கடந்த மூன்று வாரங்களாக
மைத்திரி ஸ்ரீசேனா மேற்கொண்டுவரும் தன்னிச்சையான நடவடிக்கைகளின் காரணமாக ஓர்
அரசியல் மற்றும் அரசமைப்புச்சட்ட நெருக்கடிக்குள் இலங்கை சிக்கிக்
கொண்டிருக்கிறது. ஜனாதிபதி, பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயை டிஸ்மிஸ் செய்திருப்பதுடன், முந்தைய எதிராளியான மகிந்தா ராஜபக்சேயைப்
பிரதமராக அக்டோபர் 26 அன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.
ஸ்ரீசேனா, ஸ்ரீலங்கா விடுதலைக்
கட்சியைச் சேர்ந்தவர் என்பதையும்,
ராஜபக்சேயிடமிருந்து தன்னை விலக்கிக்கொண்டிருந்தவர் என்பதையும்
நினைவுகூர்ந்திடவேண்டும். 2015 ஜனவரியில் நடைபெற்ற தேர்தலின்போது
விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு,
ராஜபக்சேயைத் தோற்கடித்திருந்தார். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா
விடுதலைக் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன.
தற்போது ஸ்ரீசேனாவிற்கும்,
விக்ரமசிங்கேயிற்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசல் தற்போதைய நெருக்கடிக்கு இட்டுச்
சென்றிருக்கிறது. ராஜபக்சே ஆதரவுடன் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா மக்கள் கட்சி
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரிய அளவில் வெற்றியை
ஈட்டியது. இது ஆளும் கூட்டணியில் நெருக்கடியை ஆழப்படுத்தியது. நாட்டில் பொருளாதார
நெருக்கடி ஆழமாகியிருந்ததன் விளைவாக மக்கள் மத்தியில் அதிகரித்து வந்த அதிருப்தியே
இவ்வாறு கூட்டணியில் இருந்த இரு பெரிய கட்சிகளுக்கு இடையேயான விரிசலுக்கு முக்கிய
காரணமாகும்.
பிரதமர் விக்ரமசிங்கேயை
நீக்கியது அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமானதாகும். ஸ்ரீசேனா – விக்ரமசிங்கே
கூட்டணியால் கொண்டுவரப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 19ஆவது திருத்தம், ஜனாதிபதியின்
அதிகாரங்களில் சிலவற்றிற்குக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. புதிய ஷரத்துக்களின்படி,
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டாலன்றி, பிரதமரை நீக்கிட
முடியாது.
ஸ்ரீசேனா, ராஜபக்சேயை
பிரதமராக்குவதற்காக பல்வேறு தில்லுமுல்லு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் குதிரை பேரத்தின் மூலமாக எப்படியாவது பெரும்பான்மையைப் பெற்றுவிட
வேண்டும் என்பதற்காக நவம்பர் 16 வரை நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தார். நாடாளுமன்றம்
கூடிய சமயத்தில், ராஜபக்சேயால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. தோல்வியைத்
தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஸ்ரீசேனா நாடாளுமன்றத்தைத் தன்னிச்சையாகக்
கலைத்து, ஜனவரி 5 அன்று தேர்தல்கள் என்று அறிவித்தார்.
மீண்டும்,
அரசமைப்புச்சட்டத்தின் 19ஆவது திருத்தத்தின்கீழ், ஜனாதிபதி, நாடாளுமன்றத்தை அதன்
முதல் நான்கரை ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் கலைத்திட முடியாது. நாடாளுமன்றும்
அவ்வாறு அதன் முழுமையான காலத்திற்கு முன்பு கலைக்கப்பட வேண்டும் என்று கருதினால்,
அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களித்திட
வேண்டும். தற்போதுள்ள நாடாளுமன்றத்தின்
காலம் இதுவரை மூன்று ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்திருப்பதால், இந்த சமயத்தில்
இதனைக் கலைத்திட ஜனாதிபதி முடிவு செய்திருப்பது அரசைமைப்புச்சட்டத்திற்கு
விரோதமானதாகும்.
நாடாளுமன்றக் கலைப்புக்கு
எதிராக உச்சநீதிமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்டணி
மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன போன்ற இதர எதிர்க்கட்சிகளும் மனுச் செய்தன. இந்த மனு
மீது தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வாயம் டிசம்பர் 7
வரையிலும் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்குத் தடை விதித்தது. மேலும் ஜனவரி 5 அன்று
தேர்தல் நடத்துவதற்கான தயாரிப்புப் பணிகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்கவேண்டும்
என்றும் கட்டளை பிறப்பித்திருக்கிறது.‘
நாடாளுமன்றத்தின் சபாநாயகர்
அவையை அடுத்த நாளே, அதாவது நவம்பர் 14 அன்று கூட்டினார். அன்று ராஜபக்சேவிற்கு
எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு பெரும்பான்மை
உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. ராஜபக்சேயின் ஆதரவாளர்கள், வாக்கெடுப்பு
நடந்த விதத்தையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார்கள். நம்பிக்கையில்லாத் தீர்மானம்
வெற்றி பெற்றதாக ஜனாதிபதி ஸ்ரீசேனா ஏற்றுக்கொள்ளாததால் நெருக்கடி தொடர்கிறது.
இந்தியாவில் இருக்கின்ற பிரதான
ஊடகங்கள், இலங்கைப் பிரச்சனையானது, சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய
நாடுகளுக்கிடையிலான போட்டியின் வெளிப்பாடு என்று கூறுகின்றன. ராஜபக்சே, ஒரு சீன
ஆதரவாளராக சித்தரிக்கப்படுகிறார். விக்ரமசிங்கே மேற்கத்திய ஆதரவு மற்றும் இந்திய
ஆதரவாளராக பார்க்கப்படுகிறார். எனினும், தற்போதைய நெருக்கடிக்கு, பிரதானமாக அந்நிய
நாடுகளின் தலையீடு காரணம் என்று கூறிட முடியாது. இதற்குப் பிரதான காரணம்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி 2015இல் கூறியபடி
ஜனநாயக நிலைமாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதில் தோல்விகண்டதும், இலங்கையில்
ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து அதனை மீட்டெடுக்கக்கூடிய விதத்தில்
மாற்றுக் கொள்கைகளை உருவாக்குவதில் தோல்வியடைந்ததுமே இதற்குப் பிரதான காரணமாகும்.
கடந்த பல ஆண்டுகளாகப்
பின்பற்றி வந்த நவீன தாராளமயக் கொள்கைகள்தான் பொருளாதார நெருக்கடி விளைந்ததற்கே
காரணமாகும். விக்ரமசிங்கே அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியின் சுதந்திர சந்தைக்
கொள்கைகளே நெருக்கடியை உக்கிரப்படுத்தின. 2017ஆம் ஆண்டில் வளர்ச்சி 4
சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. மலைபோல் உயர்ந்துள்ள கடன் மற்றும் ஏற்றுமதி –
இறக்குமதி சமநிலை நெருக்கடி (balance of payment crisis) ஆகியவை அரசாங்கத்தை
சர்வதேச நிதியத்திடம் ஒரு மூன்றாண்டு காலத்திற்கு 1.5 பில்லியன் டாலர்கள் பிணை
எடுப்பு தொகுப்பு (bailout package) பெற நிர்ப்பந்தித்தது. இதற்க சர்வ தேச நிதியம்
கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
அத்தியாவசியப் பொருள்களின்
மீதான மானியங்கள் வெட்டு, அரசுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தல்,
பொதுக் கல்வி முறையையும் தனியாரிடம் தாரைவார்த்துக் கொண்டிருத்தல், பணவீக்கம்
போன்ற அனைத்தும் மக்களின் வாழ்நிலைமைகளைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. சமீப
காலங்களில் தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் உட்பட உழைக்கும் மக்களில் பல்வேறு
பிரிவினரின் போராட்டங்களையும் பார்க்க முடிந்தது.
தமிழ் பேசும் வட மாகாணத்திற்கு
இயல்புநிலையை மீளவும் கொண்டுவருவதற்காக அரசமைப்புச்சட்ட சீர்திருத்தங்களை நோக்கி
நகர்வதற்காக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதிக்கும்
பிரதமருக்கும் இடையே விரிசல் அதிகரித்துக்கொண்டே வந்ததால் இதில் முன்னேற்றம்
ஏற்படாமல் ஸ்தம்பிப்பு நிலை ஏற்பட்டது. ராஜபக்சே திரும்பவும் அதிகாரத்திற்கு
வருவதைப் பொறுத்தவரையில் தமிழ் அமைப்புகள் மத்தியில் நியாயமானமுறையில் ஐயுறவுகள்
ஏற்பட்டிருக்கின்றன.
ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்
ஏற்பட்டிருப்பதற்கான ஆணிவேர் என்பது 1978இல் நிர்வாக அதிகாரங்களை ஜனாதிபதிக்கு
அளித்து அங்கே கொண்டுவரப்பட்ட ஜனாதிபதி ஆட்சிமுறை (executive presidency)யாகும்.
தற்போதுள்ள அரசாங்கம் இதனைக் கைவிடுவதாக உறுதிமொழி அளித்திருந்தது. எனினும்,
அரசமைப்புச்சட்டத்தின் 19ஆவது திருத்தமானது ஜனாதிபதியின் அதிகாரங்களில் சிலவற்றை
மட்டுமே கட்டுப்படுத்தி இருக்கிறது. ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் அதீதமாக இருந்தது
போன்று, எதேச்சாதிகாரம் நோக்கிச் செல்வதற்கு இருந்து வரும் அச்சுறுத்தல் இப்போதும் தொடர்கிறது. தற்போது ஜனாதிபதி
ஸ்ரீசேனா எடுத்திருக்கும் நடவடிக்கைகள் அவற்றிற்குச் சாட்சியமாக
அமைந்திருக்கின்றன.
இலங்கையில் தற்போது
ஏற்பட்டுள்ள நெருக்கடி எந்தவிதத்தில் தீர்வுகாணப்பட்டாலும், ஆளும் வர்க்கங்களின்
தற்போதைய கொள்கைகள் கைவிடாப்படாதவரையில், இலங்கையானது ஜனநாயகம், பொருளாதாரம்
மற்றும் சமூக நீதிக்கான பாதையில் முன்னேறுவது சாத்தியமில்லை.
(நவம்பர் 14, 2018)
(தமிழில்: ச.வீரமணி)
No comments:
Post a Comment