Thursday, December 6, 2018

பாஜகவைத் தோற்கடிப்பதற்கு உழைக்கும் மக்கள் அணிதிரள்வது அதிகரித்துக்கொண்டிருக்கிறதுமோடி அரசாங்கத்தின் நவீன தாராளமயக் கொள்கைகளால் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள விவசாயிகளும் அவர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்களும் தில்லியில் நவம்பர் 29-30 தேதிகளில் நடத்திய பேரணியில் விவசாயிகள் மிகவும் வலுவானமுறையில் அணிதிரண்டிருந்தார்கள்.
செப்டம்பர் 5 அன்று நடைபெற்ற தொழிலாளர்கள்-விவசாயிகள் பேரணிக்குப் பின்னர் நடைபெற்ற இப்பேரணியானது தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை மிகவும் கூர்மையாக உயர்த்திப் பிடித்தது. இப்பேரணியில் நாட்டிலுள்ள 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து வந்ததென்பது உழைக்கும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள ஒற்றுமையுணர்வை நன்கு வெளிப்படுத்தி இருக்கிறது.
இவ்வாறு இந்த இரண்டு பேரணிகளிலும் உழைக்கும் மக்கள் பெருவாரியாக அணிதிரண்டு வந்திருக்கின்றனர். இத்துடன் நாடு முழுதும் எண்ணற்ற போராட்டங்களும் இயக்கங்களும் உழைக்கும் மக்களால் நடத்தப்பட்டும் இருக்கின்றன. ஆனால் அதே சமயத்தில் இதற்கு நேர் முரணாக, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்சனை தொடர்பாக மதவெறி அடிப்படையில் அணிதிரட்டப்படுவதும் நடந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் அயோத்தியில் தாவாவுக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டும் கோரிக்கையை மீளவும் புதுப்பித்திருக்கின்றன. உச்சநீதிமன்றத்தை ஓரங்கட்டிவிட்டு ராமர் கோவிலைக் கட்டுவதற்கு வசதிசெய்துதரும் விதத்தில் ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா அமைப்புகள் கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கின்றன.
விவசாயிகளின் பேரணி நடைபெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு,   விசுவ இந்து பரிசத்தின் தரம் சபா அயோத்தியில் நடைபெற்றது. இதில் அவசரச் சட்டம்  கோரிக்கை தூக்கிப்பிடிக்கப்பட்டது. இதேபோன்ற கூட்டங்கள் நாக்பூரிலும், பெங்களூரிலும் நடைபெற்றுள்ளன. எனினும், அயோத்தியில் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வரவில்லை. எனவே வரும் டிசம்பர் 9 அன்று – நாடாளுமன்றம் துவங்க இருக்கக்கூடிய நிலையில் – மோடி அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தத்தை அளிப்பதற்காக, ஆர்எஸ்எஸ் மூலமாக சாதுக்களின் பேரணி ஒன்றை நடத்திடத் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், கோவில் கட்டும் கோரிக்கையானது ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் பின்னணியில் எழுப்பப்பட்டுள்ளது. சட்டீஸ்கார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மக்களிடையே ஆட்சியிலுள்ளவர்களுக்கு எதிரான உணர்வு கடுமையாக உள்ள நிலையை (anti-incumbency trends) பாஜக எதிர்கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் மக்களின் கவனம் விவசாயிகளின் நெருக்கடி நிலை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய இரண்டின் மீதும் முழுமையாக இருந்து வருகிறது.   பாஜக ஆளும் இம்மாநிலங்களில் ஊழல் மற்றும் அலங்கோல ஆட்சி காரணமாக மக்களிடையே அதிருப்தி நிலவுவது நன்கு தெரிகிறது.
