Monday, March 12, 2018

மக்களின் நலன்களுக்காக மார்க்சிஸ்ட்டுகள் போராடுவதை-மதவெறியர்களால் தடுத்திட முடியாது சீத்தாராம் யெச்சூரி


  


மக்களின் நலன்களுக்காக மார்க்சிஸ்ட்டுகள் போராடுவதை
மதவெறியர்களால் தடுத்திட முடியாது  சீத்தாராம் யெச்சூரி
அகர்தலா, மார்ச் 13-
பாஜக தலைவரின் முழக்கம் எதிர்க்கட்சி இல்லா இந்தியா உருவாக்கும் என்பது. முதலில் எதிர்க்கட்சி இல்லா திரிபுரா, பின்னர் எதிர்க்கட்சி இல்லா இந்தியா என்று கூறிக்கொண்டிருக்கிறார். இவர்கள் ஆசை ஈடேறாது. நாங்கள் மக்களுடன் இருப்பவர்கள். மக்களின் நலனுக்காகப் பாடுபடுபவர்கள். எவ்வளவுதான் அடக்குமுறை வெறியாட்டங்களை நீங்கள் ஏவினாலும் மக்களின் நலனுக்காக நாங்கள் போராடுவதை உங்களால் பறித்திட முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
திரிபுரா மாநிலத் தலைநகரான அகர்தலாவில்  ஞாயிறு அன்று மாலை 7.30 மணியளவில் சீத்தாராம் யெச்சூரி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“கடந்த இரண்டு நாட்களாக திரிபுரா மாநிலம் முழுதும் சுற்றிப்பார்த்தேன்.  நேற்றைய தினம் வட திரிபுராவிலும் இன்று தெற்குத் திரிபுராவிலும் எட்டு சட்டமன்றத் தொகுதிகளைச் சுற்றிப்பார்த்தேன். இவ்வாறு நான் பார்த்தவற்றிலிருந்தும் ஊடகங்களில் வெளியாகி இருக்கிற தகவல்களிலிருந்தும் எங்களுக்குத் தோழர்கள் அனுப்பியுள்ள செய்திகளிலிருந்தும் கிடைத்துள்ள விவரங்கள் தெளிவாகத் தெரிவிக்கும் செய்தி என்னவென்றால் இம்மாநிலத்தில் நடந்துள்ள வன்முறை வெறியாட்டங்கள் எங்களை அச்சுறுத்தி, அடக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜகவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்கூட்டியே திட்டமிட்ட நடவடிக்கையாகும். எங்கள் தோழர்களின் வீடுகள் மட்டுமல்ல, நன்கு சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய சந்தைப் பகுதிகளைக்கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. கடுமையானமுறையில் தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறார்கள். இதனால் பல கடைகள் மூடி இருந்தன. இதுகுறித்து அவர்களிடம் நாங்கள் கேட்டபோது  வன்முறைகள் தொடருமோ என்ற பயத்துடன்தான் நாங்கள் கடைகளைத் திறக்கவில்லை என்று தெரிவித்தார்கள். அநேகமாக ஒரு சில நகரப்பகுதிகளைத்தவிர கிராமப்புறங்கள் முழுமையாக வெறிச்சோடிக் கிடக்கின்றன.
வன்முறை வெறியாட்டங்களை பாஜகவினர் எப்படி மேற் கொண்டிருக்கிறார்கள்?
 முதலில் வீடுகளைக்  கொள்ளையடித்துள்ளனர். பின்னர் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். பல இடங்களைத் தாங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். தங்களுடன் கொண்டுவந்த பூட்டுகளைப் போட்டு பூட்டி வைத்துள்ளனர். இது இனி எங்கள் வீடு என்று சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஒருசில இடங்களில் தங்களுடைய வர்ணத்தை அடித்திருக்கின்றனர். எங்கள் தோழர்களை அச்சுறுத்தி தங்கள் சொந்தவீடுகளிலிருந்து அவர்களை விரட்டி அடித்திருக்கின்றனர்.
இவற்றிலிருந்து தெரியவருவதுஎன்னவென்றால் இவை அனைத்தும் ஏதோ திடீரென்று தன்னிச்சையாக ஏற்பட்டது அல்ல, மாறாக நன்கு முன்கூட்டியே திட்டமிட்ட  வன்முறைத் தாக்குதல்களே என்பதாகும். சிலைகளுக்கு சேதங்களை ஏற்படுத்தியிருப்பதும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல்களேயாகும்.
இவ்வாறு இவர்கள் சிலைகளை உடைத்ததன்மூலம் நாம் மேற்கொண்டிருக்கிளற தத்துவத்தை அடித்து ஒழித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது. நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிற தத்துவத்தை இத்தகைய வன்முறை வெறியாட்டங்கள் மூலமாக அடக்கிவிடமுடியாது. அது மேலும் எங்களை பதப்படுத்திடும். எங்கனை மேலும் உருக்குபோன்று உருவாக்கி எங்கள் முன்னேற்றத்தை மேலும் வேகமாக உந்தித்தள்ளும்.  
பாஜக தலைவரின் முழக்கம் எதிர்க்கட்சி இல்லா இந்தியா உருவாக்கும் என்பது. முதலில் எதிர்க்கட்சி இல்லா திரிபுரா, பின்னர் எதிர்க்கட்சி இல்லா இந்தியா என்று கூறிக்கொண்டிருக்கிறார். இவர்கள் ஆசை ஈடேறாது. நாங்கள் மக்களுடன் இருப்பவர்கள். மக்களின் நலனுக்காகப் பாடுபடுபவர்கள். எவ்வளவுதான் அடக்குமுறை வெறியாட்டங்களை நீங்கள் ஏவினாலும் மக்களின் நலனுக்காக நாங்கள் போராடுவதை உங்களால் பறித்திட முடியாது.

புதிதாக இம்மாநிலத்தில் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் புதிய அரசாங்கத்தின்  முன் உள்ள கடமைகள்
1.                            தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுங்கள். இன்று காலையில் கூட தாக்குதல்கள் நடைபெற்றன. நான் பார்க்கச் சென்ற பெலோனியா மற்றும் சில இடங்களில் இன்றைக்கு வைத்த தீ, எரிந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். இவ்வாறு மாநிலம் முழுதும் வன்முறை வெறியாட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இவர்கள் முன்னரே நன்கு திட்டமிட்டு இருந்திருக்கிறார்கள். இத்தகைய வன்முறை வெறியாட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.
2.                            எங்கள் தோழர்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கியது, தீக்கிரையாக்கியது மட்டுமல்ல. எங்கள் தோழர்களையும் கடுமையாகத் தாக்கி இருக்கிறீர்கள். இவ்வாறு உடைமைகளை சேதப்படுத்தியதற்கும், தோழர்களைக் காயப்படுத்தியதற்கும் உரிய இழப்பீடுகளை புதிய அரசு அறிவித்திட வேண்டும்.
3.                            தாக்குதல்களில் நிறைய தோழர்கள் காயங்கள் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளித்திட வேண்டும். இதற்கான பொறுப்பை புதிய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
4.                            பல இடங்களில் வன்முறையாளர்கள் மிரட்டிப் பணம் பறித்திடும் வேலைகளில் இறங்கியுள்ளார்கள்.  எங்கள் தோழர்களின் வீடுகளுக்குச் சென்று, வீட்டிலுள்ள பெண்களிடம், “உங்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமானால், உங்கள் குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கும், கல்லூரிகளுக்கும் பாதுகாப்புடன் போய்விட்டுத் திரும்ப வேண்டுமானால், லட்சக்கணக்கில் பணம் தர வேண்டும்,” என்று மிரட்டிச் சென்றுள்ளார்கள். இத்தகைய மிரட்டல்களுக்கு புதிய அரசு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்.
5.                            எங்கள் தோழர்களின் வீடுகளையும், எங்கள் கட்சி அலுவலகங்களையும் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித் திருக்கிறார்கள். அவற்றை உடையவர்களிடம் உடனடியாகத் திருப்பித் தந்திட வேண்டும். ஒருவரின் இடத்தை இன்னொருவர் தட்டிப்பறிப்பது இந்திய அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரான செயல். இந்த அரசாங்கம் இந்திய அரசமைப்புச்சட்டத்தின்கீழ்தான்  பதவிப்பிரமாணம் செய்து கொண்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறது. எனவே அரசமைப்புச்சட்டத்தின் வரையறைகளின்படி அது நடந்து கொள்ள வேண்டும். வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டுள்ள இடங்களை அதன் உரிமையாளர்களிடம் மீளவும் ஒப்படைத்திட வேண்டும்.
6.                            மாநிலத்தில் வன்முறையாளர்களால் பலர் அவர்களின் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருப்பதால் அவர்களால் தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு மீண்டும் செல்ல முடியவில்லை. அவ்வாறு செல்ல முடியாததால் அவர்கள் சம்பளத்தை இழக்கும் அபாயமும், வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. எனவே அவ்வாறு அச்சுறுத்தல் மூலம் விரட்டியடிக்கப்பட்டவர்களை, மீளவும்  வீடுகளுக்கும், பணியிடங்களுக்கும் திரும்புமாறு புதிய அரசு அழைப்பு விடுத்திட வேண்டும். இது புதிய அரசின் பொறுப்புமாகும்.
புதிய அரசாங்கத்தின் முன் உள்ள அடிப்படைப் பொறுப்புகள் இவை ஆகும். இவற்றைப் புதிய அரசு உடனடியாகச் செய்திட வேண்டும்.
நம் நாட்டில், நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கத் தேர்தல்கள் நடக்கும். ஒரு கட்சி வெற்றி பெறும். ஒரு கட்சி தோல்வியுறும். வெற்றி பெற்ற கட்சி, தோல்வியடைந்த கட்சி மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவது ஜனநாயக முறையல்ல. அது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். நம் அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானதாகும்.  இதனை அனுமதிக்க முடியாது. இந்திய அரசமைப்புச்சட்டத்தின்கீழ் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டுள்ள முதலமைச்சரும், இதர அமைச்சர்களும்  அரசமைப்புச்சட்டத்தை மீறும் செயல்களாகும். எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்.
இவை அனைத்தையும் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் செய்திட வேண்டும்.
அடுத்ததாக இங்கே அமர்ந்திருக்கிற செய்தியாளர்களிடம் நான் கூற விரும்புவது, இரண்டு நாட்களாக நான் திரிபுராவில் நடந்துள்ள வன்முறைகளை எல்லாம் பார்த்து வந்திருக்கிறேன். ஆனால் இங்கு வெளிவரும் ஊடகங்களைப் பார்த்தோமானால் இம்மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் குறித்து அநேகமாக எதுவுமே அவை வெளியிடவில்லை. நடந்துள்ள வன்முறைகள் குறித்து எதுவும் பிரசுரிக்கப்படவில்லை.  அந்த அளவிற்கு ஆட்சியாளர்கள் பத்திரிகை உரிமையை, ஊடகங்களின் உரிமையைப் பறித்து வைத்திருக்கிறார்கள். இதனைப் புதிய அரசு கைவிட வேண்டும். ஊடகங்களும் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அஞ்சிடாமல் செய்திகளை வெளியிட வேண்டும்.”
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
(ந.நி.)


No comments: