Thursday, May 17, 2018

தீண்டாமை - தந்தை பெரியார்



தீண்டாமை
இந்தியாவில் இந்து முஸ்லீம் ஒற்றுமையைவிட சுயராஜியத்தை விட - பூரண சுயேச்சையை விட - காந்தி - இர்வின் ஒப்பந்தத்தைவிட - தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டியது முக்கியமானது என்கின்ற விஷயம் கடுகளவு அறிவும் மனிதத் தன்மையும் உடையவர்களாகிய எவரும் ஒப்புக்கொள்ளக்கூடியதாகும். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான விஷயம் இப்போது அழுவாரற்ற பிணமாய், கேள்வி கேட்பாடு அற்று அலக்ஷியப் படுத்தப்பட்டு கிடக்கின்றது. அதுமாத்திரமல்லாமல் அவர்கள் அதாவது தீண்டப்படாதார் என்பவர்கள் தாங்களாகவே ஏதாவது ஒரு முயற்சி செய்து தங்கள் இழிவுகளையும் கஷ்டங்களையும் போக்கிக்கொள்ள முயற்சிப்ப தையும் இந்தப்பாழும் சுயராஜியமும் பூரண சுயேச்சையும் என்கின்ற வெறும் வாய் வார்த்தைகள் தோன்றி பழையவைகளையே புலப்படுத்திக் கொள்ளவும் புதியவைகளை தலைகாட்டாமல் இருக்கவும் முயற்சி செய்வதன் மூலம் தடுத்து அழுத்தி வைக்கப்பட்டும் வருகின்றது. இந்த நெறுக்கடியான சமயத் தில் இந்தமுக்கியமான விஷயம் (தீண்டாமைக் கொடுமை விஷயம்) இக் கதியானால் இனி எப்போது தலையெடுக்க முடியும் என்பது நமக்கு விளங்க வில்லை.
இந்திய சுயராஜியத்திற்கு இன்று இந்து முஸ்லீம் விஷயம் தடை யாய் இருக்கின்றது என்று தேசீயக்காரர்கள் நீலிக்கண்ணீர்விட செய்தது எது என்று பார்த்தால் முஸ்லீம் சமூகத்தாருடைய கிளர்ச்சியும் அவர் களுடைய ஒற்றுமையும் பலமும் சுயமரியாதை உணர்ச்சியுமேயாகும். ஆகவே அதை விட முக்கியமானதும் அவசியமானதும் மனிதத் தன்மை யானதுமான தீண்டாமை ஒழிக்கும் விஷயம் இந்து முஸ்லீம் “விசாரத்தில்” ஆயிரத்தில் ஒரு பங்கு கூட கவலைப்படுவதற்கு லாயக்கில்லாததாகப் போன தற்கு காரணம் தீண்டப் படாதார் என்பவர்களுக்குள் ஒற்றுமையும் பலமும் சுயமரியாதை உணர்ச்சியும் இல்லாததே காரணமாகும்.
சாதாரணமாக சுமார் 20 வருஷத்திற்கு முன்பு லக்னோவில் முஸ்லீம்களுக்கு சில உரிமையும், சீர்திருத்த திட்டத்தில் தனி வகுப்புவாரி பிரதி நிதித்துவ உரிமையும் கொடுத் தது போல் தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கும் ஏதாவது வழி செய்து இருந்தால் இன்று அந்த சமூகத்திலும் 100க்கு இத்தனை பேர்கள் என்பதாக படிப்பிலும் உத்தி யோகத்திலும் சமூக வாழ்க்கையிலும் ஸ்தானங்கள் பெற்று இருந்து இந்தச் சமயத்தில் அவர்களும் மனிதர்கள் என்று மதிக்கப்பட்டு இந்திய பூரண விடுதலைக்கு திட்டம் வகுக்கும்போது அவர்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டிய காரியம் முக்கியமானதாக திரு. காந்தி அவர்களும், அவர்களையும் ஒரு சமூகமாக மதிப்பதாக காட்டிக் கொண்டாவது இருக்க முடிந்திருக்கும். அப்படிக்கு இல்லாததாலேயே “தீண்டப்படாதார் விஷயம் சுய ராஜியம் வந்த பின்பு சரியாய் விடும்” என்கின்ற ஒரே பேச்சில் முடிவடையவும் முடிந்துவிட்டது.
இவை ஒரு புறமிருக்க கராச்சி காங்கிரசில் புதிய சுயராஜியத்தில் ஏழை மக்களுக்கு தெரிவிப்பதற்காக வகுக்கப்பட்ட ஜீவாதாரமான உரிமைகள் என்பவையான 20 திட்டங்களில் தீண்டாமை விஷயமும் ஜாதி வித்தியாச விஷயமும் எப்படி காப்பாற்றப்பட்டிருக்கின்றது என்று பார்த் தால் அதில் உள்ள சூக்ஷியும் சாமார்த்தியமும் நன்றாய் விளங்கும். அது என்ன வென்றால், பிரஜா உரிமை முதலாவது தீர்மானத்தின் 6வது உட் பிரிவால் ‘ஜாதிவகுப்பு காரணமாக பொது உத்தியோகம், அதிகாரம், கௌர வம் தொழில் ஆகிய விஷயங்களில் எவ்வித வித்தியாசமும் கொள்ளக் கூடாது’ 7வது உட்பிரிவில் “பொதுகிணறு, பொதுவீதி, பொது இடம் ஆகியவைகளை உபயோகித்துக் கொள்ள எல்லோருக்கும் உரிமை உண்டு” என்பதாக குறிக்கப்பட்டிருக் கின்றது. இந்த இரண்டு தீர்மானங்களிலும் ஜாதியையோ தீண்டப்படாத வகுப்பு என்று சொல்லப்படுவதையோ ஒழிக்கும் எண்ணமோ, கவலையோ இல்லா திருப்பதை நன்றாய் உணரலாம்.
ஒரு சமயம் அதில் யாருக்காவது சந்தேகம் இருக்குமோ என்னமோ என்கின்ற எண்ணத்தின் மீதே திரு. சத்தியமூர்த்தி ஐயர் 15-ந்தேதி இந்து பத்திரிகையில் நன்றாய் விளக்கி இருக்கிறார். அதாவது “பொது இடம் என்பதில் வகுப்பு பாத்தியமுள்ள பொது இடமும், தனிப்பட்ட வர்களால் விடப்பட்டபொது இடமும், கோயில் சம்மந்தப்பட்ட பொது இடமும் இதில் சம்மந்தப்பட்டதல்ல” என்றும் எழுதி இருக்கிறார். இவை மாத்திரமல்லாமல் தாழ்த்தப்பட்ட, கொடுமை செய்யப் பட்ட வகுப்புகள் என்பவைகளுக்கு மற்றவகுப்பார்களைவிட எவ்வித வித்தியாசமும் அதாவது தனிச்சலுகை எதுவும் காட்டப்படாது என்பதை வலியுருத்தியும் காட்டப்பட்டிருக்கின்றது.
ஆகவே இந்த கராச்சி காங்கிரஸ் தீர்மானப்படி பார்த்தால் இப்போது அவர்களுக்குச் சில ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதும், அவர்கள் தேர்தலிலோ, மற்ற வழிகளிலோ சம உரிமைபெற சில தனி ஏற் பாடுகள் செய்து இருப்பதும்கூட ஒழிக்கப்பட்டு விடவேண்டியதாகிவிடும்.
அது மாத்திரமல்லாமல் சட்டங்களிலும், ஆதாரங்களிலும் ஜாதியும், வகுப்பும் குறிக்கப்படவேண்டியதாகும் என்பதோடு அவற்றைப் பற்றி மதங்களில் உள்ள நிலைமையையே அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டியதுமாகும். இதற்கு ஆகவே அதன் முந்திய பாகத்தில் மதநடு நிலைமையையும் அது சம்மந்தமான மனச்சாட்சியையும் வலியுறுத்தப் பட்டும் இருக்கின்றது.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் தீண்டாமை உண்டு, ஜாதி வித்தியாசமுண்டு, புனிதமான ஸ்தலங்கள் என்று கருதப்படுபவைகளில் எல்லா மக்களுக்கும் சம சுதந்திரம் கிடையாது. மற்றபடி யாருக்கும் பிற்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காக தனிச்சலுகை காட்டப்பட மாட்டாது என்பதாகும். ஆகவே புதிய சுயராஜியத்தில் ஜாதி, வகுப்புக் கொடுமைகள் சட்டத்தின் மீதே தாண்டவமாடும். ஆனால், சுயராஜியமில்லாத அன்னிய ராஜியத் தில் அதாவது இப்போதய ராஜியத்தில் அநேக விஷயங்களில் ஜாதி, வகுப்பு வித்தியாசக் கொடுமைகள், பழக்கம்,வழக்கம்,மாமூல் என்பவை களையே பிரதானமாய் கொண்டு ஒரு விதத்தில் தாண்டவமாடி வந்தது. ஏதோ ஒரு விதத்தில் இப்போது தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும் அடியோடு ஒழிக்கப்படவேண்டும் என்கின்ற எண்ணமும், உணர்ச்சியும் பொது மக்க ளுக்குத் தானாகவே ஏற்பட்டு அவை அழிபடக்கூடிய நிலைமை ஏற்படுகின்ற காலத்தில் பூரண சுயேச்சையின் பேரால் மறுபடியும் ஜாதி, வகுப்பு, பேர்களும், ஆதாரங்களும் ஒரு மனிதன் மனசாட்சியை உத் தேசித்து சட்டத்தின்மூலம் நிலை நிறுத்தும்படியாக ஆயிருப்பது மிகுதியும் கண்டிக்கத் தக்கதேயாகும்.
இனி ஏற்படப்போகும் சுயராஜியத்தில் வரும் சமத்துவத்திற்கு ஒரு உதாரணம் எடுத்துக்காட்ட வேண்டுமானால் அதாவது, காங்கிரஸ் தீர் மானத்தின் பலனாய் நமது பெரியார்களும் எவ்விதத்திலும் குற்றம் சொல்ல முடியாதவர்களுமான ஆர்.கே.ஷண்முகம் (வைசியகுலம் என்று சொல்லப் படும்) அவர்களும், திரு. டபிள்யூ பி.ஏ. சௌந்திரபாண்டியன் (க்ஷத்திரிய குலம் என்று சொல்லப்படும் ) அவர்களும் திருச்செந்தூர் கோவில் எல்லைக்குள் போகக்கூடாது என்பது இன்னும் பலமாக நிலை நிறுத்தப் பட்டது என்பதேயாகும். “வைசியர்” “க்ஷத்திரியர்” குலங்களே இப்படி இருக்கும்போது இனி சுப்பப் பரையன், கருப்பன் சக்கிலி (“சண்டாள” குலம் என்பதைச் சேர்ந்தவர்களே) என்பவர்களின் நிலைமையைப்பற்றி பேச வேண்டுமா என்று கேட்கின்றோம்.
நிற்க, இதைப் படித்துப் பார்க்கின்றவர்களில் பலருக்கு இந்த நிர்ப்பந்தங்களானது தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கும், தீண்டப்படாத வகுப்பாருக்கும் தான் ஏற்பட்டவைகளே தவிர ‘ஜாதி இந்துக்கள்’ என்று சொல்லிக்கொள்ளப் படும் பார்ப்பனரல்லாத மக்களைப் பாதிக்காது என்று தோன்றக்கூடும், அப்படித் தோன்றுவது முட்டாள் தனமான தோற்றமேயாகும்.
“மதநடு நிலைமை” “மனசாக்ஷி” என்கின்ற இரண்டு வார்த்தைகள் பிரயோகப் படுத்தப்பட்ட பிறகு இந்து மதம் என்பதில் கண்டிப்பாய் “பிராமணன்”, “சூத்திரன்”, “பஞ்சமன்” என்கின்ற மூன்று பிரிவுகளும், அவை களுக்கு இப்போது அனுபோகத்திலும் மதச்சம்மந்தமான ஆதாரத்திலும்  உள்ள விஷயங்கள் நிலை நிறுத்தப்பட்டு, அவைகளின்படி அமுல் நடத்தப் படும் என்பதைக் கண்டிப்பாய் உணர்வார்களாக.
ஆகவே தீண்டாதார் எனப்படுவோரும், தாழ்த்தப்பட்ட மக்கள் எனப்படுவோரும் மற்றும் பார்ப்பனரல்லாதாரும் தங்களுக்கு ஏதாவது சுயமரியாதையோ சமத்துவமோ பெறவேண்டுமானால் “பூரண சுயேச் சையை”யே லட்சியமாய்க் கொண்ட இன்றைய காங்கிரசை நம்பிக் கொண்டிருந்தால் பெருமாள் மாறி பெத்தப்பெருமாளானகதையாகத்தான் முடியும். வட்டமேஜை மகாநாடாவது ஒரு விதத்தில் சூக்ஷி இல்லாமல் பேசவும், தைரியமாய் உண்மையை எடுத்துச் சொல்லவும் பயன்படக் கூடியதாக இருக்குமாதலால் அங்கு செல்லுகின்றவர்களாவது இவ் விஷயங்களில் ஜாக்கிரதையாய் இருந்து கவனித்தால் சிறிதளவாவது நமக்கு அனுகூலம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். அங்கு மதசம்மந்தமான நடுநிலைமை மனசாட்சி ஆகியவைகள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.
ஜாதி, வகுப்பு என்கின்ற பிரிவினைகள் ஏற்படுவதற்கு இடமில்லாமல் படிக்கு வாழ்க்கைத் திட்டங்களையும், ஆதாரங்களையும் ஏற்படுத்த வேண்டும். எந்த ஆதாரங்களிலும் ஜாதிக்கு கலமே இருக்கக்கூடாது. வருணாச்சிரம பட்டங்களும் பெயர்களுக்குப் பின் ஜாதிப்பட்டமோ, வகுப்புப் பட்டமோ இருக்கக்கூடாது. சிவில் கிரிமினல் சட்டங்களில் ஜாதிப் பிரிவு களுக்கும், வகுப்புப் பிரிவுகளுக்கும் இடமே இருக்கக் கூடாது என்பது போன்ற இன்னும் பல நிபந்தனைகளை வற்புறுத்தி இந்த சீர்திருத்தம் முதல் கொண்டாவது ஜாதி வகுப்புக் கொடுமையை அழித்து விடும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். இந்தக் காரியத்தில் வெற்றி பெற்றுத் திரும்பி வந்தார் களேயானால் இந்தியாவைப் பல வகைகளிலும் பிடித்த எலும்புருக்கி வியாதி யானது அடியோடு ஒழிந்துபோகும் என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.04.1931

No comments: