பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்: 90ஆம் ஆண்டு
தியாகிகள் தினத்தின் முக்கியத்துவம்
-சீத்தாராம் யெச்சூரி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
மத்தியக்குழுக் கூட்டம், ஜனவரியில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றபோது, ஏப்ரல் 1
முதல் செப்டம்பர் 30வரை நடைபெறவிருக்கும் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்
கணக்கெடுப்பிற்கான எந்தக் கேள்விக்கும் ஏன் பதிலளிக்கக் கூடாது என்று விளக்கி
மார்ச் மாதத்தில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அறைகூவல்
விடுத்திருந்தது. இந்தப் பிரச்சாரம், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தியாகிகள் தினமான
மார்ச் 23 அன்று உச்சத்தை அடைந்திட வேண்டும் என்றும் கூறப்பட்டது. பின்னர்,
இதேபோன்ற அறைகூவலை இடதுசாரிக் கட்சிகளும் விடுத்தன. தியாகிகள் தினத்தைத் தேர்வு
செய்ததற்கு, இந்தியாவையும், அதன் அரசமைப்புச் சட்டத்தையும் இன்றையதினம்
இந்துத்துவா மதவெறியர்களின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காகவும், அனைவருக்குமான
நவீன இந்தியாவைக் கட்டி எழுப்புவதற்காகவும் இடதுசாரிக் கட்சிகள் மேற்கொண்ட
போராட்டத்தை உயர்த்திப் பிடித்திட வேண்டும் என்பதற்காகவுமாகும்.
கொரானா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருவதைத்
தொடர்ந்து, அன்றைய தினம் பெரிய அளவில் மக்கள் கூடுவதையும், பொதுக் கூட்டங்கள்
நடத்துவதையும் தவிர்த்திட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு
ஆண்டும் கொண்டாடப்படுவதைப் போலவே தியாகிகள் தினம் இப்போதும் அனுசரிக்கப்படும்.
பகத்சிங்கின் முக்கியமான பங்களிப்புகள்
அனைவருக்குமான நவீன இந்தியாவை உருவாக்குவதில்
பகத்சிங்கின் பங்களிப்புகள் மிகவும் முக்கியமானவைகளாகும். 1920-21 ஒத்துழையாமை
இயக்கத்தை காந்திஜி திடீரென்று கைவிட்டதைத் தொடர்ந்து, இந்திய தேசிய இயக்கத்தில்
மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இந்த இயக்கத்தின்போது நடைபெற்ற சௌரி
சௌரா நிகழ்வு காந்திஜியையும், எதிர்கால ஆளும் வர்க்கங்களையும் அலற வைத்தது. மக்கள்
மத்தியில் புரட்சிகர உணர்வு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தாவிட்டால் ஆபத்தாக
முடியும் என்று அவர்கள் கருதினார்கள். மக்களிடையே எழுந்துவரும் புரட்சி அலை,
நாட்டை பிரிட்டிஷ் காலனிய கொத்தடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதோடு மட்டுமல்லாமல்,
நாட்டிற்
குள்ளேயே இருந்துவரும் சுரண்டல்பேர்வழிகளையும் விழுங்கிவிடும் என்று கருதினார்கள். இதனால்தான் காந்திஜி, தான் ஒரு பெரிய “இமாலயத் தவறு” (“Himalayan blunder”) செய்துவிட்டேன் என்று கூறி இந்த இயக்கதை விலக்கிக் கொண்டார். காந்திஜி, இவ்வாறு இயக்கத்தை விலக்கிக்கொண்டது தொடர்பாக, அந்த சமயத்தில் செயல்பட்டு வந்த புரட்சியாளர்கள் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்த முக்கியமான தலைவர்களே ஆச்சரியப்பட்டு, காந்திஜியிடம் இது குறித்துக் கேட்கவும் செய்தனர். ஜவஹர்லால் நேரு, சிறையிலிருந்து, இந்த இயக்கம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது என்றும், அதனை விலக்கிக் கொண்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது என்றும் எழுதினார்.
குள்ளேயே இருந்துவரும் சுரண்டல்பேர்வழிகளையும் விழுங்கிவிடும் என்று கருதினார்கள். இதனால்தான் காந்திஜி, தான் ஒரு பெரிய “இமாலயத் தவறு” (“Himalayan blunder”) செய்துவிட்டேன் என்று கூறி இந்த இயக்கதை விலக்கிக் கொண்டார். காந்திஜி, இவ்வாறு இயக்கத்தை விலக்கிக்கொண்டது தொடர்பாக, அந்த சமயத்தில் செயல்பட்டு வந்த புரட்சியாளர்கள் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்த முக்கியமான தலைவர்களே ஆச்சரியப்பட்டு, காந்திஜியிடம் இது குறித்துக் கேட்கவும் செய்தனர். ஜவஹர்லால் நேரு, சிறையிலிருந்து, இந்த இயக்கம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது என்றும், அதனை விலக்கிக் கொண்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது என்றும் எழுதினார்.
மக்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக இளைஞர்கள்
மத்தியில், இருந்த பொதுவான விரக்தி நிலை, பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராட்டத்தை
முன்னெடுத்துச் செல்வதற்கான மார்க்கத்தையும், திசைவழியையும் தேடியது. இந்தப்
பின்னணியில்தான் பகத்சிங் மற்றும் அவருடைய தோழர்கள் ஒரு தெளிவான திசைவழியை
அளித்திடும் விதத்தில் எழுந்தார்கள். அது மக்கள் மத்தியில் ஓர் ஆழமான செல்வாக்கை
ஏற்படுத்தியது. நாடு சுதந்திரம் பெற்றபின்னரும் கூட இன்று வரையிலும் அது
தொடர்கிறது.
பகத்சிங்கும், அவருடைய தோழர்களும் அவருக்கு 24
வயது ஆவதற்கு முன்பாகவே தூக்கிலிடப்பட்டார்கள். இவ்வாறு அவர் வாழ்ந்தகாலம் மிகவும் குறுகியதே
என்றாலும், அதற்குள்ளாகவே அவர் எண்ணற்ற வீரதீரச் செயல்களைப் புரிந்துள்ளார். லாலா லஜபதி ராய் மீது கொடூரமானமுறையில்
குண்டாந்தடி நடத்திய சாண்டர்ஸ் சுட்டுக்கொல்லப்பட்டது, தில்லி பாராளுமன்றத்தில்
வெடிகுண்டுகளை வீசியது (தில்லி வெடிகுண்டு வழக்கு) முதலியவை, எப்படி இயக்கத்தை
முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில்
பகத்சிங்கிற்கு இருந்த சிந்தனைத் தெளிவையும், அதன் அடிப்படையில் அவர் மேற்கொண்ட
நடவடிக்கைகளும் காட்டின. மார்க்சியம் குறித்தும், இந்திய மக்களை விடுவிப்பதற்கான
புரட்சியின் குறிக்கோள் குறித்தும் அவர் கொண்டிருந்த தெளிவான பார்வையுடன் இவற்றை
அவர் மேற்கொண்டார்.
சிந்தனைகளுக்கு
இடையேயான போராட்டம்
சுதந்திரப் போராட்டக் காலத்தில், சுதந்திர
இந்தியாவின் குணாம்சம் என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து, பல்வேறு
சிந்தனைகளுக்கு இடையேயும் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. காங்கிரஸ் கட்சியின்
சார்பில் முன்வைக்கப்பட்ட சிந்தனையோட்டம் என்பது, தேசிய இயக்கத்தின் குறிக்கோள்
ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை நிறுவுவது என்பதாக இருந்தது. இடதுசாரிகள் இதனை
மறுக்காத அதே சமயத்தில் இத்துடன், மேலும் ஓரடி முன்னே சென்று, இவ்வாறு
மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு நிலைத்திருக்க வேண்டுமானால், அவ்வாறு நாம் பெற்ற
அரசியல் சுதந்திரத்தை ஒவ்வோர் இந்தியனின் பொருளாதார சுதந்திரமாகவும் மாற்றுவதில்
நாம் எய்துகிற வெற்றியைச் சார்ந்திருக்கிறது, அதாவது, சுரண்டலற்ற ஒரு சமூகத்தை,
சோசலிச சமூகத்தை, அமைப்பதில் அடங்கி இருக்கிறது என்றார்கள்.
இவ்விருவிதமான சிந்தனையோட்டங்களுடனும்
நேரடியாகவே முரண்படக்கூடிய விதத்தில் ஒரு சிந்தனையோட்டமும் இருந்தது. அதாவது,
சுதந்திர இந்தியாவின் குணாம்சம் மக்களின் மத அடிப்படையில் தீர்மானிக்கப்பட
வேண்டும் என்பதே அந்தச் சிந்தனையாகும். இது மேலும் இருவிதமான சிந்தனைகளுக்கு
வழிவகுத்தது. ஆர்எஸ்எஸ்-ஆல் முன்னெடுக்கப்பட்ட “இந்து ராஷ்ட்ரா” என்கிற சிந்தனைக்கும், முஸ்லீம் லீக்கால்
முன்னெடுக்கப்பட்ட “இஸ்லாமிய அரசு” என்கிற சிந்தனைக்கும்
வழிவகுத்தது. வி-டி. சாவர்க்கரால் முன்னெடுக்கப்பட்ட இந்த இரு தேசக் கோட்பாட்டை,
பின்னர் முகமது அலி ஜின்னாவும் பின்பற்றினார்.
தேசிய இயக்கத்தின் பிந்தைய நடவடிக்கைகள்,
துரதிர்ஷ்டவசமான முறையில் நாடு இரண்டாகப் பிளவுபடுவதற்கும், பாகிஸ்தானின் இஸ்லாமிய
அரசு நிறுவப்படுவதற்கும் இட்டுச் சென்றது. எனினும், இந்தியாவின் இதர பகுதி,
மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு கருத்தாக்கத்தையே தேர்வு செய்தது. அப்போது இந்து
ராஷ்ட்ரம் என்னும் சிந்தனையை நிராகரித்ததுதான், அவர்கள் மத்தியில் ஆத்திரத்தை
ஏற்படுத்தி, காந்திஜி படுகொலை செய்யப்படுவதற்கான உடனடிக் காரணமாக அமைந்தது. ஆயினும்,
ஆர்எஸ்எஸ்-இன் சிந்தனையோட்டமான “இந்து(த்துவா)
ராஷ்ட்ரத்தை” அமைப்பதற்கான முயற்சிகள்
தொடர்ந்தன. இந்த முயற்சிகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உள்ள மதச்சார்பற்ற
ஜனநாயகக் குடியரசை, தங்களுடைய “இந்துத்துவா
ராஷ்ட்ரமாக” மாற்றுவதற்கான முயற்சிகளில்
பிரதிபலிக்கிறது.
இதன் தொடர்ச்சிதான் இன்று நாம் ஈடுபட்டுள்ள போர்க்களமாகும்.
சுதந்திரத்திற்குப் பின் கடந்த எழுபதாண்டுகளில் ஏற்பட்டுள்ள அனுபவம், இடதுசாரிகள்
அன்றைய தினம் கூறிய கருத்துக்களை, அதாவது, மக்கள் போராட்டம் சோசலிசத்தை நோக்கி
முன்னேறவில்லை என்றால், மதச்சார்பற்ற ஜனநாயகக்
குடியரசு நிலைத்திருக்க முடியாது என்று கூறியதை, மீண்டும் நிரூபித்திருக்கிறது. இதைத்தான் பகத்சிங் உயர்த்திப்பிடித்து, நடைமுறைப்படுத்தி வந்தார்.
குடியரசு நிலைத்திருக்க முடியாது என்று கூறியதை, மீண்டும் நிரூபித்திருக்கிறது. இதைத்தான் பகத்சிங் உயர்த்திப்பிடித்து, நடைமுறைப்படுத்தி வந்தார்.
பகத்சிங்கின் சிந்தனைத் தெளிவு தொடர்கிறது
பகத்சிங்கின் சிந்தனைத் தெளிவு, இன்றும் நம்
போராட்டங்களில் செல்வாக்கு செலுத்துவது தொடர்கிறது. பகத்சிங்கின் நவஜவான் பாரத்
சபையின் ஆறு விதிகளில், இரண்டு பின்வருமாறு: “1. வகுப்புவாத அமைப்புகளுடன் அல்லது வகுப்புவாத
சிந்தனைகளைப் பரப்புகின்ற அமைப்புகளுடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை. 2. மதம்
ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை என்று கருதும் விதத்தில் மக்கள் மத்தியில் பொது
சகிப்புத்தன்மையை உருவாக்குவது, அதன் அடிப்படையில் முழுமையாகச் செயல்படுவது.”
பகத்சிங், தங்களுடைய இந்துஸ்தான் குடியரசு சேனை
என்னும் பெயரை, இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனை (HSRA-Hindustan Socialist
Republican Army) என்று மாற்றியமைத்தபின்னர் நடைபெற்ற முதல் கூட்டத்தொடரிலேயே,
அனைத்துவிதமான மத வகுப்புவாதங்களுக்கும், சமயச் சடங்குகளுக்கும் தடையைப்
பிறப்பித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, (பிறப்பால் சர்தார் ஆக விளங்கிய)
பகத்சிங், தன் தலைமுடிக்கும், தாடிக்கும் விடை கொடுத்தார். இந்துஸ்தான் சோசலிஸ்ட்
குடியரசு சேனையின் அறிக்கை (manifesto), “இளைஞர்களைப் பீடித்திருக்கக்கூடிய, கொத்தடிமை
சிந்தனைகளிலிருந்தும், மத மூடநம்பிக்கைகளிலிருந்தும் விடுபடுவதற்கான
விருப்பத்தில், இளைஞர்களின் அமைதியின்மையில் புரட்சியின் வருகையைப் பார்த்தது.”
பகத்சிங் மற்றும் அவர் தோழர்கள் அந்நிய மற்றும்
உள்நாட்டு சுரண்டல்காரர்களுக்கு இடையேயான தொடர்பினை அறிந்திருந்தார்கள். இவ்வாறு
அவர்கள், சுதந்திரத்தை மனிதனுக்கு மனிதன் சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன்
இணைத்தார்கள். பகத்சிங், சிறையிலிருந்து எழுதிய செய்தியில் கீழ்க்கண்டவாறு
எழுதினார்: “விவசாயிகள் தங்களை, அந்நிய நுகத்தடியிலிருந்து மட்டுமல்ல,
நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளின் நுகத்தடிகளிலிருந்தும் விடுவித்தக் கொள்ள
வேண்டியிருக்கிறது.”
தில்லி வெடிகுண்டு வழக்கு
தில்லி வெடிகுண்டு வழக்கு விசாரணையின்போது,
பகத்சிங்கும், படுகேஸ்வர் தத்தும் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் போதும்,
நீதிமன்றத்திலிருந்து வெளியேறும்போதும், “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டார்கள்.
இந்த முழக்கத்தின் பொருள் என்ன என்று நீதித்துறை நடுவர் அவர்களிடம் கேட்டபோது,
அவர்கள் எழுத்துபூர்வமான பதிலை அவருக்குச் சமர்ப்பித்தார்கள். 7 மற்றும் 8 என்று எண்ணிடப்பட்ட, அதன் கடைசி
இரண்டு பத்திகளை, இங்கே கீழே இணைத்திருக்கிறோம். இதில் அவர்கள், சுதந்திரத்திற்கான
போராட்டத்தையும், சோசலிசத்திற்கான போராட்டத்தையும் அற்புதமான தெளிவுடன் இணைத்திருக்கிறார்கள். இவை, அனைவருக்குமான நவீன
இந்தியா குறித்து பகத்சிங்கிற்கும் அவருடைய புரட்சித் தோழர்களுக்கும் இருந்த
தொலைநோக்குப் பார்வையை உயர்த்திப்பிடிக்கிறது. (இந்தப் பதில், 1929 ஜுன் 9 அன்று
மாவட்ட அமர்வு நீதிபதியின் உத்தரவின்படி பதிவுருக்களிலிருந்து நீக்கப்பட்டது. அவர்கள்
தியாகிகளான பின் ஐம்பதாண்டுகள் கழித்து, 1981 மார்ச்சில் தேசிய ஆவணக் காப்பகத்தில்
பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.)
(7) பகத்சிங் ஆகிய என்னிடம், ‘புரட்சி’
(இன்குலாப்) என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று கீழமை நீதிமன்றத்தில்
கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளிக்கையில், புரட்சி என்பது ரத்தம் சிந்தும்
போராட்டமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், அங்கே தனிநபர்
பழிதீர்க்கும் பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். புரட்சி
என்பதற்கு ‘வெளிப்படையான அநீதியின்
அடிப்படையில் இப்போது இருக்கிற அமைப்பு மாற்றப்பட வேண்டும்’ என்றே நாங்கள் பொருள்
கொள்கிறோம். உற்பத்தி செய்பவர்கள் அல்லது தொழிலாளர்கள் சமூகத்தின் அடிப்படை
மூலக்கூறாக இருந்த போதிலும்கூட, அவர்களின் உழைப்பால் விளைந்த கனிகள்,
சுரண்டல்காரர்களால் சூறையாடப்படுகின்றன. அவர்களின் அடிப்படை உரிமைகள்
அவர்களிடமிருந்து பறிக்கப்படுகின்றன. ஒரு பக்கத்தில் அனைவருக்கும் உணவை உற்பத்தி
செய்து அளித்திடும் விவசாயி தன் குடும்பத்துடன் பட்டினி கிடக்கிறார், உலகத்தில்
உள்ள அனைவருக்கம் நவீன ஆடைகளை அணிவதற்கு உலகச் சந்தைக்கு துணிகளை விநியோகித்திடும்
நெசவாளர் தன்னையோ, தன் குழந்தைகளையோ முழுமையாகப் போர்த்திக்கொள்ளும் அளவிற்கு
ஆடைகளின்றி இருக்கிறார். அற்புதமான அரண்மனைகளைக் கட்டி எழுப்புகின்ற கொத்தனார்கள்,
கருமான்கள்(smiths), ஆசாரிகள் (carpenters), சேரிகளில் உழன்றுகொண்டிருக்கிறார்கள்.
மறுபக்கத்தில், சமூகத்தின் ஒட்டுண்ணிகளாக விளங்கும் முதலாளித்துவ
சுரண்டல்காரர்கள், தங்கள்
விருப்பத்திற்கிணங்க லட்சக்கணக்கில் விரயம் செய்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய
பயங்கரமான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்
வலிந்துதிணிக்கப்படும் பாரபட்சம், பெருங்குழப்பத்தை நோக்கி சென்று
கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலைமை என்றென்றும் நீடித்திருக்க முடியாது. எரிமலையின்
விளிம்பின்மீது சுரண்டல்காரர்களின் அப்பாவிக் குழந்தைகளும், சுரண்டப்படுபவர்களின்
பல லட்சக்கணக்கான குழந்தைகளும் ஓர் ஆபத்தான செங்குத்துச் சரிவில்
நடந்துகொண்டிருக்கக்கூடிய நிலையில் இன்றைய சமூக அமைப்பு சந்தோஷமாக
ஆடிப்பாடிக்கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாகும். இந்த நாகரிகத்தின்
(civilization) ஒட்டுமொத்த கம்பீரமான கட்டிடமும் காலத்தே காப்பாற்றப்படாவிட்டால்,
நொறுங்கி வீழ்ந்துவிடும். எனவே, ஒரு புரட்சிகர மாற்றம் அவசியம். சோசலிசத்தின்
அடிப்படையில் சமூகத்தை மாற்றி அமைக்க வேண்டியது, இதனை உணர்ந்த ஒவ்வொருவரின்
கடமையுமாகும். இதனைச் செய்யாவிட்டால், மற்றும் மனிதனை மனிதன் சுரண்டுவதற்கும்,
ஏகாதிபத்தியமாக முகமூடி அணிந்துகொண்டு தேசங்களை தேசங்கள் சுரண்டுவதற்கும்
முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், மனிதகுலம் இன்றையதினம் அனுபவித்துக்
கொண்டிருக்கும் துன்பதுயரங்கள் மற்றும் படுகொலைகள் தடுக்கப்பட முடியாவிட்டால்,
யுத்தங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் உலகளாவிய அமைதிக்குக்
கட்டியங்கூற வேண்டும் என்றும் கூறுவதெல்லாம் சந்தேகத்திற்கு இடமில்லாதவகையில்
பாசாங்குத்தனமாகும். புரட்சி என்பதன் மூலம் நாங்கள் புரிந்துகொண்டிருப்பது,
தொழிலாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீகரிக்கப்பட்ட ஓர் அமைப்பு நிறுவப்பட
வேண்டும் என்பதும், இது எவராலும் அச்சுறுத்தப்பட முடியாத அளவிற்கு அமைந்திடும்
என்பதுமாகும். இதன் விளைவாக அமைந்திடும் உலக சம்மேளனம் மனித குலத்தை
முதலாளித்துவத்தின் அடிமைத்தளையிலிருந்தும், ஏகாதிபத்திய யுத்தங்களின் துன்ப
துயரங்களிலிருந்தும் மீட்டிடும்.
(8) இதுவே எங்கள் சித்தாந்தம். எங்கள்
உத்வேகத்திற்கான இந்த சித்தாந்தத்துடன், நாங்கள் ஒரு நியாயமான மற்றும் போதுமான
அளவிற்கு உரத்து எச்சரிக்கை விடுக்கிறோம். எனினும், இது செவிமடுக்கப்படாவிட்டால்
மற்றும் இப்போதைய அரசமைப்பு முட்டுக்கட்டையாக இருப்பது தொடருமானால், அனைத்துத்
தடைகளையும் தூக்கி எறியும் விதத்தில், நன்றாக இருக்கின்ற இயற்கையான சக்திகள், ஒரு
கடுமையான போராட்டத்தை நடத்தி, புரட்சியின் லட்சியங்களை நிறைவேற்றும்
விதத்தில், தொழிலாளர் வர்க்கத்தின்
சர்வாதிகாரத்தை நிறுவிடும்.
புரட்சி, மனிதகுலத்தின் தவிர்க்கமுடியாத உரிமை.
சுதந்திரம் அனைவரின் விவரிக்கமுடியாத பிறப்புரிமை. தொழிலாளர்கள்தான் சமூகத்தின்
உண்மையான பராமரிப்பாளர்கள். மக்களின் இறையாண்மை தொழிலாளர்களின் இறுதி விதியாக
இருந்திடும்.
இந்த லட்சியங்களைக் கொண்டுவர வேண்டும்
என்பதற்காக எவ்வளவு துன்பங்கள் எங்கள் மீது ஏவப்பட்டாலும் அவற்றை நாங்கள்
வரவேற்போம். புரட்சியின் பலிபீடத்திற்கு நாங்கள் எங்கள் இளைஞர்களைத் தூபமாகக்
கொண்டு வந்திருக்கிறோம். அற்புதமான லட்சியத்திற்காக அர்ப்பணித்துக்கொள்வதைவிட
உயர்ந்த தியாகம் எதுவுமில்லை. நாங்கள் திருப்தி மனப்பான்மையுடனேயே இருக்கிறோம்.
புரட்சியின் வருகையை எதிர்பார்க்கிறோம்.
“புரட்சி நீடூழி வாழ்க.”
இன்றைய
சூழல்
இவ்வாறு, இன்றைய சூழலில், குடியுரிமைத்
திருத்தச் சட்டம்/தேசிய மக்கள்தொகைப் பதிவேடு/தேசியக் குடிமக்கள் பதிவேடு
ஆகியவற்றிற்கு எதிரான போராட்டம், ஆழமாகவும், அகலமாகவும் வளர்ந்திருக்கிற நிலையில்,
மோடி அரசாங்கம் பெரும்பான்மை மக்களின் துன்ப துயரங்கள் அதிகரிக்கும் விதத்தில்
சுரண்டல் கொள்கைகளை அதீதமான முறையில் பின்பற்றி வருகிறது. பொருளாதார மந்தம்
நாட்டின் சொத்துக்களையும், பொதுத்துறை நிறுவனங்களையும், வங்கிகளில் சேமித்து
வைக்கப்பட்டுள்ள மக்களின் பணத்தை அந்நிய மற்றும் உள்ளூர் கார்ப்பரேட்டுகளின்
ஆதாயத்திற்குத் திருப்பிவிடும் விதத்திலும் சூறையாடுவதுடன் இணைத்திருக்கிறது.
இவை அனைத்தும், தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகள் நலச்சட்டங்களாக மாற்றும்விதத்தில்
தொழிலாளர் சீர்திருத்தங்கள் மூலமாக உழைக்கும் மக்களின் உரிமைகள் மீது தாக்குதல்
தொடுப்பதுடனும், ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக மாற்றுக் கருத்துக் கூறும்
அனைவரையும் “தேசத் துரோகிகள்” என்று முத்திரை குத்தி அவர்களின்
ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள்மீது தாக்குதல் தொடுப்பதுடனும்,
பகுத்தறிவாளர்கள் மீது தாக்குதல் தொடுப்பதுடனும் இணைந்திருக்கிறது. இன்றைய
தாக்குதல்களுக்கு எதிராக மக்களின் போராட்டங்களை வலுப்படுத்த அனுமதிப்பதற்கான
உரிமைகளைப் பாதுகாத்திட, இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களைப்
பாதுகாப்பதற்கான போராட்டங்களுடன், இந்தப் பொருளாதாரத் தாக்குதல்களுக்கு எதிராக
மக்கள் போராட்டங்களை வலுப்படுத்திட, மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரச்
சுதந்திரத்தைப் பாதகாத்திட, நாட்டிலுள்ள பல்வேறு சமூகத்தினருக்கும் மத்தியில்
நிலவும் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வலுப்படுத்திட, இந்திய அரசமைப்புச்
சட்டத்தைப் பாதகாப்பது மிகவும் அவசியமாகும்.
இவ்வாறு, பகத்சிங், தூக்கிலிடப்பட்ட தியாக
தினம் 90 ஆண்டுகள் கழிந்த பின்னரும், அவருடைய வாழ்வும் பணியும் இந்தப் போராட்டத்தை
முன்னெடுத்தச் செல்லவும், வலுப்படுத்தவும் நமக்கு உத்வேகம் அளித்து, வழிகாட்டும் ஒளிவிளக்காக இருப்பது தொடர்கிறது.
(தமிழில்: ச. வீரமணி)
No comments:
Post a Comment