Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

Monday, December 24, 2018

நாகரீகமென்றால் என்ன? - தந்தை பெரியார்


நாகரீகமென்றால் என்ன? - தந்தை பெரியார்

அன்பார்ந்த முகநூல் நண்பர்களுக்கு,
வணக்கம். தீக்கதிர் நாளிதழுக்காக அக்டோபர் புரட்சி குறித்து தந்தை பெரியார் கூறியவற்றை குடிஅரசு இதழ்களில் தேடியபோது, நாகரிகம் குறித்து அவர் ஆற்றிய உரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது.
என் உள்ளத்தில் திருவள்ளுவர் குறித்தும் தந்தை பெரியார் குறித்தும் என் ஆழ்மனதில் நன்கு பதித்ததில் என் அண்ணனுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. பல திருக்குறள்களை அவர் பொருளோடு கூறி என் மனதில் பதிய வைத்தார். அவ்வாறு கூறும்போது, தந்தை பெரியாரையும் ஒரு குறளோடு ஒப்பிட்டார்.
தந்தை பெரியாரிடம் யார் வந்து எது கொடுத்தாலும் அவர் கொடுத்தவரின் மனம் கோணாதவாறு அதை வாங்கி சாப்பிடுவாராம். அதற்கு அவர் ஒரு குறளை ஒப்பிட்டிருப்பார்.
பெயக்கண்டு நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் என்பதே அந்தக் குறள்.
இது ஒருபுறமிருக்க குடி அரசு இதழ்களை நான் மேய்ந்தபோது. நாகரிகம் என்றால் என்ன என்று ஓர் உரை நிகழ்த்தியிருந்ததைப் பார்க்க முடிந்தது. அதில் தந்தை பெரியார் அவர்கள் அந்தக் குறளை மேற்கோள்காட்டியிருப்பார்.
அதை நான் படித்தபோது நான் அடைந்த இன்பத்தை, முகநூல் நண்பர்களும் அடையட்டும் என்று இங்கே பதிவு செய்திருக்கிறேன்.
தோழமையுடன்
ச. வீரமணி.


நாகரீகமென்றால் என்ன?
தோழர்களே! இனி அடுத்தபடியாக நிகழ்ச்சிக்குறிப்பில் கண்டுள்ள விஷயம். அக்கிராசனர் முடிவுரை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான் அனேக கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லுவேன் என்று எனக்கு முன்பு பேசிய நண்பர் கூறினார். நான் எப்பொழுதும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாராயிருக்கிறேன். ஆனால் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான - முடிவான பதில் சொல்லக் கூடிய சகலகலாவல்லவனென்று எண்ணி விடாதீர்கள். நான் சொல்லும் அபிப்பிராயம் தான் முடிவானதென்றோ, அதுவே முடிந்த ஆராய்ச்சியின் சரியான கருத்து என்றோ, நீங்கள் கருதக் கூடாது.
விவகாரம், நியாயம் என்ற இரண்டு வார்த்தைகளையும் உபயோகப் படுத்தும் விதத்தை சரியாக உணர்ந்து கொள்ளும்படி கோருகிறேன்.
நியாயம் வேறு-விவகாரம் என்பதும் வேறு. விவகாரம் என்பது வலுத்தவன் ஆதிக் கத்தையும், தந்திர சூக்ஷிகளையும், பணச் செல்வாக்கையும் பொருத்து முடிவு பெற்றுவிடும். ஒருவன் தன்னிடம் சக்தி இல்லாத காரணத் தால்-பேசும் திறமை, எடுத்துக்காட்டும் அனுபோகம் ஆகியவை இல்லாத காரணத்தால்-ஒரு விஷயத்தைப் பற்றி வாதித்துத் தோல்வியுற்று விட்டால் அது நியாயம் கண்டு பிடித்தாகிவிடுமா? அது போல் உங்கள் வாய் அடங்கும்படி நான் பதில் சொல்லி விட்டதாலேயே நான் சொன்னது சரி என்று சொல்லிவிட முடியாது. உங்களுக்கு எடுத்துச் சொல்லி மெய்ப்பிக்க முடியாததாலேயே நான் சொன்னது தப்பு என்றும் சொல்லிவிட முடியாது. ஆதலால் எனக்குத் தெரிந்த பதில் சொல்லுகிறேன். அதை ஆராய்ச்சி செய்து பிறகு ஒரு தக்க முடிவுக்கு வாருங்கள்.
இன்றைய தினம் இங்கு பேச எடுத்துக் கொண்ட விஷயம் இந்தியா வின் தற்கால நாகரீகம் என்பதாகும். இது ஒரு கூடாத விஷயமல்ல. மிக்க ருசிகரமானதும் விரிந்த பொருள்களைக் கொண்டதுமான நல்ல விஷயத் தையே நீங்கள் இங்கு பேச எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நாகரீகம் என்கின்ற வார்த்தைக்குப் பொருளே பிடியில் சிக்காத ஒரு விஷயமாகும். ஒவ்வொருவரும் ‘நாகரீகம்’ என்பதற்கு ஒரு தனிப் பொருள் கூறி வருகிறார்கள். கண்ணோட்டம் என்கிற தலைப்பின் கீழ் குறளில் நாகரீகம் என்கிற வார்த்தை வள்ளுவரால் உபயோகப்படுத்தப்பட்டி ருக்கிற தாக நான் 10, 20 வருஷங்களுக்கு முன்பு பார்த்ததாக ஞாபகம். அது தாக்ஷண்ணியம், அடிமை என்கிற பொருளில் உபயோகப்படுத்தப்பட்டி ருப்பதாகவும் எனக்கு ஞாபகம். நாகரீகம் என்கிற வார்த்தைக்கு எந்தக் கருத்தை வைத்துக் கொண்டு பேசினாலும் மக்கள் சமூகம், நடை, உடை, ஆகாரம் மற்றும் எல்லா பாவனை களிலும் பெரிதும் மாறுபட்டிருக்கிறது. எந்த ஆதாரத்தினால் தான் இவைகள் வேறுபட்டிருக்கிறதென்று கூறமுடியாது. எப்படியோ எல்லாம் மாறுதலில் தான் போய்க்கொண்டிருக்கிறது. நம்முடைய பெண்கள் முன்பு முழங்கைக்குக் கீழும் இரவிக்கை அணிந்து வந்தார்கள். பின்பு மேலேறியது. மறுபடி கீழே இறங்கியது. இப்பொழுது மறுபடியும் மேலேயே போய்க் கொண்டிருக்கிறது. மேல் நாட்டு ஸ்திரிகளும்-தெருக்களில் தெருக் கூட்டு வது போன்ற ஆடைகளை முன்பு அணிந்து வந்தார்கள். அந்த காலத்தில் துணிகளைத் தூக்கிப் பிடித்துக் கொள்ள பணம் படைத்தவர்கள் ஆள்களை நியமித்துக் கொண்டிருந்தார்கள். அது அக்கால நாகரீகம். இப்பொழுதோ என்றால் ஆடை விஷயத்தில் மேல் நாட்டுப் பெண்களும் எல்லாம் சுருக்கிக் கொண்டு விட்டார்கள். அதை நாம் இப்பொழுது நாகரீகமென்று தான் கருதுகிறோம். நாம் இவைகளைப்பற்றி எல்லாம் பேசும் பொழுதும் யோசிக்கும் பொழுதும் எந்தவித பற்றுதலும் இல்லாமல் அதாவது ஜாதி, மதம், தேசம் என்பன போன்ற பற்றுகளை விட்டு விட்டு  சுயேச்சையாக சீர்தூக்கிப் பார்த்தால் தான் விஷயங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். அதன் உண்மையும் அப்பொழுது தான் விளங்கும். ஒரு காலத்தில் சாம்பலைப் பூசிக் கொண்டு சிவ சிவா என்று ஜெபிப்பது தான் யோக்கியமாகக் கருதப்பட்டது. இன்றைய கால தேச வர்த்த மானங்கள் மேல் சொன்ன விஷயத்தை கேலி செய்கிறது. புருஷன் பெண்ஜாதி என்கிற இரு சாரர்களை எடுத்துக் கொண்டா லும், முன்பு கல் என்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன் என்று மதித்து அடுப்பூதுவதே ஒரே கடமையென்று நடந்து வந்த பெண்களைப் பற்றி பெரிதும் மதித்து வந்தார்கள். ஆனால் இன்றோ புருஷனிடம் மனைவி யானவள் நான் உனக்கு வேலைக்காரியா? அடிமைப்பட்ட மாடா? ஜாக் கிரதையாயிருந்தால் சரி, இல்லாவிட்டால் எனக்கும் சம அந்த°தும் சம உரிமையும் சர்வ சுதந்திரமும் உண்டு என்று கர்ஜனை செய்யும் பெண் களையே நாகரீகம் வாய்ந்தவர்களென்று கருதுகிறோம்.
முன்பு புராணத்தைப் பற்றியும் மதத்தைப் பற்றியும் பேசுவது தான் வித்வத் தன்மையாக இருந்தது. ஆனால் அது இன்று குப்பையாகி பரிகசிக் கத் தக்கதாக ஆகிவிட்டது.
புத்திக்கும் அறிவிற்கும் பொருத்தமில்லாத முரட்டுப் பிடிவாதத்தில் முன்பு நம்பிக்கையிருந்ததை சிலாகித்துப் பேசி னோம். ஆனால் இன்றைய தினம் பிரத்தியக்ஷமாக எதையும் எடுத்துக் காட்டித் தெளிவுபடுத்துவதையும்-விஞ்ஞானம் போன்றதான அறிவியக்க நூல்களைக் கற்றுணர்ந்த வல்லுணர்களையுமே நாம் பெரிதும் மதித்து வருகின்றோம். நாகரீகம் என்பது நிலைமைக்கும் தேசத்திற்கும்-காலப் போக்கிற்கும் தக்கவாறு விளங்குகிறது. காலதேச வர்த்தமான-வழக்கத்தையேயொட்டி நாகரீகம் காணப்படுகிறது. காலப்போக்கானது எந்த தேக்கத்தையும் உண்டாக்குவதில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றவும்-புரட்சி ஏற்படவும் செய்கிறது. மீசை, தலைமயிர் இவைகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டுப் பேசினீர் கள். எது நாகரீகமென்று கருதுகின்றோமோ அது பெருத்த அஜீர்ணத்துக்கு வந்துவிடுகிறது. மீண்டும் அந்த நிலைமையானது மாறிக்கொண்டு போகத்தான் செய்கின்றது. ஒரு விஷயமானது வாய் சாமர்த்தியத்தினால் செலவாணியாகிவிடும். அது மெய்யோ-பொய்யோ சரியோ-தப்போ எப்படியும் இருக்கலாம். நாம் ஏன் எதற்காக உழைத்துப் பாடுபடவேண்டும்? பகுத்தறிவு படைத்த நாம் பாடுபட்டுத்தான் ஆகவேண்டுமா? நாகரீகம் என்பது சதா உழைத்துத் தான் உண்ண வேண்டுமா? என்கிற கேள்விகள் எழுந்து மக்கள் சமூகம் கஷ்டம் தியாகமின்றி நலம்பெற முயற்சிக்கலாம். இது நாகரீகமாக கருதப்பட்டு பயன் அடைந்தாலும் அடையலாம். இன்றைய அரசியல் விஷயத்தில் இராட்டை சம்பந்தப்பட்டிருக்கிறது. இது ஆயிர வருஷங்களுக்கு முன்பு ஏற்பட்டு நாகரீகமாக பாவிக்கப் பட்டி ருந்தது. பின்பு குப்பையில் தள்ளப்பட்டது. பிறகு மீண்டும் அது வெளிப் படுத்தப்பட்டு அதற்குக் கொஞ்சம் மதிப்புக் கொடுக்கப்பட்டு இராட்டை சுற்றுவதும்-தக்ளி நூல் நூற்பதும் நாகரீகமாகக் கருதப்பட்டது. ஆனாலும் அதுவும் ஒழிந்து போயிற்று என்றே சொல்லலாம். இவைகளையெல்லாம் எந்தவிதமான (தேசம், மதம், ஜாதி) பற்றுதலுமில்லாத பொதுமனிதன், பொது நோக்கோடு கவனித்தால் உண்மை விளங்காமல் போகாது. நாம் ஓர்காலத்தில் தேசம், தேசீயம்-தேசப்பற்று என்பதை நாகரீக மாகக் கருதி வந்திருக்கிறோம். ஆனால் இன்றோ அவைகளையெல்லாம் உதறித் தள்ளி மனித ஜீவகாருண்யம் உலக சகோதரத்துவம் மக்கள்அபிமானம் என்று கருதுவதையே பெரிதும் நாகரீக மாகக் கருத முன் வந்துவிட்டோம். ஒருகாலத்தில் நாகரீகமாக கருதி வந்ததை இன்று நாம் பரிகசித்து வருகிறோம். ஒரு மனிதன் தான் நாயக்கன், முதலி, வைணவன், சைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் பாராட்டிக்கொண்டு ஒவ்வொரு வரும் தாங்கள் அதிக மேல் சாதிக்காரனாவதற்குச் சைவ-வைணவப் போக்கைப் பற்றிக் கொண்டு பூணூலையும் நாமத்தையும் போட்டுத் தங்கள் மதத்தையும் சிலாகித்துப் பிதற்றிக் கொண்டும் வந்தான். ஆனால் இன்றைய தினம் இவைகளையெல்லாம் புத்திகெட்ட தனமென்றும், முற்போக்குக்கு முரணான தென்றும் கூறி வெகுவாகக் கண்டனம் செய்து வருகிறோம். ஒரு காலத்தில் தனித் தனித் தத்துவம் நாகரீகமாகக் கருதப்பட்டது. உதாரணமாக ஒரு தனித்தனி ஜாதி நன்மையும்-தேச நன்மையும் சிலாக்கியமாகக் கருதப் பட்டது. ஆனால் ஒரு ஜாதியின் அனுகூலம் பிற ஜாதியானுக்குப் பாதகம் என்பதையும் ஒரு தேச நன்மை மற்றொரு தேசத்திற்கு பொல்லாங்கு என்ப தையும் நாம் இன்று நன்கு உணர ஆரம்பித்துவிட்டோம். தோழர்களே! நான் குறிப்பாக ஒரு விஷயத்தைப் பற்றி வற்புறுத்தி இங்கு கூற விரும்புகிறேன். அதாவது நாம் அனுபவ முதிர்ச்சியால் அறிவு ஆராய்ச்சியால் நாம் முற்போக்காகிக் கொண்டு வருகிறோம் என்பதேயாம். நாம் எல்லா மனிதர்களையும் அறிவின் உணர்ச்சியால் ஆழ்ந்து கவனிக் கிறோம். உதாரணமாக வியாபாரிகளை-மக்கள் சமூகத்தின் நலனைக் கொடுத்து லாபமடையும் கோஷ்டியைச் சேர்ந்தவர்களென்றும், லேவா தேவிக்காரர்களை-மனித சமூக நாசகர்த்தாக்களென்றும் மத ஆதிக்கங் கொண்ட வர்க்கத்தினர்களையும்-மனித சமூக விரோதிகளென்றும் கண்டிக் கின்றோம். நாகரீகம் என்பது பிடிபடாத ஓர் விஷயமென்று முன்பே கூறினேன். நம்நாட்டு பெண்கள் எப்படி பெல்ட் கட்டாமல் சீலைகட்டுகிறார் களென்றும் அது இடுப்பில் எவ்வாறு தங்கியிருக்கிறதென்றும், தலைக்கு ஊசி இல்லாமல் பெண்கள் எவ்வாறு மயிர்களை சேர்த்து முடிந்துகொள்ளு கிறார்களென்றும், நாம் சாப்பாட்டுக்கு தினம் ஒரு இலை  எப்படி சிலவு செய்கிறோம், என்ன மகத்தான நஷ்டமென்றும், மேனாட்டார் ஆச்சரியப் பட்டு நம்மவர்களை கேட்பவரையும் கேட்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் அவர்களின் செய்கையை சரியாக உணராததினால் சிலதை ஆச்சரியமாக கருத நேரிடுகிறது. நம்மிடையேயுள்ள சாதி அபிமானம் சொந்தகார அபிமானம், பாஷா அபிமானம், தேசாபிமானம் எல்லாம் தொலையவேண்டும். இல்லாவிட்டால் எந்த நல்ல விஷயத்திலும் நாம் முடிவு காணுவது சரியாக ஆகிவிடாதுகாந்தியார் மேனாட்டில் முழங்கால் துண்டோடு-போதிய ஆடை யின்றி போன பெருமையைப் பற்றி ஒரு நண்பர் குறிப்பிட்டார். இது எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானதாகும் சௌகரியத்திற்காவும்- நன்மைக்காவும் அங்கு அதிக ஆடைகளை பந்தோபஸ்துக்காக அணிந்து கொள்ளாமல் பிடிவாதத்தோடு-கேவலம் இந்திய தர்மம் என்ற வெறும் எண்ணத்திற்காக குளிரில் விரைத்துபோக இங்கிலாந்து வாசம் செய்தது எவ்வளவு தூரம் நியாயமான செய்கையாகும்? புதிய எண்ணங்களும் புதிய எழுச்சிகளும்-புதிய காரியங்களும் நிகழுகின்றன. நீங்களும் காலப்போக்கின் உயரிய பலனை வீணாக்காது பகுத்தறிவை மேற்போட்டுக்கொண்டு ஜனசமுதாய நன்மையை தேடி பாடு பட முன்வாருங்கள். உங்களுடைய முயற்சிக்கு எல்லாம் வெற்றியே உண்டு. வெறும் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தவர்களும்கூட தங்களுடைய போக்கை மாற்றிக்கொண்டு முயற்சி மெய்வருத்தகூலி தரும் என்றுசொல்லி வருகிறார்கள். ஆகவே தோழர்களே! நீங்கள் தன் நம்பிக்கைகொண்டுமக்களின் விடுதலைக்கு சரியான வழிகளில் பகுத்தறிவை அடிப்படை யாகக்கொண்டு போராட வாருங்கள்.
---

Thursday, May 17, 2018

தீண்டாமை - தந்தை பெரியார்



தீண்டாமை
இந்தியாவில் இந்து முஸ்லீம் ஒற்றுமையைவிட சுயராஜியத்தை விட - பூரண சுயேச்சையை விட - காந்தி - இர்வின் ஒப்பந்தத்தைவிட - தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டியது முக்கியமானது என்கின்ற விஷயம் கடுகளவு அறிவும் மனிதத் தன்மையும் உடையவர்களாகிய எவரும் ஒப்புக்கொள்ளக்கூடியதாகும். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான விஷயம் இப்போது அழுவாரற்ற பிணமாய், கேள்வி கேட்பாடு அற்று அலக்ஷியப் படுத்தப்பட்டு கிடக்கின்றது. அதுமாத்திரமல்லாமல் அவர்கள் அதாவது தீண்டப்படாதார் என்பவர்கள் தாங்களாகவே ஏதாவது ஒரு முயற்சி செய்து தங்கள் இழிவுகளையும் கஷ்டங்களையும் போக்கிக்கொள்ள முயற்சிப்ப தையும் இந்தப்பாழும் சுயராஜியமும் பூரண சுயேச்சையும் என்கின்ற வெறும் வாய் வார்த்தைகள் தோன்றி பழையவைகளையே புலப்படுத்திக் கொள்ளவும் புதியவைகளை தலைகாட்டாமல் இருக்கவும் முயற்சி செய்வதன் மூலம் தடுத்து அழுத்தி வைக்கப்பட்டும் வருகின்றது. இந்த நெறுக்கடியான சமயத் தில் இந்தமுக்கியமான விஷயம் (தீண்டாமைக் கொடுமை விஷயம்) இக் கதியானால் இனி எப்போது தலையெடுக்க முடியும் என்பது நமக்கு விளங்க வில்லை.
இந்திய சுயராஜியத்திற்கு இன்று இந்து முஸ்லீம் விஷயம் தடை யாய் இருக்கின்றது என்று தேசீயக்காரர்கள் நீலிக்கண்ணீர்விட செய்தது எது என்று பார்த்தால் முஸ்லீம் சமூகத்தாருடைய கிளர்ச்சியும் அவர் களுடைய ஒற்றுமையும் பலமும் சுயமரியாதை உணர்ச்சியுமேயாகும். ஆகவே அதை விட முக்கியமானதும் அவசியமானதும் மனிதத் தன்மை யானதுமான தீண்டாமை ஒழிக்கும் விஷயம் இந்து முஸ்லீம் “விசாரத்தில்” ஆயிரத்தில் ஒரு பங்கு கூட கவலைப்படுவதற்கு லாயக்கில்லாததாகப் போன தற்கு காரணம் தீண்டப் படாதார் என்பவர்களுக்குள் ஒற்றுமையும் பலமும் சுயமரியாதை உணர்ச்சியும் இல்லாததே காரணமாகும்.
சாதாரணமாக சுமார் 20 வருஷத்திற்கு முன்பு லக்னோவில் முஸ்லீம்களுக்கு சில உரிமையும், சீர்திருத்த திட்டத்தில் தனி வகுப்புவாரி பிரதி நிதித்துவ உரிமையும் கொடுத் தது போல் தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கும் ஏதாவது வழி செய்து இருந்தால் இன்று அந்த சமூகத்திலும் 100க்கு இத்தனை பேர்கள் என்பதாக படிப்பிலும் உத்தி யோகத்திலும் சமூக வாழ்க்கையிலும் ஸ்தானங்கள் பெற்று இருந்து இந்தச் சமயத்தில் அவர்களும் மனிதர்கள் என்று மதிக்கப்பட்டு இந்திய பூரண விடுதலைக்கு திட்டம் வகுக்கும்போது அவர்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டிய காரியம் முக்கியமானதாக திரு. காந்தி அவர்களும், அவர்களையும் ஒரு சமூகமாக மதிப்பதாக காட்டிக் கொண்டாவது இருக்க முடிந்திருக்கும். அப்படிக்கு இல்லாததாலேயே “தீண்டப்படாதார் விஷயம் சுய ராஜியம் வந்த பின்பு சரியாய் விடும்” என்கின்ற ஒரே பேச்சில் முடிவடையவும் முடிந்துவிட்டது.
இவை ஒரு புறமிருக்க கராச்சி காங்கிரசில் புதிய சுயராஜியத்தில் ஏழை மக்களுக்கு தெரிவிப்பதற்காக வகுக்கப்பட்ட ஜீவாதாரமான உரிமைகள் என்பவையான 20 திட்டங்களில் தீண்டாமை விஷயமும் ஜாதி வித்தியாச விஷயமும் எப்படி காப்பாற்றப்பட்டிருக்கின்றது என்று பார்த் தால் அதில் உள்ள சூக்ஷியும் சாமார்த்தியமும் நன்றாய் விளங்கும். அது என்ன வென்றால், பிரஜா உரிமை முதலாவது தீர்மானத்தின் 6வது உட் பிரிவால் ‘ஜாதிவகுப்பு காரணமாக பொது உத்தியோகம், அதிகாரம், கௌர வம் தொழில் ஆகிய விஷயங்களில் எவ்வித வித்தியாசமும் கொள்ளக் கூடாது’ 7வது உட்பிரிவில் “பொதுகிணறு, பொதுவீதி, பொது இடம் ஆகியவைகளை உபயோகித்துக் கொள்ள எல்லோருக்கும் உரிமை உண்டு” என்பதாக குறிக்கப்பட்டிருக் கின்றது. இந்த இரண்டு தீர்மானங்களிலும் ஜாதியையோ தீண்டப்படாத வகுப்பு என்று சொல்லப்படுவதையோ ஒழிக்கும் எண்ணமோ, கவலையோ இல்லா திருப்பதை நன்றாய் உணரலாம்.
ஒரு சமயம் அதில் யாருக்காவது சந்தேகம் இருக்குமோ என்னமோ என்கின்ற எண்ணத்தின் மீதே திரு. சத்தியமூர்த்தி ஐயர் 15-ந்தேதி இந்து பத்திரிகையில் நன்றாய் விளக்கி இருக்கிறார். அதாவது “பொது இடம் என்பதில் வகுப்பு பாத்தியமுள்ள பொது இடமும், தனிப்பட்ட வர்களால் விடப்பட்டபொது இடமும், கோயில் சம்மந்தப்பட்ட பொது இடமும் இதில் சம்மந்தப்பட்டதல்ல” என்றும் எழுதி இருக்கிறார். இவை மாத்திரமல்லாமல் தாழ்த்தப்பட்ட, கொடுமை செய்யப் பட்ட வகுப்புகள் என்பவைகளுக்கு மற்றவகுப்பார்களைவிட எவ்வித வித்தியாசமும் அதாவது தனிச்சலுகை எதுவும் காட்டப்படாது என்பதை வலியுருத்தியும் காட்டப்பட்டிருக்கின்றது.
ஆகவே இந்த கராச்சி காங்கிரஸ் தீர்மானப்படி பார்த்தால் இப்போது அவர்களுக்குச் சில ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதும், அவர்கள் தேர்தலிலோ, மற்ற வழிகளிலோ சம உரிமைபெற சில தனி ஏற் பாடுகள் செய்து இருப்பதும்கூட ஒழிக்கப்பட்டு விடவேண்டியதாகிவிடும்.
அது மாத்திரமல்லாமல் சட்டங்களிலும், ஆதாரங்களிலும் ஜாதியும், வகுப்பும் குறிக்கப்படவேண்டியதாகும் என்பதோடு அவற்றைப் பற்றி மதங்களில் உள்ள நிலைமையையே அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டியதுமாகும். இதற்கு ஆகவே அதன் முந்திய பாகத்தில் மதநடு நிலைமையையும் அது சம்மந்தமான மனச்சாட்சியையும் வலியுறுத்தப் பட்டும் இருக்கின்றது.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் தீண்டாமை உண்டு, ஜாதி வித்தியாசமுண்டு, புனிதமான ஸ்தலங்கள் என்று கருதப்படுபவைகளில் எல்லா மக்களுக்கும் சம சுதந்திரம் கிடையாது. மற்றபடி யாருக்கும் பிற்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காக தனிச்சலுகை காட்டப்பட மாட்டாது என்பதாகும். ஆகவே புதிய சுயராஜியத்தில் ஜாதி, வகுப்புக் கொடுமைகள் சட்டத்தின் மீதே தாண்டவமாடும். ஆனால், சுயராஜியமில்லாத அன்னிய ராஜியத் தில் அதாவது இப்போதய ராஜியத்தில் அநேக விஷயங்களில் ஜாதி, வகுப்பு வித்தியாசக் கொடுமைகள், பழக்கம்,வழக்கம்,மாமூல் என்பவை களையே பிரதானமாய் கொண்டு ஒரு விதத்தில் தாண்டவமாடி வந்தது. ஏதோ ஒரு விதத்தில் இப்போது தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும் அடியோடு ஒழிக்கப்படவேண்டும் என்கின்ற எண்ணமும், உணர்ச்சியும் பொது மக்க ளுக்குத் தானாகவே ஏற்பட்டு அவை அழிபடக்கூடிய நிலைமை ஏற்படுகின்ற காலத்தில் பூரண சுயேச்சையின் பேரால் மறுபடியும் ஜாதி, வகுப்பு, பேர்களும், ஆதாரங்களும் ஒரு மனிதன் மனசாட்சியை உத் தேசித்து சட்டத்தின்மூலம் நிலை நிறுத்தும்படியாக ஆயிருப்பது மிகுதியும் கண்டிக்கத் தக்கதேயாகும்.
இனி ஏற்படப்போகும் சுயராஜியத்தில் வரும் சமத்துவத்திற்கு ஒரு உதாரணம் எடுத்துக்காட்ட வேண்டுமானால் அதாவது, காங்கிரஸ் தீர் மானத்தின் பலனாய் நமது பெரியார்களும் எவ்விதத்திலும் குற்றம் சொல்ல முடியாதவர்களுமான ஆர்.கே.ஷண்முகம் (வைசியகுலம் என்று சொல்லப் படும்) அவர்களும், திரு. டபிள்யூ பி.ஏ. சௌந்திரபாண்டியன் (க்ஷத்திரிய குலம் என்று சொல்லப்படும் ) அவர்களும் திருச்செந்தூர் கோவில் எல்லைக்குள் போகக்கூடாது என்பது இன்னும் பலமாக நிலை நிறுத்தப் பட்டது என்பதேயாகும். “வைசியர்” “க்ஷத்திரியர்” குலங்களே இப்படி இருக்கும்போது இனி சுப்பப் பரையன், கருப்பன் சக்கிலி (“சண்டாள” குலம் என்பதைச் சேர்ந்தவர்களே) என்பவர்களின் நிலைமையைப்பற்றி பேச வேண்டுமா என்று கேட்கின்றோம்.
நிற்க, இதைப் படித்துப் பார்க்கின்றவர்களில் பலருக்கு இந்த நிர்ப்பந்தங்களானது தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கும், தீண்டப்படாத வகுப்பாருக்கும் தான் ஏற்பட்டவைகளே தவிர ‘ஜாதி இந்துக்கள்’ என்று சொல்லிக்கொள்ளப் படும் பார்ப்பனரல்லாத மக்களைப் பாதிக்காது என்று தோன்றக்கூடும், அப்படித் தோன்றுவது முட்டாள் தனமான தோற்றமேயாகும்.
“மதநடு நிலைமை” “மனசாக்ஷி” என்கின்ற இரண்டு வார்த்தைகள் பிரயோகப் படுத்தப்பட்ட பிறகு இந்து மதம் என்பதில் கண்டிப்பாய் “பிராமணன்”, “சூத்திரன்”, “பஞ்சமன்” என்கின்ற மூன்று பிரிவுகளும், அவை களுக்கு இப்போது அனுபோகத்திலும் மதச்சம்மந்தமான ஆதாரத்திலும்  உள்ள விஷயங்கள் நிலை நிறுத்தப்பட்டு, அவைகளின்படி அமுல் நடத்தப் படும் என்பதைக் கண்டிப்பாய் உணர்வார்களாக.
ஆகவே தீண்டாதார் எனப்படுவோரும், தாழ்த்தப்பட்ட மக்கள் எனப்படுவோரும் மற்றும் பார்ப்பனரல்லாதாரும் தங்களுக்கு ஏதாவது சுயமரியாதையோ சமத்துவமோ பெறவேண்டுமானால் “பூரண சுயேச் சையை”யே லட்சியமாய்க் கொண்ட இன்றைய காங்கிரசை நம்பிக் கொண்டிருந்தால் பெருமாள் மாறி பெத்தப்பெருமாளானகதையாகத்தான் முடியும். வட்டமேஜை மகாநாடாவது ஒரு விதத்தில் சூக்ஷி இல்லாமல் பேசவும், தைரியமாய் உண்மையை எடுத்துச் சொல்லவும் பயன்படக் கூடியதாக இருக்குமாதலால் அங்கு செல்லுகின்றவர்களாவது இவ் விஷயங்களில் ஜாக்கிரதையாய் இருந்து கவனித்தால் சிறிதளவாவது நமக்கு அனுகூலம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். அங்கு மதசம்மந்தமான நடுநிலைமை மனசாட்சி ஆகியவைகள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.
ஜாதி, வகுப்பு என்கின்ற பிரிவினைகள் ஏற்படுவதற்கு இடமில்லாமல் படிக்கு வாழ்க்கைத் திட்டங்களையும், ஆதாரங்களையும் ஏற்படுத்த வேண்டும். எந்த ஆதாரங்களிலும் ஜாதிக்கு கலமே இருக்கக்கூடாது. வருணாச்சிரம பட்டங்களும் பெயர்களுக்குப் பின் ஜாதிப்பட்டமோ, வகுப்புப் பட்டமோ இருக்கக்கூடாது. சிவில் கிரிமினல் சட்டங்களில் ஜாதிப் பிரிவு களுக்கும், வகுப்புப் பிரிவுகளுக்கும் இடமே இருக்கக் கூடாது என்பது போன்ற இன்னும் பல நிபந்தனைகளை வற்புறுத்தி இந்த சீர்திருத்தம் முதல் கொண்டாவது ஜாதி வகுப்புக் கொடுமையை அழித்து விடும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். இந்தக் காரியத்தில் வெற்றி பெற்றுத் திரும்பி வந்தார் களேயானால் இந்தியாவைப் பல வகைகளிலும் பிடித்த எலும்புருக்கி வியாதி யானது அடியோடு ஒழிந்துபோகும் என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.04.1931

Sunday, September 13, 2015

புத்த மதமும் சுயமரியாதையும்

புத்த மதமும் சுயமரியாதையும்


தந்தை பெரியார்
 
சகோதரர்களே!
சுயமரியாதையும், புத்தமதமும் என்ற விஷயத்தைப்பற்றி பேசும்
இந்தக் கூட்டத்தில் நான் பேசவேண்டியிருக்கும் என்று இதற்கு முன்
நினைக்கவேயில்லை. இன்று நான் ரயிலுக்குப் போக சற்று நேரமிருப்பதாலும்,
தங்கள் சங்க செக்கரட்டரி என்னை இங்கு அழைத்ததாலும், இவ்விடம்
நடக்கும் உபன்யாசத்தைக் கேட்டுப் போக வந்தேன். இப்போது திடீரென்று
என்னையே பேசும்படி கட்டளையிட்டு விட்டீர்கள். ஆனபோதிலும் தங்கள்
கட்டளையை மறுக்காமல் சிறிது நேரம் சில வார்த்தைகள் சொல்லுகின்றேன்.
அவை தங்கள் அபிப்பிராயத்திற்கு ஒத்ததாக இல்லையே என்று யாரும்
மனவருத்த மடையக்கூடாது என்று முதலில் தங்களைக் கேட்டுக்கொள்ளு
கிறேன். ஏனெனில் இன்று பேசும் விஷயத்திற்கு, ‘சுயமரியாதையும்,
புத்தமதமும்என்று பெயரிட்டு இருப்பதால் அதைப்பற்றி பேசுகையில் என்
மனதில் உள்ளதைப் பேசவேண்டியிருக்கும். பச்சை உண்மையானது
எப்போதும் மக்களுக்கு கலப்பு உண்மையைவிட அதிகமான அதிருப்தியைக்
கொடுக்கக் கூடியதாகவே இருக்கும். உண்மையை மறைத்துப் பேசுவது
என்பது எப்போதும் பேசுகின்றவனுக்கும், பேச்சுக் கேட்பவர்களுக்கும்
திருப்தியைக் கொடுக்க கூடியதாகவே இருக்கும்; திருப்தி உண்டாகும்படியும்
செய்து கொள்ளலாம். ஆனால் உண்மை பேசுவதன் மூலம் அப்படிச் செய்ய
முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நான் என் கடமையைச்
செய்கின்றேன் என்கின்ற முறையில் பேசுகின்றேன். பிறகு அது எப்படியோ
ஆகட்டும்.
சகோதரர்களே ! சுயமரியாதையும், புத்தமதமும் என்பது பற்றிப்
பேசுவதில் நான் முக்கியமாய்ச் சொல்லுவதென்னவென்றால் இன்ன மதந்தான்
சுயமரியாதை இயக்கம் என்பதாக நான் ஒருக்காலமும் சொல்லமாட்டேன்.
அந்தப்படி என்னால் ஒப்புக்கொள்ளவும் முடியாது. இன்று காணப்படும்
படியான எந்த மதமுமே கூடாது. அவை மனிதனுக்கு அவசியமும் இல்லை
என்கின்ற கொள்கையையுடைய சுயமரியாதை இயக்கமானது எப்படித்
தன்னை ஏதாவது ஒரு மதத்துடன் பிணைத்துக் கொள்ள சம்மதிக்க முடியும்
என்பதை நீங்களே யோசித்து பாருங்கள். ஏனெனில் சுயமரியாதை
இயக்கமானது ஒரு நாளும் யாரோ ஒருவர் சொன்னார் என்பதற்காக எதையும் ஒப்புக்கொள்ளக்கூடியதன்று. யார் சொன்னதாக இருந்தாலும் அது தன் பகுத்தறிவுக்கு பொறுத்தமாக இருக்கின்றதா? தனது அனுபவத்திற்கு ஒத்ததாக இருக்கின்றதா? என்பதைப் பார்த்துத் திருப்தியடைந்த பிறகே எதை யும் ஒப்பு கொள்ளவேண்டும் என்கின்ற கொள்கையை யுடையது. அது எந்த மனித னையும் அந்தப்படி பரீக்ஷித்த பிறகே எதையும் ஒப்புக் கொள்ளவேண்டும் என்கின்றது.
அன்றியும் அது அந்த கொள்கையோடு அதன் நிபந்தனைக் குட்பட்டு
யார் எதை சொன்னாலும் அதை யோசிக்கத் தயாராக இருக்கின்றது.
அப்படிக்கில்லாமல் எந்த மதமாவது, எந்த நபராவது தான் அனுசரிக்கும்
கொள்கையும், தான் சொல்லுவதும் இன்ன காலத்தில் இன்னார் மூலமாக
இன்னார் சொன்னது என்பதாகவும், அதற்கு விரோதமாக யாரும் எதையும்
சொல்லக் கூடாது என்பதாகவும், அதை யாரும் பரீக்ஷிக்கவும் கூடாது,
அதைப்பற்றி சந்தேகமும் படக்கூடாது என்பதாகவும் யாராவது சொல்ல
வந்தால் அது எந்த மதமானாலும், அது எப்படிப்பட்ட உண்மையா னாலும்
அதைச் சுயமரியாதை இயக்கம் ஒரு நாளும் ஒப்புக்கொள்ள முடியாது. அன்
றியும் கடவுள் சொன்னார், அவதாரக்காரர் சொன்னார், தூதர் சொன்னார் என்று
சொல்லி ஒன்றைத் தங்கள் பகுத்தறிவுக்கு பொருத்திப் பார்க்காமல் ஒப்புக்
கொண்டிருக்கின்றவர்கள் யெவரும் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்ட
வர்கள் என்று சொல்லிக்கொள்ள சாத்தியப்படாது. அன்றியும் அவர்கள்
தங்களைச் சுயமரியாதை உடையவர்களாக எண்ணிக் கொள்ளவுமாட்டார்கள்.
பழைய அபிப்பிராயங்கள் எல்லாம் அது ஏதுவானாலும் அடியோடு
பரிசோதிக்கப்படவேண்டும், பரிசோதிக்கச் சற்றும் பயப்படக்கூடாது.
அப்படிப் பரிசோதிப்பதிலும் நடு நிலையிலிருந்தே பரிசோதிக்க வேண்டும்.
அந்தப்படி பரிசோதிக்கப் பின்வாங்குகின்றவன் யாராயிருந்தாலும்
கோழையேயாவான்.
நமக்கு முன்னால் இருந்த மனிதர்களைவிட நாம் விஷேச அனுபவ
மும், ஞானமும் உடையவர்களென்று சொல்லிக் கொள்ளப் பாத்தியமுடை
வர்கள் என்பதை ஞாபகத்தி லிருத்தாதவன் மனிதத்தன்மை யுடையவனாக
மாட்டான். ஏனெனில் முன் காலம் என்பதைவிட முன் இருந்தவர்கள்
என்பதைவிட இந்தக்காலம் என்பதும், இப்போது இருக்கிறவர்கள் என்பவர்
களும் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் அதிகமான சுதந்தரமும், சௌகரியமு
முடையது, உடையவர்கள் என்பது ஒரு சிறு குழந்தையும் ஒப்புக்கொள்ளக்
கூடியதாகும். அன்றியும் இந்தக் காலம் அனுபவத்தின்மேல் அனுபவம்
என்கின்ற முறையில் புதிய புதிய தத்துவங்கள் வளர்ந்து வந்த காலமுமாகும்.
மேலும் இப்போதுள்ளவர்கள் பல வழிகளில் இயற்கையாகவே முற் போக்கும்
அறிவு விளக்கமும், அனுபோகப் பயிற்சியும் பெற்று வருகிற சந்ததியில்
பிறந்தவர்களுமாயிருக்கிறார்கள்.
ஆகவே இயற்கையாகவும் செயற்கையாகவும் முன்னோர்களைவிட
நாம் எவ்விதத்திலும் அறிவிலோ, ஆராய்ச்சியிலோ, இளைத்தவர்கள் அல்ல
என்பதையும் காலவேறுபாட்டிற்கும், கக்ஷி வேறுபாட்டிற்கும் தகுந்த படி
கருத்து வேறுபாடு அடையவேண்டிய உரிமையும் அவசியமுமுடைய வர்கள்
என்பதையும் நாம் நன்றாக உணரவேண்டும்.
இந்த நிலையில் இருந்துகொண்டு நாம் பார்த்தோமானால் முன்னோர்
சொன்னவைகள் என்பவற்றிற்கு எவ்வளவு மரியாதை கொடுக்கலாம் என்பது
தானாகவே விளங்கிவிடும். நிற்க,
மற்றொரு விஷயம் என்னவென்றால், முன்னோர்கள் சொன்ன
வைகள் என்பவற்றிற்கு நம் கருத்துக்கள் ஒத்து இருக்கின்றனவா என்று
பார்த்துப் பிறகு தான் நம் கருத்துக்களை உறுதிப்படுத்த வேண்டுமென்கின்
றதான மனப்பான்மையையும் அடியோடு எடுத்தெரிய வேண்டும். ஏனெனில்
முன்னோர் கருத்து என்பதற்காக நாம் எதற்கும் அடிமையாய் விடக்கூடாது
என்பதற்காகத்தான் அப்படிச் சொல்லுகின்றேன். முன்னோர் கருத்துக்கு
அடிமையாய்க் கொண்டுவந்தோமேயானால் உண்மையையும், அறிவு
வளர்ச்சியையும் நாம் அடியோடு கொன்று விட்டவர்களாவோம். ஆதலால்
புத்த மதம் தான் சுயமரியாதை இயக்கமென்று யாரும் சொல்லக் கூடாது என்று சொல்லுகிறேன்.
ஏனென்றால் உதாரணமாக புத்த மதத்திற்குக் கடவுள் இல்லை, ஆத்மா
இல்லை, நித்யமொன்றுமில்லை என்கின்ற கொள்கை இருக்கின்றது என்று
சொல்லுகின்றார்கள். இது புத்தரால் சொல்லப்பட்டது என்றும் சொல்லுகின்
றார்கள். இதை உண்மை என்றே வைத்துக் கொள்ளுவோம். இந்தக் கொள்கை
கள் புத்தர் சொன்னார் என்பதற்காகத் தங்கள் புத்திக்குப் பட்டாலும் படா
விட்டாலும் பௌத்தர்கள் என்கின்றவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியவர்
களாகின்றார்கள். இப்படியேதான் மற்ற மதக்காரர்களும் இந்துக்களோ,
மகமதியர்களோ, கிறிஸ்தவர்களோ கடவுள் உண்டு ஆத்மா உண்டு நித்தியப்
பொருள் உண்டு மனிதன் இறந்தபிறகு கடவுளால் விசாரிக்கப்பட்டு அதன்
செய்கைக்குத் தகுந்தபடி மோக்ஷம், நரகம், சன்மானம், தண்டனை ஆகியவை
கள் கடவுளால் கொடுக்கப்படுவது உண்டு என்பனபோன்ற பல விஷயங்
களை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகளுக்கு காரணம்
தங்களுக்கு முன்னேயே யாரோ ஒருவர் சொன்னதாக ஏதோ ஒன்றில்
இருப்பதைப் பார்த்து நம்பிக்கொண்டு இருக்கின்றார்கள். இவை உண்மை
என்றே வைத்துக் கொள்ளுவோம். இந்த இரண்டு கூட்டத்தார்களும் தங்கள்
தங்கள் அபிப்பிராயங்களை தங்கள் தங்கள் பகுத்தறிவு, ஆராய்ச்சி, யுக்தி,
அனுபவம் ஆகியவைகள் காரணமாகக் கொண்டிருக்கின்றார்கள் என்று
ஏற்படுவதானால் இருதிரத்தாரும் சுயமரியாதை இயக்கக்காரர்களே
யாவார்கள்
ஏனெனில் கண்மூடித்தனமாய் முன்னோர் வாக்கு என்பதாக அல்லா
மல் தங்கள் தங்கள் அறிவு, ஆராய்ச்சியின் பயனாய் ஏற்பட்ட அபிப் பிராயம்
என்று சொல்லுகின்றவர்களாய் இருக்கின்றார்கள். ஆதலால் அவர்கள்
சுயமரியாதைக்காரர்கள் ஆகின்றார்கள்.
உதாரணமாக புத்த மதஸ்தன் என்று சொல்லிக்கொள்ளுகின்ற ஒருவன்
தனக்குக் கடவுள் இல்லை என்றும், ஆத்மா இல்லை என்றும், வாயால்
சொல்லிக்கொண்டு காரண காரியங்களுக்கு ஆதாரம் என்ன என்பதை
அறியாமல் சந்தேகப்பட்டுக்கொண்டு இருப்பானானால் அவன் தன்னை
புத்தமதஸ்தன் என்று சொல்லிக் கொள்ளமுடியவே முடியாது. அதுபோலவே
ஒரு இந்துவோ, இஸ்லாமானவரோ, கிறிஸ்தவரோ கடவுள் உண்டு என்கின்ற
மதக்காரராக இருந்து கொண்டு நடப்பில் தங்கள் காரியங்களுக்கும், அதன்
பயனுக்கும் தங்களைப் பொருப்பாக்கிக்கொண்டு தங்கள் காரியங்களுக்குப்
பின்னால் பயன் உண்டு என்கின்ற கொள்கையையும் நம்பிக்கொண்டு
அதற்குச் சிறிதும் கட்டுப்படாமல் நடந்து கொண்டும் இருக்கின்ற ஒருவன்
தன்னை கடவுள் நம்பிக்கைக்காரன் என்றும் தனது ஆத்மா தண்டனை
யையும் சன்மானத்தையும் அடையக்கூடியது என்றும் நம்பிக்கொண்டிருக்
கின்றவர்களாக மாட்டார்கள். ஆதலால் இந்த இரண்டு கூட்டத்தார்களும்
சுயமரியாதைக்காரர்கள் அல்ல என்றும்தான் சொல்லு வேன்.
ஏனெனில் அவர்களுடைய அறிவுக்கும், அனுபவத்திற்கும் விரோத
மான நம்பிக்கையை உடையவர்களாக இருக்கின்றார்கள். ஆதலால், இவ்
விரு கூட்டத்தாரிலும் சுயமரியாதைக்காரர்கள் என்பவர்கள் தங்களுக்குத்
தோன்றியவைகளும், தாங்கள் கண்ட உண்மைகளும் முன்னோர் கூற்றுக்கு
ஒத்திருந்தால் மாத்திரம் முன்னோர் கூற்றம் ஆதரவாக எடுத்துக் கொள்ள
பாத்தியமுடையவர்களாவார்கள். அப்படிக்கில்லாமல் முன்னோர் கூற்றுக்குத்
தான்கூட உண்மையை பொருத்துகின்றவர்களும் அல்லது அதற்கு ஆதர
வாகத் தங்களது உண்மை இருக்கின்றது என்று கருதுகின்றவர்களும்
சுயமரியாதைக்காரராகமாட்டார்கள்.
ஆகையால் நீங்கள் எப்படிப்பட்ட கொள்கையை உடையவர்களாக
இருந்தாலும் அதில் எவ்வளவு உண்மை இருப்பதாகயிருந்தாலும் அதை
நீங்கள் பிரத்தியக்ஷத்தில் தெளிவுபடுத்திக்கொண்டீர்களா? அனுபவத்தில்
சரிப்பட்டு வருகின்றதா? என்பதைப் பூரணமாய் அறிந்துகொண்டவர்கள்
என்பதைப் பொருத்தும், அவை உங்களுடைய சொந்த அபிப்பிராயத்தின்
மீது நம்புகின்றீர்களா? அல்லது அந்தந்த கொள்கையையுடைய மதத்
தலைவர்கள் சொன்னதற்காக நம்பிக்கொண்டிருக்கிறீர்களா? என்பதைப்
பொருத்துமேதான் உங்கள் மதத்திற்கோ, கொள்கைக்கோ மதிப்பு கிடைக்கும்
அப்படியில்லாமல் ஒருவன் தன்னை இந்து என்றோ, கிறிஸ்துவர் என்றோ,
மகமதியர் என்றோ, பௌத்தர் என்றோ சொல்லிக்கொள்ளுகின்றவர் ஒரு
நாளும் சுயமரியாதைக்காரராகமாட்டார்.
ஏனெனில் ஒரு குறிப்பிட்ட மதத்துக்காக ஒரு கொள்கையை ஏற்றுக்
கொண்டிருக்கிறார் என்பதோடு அது தன்னுடைய நடைமுறைக்கு
பிரத்தியக்ஷ அனுபவத்திற்கு ஒத்துவராதிருந்தும் அக்கொள்கைக்காரன்
காரணாகாரியங்கள் அறியமுடியாமல் இருந்தும் அவற்றையுடைய ஒரு
மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருப்பது என்பது சிறிதும் ஒப்புக்
கொள்ள முடியாததாகும்.
குறிப்பு : சென்னை மவுண்ட்ரோட்டிலுள்ள தென்னிந்திய புத்தமத சங்கத்தில்
22.03.1931 அன்று ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 29.03.1931