Thursday, February 23, 2017

சேர்ந்திசை நுணுக்கங்களை அள்ளி அள்ளித்தந்தவர் எம்.பி.சீனிவாசன்





சேர்ந்திசை நுணுக்கங்களை அள்ளி அள்ளித்தந்தவர் எம்.பி.சீனிவாசன்
தென்னிந்திய மக்கள் நாடக விழா கருத்தரங்கில்  ராஜராஜேஸ்வரி புகழாரம்
தஞ்சாவூர், பிப்.23-
சேர்ந்திசை நுணுக்கங்களை எங்களுக்கெல்லாம்  அள்ளி அள்ளித் தந்தவர், சேர்ந்திசையை அனைத்துத்தரப்பினரும் ஏற்கக்கூடிய விதத்தில் பிரபல்யப்படுத்தியவர் இசை மாமேதை எம்.பி.சீனிவாசன் அவர்கள் என்று அவரது  மாணாக்கர்களின் ஒருவரான திருமதி சிவ. இராஜராஜேஸ்வரி கூறினார்.
தஞ்சாவூர் சங்கீத மகாலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் தென்னிந்திய மக்கள் நாடக விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நாடகமும் இசையும் செயல்வழி விரிவுரை  கருத்தரங்கத்துடன் வியாழன் .அன்று காலை துவங்கியது.  சு. இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் எம்.பி. சீனிவாசனின் இசைமொழி என்னும் தலைப்பில் அவரது மாணவர் சிவ.இராஜராஜேஷ்வரி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
“சேர்ந்திசை நுணுக்கங்களை எங்களைப் போன்ற மாணவர்களுக்கு அள்ளி அள்ளித் தந்தவர் இசை மாமேதை எம்.பி.சீனிவாசன்.
எம்.பி. சீனிவாசன் அவர்களிடம் மாணவராக இருக்க வேண்டுமென்றால் இசை குறித்து ஞானம் இருப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆர்வம் இருந்தால் போதும் அவர் இசைமேதையாக்கிவிடுவார்.  எம்.பி. சீனிவாசன் அவர்கள் அதிக இசைக்கருவிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பொருள் பொதிந்த கவிதை வார்த்தைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார். மகாகவி பாரதியார், பாரதிதாசனார், கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் போன்றவர்களின் பாடல்களுக்கு அவர் இசை அமைத்தார்.  இசைக்கருவிகள் என்றால் தபலா, ஹார்மோனியம் இரண்டு மட்டும் கூட, அவருக்குப் போதுமானது. இசைக்கருவிகள் பாடுவோரின் குரல் வளத்தை அடக்கும்விதத்தில் இருக்கக்கூடாது என்பார்.  குரல் வளத்திற்குத்தான்  முக்கியத்துவம் கொடுத்தார்.
சேர்ந்திசையை பிரபல்யப்படுத்தியவர் எம்.பி.சீனிவாசன் அவர்கள். அதற்கு முன்பெல்லாம் இசை நிகழ்ச்சிகளில் சேர்ந்திசையைப் பார்க்க முடியாது. அவர்தான் அதனை முன்னுக்குக் கொண்டுவந்தவர்.
சேர்ந்திசையை கம்போஸ் செய்வது மிகவும் கஷ்டம். சேர்ந்தியையில் பாடப்போகும் பாடலின் வரிகளை பாடுவோர்கள் நன்கு மனதில் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அப்போது அவர் ஒரு எக்ஸ்பிரஷன்  கொடுப்பார். அதைப்பார்த்து கேட்கிற அனைவரும் மனதாரப் பாடுவார்கள்.
 அந்தக்காலத்தில் இசை குறித்து விமர்சனம் எழுதிவந்த சுப்புடு அவர்கள், இதர இசைக் கலைஞர்களுக்கு, எம்.பி.சீனிவாசனிடம் சென்று சேர்ந்திசையைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறிடுவார். எப்படி ஒருங்கிணைந்து பாட வேண்டும் என்று அவரிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்பார்.
சேர்ந்திசையில் அனைவரும் ஒருங்கிணைந்து பாட வேண்டும். ஒரு குரலைவிட இன்னொரு குரல் விஞ்சி விடக்கூடாது. எல்லோரும் ஒரே மாதிரி சீராகப் பாட வேண்டும். சுருதியோடு பாட வேண்டும். விலகிச் செல்லக்கூடாது.
தமிழ்ப் பாடல்களுக்கு எல்லாம் அவர் நன்கு அர்த்தம் சொல்வார். வேற்றுமொழி பாடல்களைப் பாட நேர்ந்தால் அவற்றுக்கு அர்த்தம் கூறிவிட்டுத்தான் பாடச் சொல்லுவார்.
எனக்கு 17, 18 வயதில் கர்நாடக சங்கீதம் மட்டும்தான் தெரியும். வேறு இசையைத் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதில் என் பெற்றோர் உறுதியாக இருந்தார்கள். ஆனால் என் குருநாதர் சீனிவாசன் அவர்கள்தான் .அனைத்து இசைகளையும் அறிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி மேற்கத்திய இசை, இந்துஸ்தானி இசை, நாடோடிப் பாடல்கள் அனைத்தையும் அறிமுகப்படுத்தினார்.
மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும்போது எந்தக்காலத்திலும் அவர் சளைத்ததில்லை. சேர்ந்திசையை பிரபல்யப்படுத்துவதை ஓர் இயக்கமாகவே செய்தார். அவரது பயிற்சி எங்களுக்கு என்றென்றும் வழிகாட்டும்.”
இவ்வாறு இராஜராஜேஸ்வரி கூறினார்.
பிரபாகர்
அடுத்து நாடகமும் இசையும் என்னும் தலைப்பில் உரைநிகழ்த்திய பேராசிரியர் பிரபாகர் கூறியதாவது:
“இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய முத்தமிழ்களில் நாடகத்தமிழுக்கு முக்கியத்துவம் இல்லாதிருக்கிறது. இது நமக்கு ஒரு பெரிய குறையாகும். இசைத்தமிழ் குறித்து பரிதிமாற் கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார். சிலப்பதிகாரம் நாடகக் காப்பியமே என்றும் கூறலாம்.,
எஸ்.வி.கிட்டப்பா, சுந்தராம்பாள், டி.ஆர். மகாலிங்கம் போன்றோர் நாடக இசைக்கு புகழ்சேர்த்தவர்கள்.
உலகம் முழுதும் நாடகமும் இசையும் சேர்ந்துதான் வளர்ந்திருக்கின்றன. ஆனால் நம் நாட்டில் அந்த அளவிற்கு இல்லை. அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் இசையும், நாடகமும் கல்வியின் ஒரு பகுதியாகும். அங்கு கல்லூரிகளில் படித்து, தேறி, பின்னர் தங்கள் வாழ்க்கையையும் செம்மையாக அமைத்துக்கொள்கிறார்கள்.‘ அதுபோன்ற நிலைமை நம் நாட்டில் இல்லை. இதனை மாற்றிட நாம் அனைவரும் முயற்சிகள் மேற்கொள்வோம்.
இவ்வாறு பேராசிரியர் பிரபாகர் கூறினார்.
நாடகங்கள்
நாடக விழாவில் புதனன்று பேராசிரியர் ராமானுஜம் அரங்கஸ்ரீ அவர்களின், பெத்தண்ண சாமியின் தாலாட்டு, புதுவை மத்தியப் பல்கலைக் கழகத்தின் கக்கன் ஜி மற்றும்  மௌனம் ஒரு போர்க்குற்றம், பெங்களூர் தேசிய நாடகப்பள்ளியின் மாரீசன பந்துகலு, உதிரி நாடகக்குழுவின் உதிரிகள், வேலூர் சாரல் குழுவினரி8ன் காயக்குடிகள் நாடகங்கள் அரங்கேறின.
இன்று (வியாழன் அன்று) நிறமிகள் கலைக்குழுவின் மீளல், மாற்று நாடக இயக்கத்தின் நெடும்பயணம், புதுவை தலைக்கோல் குழுவின் தூங்கிகள், அரங்கேறின.
(ச.வீரமணி)


No comments: