Sunday, June 18, 2017

விவசாயிகளுக்குத் தேவை நிலையான வருமானம் : எம்.எஸ். சாமினாதன்


மோடி அரசாங்கம், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததானது, விவசாயிகள் வாழ்வில் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்திடவில்லை என்கிற மோடி அரசாங்கத்தின் கூற்றுக்கு நேரெதிராக, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சாமினாதன் அவர்கள், “ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடி அரசாங்கத்தின் அறிவிப்புதான், வட இந்தியாவில் பணப் புழக்கத்தை இழந்த விவசாயிகள் வாழ்வை மிகவும் மோசமான நிலைக்குத்தள்ளியது,” என்று, வேளாண் விஞ்ஞானியும், பசுமைப்புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவருமான எம்.எஸ். சாமினாதன் கூறியுள்ளார்.
“ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட விளைவுகள் குறித்து எவ்விதமான ஆய்வும் எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்படவில்லை.  ஒரு முழுமையாக ரொக்கத்தையே சார்ந்துள்ள ஒரு பொருளாதார அமைப்பில், குறிப்பாக ரொக்கப் பணப் புழக்கம் உள்ள விவசாயிகள் மத்தியில், நிச்சயமாக இது பாதிப்பினை ஏற்படுத்தியது,”  என்று லண்டனில் உள்ள அவர் தி குவிண்ட் என்னும் இணைய இதழுக்குத் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தார். வட இந்தியாவில் மத்தியப்பிரதேசத்திலும், மகாராஷ்ட்ராவிலும் மிகவும் ஆழமான முறையில் நெருக்கடிக்கு விவசாயிகள் ஆளாகியுள்ள நிலையில் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
2008ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டபோது அதன் தலைவராக இருந்த எம்.எஸ். சாமினாதன், விவசாயிகள் உற்பத்தி செய்திடும் பொருள்களின் உற்பத்திச் செலவினத்துடன் கூடுதலாக 50  சதவீதம் இணைத்து, குறைந்தபட்ச  ஆதார விலை நிர்ணயித்து விவசாயிகளிடமிருந்து அவற்றை அரசாங்கம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தார். இதுவே, விவசாயிகள், விவசாயத்தை மேற்கொள்வதற்கு சாத்தியமான வழியாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தசமயத்தில், தி குவிண்ட் இதழ் சார்பில் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சுஜல்பூர் சந்தைக்குச் சென்று விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் இடையே நடைபெற்ற போராட்டங்களைப் பார்த்தபோது, எந்த அளவிற்கு விவசாயிகளும், வர்த்தகர்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள் என்று நன்கு காண முடிந்தது. ஏனெனில் அந்தச் சந்தையானது மிகப் பெரிய அளவில் ரொக்கப் பரிவர்த்தனையையே சார்ந்திருந்தது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக் மாற்றல் மேலும் குழப்பத்தையே கொண்டுவந்தது.
கடன் தள்ளுபடி சரியான மாற்று அல்ல
விவசாயிகள் வாழ்வுபெற கடன் தள்ளுபடி சரியான மாற்று அல்ல என்று எம்.எஸ். சாமினாதன் தன்னுடைய ட்விட்டர்  பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். கடன் தள்ளுபடி என்பது வங்கிகள் கடன் கொடுத்துப் பெறும் அமைப்புமுறையையே நாளடைவில் நசித்துப் போகச் செய்துவிடும் என்று அவர் கருதினார்.
“கடன் தள்ளுபடி என்பது விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முறையாக மாறாது. மாறாக, விவசாயிகளின் வருமானத்தை ஸ்திரப்படுத்துவதற்கான வழிவகைகளை நீங்கள் காண வேண்டும்,” என்றார்.
உத்தரப்பிரதேசத்தில் ஏப்ரலில் சுமார் 36 ஆயிரத்து 359 கோடி ரூபாய் அளவிற்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் விவசாயிகள் கடன்களைத் தள்ளுபடி செய்த பின்னர், இதேபோன்ற கோரிக்கைகள் இதர மாநிலங்களிலும் எழுந்தன. இதனைத் தொடர்ந்து  மகாராஷ்ட்ர அரசாங்கம் 31 லட்சம் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது.
“இன்றைய விவசாய நெருக்கடி கால கட்டத்தில் விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்வது அவசியம்தான். எனினும் விவசாயத்தை திட்டமிடல் என்பது கிராமப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு மிகவும் முக்கியமாகும்,” என்று எம்.எஸ். சாமினாதன் வலியுறுத்துகிறார்.
இவ்வாறு கடன் தள்ளுபடி செய்ததில் ஏழை விவசாயிகளைவிட அதிக அளவில் பயன்  அடைந்தது பணக்கார விவசாயிகள்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பணத்தை சாலைகள், தகவல் தொடர்பு, வேளாண் தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் விவசாயிகளின் திறனை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கு செலவு செய்திருக்க முடியும். இது நீண்டகால நோக்கில் பயன் அளித்திருக்கும்.
1960களில் நாடு உணவு தான்யப் பற்றாக்குறையால் பரிதவித்த சமயத்தில், இன்று 92 வயதாகும் எம்.எஸ். சாமினாதன், அமெரிக்க வேளாண் விஞ்ஞானி நார்மன் போல்லாக் என்பவருடன் இணைந்து நாட்டில் அதிக விளைச்சல் தரும் கோதுமை இனங்களைக் கண்டுபிடித்து உணவுப்பற்றாக்குறையை ஒழித்துக் கட்டினார். இன்றையதினம் விவசாயிகளின் வாழ்வைப் பாதுகாத்திட எவ்விதமான சமூகநலத்திட்டங்களோ நடவடிக்கைகளோ இல்லாதிருப்பதனை அவர் மிகவும் சாடினார்.
“விவசாயம் என்பது விவசாயிகளுக்கு வாழ்வை அளித்திட வேண்டும், மாறாக அவர்களின் வாழ்வைப் பறித்திடக்கூடாது,” என்று கூறிய சாமினாதன், “இன்றையதினம் விவசாயிகள் மரணங்களும் அவர்கள் தற்கொலைப்பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பதும் மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும்,” என்று மிகவும் வருந்துகிறார்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஆறு விவசாயிகள் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் மேலும் ஐந்து விவசாயிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 2015-16ஆம் ஆண்டில் பாஜக ஆளும் மாநிலங்களில், இதர மாநிலங்களைவிட  சுமார் 11 சதவீத வளர்ச்சி விகிதம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கும் அதேசமயத்தில், இவ்வாறு அமோக விளைச்சல் ஏற்பட்டுள்ளபோதிலும், விவசாயிகளின் வாழ்க்கையில் நெருக்கடி ஏற்பட்டிருப்பதற்குக் காரணங்கள் என்ன? இவர்கள் விளைவித்த விவசாயப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இவர்கள் விளைவித்த காய்கறிகளின் விலைவீழ்ச்சி இவர்கள் வாழ்வைப் பறித்துக் கொண்டிருக்கின்றன.
2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சாந்தகுமார் குழு அறிக்கையானது, நாட்டில் வெறும் 6 சதவீத விவசாயிகள்தான், தங்கள் விளைபொருள்களை அரசாங்கங்கங்களின் ஏஜன்சிகளிடம் அளித்து,  அரசாங்கங்களின் குறைந்தபட்ச ஆதாரவிலையின் பயனை அடைந்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. “விவசாய விளைபொருள்களை அரசாங்கமே கொள்முதல் செய்தல், பொது விநியோகமுறை, விலை நிர்ணயம் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகிய நான்கு பகுதிகளுக்கும், அரசாங்கங்கள் உயர் முன்னுரிமை அளித்திடவேண்டும். விவசாயிகளின் அவலநிலையைப் போக்கிட ஏதேனும் திட்டம் கொண்டுவரப்பட்டால் அது விவசாய விளைபொருள்களின் விலையை நிர்ணயம் செய்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிலும்  கவனம் செலுத்த வேண்டும்,” என்று சாமினாதன் கூறினார்.
மத்தியப்பிரதேசத்திலும் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களிலும் விவசாயிகள் கிளர்ந்தெழுந்து  போராட்டங்கள் நடத்தி வருவது மத்திய மோடி அரசாங்கமும், பாஜக மாநில அரசாங்கங்களும் எந்த அளவிற்கு விவசாயிகள் விரோத அரசாங்கங்கள் என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. விவசாயிகளின் வருமானத்தை  இரட்டிப்பாக்குவோம் என்று மோடி வாய்கிழிய பேசினாலும்,  விவசாய விளைபொருள்கள் அமோகமாக விளைந்துள்ள நிலையிலும் அதன் பயன்கள் விவசாயிகளுக்குக் கிடைக்கமுடியாதபடி மிக மோசமாக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கின்றன.
“விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கிட வேண்டும் என்று பிரதமர் மோடி உண்மையிலேயே விரும்புகிறார் என்றால், அதற்கு சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் ஒரு நாகரிகமான வாழ்வை விவசாயிகளுக்கு உத்தரவாதப்படுத்திடமுடியும். அதற்கு நான் மேலே கூறியவாறு விவசாய விளைபொருள்களை அரசாங்கமே கொள்முதல் செய்திட வேண்டும், பொது விநியோக முறையை அமல்படுத்திட வேண்டும், விலை நிர்ணயம் மற்றும் சந்தைப்படுத்தலையும் அரசே மேற்கொண்டிட வேண்டும்,” என்று எம்.எஸ். சாமினாதன் அறிவுறுத்துகிறார்.

(நன்றி: தி குவிண்ட் இணைய இதழ்)
(தமிழில்: ச. வீரமணி

No comments: