Friday, November 23, 2018

சபரிமலை: ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் சூழ்ச்சித்திட்டங்களை முறியடித்திடுவோம்



 தலையங்கம்
சபரிமலைக் கோவிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் எந்த அளவிற்கு மோசமான முறையில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்பது நன்கு தோலுரித்துக்காட்டப்பட்டிருக்கின்றன. எப்படியாவது வன்முறையைத் தூண்டி, கோவில் வளாகத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்திட வேண்டும், அதற்கானப் பழியை கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் மீது போட வேண்டும் என்று சங் பரிவாரங்கள் திட்டங்கள் தீட்டுகின்றன. பாஜக மாநிலத் தலைவரான ஸ்ரீதரன் பிள்ளையே ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின்போது, தங்களுடைய போராட்டம் என்பது கோவிலுக்குள் செல்லும் பெண்களுக்கு எதிரானது அல்ல என்றும், ஆளும் கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு எதிரானதே என்றும் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்.
பாஜக-வின் சார்பாக அனைத்து மாநில பொதுச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றும் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது. அந்த சுற்றறிக்கையில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து தொண்டர்களை அணிதிரட்டிட வேண்டும் என்றும் இதற்கு தலைவர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சுற்றறிக்கையானது நவம்பர் 11 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதாவது கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்காகத் திறக்கப்படும் நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக இவ்வாறு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த சமயத்தில் திறக்கப்படும் கோவிலுக்கு பக்தர்கள் ஜனவரி மாதம் 20 வரை வருவார்கள்.
இதனைத்தொடர்ந்து பாஜக-வின் கண்ணூர் மாவட்டக்குழுவின் சார்பில் மற்றுமொரு சுற்றறிக்கை வெளியாகி இருக்கிறது. இதில் சபரிமலைக்கு வரும் டிசம்பர் 13 அன்றைய தினம் 200 பேரை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவ்வாறு வருபவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருந்திட வேண்டும் என்றும், அவர்கள் தங்களுடைய கைப்பைகளில் தேவையான பொருள்களை (materials) எடுத்து வர வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
செப்டம்பரில் வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப்பின்னர் கோவில் அக்டோபரிலும், நவம்பரிலும் இரு தடவைகள், சிறிது காலத்திற்காகத் திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சமயங்களில் ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் தங்களுடைய ஆட்களை அனுப்பி வைத்தன. அவற்றில் சில கிரிமினல்களும் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் மூலமாக கோவில் வளாகத்தினைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும், கோவிலுக்குப் பெண்கள் வந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்திடவும் திட்டமிட்டிருந்தனர். இவ்வாறு அவர்கள் அனுப்பிவைத்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கிரிமினல் பேர்வழிகள் கைது செய்யப்பட்டு, அவர்களை வீடியோ படங்கள் எடுத்து மக்கள் மத்தியில் அடையாளங்காட்டப்பட்டனர்.
தற்போது, கோவில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16 அன்று திறக்கப்பட்டபோது, கோவிலுக்கு வரும் பாதை முழுவதும் காவல்துறையினரின் பாதுகாப்புப் பணி பலப்படுத்தப்பட்டது. தடை உத்தரவுகளும் அமல்படுத்தப்பட்டன. இரவு நேரத்தில் கோவிலுக்குள் நுழைவதற்காக முயற்சிகள் மேற்கொண்ட ஆர்எஸ்எஸ்/பாஜக தலைவர்களும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டார்கள். இவ்வாறு, கோவில் வளாகத்திற்குள் ரகளை செய்திட அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முன்கூட்டியே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக கோவிலுக்கு வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எவ்விதச் சிரமமுமின்றி ஐயப்பனைத் தரிசித்துவிட்டுத் திரும்பியிருக்கின்றனர்.
நிர்வாகம் இவ்வாறு உறுதியான நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, சங் பரிவாரக் கும்பல் இப்போது ஊளையிடத் தொடங்கி இருக்கின்றன. நவம்பர் 17 அன்று மாநிலம் தழுவிய அளவில் ஹர்த்தால் அனுஷ்டித்திட அறைகூவல் விடுத்தன. இதன் காரணமாக வெளிமாநிலங்களிலிருந்து வந்த பக்தர்களுக்குச் சிரமங்கள் ஏற்பட்டன. பாஜக தலைவர்கள் அமித் ஷாவிலிருந்து, மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தனம் வரையிலும் மாநில அரசாங்கத்தைக் கண்டித்து வசைபாடினர். காவல்துறையினர் மீதும் நிர்வாகத்தினர் மீதும் பக்தர்களைத் துன்புறுத்துவதாகப் பொய்யாகக் குற்றஞ்சாட்டினர். ஆனால் உண்மையில் ரகளை செய்திட வந்த ஆர்எஸ்எஸ்/பாஜக ஆட்கள்தான் பொறுக்கி எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, கேரளாவில் இருக்கின்ற காங்கிரஸ் கட்சியினரும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டங்களைத் தற்போது நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்துத்துவா சக்திகளின் பின்னே இவர்கள் மிகவும் வெட்கங்கெட்டமுறையில் அணிவகுத்து நின்றுகொண்டு, மாநில அரசாங்கத்தைக் கண்டித்துக்கொண்டிருக்கின்றனர், பாஜகவின் கோரிக்கைகளை எதிரொலித்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு இவர்கள் செய்வதன்மூலம், பாஜகவின் அரசியல் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதற்கு உடந்தையாக இருந்து வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது ஜனநாயக முன்னணியும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மக்கள் மத்தியில் மிகவும் விரிவான அளவில் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. பாலின சமத்துவத்திற்கும், சமூக சீர்திருத்தத்திற்கும் இத்தீர்ப்பு ஆற்றியுள்ள முக்கியத்துவத்தையும், எனவே இத்தீர்ப்பினை அமல்படுத்துவது தொடர்பாக இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் மேற்கொண்ட நிலைப்பாட்டையும் அப்பிரச்சாரத்தின்போது மக்கள் மத்தியில் கொண்டு சென்றோம்.
மக்கள் மத்தியில் மதவெறித்தீயை உசுப்பிவிட்டு மக்களை மதரீதியாக பிளவுபடுத்த வேண்டும் என்கிற அகில இந்திய அளவிலான ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் சூழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் சபரிமலை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் போராட்டங்களை முடுக்கிவிட்டுள்ளன. மோடி அரசாங்கம் அனைத்து முனைகளிலும் மிகவும் பரிதாபகரமான முறையில் படுதோல்வி அடைந்ததன் காரணமாகவும், இன்னும் ஆறு மாத காலத்திற்குள் மக்களவைக்குத் தேர்தல் நடத்த வேண்டிய நிலையில் இருப்பதாலும், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மீண்டும் தங்களுடைய மதவெறி மற்றும் பிளவுவாத நடவடிக்கைகளைப் புதுப்பித்திட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளன. இவற்றில் மிகவும் மையமானது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதாகும்.
ராமர் கோவில் பிரச்சனை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அவசரம் காட்டாததாலும், அதனை அடுத்த ஆண்டு ஜனவரிக்குப்பின்பே விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம் என்று அது கூறிவிட்டதாலும், ஆர்எஸ்எஸ் தலைமையிலான பரிவாரங்கள்  அனைத்தும் ஊளையிடத் தொடங்கிவிட்டன. இவ்வாறு விசாரணையைத் தாமதப்படுத்துவதன் மூலமாக இந்து உணர்வுகள் புண்பட்டுவிட்டதாக கத்தத்துவங்கிவிட்டன. ஆர்எஸ்எஸ் தலைவரான மோகன் பகவத், விஜயதசமி அன்று ஆற்றிய உரையின்போது, ராமர் கோவில் கட்டுவதற்கு வசதி செய்து தரும் விதத்தில் அரசாங்கம் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். மற்றொரு ஆர்எஸ்எஸ் தலைவர், மற்றுமொரு ராமஜன்ம பூமி இயக்கம் துவங்கிட வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
அதன்பின்னர் ஆர்எஸ்எஸ் ஏற்பாட்டின்கீழ் தில்லியில் நவம்பர் 3 – 4 தேதிகளில் பல்வேறு சாமியார்களும், சாதுக்களும் அடங்கிய ‘சந்த் சமிதி’ என்னும் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள். இந்தக்கூட்டத்தில் இதுபோன்று சாமியார்கள் கூட்டத்தை அயோத்தி, நாக்பூர் மற்றும் பெங்களூரில் நவம்பர் 24 அன்று நடத்திட வேண்டும் என்று முடிவு செய்திருக்கின்றனர். பின்னர் தில்லியில் டிசம்பர் 9 அன்று சாதுக்களின் மாநாட்டை நடத்திடுவது என்றும் முடிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து டிசம்பர் 18க்குப்பின்னர் நாடு முழுதும் ஐநூறுக்கும் மேற்பட்ட கூட்டங்களை இவ்வாறு நடத்திட வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர்.
இந்தக் கோவிலுக்கான பிரச்சாரத்தின் பின்னே ஒளிந்திருக்கும் அரசியல் நிகழ்ச்சிநிரல் என்ன என்பதும் சாதுக்கள் மற்றும் சாமியார்களின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தினைக் கண்ணுற்றோமானால் நன்கு தெரிந்து கொள்ள முடியும். இந்தக் கூட்டத்தில் அவர்கள் நிறைவேற்றியுள்ள தீர்மானம் என்ன தெரியுமா? நம்முடைய வாழ்க்கை, கோவில்கள், மடங்கள், மகள்கள், சகோதரிகள், கலாச்சாரம் மற்றும் பாரம்பர்யத்தைப் பாதுகாத்திட மீளவும் மோடி அரசாங்கத்தை கொண்டுவர வேண்டும் என்பதாகும்.
எனவே அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்கிற பிரச்சாரத்தை இவர்கள் புதுப்பித்திருப்பதும், சபரிமலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இவர்கள் போராட்டம் நடத்துவதும் சங் பரிவாரக் கும்பல் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிற நிகழ்ச்சிநிரலின் இன்றியமையாத தொரு பகுதியேயாகும். எனவே, கேரளாவில் சபரிமலை கோவிலை வைத்து, ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மேற்கொண்டிருக்கிற தில்லுமுல்லு நடவடிக்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருப்பது என்பது, நாடு தழுவிய அளவில் இந்துத்துவா மதவெறி சக்திகளுக்கு எதிராக நடத்திடும் ஒட்டுமொத்த போராட்டத்தின் ஓர் அத்தியாவசியமான பகுதியேயாகும்.
(நவம்பர் 21, 2018)
தமிழில்: ச. வீரமணி      



No comments: