Saturday, June 24, 2017

இறந்த ஜுனைத் பெற்றோருக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆறுதல்



புதுதில்லி, ஜூன் 24-
மதவெறியர்களால்  கொலை செய்யப்பட்ட ஜுனைத் பெற்றோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஆறுதல் கூறினார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், முகமது சலீம், எம்.பி., ஹரியானா மாநில செயலாளர் சுரீந்தர் மாலிக், தில்லி மாநில செயற்குழு உறுப்பினர் ஆஷா ஷர்மா, சத்பீர் சிங் மற்றும் உள்ளூர் தலைவர்கள் ஆகியோரடங்கிய தூதுக்குழுவினர்,  இரு நாட்களுக்கு முன் தில்லி – மதுரா உள்ளூர் ரயிலில் மதவெறியர்களின் தாக்குதலுக்கு ஆளாகிக் கொல்லப்பட்ட ஜுனைத், காயங்கள்  அடைந்த ஷகீர் மற்றும், ஹசிம் ஆகியோரின் ஹரியானா மாநிலம் கந்தாவ்லி கிராமத்திற்குச் சென்றனர்.
கொலை செய்யப்பட்ட மற்றும் காயங்கள் உற்றவர்களின்  தந்தை ஜலாலுதீன் மற்றும் தாயர் சைரா ஆகியோரிடமும் மற்றும் அவர்தம் குடும்பத்தாரிடமும் தூதுக்குழுவின் ஆறுதல் கூறினார்கள்.
இறந்தவரின் தாயார் சைரா, தூதுக்குழுவினரிடம்,  பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் குழந்தைகளை படிக்க வைத்ததாகவும், இறந்த ஜுனைதா (வயது 15) சூரத்தில் மதர்சா பள்ளியில் சமீபத்தில்தான் படிப்பை முடித்து, தேர்வில் தேர்ச்சி அடைந்திருந்ததாகவும், இதனைக் கொண்டாடும் விதத்தில் அவர் தன் புதல்வர்களிடம் 1500 ரூபாய் கொடுத்து துணிமணிகள் வாங்கி வருமாறு கேட்டுக்கொண்டதாகவும் மிகுந்த துயரத்திற்கிடையே கூறினார். மேலும் தற்சமயம் தன் பையன்கள் ரம்சான் நோன்பு இருந்து வருவதால் தண்ணீர்கூட அருந்தாமல் பயணம் செய்து வந்துள்ளார்கள் என்றும் அந்த சமயத்தில்தான் அவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அழுதபடியே தெரிவித்தார்.
நடந்துள்ள இக்கொடூர சம்பவம் தொடர்பாக இதுவரை அரசுத்தரப்பிலிருந்தோ அல்லது ஆளும் கட்சித்தரப்பிலிருந்தோ எவரொருவரும் இவர்களை வந்து சந்திக்கவில்லை என்பதையும் தூதுக்குழுவினர் கேட்டறிந்தனர்.  இறந்தவரின் தந்தையும் சகோதரர்களும் காவல்நிலையத்திற்கு பலமுறை அழைக்கப்பட்டு அவர்கள் சென்று வந்துள்ளனர். ஆனால் இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை மட்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ரயிலில் முஸ்லீம்கள் போன்று தலையில் குல்லாய் வைத்துக்கொண்டோ அல்லது தாடி வைத்துக்கொண்டோ எவரேனும் தில்லிக்குப் போய்வந்தால் அவர்களை ஒரு குழு வெறித்தனத்துடன் கெட்டவார்த்தைகளைக் கூறித் திட்டுவதனைக் குறியாகக் கொண்டுள்ளனர் என்று தூதுக்குழுவினரிடம் சொல்லப்பட்டது.
முஸ்லீம்கள் ரயில்பெட்டிகளுக்குள் நுழையும்போது அவர்களை வசைபாடக்கூடிய விதத்தில்  மைக்குகளில் ஒலிபரப்புகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டது. இவ்வாறு முஸ்லீம்களைத் துன்புறுத்துவது வழக்கமாகியிருக்கிறது என்றும், எனவே முஸ்லீம்கள் பயந்து கொண்டே பயணம் செய்யும் நிலை உருவாகியுள்ளது என்றும் பலர் தூதுக்குழுவினரிடம் தெரிவித்தார்கள். பலதடவைகள் இவை தொடர்பாக காவல்துறையினரிடம் முறையீடுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை அவர்களால் கண்டுகொள்ளப்படவில்லை.
இந்தக் குறிப்பிட்ட நிகழ்வும் முழுக்க முழுக்க மதவெறி அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. எப்படி ஆயுதந்தாங்கிய நபர்கள் ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள் என்பது நம்முன் உள்ள கேள்வியாகும். தாக்கியவர்கள் அனைவருமே பெரிய பெரிய கத்திகளை வைத்திருந்திருக்கிறார்கள். இவ்வாறு தாக்குதல் தொடுத்தபோது அவர்கள் இதர பயணிகளையும் தங்களுடன் சேர்ந்துகொள்ளுமாறு அவர்கள் நிர்ப்பந்தித்திருக்கிறார்கள். கூட்டம் அதிகமாகவுள்ள ஒரு ரயிலில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது என்றால் நிச்சயமாக அந்தக் கயவர்களுக்கு ஆளும் கட்சியினரின் ஆதரவு இல்லாமல் இருக்க முடியாது என்பது தெளிவாகும்.
பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வை முஸ்லீம்கள் மத்தியில் ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காக சங் பரிவாரக்கூட்டத்தினர் இத்தகைய சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள் என்றும், இதற்காக நச்சுப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.  இவர்கள் முழக்கமான “எல்லோருடனும், எல்லோருடைய வளர்ச்சிக்காகவும்” என்பதன் எதார்த்தமான பொருள் இதுதான்.
இக்கொடூரமான கொலைபாதக சம்பவத்திற்குக் காரணமான கயவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், அக்கயவர்களுக்கு உள்ள அரசியல் தொடர்புகளையும் அடையாளங்காட்டிட வேண்டும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும், உள்ளூர் ரயில்களில் பயணிகளுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் மற்றும் ஷகீர் மற்றும் ஹசீம் ஆகிய இருவருக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.
இதற்கு எதிராகவும், இதுபோன்ற இதர நிகழ்வுகளுக்கு எதிராகவும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன இயக்கங்களை நடத்திடும்.
இவ்வாறு  அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(ந.நி.)

No comments: