Saturday, November 26, 2016


(1963ல் சோவியத் ஒன்றியத்திற்கு பயணம் மேற்கொண்ட பிடல் காஸ்ட்ரோவுக்கு பள்ளிக் குழந்தைகள் அளித்த உற்சாக வரவேற்பு...)
1963 ஏப்ரல் 28 ஆம் தேதி துவங்கி 40 நாட்கள், கியூபப் பிரதமர் பிடல் காஸ்ட்ரோ சோவியத் ஒன்றியத்தில் விரிவான பயணம் மேற்கொண்டார். மாஸ்கோவின் கிரெம்ளின் மாளிகையில் சோவியத் அரசு சார்பில் அவருக்கு அளிக்கப்பட்ட எழுச்சிமிகு வரவேற்பின் போது ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது.
தோழர் குருசேவ் அவர்களே, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு தோழர்களே, எங்கள் பேரன்பிற்குரிய சோவியத் குடிமக்களே, சோவியத் ஒன்றியத்திற்கு நாங்கள் மேற்கொண்டுள்ள இந்தப் பயணம், சோவியத்தின் பிரம்மாண்ட வளர்ச்சியைப் பார்த்து, எங்களை வியந்து நிற்கச் செய்கிறது என்பது மட்டுமல்ல; மிகப்பெரிய அளவிற்கு பொருளாதார, அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் கூட. எங்களது எதிரிகள் , நாங்கள் வீழ்ந்து விடுவோம் என்று நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் சோவியத் மக்களுடன் இருக்கிறோம்.
சோவியத் மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். சோவியத் மக்களுடன் பேசும்போது, எனது சொந்த மக்களுடன் பேசுவதாகவே உணர்கிறேன். சோவியத் மக்கள், எங்களது மகத்தான புரட்சியை, அந்தப் புரட்சியை பாதுகாப்பதற்கான எங்களது முயற்சிகளை, எங்களைச் சூழ்ந்துள்ள ஆபத்துகளை, நாங்கள் எதிர்கொண்டுள்ள கடினமான சூழல்களை உணர்வுப்பூர்வமாக அறிந்தவர்கள். ஏனென்றால் சோவியத் மக்கள் இந்த உலகின் மகத்தான புரட்சியை நடத்திக் காட்டியவர்கள். அவர்களது மகத்தான வெற்றிகள் , நினைத்துப் பார்க்க முடியாத தியாகங்கள், எதிரிகளை மிரள வைக்கும் மிகப் பிரம்மாண்டமான சாதனைகள் உலகையே வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன.சோவியத் ஒன்றியத்தின் அசைக்க முடியாத சாதனைகளை நாங்கள் பெருமையுடன் பார்க்கிறோம்.
இந்த மாபெரும் தேசத்தின் மக்கள், புரட்சியின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் உறுதியுமே இந்தச் சாதனைகளின் அடிப்படை. இந்த பிரம்மாண்டமான சாதனைகளை பெரும் பணக்கார வர்க்கம்நிகழ்த்தவில்லை; அதிகாரத்தை இதுவரையிலும் கையில் வைத்திருந்த வர்க்கம் நிகழ்த்தவில்லை; இந்த பிரம்மாண்டமான சாதனைகள் சோவியத் ஒன்றியத்தின் மிக எளிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது; ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்டு , சுரண்டப்பட்ட வர்க்கங்களால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது; ஒரு நாட்டை ஆட்சி நடத்திய அனுபவம் ஏதும் இல்லாத எளிய மக்களால் நடத்தப்பட்டிருக்கிறது; பல்கலைக்கழகங்களில் படித்து பட்டம் பெறாத கிராமப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
அவர்கள் இந்த உலகில் இதுவரை இல்லாத ஒரு புதிய சமூகத்தை படைத்திருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களை அதிகாரம் பெற்றவர்களாக மாற்றியிருக்கிறார்கள். சோவியத் தொழிலாளர்களாலும் விவசாயிகளாலும் படைக்கப்பட்ட இந்த மகத்தான சாதனைக்கு பின்னால் இருப்பது, சோவியத் ஒன்றியத்தை வழிநடத்துவதன் மூலமாக உலகத் தொழிலாளர் வர்க்கத்திற்கு உத்வேகத்தை அளித்துக் கொண்டிருப்பது சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, அந்த மகத்தான கட்சிக்கு செவ்வணக்கம் செலுத்துகிறேன்.



No comments: