Friday, December 22, 2017

நேபாளம் வானில் ஒரு சிவப்பு நட்சத்திரம்


தலையங்கம்
நேபாளத்தில் நேபாளம் கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைக்கப்பட்ட மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியும், நேபாளம் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட் மைய) கட்சியும் இணைந்த கூட்டணிக்கு நடைபெற்ற கூட்டாட்சி மற்றும் மாகாணங்களுக்கான தேர்தல்களில்  மாபெரும் வெற்றி கிடைத்திருப்பது, நேபாளத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் வளர்ச்சிப் போக்காகும். இவ்வெற்றியானது தெற்காசியா முழுவதுமே அது எதிரொலித்திடும்.
கம்யூனிஸ்ட் கூட்டணி, 2015 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட புதிய அரசமைப்புச்சட்டத்தின்கீழ் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் ஒரு தீர்மானகரமான பெரும்பான்மையை வென்றிருக்கிறது.  2008இல் புதிய அரசியல் நிர்ணயசபை அமைக்கப்பட்ட பின்னர், கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்போடு ஏராளமான அரசாங்கங்கள் ஆட்சியிலிருந்திருக்கின்றன. ஆனால், இப்போதுதான் முதன்முறையாக முழுமையாக ஓர் இடதுசாரி அரசாங்கம் அமைய இருக்கிறது. நேபாளத்தின் இரு பெரிய இடதுசாரிக் கட்சிகளான, நேபாளம் கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைக்கப்பட்ட மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியும், நேபாளம் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட் மைய) கட்சியும் [CPN (UML) மற்றும் CPN (MC)] கூட்டணி அமைத்ததன் மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது.  இவ்விரு கட்சிகளுமே, தேர்தலுக்காக கூட்டணியை அறிவித்த சமயத்திலேயே, தேர்தலுக்குப்பின்னர் இரு கட்சிகளும் இணைந்து ஒரே கட்சியாக சங்கமித்திட  தங்கள் விழைவினை வெளிப்படுத்தி இருந்தன.
நேபாள கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் மொத்தம் 275 இடங்கள் இருக்கின்றன. இவற்றில் 165 இடங்களுக்குத் தொகுதி வாரியாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். 110 இடங்களுக்கு கட்சிகள் இவ்விடங்களில் பெற்ற மொத்த வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் (இதற்கெனத் தனி வாக்கெடுப்பு நடைபெற்றது) பிரதிநிதித்துவ அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில்  நேபாளம் கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைக்கப்பட்ட மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி 80 இடங்களையும், நேபாளம் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட் மைய) கட்சி 36 இடங்களையும் (ஆக மொத்தம் 116 இடங்களை)  வென்றுள்ளன.  கட்சிகள் பிரதிநிதித்துவ அடிப்படையில் பெற்றுள்ள வாக்குகள் சதவீதத்தின் அடிப்படையில், (இதன் முடிவு இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றபோதிலும்) நேபாளம் கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைக்கப்பட்ட மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி 41 இடங்களையும், நேபாளம் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட் மைய) கட்சி 17 இடங்களையும் (ஆக மொத்தம் 58 இடங்களை) பெற்றிருக்கின்றன. ஒட்டுமொத்தத்தில், இடதுசாரிக் கூட்டணி 175 இடங்களைப் பெற்றிருக்கிறது. இது மொத்த இடங்களில் 63.3 சதவீதமாகும். மூன்றில் இரண்டு பங்கிற்குச் சிறிது குறைவு. மற்றொரு பெரிய கட்சியான நேபாளி காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமானமுறையில் நேரடித் தொகுதிகளுக்கான தேர்தலில் 23 இடங்களையும், பிரதிநிதித்துவ அடிப்படையிலான தேர்தலில் 40 இடங்களையும் பெற்றிருக்கிறது. மாகாணங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில், மொத்தம் உள்ள ஏழு மாகாணங்களில்  இடதுசாரிக் கூட்டணி ஆறு மாகாணங்களில் பெரும்பான்மை பெற்றிருக்கிறது.
இவ்வாறு, மக்கள் கம்யூனிஸ்ட் கூட்டணி மீது முழுமையாக நம்பிக்கைவைத்து அதற்கு எவ்விதப் பிசிறும் இல்லாத வகையில் வெற்றிவாகையைச் சூடியிருக்கின்றனர். பத்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலின்போது இருந்த நிலைமைக்கு முற்றிலும் மாறுபட்டநிலையில் இப்போது இந்தத் தேர்தல் வெற்றியின்மூலம் ஓர் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி இருக்கின்றனர். பொறுப்பேற்கவுள்ள புதிய அரசாங்கமானது, (நேபாளம் கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைக்கப்பட்ட மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் தலைவர் கே.பி. ஓலி தலைமையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது) எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டு நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருக்கிறது.   மக்களின் ஆசை அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய விதத்தில் அவர்களுக்குச் சிறந்ததோர் வாழ்க்கையினை அளித்திட வேண்டும். பூகம்பம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் புனர்வாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளை நிறைவு செய்திட வேண்டும். புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள குடியரசு அரசமைப்புச்சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளபடி ஜனநாயக அமைப்புகளையும் அவற்றின் மாண்புகளையும் வலுப்படுத்திட வேண்டும். இவற்றை நிறைவேற்றக்கூடிய விதத்தில், இடதுசாரிக் கூட்டணி அரசாங்கத்திற்கு, பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான ஓர் இடதுசாரித் திட்டத்தை அமல்படுத்திட ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
நேபாளத்தில், இடதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்றிருப்பதானது மோடி அரசாங்கத்திற்கு ஒருவிதமான சங்கடத்தையும், நெருடலையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் ஆட்சி புரிபவர்கள் எப்போதுமே நேபாளத்தைத் தங்கள் செல்வாக்கிற்குள் ஓர் இளைய பங்காளியாகவே வைத்துக்கொள்ள  வேண்டும் என்று விரும்பி வந்திருக்கிறார்கள். 2015 செப்டம்பர் – டிசம்பருக்கிடையே நேபாளத்தில் மாதேசி கிளர்ச்சி நடைபெற்ற சமயத்தில் மோடி அரசாங்கம் அதற்கு உடந்தையாயிருந்து, பொருளாதார முட்டுக்கட்டையை ஏற்படுத்திய மிகவும் மோசமான ‘பெரிய அண்ணன்’ அணுகுமுறையைக் கடைப்பிடித்தது. நேபாள மக்கள், பூகம்பம் ஏற்பட்டு அவதிப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில், மோடி அரசாங்கம் எரிபொருள் உட்பட  அத்தியாவசியப் பொருள்கள் எதையும் அனுப்பாது, அங்கே தட்டுப்பாட்டை ஏற்படுத்தியதன் காரணமாக சொல்லொண்ணா சிரமங்களுக்கும் வறிய நிலைக்கும் தள்ளப்பட்டார்கள்.  அப்போது நேபாளத்தில் பிரதமராக இருந்த கே.பி. ஓலி, மோடி அரசாங்கத்தின் நிலைப்பாட்டால் தாங்கள் அவமதிக்கப்பட்டதாகவும், மிகக் கேவலமான முறையில் புண்படுத்தப்பட்டதாகவும் கருதியது இயற்கையேயாகும்.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய அரசியல் வளர்ச்சிப்போக்கை அடுத்து, இந்தியா, நேபாளம் குறித்த தன்னுடைய அணுகுமுறையை மறுஆய்வுக்கு உட்படுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும். நேபாளத்தின் உள்விவகாரங்களில் தலையிடாது சமத்துவ அடிப்படையில் மிகவும் நெருக்கமான முறையில் உளவுகளை ஏற்படுத்திக்கொள்ள மோடி அரசாங்கம முன்வர வேண்டும்.
நேபாளத்திற்கு இந்தியாவும் சீனாவும் இரு பெரிய அண்டை நாடுகளாகும். நேபாளம், இந்தியா – சீனா ஆகிய இரு நாடுகளுடனும் மிகவும் நேசபூர்வமான முறையில் உறவுகளை வளப்படுத்திக்கொள்ள விரும்பும் எதார்த்த நிலையை  மோடி அரசாங்கம் அங்கீகரித்திட வேண்டும். தெற்காசியாவில் உள்ள இதர நாடுகளைப் போலவே நேபாளமும் சீனா கொண்டுவந்துள்ள ஒரு மண்டலம் மற்றும் ஒருபாதையின் (Belt and Road Initiative)  நெடுகிலுள்ள நாடுகளுடன் ஒத்துழைப்பு நல்கிட விரும்புகிறது. நேபாளம், சுயேச்சையான அயல்துறைக் கொள்கையை மேற்கொள்ள உறுதிபூண்டிருப்பதை  இந்தியா சந்தேகக் கண்கொண்டு பார்க்கக்கூடாது. மாறாக, நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே வரலாற்றுரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் ஆண்டாண்டு காலமாக இயற்கையாகவே இருந்துவரும் ஒற்றுமையுணர்வை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் செயல்பட வேண்டும். இந்தியா, நேபாளத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிடவும், நம் பொதுவான கலாச்சாரப் பாரம்பர்யத்தை மேலும் கட்டி எழுப்பிடவும் ஆக்கபூர்வமான முறையில் நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
இந்தியாவில் செயல்படும் இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு, நேபாளத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் வெற்றி என்பது பெரிய அளவில் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. நேபாள கம்யூனிஸ்ட்டுகளுக்கு அவர்கள் மேற்கொள்ளவுள்ள புதிய முயற்சிகளுக்கு நாம் நம் ஒருமைப்பாட்டையும் முழு ஆதரவையும் விரிவுபடுத்திக்கொள்கிறோம்.
(டிசம்பர் 20, 2017)
தமிழில்: ச. வீரமணி
   


1 comment:

இ.பா.சிந்தன் said...

http://maattru.com/nepal-elections-2017/