Wednesday, November 30, 2016

செல்லாத 100 ரூபாய்களை அனுப்பிவைக்கும் ரிசர்வ் வங்கி! அதிகாரிகள் கூட்டமைப்பு அம்பலப்படுத்துகிறது


ரிசர்வ் வங்கியின் தவறுகளே பண முடக்கம் பிரச்சனைக்கு காரணம் என அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.இதுகுறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் டி.தாமஸ் பிராங்கோ ராஜேந்திரதேவ் புதனன்று (நவ. 30) செய்தியாளர்களிடம் கூறியதாவது:கடந்த 8ம் தேதி இரவு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது நாட்டின் பெரும்பாலான மக்களை கடுமையாக பாதித்துள்ளது. பெருமுதலாளிகளும், பெரிய நிறுவனங்களும் பாதித்ததாகத் தெரியவில்லை. 2 நாட்களில் ஏடிஎம் மையங்கள் செயல்படும் என்று அரசு அறிவித்தது.
ஆனால் இன்னும் பல ஏடிஎம் மையங்களில் 2,000 ரூபாய் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 4,500 ரூபாயாக இருந்ததை 2,000 ரூபாய் வரை தான் எடுக்க முடியும் என்று மாற்றியது சாதாரண மக்களை பாதித்துள்ளது.அரசும், ரிசர்வ் வங்கியும் போதுமான ரூபாய் நோட்டுக்கள் உள்ளதாக தவறான செய்திகளை தெரிவிக்கின்றன. ஆனால் போதுமான 100 ரூபாய் நோட்டுக்கள் இல்லை. புதிய 500 ரூபாய் நோட்டு போதுமான அளவு வரவில்லை. வரலாற் றில் முதன்முறையாக அழுக்கடைந்த செல்லாத 100 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கியுள்ளது. அதேபோல் 20, 50 ரூபாய் நோட்டுக்களும் வழங்கப்பட்டுள்ளன.
மை வழங்காமலே மை வைக்கச் சொன்னது வங்கிகளில் பிரச்சனையை ஏற்படுத்தியது. கூட்டம் அலை மோதியதால் மை வைக்காமலே பணம் கொடுக்க நேர்ந்தது. இதில் சாதாரண மக்களே பாதிக் கப்பட்டனர்.திருமண செலவுக்கு 2.5 லட்சம் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தவுடனே பொதுமக்கள் திருமண பத்திரிகைகளு டன் வங்கிக்கு வந்து விட்டனர். 3 நாட்களுக்கு பிறகு வந்த சுற்றறிக்கையைப் பார்த்தால் யாருக்கும் பணம் கொடுக்க முடியாது. வாடிக்கையாளர்கள் வங்கி ஊழியர்களிடம் சண்டை போடுகின்றனர்.
தற்போது 24 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்கலாம் என்று விதிகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், ரிசர்வ் வங்கி புதிய 500, 2000 ரூபாய் மற்றும் 100 ரூபாய் கட்டியவர்களுக்கே பொருந்தும் என்று கூறுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ஏதோ வங்கிகள்தான் தர மறுப்பதாக தவறாக நினைக்கிறார்கள். நிதித் துறை சம்மந்தமான அறிவிப்புகளை நிதிச் செயலாளர்கள் வெளியிடாமல் பொருளாதாரத்துறை செயலர் வெளியிடுவதால்அது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது.
ரிசர்வ் வங்கியின் தவறுகளே பிரச்சனைக்கு காரணம்
20 நாட்களுக்குப் பின்னர் ரிசர்வ் வங்கி ஆளுநர், முனைவர் உர்ஜித் பட்டேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் போதுமான அளவு பணம் உள்ளது என்றும் அதை வங்கிகள் எடுத்து பட்டுவாடா செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அது உண்மையல்ல. சென்னை ரிசர்வ் வங்கியே போதுமான பணம் இல்லை என பலமுறை தெரிவித்துள் ளது. பொறுப்புள்ள ஆளுநர் இப்படி மக்களை திசை திருப்பி வங்கிகளுக்கு பிரச்சனைகள் ஏற்படுத்தக் கூடாது. பல இடங்களில் வாய்த் தகராறு, கை கலப்பு, தாக்குதல்கள் நடக் கின்றன. ரகசியமாக வைக்க வேண் டும் என்பதால் போதுமான புதிய ரூபாய் நோட்டுக்கள் நவ. 8க்கு முன் அச்சடிக்க முடியவில்லை எனக் கூறுகின்றனர்.
ஒரு மாதத்திற்கு முன்பே 2000 ரூபாய் நோட்டுக் களை வங்கிக்கு அனுப்ப முடியும் போது, ஏன் 500 ரூபாய் நோட்டுக் களை அனுப்ப முடியாது? ரகசியம் தேவையில்லை. ஏற்கனவே மாதம் 10 லட்ச ரூபாய்க்கு மேல் கணக்கில் வரவு வந்தால் அந்த அறிக்கை அனுப்பப்ப டுகிறது. அதேபோல் 2 லட்ச ரூபாய்க்கு மேல் யார் செலுத்தி னார்கள் என்ற அறிக்கையை கேட்டு பெறமுடியும்.1969ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது, பொதுத் துறை வங்கிகளில் ஒரு அதிகாரிகள் பிரதிநிதியும், ஊழியர் பிரதிநிதியும் இருக்க வேண்டும் எனக் கூறப் பட்டது. ஆனால் கடந்த 2 வருடமாக அரசு இந்த இடங்களை காலியாக வைத்துள்ளது.
நிர்வாகத்தில் என்ன தவறு நடக்கிறது, யாருக்கு கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என வெளியே தெரியாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. செல்லாத ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் வாங்கி வைத்து விட்டு,ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரித்திருப்பது வங்கிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அதிகமான வங்கிக் கணக்குகளை பொதுத்துறை வங்கிகளே பராமரிக்கின்றன. ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கிகளே அதிகமான கிளைகளை கொண்டுள்ளன. ஆனால் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஐசிஐசிஐ, எச்டிஎப்சி போன்ற தனியார் வங்கிகளுக்கே அதிகமான பணம் பட்டுவாடா செய்யப் படுகிறது. இது வாடிக்கையாளர் களை தனியார் வங்கிகளை நோக்கி அனுப்பி வைக்கும் முயற்சி.
அரசு பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க முடிவு செய்துள் ளது. அதற்கு உறுதுணையாகவே இந்த முயற்சிகள் நடைபெறுகின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது.அக்டோபர் 1 முதல் எந்தெந்த வங்கிகளுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்பதை மாநில வாரியாக வெளியிட வேண்டும், அடுத்த 3 மாத திட்டம் குறித்து அறிவிக்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் பணம் வழங்க வங்கிக் கிளைகளுக்கு போதுமான பணத்தை அனுப்பி வைக்க வேண் டும், நவ. 8ம் தேதிக்கு பிறகு இறந்த வங்கி ஊழியர்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், நாடாளுமன்ற நிலைக் குழு 9 மாதங்களுக்கு முன் சமர் பித்த வாராக் கடன் குறித்த பரிந்துரையை அமலாக்க வேண்டும், கடந்த ஓராண்டில் அம்பானி, அதானி போன்ற பெரிய குழுமங் கள் நடத்தியுள்ள பண பரிமாற்றம் குறித்த தகவல்களை சேகரித்து வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
அரசு ஊழியர், ஓய்வூதியதாரர்க ளுக்கு மாதம் எவ்வளவு பணம் தேவைப்படும் என்ற கேள்விக்கு, தமிழ்நாட்டில் மட்டும் 10 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். தற்போது வங்கிகளில் 3 ஆயிரம் கோடி மட்டுமே உள்ளது என்றார். ஏடிஎம் மையங்கள் எப்போது முழுமையாக செயல்படும் என்ற கேள்விக்கு, இன்னும் ஒரு மாத காலமாகும் என்றார்.இந்தச் சந்திப்பில், இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளர் ஆர்.சேகரன், கனராவங்கி அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளர் மணிமாறன், சிண்டிகேட் வங்கி அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளர் மஞ்ரேக்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Saturday, November 26, 2016


(1963ல் சோவியத் ஒன்றியத்திற்கு பயணம் மேற்கொண்ட பிடல் காஸ்ட்ரோவுக்கு பள்ளிக் குழந்தைகள் அளித்த உற்சாக வரவேற்பு...)
