ராகேஷ் அஸ்தானா
[சாதாரணமான
நிலையிலிருந்த காவல்துறை அதிகாரி,
மோடியின்
நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உயர்ந்தது எப்படி?]
-அனுபமா கடகம்
ராகேஷ்
அஸ்தானா, பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரிய காவல்துறை அதிகாரிகளில்
மிகவும் உயந்த இடத்தைப் பிடித்திருக்கிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்
கூட்டணி மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின்னர், மிகவும் கேந்திரமான
அமைப்புகளிலும் மற்றும் நிறுவனங்களிலும் இந்துத்துவா வெறியுடன் செயல்படக்கூடிய
அதிகாரிகளை நியமித்திருப்பது இப்போது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். குஜராத்
மாநில ஐ.பி.எஸ். அதிகாரியான ராகேஷ் அஸ்தானா,
மத்தியில் மோடி பிரதமரான பின்னர், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின்
(சிபிஐ-இன்) உயர்பீடத்திற்கு இரண்டாவது அதிகாரியின் அந்தஸ்துக்குக்
கொண்டுவரப்பட்டார்.
அஸ்தானா
மீது மூன்று கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதான குற்றச்சாட்டு வந்ததைத் தொடர்ந்து, அவர்
விடுப்பில் செல்ல வேண்டும் என்று அவருக்கும் மேல் பணியாற்றி வரும் சிபிஐ இயக்குநர்
அலோக் வர்மா அவர்களால் கட்டாயப்படுத்தப்பட்டார். கார்ப்பரேட்டுகளுக்கு பல்வேறு
வழிகளிலும் தன் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து சலுகைகள் காட்டியிருக்கிறார்
என்று மேலும் பல குற்றச்சாட்டுகளும் அவருக்கு எதிராக உண்டு.
அஸ்தானா,
2016இல் வடோடராவில் இருக்கின்ற பிரம்மாண்டமான லெட்சுமி விலாஸ் அரண்மனையில் தன்னுடைய மகளின் திருமணத்தை
மிகவும் ஆடம்பரமான முறையில் நடத்தியது
தொடர்பாக, அமலாக்க இயக்குநரகத்தினர் (E.D.-Enforcement Directorate) சோதனைகள்
மேற்கொண்டிருக்கின்றனர். அப்போது அவர் மிகவும் படாடோபமாக செலவு செய்திருக்கின்ற
தோரணை என்பது அரசு ஊதியம் பெறும் ஒரு நபரால் செய்யக் கூடியது அல்ல என்று
வடோடராவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவிக்கின்றார்.
1990கள்
வரையிலுமே ராகேஷ் அஸ்தானா ஒரு சாதாரண காவல்துறை அதிகாரியாகத்தான் பணியாற்றி
வந்திருக்கிறார். குஜராத் மாநிலத்தில் காவல்துறைத் தலைவராக இருந்த, நேர்மையான
அதிகாரியான, ஆர்.பி. ஸ்ரீகுமார் அவர்களே, தான் பணியாற்றிய காலத்தில் தனக்குக் கீழ்
பணிபுரிந்த ராகேஷ் அஸ்தானா ஒரு மனசாட்சி உள்ள, “நேர்மையான”
அதிகாரியாகத்தான் பணிபுரிந்தார் என்று கூறுகிறார்.
திருப்புமுனை
1995இல்
மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்தின் சார்பில் வேற்றுப்பணி (on deputation) அடிப்படையில், பீகார்
மாநிலத்தில் தன்பாத் என்னுமிடத்திற்கு காவல்துறை கண்காணிப்பாளராக அனுப்பப்பட்டதானது,
அவர் உத்தியோகத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அஸ்தானாவிடம், அப்போதைய பீகார்
முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் அவர்களின் 950 கோடி ரூபாய் மாட்டுத் தீவன
ஊழல் சம்பந்தமான வழக்கு விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது. அஸ்தானா, லாலு பிரசாத்
யாதவ் மீதான புலன்விசாரணையில் எவ்விதக் குறையும் ஏற்படாத அளவிற்கு மிகவும்
திறமையுடன் செயல்பட்டதுதான், லாலுவிற்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தது என்று
ஆர்.பி. ஸ்ரீகுமார் கூறினார்.
இது,
அப்போது பாஜக தலைவராக இருந்த எல்.கே. அத்வானியின் கவனத்தைக் கவ்விப்பிடித்தது. அப்போது
பாஜக-விற்கு முதல் எதிரியாக விளங்கிய லாலுவை சிறைக்கு அனுப்பியதற்காக, அத்வானி,
பின்னர் அஸ்தானாவிற்கு விருது வழங்கினார்.
மாட்டுத்தீவன
ஊழல் விசாரணை முடிவுற்றபின்னர், அஸ்தானா மீளவும் குஜராத்திற்குத் திரும்பினார்.
2002 முஸ்லீம்கள் மீதான படுகொலைகள் தொடங்கவிருந்த சமயத்தில் அதற்குச் சற்று
முன்னர் அவர் குஜராத்திற்குத் திரும்பி வந்தார். கலவரங்களுக்குக் காரணமாக அமைந்த, சபர்மதி ரயில்
எரிப்பு தொடர்பாக புலன் விசாரணை மேற்கொள்ளுமாறு குஜராத் அரசாங்கம் அஸ்தானாவை
நியமித்தது. அஸ்தானாவை நியமித்ததில் அத்வானிக்கு ஒரு பங்கு உண்டு என நம்பப்படுகிறது.
“ஒருவேளை மாட்டுத்தீவன வழக்கில்
அஸ்தானா பெற்ற வெற்றியும், அவர் இந்துத்துவா சித்தாந்தத்துடன் மிகவும் நெருக்கமாக
இருந்ததும்தான், அவரை இப்பொறுப்பிற்குத் தேர்வு செய்திருக்கக்கூடும்,” என்று
ஆர்.பி. ஸ்ரீகுமார் தெரிவித்தார்.
“அதன்பின்னர்
குஜராத் மாநிலத்தின் ஆட்சியாளர்கள் ஆட்டுவித்தபடியெல்லாம் மாநில அதிகார
வர்க்கமும், காவல்துறை அதிகாரிகளும் ஆடியதுபோன்று அஸ்தானாவும் உடனடியாக ஆடத்
தொடங்கிவிட்டார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஏனெனில் ஒரு நல்ல அதிகாரியாக
நான் அவரை அறிந்திருந்தேன். இந்தமாதிரி அவர் செல்வார் என்று நான் நினைத்ததே இல்லை,” என்று ஆர்.பி. ஸ்ரீகுமார்
கூறினார்.
கோத்ரா
புலன்விசாரணையை எந்தவிதத்தில் கொண்டுசென்றால் குஜராத்தில் ஆட்சி செய்த மோடி
அரசாங்கத்திற்குப் பிடிக்கும் என்பதை நன்கு உணர்ந்திருந்த அஸ்தானா, அதற்கேற்ப
அதனைக் கொண்டுசென்றதுதான், அஸ்தானாவை மோடிக்கு மிகவும் நெருக்கமாக மாற்றியது. ஆரம்பத்தில்
ரயில் எரிப்பு சம்பவமானது, ரயிலில் அயோத்தி சென்றுவிட்டு, திரும்பி வந்த கர
சேவகர்களின் அட்டகாசத்தால் உள்ளூரிலிருந்த சிறு வியாபாரிகள் அவர்கள் வந்த பெட்டியை
எரித்தனர் என்று நம்பப்பட்டது. ஆனால் அஸ்தானா, இந்த விபத்தை முன்பே நன்கு
திட்டமிட்ட, தாக்குதல் என்று சாட்சியங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்த
விளக்கமானது மோடி அரசாங்கத்திற்கு வெகுவாகப் பிடித்துப்போய்விட்டது. உச்சநீதிமன்ற
நீதிபதி உமேஷ் பானர்ஜி அவர்கள் சபர்மதி ரயில் எரிப்பு சம்பவம் ஒரு விபத்து என்று
கூறியிருந்ததை அஸ்தானாவின் முடிவு மாற்றியது. எனவே மோடி, உச்சநீதிமன்றத்தின்
தீர்ப்பைப் புறந்தள்ளிவிட்டு, அஸ்தானாவின் முடிவினை ஏற்றுக்கொண்டு செயல்படத்
துவங்கிவிட்டார். அதன்பின்னர் சுமார் 100 முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டார்கள்.
காவல் அடைப்பிலிருந்த காலத்திலேயே அவர்களில் சிலர் இறந்துவிட்டார்கள். 2011இல்
குஜராத் உயர்நீதிமன்றம் இவர்களில் 63 பேரை விடுதலை செய்தது. 20 பேருக்கு ஆயுள்
தண்டனை விதித்தது. தூக்கு தண்டனைவிதிக்கப்பட்ட 11 பேரின் தண்டனை பின்னர் ஆயுள்
தண்டனையாக மாற்றப்பட்டது.
சபர்மதி
ரயில் எரிப்பு சம்பவம் ஒரு விபத்து என்று வழக்குரைஞர்களும், சமூக ஆர்வலர்களும்
சாட்சியங்களை அளித்துள்ள போதிலும், அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக,
அஸ்தானா கூறியதுபோன்று அது சதித்திட்டம் என்றே முடிவு செய்துள்ளது. அஸ்தானாவின்
புலன்விசாரணையின்படி சர்வதேச அளவிலான பயங்கரவாதிகளும், உள்ளூரில் இருந்த
சிறுபான்மை ஸ்தாபனங்களின் பயங்கரவாதிகளும் சேர்ந்து திட்டமிட்டு மேற்கொண்ட சதிவேலையாகும்.
ஆனால் அவ்வாறு திட்டமிட்டவர்கள் யார், அவர்கள் பெயர் என்ன என்று இதுவரை
வெளிவரவில்லை.
ஒரு
வழக்குரைஞர், “அஸ்தானா, தனிப்பட்டமுறையில், கோத்ரா புலன்விசாரணையை அரசின் நிகழ்ச்சிநிரலுக்கு
ஏற்ப மாற்றியமைத்தார். அவர், தன்னை ஆட்சியாளர்களின் நம்பிக்கைக்குரிய இந்துத்துவா
நபர் என்று மெய்ப்பித்துள்ளார். அவர்களுக்கு என்ன தேவையே அதையெல்லாம் அவர் செய்வார்.
அதற்காகத் தனக்கு உரிய விருதுகள் வழங்கப்படும் என்பதையும் அவர் அறிவார்,” என்று
கூறினார்.
கோத்ரா
புலன்விசாரணைக்குப்பின்னர், அஸ்தானா வடோடரா மற்றும் சூரத்திற்கு மாற்றப் பட்டார்.
வடோடராவில் உள்ள ஒரு வர்த்தகர், “வடோடரா வந்தபின்னர்
அஸ்தானா ஓர் உயர்மட்ட போலீஸ் அதிகாரி என்கிற நிலையிலிருந்து, மிக விரைவாக வடோடரா
பணக்காரர்களுக்கு மிகவும் வேண்டிய போலீஸ் அதிகாரியாக மாறினார். மிகப்பெரிய
பணக்காரர்களாக விளங்கிய ஸ்டெர்லிங் பயோடெக் என்னும் மருந்துக் கம்பெனி
வைத்திருக்கும் சண்டேசரா சகோதரர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகத் தொடங்கினார். சண்டேசரா
குழுமம், 2017இல் ஐயாயிரம் கோடி ரூபாய் அளவுக்கான வங்கி மற்றும் பண மோசடி
வழக்குகளில் மாட்டிக்கொண்டது. இதன்பின்னர் இந்தியாவிலிருந்து துபாய்க்கு சேடன்
மற்றும் நிதின் சண்டேசரா தப்பி ஓடிவிட்டார்கள்.
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, அஸ்தானாவிற்கு எதிராக அளித்துள்ள
குற்றச்சாட்டுகளில் ஒன்று, சண்டேசரா கம்பெனியை ரெயிடு செய்த சமயத்தில் அங்கிருந்து
கைப்பற்றப்பட்ட நாட்குறிப்புகளில் “ஆர்ஏ” (“RA”)
என்று சுருக்கொப்பங்கள் இருந்தன என்பதும் ஒன்றாகும். சண்டேசரா சகோதரர்களின்
செயல்முறைகளுக்கு அஸ்தானா உதவிவந்தார் என்பது குற்றச்சாட்டாகும்.
குஜராத்தில்
நடைபெற்ற வகுப்புக் கலவரங்கள் மற்றும் என்கவுண்டர் கொலைகள் மட்டுமல்லாது
உயர்புள்ளிகள் சம்பந்தப்பட்ட கிரிமினல் வழக்குகளிலும் அஸ்தானா மிகவும் நெருக்கமாக
சம்பந்தப்பட்டிருக்கிறார். முதல்வர் மோடி மக்களின் நலன்களுக்காக பாடுபடுவதாகக்
காட்டநினைக்கும்போதெல்லாம் அவர் அஸ்தானாவைப் பயன்படுத்திக் கொள்வார். தன்னுடைய
ரகசிய நிகழ்ச்சிநிரலை செயல்படுத்த விரும்பும்போதெல்லாம், அஸ்தானா, மோடியின்
வலதுகரமாகச் செயல்பட்டார்.
பயங்கரவாத
வழக்குகள்
2008
ஜூலையில் அகமதாபாத்தில் 21 குண்டுகள் வெடித்த சமயத்தில், மாநிலமே குலுங்கியது. மோடி,
தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருப்பதாகக்
காட்டிக்கொள்ள விரும்பினார். அஸ்தானா வரவழைக்கப்பட்டார். மிகவிரைவாக அவர்,
நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள், இந்திய முஜாஹிதீன், லஷ்கர்-இ-தொய்பா போன்ற சர்வதேச
பயங்கரவாத அமைப்புகளின் உதவியுடன் மேற்கொண்டவைகளாகும் என்று முடிவுக்கு வந்தார்.
இச்சம்பவங்களையொட்டி, இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தினைச் சேர்ந்த மாணவர் ஒருவர்
உட்பட உள்ளூர் முஸ்லீம் தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டார்கள்.
எதிர்க்கட்சியினரும் சமூக ஆர்வலர்களும்,
புலன் விசாரணை மேற்கொண்டவர்கள் தங்களுக்குச் சாதகமாக மிக எளிதாக தாங்கள்
சந்தேகிக்கும் நபர்களைப் பிடித்துச்சென்றுள்ளனர் என்று விமர்சித்தார்கள். பயங்கரவாத வழக்குகள் பலவற்றில், உண்மை விவரங்கள்
எப்போதுமே வெளிவருவதில்லை. அஸ்தானா, முதல்வர் விரும்பும் வகையில் முடிவுகளை
உற்பத்தி செய்திடுவார் என்று ஒரு சமூக ஆர்வலர் கூறினார்.
பாலியல்
புகழ் சாமியாரான ஆசாராம் பாபு, மோடியின் அன்பையும் ஆதரவையும் பெற்றிருந்தார்.
ஆனால், ஆசாராம் பாபுவிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் பூதாகாரமாக
வெளிவந்தபின்னர், மோடி தன்னை குருவின் தொடர்பிலிருந்து கத்தரித்துக் கொண்டார்.
ஆசாராமையும் அவர் மகன் நாராயண் சாய் (இவனும் பாலியல் வன்புணர்வுக் குற்றம்
இழைத்தவன்தான்) என்பவனையும் சிறைக்குள் வைக்கப்படுவதை அஸ்தானா உத்தரவாதப்
படுத்தினார். அதேபோன்று, பட்டேல்
சமூகத்தைச் சேர்ந்த ஹர்திக் பட்டேல் மோடிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த சமயத்தில், அஸ்தானா,
ஹர்திக் பட்டேல் வழக்கிற்குத் தலைமைதாங்கி,
தேசத்துரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தி அவரை பல மாதங்கள் சிறையில் அடைத்து
வைத்தார்.
மோடி
பிரதமரானபோது, அஸ்தானா சிபிஐ-க்கு இடைக்காலத் தலைவராக 2016 டிசம்பரிலிருந்து 2017
ஜனவரி வரை தேர்வு செய்யப்பட்டார். எதிர்க்கட்சியினர் இது தொடர்பாக ரகளை எதுவும்
செய்யாமலிருந்திருந்தால், அவர் இயக்குநராகவே மாற்றப்பட்டிருக்கலாம். பின்னர் அஸ்தானா துணை இயக்குநராக
மாற்றப்பட்டார்.
அஸ்தானா,
சிபிஐ-க்கு மீண்டும் திரும்பிவந்தபின், அஸ்தானா அகஸ்டா-வெஸ்ட்லாண்ட் பாதுகாப்பு
வழக்கு, இமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ரா சிங் மீதான லஞ்சக் குற்றச்சாட்டுகள்
மற்றும் விஜய் மல்லையா மீதான மோசடி வழக்கு ஆகியவற்றைப் புலனாய்வு செய்தார்.
அவருடைய திறமைகள் காரணமாக, அவர் மோடியின் வலதுகரமாக மாறினார். வர்மாவிற்கும்
அஸ்தானாவிற்கும் இடையேயான பிளவிற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். அரசின்
சார்பில் முக்கியமான முடிவுகள் மேற்கொள்ளப்படும் சமயங்கள் பலவற்றின் போது, வர்மா
ஓரங்கட்டப்பட்டார் அல்லது அவரை அழைப்பதே
இல்லை.
குஜராத்
மாநிலத்தில் நடைபெற்ற கொடூரமான கொலைகள் பலவற்றிற்காக 32 காவல்துறை அதிகாரிகள்
(இவற்றில் ஐபிஎஸ் அதிகாரிகளும் உண்டு) கைது செய்யப்பட்டனர். என்கவுண்டர் புகழ்
டி.ஜி. வன்சரா உட்படா பல காவல்துறையினர் சிறிது காலம் சிறையிலும் அடைத்து
வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள்
அனைவருமே பின்னர் விடுவிக்கப்பட்டனர், மீளவும் பணியில் அமர்த்தப்பட்டனர்,
சிலருக்குப் பதவி உயர்வும் அளிக்கப்பட்டது. மோடியும், அமித்ஷாவும் குஜராத் மாநில
உள்துறைக்குச் சிறிது காலம் பொறுப்பு வகித்தனர். அவர்கள் தங்களுக்கு உதவி செய்த
காவல்துறையினரைத் தண்டனையிலிருந்து காப்பாற்றி, பதவி உயர்வும் அளித்தனர்.
அஸ்தானா
தற்போது ஒரு தற்காலிகமான சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறார். இத்தகைய சங்கடமான நிலைமையிலிருந்து
அநேகமாக அவர் வெற்றிகரமானமுறையில் வெளிவந்திடலாம். அல்லது, மோடி-அமித்ஷா
இரட்டையரால் காப்பாற்றப்பட முடியாத நபராகக்கூட மாறலாம். பொறுத்திருந்து
பார்ப்போம்.
(நன்றி: ப்ரண்ட்லைன்)
(தமிழில்: ச.வீரமணி)
No comments:
Post a Comment