிக்கும் அதே சமயத்தில், சில அடிப்படைப் பிரச்சனைகளும் முன்னுக்கு வந்துள்ளன. முதலாவதாக, இடது முன்னணி அரசாங்கம், தரிசு நிலத்தை கையகப்படுத்துவதற்குப் பதிலாக, விளை நிலங்களை ஏன் கையகப்படுத்தின? விடை மிகவும் எளிதான ஒன்றுதான். மேற்கு வங்கத்தில் தரிசு நிலம் என்று இருப்பது இரு சதவீதத்திற்கும் குறைவாகும்.


இரண்டாவதாக, இடது முன்னணி அரசாங்கம் ஏன் நில உரிமையாளர்களுக்கு டாடா நிறுவனம் மூலமாக பணம் கொடுக்க முயலவில்லை? இதற்கும் விடை மிக எளிது. நாட்டில் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு ஒரு புதிய மத்தியச் சட்டம் தேவைப்படுகிறது. 1894இல் பிரிட்டிஷார் ஆட்சியிலிருந்தபோது, ரயில் பாதை அமைப்பதற்காக, நாடு முழுதும் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலமாகத்தான் தற்போதும் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. (கடந்த மூன்றாண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன.) தற்காலத்திற்கொவ்வாக இத்தகைய சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி வருகிறது. அவ்வாறு நிலம் அளிப்போருக்கு இழப்பீடு தரப்படுவதுடன், மேற்படி தொழிற்சாலையில் வேலை உத்தரவாதம் அளிப்பதற்கும் வகை செய்யக்கூடிய வகையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம். இதனைச் சட்டரீதியாகச் செய்திட வேண்டியிருக்கிறது. இதனை தனிப்பட்ட கார்பரேட் நிறுவனங்களின் விருப்பத்திற்கு மேற்கொள்ள அனுமதித்திட முடியாது. இதற்கு ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டாக வேண்டியது அவசியம்.


துரதிர்ஷ்டவசமாக, கடந்த நான்கு ஆண்டு காலமாகவே, குறிப்பாக சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு நிலம் கையகப்படுத்தல் பிரச்சனை மிக உக்கிரமாக வந்த சமயத்திலேயே, இவ்வாறு புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இப்போதாவது அதனை அவசரமாகச் செய்திட வேண்டியது தேவையாகும்.


மூன்றாவதாக, டாடா நிறுவனத்திற்குப் போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறியதால்தான் அந்நிறுவனம் சிங்கூரிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று என்று ஒரு பல்லவி மீண்டும் மீண்டும் பாடப்படுகிறது. ரத்தன் டாட்டாவே ஒப்புக்கொண்டிருப்பதுபோல இது காரணமல்ல. உண்மையில், போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாநில அரசு தன் கடமையைச் செவ்வனே செய்து வந்தது. ஆயினும், டாட்டா ஒரு நிலைபாட்டினை மேற்கொண்டார். அதாவது, அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்காவிடில், தாங்கள் சிங்கூரில் தொடர்ந்து இருக்கப் போவதில்லை என்று கூறினார். நிச்சயமாக இத்தகு நிலைபாட்டினை ஏற்காமல் ஒருவர் மறுத்திட முடியும். ஒரு குடியிருப்புப் பகுதியில் ஒருவர் வீடு கட்டுகிறார் என்றால், அங்குள்ள அனைவரும் தனக்கு ஒத்துழைப்பு தந்தால்தான், தன் வீட்டில் வந்து எதையும் திருட மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்தால்தான் வீடு கட்டுவேன் என்று எவரும் கூறுவதில்லை. ஆயினும், மமதா பானர்ஜியைப் போன்றே, டாட்டாவிற்கும் பகுத்தறிவுக்கொவ்வாத நிலைபாட்டினை மேற்கொள்வதற்கு முழு உரிமையும் உண்டு.


மொத்தத்தில், வங்கமும் அதன் மக்களும் தற்காலிகமாக அதிலும் குறிப்பாக இந்தத் திட்டத்தைப் பொறுத்து இதனால் ஏற்பட இருந்த வாய்ப்பு வளங்களைப் பெற மறுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் நாம் முன்பே குறிப்பிட்டிருப்பதைப் போல, வங்கமும் அதன் மக்களும் முன்னேற வேண்டுமானால் அங்கு மிகவிரைவான முறையில், நிலச்சீர்திருத்தங்களால் விளைந்துள்ள பயன்பாடுகளை ஒருமுகப்படுத்தி, வேளாண்மை உற்பத்தியை அதிகப்படுத்தி, அவற்றை அடிப்படையாகக் கொண்டு தொழில்மயத்தை ஏற்படுத்துவதும் அவசியம். இடது முன்னணி மற்றும் மக்கள் மத்தியில் நீண்ட நெடிய விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு இம்முடிவுக்கு இடது முன்னணி வந்திருக்கிறது. இப்பிரச்சனையை முன்வைத்துத்தான் சென்ற சட்டமன்றத் தேர்தலை இடது முன்னணி சந்தித்தது. இதற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மக்கள் இதனை மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையு.டன் தேர்வு செய்தார்கள். இப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறதென்றால், அது மக்களின் உறுதிமொழியை மறுதலிப்பதேயாகும்.
எனவே, தாங்கள் அளித்திட்ட உறுதிமொழியை நிறைவேற்ற முயற்சிக்கும்போது, அதற்கு எதிர்ப்பு வந்தால் அதனை நிராகரிப்பதா அல்லது அதனை ஏற்றுக்கொள்வதா என்று முடிவெடுப்பதும் வங்க மக்களேயாவர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நானோ திட்டத்தை வங்கத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்றுவதற்கு எந்த அரசியல் முன்வந்ததோ, அந்த அரசியலையும் வங்கத்தின் மற்றும் அதன் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, வேறு இடத்திற்கு அப்புறப்படுத்துவது அவசியமாகும்.
(தமிழில்: ச.வீரமணி)

மன்மோகன்சிங்கிற்கு ஜோதிபாசு கடிதம்

புதுடில்லி, அக்.14-என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஜோதிபாசு கடிதம் எழுதியுள்ளார்.

தலைநகர் டில்லியில் திங்கள் அன்று தேசிய ஒருமைப்பாடு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்குமாறு, பிரதமர், ஜோதிபாசுவுக்குக் கடிதம் எழுதியிருந்தார். கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாமையை விளக்கியும், நிகழ்ச்சிநிரல் தொடர்பாக சில பரிந்துரைகளை விளக்கியும் ஜோதிபாசு, பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதன் விவரம் வருமாறு:

‘‘தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கோரி அதனுடைய நிகழ்ச்சிநிரலையும் அனுப்பியிருந்தீர்கள். என் உடல் மிகவும் நலிவுற்றிருப்பதன் காரணமாக என்னால் நேரடியாகக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். ஆயினும் நிகழ்ச்சிநிரலில் கண்டுள்ள விவரங்கள் குறித்து ஒருசில பரிந்துரைகளை கூட்டத்தில் விவாதிப்பதற்கா இத்துடன் அனுப்பி இருக்கிறேன்.தேசிய ஒருமைப்பாடு குறித்து துல்லியமான பரிந்துரைகள் பலவற்றை எங்கள் கட்சியின் சார்பில் ஆட்சியில் இருந்து அத்துணை அரசாங்கத்திற்கும் அவ்வப்போது அனுப்பி வந்திருக்கிறோம். ஆயினும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசின் சார்பில் எவ்வித கொள்கைத் திட்டமும் இதுவரை வகுக்கப்படவில்லை. தேசிய ஒருமைப்பாடு ஒரு வலுவான யதார்த்தமானதாக மாற வேண்டுமானால் அரசு தற்போது கடைப்பிடித்து வரும் கொள்கை நிலைப்பாடுகளில் அடிப்படை மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். இதற்கு அரசியல் உறுதி அவசியம். அரசியலமைப்புச் சட்டத்தின் ஆணிவேரே, அரசின் கொள்கைத் திட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகள் என்று அழைக்கப்படும் பிரதான விதிகள்தான். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்க்கைக்குரிய போதுமான வாழ்வாதாரம், வேலை செய்ய உரிமை, செல்வம் ஒரு பக்கத்தில் குவியா வண்ணம் உள்ள பொருளாதார முறை, கல்வி உரிமை, அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி, தொழிலாளர்களுக்கு வாழ்க்கை ஊதியம், ஆண் - பெண் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் அனைத்தும் இந்த பிரதான விதிகளில் உள்ளடங்கி இருக்கின்றன. ஆனால் இந்த விதிகளில் எதுவுமே அமல்படுத்தப்பட முடியவில்லை. நாட்டில் ஆட்சியாளர்கள் இன்னமும் சமூகப் பொருளாதார முறைகளில் செல்வந்தர்களைச் சார்ந்தே செயல்படுவதே இதற்குக் காரணமாகும். அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதன்பின் ஆட்சி புரியத் தொடங்கி 58 ஆண்டுகள் கழிந்த பின்பும், சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போவது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.நாட்டின் பொருளாதார அமைப்பில் மேற்கூறிய காரணிகளினால், நாடு சுதந்திரத்திற்குப்பின் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பதட்ட நிலைமை ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல், இது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் கேடு விளைவித்திருக்கிறது. இந்தியா தொழில் மேல்கட்டுமானத்துடன் கூடிய ஒரு விவசாய நாடாகும். பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரத்தை நாம் பெற்ற பின்னர், 1950களின் மத்தியில் நிலச்சீர்திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்த போதிலும், அடுத்தடுத்து வந்த காங்கிர° மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைமைகளிலான மத்திய அரசாங்கங்கள் நிலச்சீர்திருத்தங்களைச் செய்திட மறுத்து விட்டன. கிராமப்புரங்களில் ஏழை - பணக்காரன் ஏற்றத்தாழ்வு வளர்ந்துகொண்டே இருக்கிறது. கிராமப்புர விவசாய மக்கள் கடும் துன்பத்திற்காளாவது தொடர்கிறது. கிராமப்புர மக்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதம் செய்யும் மத்தியச் சட்டம் ஒன்று இதுவரை நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.தாராமயக் கொள்கையும், ஏகாதிபத்திய ஆதரவு உலகமயக் கொள்கையும் நாட்டின் பொருளாதாரத்தை பன்னாட்டு நிதிநிறுவனங்கள் சூறையாடிட வழிவகுத்துத் தந்திருக்கிறது. அதிகார வர்க்கம், கல்வி முறை, ஊடகம், கலாச்சாரம் அனைத்திலும் இப்போது அந்நிய மூலதனம் தங்குதடையின்றி, புகுந்து கொண்டிருக்கின்றன. இதனால் பிராந்திய அளவிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருக்கின்றன என்றும், நாட்டு ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கின்றன என்றும் கூறினால் அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை. நிலச்சீர்திருத்தம் மூலம் நிலங்களைக் கையகப்படுத்தி, அவற்றை மக்களுக்கு மறுவிநியோகம் செய்யாதது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் திட்டமிட்டு உருவாக்காதது ஆகியவற்றை சாதிக் குழுக்கள் பயன்படுத்திக் கொண்டு, மக்களை சாதிய ரீதியாக பிளவுபடுத்தும் வேலைகளில் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. அரசியல், சமூக, பொருளாதார சமத்துவமில்லையென்றால், மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள சாதியினர் அதிலும் குறிப்பாக தலித்துகள் மிக எளிதாக இத்தகைய சாதிய சக்திகளுக்கு இரையாகிவிடுவார்கள், இரையாகியும் இருக்கிறார்கள்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகப் பின்தங்கிய நிலைமைகளை வகுப்புவாதம் பயன்படுத்திக்கொண்டு வேருன்றிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டியது அவசியம். இட ஒதுக்கீடு அவசியம்தான் என்றாலும், குறிப்பாக பொருளாதார வல்லமையைத் தராத நிலையில், இத்தகைய இட ஒதுக்கீடு மட்டும் பிரச்சனைகளைத் தடுத்துவிடாது. பொருளாதாரக் கட்டமைப்பில் அடித்தட்டில் உள்ளவர்கள், சமூகக் கட்டமைப்பிலும் அடித்தட்டில் உள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையைத் திணித்தல், விவசாயத்தில் அரசு முதலீட்டை இல்லாமல் ஒழித்தல், விவசாயிகளின் கடன் சுமை அதிகரித்தல் - இவை அனைத்தும் ஒடுக்கப்பட்டமக்களை சொல்லொணாத் துயரத்திற்குள்ளாக்கி யுள்ளன. இக்காரணிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மாநில ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்தி, பல்வேறு ஒடுக்கப்பட்ட சாதியினரின் அடையாளங்களையும் மேலும் மோசமாக்கி இருக்கிறது.மத்திய - மாநில உறவுகளை மாற்றி அமைத்திட நாங்கள் மிக விரிவான அளவில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தோம். அதன்விளைவாக, திருமதி இந்திராகாந்தி அவர்களால் சர்க்காரியா ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் முழுமையாக திருப்தி அளிக்கக்கூடியவை அல்ல என்றாலும், ஒருசில நிதி உறவுகள் தொடர்பாக அதன் கருத்துக்கள் இன்னமும் அமல்படுத்தப்பட வில்லை.மத்திய - மாநில உறவுகள் ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. சில மாநிலங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வதும் சில மாநிலங்களைக் கண்டுகொள்ளாதிருப்பதும் தொடர்கிறது. மத்திய அரசின் இத்தகைய நிலைபாட்டினை நாட்டைச் சீர்குலைக்க முயலும் சக்திகள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, நாட்டின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

சிறுபான்மை இனத்தவரின் நிலைமைகள் குறித்து ஆய்வு செய்த ஆணையங்களின் அறிக்கைகள் பலவும் தூதி அடைந்து கிடக்கின்றன. நாட்டைப் பீடித்துள்ள மதவெறி அச்சுறுத்தலை அரசியல் உறுதி மற்றும் நிர்வாகத் திறமை மற்றும் மதச்சார்பற்ற மாண்பினை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் போராடி முறியடித்திட வேண்டும். குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக, மதவெறி சக்திகளுடன் சமரசம் மேற்கொள்ளும் போக்கு பரவலாக இருக்கிறது. பெரும்பான்மை வகுப்புவாதம் தன்னுடைய செயல்பாடுகளின் காரணமாக சிறுபான்மை வகுப்புவாதம் வளரத் துணை செய்கிறது. இதனால் நிலைமைகள் மேலும் மேலும் மோசமாக மாறிக் கொண்டிருக்கின்றன.

நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்திட, இப்போது எழுந்துள்ள பலவீனங்களைப் போக்கிட, பல்வேறு பரிந்துரைகளை நாங்கள் அளித்திருக்கிறோம். நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்திட, தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம். பணபலம் - புஜ பலம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். 1994இல் அமைக்கப்பட்ட ஒன்பது பேர்கள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்பமை அம்சமாக மதச்சார்பின்மை வரையறுக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டத்திலும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதற்கெதிராக உள்ள மத்தி மாநில உறவுகளின் திசைவழி மாற்றி அமைக்கப்பட வேண்டும்.நிலச்சீர்திருத்தங்கள், உயர்ந்த அளவிலான ஊதியங்கள், விவசாயம், பொருளாதாரம் மற்றும் நிதித்துறைகளில் அரசின் தலையீடுகள் அதிகரித்தல், வேலைவாய்ப்பு பெருகுதல், பொதுத்துகைளைப் பாதுகாத்தல், ஏகாதிபத்திய ஆதரவு தாராளமயக் கொள்கைகளைக் கைவிடுதல், பெண் சமத்துவம், தலித்துகள் - பழங்குடியினர் சமூக விடுதலை, இறுதியாக சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாக்கப்படுதல் - இவை அனைத்தும் உள்ளடங்கியதாக நம்முடைய அரசியல் கண்ணோட்டத்தின் உந்துவிசை, இருந்திட வேண்டும். தேசிய ஒருமைப்பாடு குறித்த முக்கிய மூலக்கூறு, அமெரிக்க ஆதரவு அயல்துறைக் கொள்கையிலிருந்து விலகி இருத்தலாகும். இவை அனைத்தையும் நிறைவேற்ற, மத்திய அரசாங்கம் அரசியல் உறுதியைக் கடைப்பிடித்து, செயலில் இறங்கிட வேண்டும். இல்லாவிடில் நாடு பெரும் ஆபத்திற்குள்ளாகும்.

இவ்வாறு ஜோதிபாசு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.