இவ்வாறு தங்களுக்கு எதிராக  அதிருப்தி உள்ள நிலைமையில், பாஜகவினர் மீண்டும் தங்களுடைய மதவெறி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கின்றனர். எதிர்க்கட்சியினரைப் பார்த்து தேச விரோதிகள் என்று முத்திரைகுத்தும் முயற்சிகளில் இறங்கி இருக்கின்றனர். நரேந்திர மோடி தலைமையில் இதனைச் செய்திடும் இவர்களுடன் அமித்ஷாவும் ஆதித்யநாத்தும் கைகோர்த்துள்ளார்கள். தெலங்கானாவில், பாஜக ஒரு சிறிய கட்சியாக இருந்த போதிலும்கூட, அங்கேயும் தங்கள் மதவெறியாட்டத்தை இவர்கள் கைவிடவில்லை. அங்கே தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்றுள்ள ஆதித்யநாத், தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஹைதராபாத்திலிருந்து அசாதுதின் ஓவைசி ஓட வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார். மேலும் தன்னுடைய பெயர் மாற்றும் குதியாட்டத்தை அங்கேயும் அரங்கேற்றியிருக்கிறார். ஹைதராபாத் ‘பாக்யாநகர்’ என்று மாற்றப்படும் என்று கூறியிருக்கிறார்.
முஸ்லீம்களுக்கு எதிரான இவர்களது வாய்ச்சவடால்களும், ராமர் கோவில் கட்டுவோம் என்கிற இவர்களது கூப்பாடுகளும் மூன்று மாநிலங்களில் இவர்களது அலங்கோல ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் எழுந்துள்ள கோபத்தைத் தணிப்பதற்கு எவ்விதத்திலும் உதவப் போவதில்லை. அல்லது தெலங்கானாவில் புதிதாக வாக்காளர்கள் எவரையும் கொண்டுவரப் போவதுமில்லை.
சட்டீஸ்கார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சில அம்சங்களில் இந்துத்துவா வெறியர்களின் பிரச்சாரங்களையே எதிரொலித்து வருகிறது.  பாஜகவை விட நாங்கள்தான் சுத்தமான இந்துக்கள் கட்சி என்று காட்டிக்கொள்ள முயற்சிக்கிறது. இதன்காரணமாகத்தான் திடீரென்று ராகுல் காந்தி இம்மூன்ற மாநிலங்களில் உள்ள கோவில்களுக்குச் சென்றுள்ளார். மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பசுக் கூடங்கள் (gaushalas) அமைத்திடுவோம் என்றும், மாட்டு மூத்திரத்தை வர்த்தகரீதியாக விற்பனை செய்திடுவோம் என்றும், ராமன் கானகத்திற்குச் சென்ற பாதையை ஏற்படுத்துவோம் என்றெல்லாம் வாக்குறுதி  அளிக்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வர்ணாசிரம தர்மங்களைப் (vedic values) பிரச்சாரம் செய்வதற்காக, ஒரு கல்வி வாரியம் அமைக்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது பெஹ்லுகான் கொல்லப்பட்டது போன்று முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு எதிராகப் பேசுவதற்கு மிகவுமே தயக்கம் காட்டி இருக்கிறார்கள்.
இவ்வாறு மென்மையான இந்துத்துவா உத்திகளால் பாஜகவைத் தோற்கடித்திட முடியும் என்று காங்கிரஸ் கருதுமானால், அது தவறு செய்கிறது. இம்மாநிலங்களில் பாஜக மண்ணைக் கவ்வப்போகிறது என்றால் அதற்குக் காரணம், வேலையின்மை, விவசாய நெருக்கடி, அடிப்படை வசதிகளின்மை மற்றும் ஊழல் ஆகிய பிரச்சனைகளின் அடிப்படையில்தான் மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.
உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்காகவும், நிலம், விவசாயிகளுக்கான நிவாரணம், ஊதியங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து அணிதிரண்டு வருவதன் காரணமாகத்தான் பாஜக மற்றும் மோடி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணியில், ‘அயோத்தி வேண்டாம், கடன் நிவாரணம் வேண்டும்’ என்கிற முழக்கம் கேட்டதைப் பார்த்தோம். விவசாயிகளின் பேரணியைத் தொடர்ந்து, மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க நாடு முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தினர், வரும் 2019 ஜனவரி 8, 9 தேதிகளில் பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ள விருக்கின்றனர். இப்போராட்ட அலைகள் அனைத்தும் ஒரு மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக மாற்றையே கோருகின்றன. அதன்மூலமாக மட்டுமே ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் சூழ்ச்சித் திட்டங்களை முறியடித்திட முடியும்.     
(நவம்பர் 5, 2018)
(தமிழில்: ச. வீரமணி)

No comments: