நூல் அறிமுகம் : தூக்குமேடைக் குறிப்பு
வரலாற்றைத்
தெரிந்துகொள்வோம்…
ஜூலியஸ்
பூசிக் – 1903-1943
மே தினம்
– சிறையில் கொண்டாடப்பட்ட விதத்தையும் தெரிந்து கொள்வோம்
1943இல்
அன்றைய செக்கோஸ்லேவேகியா, இதர ஐரோப்பிய நாடுகளைப்போலவே மாபெரும் இடுகாடாக மாறியிருந்தது.
சர்வாதிகாரி ஹிட்லரின் படைகள் மக்களைக் கொன்றுகுவித்த வண்ணம் இருந்தன, ஐரோப்பாவில்
இருந்த பல அறிவுஜீவிகள் மற்றும் எழுத்தாளர்கள் ஹிட்லரின் அடிவருடிகளாக மாறி அவனுக்கு
சேவகம் செய்தபோதிலும், பலர் அவனை எதிர்த்து வீரமரணம் எய்தினர், இவர்களில் ஒருவர்தான்
தோழர் ஜூலியஸ் பூசிக்.
தோழர்
ஜூலியஸ் பூசிக் ஒரு நாடக விமர்சகர், இதழியலாளர் மற்றும் தலைசிறந்த ஒரு கம்யூனிஸ்ட்டும்
ஆவார். 1942 ஏப்ரல் 24இல் கைதுசெய்யப்பட்ட அவர். தோழர்களைக் காட்டிக்கொடுக்க வேண்டும்
என்று வற்புறுத்தப்பட்டு மிகவும் கொடூரமானமுறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.
ஆயினும் அவரிடமிருந்து ஒருவார்த்தைகூட வெளிவரவில்லை. இறுதியில் அவர் 1943 செப்டம்பர்
8 அன்று கெஸ்டபோ சிறையில் 40ஆவது வயதில் தூக்கிலிடப்பட்டார்.
1945 மே
மாதத்தில் ஜெர்மனியில் ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டபின்னர், சிறையிலிருந்த அனைத்துக் கைதிகளும்
விடுவிக்கப்பட்டனர். அப்போது, ஜூலியஸ் பூசிக்கின் வாழ்க்கைத்துணைவியாரும் தோழருமான
அகஸ்டினா, பூசிக்கின் சக சிறைவாசி ஒருவரிடமிருந்து, பூசிக் சிறையில் இருந்தபோது தனக்கு
இழைக்கப்பட்ட கொடுமைகளை. ஒரு செக் காவலர் தொடர்ந்து
கொடுத்துவந்த தாள் மற்றும் பென்சில் உதவிகொண்டு எழுதி வந்ததாகவும். அவை கோலின்ஸ்கி
என்பவரிடம் பத்திரமாக இருப்பதாகவும் அறிந்தார். அகஸ்டினா அவரைத் தேடிக்கண்டுபிடித்து.
ஜூலியஸ் பூசிக் எழுதிய தாள்களைத் தொகுத்து, “தூக்குமேடைக் குறிப்புகள்” என்ற பெயரில் வெளியிட்டார். இந்த சிறைக்குறிப்புகளில் நூலில் ஜூலியஸ் பூசிக், சிறையில்
தான் இருந்த 411 நாட்களில் நடைபெற்ற கொடுமைகளையும் விவரித்திருப்பார். செக்கோஸ்லேவேகியாவில் சாமானியமான ஆண்களும் பெண்களும் செக்கோஸ்லேவேகியாவின்
விடுதலைக்காக எப்படி ரத்தம் சிந்தியுள்ளனர் என்பதை இது விளக்கும். பின்னர் செக்கோஸ்லேவேகியா
1945இல் விடுதலை அடைந்தது.
1903 பிப்ரவரி
23இல் பிரேக் நகரில் ஒரு தொழிலாளி வர்க்கக் குடும்பத்தில் பிறந்த தோழர் ஜூலியஸ் பூசிக்.
பிரேக் பல்கலைக் கழகத்தில் கலை.இலக்கியம். இசை ஆகியவற்றைப் படித்துத் தேறியவர். பின்னர்
தொழிலாளியாக மாறிய அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பில்
முன்னணித் தலைவராக மிளிர்ந்தார். செக்கோஸ்லேவேகியா கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ
ஏடான ரூட் பிராவோ இதழில் ஆசிரியராகவும் உயர்ந்தார். அப்போதுதான் ஹிட்லரின் நாசிப் படையினரால்
கைதுசெய்யப்பட்டார்.
தோழர்களே,
ஜூலியஸ் பூசிக்கின் தூக்குமேடைக் குறிப்புகள் நூலை தோழர் இஸ்மத் பாஷா மிக அற்புதமாகத்
தமிழாக்கம் செய்திருப்பார். அவசியம் அனைவரும் அதனைப் படித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதில்
மே தினத்தை எப்படித் தோழர்கள் சிறையில் கொண்டாடினார்கள் என்பதை தோழர் ஜூலியஸ் பூசிக்
எழுதியிருப்பதைப் படித்துப் பாருங்கள்.
“மே முதல் நாள். வானம் வெளுப்பதற்கு முன்
சிறைக் கூண்டின் மூன்று மணி அடிக்கிறது. முதல் தடவையாக அதன் ஓசை என் காதில் கணீர் கணீர்
என்று விழுகிறது. பிரக்ஞை முழுவதும் மீண்டுவிட்டது. ஜன்னல் வழியாகப் புதுக்காற்று வீசுகிறது.
அது என் விலாப்புறமாகச் செல்கிறது! படுக்கையின் வெளியே நீட்டிக் கொண்டிருக்கம் வைக்கோல்
நுனிகளை அசைக்கிசறது. இப்போதுதான் எனக்குத் தெரிகிறது. வைக்கோல் நுனிகள் என் முதுகை
உறுத்துகின்றன என்று. மூச்சு விடுவது மிகவும் கஷ்டமாகத் தோன்றுகிறது. உடலின் ஒவ்வொரு
அணுவும் வலிக்கிறது. ஜன்னலைத் திறந்தவுடன் சட்டென்று பார்ப்பதுபோல் இதுதான் என் முடிவு
என்று சட்டென்று புரிந்துகொள்கிறேன். நான் செத்துக் கொண்டிருக்கிறேன்.
சாவே!
என்னிடம் வர உனக்கு வெகுநேரம் ஆகிவிட்டது. ஒரு காலத்தில் உன்னைச் சந்திப்பதற்குள் பல
ஆண்டுகள் கழிந்துவிடும் என்றுதான் நினைத்தேன்! சுதந்திர மனிதனாய் வாழலாம்; பற்பல வேலைகளைச்
செய்யலாம்; மனம் பூரிக்க நேசிக்கலாம்; இன்பம் பொங்கப் பாடலாம்; நானிலமெங்கும் சுற்றித்
திரியலாம்; குதூகலிக்கம்... இப்படியாக எண்ணினேன். அப்போதுதான் நான் பலப் பருவம் மாறிப்
பக்கவமடைந்திருக்கிறேன். என் உடம்பில் நிரம்பத் தெம்பு இருந்தது. ஆனால் இப்போது அது
இல்லை; குன்றிக் குறைந்த வருகிறது.
நான்
வாழ்வை நேசித்தேன், அதன் எழிலுக்காகப் போராடப் புறப்பட்டேன். ஜனங்களே! உங்களை மனப்பூர்வமாக
நேசித்தேன். நீங்களும் என்னை நேசித்தபோது என் மனம் குளிர்ந்தது. என்னை நீங்கள் தவறாகப்
புரிந்துகொண்டபோது, என் இதயம் வேதனையில் வெந்தது. உங்களில் யாருக்காவது நான் ஏதாவபது
தீங்கு இழைத்திருந்தால் அருள்கூர்ந்து மன்னித்துவிடுங்கள், என்னால் உற்சாகம் அடைந்தவர்கள்
யாரேனும் இருந்தால், என்னை மறந்துவிடும்படி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். என் இறுதி
விருப்பம்; நான் விட்டுச் செல்லும் உயில்! அப்பா! அம்மா! சகோதரிகளே! உங்களக்கு - என்
ஆருயிர் மனைவியே! உனக்கு-இன்னுயிர் தோழர்காள்! உங்களுக்கு - நான் நேசித்த ஒவ்வொருவருக்கும்-இதுதான்
என் உயில். துயரத்தின் தூசியைக் கண்ணீர் கரைத்துவிடும்
என்று நினைத்தால், சிறிது நேரம் அழுங்கள். ஆனால் வருத்தப்படாதீர்கள், நான் மகிழ்ச்சியாக
வாழ்ந்தேன், மகிழ்ச்சிக்காகச் சாகிறேன், என் சமாதியில் துக்க வேதனையை நிறுத்துவது கொடுமையாகும்.
மே
முதல் நாள்!
இந்த
நன்னாளில் பொழுது புலர்வதற்குள் நாங்கள் எழுவோம். கொடிகளைத் தயார் செய்வோம். இந்த நேரத்தில்
மாஸ்கோவில், மே தின அணிவகுப்பில் செல்லும் பொருட்டு முதல் வரிசையினர் ஆயத்தமாகி, தத்தம்
இடத்தில் தயாராகப் போய் நிற்பர், இன்றைக்கு இந்நேரத்தில் மனித சுதந்திரத்தைக் காப்பதற்காக
நடைபெறும் மகத்தான இறுதிப் போரில் லட்சோபலட்சம் மக்கள் சமர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
நான் அவர்களில் ஒருவன். அவர்களில் ஒருவனாகவே என்றுமிருப்பேன். சுதந்திரத்திற்கான இறுதிப்
போரில் ஒரு வீரனாயிருப்பது எவ்வளவு மகத்தான பாக்கியம்?
ஆனால்
சாவது சௌந்தர்யமானதல்ல. எனக்கு மூச்சுத் திணறுகிறது.இருமல் பக்கத்திலுள்ளவர்களை எழுப்பிவிடும்
போலிருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் குடித்தாள் ஒரு வேளை...ஆனால் தகரக் குவளையில் இருந்த
தண்ணீர் முழுவதும் தீர்ந்துவிட்டது. அதோ அந்த மூலையில், கேவலம் ஆறு அடி தூரத்தில்...முகம்
கழுவும் இடத்தில் தண்ணீர் ஏராளமாக இருக்கிறது. ஆனால் அங்கு போய்ச் சேர என் உடம்பில்
வலுவிருக்கிறதா?
ஓசைப்படாமல்
குப்புறப்படுத்தவாறே நகர்கிறேன். மிக மெதுவாக...சாவின் பெருமை மற்றவர்களை எழுப்பாமல்
இருப்பதில்தான் இருக்கிறது என்ற எண்ணமோ என்னவோ? கடைசியாக அங்கு போய்ச் சேர்கிறேன்.
தொட்டியிலிருந்து ஆர்வத்துடன் தண்ணீரைக் குடிக்கிறேன்.
போகவும்,
குடிக்கவும், திரும்பி ஊர்ந்துவரவும் எவ்வளவு நாழியாயிற்று என்பது எனக்குத் தெரியாது.
மீண்டும் நினைவு தப்புகிறது. கை நாடியைத் தடவிப் பார்க்கிறேன். ஒன்றும் புரியவில்லை.
இருதயம் திடீரென்று தொண்டை பக்கம் பாய்கிறது. உடனேயே பழைய ஸ்தானத்தில் குதிக்கிறது.
அதன் கூடவே நானும் கீழே விழுகிறேன். இடையே காரெக் கூறியது மட்டும் காதில் கேட்கிறது.
"அப்பா!
அப்பா! கேட்கிறதா? பாவம்? இறுதி மூச்சு விடுகிறான்."
காலையில்
டாக்டர் வந்தார்.
ஆனால்
இவைகளையெல்லாம், பிற்காலத்தில் மிகவும் பிற்காலத்திலேயே அறிந்தேன்.
அவர்
வந்தார், என்னைப் பரிசோதித்தார், தலையை அசைத்துவிட்டு ஆஸ்பத்திரிக்குப் போனார். வயித்திய
ரிப்போர்ட்டை எடுத்து, என் பெயருக்குமுன் நேற்று மாலையில் எழுதப்பட்டிருந்த மரணம் என்ற
வார்ததையை அடித்துத் திருத்திவிட்டு, ஒரு நிபுணரின் சுய திருப்தியோடு கூறினார்:
"அவனுக்கு
ஒரு குதிரையின் வலுவிருக்கிறது."
*** ***
இடைவேளை
மே தினம், 1943
இன்று
1943-ஆம் வருட மே தினம். இதை ஒரு இடைவேளையாகக் கருதுகிறோம். இதில் எழுதுவதற்கு எனக்கு
ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது. என்னே என் பாக்கியம். ஒரு வினாடி நேரம் திரும்பவும்
கம்யூனிஸ்ட் பத்திரிகை ஆசிரியனாக வேலை செய்யச் சந்தர்ப்பம்! புதிய உலகப் போராட்டச்
சக்தியின் மே தின அணிவகுப்பைப் பற்றி எழுத ஒரு வாய்ப்பு, எத்தகைய அதிர்ஷ்டம் இது!
மே
தினத்தைப் பற்றி எழுதப் போகிறேன் என்றவுடன் பட்டொளி வீசிப் பறக்கும் கொடிகளைப்பற்றி
எழுதுவேன் என்று எதிர்பார்க்காதீர்கள். அதைப்பற்றி எழுதப் போவதில்லை. உணர்ச்சிகரமான
சம்பவங்களைப்பற்றி வர்ணிப்பேன் என்று நினைக்க வேண்டாம். அப்படிப்பட்ட வர்ணனைகளை மக்கள்
நிரம்ப விரும்புகின்றனர் என்பது உண்மையே. ஆனால், நான் அப்படிப்பட்ட சம்பவங்களைவிட மிகமிகச்
சாதாரணமான நிகழ்ச்சிகளையே இப்போது எழுதுகிறேன். ஏனெனில், இப்போது இவ்விடத்தில், முந்திய
வருடங்களில் பிரேக் நகர வீதிகளில் மே தினத்தன்று வானமதிரக் கோஷமிட்டு ஆயிரக்கணக்கான
கொடிகளைப் பறக்கவிட்டு பவனி வந்த லட்சோப லட்ச ஜனங்கள் பிரசன்னமாகி இருக்கவில்லை. மாஸ்கோவின்
செஞ்சதுக்கத்தில், ஆழி அலைகளைப் போல் சாரைசாரையாக அணிவகுத்துப் போகும் லட்சக்கணக்கான
மக்களும் இங்கு இல்லை. லட்சக்கணக்கான பேர் அல்ல, நூற்றுக்கணக்கானவர்கசள் கூட இங்கு
இல்லை, விரல்விட்டு எண்ணத்தக்க ஒருசில தோழர்கள்தான் இருக்கிறார்கள். இருந்தாலும் முக்கியத்துவத்தில்
அந்த மகத்தான அணிவகுப்புகளுக்கு இது எவ்விதத்திலும் குறைந்ததல்ல. ஏனெனில், இங்கு நாங்கள்
பார்க்கும் காட்சி அலாதியானது. இங்கு புதிய உலக சக்திகள் வீதி அணி வகுப்பில் விமர்சிக்கப்படவில்லை.
கொஸ்ர நெருப்பு ஆற்றிலே பரீட்சிக்கப்படுகின்றன. நெருப்பு ஆற்றில் எதிர்நீச்சு நீந்தும்போது,
அவை பொசுங்கி சாம்பலாகிவிட வில்லை, வலுவுள்ள எஃகாக உருவாகின்றன. வீதியில் அல்ல, போர்முனை
அகழிகளில் நடைபெறும் விமர்சனம் இது. அகழிகளில் சாம்பல் நிறமான போர்க்கள உடையை அணிந்து
நிற்கிறோம் நாங்கள். மிக மிகச் சிறிய காரியங்களைச் செய்வதன் மூலம் இந்தப் பரீட்சை இங்கு
நடத்தப்படுகிறது. போராட்ட உலைக்களத்தில் பகுந்து வராத உங்களுக்கு இதைப் புரிந்துகொள்ள
முடியுமோ, முடியாதோ சந்தேகம்தான். ஒருவேளை புரிந்துகொண்டாலும் கொள்ளலாம். நான் சொல்கிறேன்,
நம்புங்கள், சக்கு இங்குதான் பிறந்து கொண்டிருக்கிறது.
காலை,
அடுத்த அறையிலுள்ள தோழர் சுவரில் தட்டுகிறார். அது பீத்தோவன் பாட்டின் தாளம். அது காலை
வாழ்த்துக்கள். மற்ற நாட்களைவிடப் பலமாக இன்று அவர் தாளம் போட்டு வாழ்த்துகிறார். மற்ற
நாட்களைவிட, இன்று அது பரவசமாக ஒலிக்கிறது. ஸ்தாயியை உயர்த்திப் பேசுகிறது சுவர்.
இருக்கிற
ஆடைகளில் சிறந்ததை எடுத்து உடுத்திக்கொள்கிறோம். எல்லா அறைகளிலும் இப்படியே.
காலைச்
சாப்பாடு குதூகலத்துடன் நடக்கிறது. ஏவல் கைதிகள் திறந்த அறைக்கு முன் வரிசையாகக் கறுப்புக்
காப்பி, ரொட்டி, தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டுவந்து கொடுக்கிறார்கள். தோழர் ஸ்கொரியா,
வழக்கத்துக்கு மாறாக இரண்டுக்கு பதில் மூன்று பன் ரொட்டிகளை என்னிடம் தருகிறார். அது
அவருடைய மே தின வாழ்த்து. உஷாராக இருக்கும் அவர், தன் உணர்ச்சிகளை வெளியிட ஏதாவது சாதாரணமான
காரியத்தை இவ்விதம் யோசித்துச் செய்கிறார். பன் ரொட்டிக்கு அடியில், என்னுடைய விரல்களை
அவருடைய விரல்கள் இலேசாகப் பிடித்து அழுத்துகின்றன. அதில் உணர்ச்சிகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
யாரும் பேசத் துணிவதில்லை. கண் ஜாடை காட்டுகிறார்களோ என்று பார்க்க, காவல்காரர்கள்
எங்களுடைய கண்களையும் விடாமல் கவனிக்கிறார்கள். ஆனால் ஊமைகளுக்கு தங்களுடைய விரல்களாலேயே
மிகவும் தெளிவாகப் பேசிக்கொள்ள முடியும்.
எங்கள்
ஜன்னலுக்குக் கீழே பெண் கைதிகள் உடற் பயிற்சிக்காக ஓடுகிறார்கள். மேஜை மேல் ஏறி நின்று,
கம்பிகளில் முகத்தை வைத்து நான் அவர்களைப் பார்க்கிறேன். அவர்கள் ஒருவேளை அண்ணாந்து
பார்க்கலாமல்லவா? அவர்கள் என்னை அண்ணாந்து பார்க்கிறார்கள் முஷ்டியை மடக்கி லால் சலாம்
செய்கிறார்கள். திரும்பவும் சலாம் செய்கிறார்கள். கீழே இன்றைக்கு மற்ற நாட்களைவிடக்
குதூகலமாக இருக்கிறது. வாஸ்தவத்திலேயே குதூகலமாக இருக்கிறது. இதை எல்லாம் காவல்காரர்கள்
பார்க்கவில்லை. ஒரு வேளை பார்க்க விரும்பவில்லையோ என்னவோ, அதுகூட மே தின அணிவகுப்பில்
ஒரு பகுதிதான்.
எங்கள்
உடற்பயிற்சிக்கு நேரம் வருகிறது. பயிற்சியை முன்னின்று நடத்தும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது.
இன்றைக்கு மே தினம். ஆகவே, நாம் ஏதாவது புதிய பயிற்சியை - காவல்காரர்கள் பார்த்தாலும்
பொருட்படுத்தாமல் - செய்ய வேண்டும். முதல் பயிற்சி கத்தியை ஓங்கி ஓங்கி அடிப்பது போன்ற
பாவனை. ஒன்று, இரண்டு, ஒன்று இரண்டு! அது முடிந்தவுடன் இரண்டாவது பயிற்சி. அறுவடை செய்வது
போன்ற பாவனை. சுத்தியும் அரிவாளும் - தோழர்கள் புரிந்துகொள்கிறார்கள். வரிசை முழுவதிலும்
ஒரு புன்னகை பரவுகிறது. எல்லோரும் உற்சாகத்துடன் பயிற்சியைச் செய்கிறார்கள். இதுதான்
நம் மே தின அணிவகுப்பு தோழர்களே. இந்த அபிநயம்தான் நம் மேதினப் பிரதிக்ஞை. நாம் உறுதியாக
இருப்போம். சாவை எதிர்நோக்கி நடப்பவர்களும் உறுதியாக இருப்போம்--இதுதான் அபிநயத்துக்கு
அர்த்தம்.
அறைக்குத்
திரும்புகிறோம். மணி ஒன்பது. கிரம்ளின் மணிக் கூண்டில் பத்து மணி அடிக்கிறது. செஞ்சதுக்கத்தில்
அணிவகுப்பு ஆரம்பமாகிறது. கவனியுங்கள். அவர்கள் சர்வதேசிய கீதம் பாடுகிறார்கள். உலகம்
முழுவதிலும் ஒலிக்கிறது அந்தக் கீதம். நம் அறையிலும் அது அது கம்பீரமாக ஒலிக்கட்டும்.
நாங்களும் அதைப் பாடுகிறோம். பிறகு ஒன்றன்பின் ஒன்றாய்ப் பல புரட்சிப் பாட்டுக்கள்
தொடருகின்றன. நாங்கள் தனிமையில் இருக்க விரும்பவில்லை - இருக்கவுமில்லை. நாம் உலகத்தில்
சுதந்திரத்துடன் பாடத் துணிவு கொள்கிறவர்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் யுத்த களத்தில்
சமர் புரிந்துகொண்டிருக்கிறார்கள். நம்மைப் போலவே ...
குளிர்ந்
துறைந்த சுவர்கள் கொண்ட
கொட்டிச்
சிறைக்குள்ளே
இருந்து
வாடுகின்ற என்றன்
இனிமையான
தோழர்காள்
இன்று எங்கள்
அணிவகுப்பில்
இல்லை
நீங்கள்; ஆயினும்
என்றும்
எங்களோடு நீங்கள்
இருக்கிறீர்
இருக்கிறீர்!
ஆம்,
நாங்கள் உங்கள் அணியில்தான் இருக்கிறோம்.
1943ஆம்
வருட மே தினத்தைச் சிறப்பான முறையில் முடிக்க, 267ஆம் நம்பர் அறையில் ஒரு காரியத்தை
மேற்கொண்டோம். ஆனால் அதுவே முடிவு அல்ல. பெண்கள் வார்டில் ஏவல் வேலை செய்கின்ற பெண்
கைதி, செஞ்சேனையின் வழிநடை பாட்டை சீட்டி அடித்துக்கொண்டே முற்றத்தில் நடக்கிறாள்.
பாண்டி ஜங்கா என்ற பாட்8டயும், மற்ற சோவியத் பாட்டுகளையும், பிறகு சீட்டியடிக்கிறாள்.
இவ்விதம் ஆண் கைதிகளுக்கு அதிக தைரியத்தை உண்டு பண்ணுகிறாள். அந்தந்த சமயம்; செக் போலீஸ்
உடுப்பு உடுத்தியுள்ள மனிதர் என் அறைக்கு வெளியே காவல் புரிகிறார். அவர்தான் எனக்கு
காகிதமும், பென்சிலும் கொண்டுவந்து இரகசியமாகக் கொடுத்தவர். நான் எழுதும்போது யாரும்
திடீரென்று வந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளவே அவர் காவல் நிற்கிறார். அவரும் சீட்டி
அடிக்கிறார். மேலும், என்னை இந்த எழுத்து வேலையில்
ஈடுபடுத்திய செக் காவல்காரரும் சீட்டியடிக்கிறார். இவர்தான் நான் எழுதும் உதிரிக் காகிதங்களை
ஒவ்வொன்றாக வெளியே திருட்டுத்தனமாகக் கொண்டுபோய், பிரசுரத்துக்கு உகந்த காலம்வரும்
வரையில் மறைத்து வைப்பவர். இந்தத் துண்டுக்காகிதத்துக்காக அவருடைய தலையே போய்விடும்.
இருந்தாலும், சிறைப்பட்டிருக்கும் இன்றைக்கும், சுதந்திரமாக இருக்கும் நாளைக்கும் இடையே
ஒரு காகிதப் பாலத்தைக் கட்டுவதில் இவர் தன் உயிருக்கும் துணிந்துவிட்டார். அவர்கள்
எல்லோரும் வெவ்வேறு உடுப்பிலும், வேலையிலும் இருந்தபோதிலும், எல்லோருடைய போராட்டமும்
ஒன்றேயாகும். அந்தப் போராட்டத்தில் எந்த இடத்தில் நிறுத்தப்பட்ட போதிலும், எத்தகைய
ஆயுதம் கையில் கிட்டியபோதிலும், அவர்கள் அதற்கு ஏற்றபடி விட்டுக்கொடுக்காமல் வீரதீரமாகப்
போராடுகிறார்கள். ஜீவ - மரணப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அவர்களைப் பார்க்கும்போது,
வாஸ்தவத்திலேயே அப்படிப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா என்று உங்களுக்குக்
கேட்கத் தோன்றும். ஏனெனில், அவர்களிடம் எவ்வித படாடோபங்களையும் உணர்ச்சி மனோபாவங்களையும்,
உங்களால் பார்க்க முடியாது.
புரட்சியின்
போர்வீரர்கள் மே தினத்தன்று அணிவகுத்துப் போவதை எத்தனையோ தடவை நீ பார்த்திருக்கிறாய்.
அது கன ஜோர். ஆனால் இந்தச் சேனையின் சக்தியைப் போராட்டத்தில் மட்டுமே பார்க்க முடியும்.
அது வெல்லற்கரியது என்று உணர முடியும். சாவு நீ நினைத்தபடி கனமானது அல்ல. வீரம் எந்த
ஜோதியினாலும் சூழப்பட்டிருக்கவில்லை. ஆனால் போராட்டம் கொடூரமானது. நீ நினைத்ததைவிடக்
கொடூரமானது. அதில் இறுதிவரை தாக்குப் பிடித்து நிற்பதற்கும், இறுதியில் வெற்றியடைவதற்கும்,
கணக்கிட முடியாத அளவுக்குப் பலம் வேண்டியிருக்கிறது. இந்தச் சேனை நடைபோட்டுப் போவதை
நீ பார்க்கிறார். ஆனால் இதன் பலம் எத்தகையதென்பதை எப்போதுமே சரியாக உணர்கிறாய் என்று
சொல்வதற்கில்லை. இது கொடுக்கும் அடிகள் ரொம்ப சாதாரணமானவை, முறையானவை.
இன்றைக்கு இதை நீ சரியாக உணர்கிறாய்.
1943ஆம் வருட மே தின அணிவகுப்பில் தெரிந்து கொள்கிறாய்.
…
No comments:
Post a Comment