மார்க்சிசம் மாற்றத்திற்கான ஒரு சக்தியாக
இன்றைக்கும் திகழ்கிறது
-சீத்தாராம் யெச்சூரி
(லண்டனில் 2018 மே 5 அன்று மார்க்ஸ்
200:சர்வதேச மாநாட்டில் ஆற்றிய உரை)
காரல் மார்க்சின் 200ஆவது பிறந்த நாள்
கொண்டாட்டத்திற்காக லண்டன் மாநகருக்கு உலகம் முழுதுமிருந்து மார்க்சிஸ்ட்டுகள்,
அறிவுஜீவிகள் வந்துகுழுமியிருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் முதலில் இந்தியக்
கம்யூனிஸ்ட்டுகள் சார்பாக, என் புரட்சிகரமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
கொள்கிறேன். அதேபோல் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ள அமைப்பாளர்களுக்கும்
புரட்சிகரமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இறுதி அமர்வு “மார்க்சிசம்
மாற்றத்திற்கான ஒரு சக்தியாக இன்றைக்கும் திகழ்கிறது” என்பது குறித்து விவாதித்திட
திட்டமிட்டிருக்கிறது.
இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள்,
குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சர்வதேச அளவில் மார்க்சியத்தை
எப்படிக் கொண்டுசென்று கொண்டிருக்கிறோம் என்பதைச் சுருக்கமாக விளக்கிட
விரும்புகிறேன்.
மார்க்சியம் தன்னிரகரற்றது. எப்போது எனில்
அதன் நிகழ்ச்சிநிரல் முழுமையாக நிறைவேற்றப்படுகையில் மட்டுமே அது அனைத்தையும்
விஞ்சி நிற்கிறது என்று நம்மால் கூற முடியும்.
அதன் நிகழ்ச்சிநிரலான ஒரு வர்க்கமற்ற கம்யூனிஸ்ட் சமுதாயத்தை
அமைக்கும்போதுமட்டுமே, அவ்வாறு நாம் கூற முடியும். குறிப்பாக முதலாளித்துவத்தின்
கீழ், முதலாளித்துவத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற மார்க்சிய
சிந்தனையின் அடிப்படையில், அதனை நோக்கிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை மட்டுமே
நாம் தெரிந்து வைத்திருக்கிறோம்.
முதலாளித்துவத்திற்குப் பிந்தைய
சமூகத்திலும், மார்க்சியத் தத்துவம் மற்றும் அதன் உலகக் கண்ணோட்டம் சோசலிசக்
கட்டமைப்பை உருவாக்குவதற்கும் அதனைத் தொடர்ந்து கம்யூனிசத்தை நோக்கிச்
செல்வதற்குமான ஒரு வழிகாட்டும் ஒளிவிளக்காக தொடர்ந்திடும்.
மார்க்சியம் ஒரு வறட்டுச்சூத்திரமல்ல,
மாறாக அது ஓர் ‘ஆக்கபூர்வமான அறிவியல்’ ஆகும். அது, இதர அனைத்தையும்விட. ’“துல்லியமான நிலைமைகள் குறித்த ஒரு துல்லியமான
ஆய்வின்” அடிப்படையில் அமைந்துள்ளதாகும்.
மார்க்சியம், பொதுவாக வரலாற்றை ஆய்வு செய்வதற்குமான, குறிப்பாக
முதலாளித்துவத்தை ஆய்வு செய்வதற்குமான ஓர் அணுகுமுறையாகும். மார்க்சால் அளிக்கப்பட்ட அடித்தளத்தின்
அடிப்படையில், இன்றைய சமூகநிலையைப் புரிந்துகொள்வதற்கும், எதிர்காலத்தில் எப்படிக்
கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்கான சாத்தியக்கூறுகளை அறிந்துகொள்வதற்கும், நாம் நம்முடைய சிந்தனையை
தொடர்ந்து வளப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான்,
மார்க்சியம் ஒரு மூடப்பட்ட தத்துவார்த்த
சிந்தனை என்ற நிலையிலிருந்து, தொடர்ந்து
செறிவூட்டப்பட்டு ஒரு வழிகாட்டும் ஒளிவிளக்காக அமைந்திடும். இவ்வாறு மார்க்சியம்
‘ஓர் ஆக்கபூர்வமான அறிவியலாக’ இருப்பதால்தான், மார்க்சியம் மட்டுமே மனித சமூகம் எதிர்கொள்ளக்கூடிய அனைத்து அம்சங்கள்
குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும்
மற்றும் சமூகத்தின் வளர்ச்சிப்போக்குகளின் திசைவழிகள் குறித்தும் சரியாக
அடையாளப்படுத்தும் வல்லமையைப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும்
அதன் வளர்ச்சிப்போக்கும் – வான் இயற்பியலிலிருந்து நானோ தொழில்நுட்பம் வரை (from astro physics to nano technology) –
தர்க்கவியல் பொருள்முதல்வாதம் எவ்வளவு மிகச்சரியானது என்பதை சந்தேகமின்றி
மெய்ப்பித்திருக்கின்றன. இவ்வாறு மார்க்சியம் மட்டுமே நம்முடைய வாழ்க்கையைப்
பாதிக்கும் எவ்விதமான கண்டுபிடிப்பாக இருந்தாலும் அதனை மிகச்சரியான முறையில்
எதிர்கொண்டு அதற்கு எதிராகப் போராடுவதற்கு நம்மைத் தயார்ப்படுத்துகிறது.
இன்றைய உலகம் – ஏகாதிபத்திய
உலகமயம்
இரண்டாம் உலகப் போருக்குப்பிந்தைய
காலகட்டத்தில், உலக முதலாளித்துவம் அமைதியான முறையில், பனிப்போர் காலத்தில்,
வளர்ச்சி அடைந்து, தன் மூலதனக் குவியலை அதீத உச்சத்திற்குக் கொண்டு
சென்றிருக்கிறது. மேலும் 20ஆம்
நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுக் காலத்தில்,
சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகள் தகர்ந்து அவை
மீளவும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு மாறிய பின்னர், இது மேலும் அதிகரித்தது.
இவ்வாறு அதீதமான குவியல் சர்வதேச நிதி மூலதனத்தின் ஒருமுகப்படுத்துதலையும்
உருவாக்கத்தையும் மேலும் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
ஏகாதிபத்தியத்தின் கட்டத்திற்குள்ளேயே,
இன்றைய உலகமயத்தின் நடப்பு நிலையானது, மூலதனக் குவியலை சர்வதேச நிதிமூலதனத்தால்
மேலும் உயர்நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இன்றைய தினம், சர்வதேச நிதி
மூலதனம், மூலதனத்தின் தொழில்துறை மற்றும்
அனைத்து வடிவங்களையும் தன் வலைக்குள் சிக்க வைத்துக் கொண்டு, தன் கொள்ளை லாப வேட்கையை அதிகப்படுத்திக்
கொண்டிருக்கின்றன. இதனைத்தொடர்ந்து சர்வதேச நிதி மூலதனம் இப்போது தன் மூலதனக்
குவியலையும் கொள்ளை லாப வேட்கையையும் உச்சத்திற்குக் கொண்டுசெல்வதற்காக, மக்கள்
மீது புதிய தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன.
சர்வதேச நிதிமூலதனத்தின்
கட்டளைகளுக்கிணங்க கொள்ளை லாப வேட்கைக்காக, உலகத்தை மாற்றியமைத்து, நவீன
தாராளமயத்தை வரையறுத்திருக்கிறது. இதற்காக அது, முதலில், நாடுகளுக்கு அப்பால்
மூலதனமும், பொருள்களும் இயங்குவதற்கு இருந்துவரும் தடைகளை நீக்குவதற்கான கொள்கைகளை
இயக்குகிறது. வர்த்தக தாராளமயம், நாடுகளில் உற்பத்தி செய்துவந்த உள்நாட்டுத்
தொழில் உற்பத்தியாளர்களை வேலையில்லாமல் செய்து, உள்நாட்டுத் தொழில் உற்பத்தியை குறிப்பாக
வளர்முக நாடுகளில் அதிக அளவில் ஆபத்திற்குள்ளாக்கி இருக்கிறது. மேலும்
உற்பத்தி மற்றும் வணிக நடைமுறைகள் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளிலும்கூட,
அந்நாடுகளையும் தாண்டி பிற நாடுகளுக்கும் செல்லும் விதத்தில் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதன் காரணமாக, வர்த்தக தாராளமயம் நடைபெற்றிருக்கிறது. மேலும்,
மூலதனத்தின் தாராளமய நடவடிக்கைகள் பன்னாட்டு நிறுவனங்களை அனைத்து நாடுகளின்
உள்நாட்டு உற்பத்தி சொத்துக்களையும் (இந்தியாவில் பொதுத் துறையில் உள்ள
சொத்துக்களைப் போன்று) வாங்குவதற்கும் அனுமதித்திருக்கிறது.
மூலதனக் குவியலை ஒருமுகப்படுத்திட மேலும்
பல்வேறு நடவடிக்கைகளையும் சர்வதேச நிதிமூலதனம் எடுத்திருக்கிறது.
நிதிச்செலவினத்தைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் அரசாங்க செலவினங்களுக்குக்
கட்டுப்பாடுகளைத் திணித்திருக்கிறது. இதன் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் மக்களின்
தேவைகளின் சராசரி அளவு (aggregate demand) குறைந்திருக்கிறது. வளர்முக நாடுகளில்
விவசாயிகளுக்கு எதிரான வர்த்தக நடவடிக்கைகளை அதிகரித்திருக்கிறது. உலக அளவில் சமூக
சேவைத்துறைகளை அந்தந்த நாடுகளின் அரசுகள் மேற்கொண்டுவந்ததை ஒழித்துக்கட்டி
இருக்கிறது. இதற்கு முன் அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டுவந்த சமூகப் பாதுகாப்பு
நடவடிக்கைகளை எல்லாம் தனியாரிடம் தாரைவார்ப்பது அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
இதன்காரணமாக இவர்களின் கொள்ளை லாப வேட்கைக்கான வாய்ப்புவாசல்கள் மிகப் பெரிய
அளவிற்குத் திறந்துவிடப் பட்டிருக்கின்றன. அறிவுச் சொத்துரிமைகள் மற்றும் ஏகபோகக்
கட்டுப்பாட்டில் இருந்த இதர வடிவங்களும்
உற்பத்தி மீதான கட்டுப்பாடு மூலமாக அதீத லாபத்தை ஈட்டித்தரத் தொடங்கின.
இவ்வாறு, தற்போதைய ஏகாதிபத்தியத்தின் புதியதொரு அம்சம் இதற்முன் இல்லாத அளவிற்கு
சர்வதேச நிதி மூலதனத்தின் கொள்ளை லாப வேட்கைக்கு புதிய வாய்ப்புவாசல்களை
வலுக்கட்டாயமாகத் திறந்துவிட்டிருக்கின்றன.
இவ்வாறாக முதலாளித்துவத்தின் வரலாறு
முழுவதுமே, மூலதனக் குவியல் என்பது இரு வழிகளில் இடம் பெற்றிருக்கிறது. ஒன்று, மூலதன
விரிவாக்கத்தின் காரணமாக, அதாவது அதன் உற்பத்தி நடைமுறையில் ஈடுபடுவதன்
வாயிலாக, இயல்பாகவே ஏற்படும் வளர்ச்சி.
மற்றொன்று, வலுக்கட்டாயமாகவும் நிர்ப்பந்தம் மூலமாகவும் சூறையாடுதல் வாயிலாக
ஏற்படுத்திக்கொள்வது. இத்தன்மையைத் தான் மார்க்ஸ் மூலதனத்தின் துவக்க
மூலதனக் குவிப்பு (primitive accumulation of capital) என்று வரையறுக்கிறார்.
துவக்க மூலதனக்குவிப்பு என்பது அடிக்கடி
தவறானமுறையில் வியாக்கியானம் செய்யப்படுகிறது. அதாவது நவீனத்திற்கு எதிரான சொல்லாக
ஈவிரக்கமற்றதன்மை உடையதாக, ஈவிரக்கமற்ற தன்மை (எதிர்) நவீனத்துவம் (primitive vs.
modern) என்று வியாக்கியானம் செய்யப்படுகிறது. மார்க்சுக்கும், எனவே
மார்க்சிஸ்ட்டுகளுக்கும் துவக்க மூலதனக்குவிப்பு என்பது ஒரு பகுப்பாய்வு
வகையினமாகும். அது மூலதனத்தின் இயல்பான இயங்குவியலுடன் தொடர்ந்து
இருந்துவருவதாகும். கடந்த காலங்களில் துவக்க மூலதனக் குவிப்பின் செயல்முறைகள் நேரடிக் காலனிமயமாக்கல் உட்பட பல்வேறு
வடிவங்களில் நடந்திருக்கின்றன. துவக்க மூலதனக்குவிப்பின் மூர்க்கத்தனம், ஒரு
குறிப்பிட்ட காலகட்டத்தில், வர்க்க
சக்திகளின் சர்வதேசத் தொடர்பினை நேரடியாகச் சார்ந்தே இருந்து வருகிறது. அது
முதலாளித்துவத்தின் கொடூரத்தன்மையை அனுமதிக்கிறது அல்லது தடுக்கிறது. இன்றைய ஏகாதிபத்திய கால
கட்டத்தில், துவக்க மூலதனக்குவிப்பின் கொடூரத்தன்மையின் செயல்முறைகள்
உக்கிரமடைந்து, உலக மக்கள் தொகையில்
வளர்முக நாடுகளில் உள்ள மக்கள் மீது மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளில் உள்ள
பெரும்பான்மையான மக்கள் மீதும் தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது.
அதீத லாப வேட்கைக்கான இத்தகைய
முதலாளித்துவத்தின் கொள்ளையடிக்கும் குணம்
உலக அளவிலும், ஒவ்வொரு நாட்டிலும் மக்களிடையே பொருளாதார சமத்துவமின்மையைக்
கூர்மையான முறையில் விரிவுபடுத்திக்கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், உலகத்தில்
உள்ள உழைக்கும் மக்கள் மற்றும் ஏழை மக்களில் பெரும்பகுதியினரை மிகப்பெரிய அளவிற்கு
வறுமைக்குழிக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது. பொருளாதார அமைப்பின் நடப்பு
நெருக்கடியின் ஒவ்வொரு கட்டத்திலும், முதலாளித்துவம் அதனை மீட்க மேற்கொண்டிடும்
ஒவ்வொரு முயற்சியும், மேலும் ஆழமான நெருக்கடியின் புதிய கட்டத்தை நோக்கி
இட்டுச்சென்று கொண்டிருக்கிறது. ஏனெனில், அதுதான் முதலாளித்துவ வளர்ச்சிக்கான சட்டவிதிகளின் இயற்கையான குணமாகும்.
நவீன தாராளமயத்தின்
நெருக்கடி – வலதுசாரி அரசியல் பெயர்வு
தற்போது, உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்ட
பின்னர் கடந்த பத்தாண்டுகளில், நவீன தாராளமயமும் தற்போது நெருக்கடிக்குள்ளாகி
இருக்கிறது. இப்போது உலகில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு, குறிப்பாக வளர்ந்த
முதலாளித்துவ நாடுகளில் உள்ள மக்களுக்கு, இது தெள்ளத்தெளிவாகத் தெரியத் தொடங்கி
இருக்கிறது. அமெரிக்காவில் ரீகனும், கிரேட் பிரிட்டனில் தாட்சரும் வருவதற்கு
முன்பே அந்நாடுகளிலிருந்த பொருளாதார நிலைமைகள் காரணமாக, பொருளாதார வளர்ச்சியில்
பெருமளவில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் கொழிக்கவும், மீதமுள்ள
பெரும்பான்மையான மக்கள் வறுமையில் வாடக்கூடிய நிலைமையை உருவாக்கவும்
இட்டுச்சென்றன. இரண்டாம் உலகப்
போருக்குப்பின்னர், முதல் இருபத்தைந்து
ஆண்டுகளில் உலக முதலாளித்துவம் ஆற்றல் மிகு வளர்ச்சியைக் கண்டது. இது
முதலாளித்துவத்தின் பொற்காலம் (Golden Age) என்று வர்ணிக்கப்படுகிறது. அமெரிக்காவில்,
1948 – 1972 கால கட்டத்தில், அமெரிக்க மக்கள் தொகையின் ஒவ்வொரு பிரிவினருமே
தங்களின் வாழ்க்கைத்தரத்தில் உயர்வு ஏற்பட்டதை உணர்ந்தனர். எனினும், 1972க்கும்
2013க்கும் இடையே, மேல்தட்டில் உள்ள 10
சதவீத மக்கள் சுகபோக வாழ்க்கையை அனுபவித்த அதே சமயத்தில், அடித்தட்டில் உள்ள 10
சதவீத மக்கள் தங்கள் உண்மையான வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அனுபவபூர்வமாக
உணர்ந்தனர். நடுத்தர மக்களில் ஆண் தொழிலாளர்களின் உண்மையான வருமானம் 40
ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட குறைவாகவே இருந்தது. அடித்தட்டு மக்களில் 90 சதவீதத்தினரின் வருமானம்
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித உயர்வும் இல்லாமல் தேக்க நிலையில் நீடித்து
வருகிறது. சராசரியாக, உயர்வருமானப் பொருளாதார நிலையிலிருந்த குடும்பங்களில் 65
முதல் 70 சதவீதத்தினர் 2005க்கும்
2014க்கும் இடையே தங்களுடைய உண்மையான வருமானங்களில் தேக்க நிலை அல்லது வீழ்ச்சி
ஏற்பட்டிருப்பதை அனுபவரீதியாக உணர்ந்தனர். 2000 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஓர்
ஆய்வின்படி (Gallup Poll), அமெரிக்கர்களில் 33 சதவீதத்தினர் தங்களைத் தொழிலாளர்
வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். 2015ஆம் வாக்கில் இது
48 சதவீதமாக, அதாவது மக்கள் தொகையில் பாதி அளவாக உயர்ந்தது. உலக மக்கள் தொகையில்
பெரும்பான்மைப் பிரிவினரின் வறுமை மற்றும் ஏற்றத்தாழ்வின் மிக மோசமாகவுள்ள
ஏற்றத்தாழ்வு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் அதிருப்தியை உருவாக்கி, இதனைப்
போக்கக்கூடிய விதத்தில் ஓர் அரசியல் தீர்வு தேவை என்கிற உணர்வை ஏற்படுத்தி
இருக்கின்றன.
நவீன தாராளமயத்தின் நெருக்கடி புதிய
முரண்பாடுகளை உருவாக்கி, ஏகாதிபத்திய நாடுகளிடையே நட்புமுறிவுகளையும் மோதல்களையும்
உருவாக்கி இருக்கிறது. ஐரோப்பிய
யூனியனிலிருந்து கிரேட் பிரிட்டன் வெளியேறியது
(Brexit) இதைத்தான் காட்டுகிறது. புதிய அரசியல் சக்திகள் உருவாவதும், பதட்ட
நிலைமைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதும் நாள்தோறும் நடைபெறும் நிகழ்வுகளாகிவிட்டன.
நடப்புக் காலத்தில் உலகின் பல பகுதிகளில்
அரசியலில் ஒரு வலதுசாரிப் பெயர்வு
ஏற்பட்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தற்போது தனக்கு
ஏற்பட்டிருக்கும் நெருக்கடியின் காரணமாக ஏகாதிபத்தியம் உலகின் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பதட்ட
நிலைமைகளைப் பயன்படுத்திக்கொண்டு தன்னுடைய உலக அளவிலான பிளவுவாத நிகழ்ச்சிநிரலுடன்
நவீன தாராளமயக் கொள்கையை மிகவும் மூர்க்கத்தனமாகப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது.
தன் உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் ஒருமுகப்படுத்திக் கொள்வதற்காகவும் மேற்காசியாவில் உள்ள எண்ணெய்
வளங்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகவும் இராணுவத் தலையீடுகளில்
ஈடுபட்டிருக்கிறது. இதன் காரணமாக நிறவெறி, இனவெறி, பிராந்திய வெறி, அயல்நாட்டினர் மீதான வெறி, மதவெறி, சாதி வெறி
மற்றும் அதிதீவிர வலதுசாரி நவீன பாசிச வெறிப் போக்குகள் அதிகரிக்கத் தொடங்கி
இருக்கின்றன. அமெரிக்கத் தேர்தலில்
டொனால்டு டிரம்ப் வெற்றி, பிரிட்டனில் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற வேண்டும்
என்பதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் வலதுசாரிகள் அணிதிரண்டமை, பிரான்சில் அதிதீவிர
வலதுசாரி தேசிய முன்னணியின் மாரின் லீ பென் (Marine Le Pen) தேர்தலில்
ஆதாயங்கள் அடைந்தது, ஜெர்மனியில் டச்சுலாண்டுக்கான மாற்று என்னும் இயக்கம்
முன்னேறிக் கொண்டிருப்பது, ஆஸ்திரியாவில் அதீதீவிர சுதந்திரக் கட்சி (Freedom Party)யுடன்
சேர்ந்துகொண்டு வலதுசாரி அரசாங்கம்
அமைந்தது, ஐரோப்பிய யூனியனில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் மூன்றில்
ஒரு பங்கு உறுப்பினர்கள் வலதுசாரி மற்றும் அதிதீவிர வலதுசாரி அரசியல் கட்சிகளின்
பிரதிநிதிகளாக இருப்பது முதலானவை இவ்வாறு உலக அளவில் அரசியலில் வலதுசாரிப் பெயர்வு
ஏற்பட்டிருப்பதன் பிரதிபலிப்பாகும். இத்தகைய போக்கு, இந்திய அரசியலிலும்
பிரதிபலித்திருப்பதைக் காண முடியும்.
உலகப் பொருளாதார நெருக்கடி
உக்கிரமடைந்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியைப்
பயன்படுத்திக்கொண்டு அவர்களை அணிதிரட்டித் தலைமை தாங்குவது யார் என்பதில்
வலதுசாரிகளுக்கும் மற்றும் இடதுசாரி,
முற்போக்கு சக்திகளுக்கும் இடையிலான அரசியல் போராட்டத்தில் வலதுசாரிகளே பல
நாடுகளில் வெற்றி பெற்றுள்ளனர். பல
நாடுகளில் இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகள் ஒரு பெரிய அரசியல் சக்தியாக
உருவாகாததே இதற்குக் காரணமாகும். மக்களின் அதிருப்தியை இந்த வலதுசாரி சக்திகள்
தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால் ஆட்சிக்கு வந்தபின்னர் பொருளாதார நெருக்கடிக்குக்
காரணமான அதே பொருளாதாரக் கொள்கைகளை இவர்கள் மேலும் மூர்க்கத்தனமாக பின்பற்றத்
தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு
துன்பதுயரங்களுக்கு ஆளாகியுள்ளார்கள். இதன்காரணமாக ஆட்சிக்குப் புதிதாக
வந்தவர்கள்மீதும் அதிருப்தி அதிகரித்துள்ளது.
வரவிருக்கும் நாட்களில், உலகில் பல
நாடுகளின் அரசியல் திசைவழி மக்களின் அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு
அவர்களுக்குத் தலைமை தாங்குவது யார் என்பது தொடர்பாக, இடதுசாரி ஜனநாயக சக்திகளுக்கும் வலதுசாரிகளுக்கும்
இடையேயான போட்டியில், யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதிலேயே அடங்கி இருக்கிறது. 1929-30களில்
மாபெரும் பொருளாதார மந்தம் (Great Depression) ஏற்பட்ட சமயத்தில் உலக ஏகபோக
மூலதனத்தின் ஆதரவுடன் பாசிசம்
தலைதூக்கியது. மக்கள் மத்தியில் நிலவிய அதிருப்தி உணர்வை பாசிசம் நன்கு
பயன்படுத்திக்கொண்டது. இப்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையிலும் அதேபோன்றே
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள
அதிருப்தி உணர்வு, அதிதீவிர வலதுசாரி மற்றும் நவீன பாசிஸ்ட் சக்திகள்
தலைதூக்குவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
உலகப் பொருளாதார நெருக்கடியின் இன்றைய
நிலைமைகளில், சோசலிசத் தத்துவம் மட்டுமே மனிதகுலத்தை அனைத்துவிதமான
சுரண்டல்களிலிருந்தும் விடுவித்திட முடியும். உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்ட 2008இலிருந்தே, உலக
முதலாளித்துவம் ஒரு நெருக்கடியிலிருந்து மீண்டு
மற்றொரு நெருக்கடிக்குள் வீழ்ந்து மூழ்கிக் கொண்டிருக்கிறது. நெருக்கடியிலிருந்து
மீள்வதற்காக அது மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் அதனை மேலும் ஓர் ஆழமான
நெருக்கடிக்குள்ளாகும் விதத்தில் அதனை மாற்றிக்கொண்டிருக்கிறது. மக்கள் மீதான
முதலாளித்துவ சுரண்டல் உக்கிரமடைவதன் காரணமாக மக்கள் முன்னெப்போதும் இல்லாத
அளவிற்கு பொருளாதாரச் சுமைகளை ஏற்க வேண்டியிருப்பதும்
அது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதும் தெள்ளத் தெளிவாகி இருக்கிறது. இவற்றின்
விளைவாக உலக மக்களிடையே பெரும்பாலான மக்களுக்கும், இதர விரல்விட்டு எண்ணக்கூடிய
ஒருசிலருக்கும் இடையேயான பொருளாதார சமத்துவமின்மை மிகவும் கூர்மையாக விரிவடைந்துகொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தின் கொள்ளை லாப வெறி
முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் அப்பட்டமாகத் தெரியத் தொடங்கி இருக்கிறது.
முதலாளித்துவத்திற்குள் இருந்துகொண்டு மேற்கொள்ளப்படுகிற எவ்விதமான
சீர்திருத்தத்தாலும் மனிதகுலத்தை அதன் சுரண்டலின் பிடிகளிலிருந்து விடுவித்திட
முடியாது. சோசலிசத்திற்கான அரசியல் மாற்று ஒன்றினால் மட்டுமே அதனை எய்திட
முடியும். சோசலிசத்திற்கான அரசியல் மாற்றால் மூலதன ஆட்சியின் மீது தொடுக்கப்படும்
தாக்குதலை அதன் சுரண்டலிலிருந்து முற்றிலுமாக விடுவித்து மனிலகுல விடுதலை என்னும்
பொன்னான மார்க்கத்தை உருவாக்கும் விதத்தில் நாம் உக்கிரப்படுத்த
வேண்டியதிருக்கிறது.
முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள
நெருக்கடி எவ்வளவுதான் உக்கிரமானதாக இருந்த போதிலும், அது எப்போதுமே தானாக நிலைகுலைந்துவிடாது.
முதலாளித்துவத்திற்கு சவால் விடும் விதத்தில் ஓர் அரசியல் மாற்று உருவாகாதவரை,
முதலாளித்துவம் மனிதகுலத்தின் மீதான சுரண்டலை உக்கிரப்படுத்துவதன்மூலம்
சீரானமுறையில் ஜீவித்துக்கொண்டிருக்கும். எனவே, சோசலிஸ்ட் அரசியல் மாற்று வலுப்படுத்தப்பட்டு வளர வேண்டியது
அவசியமாகும். தற்போது முதலாளித்துவத்தின் கொள்ளைக்கு எதிராக உலகம் முழுதும் உள்ள
மக்கள் போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்றாலும், இவை இன்றையநிலையில்
தற்காப்பு நிலையில் (defensive)தான் இருந்து வருகின்றன. தற்காப்பு நிலை என்று ஏன்
சொல்கிறேன் என்றால், மக்கள் தாங்கள் தங்கள் போராட்டங்கள் மூலமாகப் பெற்றிருந்த
ஜனநாயக உரிமைகளையும், வாழ்வாதார நிலைமைகளையும் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய
விதத்தில்தான் இன்றைய போராட்டங்கள் இருந்துவருகின்றன. இது மூலதனத்தின் ஆட்சிக்கு
எதிராக வர்க்கரீதியான தாக்குதல் தொடுக்கக்கூடிய அளவிற்கு இத்தகையப் போராட்டங்கள்
அதிகரித்திட வேண்டும்.
எனவே, மூலதனம், தூக்கி எறியப்படுவது
என்பது, தொழிலாளர் வர்க்கத்தால் தலைமை தாங்கப்படக்கூடிய சமூகத்தின் வர்க்கப்படை வலுப்படுத்தப்படுவதையே
தீர்மானகரமான முறையில் சார்ந்திருக்கிறது. மக்கள் போராட்டங்கள், மூலதனத்தின் ஆட்சிக்கு
எதிராக அரசியல் தாக்குதலைத் தொடுக்கக்கூடிய விதத்தில் தொழிலாளி வர்க்கத்தின்
தலைமையில் வர்க்கப் போராட்டமாக உக்கிரமடைந்திட
வேண்டும். இத்தகைய தொழிலாளி
வர்க்கப்படையைக் கட்டுவதும், அதனை வலுவானதாக மாற்றுவதும் ‘அகக் காரணி’
(‘subjective factor’) யாகும். அகக் காரணியை வலுப்படுத்த வேண்டியது
இன்றியமையாததும் முக்கியமானதுமாகும். புறக்காரணி (objective factor),
நெருக்கடியின் துல்லியமான நிலைமை, புரட்சிகர முன்னேற்றத்திற்கானதாக எவ்வளவுதான்
உகந்ததாக இருந்தாலும், ‘அகக் காரணி’யை
வலுப்படுத்தாமல், மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக, அதனை ஒரு புரட்சிகரமான தாக்குதலாக
மாற்றிவிட முடியாது.
ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் துல்லியமான
நிலைமைகளுக்கு ஏற்ப துல்லியமான ஆய்வுகளின் அடிப்படையில், தொழிலாளி வர்க்கத்தால்
மேற்கொள்ளப்படும் பல்வேறுவிதமான இடைக்கால முழக்கங்கள், நடவடிக்கைகள் மற்றும்
உத்திகள் உருவாக்கப்பட்டு, வர்க்கப் போராட்டங்களைக் கூர்மைப்படுத்திட வேண்டும்,
‘அகக் காரணி’யை வலுப்படுத்தக்கூடிய விதத்தில் உண்மையான நிலைமைகளின் சவால்களை
எதிர்கொண்டிட வேண்டும். இவ்வாறு, ஒவ்வொரு
நாட்டிலும் உள்ள தொழிலாளி வர்க்கம் தங்கள் நாடுகளில் புரட்சிகரமான மாறுதலுக்கான
செயல்முறையில் முன்னேறிட வேண்டும். மக்கள் மத்தியில் அரசியல் சக்திகளின் சேர்மானம்
இடதுசாரிகள் பக்கம் திரும்ப வேண்டும். இது, நவீன தாராளமயத்திற்கு எதிராக மாற்றுக்
கொள்கையின் அடிப்படையில் தொழிலாளி
வர்க்கத்தின் தலைமையில் மக்கள் போராட்டங்களைக் கட்டவிழ்த்துவிடுவதன் மூலம்
மட்டுமே, நடந்திடும்.
மார்க்சியம் மட்டுமே இன்றைய தினம் ‘அகக்
காரணி’யை வலுப்படுத்துவதற்கான தத்துவார்த்த அடித்தளங்களை அமைத்துத்தருகிறது. அதன்மூலம் வர்க்கப் போராட்டங்களைக்
கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறது. எனவே, முதலாளித்துவம் தூக்கி எறியப்படும்வரை, இன்றைய
உண்மையான உலகத்தை மாற்றுவதற்கு, மனிதனை மனிதன், நாடுகளை நாடு சுரண்டுவதிலிருந்து முற்றுப்புள்ளி வைத்திடுவதற்கு, மார்க்சிசம் தான் வீர்யம் மிக்க ஒரு சக்தியாக
இன்றைக்கும் திகழ்கிறது.
(தமிழில்: ச. வீரமணி)
No comments:
Post a Comment