Sunday, May 6, 2018

மோடி ஆட்சியின் நான்காண்டுகள்


ஊழல்,
மதவெறி,
தலித்-சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள்
சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்படுதல்,
வங்கிகள் சூறையாடப்படுதல் நிறைந்த

மோடி ஆட்சியின் நான்காண்டுகள்

இவற்றைக் கண்டித்து
2018 மே 16 முதல் 22 வரை தேசிய அளவில் பிரச்சாரம்
2018 மே 23 அன்று மாநிலத் தலைநகர்களில் மாபெரும் பேரணி

(தமிழில்: ச.வீரமணி)
  
மோடி ஆட்சியின் நான்காண்டுகள்
“நல்ல காலம் பிறக்குது” என்றும் “அனைவருக்கும் வளர்ச்சி” என்றும் உறுதிமொழிகளை அள்ளிவீசி ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசாங்கத்தின் கடந்த நான்காண்டு கால ஆட்சி என்பது, “வளர்ச்சி” என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில கார்ப்பரேட்டுகளுக்கும், ஏகபோக மூலதன நிறுவனங்களுக்கும் மட்டுமே என்பதைக் காட்டிவிட்டது.
உழைக்கும் மக்களுக்கு அது அளித்த எந்தவொரு உறுதிமொழியையும் நிறைவேற்றிட அது முன்வரவில்லை. மாறாக, முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தால் பின்பற்றப்பட்ட ஏகாதிபத்தியத்தின் நவீன தாராளமய உலகமயக் கொள்கைகளை, மேலும் மூர்க்கத்தனமான முறையில் பின்பற்றிடவே தேஜகூ அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இன்றைய தினம், மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதமாக உள்ள பணக்காரர்கள், நாட்டின் செல்வ வளங்கள் மற்றும் சொத்துக்களில் 53 சதவீதத்தைத் தங்கள் வசம் சுருட்டிக்கொண்டுள்ளார்கள்.
உச்சத்திலிருக்கும் வேலையின்மைக்கொடுமை
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று நம் இளைஞர்களுக்கு உறுதிமொழி அளித்து, ஆட்சிக்கு வந்தவர்கள், ஆட்சிக்கு வந்த பின்னர், ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்குக் கூட வேலை அளிக்கவில்லை. நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும் வேலை தேடி 10 லட்சம் பேர் வேலை சந்தையை நோக்கி வெளித் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சுதந்திரத்திற்குப் பின்னர் வேலையின்மைக் கொடுமை இப்போது உச்சத்தில் இருக்கிறது. வேலையில் இருப்பவர்களிலும் 77 சதவீதத்தினருக்கு முறையான ஊதியம் கிடையாது. தொழிலாளர் நிலையத்தின் (லேபர் பீரோவின்) கூற்றுப்படி, 2014க்கும் 2015க்கும் இடையே  பட்டதாரி இளைஞர்களில் (18 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்களில்) வேலையில்லாதோர் விகிதாசாரம் 28 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. மேலும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடி அரசாங்கத்தின் அறிவிப்பின் காரணமாக, 2016 அக்டோபருக்கும் 2017 அக்டோபருக்கும் இடையே 90 லட்சம் வேலைகளுக்கு இழப்பு (job lobs) ஏற்பட்டிருக்கிறது. மேலும் ஜிஎஸ்டி என்கிற பொருள்கள் மற்றும் சேவை வரிகள் மூலமாக வேலையின்மைக் கொடுமை மேலும் மோசமாகி இருக்கிறது என்பதோடு மட்டுமல்லாமல், மருந்தப் பொருள்கள் உட்பட எண்ணற்ற அத்தியாவசியப் பொருள்கள் சாமானிய மக்களின் கைகளுக்கு எட்டாத உயரத்திற்குச் சென்று விட்டன.
விண்ணைத் தொடும் விலைவாசி
விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த, தேஜகூ ஆட்சியில், உண்மையில் விலைவாசிகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளன. பொது விநியோக முறைக்குப் போதிய நிதி ஒதுக்காததன் காரணமாக பொது விநியோக முறையே முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டது. ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும், பொது விநியோக முறையில் பொருள்களை வாங்கி வந்தவர்களின் எண்ணிக்கையை வெட்டிக் குறைத்ததும் பட்டினிச் சாவுகள் அதிகரிப்பதற்கு இட்டுச் சென்றுள்ளன. பெட்ரோலியப் பொருள்களின் விலைகளுக்கு இருந்துவந்த கட்டுப்பாடுகளை நீக்கியதன் விளைவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைகள் குறைந்தபோதிலும், நம் நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

ஊழல் ஒழிப்பும் நீரவ் மோடி வகையறாக்களும்
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஊழலை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவோம் என்றும், கறுப்புப்பணத்தை வெளிநாடுகளிலிருந்து மீளவும் கொண்டுவருவோம் என்றெல்லாம் உறுதிமொழிகளை வாரி இறைத்தார்கள். ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் என்ன நிலைமை? ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப்பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக ஊழல்கள் நாள்தோறும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.  இந்தியாவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கோடி கோடியாகக் கொள்ளையடித்த கயவர்கள் நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள் என்று முன்கூட்டியே எச்சரித்து பிரதமர் அலுவலகத்திற்கு முறையீடுகள் வந்தபோதிலும்கூட, அவர்களை அவ்வாறு வெளிநாடுகளுக்குச் செல்லாமல் தடுத்து, அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்வதற்குப் பதிலாக, அவர்களைத் தப்பவிட்டு, அவர்களுக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். நிரவ் மோடி என்கிற கார்ப்பரேட் பேர்வழி, வைர வியாபாரி, 11,200 கோடி ரூபாய் தொகை பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து கொள்ளையடித்து வெளிநாட்டிற்குச்  சென்றவன், வெளிநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறான்.

லலித் மோடி, விஜய் மல்லய்யா போன்ற கார்ப்பரேட் பேர்வழிகள் நாட்டைச் சூறையாடிய  மற்ற கொள்ளையர்களாவார்கள். ஊழலை ஒழிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பாஜக, இதுவரை லோக்பால் சட்டமுன்வடிவைக் கொண்டுவர எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதிலிருந்தே ஊழலுக்கு எதிராக அவர்களின் ‘லட்சணம்’ எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
நிறுவனமயமான ஊழலும் நன்கொடை லஞ்சமும்
நாட்டிலுள்ள வங்கிகளில் கடன் பெற்ற கார்ப்பரேட்டுகள் அக்கடன் தொகையைத் திருப்பிச்செலுத்தாது கொள்ளையடித்த தொகை எவ்வளவு தெரியுமா? மோடி ஆட்சிக்கு வந்தபின்னர் முதல் மூன்று ஆண்டுகளில் இவர்களின் கடன் தொகைகளைத் திரும்பப்பெறாது தள்ளுபடி செய்த தொகை மட்டும் சுமார் 1.92 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். நான்காம் ஆண்டில் மட்டும், அதாவது 2016-17இல் மட்டும் 81,863 கோடி ரூபாயாகும். இவ்வாறு இவர்களின் ஆட்சியில் ஊழல் நிறுவனமயப்படுத்தப்பட்டுவிட்டது. இதன்காரணமாக ஆட்சியில் உள்ள இவர்கள். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள் தங்கள் இலஞ்சத் தொகையை நன்கொடை என்ற பெயரில் சட்டபூர்வமாகவே அளிப்பதற்கும் வகை செய்து கொண்டிருக்கிறார்கள். 
வளங்களைச் சூறையாட கார்ப்பரேட்டுகளுக்கு அழைப்பு
தேஜகூ அரசாங்கம், பெருமளவில் நாட்டின் செல்வ வளங்களையும், பொதுத்துறை நிறுவனங்களையும் அடிமாட்டு விலைக்குத் தனியாரிடம் வாரை வார்த்திட நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. தேசியவாதம் என்று சொல்லிக்கொண்டே, நம்முடைய நாட்டின் கேந்திரத் துறைகளாக விளங்கும் ராணுவம், ரயில்வே, வங்கிகள், இன்சூரன்ஸ், ‘பெல்’ நிறுவனம் போன்றவற்றையும் இதுபோன்ற இதர நிறுவனங்களையும் அந்நிய மற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்த்திட, நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கின்றன. ‘இந்தியாவில் தொழில் தொடங்குகள்’ (‘Make in India), ‘வணிகத்தை எளிதாக்குகிறோம்’ (‘Ease of Doing Business), என்ற பெயர்களின் மூலமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகள் நம் நாட்டின் செல்வ வளங்களைச் சூறையாடிச் செல்வதற்கு சிவப்புக் கம்பளம் விரித்து, வரவழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  இவ்வாறு இவர்கள் கொள்ளையடித்துச் செல்வதற்கு நாட்டின் எண்ணெய் வளங்கள், எரிவாயு மற்றும் பல்வேறு இயற்கை வளங்களும் மட்டுமல்ல இந்தியத் தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியையும் சுரண்டிச் செல்ல அனுமதித்திருக்கிறார்கள்.
இதற்காக நாட்டில் இதுநாள்வரையில் நடைமுறையிலிருந்த தொழிலாளர்நலச் சட்டங்களையெல்லாம் கார்ப்பரேட்டுகள் நலச் சட்டங்களாக, தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றும் வேலைகளிலும் இறங்கியிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் நிலுவையில் உள்ள நிதித் தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை இன்சூரன்ஸ் சட்டமுன்வடிவு  (FRDI bill—Financial Resolution and Deposit Insurance Bill), நிறைவேற்றப்பட்டுவிட்டால் வங்கிகளிலும் இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் சேமித்துவைத்துள்ள சாமானிய மக்களின் தொகைகளும் மிக மோசமான முறையில் சூறையாடப்பட்டுவிடும்.  
தொழிலாளர்நலச் சட்டங்கள் அனைத்தும், முதலாளிகளுக்கு ஆதரவான முறையில் தொழிலாளர்கள் இதுநாள்வரையிலும் தங்களுடைய போராட்டங்களின் மூலமாக வென்றெடுத்திருந்த உரிமைகளான எட்டு மணி நேரம் வேலை, குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு, அணிதிரளும் உரிமை மற்றும் கூட்டுபேர சக்தி போன்றவற்றைப் பறித்துவிட்டு, அவற்றை முதலாளிகள் ஆதரவு சட்டங்களாக, தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றிட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் ஒப்பந்தமுறையை அனுமதித்திருக்கிறார்கள். இப்போது ஆட்சியாளர்கள் அனைத்துத் துறைகளிலும் நிரந்தர ஊதியம் பெறும் வேலையைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
விவசாயிகளுக்குத் துரோகம்
விவசாயிகளுக்கு இவர்கள் அளித்திட்ட முக்கியமான உறுதிமொழிக்கும் இவர்கள் துரோகம் இழைத்துள்ளார்கள். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய விளைபொருள்களுக்கு அதன் உற்பத்திச் செலவினத்துடன் 50 சதவீதம் உயர்த்தி, விவசாய விளைபொருள்களின் விலைகள் நிர்ணயிக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்கள். இந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டிருந்தால் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள குடும்பங்களில் 65 சதவீதக் குடும்பங்கள் பயன் அடைந்திருக்கும். ஆனால் அதனைச் செய்திட இதுவரை மோடி அரசாங்கம் முன்வரவில்லை. அதே போன்று விவசாயிகள் கடன் வங்கிகளில் பெற்ற கடன் தொகைகள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறிய உறுதிமொழிக்கும், அவர்கள் துரோகம் செய்து விட்டார்கள்.
விவசாயிகளின் தற்கொலைகள் 2014-15ஆம் ஆண்டில் 42 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அது மேலும் உக்கிரமடையக்கூடிய விதத்தில் தொடர்கிறது. விவசாயத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதப்படுத்திடவோ மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைக் கொண்டுவரவோ மோடி அரசாங்கம் தயாராயில்லை. மாறாக அவர்களுக்கு ஓரளவுக்கு நிவாரணமளித்துவந்த மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் (MNREGA) கீழ் ஒதுக்கவேண்டிய நிதி ஒதுக்கீட்டைக்கூட வெட்டிச் சுருக்கியிருக்கிறார்கள்.
மிகப்பெரும் மோசடித் திட்டம்
மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள திட்டங்களிலேயே மக்களைக் கொள்ளையடித்திடும் மிகப்பெரிய மோசடியான திட்டம் எது தெரியுமா? தேஜகூ-பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனம் (NDA-PM FASAL BIMA YOJANA) என்னும் பயிர்ப் பாதுகாப்பு இன்சூரன்ஸ் திட்டமாகும். சாமானிய விவசாயிகளின் தொகையை, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கொள்ளையடித்திட, அரசாங்கம் நன்கு வழிசெய்து தந்திருக்கிறது. இதுவரை விவசாயிகளிடம் இவர்கள் 2015-16ஆம் ஆண்டில் வசூலித்த பிரிமியம் தொகைகள் 21,500 கோடி ரூபாயில் 15,500 கோடி ரூபாயை தங்கள் இலாபமாக சுருட்டிக்கொண்டுவிட்டார்கள். வேளாண்துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை மோடி அரசாங்கம் அனுமதித்திருக்கிறது. விவசாயத்தில் ஒப்பந்தப் பண்ணை முறையையும் அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக, நாட்டின் விவசாயத்தை பன்னாட்டு வேளாண் வர்த்தக நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் கையகப்படுத்துவதற்கு வகை செய்து தந்திருக்கிறது. நம் நாட்டு விவசாயிகள் தங்கள் சொந்த நிலங்களிலேயே அவர்களின் கீழ் ஒப்பந்தக்காரர்களாக மாறும் அவலநிலை உருவாகி இருக்கிறது. மேலும் சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டின் காரணமாக நாடு முழுதும் உள்ள நம் நாட்டின் சிறுவணிகர்கள் மற்றும் சிறிய அளவிலான உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரங்களும் கேள்விக்குறிகளாகிவிட்டன.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளையும் தனியாரிடம் தாரை வார்த்திட மோடி அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன்காரணமாக முக்கியமான இந்த இரண்டு துறைகளையும் வணிகமயப்படுத்திட அனுமதித்திருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திற்குமே அதற்குத் தேவையான பட்ஜெட் ஒதுக்கீடுகளை அளித்திடாமல் அவற்றை ஆபத்திற்குள்ளாக்கி இருக்கின்றன.
பாசிஸ்ட் நடவடிக்கைகளும்பலியாகும் அப்பாவிகளும்...
மேலும், பாசிஸ்ட் குணம் படைந்த ஆர்எஸ்எஸ்/பாஜக மக்கள் மத்தியில் சாதி வெறி, மதவெறி மூலமாக மக்களுக்கிடையே வெறுப்பு உணர்வைக் கிளப்பி வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பயிற்சிபெற்ற ஊழியர்கள் நாட்டின் ஜனநாயக அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் அமர்த்தப்பட்டு அவற்றைத் தங்கள் விருப்பத்திற்கிணங்க செயல்படுத்தி வருகின்றனர். பாஜகவினரின் ஆட்சியில் மக்கள் கொத்து கொத்தாகக் கொலை செய்யப்படுவது நாளும் நடந்து வருகிறது. பசுப் பாதுகாவலர்கள் என்ற அமைப்பினரால் 40க்கும் மேற்பட்ட அப்பாவிகள் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். இவ்வாறு கொலை செய்த கயவர்களில் ஜார்கண்டில் ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைத் தவிர நாட்டில் வேறெங்கும் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
பாசிஸ்ட்டு ஆர்எஸ்எஸ்/பாஜகவினரின் கருத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர் களும், பகுத்தறிவாளர்களும் பாசிஸ்ட் வெறியர்களால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். கல்புர்கி, பன்சாரே மற்றும் கௌரி லங்கேஷ் இதற்கு உதாரணங்களாகும். பாஜகவினரின் ஆட்சியில், உயர்சாதி தனியார் ராணுவங்கள் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலையில் உள்ள மக்கள், மதச் சிறுபான்மையினருக்கு எதிராக மதவெறிக் கலகங்களை உருவாக்கி மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா நிகழ்வு பாசிஸ்ட்டுகளின் குணத்தை தோலுரித்துக் காட்ட மிகச் சரியான உதாரணமாகும். சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குவதுகூட இவர்களின் உத்திகளில் ஒன்றாகும். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான  அட்டூழியங்கள் பாஜக ஆட்சியில் மிகவும் அதிகமாகி இருக்கிறது. இத்தகு கொடூரச் செயல்களில் ஈடுபட்ட கிரிமினல்களை, பாஜக தலைவர்கள் மற்றும்  அமைச்சர்கள் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பது என்பதை வெளிப்படையாகவே செய்து கொண் டிருக்கிறார்கள். மோடியின் ஆட்சியின் கீழ் எவருக்குமே பாதுகாப்பு கிடையாது என்பது சாமானிய மக்களின் மத்தியில் பொதுக் கருத்தாக மாறியிருக்கிறது. மோடி அரசாங்கம் பெண்கள் இடஒதுக்கீட்டு சட்டமுன்வடிவை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது.
வளைக்கப்படும் நீதித்துறை
ஆட்சியாளர்கள் தங்களின் ஆளும் வர்க்க சித்தாந்தத்துடன் ஒத்துப்போகும் விதத்திலும், தங்களின் பிற்போக்கு நலன்களுக்குப் பாதுகாப்பு அளித்திடும் விதத்திலும் நீதித்துறையையும் தங்கள் விருப்பத்திற்கிணங்க செயல்படும் நீதிபதிகளைக் கொண்டு வளைத்துப்போடும் வேலையிலும் இறங்கி இருக்கிறார்கள்.  வன்கொடுமைத் தடைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்திடும் விதத்திலும், நீதியரசர் லோயா மரணம் அடைந்த வழக்கிலும் வெளியாகியுள்ள தீர்ப்புகள் இவற்றிற்கு மிகச் சரியான உதாரணங்களாகும். இத்தகைய சூழ்ச்சிகளுக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகளே வெளிப்படையாக வெளிவர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் அவசரநிலைப் பிரகடனம் போன்ற மிகமோசமான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றவர்கள் இந்திய மக்கள். இத்தகைய மிகவும் வளமான பாரம்பர்யத்தைக் கொண்டவர்கள் இந்திய மக்கள். இத்தகைய மக்களை பாசிஸ்ட் ஆர்எஸ்எஸ்/பாஜகவினரின் எதேச்சாதிகார நடவடிக்கைகளால் அமைதிப்படுத்திவிட முடியாது.
பொங்கியெழுந்த போராட்டங்கள்...
கடந்த நான்காண்டுகளில் ஆட்சியாளர்களின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களும், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் எண்ணற்றப் போராட்டங்களை மேற்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். 2015இலும் 2016இலும் நடைபெற்ற இரு பொது வேலைநிறுத்தங்களில் 18 கோடி தொழிலாளர்கள் பங்கேற்றார்கள். தில்லியில் நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற மகாமுற்றுகைப் போராட்டம், மற்றும் போக்குவரத்து, மின்சாரம், திட்டப் பணியாளர்கள், விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டங்கள் என்ற பல போராட்டங்களில் சக்தியாக மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் காரணமாக ஆட்சியாளர்கள் தாங்கள் நினைத்ததைப்போன்று நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவர முடியவில்லை. மகாராஷ்ட்ரா விவசாயிகள் நீண்ட பேரணி ஆகியவை நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் இவை மிக முக்கியமானவையும், பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட  வேண்டிய போராட்டங்களுமாகும்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டிருந்த தலித்துகள் மற்றும் பழங்குடியினர் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அணிதிரண்டு வருகின்றனர். அதேபோன்று பெண்கள், மாணவர்கள், இளைஞர்களும் நாட்டின் செல்வங்களைக் கார்ப்பரேட்டுகள் கொள்ளைகொண்டு போவதற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராடிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய போராட்டங்கள் கார்ப்பரேட்டுகளின் இழிவான நிகழ்ச்சி நிரல்களையும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் ஆட்சியாளர்களையும்  மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டிக்கொண்டிருக்கின்றன.
இத்தகு பின்னணியில்தான் மக்கள் ஒற்றுமை மக்கள் அதிகாரம் இயக்கம் (Jan Ekta Jan Adhikar Andolan (JEJAA)) என்னும் பதாகையின்கீழ் நவீன தாராளமய, மக்கள் விரோத கொள்கைகள் மற்றும் மதவெறியர்களின் பிளவுவாத நிகழ்ச்சிநிரலுக்கு எதிராக முற்போக்காளர்களை அணிதிரட்டிட முன்வந்திருக்கிறது.
ஆட்சியாளர்கள் தங்களின் படுபிற்போக்குத்தனமான கொள்கைகளின் கேடுகெட்ட தாக்கத்தின் காரணமாக சவக்குழிக்குச் செல்வது தவிர்க்கமுடியாதது.  ஜேஇஜேஏஏ என்னும் மக்கள் ஒற்றுமை மக்கள் அதிகாரம் இயக்கத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட அமைப்புகளில் உள்ள 20 கோடிக்கும் மேலான உறுப்பினர்கள் ஆட்சியாளர்களின் கேடுகெட்ட கொள்கைகளை விளக்கி, “ஆட்சியாளர்களே கொள்கைகளை மாற்றிக்கொள்ளுங்கள், இல்லையேல் நீங்கள் மாற்றப்படுவீர்கள்” என்ற முழக்கத்துடன் இத்துண்டுப்பிரசுரத்தை நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரிடம் எடுத்துச்செல்ல உறுதிபூண்டுள்ளனர்.
2018 மே 23 அன்று நாட்டிலுள்ள 24 மாநிலத் மாநிலத் தலைநகர்களிலும் பேரணியில் பங்கேற்க உள்ளனர்.  மோடி அரசாங்கத்தின் முடிவின் தொடக்கமாக இப்பேரணி இருப்பதோடு மட்டுமல்லாமல், நாடு தழுவிய அளவில் ஒரு ஜனநாயக, மதச்சார்பற்ற, சமத்துவ மற்றும் நவீன இந்தியாவை உருவாக்குவதற்கான சமூக அமைப்பைக் கட்டி எழுப்பக்கூடிய விதத்திலும் அமைந்திடும். மனிதகுல விடுதலை என்னும் பொன்னான மார்க்கத்துக்காக நாட்டு மக்கள் அனைவரையும் அணிதிரட்டும் விதத்திலும் இப்பேரணிகள்  அமைந்திடும்.
இப்பேரணி / ஆர்ப்பாட்டத்தில் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் பங்கேற்ற ஆதரவு அளித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஆட்சியாளர்களின் கேடுகெட்ட பிற்போக்கு கொள்கைகளுக்கு எதிராக மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்.
மக்கள் ஆதரவு மாற்றுக் கொள்கைகளுக்கான போராட்டத்திற்காக ஒன்றுபடுவோம், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திடுவோம், மதச்சார்பின்மையைப் பாதுகாத்திடுவோம்.
மக்கள் ஒற்றுமை மக்கள் அதிகாரம் இயக்கம்
 (வெகுஜன, வர்க்க மற்றும் சமூக அமைப்புகள், குழுக்கள் மற்றும்
முற்போக்காளர்கள் இணைந்த தேசிய மேடை)

No comments: