Friday, June 23, 2017

முஸ்லீம் குடும்பத்தினர் மீதான தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்


முஸ்லீம் குடும்பத்தினர் மீதான தாக்குதல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
புதுதில்லி, ஜூன் 24-
தில்லிக்கு அருகே உள்ளூர் ரயிலில் பயணம் செய்த முஸ்லீம் சகோதரர்கள் மீது இந்து மதவெறியர்கள் தாக்குதல் தொடுத்ததில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார், இருவர் காயங்கள் அடைந்துள்ளனர். இந்தக் கொடிய சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“ஜுனைத் (வயது 15), ஷகீர் (வயது 22) மற்றும் அவரது மூன்றாவது சகோதரர் ஹசீம் ஆகிய மூன்று முஸ்லீம் சகோதரர்களும் சூரத்தை சேர்ந்தவர்கள். தில்லி வந்து ஈத் பெருவிழாவிற்காக துணிகள் வாங்கிக்கொண்டு தங்கள் ஊருக்கு ரயிலில் திரும்பி இருக்கின்றனர். துக்ளகாபாத் ரயில் நிலையத்தில் ஏறிய சில மதவெறியர்கள் இவர்களை அசிங்கமானமுறையில் திட்டத் தொடங்கி இருக்கின்றனர். இதற்கு இவர்கள் ஆட்சேபம் தெரிவித்தபோது, இவர்களை மதவெறியுடன் கத்திக்கொண்டே கொடூரமானமுறையில் தாக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இதில் ஜுனைத் ரயிலிலேயே இறந்துவிட்டார். பின்னர் மதவெறியர்கள் ஷகீரின் தாடியைப் பிடித்து  இழுக்கத் தொடங்கி இருக்கின்றனர். அவரை மூன்று இடங்களில் கத்தியால் குத்தி இருக்கின்றனர். அடுத்து ரயில் பல்லாப்காரில் நின்ற  போது கடுமையாகத் தாக்குதல்களுக்கு உள்ளான இவர்களை ரயிலிலிருந்து இறங்குவதற்கும் அனுமதித்திடவில்லை.   பின்னர் அவர்களை ரயிலிலிருந்து வெளியே தூக்கி எறிந்திருக்கின்றனர். அதன் பின்னர் சிலர் அவர்களின் நிலைகண்டு அவர்களை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.
பாஜக-ஆர்எஸ்எஸ்  ஆட்சி மதவெறியர்களின் கலக நடவடிக்கைகளுக்கு இட்டுச்சென்றுகொண்டிருக்கிறது என்பதையே மதவெறியுடன் நடந்துள்ள இக்குற்றச்செயல் காட்டுகிறது. முஸ்லீம்களுக்கு எதிராக இதுபோன்ற வன்முறை நிகழ்வுகள் ரயில்களில்  ஏற்கனவே நடந்திருக்கின்றன.  ஆயினும் அவ்வாறு குற்றநடவடிக்கைகளில்  ஈடுபட்டவர்களுக்கு எதிராக, நாட்டில் சட்டத்தின்  ஆட்சியை உயர்த்திப்பிடித்திட அரசாங்கம் முன்வரவில்லை. இவ்வாறு ஆட்சியாளர்கள் மதவெறி வெறுப்புக் குற்றங்கள் வளர்வதனை நேரடியாகவே ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
தில்லியில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள  தாக்குதல்களுக்கு உள்ளானவர்களையும் அவர்தம் குடும்பத்தாரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், முகமது சலீம்,எம்.பி., மற்றும் தில்லி மாநில செயற்குழு உறுப்பினர் ஆஷா ஷர்மா ஆகியோர் சந்தித்தனர். இந்த சம்பவம் குறித்து எதுவும் கூறாது கேளாக் காதினர் போன்று அமைதியுடன் இருந்திடும் ஆட்சியாளர்கள் இருப்பதும், குறிப்பாக பிரதமர் மற்றும் உள்துறை  அமைச்சர் இருப்பதும்,  பாதிப்புக்குள்ளான குடும்பத்தினரைச் சந்திக்கு இதுவரை ஓர் அதிகாரி கூட  வந்து விசாரிக்காததும் வெட்ககரமானதும், கண்டிக்கத்தக்கதுமாகும்.
இக்குற்றச்செயலில் ஈடுபட்ட மதவெறியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. பாதிப்புக்கு உள்ளான குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் கோருகிறது. இவ்வாறு நடைபெறும் மதவெறிக் குற்றங்களுக்கு எதிராக, அதுவும் பொது இடங்களில் நடைபெறுவதற்கு எதிராக உரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுவாக எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் கட்சி  அறைகூவி அழைக்கிறது.”
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

(ந.நி.)

No comments: