Thursday, November 17, 2016

ஏன் இப்படி நாட்டு மக்களைத் துன்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறீர்கள்? மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி கேள்வி




ஏன் இப்படி நாட்டு மக்களைத் துன்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறீர்கள்?
மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி கேள்வி
புதுதில்லி, நவ.17-
ஏன் இப்படி நாட்டு மக்களைத் துன்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறீர்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, எம்.பி. ஆட்சியாளர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் புதனன்று தொடங்கியது. மாநிலங்களவையில் அவையின் நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்திருப்பதன் மூலம் எழுந்துள்ள சூழ்நிலை குறித்து விவாதிக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விவாதம் நடைபெற்றது. இவ்விவாதத்தில் கலந்துகொண்டு, சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
500 ரூபாய், 1000  ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் படும் துன்ப துயரங்கள் குறித்து எனக்கு முன்னால் பேசிய உறுப்பினர்களும் குறிப்பிட்டார்கள்.
பிரெஞ்சு புரட்சி நடைபெறுவதற்கு முன்பு அங்கு மக்கள் உணவு கிடைக்காமல் பசியால் பரிதவித்த சமயத்தில் பிரெஞ்சு நாட்டில் மகாராணியாக இருந்த மேரி அண்டாய்னெட் “ரொட்டி கிடைக்காவிட்டால் என்ன, கேக் சாப்பிடுங்கள்” என்றாராம். அதேபோன்றே நம் பிரதமர் மோடியும் “கரன்சி நோட்டுகள் இல்லாவிட்டால் என்ன, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்ற பிளாஸ்டிக் நோட்டுகளை பயன்படுத்துங்கள்” என்கிறார். நாட்டிலுள்ள 113 கோடி மக்களில் எத்தனை பேரிடம் இதுபோன்ற டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் இருக்கின்றன?  2 கோடியே 60 லட்சம் பேர்களிடம்தான் கிரெடிட் கார்டுகள் இருக்கின்றன. 14 லட்சம் பேர்கள்தான்  டெபிட் கார்டுகள் மூலமாக சில்லரைக் கடைகளில் பொருள்களை வாங்குகிறார்கள். இதனால் நம் பொருளாதாரத்தை முழுமையாக இயங்க வைக்க முடியுமா? நம் நாட்டில் நேரடியாக கொடுக்கல் வாங்கல் மூலம் 80 சதவீதத்திற்கும் மேலான ரொக்கப் பொருளாதாரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. டிரக் டிரைவர்களிலிருந்து, மீனவர்கள் வரை, தினக்கூலி தொழிலாளிகளிலிருந்து விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் வரை அனைத்துத்தரப்பினரும் இன்றைய தினம் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு 2000 ரூபாய் நோட்டை வங்கியிலிருந்து நான் பெற்றேன். அதனை எடுத்துக் கொண்டு பொருள்களைக் கொடுக்க எவரொருவரும் முன்வரவில்லை.  இந்த 2000 ரூபாய் நோட்டுடன் நான் தில்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் சென்றபோது, விமான நிலையத்தில் இந்த நோட்டை வைத்துக்கொண்டு என்னால் எதுவும் வாங்க முடியவில்லை. பின்னர் சென்னையிலிருந்து நெல்லைக்கு ரயிலில் சென்றேன். ரயிலிலும் உணவோ, காப்பியோ இந்த நோட்டை வைத்துக்கொண்டு என்னால் வாங்க முடியவில்லை. பின்னர் நான் நெல்லையிலிருந்து சென்னைக்கு திரும்பிவந்து, அங்கிருந்து இப்போது தில்லிக்கும் வந்துவிட்டேன். அந்த நோட்டு இன்னமும் என்னிடம்தான் இருக்கிறது. எவரும் மாற்ற முன்வரவில்லை.
என்ன இது? இந்த நாட்டிற்கு நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?  நாடு முழுதும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று பாருங்கள். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வறுமையின் பிடியில் சிக்கி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.  அஸ்ஸாமில் நாளை மறுதினம் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. எனவே அங்கே மட்டும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று மத்திய அரசாங்கம் விதிவிலக்கு அளித்திருக்கிறது. ஆனால் வங்கத்தில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு, டார்ஜீலிங்கில் உள்ள தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்த விதிவிலக்கு கிடையாது. என்ன நடந்து கொண்டிருக்கிறது, இங்கே? இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எனக்கு முன் பேசிய மூத்த உறுப்பினர்கள் கூறினார்கள்.
அஸ்ஸாம் தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுக்கு விதிவிலக்கு அளிக்கும் நீங்கள், மற்றவர்களுக்கு ஏன் அளிக்கக்கூடாது?
மகாராஷ்ட்ரா அரசாங்கம் இன்றைய தினம் சினிமா டிக்கெட்டுகள் வாங்க பழைய நோட்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதித்திருக்கிறது. என்ன இது?  தேநீர் அருந்தவோ, உணவு சாப்பிடவோ நாம் 500 ரூபாய் நோட்டை 1000 ரூபாய் நோட்டை பயன்படுத்த முடியாது. ஆனால் சினிமா டிக்கெட்டுகள் மட்டும் வாங்கலாமாம். இதுதான் கறுப்பை வெள்ளையாக மாற்றுவதற்கான வழியா? எப்படி இப்படி எல்லாம் சிலவற்றிற்கு மட்டும்  விதிவிலக்கு அளிக்கிறீர்கள்?
புலன்விசாரணை நடத்தப்பட வேண்டும்
அடுத்து, நான்  சில விவரங்களை என் கையில் வைத்திருக்கிறேன். வங்கிக் கணக்கு எண், கொல்கத்தா, சென்ட்ரல் அவென்யுவில் உள்ள இந்தியன் வங்கியின் எம்ஐசிஆர் (MICR) எண், என் கையில் வைத்திருக்கிறேன். இது என்னவெனில், எட்டாம் தேதியன்று பிரதமர் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த அன்றைய தினம், அதற்குசில மணிநேரங்களுக்கு முன்னால்,  உள்ளூர் பாஜக கிளையின் சார்பாக 500 ரூபாய் நோட்டுகள், 1000 ரூபாய் நோட்டுகள்  ஒரு கோடி ரூபாய்க்கு  டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. நான் கூறுவது தவறு என்றால் நிரூபியுங்கள். எனக்கு சந்தோஷமாக இருக்கும்.  நான் கூறுவது தவறு என்று நிரூபியுங்கள். ஆனால் இது என்னிடம் உள்ள சாட்சியமாகும். அனைத்து விவரங்களையும் நான் வைத்திருக்கிறேன். எனவே, உறுப்பினர் சரத் யாதவ் ஜி கேட்டுக்கொண்டதைப்போல இதன்மீது புலன் விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். இதுதான் நாடு முழுவதும் நடந்திருக்கிறது.
அடுத்து இப்போது பே டிஎம் (Paytm) விளம்பரம் வந்திருக்கிறது. இதில் நமது பிரதமர் அவர்கள் தோன்றி,  காசு இல்லா சமூகத்திற்கு மாறுங்கள் (move to a cashless society) என்று கூறிக் கொண்டு இருக்கிறார். இனி `ஜெய் ஹிந்த்` எல்லாம் கிடையாது. இப்போது நமது பிரதமர் விளம்பரத்தில் தோன்றி `ஜியோ ஹிந்த்`  கூறிக்கொண்டிருக்கிறார். என்ன நடந்து கொண்டிருக்கிறது?
உலகில் ஒரு நாடுதான் காசு இல்லா பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. அது ஸ்வீடன்.   அது அதற்காக நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளையும் 100 சதவீதம் இணையத்துடன் (Internet) இணைத்து விட்டது.  எனவே அங்கே அனைத்தையும் உங்களிடம் உள்ள ஐபேட் மூலம் இணையம் வழியாக செய்து கொள்ள முடியும்.
ஆனால் நம் நாட்டில் இன்றையதினம் இணையத்தின் மூலம் பிணைக்கப் பட்டிருப்பவர்கள் எத்தனை பேர்?  உங்களிடம் உள்ள 4ஜி மற்றும் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் மூலமும் எத்தனை பேரை பிணைத்திருக்கிறீர்கள்? வசதியானவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடன் நான்கு போன்கள் வைத்திருக்கிறார்கள். நீங்கள் நாட்டில் விற்பனையாகியுள்ள போன்களின் எண்ணிக்கையை வைத்து நபர்களை எண்ணிவிட முடியாது. 
இந்தியா போன்ற ஒரு நாட்டில், காசு இல்லா பொருளாதாரம் எப்படி சாத்தியமாகும்? இங்கே சுமார் 86 சதவீத மக்கள் ரொக்க பரிவர்த்தனை மூலமாகத்தான் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொடுக்கல் வாங்கல் அனைத்தையும் பணப் பரிவர்த்தனை மூலமாகத்தான் செய்துகொண்டு வருகிறார்கள். அவை முற்றிலும் வெள்ளைப் பணமாகும். அவை கறுப்புப் பணம் அல்ல. கறுப்புப் பணம் என்றால் என்ன என்பது குறித்து பின்னால் வருகிறேன்.
இவர்கள் செய்திருக்கும் வேலை ஒரு விஷயத்தை எனக்கு நினைவுபடுத்துகிறது.  ரோமன் செனட்டர் ஒருவர் இருந்தார். மத்தியகால வரலாற்றுக்குத் திரும்பிச் செல்வதற்காக என்னை மன்னிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். அவர் பெயர், கிராக்கஸ். அவர் ஒரு ரோமன் மகாராஜா குறித்து பேசுகிறார். அவர் பெயர் ஏதோ ஒரு சீசர் என்று வரும். ஜூலியஸ் சீசர் அல்ல. அவரது முழுப் பெயரையுமே சொல்கிறேன். சீசர் மார்கஸ் அருளியஸ் கம்மாண்டஸ் அண்டோனிமஸ் அகஸ்டஸ் (Caesar Marcus Aurelius Commodus Antoninus Augustus) என்பது அவர் முழுப் பெயர் ஆகும்.  
துணைத் தலைவர்: செனட்டர் என்ன சொன்னார் என்று சொல்லுங்கள்.
சீத்தாராம் யெச்சூரி: மன்னித்துக்கொள்ளுங்கள். நீங்கள் கடிகாரத்தைப் பார்த்ததால் நான் சற்றே தடுமாறிவிட்டேன்.
துணைத்தலைவர்: (சிரித்துக்கொண்டே) நான் கடிகாரத்தைப் பார்த்தால் உங்களுக்கு என்ன? நான் ஒன்றும் உங்களைப் பேசாமல் தடுத்திடவில்லையே.
சீத்தாராம் யெச்சூரி: மிகவும் நன்றி. நீங்கள் எப்போதுமே மிகவும் கருணையுள்ளவர்தான். எப்போதுமே நீங்கள் அனுசரித்துப் போவீர்கள். இப்போது ரோமன் செனட்டர் என்ன சொன்னார் என்று சொல்கிறேன்.  அவர் கூறுவதை அப்படியோ மேற்கோளாகத் தருகிறேன். “ரோம் எப்படி இருக்கிறது என்று அவருக்கு (மன்னருக்கு)த் தெரியும் என்றே நான் நினைக்கிறேன். ரோம் மக்கள் ஓர் ஒழுங்கற்ற கும்பல். (mob)  அவர்களுக்காக சில மந்திர தந்திரங்களைச் செய்யுங்கள். அவர்கள்  தடுமாற்றம் அடைந்துவிடுவார்கள். அவர்களின் சுதந்திரத்தைப் பறித்துவிடுங்கள். அப்போதுகூட அவர்கள் கர்ஜிப்பார்கள். ரோமின் இதயத்துடிப்பு என்பது செனட்டின் பளிங்குக்கற்கள் அல்ல. இது  ரோம் நகரின் நடுவட்டரங்கில் உள்ள கேளிக்கைக்கூடத்தின் மணலாகும். அவர் (மன்னர்) அவர்களுக்கு மரணத்தைக்கொடுப்பார். அப்போதும் அவர்கள் அவரை நேசிப்பார்கள்.”
இது ஒரு மோசமான முன் அறிகுறியாகும். இப்போது நடைபெறும் விஷயங்களைப் பார்க்கும்போது இதுதான் என் நினைவுக்கு வருகிறது. 
மக்கள் மிகவும் மோசமான முறையில் துன்பதுயரங்களுக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார்கள்.  இவ்வாறு ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று சொன்னதன் மூலம் இந்த அரசாங்கம் நான்கு முனைகளில் சாதனைகள் படைத்திடும் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு அவர்கள் கூறியவற்றில் ஏதேனும் கொஞ்சம் அவர்கள் வெற்றி பெற்றாலாவது நான் இந்த அரசாங்கத்தை ஏதேனும் கொஞ்சம் பாராட்டலாம். ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.
மாண்புமிகு பிரதமர் அவர்கள் நான்கு நோக்கங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். அவற்றில் ஒன்று கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவதாகும். இங்கே நாம் அனைவருமே கடந்த பத்தாண்டுகளாகவே கறுப்புப் பணத்தைப்பற்றிப் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். கறுப்புப்பணத்தைக் கட்டுப்படுத்திட என்ன செய்ய வேண்டும் என்று நானே நான்கைந்து தடவைகள் பேசியிருக்கிறேன். அது கட்டுப்படுத்தப்பட வேண்டும், அது ஒழிக்கப்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.  நம் நாட்டில் உள்ள கறுப்புப்பணம் குறித்து உலக வங்கியின் புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன? நம் நாட்டில் மொத்த இந்தியப் பொருளாதாரத்தில் 20.7 சதவீதம், சுமார் 21 சதவீதம், கறுப்புப் பணம் இருப்பதாக அது சொல்கிறது. அதாவது நம் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமாக கறுப்புப் பணம் இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதிலோ, இது ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலோ எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், இந்த கறுப்புப் பணம் எங்கே இருக்கிறது?
கறுப்புப் பணத்தில் 6 சதவீதம் மட்டுமே ரூபாய் நோட்டுகளாக இருக்கிறது. நினைவில் கொள்ளுங்கள், இவ்வாறு கறுப்புப் பண பேர்வழிகள் எவரும் கருமிகள் அல்ல. அவர்கள் தங்கள் கறுப்புப்பணத்தை தலையணைக்குக் கீழே ஒன்றும் பதுக்கிவைத்துக் கொள்ளவில்லை. அதை அவர்கள் சுற்றுக்கு விட்டிருக்கிறார்கள். அவர்கள் கறுப்புப்பணம் அதன்மூலம் அவர்களுக்கு மேலும் அதிக அளவில் கறுப்புப்பணத்தைக் கொண்டுவரும். அவர்களின் கறுப்புப் பணம், ரியல் எஸ்டேட்டில் இருக்கிறது. இப்போது 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொன்னபிறகு, அவை 15 ஆயிரம் ரூபாய் நாணயங்களாக, தங்க நாணயங்களாக, மாறிவிட்டன. கடந்த நான்கு நாட்களில் மட்டும் ஏராளமாக தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. ஒரு மதிப்பீட்டின்படி தங்க இறக்குமதி மும்மடங்காக ஆகியிருக்கிறது. தங்க நகை வியாபாரிகள் விளம்பரங்கள் செய்கிறார்கள். நானே என் போனில் ஏராளமான குறுஞ்செய்திகளைப் பெற்றிருக்கிறேன். இவ்வாறு அவர்கள் எல்லோருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். “எங்கள் கடைகள் டிசம்பர் 20 வரை 24 மணி நேரமும் திறந்திருக்கும். நாங்கள் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொள்வோம். நீங்கள் கறுப்புப் பணத்தை தங்கமாக மாற்றிக் கொள்ள முடியும்.”
எனவே அரசாங்கம் இவ்வாறு 500 ரூபாய்,1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலமாக, நீங்கள் கறுப்புப்பணத்தைக் கைப்பற்றி இருக்கிறீர்களா? அல்லது அவற்றை தங்க நாணயங்களாக மாற்ற வசதி செய்து கொடுத்திருக்கிறீர்களா?
இதே பிரதமர்தான் கறுப்புப் பணம் குறித்து முன்பு நாட்டு மக்களிடையே  பேசுகையில்,  கறுப்புப் பணத்தில் 90 சதவீதம் வெளிநாடுகளில் இருக்கிறது. இதை நாம் கூறவில்லை. அவர்தான் கூறினார். 2014 தேர்தலின்போது அவர் மேலும் வெளிநாடுகளில் உள்ள கறுப்புப்பணத்தை யெல்லாம் கொண்டுவந்து, நாட்டு மக்கள் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் தலா 15 லட்சம் ரூபாய் போடப்படும் என்று உறுதிமொழியை அளித்தார். அவ்வாறு வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டுவர நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?  
இவ்வாறு ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தால் அந்தப் பணம் எல்லாம் திரும்பி வந்துவிடுமா? ஸ்விஸ் வங்கி அதிகாரிகள் தங்களிடம் யார் யார் பணம் டெபாசிட் செய்திருக்கிறார்கள் என்ற பட்டியலை அரசாங்கத்திடம் அளித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.  நமது நிதி அமைச்சரோ, “சட்டப்பிரச்சனைகள் காரணமாக அவர்களின் பெயர்களை வெளியிட முடியாது,” என்கிறார். மொரிசீயல் மார்க்கம் குறித்தும், சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் உங்களுக்கு நன்றாகத் தெரியும்.  நம் நாட்டின் கறுப்புப் பணத்தில் பாதிக்கும் மேலாக அவர்களிடம்தான் இருக்கிறது. அவற்றைக் கொண்டுவருவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காது  நீங்கள் கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறீர்கள். இவ்வாறு கறுப்புப்பணத்தைக் கட்டுப்படுத்திட முடியுமா?
முதலைகளைக் கொல்வதாக எண்ணி மீன்களை கொன்றுவிட்டார்
நம்நாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகளில் இருக்கும் கறுப்புப்பணத்தின் அளவு வெறும் 6 சதவீதம் மட்டுமேயாகும். அதைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் பிரதமர் இந்த அறிவிப்பினைச் செய்திருக்கிறார்.  ஒரு குளத்தில் உள்ள முதலைகளைக் கொல்ல வேண்டும் என்பதற்காக குளத்தில் உள்ள தண்ணீரை எல்லாம் அப்புறப்படுத்திவிட்டார்.  பெரிய முதலைகள் நீரில்லாவிட்டால் நிலத்திற்கு வந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் என்பதை அவர் மறந்துவிட்டார். பெரும் முதலைகள் தப்பித்துக்கொண்டுவிட்டன. இறந்தது என்னவோ சிறிய மீன்கள்தான். ஆம், இப்போது இறந்து கொண்டிருப்பது சிறிய மீன்கள்தான். முதலைகள் தொடர்ந்து இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
இன்றையதினம் செய்தித்தாள்களில் என்ன பார்க்கிறோம். பாரத ஸ்டேட் வங்கி, தங்கள் வராக்கடன்களில் சுமார்  7 ஆயிரம் கோடி ரூபாயை,  ரத்து செய்திருக்கிறது.
அருண் ஜெட்லி (நிதி அமைச்சர்): கடன்களை ரத்து செய்யவில்லை. செயல்படும் சொத்திலிருந்து (performing assets) செயலற்ற சொத்தாக (non-performing assets) மாற்றப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். கடன் ரத்து செய்யப்படவில்லை.
சீத்தாராம் யெச்சூரி: சரி, அப்படியே வைத்துக்கொள்வோம். இந்த வசதியை நீங்கள் எங்கள் விவசாயிகளுக்குச் செய்து தர தயாராய் இருக்கிறீர்களா?  பிரச்சனை என்னவென்றால் இவ்வாறு செயலற்ற சொத்தாக மாற்றிவிட்டு (பின்னர் தள்ளுபடி செய்திடும்) தொகை 2014க்கும் 2016க்கும் இடையே மும்மடங்காகி இருக்கிறது.
சரி மீண்டும் விஷயத்திற்கு வருகிறேன். கறுப்புப்பணப் பிரச்சனையை இந்த வழியில் தீர்த்திட முடியாது. கறுப்புப் பணம் ஒன்றும் இருப்பாக எங்கும் இல்லை. அது இயங்கிக் கொண்டே இருக்கிறது. மொத்தம்உள்ள கறுப்புப் பணத்தில் 5 அல்லது 6 சதவீதம் வேண்டுமானால் இருப்பாக இருக்கலாம். ஆனால் பெரும்பகுதி இயங்கிக்கொண்டே, சுழன்று கொண்டே, இருக்கிறது. அதனை நீங்கள் தடுத்து நிறுத்திவிடவில்லை. அதனை நீங்கள் தடுத்து நிறுத்தாமல் கறுப்புப் பணத்தை  நிறுத்திவிட முடியாது. இப்போது நீங்கள் செய்திருப்பதன்மூலம் சாமானிய மக்களைத்தான் கொன்று கொண்டிருக்கிறீர்கள். சிறிய மீன்கள் இறந்து கொண்டிருக்கின்றன, பெரிய முதலைகள் உண்மையில் தங்கள் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு பிரதமர் கூறியவற்றில் உள்ள முதல் நோக்கம் நிறைவேற்றப்பட முடியவில்லை.
இரண்டாவது நோக்கம், கள்ள நோட்டுகள்  (counterfeit notes) குறித்ததாகும். கொல்கத்தாவில் உள்ள இந்தியன் ஸ்டாடிஸ்டிகல் இன்ஸ்டிட்யூட் செய்துள்ள ஆய்வின்படி, நாட்டில் புழக்கத்தில் உள்ள 1,418 லட்சம் கோடி ரூபாயில் வெறும் 0.028 சதவீதம் அல்லது 400 கோடி ரூபாய்தான் கள்ள நோட்டுகள் ஆகும். இதனை நிதி அமைச்சரும் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.  அதை ஒழிப்பதாகக் கூறி இப்போது கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் சுமைகளை ஏற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.
அடுத்து, இப்போது நீங்கள் வெளியிட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுக்கு கள்ள நோட்டு வராது என்று என்ன உத்தரவாதம்? நாம் ஏற்கனவே பெங்களூரில் கள்ள 2000 ரூபாய் நோட்டை பார்த்துவிட்டோம். கள்ள நோட்டு ஒழிக்கப்பட வேண்டியது தேவை. அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் அதை முதலில் வரவேற்கப்போவது நாங்கள்தான்.  கள்ள நோட்டு அடிப்பவர்களைக் கண்டுபிடியுங்கள். கள்ள நோட்டு அடிக்கப்படுவதை நிறுத்துங்கள். நடவடிக்கை எடுங்கள். தண்டியுங்கள். இனி எவரும் அவ்வாறு கள்ள நோட்டு அடிக்காதவாறு கடும் தண்டனை விதியுங்கள். நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக நிற்போம். ஆனால் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு இது வழி அல்ல.  இவ்வாறு கூறுவதும் பாசாங்குத்தனமான ஒன்றேயாகும்.
அடுத்து, மூன்றாவதாகக் கூறுவது, இதன்மூலம்  பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பது தடுத்து நிறுத்தப்படும் என்பதாகும். 26/11 சம்பவத்திற்குப்பின் இந்த அவையில் நாம் பயங்கரவாதத்தை ஒழித்திட புதிய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று விவாதித்தோம்.    இப்போது அவைத்தலைவராக இருப்பவர்தான் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். பயங்கரவாதிகளுக்கு நிதி வருவதைத் தடுத்து நிறுத்துவது எப்படி என்று அப்போது அனைவரும் ஒன்றாக அமர்ந்துதான் விவாதித்தோம். இவற்றில் அதிகமான அளவிற்கு எலக்ட்ரானிக் டிரான்ஸ்பர் மூலமாகத்தான் வருகிறது. அவ்வாறு வருவதை எந்த சட்டத்தின்கீழ் தடுத்து நிறுத்துவது என்றுதான் யோசித்திட வேண்டும். மும்பை,  தாஜ் ஓட்டலில் வந்து தங்கியிருந்த பயங்கரவாதிகள் எவரும் சாக்குமூட்டைகளில் பணத்துடன் வந்து அதைச் செய்திடவில்லை. இவ்வாறு கூறுவதன் மூலம் நீங்கள் யாரை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? பயங்கரவாதிகளுக்குப் பணம் வருவது நிறுத்தப்பட வேண்டும் என்றால் எலக்ட்ரானிக் டிரான்ஸ்பரை வெட்டிட வேண்டும். உலகில் பல நாடுகள் இதனைச் செய்திருக்கின்றன.  பயங்கரவாதிகளுக்குப் பணம் வருவதைத் தடுத்திடுவது தொடர்பாக ஐ.நா. சாசனம் மற்றும் தீர்மானம் இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றுங்கள். அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, இதுவா வழி?
கடைசியாக, லஞ்சு ஊழல். 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்துவிட்டால், லஞ்ச ஊழல் ஒழிந்துவிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இப்போது வெளியாகியுள்ள 2000 ரூபாய் நோட்டு மூலம் இது இரட்டிப்பாகிவிடும்.  எப்படி நீங்கள் லஞ்ச ஊழலை ஒழிக்கப்போகிறீர்கள்?
பொதுவாக லஞ்சம் குறித்து விவாதிக்கப்படும்போதெல்லாம், அதனைப் பெறுபவரைப்பற்றி மட்டுமே பார்க்கிறீர்கள். கொடுப்பவர்களைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. ஓர் ஏழை ஒரு பத்து ரூபாய் கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதை அவர்கள் லஞ்சம் என்று சொல்வதில்லை. அதை அவர்கள் `சேவைக் கட்டணம்` என்கிறார்கள். கார்ப்பரேட்டுகளின் கணக்குகளை ஆராய்வோமானால், அவர்கள் இவ்வாறு பெரிய அளவில் கமிஷன்கள் கொடுத்திருப்பதை `சேவைக் கட்டணம்` என்றுதான் குறித்திருப்பார்கள். அது லஞ்சம் அல்ல. ஆனால் அதுவே ஓர் ஏழை பத்து ரூபாய் யாருக்காவது கொடுத்தால் அது லஞ்சம். அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவீர்கள். ஆனால் பெரிய மீன்கள் – பெரிய கார்ப்பரேட்டுகள் – இங்குள்ள பெரிய கட்சிகளுக்கு கொடுப்பதற்கு என்ன பெயர்? அவ்வாறு கார்ப்பரேட்டுகள், பெரிய கட்சிகளுக்குக் கொடுப்பதை நிறுத்தாமல் இந்த நாட்டில் எப்படி லஞ்சத்தை தடுத்திட முடியும்? இதில் ஏன் நாம் அனைவரும் ஒத்துப்போகக் கூடாது? நான் இதனை இங்கே பலமுறை கூறி களைத்துப்போய்விட்டேன். எனினும் மீண்டும் அதனை எழுப்புகிறேன். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கார்ப்பரேட்டுகள் நிதி கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும்.  கார்ப்பரேட்டுகள் அந்தத் தொகைகளை அவர்கள் விரும்பினால் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம்  அல்லது மத்திய அரசிடம் நேரடியாகத் தந்துவிடட்டும். பின்னர் நாம் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து தேர்தல் செலவுகளை எப்படிச் செய்வது என்று பேசுவோம்.
கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு பணம் தருவது என்பது அவர்களைப் பொறுத்தவரை ஒரு முதலீடாகும். எனவே அதை முதலில் நிறுத்துங்கள்.
இதில் இரண்டாவது விஷயம், அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் அவர்கள் செய்திடும் செலவினங்களையும் சேர்த்திடுங்கள்.   இதற்கு விதிவிலக்கு எவருக்கும் கொடுக்காதீர்கள். அரசியல் கட்சிகள் அவர்களுக்கு என்ன தேவையோ, எப்படித் தேவையோ அப்படி செலவு செய்கிறார்கள். கார்ப்பரேட் ஒருவரின் சொந்த விமானத்தில் பிரதமராகப் போகிறவர் பயணம் செய்திட முடியும். அவரது கட்சிக்காக நூற்றுக்கணக்கான ஹெலிகாப்டர்களை அமர்த்திக்கொள்ள முடியும். இதனை கட்சி நிதி என்று சொல்கிறார்கள். இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது? எனவே, இவற்றை நிறுத்துங்கள்.  லஞ்ச ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் உண்மையிலேயே நீங்கள் அக்கறை உள்ளவர்கள் என்றால் இதனைச் செய்திடுங்கள்.
அடுத்த உங்கள் நிதி அமைச்சர் அந்நிய பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்திற்கு (FCRA-Foreign Contribution Regulation Act) திருத்தம் கொண்டுவந்திருக்கிறார். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுத்தால் அது தவறு இல்லை என்று திருத்தம் கொண்டுவந்திருக்கிறார். இது ஏன்?
அருண்ஜெட்லி:  நாங்கள் கொண்டுவந்திருக்கும் திருத்தம் என்னவென்றால், இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் கொஞ்சம் அந்நியப் பங்குகளும் இருக்குமாயின், அதனை வெளிநாட்டுப் பங்குகளாகக் கருதக் கூடாது. அவ்வாறு கருதினால் அது மிகப்பெரிய அளவில் கேடு பயத்திடும். எனவேதான் அவ்வாறு திருத்தம் கொண்டுவந்தோம்.
சீத்தாராம் யெச்சூரி: அப்படியானால் இந்தியாவில் உள்ள நிறுவனம் அயல்நாட்டில் உள்ளவர்களுக்கு நிதி அனுப்பி, அவர்கள் மீண்டும் இங்கே திரும்ப அனுப்பலாம். (குறுக்கீடு) எப்படியோ, கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதை தடுத்து நிறுத்துங்கள்.
இவ்வாறு ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் அறிவித்ததற்கான நான்கு காரணங்களுமே இதனால் நிறைவேறப்போவதில்லை.
அடுத்து, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டு புதிய நோட்டுகளைக் கொடுத்திட வங்கிகளை அனுமதித்திருக்கிறீர்கள். ஆனால் மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் நிலைமை என்ன? மாநில அளவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மாவட்ட, கிராமப்புற கூட்டுறவு வங்கிகளின் நிலை? நாட்டில் உள்ள மக்களில் பெரும்பகுதியினர் கிராமப்புற கூட்டுறவு வங்கிகளுடன்தான் தங்கள் தொடர்பினை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இவை மிக மிக வளமான வங்கிகள். இவற்றின் வராக்கடன்கள் அல்லது செயலற்ற சொத்துகள் (NPAs) ஒரு சதவீதம் அல்லது  2 சதவீதத்திற்கும் குறைவானவையாகும். ஆனால் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவர்களுக்கு நீங்கள் அனுமதி அளித்திடவில்லை. இதன் பொருள், பெரும் பணக்காரர்கள் தங்கள் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும். நாட்டிலுள்ள மக்களில் 86 சதவீதமாக இருக்கின்ற கிராமப்புற மக்கள் தங்களுடைய வங்கிகளில் அவ்வாறு நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியாது என்பதுதானே. இல்லையென்றால், இதற்கு வேறென்ன அர்த்தம்? அதனால்தான் இந்த ஆட்சியை மக்கள் முகமது-பின்-துக்ளக் ஆட்சி என்று கூறத் தொடங்கி இருக்கிறார்கள்.
எனவே, இவ்வாறு ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது பிரதமர் கூறிய எந்த நோக்கத்தையும் நிறைவேற்றப் போவது இல்லை.  மக்களின் துன்ப துயரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
கடந்த நான்கு நாட்களில் வங்கிகளில் நிற்கும் மக்களின் கியூ வரிசை வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது மிகவும் பரிதாபகரமான நிலை. சமூக வலைத்தளங்களில் ஒரு ஜோக் சுற்றிக்கொண்டிருக்கிறது. எவரோ ஒருவர், எவரோ ஒருவரிடம் கேட்கிறார்: “இங்கிருந்து வங்கி எவ்வளவு தூரம்?” அதற்கு அவர், ”இரண்டு கிலோமீட்டர்” என்கிறார். ”பஸ்ஸில் போகலாமா? அல்லது நடந்துதான் போக வேண்டுமா? ” அதற்கு அவர் பதில், ”இரண்டும் வேண்டாம். என் பின்னே நில்லுங்கள், நான் வங்கிக்கு  போவதற்காகத்தான் அதற்கான வரிசையில்தான் நின்று கொண்டிருக்கிறேன்.” இதுதான் இன்றைய நிலை, ஏன் இப்படி நாட்டு மக்களைத் துன்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறீர்கள்?
நம் நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள மக்களில் 80.8 சதவீத மக்கள் எந்த வங்கிகளுடனும் தொடர்பின்றிதான் இருந்து வருகிறார்கள். பூகோளரீதியாக நம் நாட்டின் 93 சதவீதம் வங்கிகள் இல்லாத இடமாகும். எந்த உலகத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்? கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஈ-வாலட்டுகள், பே டிஎம்கள் – இவை அனைத்தும் நாட்டிலுள்ள மக்களில் எத்தனை சதவீதத்தினரிடம் இருக்கின்றன? மிகமிக குறைந்த எண்ணிக்கையிலான சதவீதத்தினரே இவற்றைப் பெற்றிருக்கிறார்கள்.  90 சதவீத மக்கள் இதில் எதனையும் பெறாத நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.      
நாட்டிலுள்ள மொத்த பணப் பரிவர்த்தனையில் 86 சதவீதம் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளின்மூலம்தான் நடந்து வந்தது. இதனைத் திடீரென்று திரும்பப்பெற்றதன்மூலம் பொருளாதாரத்தை முழுமையாக நிலைகுலைய வைத்திருக்கிறீர்கள். பணத்தை மாற்றமுடியாமல் இதுவரை 26 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். இது மேலும் அதிகரித்திடும். மக்கள் தங்கள் தந்தையரையோ, தாயாரையோ, குழந்தைகளையோ மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல முடியவில்லை. இந்த நாட்டை எங்கே இழுத்துக்கொண்டு செல்கிறீர்கள் என்றே எனக்குத் தெரியவில்லை.     
அஸ்ஸாமில் இடைத்தேர்தல் என்பதால் அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்துள்ளீர்கள். ஆனால் வங்கத்தில் உள்ளவர்களுக்கோ டார்ஜீலிங்கில் உள்ளவர்களுக்கோ கிடையாது.  ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவிப்பதற்கு ஒருசில மணிநேரத்திற்கு முன் வங்கத்தில் உள்ள உங்கள் கட்சிக் கிளை ஒரு கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்கிறது.     இதெல்லாம் என்ன? இவை குறித்து புலனாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழு அமைத்திடுவோம். முறையான விசாரணை மேற்கொண்டு அரசாங்கத்தின் நோக்கம் என்ன என்று கண்டறிய வேண்டும்.
ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்வுக்கு முன்பும் இதேபோன்று ஏதோ ஒரு பிரச்சனை முன்னுக்கு வந்து, நாடாளுமன்ற விவாதமே தடம்புரண்டுவிடுகிறது. நம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்ப துயரங்களை நம்மால் விவாதிக்க முடியவில்லை. எப்படி அவர்கள் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நம்மால் பேச முடியவில்லை.  
நீதித்துறை பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
உயர்நீதிமன்றங்களில் 452 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. ஏழை மக்கள் சொல்லொண்ணாத் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். விவசாயிகள் தற்கொலைகள் 26 சதவீதம் அதிகரித்திருக்கிறது.  இப்போது பிரதமர் மாற்று ஏற்பாடுகளுக்கு இன்னும் 50 நாட்கள் தேவை என்று கூறியிருக்கிறார். அதுவரை பழைய நோட்டுகளை செல்லும் என்று அறிவியுங்கள்.  டிசம்பர் 30 வரை பழைய நோட்டுகள் செல்லும் என்று அறிவித்திடுங்கள்.  
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
(ச.வீரமணி)                                                                                                            


No comments: