Saturday, March 3, 2018

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்க!



பாகிஸ்தானுடனான மோடி அரசாங்கத்தின் கொள்கையானது, எப்பக்கம் செல்வதென்று வழிதெரியாது, விழிபிதுங்கி நின்றுகொண்டிருக்கிறது. 2015 ஆகஸ்டில் இந்த அரசாங்கம் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளை விலக்கிக்கொண்டபின், இதுவரையிலும், ‘பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தும்வரை பேச்சுவார்த்தைகள் கிடையாது’ என்ற நிலையில் உறுதியாக இருந்து வருகிறது. 2016 செப்டம்பரில் நடைபெற்ற எல்லை தாண்டிய துல்லியத் தாக்குதல்களை, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு, இந்தியாவின் உறுதியான பதிலடி என்று தம்பட்டம் அடித்து வந்தது. அப்போது இராணுவ அமைச்சராக இருந்த மனோகர் பரிக்கரால் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுவந்த, தொடர்ந்த போர்நிறுத்த மீறல்களுக்குப்பின்னர், இதுவே சரியான பதிலடி என்று கூறப்பட்டது.ஆயினும், துல்லியத் தாக்குதல்கள் நடைபெற்றதற்குப் பின்னரும்கூட, எல்லைப் பகுதியிலும், ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையிலும் துப்பாக்கிச் சண்டைகளும், குண்டு வீச்சுகளும் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கின்றன. 2003 நவம்பரில் போர் நிறுத்தம் அறிவித்தபின்னர், 2017ஆம் ஆண்டுதான் இதுவரை நடைபெற்ற அத்துமீறல்களிலேயே அதிக அளவிலான எண்ணிக்கையைக் கண்டிருக்கிறது. எல்லை தாண்டிய பகுதிகளில் 860 நிகழ்வுகளும், சர்வதேச எல்லையில் மேலும் 120 நிகழ்வுகளும் நடைபெற்றிருக்கின்றன. கடந்த மூன்று மாதங்களில் – அதாவது 2017 டிசம்பர் மற்றும் 2018இன் முதல் இரண்டு மாதங்களில் – நிலைமை மிகவும் மோசமாகி இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் இரு மாதங்களிலேயே 400 அத்து மீறல்கள் நடைபெற்றிருக்கின்றன. நடைபெற்றுள்ள மோதல்களில் பாகிஸ்தானின் தரப்பில் 23 படைவீரர்களை இழந்திருப்பதாகக் கூறப்படும் அதே சமயத்தில்,இந்தியாவின் தரப்பில் 16 படைவீரர்களை இழந்திருக்கிறோம்.தொடர்ந்து வெடிகுண்டு மற்றும் பீரங்கிப்படைத் தாக்குதல்கள் இரு பக்கங்களிலும் எண்ணற்ற அப்பாவி மக்களின் உயிர்களையும் பலிகொண்டிருக்கின்றன. இந்தியாவின் தரப்பில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பிப்ரவரி 22இலிருந்து, உரி பகுதியில் வாழ்ந்துவந்த 2000 கிராமத்தினர், உரி நகரில் அகதிகளாக தஞ்சமடைந்திருக்கிறார்கள். பள்ளிக்கூடங்கள் அவ்வப்போது மூடப்பட்டு வருகின்றன, மக்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாகச் சீர்குலைந்துள்ளன.

ராணுவம் - பிஎஸ்எப் படை முகாம்கள் மீது தாக்குதல்
துல்லியத் தாக்குதல்கள், இராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை முகாம்களின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல்களை நிறுத்திடவில்லை. சமீபத்திய தாக்குதல் என்பது ஜம்முவில் சஞ்ச்வான் இராணுவ முகாமிலும், ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) முகாமிலும் நடத்தப்பட்டிருக்கின்றன.எல்லைப்பகுதியில் நடைபெறும் அனைத்துக் கிளர்ச்சிகளும், பிரிவினைக் கோரிக்கைகளும் பாகிஸ்தானால் உருவாக்கி அனுப்பப்பட்டவை என்கிற மோடி அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான பார்வையானது, ஜம்மு-காஷ்மீருக்குள் ஓர் அரசியல் பேச்சுவார்த்தையை நடத்திடுவதற்கான எந்தவொரு ஆழமான நடவடிக்கையையும் எடுப்பதிலிருந்து தடுத்துவருகிறது. அப்பகுதியில் அது மேற்கொண்டுவரும் முழுமையான இராணுவ அணுகுமுறையானது, காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலைமையை மேலும் மோசமாக்கி இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில்தான், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் முதல்வர் மெஹபூபா முப்தி, “நடைபெற்றுவரும் ரத்தக்களறிக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டுமானால், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை அவசியமாகும்…. பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டுமானால், பேச்சுவார்த்தை நடத்துவதைத்தவிர வேறு வழியில்லை,” என்று உரையாற்றியிருக்கிறார். இதனை பாஜகவும் மத்திய அரசும் உடனடியாக நிராகரித்திருக்கின்றன. பாஜகவின் பொதுச் செயலாளரான ராம் மாதவ், பயங்கரவாதமும், பேச்சுவார்த்தைகளும் பின்னிப்பிணைந்து போக முடியாது என்று உடனடியாகக் கோபத்துடன் பதிலளித்திருக்கிறார்.

அப்பாவிகள் பலி அதிகரிப்பு
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகளுக்கான அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டதன்மூலம், மோடி அரசாங்கம் என்னசெய்வதென்று தெரியாது, விழிபிதுங்கி நின்றுகொண்டிருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு முடிவேதும் ஏற்படவில்லை. எல்லைப் பகுதியில் அறிவித்திருந்த போர்நிறுத்தம் கந்தல் கந்தலாகியிருக்கிறது. மத்திய அரசின் இத்தகைய கொள்கை காரணமாக, பாதுகாப்புப் படையினரும், அப்பாவி மக்களும் பலியாகிக் கொண்டிருப்பது என்பதுதான் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.மத்திய மோடி அரசாங்கம், இத்தகைய கடிவாளமிட்ட மோதல் நிலைப்பாட்டை விலக்கிக் கொள்ள வேண்டியது உடனடித் தேவையாகும். முதலாவதாக, எல்லைப் பகுதியிலும் ஜம்மு-காஷ்மீர் எல்லையிலும் போர் நிறுத்தம் மற்றும் அமைதியை மீண்டும் நிலைநாட்ட, பேச்சு வார்த்தைகள் அவசியம். இதற்கு, நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளைத் தொடங்கிட வேண்டும். எல்லை தாண்டிவரும் தீவிரவாதிகளின் அத்துமீறல்களை ஒடுக்கிட, உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தொடரும் என்று அரசாங்கம் தெளிவுபடுத்துவதுடன் இதற்கான நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும்.

அரசியல் தீர்வுக்கு அவசியம்
அதே சமயத்தில், அரசாங்கம் பாகிஸ்தானுடன் ஓர் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிட வேண்டும். மத்திய அரசாங்கத்தின் “பேச்சுவார்த்தைகள்” இல்லை என்கிற நிலை தற்போது தொடர்ந்தபோதிலும், இரு நாட்டின் தேசிய பாதுகாப்புஆலோசகர்கள் மூன்றாவது நாடுகளில் சந்தித்திருக் கிறார்கள். இந்தியா, மார்ச் மூன்றாவது வாரத்தில் தில்லியில் நடைபெறவுள்ள உலக வர்த்தக அமைப்பின் முறைப்படி அமையாத அமைச்சரகக் கூட்டத்தில் (informal ministerial meeting) பங்கேற்குமாறுபாகிஸ்தான் வர்த்தகத்துறை அமைச்சர் அழைக்கப்பட்டிருக்கிறார். இதனை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளை மீண்டும்தொடங்குவது எப்படி என்பதற்கான பேச்சுவார்த்தை களும் தொடரப்பட வேண்டும். மோடி அரசாங்கம் தன்னுடைய வீறாப்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் காஷ்மீர்பிரச்சனை மீதான தேசபக்தியுடனான நிலைப்பாடு எதுவாகஇருந்தாலும், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவது என்பது, ஜம்மு – காஷ்மீர் பிரச்சனைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கு அவசியமானதொரு அம்சம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

பிப்ரவரி 28, 2018
தமிழில்: ச.வீரமணி



No comments: