பொருளாதார மந்தத்தின் பின்னணியல் பரவும் நோய்:
அரசு என்ன செய்ய வேண்டும்?
இரண்டையும் தடுக்க மோடி அரசின் திட்டம் என்ன ?
கோவிட்-19 என்னும்
கொரோனா வைரஸ் தொற்று உலகப் பொருளாதாரத்தை மிகவும் மோசமாகத் தாக்கி இருக்கிறது.
பொருளாதாரத்தின் மீதான அதன் தாக்கம் இன்னமும் முழுமையாக வெளிக்கொணரப்படவில்லை. மார்ச் 18 தேதியன்று அளிக்கப்பட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின்
அறிக்கையின்படி, இந்தத் தொற்று 164 நாடுகளுக்குப் பரவி இருக்கிறது. 1 லட்சத்து 94
ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களில் 7 ஆயிரத்து 800 பேர்
இறந்திருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக உலகப்
பொருளாதாரத்திலும் மிகப்பெரிய மந்தநிலை (recession) ஏற்படும் என்பது நிச்சயம்.
2008ஐ விட பெரிய நெருக்கடி
காத்திருக்கிறது
பொருளாதார நடவடிக்கைகள் பல துறைகளிலும்,
குறிப்பாக போக்குவரத்து, சுற்றுலா, எண்ணெய்த் துறை மற்றும் சேவைத் துறைகளிலும்
முடங்கிவிட்டது. விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்திருக்கின்றன. உற்பத்திச்
சங்கிலிகளும் உலகம் முழுதும் உடைந்து கிடக்கின்றன. இது நேரடியாக உற்பத்தி,
வர்த்தகம் மற்றும் முதலீடுகளைப் பாதிக்கும். பங்குச் சந்தைகள் சரிந்திருக்கின்றன.
நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையால் ஊக்குவிக்கப்பட்ட பங்குச்சந்தை ஏற்றம்
இப்போது சரிந்துவிட்டது. நிதித் சந்தையில் ஏற்பட்டுள்ள செங்குத்தான வீழ்ச்சி
உண்மையான பொருளாதாரத்தைப் பாதித்து, பொருளாதார மந்தத்தை ஆழமாக்கி இருக்கிறது.
கார்ப்பரேட்டுகளின் கடன்கள் மிகப்பெரிய அளவில் இருக்கக்கூடிய நிலையில், இந்த
நிலைமை நிதிச் சந்தையிலும் தொற்றுநோய் போல் பரவிடும். இதனைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய
நிலைகுலைவுக்கான அச்சுறுத்தல் அநேகமாக 2008ஐவிட பெரிய அளவில் இருந்திடும்.
அனுபவத்திலிருந்து பாடம்
கற்றிடுக!
கொரோனா வைரஸ் தொற்று உருவான சீனத்தில் தற்போது
தொற்று விகிதம் கிட்டத்தட்ட முற்றிலும் குறைந்திருக்கிறது. மாறாக சீனாவுக்கு
வெளியேதான் அதிக அளவில் பாதிப்புகள் இருக்கின்றன. தொற்று பரவும் விகிதம் உலகம்
முழுதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில், கொரோனாவைரஸ் தொற்று நம்
நாட்டில், நவீன தாராளமயப் பொருளாதாரக் கட்டமைப்பைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள
சுகாதார அமைப்புகள் எந்த அளவிற்குப் போதாமையுடனும் பலவீனமாகவும் இருக்கின்றன
என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. அரசாங்கமானது, மற்ற நாடுகளில்
பொது சுகாதார நெருக்கடி ஏற்படும் காலங்களில் அவை எந்த அளவிற்குத் திறமையாக
மேலாண்மை செய்கின்றன என்பதையும் அலசி ஆராய்ந்து, அவற்றின் அனுபவங்களிலிருந்து
பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றின் அடிப்படையில் மக்கள் மத்தியில் தங்கள்
திட்டங்களையும், நடவடிக்கைகளையும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தி, மக்களின்
நம்பிக்கையையும் பெற்றிட வேண்டும்.
ஏற்கெனவே நிலவும் பொருளாதார
மந்தம்
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு முன்பாகவே,
இந்தியா போன்ற பல நாடுகளில் பொருளாதார மந்தம் ஏற்பட்டுவிட்டது. இப்போது கொரோனா
வைரஸ் தொற்றும், பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தி, பொருளாதார மந்தத்தை
மேலும் தீவிரமான நிலைக்கு இட்டுச் செல்லும். கொரோனா வைரஸ் தொற்று குறித்துப்
பரிசோதனை செய்வதற்கான வசதிகள் போதுமான அளவில் இல்லாத நிலையில், அதிகாரப்பூர்வமாக
அறிவித்திடும் விவரங்களைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாகவே இருந்திடும். மார்ச் 18
அன்று 151 பேர் பாதிக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சுற்றுலாப் பயணிகளுக்குக் கட்டுப்பாடு மற்றும் தடைகள், பள்ளிக்கூடங்கள்
மூடியிருத்தல், சமூக ரீதியாக ஒதுங்கியிருத்தல் போன்றவை ஏற்கனவே பொருளாதாரத்திலும்
கடும் விளைவுகளை ஏற்படுத்தி இருப்பதைப் பார்க்க முடிகிறது. வேலைதேடி
புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. முறைசாராத் தொழிலில்
ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துகொண்டிருக்கின்றனர்.
பயணக்குழுக்கள், கட்டுமானத்துறை, ஓட்டல்கள், விடுதிகள், சுற்றுலாத்துறை மற்றும் பல
துறைகளில் கதவடைப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை
அடுத்து இயல்பு வாழ்க்கையும் முடக்கப்பட்டிருப்பதால், மேலும் பல தொழிற்சாலைகளும்,
தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஒப்பந்தத்
தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் வீட்டிற்கு அனுப்பப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
கிராமப்புற பொருளாதாரமும் கடுமையாக சீர்குலைந்துள்ளதால் கிராமப்புற வேலையின்மையும்
தீவிரமாகும்.
செலவு செய்யத் தயங்கும்
மத்திய அரசு
இத்தகைய நிலைமையை எதிர்கொள்வதற்கு ஏற்றவிதத்தில்
ஒருங்கிணைந்த திட்டம் எதையும் மத்திய அரசாங்கம் உருவாக்கிடவில்லை. இதுவரை இதற்காக,
மாநில பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து (State Disaster Relief Fund) தான் மத்திய
அரசு செலவு செய்துகொண்டிருக்கிறது. மாநிலங்கள் எப்படியிருந்தாலும் இந்த
நிதியத்திலிருந்து தாங்களாகவே செலவு செய்துகொள்ள முடியும்.
சந்தை நம்பிக்கை மற்றும் நிதி
ஸ்திரத்தன்மைக்காக, இந்திய ரிசர்வ் வங்கி, ஏப்ரலில் ஒரு லட்சம் கோடி ரூபாய்
திரட்டிட முடிவு செய்திருப்பதாக அறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன. ஆட்சியாளர்களின்
நவீன தாராளமய அணுகுமுறைதான் கொரோனாவுக்கு எதிராக எவ்விதமான தயாரிப்பு வேலைகளும்
மேற்கொள்ளாமல் இருப்பதற்கும், கொரோனா வைரஸைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள்
எடுப்பதில் பலவீனமான முறையில் இருப்பதற்கும் இட்டுச் சென்றிருக்கின்றன. இவ்வாறு
செலவு செய்திடாமல் இருக்கும் போக்கு சரியல்ல.
பகுத்தறிவற்ற தாராளமயம்
கொரோனா வைரஸ் தொற்று நவீன தாராளமயப் பொருளாதாரக்
கொள்கையின் பகுத்தறிவின்மையையும், பலவீனத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டு
வந்திருக்கிறது. இந்த நெருக்கடியைச் சமாளித்திட மேற்கொள்ளப்படும் முயற்சிகள், நவீன
தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக மாற்றுக் கொள்கைகளை முன்னிறுத்த வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கும், மக்களின்
வருமானத்திற்கான வழிவகைகளைச் செய்வதற்கும் மாநில அரசுகளுக்கு போதுமான அளவிற்கு நிதி
உதவிகள் செய்யும் விதத்தில் பெரிய அளவில் மத்திய அரசு தலையிட வேண்டும்.
அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன ?
·
அரசாங்கம் பொது சுகாதார அமைப்பினை
வலுப்படுத்தும் விதத்தில் அதற்கு நிதி ஒதுக்கீடுகளைச் செய்திட வேண்டும். அதன்மூலம்
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்வதற்கும், மருத்துவ சிகிச்சைகள்
மேற்கொள்வதற்கும் ஏற்ற விதத்தில் மருத்துவமனை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
·
வேலை
வாய்ப்புகளையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாத்திடும் விதத்தில் பொதுச்
செலவினங்களை உடனடியாக அதிகப்படுத்திட வேண்டும்.
·
பொருளாதாரத்தின்
பல துறைகளை புனரமைப்பதற்காக அத்தியாவசியமான முறையில் நிதித் தொகுப்புகள்
தேவைப்படுகின்றன. அரசாங்கம் அவற்றிற்கு நிதி அளித்திட வேண்டும்.
·
அரசாங்கம்
பெரிய கார்ப்பரேட்டுகள் மற்றும் நிதி நிறுவனங்களின் திவால் தன்மைகளிலிருந்து
அவற்றைக் காப்பாற்றுவதே தங்கள் கொள்கை என்று இருந்துவிடக்கூடாது.
·
இந்திய
ரிசர்வ் வங்கியும், இதர வங்கிகளும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு
அடையாளப்படுத்தப்பட்ட துறைகளுக்கும் கடன்கள் வழங்கிட வேண்டும். சிறிய மற்றும்
நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கும் எளிதான முறையில் கடன்கள் அளித்திட முன்வர
வேண்டும். சில்லரை வர்த்தகர்கள் மற்றும் வீதிகளில் விற்பனை செய்வோரின் நலன்களும்
கவனிக்கப்பட வேண்டும்.
·
மத்திய
அரசாங்கம், மாநிலங்களுக்குக் கடன் கொடுக்கும் வரையறையை இந்த நிதியாண்டில்
குறைந்தபட்சம் 0.5 சதவீதமாவது அதிகரித்திட வேண்டும்.
·
மகாத்மா
காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் வேலை நாட்களின்
எண்ணிக்கையை அதிகரித்திடவும், ஊதிய விகிதங்களை அதிகரித்திடவும் மத்திய அரசாங்கம்
முன்வர வேண்டும்.
·
கொரோனா
வைரஸ் தொற்று காலத்தில், புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்கும், கிராமப்புற ஏழை
மக்களுக்கும் உதவும் வகையில் பொது விநியோக முறை வலுப்படுத்தப்பட்டு, விரிவாக்கப்பட
வேண்டும், இலவசமாக ரேஷன்கள் அளிக்கப்பட வேண்டும்.
·
மத்திய
அரசாங்கம், மாநில அரசாங்கத்துடன் இணைந்து, வாழ்வாதாரங்களை இழந்துள்ள முறைசாராத்
தொழிலாளர்களுக்கு உதவிடும் விதத்தில் ஒரு நிதியம் உருவாக்கிட வேண்டும். ஸ்தாபன
ரீதியான துறைகளிலும், தொழிற்சாலைகள் கதவடைப்பு செய்துள்ள நாட்களிலும், தொழிலாளர்களுக்கு முழு ஊதியத்தை அளித்திட
கார்ப்பரேட்டுகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.
·
கொரோனா
வைரஸ் தொற்று முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாகப் பரவி வருவதால், அரசாங்கம்
அவசரகதியில் நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். உலக நாடுகள் பல இதனைக் கட்டுப்படுத்த
மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ற விதத்தில்
அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உதவிகளைச் செய்திட வேண்டும். குறிப்பாக உழைக்கும்
மக்கள், ஏழை மற்றும் வடுப்படும் நிலையில் உள்ள மக்களுக்கு உதவிகள் செய்திட
வேண்டும்.
மார்ச் 18, 2020
தமிழில்: ச.வீரமணி
தமிழில்: ச.வீரமணி
No comments:
Post a Comment