1963 ஏப்ரல் 28 ஆம் தேதி துவங்கி 40 நாட்கள், கியூபப் பிரதமர் பிடல் காஸ்ட்ரோ சோவியத் ஒன்றியத்தில் விரிவான பயணம் மேற்கொண்டார். மாஸ்கோவின் கிரெம்ளின் மாளிகையில் சோவியத் அரசு சார்பில் அவருக்கு அளிக்கப்பட்ட எழுச்சிமிகு வரவேற்பின் போது ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது.
தோழர் குருசேவ் அவர்களே, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு தோழர்களே, எங்கள் பேரன்பிற்குரிய சோவியத் குடிமக்களே, சோவியத் ஒன்றியத்திற்கு நாங்கள் மேற்கொண்டுள்ள இந்தப் பயணம், சோவியத்தின் பிரம்மாண்ட வளர்ச்சியைப் பார்த்து, எங்களை வியந்து நிற்கச் செய்கிறது என்பது மட்டுமல்ல; மிகப்பெரிய அளவிற்கு பொருளாதார, அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் கூட. எங்களது எதிரிகள் , நாங்கள் வீழ்ந்து விடுவோம் என்று நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் சோவியத் மக்களுடன் இருக்கிறோம்.
சோவியத் மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். சோவியத் மக்களுடன் பேசும்போது, எனது சொந்த மக்களுடன் பேசுவதாகவே உணர்கிறேன். சோவியத் மக்கள், எங்களது மகத்தான புரட்சியை, அந்தப் புரட்சியை பாதுகாப்பதற்கான எங்களது முயற்சிகளை, எங்களைச் சூழ்ந்துள்ள ஆபத்துகளை, நாங்கள் எதிர்கொண்டுள்ள கடினமான சூழல்களை உணர்வுப்பூர்வமாக அறிந்தவர்கள். ஏனென்றால் சோவியத் மக்கள் இந்த உலகின் மகத்தான புரட்சியை நடத்திக் காட்டியவர்கள். அவர்களது மகத்தான வெற்றிகள் , நினைத்துப் பார்க்க முடியாத தியாகங்கள், எதிரிகளை மிரள வைக்கும் மிகப் பிரம்மாண்டமான சாதனைகள் உலகையே வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன.சோவியத் ஒன்றியத்தின் அசைக்க முடியாத சாதனைகளை நாங்கள் பெருமையுடன் பார்க்கிறோம்.
இந்த மாபெரும் தேசத்தின் மக்கள், புரட்சியின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் உறுதியுமே இந்தச் சாதனைகளின் அடிப்படை. இந்த பிரம்மாண்டமான சாதனைகளை பெரும் பணக்கார வர்க்கம்நிகழ்த்தவில்லை; அதிகாரத்தை இதுவரையிலும் கையில் வைத்திருந்த வர்க்கம் நிகழ்த்தவில்லை; இந்த பிரம்மாண்டமான சாதனைகள் சோவியத் ஒன்றியத்தின் மிக எளிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது; ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்டு , சுரண்டப்பட்ட வர்க்கங்களால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது; ஒரு நாட்டை ஆட்சி நடத்திய அனுபவம் ஏதும் இல்லாத எளிய மக்களால் நடத்தப்பட்டிருக்கிறது; பல்கலைக்கழகங்களில் படித்து பட்டம் பெறாத கிராமப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
அவர்கள் இந்த உலகில் இதுவரை இல்லாத ஒரு புதிய சமூகத்தை படைத்திருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களை அதிகாரம் பெற்றவர்களாக மாற்றியிருக்கிறார்கள். சோவியத் தொழிலாளர்களாலும் விவசாயிகளாலும் படைக்கப்பட்ட இந்த மகத்தான சாதனைக்கு பின்னால் இருப்பது, சோவியத் ஒன்றியத்தை வழிநடத்துவதன் மூலமாக உலகத் தொழிலாளர் வர்க்கத்திற்கு உத்வேகத்தை அளித்துக் கொண்டிருப்பது சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, அந்த மகத்தான கட்சிக்கு செவ்வணக்கம் செலுத்துகிறேன்.