Sunday, November 6, 2016

ஒரு புதிய உலகத்தின் முன் அறிவிப்பு



ந்த ஆண்டு நவம்பர் 7, ருஷ்யாவில் நடைபெற்ற நவம்பர் புரட்சியின் நூறாவது ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கிறது. (பழைய ருஷ்ய காலண்டர்படி அக்டோபர் 25 அன்று இது நடைபெற்றது.) 1917 அக்டோபர் மனிதகுல வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை – முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறும் இடைமாறுதலைக் குறிக்கிறது. இது, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் உழைக்கும் மக்கள் மேற்கொண்ட முதல் புரட்சியாகும். இதற்கு முன்பு 18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற புரட்சிகள் எல்லாம் நிலப்பிரபுத்துவ மன்னர்களாட்சிகளைத் தூக்கி எறிவதற்காக முதலாளித்துவ வர்க்கத்தால் நடத்தப்பட்ட புரட்சிகளாகும். 1789 பிரெஞ்சுப் புரட்சி, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கு மிகச் சரியான உதாரணமாகும்.
வரலாற்றுச்சாதனை
1871 பாரீஸ் கம்யூன், நவம்பர் புரட்சியின் வரலாற்று ரீதியான முன்னோடியாகும். அதுதான் தொழிலாளி வர்க்கத்தால் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றவும், சோசலிச அரசை அமைக்கவும் நடைபெற்ற முதல் முயற்சியாகும். எனினும் அது அற்ப ஆயுளில் முடிவுற்றுவிட்டது.

சோவியத்யூனியன், மிகக் குறுகிய காலத்திலேயே வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்தான சாதனைகள் பலவற்றைப் புரிந்தது. இது சோசலிச அமைப்புமுறையின் பிரம்மாண்டமான வல்லமையைக் காட்டியது. தொழில் வளர்ச்சி மற்றும் விவசாய வளர்ச்சியில் பாய்ச்சல் வேகத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. கல்லாமையை இல்லாதொழித்தது. அனைவருக்கும் கல்வியை அளித்தது. பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் சம உரிமைகளை அளித்தது. சோசலிச அமைப்பின் முதல் இருபது ஆண்டுகளில் நான்கு ஆண்டுகள் உள்நாட்டு யுத்தம் மிகவும் அழிவுகளை ஏற்படுத்தியிருந்த போதிலும்கூட அதனையெல்லாம் மீறி, மக்களின் வாழ்க்கைத் தரம் பொருளியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் பன்மடங்கு உயர்ந்தது.
சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசில் (USSR) உருவாக்கப்பட்டிருந்த வலுவான சோசலிச அமைப்புமுறைதான் நாஜிக்களின் படையெடுப்பை வீரத்துடனும் தீரத்துடனும் எதிர்த்து நின்று முறியடித்து, பாசிசத்திற்கு எதிரான யுத்தத்தில் ராணுவ ரீதியாக மிகவும் வலுவான நாடு என்பதை உலக அளவில் நிரூபித்துக் காட்டியது. பாசிச வெறியர்களுக்கு எதிராகச் சோவியத் யூனியன் மட்டும் அரணாக நில்லாது இருந்திருக்குமானால், உலகம் காட்டுமிராண்டிக் காலத்திற்குள் தள்ளப்பட்டிருக்கும்.
நவம்பர் புரட்சியும், சோவியத் யூனியன் மலர்ந்ததும், காலனியாதிக்கம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகம் முழுதும் நடைபெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கு ஒரு வலுவான உந்து சக்தியாக விளங்கின. நவம்பர் புரட்சிக்குப் பின்னர் ஐம்பது ஆண்டுகளுக்குள் உலகில் பல நாடுகள் ஏகாதிபத்தியவாதிகளின் நேரடியான அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டன.
எனினும், 1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் முடிவுக்கு வந்ததானது, ஏகாதிபத்தியத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் நவம்பர் புரட்சியின் சாராம்சத்தை மறுதலிப்பதற்கும், அதன் அர்த்தத்தைச் சீர்குலைப்பதற்கும், சோசலிசத்தின் வரலாற்றுச் சாதனைகளையெல்லாம் அழிப்பதற்கும் வாய்ப்பளித்தது.
பொய்ப்பிரச்சாரங்கள்
நவம்பர் புரட்சியின் புரட்சிகர உள்ளடக்கத்தையும், வரலாற்றில் பல்வேறு நாடுகளிலிருந்த அடிமைத்தளையை அகற்றியதில் அதற்கிருந்த பங்கையும் உறுதிப்படுத்த வேண்டியது முக்கியமாகும். நவம்பர் புரட்சி, சோவியத் யூனியன் மற்றும் கம்யூனிசம் குறித்துக் கட்டவிழ்த்துவிடப்படும் பொய்ப்பிரச்சாரங்களைத் தோலுரித்துக்காட்டுவது மிகவும் அவசியமாகும்.
சோவியத் யூனியன் தகர்ந்தபின் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அக்டோபர் நிகழ்வு மக்களால் மேற்கொள்ளப்பட்ட புரட்சி அல்ல என்றும், அது வல்லடி (putsch) என்றும், சிலரால் மேற்கொள்ளப்பட்ட பலாத்கார நடவடிக்கை என்றும் மேற்கத்திய வரலாற்றாசிரியர்களால் ஏராளமாக எழுதப்பட்டுள்ளன. வல்லடி என்பது சதிகாரர்கள் குழுவால் ஓர் அரசாங்கம் பலவந்தமாகத் தூக்கி எறியப்படுவதாகும். ஆட்சிக்கவிழ்ப்பு (coup d’etat) என்பது ஒரு நாட்டின் ராணுவ அதிகாரிகளின் குழுவால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். மேற்கத்திய வரலாற்றாசிரியர்களின் கூற்றின்படி, ராணுவத்திலிருந்து ஒரு பிரிவால் ஆதரிக்கப்பட்ட, லெனின் தலைமையில் போல்ஷ்விக் சதிகாரர்கள் குழு ஒன்று 1917-ஆம் ஆண்டு அக்டோபர் 25- ஆம் தேதி பெட்ரோகிராடில் தற்காலிக அரசாங்கத்தை வலுக்கட்டாயமாகத் தூக்கி எறிந்தது என்பதாகும்.
இவ்வாறு “வல்லடி” என்றும் ராணுவத்தினரின் “சதி” என்றும் ருஷ்யாவின் வரலாற்றைத் திருத்தி எழுதி போல்ஷ்விக்குகள் சிவப்புப் பயங்கரவாதத்தை நிறுவினார்கள் என்றும், கம்யூனிஸ்ட் கட்சியால் சர்வாதிகார ஆட்சி நடத்தப்பட்டது என்றும் சித்தரிக்க முயல்கிறார்கள்.
அடுத்ததாகத் தத்துவார்த்தரீதியாக அவர்கள் தொடுக்கும் தாக்குதல், சோவியத் அரசு “சர்வாதிகார அரசு” என்று சித்தரிப்பதும், முதலாளித்துவ ஜனநாயகத்தில் இதற்கு இடம் இல்லை என்றும் கூறுவதாகும். இவ்வாறு சோவியத் யூனியனும், நாஜி ஜெர்மனியைப் போன்றதே என்றும், கம்யூனிசமும் பாசிசமும் சர்வாதிகார ஆட்சியின் இரு முகங்கள் என்றும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய அபத்தமான கொள்கையை ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுதும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
பாசிசத்துடன் கம்யூனிசத்தைச் சமமாகப் பார்த்திடும் குரூரமான முயற்சி எதிலிருந்து வருகிறது? கடந்த இருபது ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் தங்களுடைய ஏகாதிபத்திய-நவீன-தாராளமய முதலாளித்துவ அமைப்பே உயர்ந்தது என்று நிறுவ முயற்சிப்பதற்காகத்தான் இத்தகைய குரூர முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். இந்தப் பிரச்சாரத்தின் பின்னணியுடன் கம்யூனிச எதிர்ப்பு வலதுசாரி அரசாங்கங்கள் கிழக்கு ஐரோப்பாவில் நிறுவப்பட்டன.
இந்தக் குறிக்கோளுடன்தான் 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம், “கம்யூனிசம், நாசிசம், பாசிசம்” என்ற பெயர்களின்மூலம் நடைபெற்ற சர்வாதிகாரக் குற்றங்களைக் கண்டித்தது. இதனைத் தொடர்ந்து ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பு (OSCE- the Organisation for Security and Co-operation in Europe) ஒன்று உருவாக்கப்பட்டது. இது ஆகஸ்ட் 23-ஆம் தேதியை “ஸ்டாலினிசம் மற்றும் நாசிசம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் தினமாக” அனுசரிக்க வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றியது.
வெகுமக்கள் புரட்சி
இத்தகைய இவர்களின் பித்தலாட்டங்களை எல்லாம் அம்பலப்படுத்த வேண்டியது அவசியமாகும். அக்டோபர் புரட்சி என்பது ஒரு வெகு மக்கள் புரட்சியாகும். இந்தப் புரட்சிகரமான இயக்கத்தை நடத்தியவர்களில் பெரும்பான்மையானவர்கள் தொழிலாளர்கள், விவசாயிகள், ராணுவ வீரர்களாவார்கள். இவர்கள்தான் மக்கள்தொகையிலும் பெரும்பான்மையை வகித்தார்கள். நாடு முழுதும் சோவியத்துகள் அமைக்கப்பட்டன. சோவியத் என்பது மக்களின் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பாகும். அவர்கள் தொழிலாளர் சோவியத்துகள், விவசாயிகள் சோவியத்துகள், ராணுவ வீரர்களின் சோவியத்துகள் என்று தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். 1917- நவம்பரில் ருஷ்யாவில், 455 விவசாயிகள் சோவியத்துகள் (Soviets of peasant deputies) உட்பட 1,429 சோவியத்துகள் இருந்தன. அகில ருஷ்ய சோவியத்துகள் காங்கிரசில் இவர்கள் 20.3 மில்லியன் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். இவர்களில் 6 மில்லியன் பேர் தொழிலாளர்கள், 5 மில்லியன் விவசாயிகள், 9 மில்லியன் ராணுவ வீரர்கள். அதாவது இவர்களில் மொத்தத்தில் இரண்டு பங்கினர் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளிகளுமாவார்கள்.
நவம்பர் புரட்சி நடைபெற்ற சமயத்தில், பெட்ரோகிராடிலும், மாஸ்கோவிலும் இருந்த தொழிலாளர்களின் சோவியத்துகளில் பெரும்பான்மையானவர்கள் போல்ஷ்விக்குகளின் செல்வாக்கிற்கு வந்துவிட்டார்கள். அதேபோன்று யுத்தமுனையிலிருந்த ராணுவ வீரர்களின் சோவியத்துகளும் போல்ஷ்வித்தை நோக்கி வந்துவிட்டனர். போல்ஷ்விக் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை பிப்ரவரியில் 75 ஆயிரமாக இருந்தது, அக்டோபரில் 3 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்தது. போல்ஷ்விக்குகளும் அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டிருந்த இடது-சோசலிஸ்ட் புரட்சியாளர்களும் அகில ருஷ்ய சோவியத்துகளின் காங்கிரசில் பெரும்பான்மையை மிகவும் தெளிவான முறையில் பெற்றிருந்தனர்.
உண்மையின் மீது ஏவப்படும் வன்முறை
இவ்வாறு உண்மையில் புரட்சிகர மாற்றத்தை நடைமுறைப்படுத்தியது சோவியத்துகள்தான். இவர்களை “வல்லடியாளர்கள்” என்றோ “ராணுவ சதியை ஏற்படுத்தியவர்கள்” என்றோ கூறுவது வரலாற்றின் உண்மைகள் மீது வன்முறையை ஏவுவது போன்றதாகும். தொழிலாளி வர்க்கம், விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் அணிதிரட்ட முடியும் என்கிற உண்மையை ஏகாதிபத்தியத்தாலும் முதலாளித்துவத்தாலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எனவேதான் இத்தகைய அவதூறுகளை அள்ளிவீசிக் கொண்டிருக்கிறார்கள்.

பாசிசத்தையும் நாசிசத்தையும் எந்தவிதத்திலும் ஒப்பிட முடியாது. உண்மையில் நவம்பர் புரட்சிக்குப் பின்னர் முதலாளித்துவ அமைப்புமுறையில் ஆழமான நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்தே பாசிசம் உருவானது. ஹிட்லரும், முசோலினியும் கம்யூனிசத்தைத் தங்கள் எதிரியாகவே பார்த்தார்கள்.
பாசிசத்தையும், கம்யூனிசத்தையும் ஒன்றாகப் பார்ப்பதன்மூலம் நாசிசத்தை அழித்து ஒழித்ததில் சோவியத் யூனியனும், கம்யூனிஸ்ட் கட்சியும் ஆற்றிய கேந்திரமான பங்களிப்பை மறுதலிப்பதாகும். நாசிசத்தைச் சவக்குழிக்கு அனுப்பியதில் சோவியத் குடிமக்கள் சுமார் 25 மில்லியன் பேர் தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். அதேபோல் பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்ட் வீரர்கள் பிரான்ஸ், இத்தாலி, பால்கன் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளிலும் பாசிஸ்ட்டுகளின் ஆட்சிகளைத் தூக்கி எறிந்திருக்கின்றனர்.
நவம்பர் புரட்சியையும், சோசலிசத்தையும், கம்யூனிசத்தையும் அவதூறுசெய்யும் இவர்களது முயற்சிகள் தோல்வியடையும். உலக முதலாளித்துவ அமைப்புமுறை தன்னைப் பீடித்துள்ள ஆழமான நெருக்கடியிலிருந்து நிச்சயமாக மீள முடியாது. 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தத்திலிருந்து இன்னும் வெளிவரமுடியாமல் அது திண்டாடிக்கொண்டிருக்கிறது. ஐரோப்பா இதில் மிகவும் மோசமான பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. அங்குள்ள ஆட்சியாளர்கள் தங்கள் மக்கள் மீது திணித்துள்ள சிக்கன நடவடிக்கைகள் நெருக்கடியை மேலும் கடுமையானதாக மாற்றும். சமத்துவமின்மை, வேலையில்லாத் திண்டாட்டம், இனவெறி, இதர நாட்டினரை வெறுக்கும் போக்கு ஆகியவை அதிகரிக்கும். வலதுசாரி நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் மற்றும் புதிய அரசியல் சக்திகள் உருவாகும்.
பயங்கரவாதத்திற்கு வித்திடும் மேற்கத்திய ஜனநாயகம்
சோவியத் யூனியன் தகர்ந்ததற்குப்பின்னர், ஏகாதிபத்தியவாதிகளின் தலையீடுகள் உலகம் முழுதும் அதிகமாகிவிட்டன. இராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா ஆகிய நாடுகள் மக்களைக் கொன்று குவிக்கும் யுத்தங்களில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான தலையீடுகள் மூலம் மதத் தீவிரவாதத்தின் அடிப்படையிலான பயங்கரவாதத்திற்கு வித்திடுவதுதான் “மேற்கத்திய ஜனநாயகம்” ஆகும்.

உலகம் முழுவதும், ஏகாதிபத்திய உலகமயத்திற்கு எதிராகவும், நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவும் வெகுஜன இயக்கங்களும், போராட்டங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. கடந்த பதினைந்து ஆண்டு காலமாக லத்தீன் அமெரிக்காவில் இடது சாரிகளுக்கும், ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் செயல்படும் வலதுசாரிகளுக்கும் இடையே கடுமையான போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்தியாவிலும், இடது மற்றும் ஜனநாயக சக்திகள் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவும், மோடி ஆட்சியின் தலைமையில் உள்ள இந்துத்துவா மதவெறி சக்திகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இவ்வாறு ஏகாதிபத்தியம், நவீன தாராளமயம், பிரிவினை மற்றும் பிளவுவாத சக்திகள் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடிவரும் சக்திகளுக்கு நவம்பர் புரட்சி தொடர்ந்து உத்வேகத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும்.
நவம்பர் புரட்சியின் புரட்சிகரப் பாரம்பரியப் பண்பை உயர்த்திப்பிடிப்போம். இதற்கு மார்க்சிசம்-லெனினிசத்தின் புரட்சிகரக் கொள்கையின் அடிப்படையில் சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது தேவை. 2016-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதியிலிருந்து 2017-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி வரை நாம் மேற்கொள்ளும் நூற்றாண்டு தினக் கொண்டாட்டங்கள் மூலம் நவம்பர் புரட்சியின் செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல பயன்படுத்திக் கொள்வோம். அதன் மூலம் 21ஆவது நூற்றாண்டில் இந்தியாவுக்கான சோசலிசத் தொலைநோக்குப் பார்வையை மக்கள் மத்தியில் விதைத்திடுவோம்.


தமிழில்: ச.வீரமணி

No comments: