Wednesday, July 27, 2016

ஊகவணிகத்திற்குத் தடை விதித்திட வேண்டும் - மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு





ஊகவணிகத்திற்குத் தடை விதித்திட வேண்டும்
மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு

புதுதில்லி, ஜூலை 28-

நாட்டில் உணவுப் பொருள்களை வாங்கும் மக்களும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள், அவற்றை உற்பத்தி செய்த விவசாயிகளும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இடையில் வர்த்தகம் செய்யும் இடைத்தரகர்கள்தான் ஊக வர்த்தகத்தின் மூலம் ஆதாயம் அடைந்திருக்கிறார்கள். எனவே ஊக வர்த்தகத்தைத் தடை செய்ய இந்த அரசு முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் புதன் அன்று விலைவாசி உயர்வு குறித்து குறுகிய கால விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
“மக்களின் வாழ்வோடும் சாவோடும் சம்பந்தப்பட்டிருக்கிற மிகு முக்கியமான பிரச்சனை குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் எங்கள் கட்சியின் சார்பில் நாடு தழுவிய அளவில் இப்பிரச்சனை மீது கிளர்ச்சிப் பிரச்சாரம் நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் இவற்றில் பங்கேற்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
பொதுவான அம்சம் என்னவென்றால் அத்தியாவசியப் பண்டங்கள் அனைத்தின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கின்றன. இங்கே அரசுத்தரப்பில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைகள் மற்றும் அமைச்சகங்களின் சார்பில் தாக்கல் செய்துள்ள எண்ணற்ற விவரங்கள்,   கடந்த 22 மாதங்களில் ஒட்டுமொத்த சில்லரை பணவீக்கம் 5.7 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்பதாகும். இது அரசுத்தரப்பில் தரப்பட்டிருக்கிற புள்ளிவிவரம். உணவுப் பொருள்களின் பணவீக்கம் 8 சதவீதத்தை நெருங்கும். “உணவு எரிந்து கொண்டிருக்கிறது’’ என்று ஊடகங்கள் எழுதியுள்ளன. இது தலைப்புச் செய்தி. உருளைக் கிழங்கு விலை 65 சதவீதம் அதிகரித்திருக்கிறது. பருப்பு மற்றும் பயறு வகைகளின் விலைகள் 27 சதவீதமும், காய்கறிகளின் விலைகள் 17 சதவீதமும் அதிகரித்திருக்கின்றன. இவ்வாறு அத்தியாவசியப் பொருள்களின் தொடர் விலை உயர்வு மூலம் அரசாங்கம் மக்கள் மீது கடும் சுமைகளை ஏற்றிக் கொண்டிருக்கிறது.
மத்திய அரசின் சார்பில் இங்கே பேசிய உறுப்பினர்கள் விலைவாசி உயர்வுக்கு மாநில அரசுகளும் காரணம் என்றும், உணவுப் பொருள்களைப் பதுக்கி வைத்திருப்போர் மற்றும் கள்ளச்சந்தைக்காரர்கள் மீது அவை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர். அது உண்மை தான்.  அதனை நான் மறுக்கவில்லை. அதனைச் செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் விலைவாசியைக் கட்டுப்படுத்திட மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?
இன்றைய தினம் பருப்பு வகைகளின் விலை என்ன? 2014க்கும் 2016க்கும் இடையில் இவற்றின் விலைகள் இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளன.  இதற்கு கள்ளச்சந்தை மட்டும் காரணம் அல்ல. மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளும் காரணமாகும்.
மத்திய அரசு எரிபொருள்களின் விலைகளை தொடர்ந்து உயர்த்திக் கொண்டிருப்பது, பணவீக்க விகிதத்தை அதிகரித்திடும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.  எரிபொருள்களின் விலைகள் உயரும்போது, போக்குவரத்துக் கட்டணங்களும் உயரும்.
இந்த அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற சமயத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரலுக்கு 106 டாலர்களாக இருந்தது. இது 2016 ஜனவரியில்  பேரலுக்கு 26 டாலர்கள் என்று குறைந்துவிட்டது.  இப்போது ஜூலையில் அது பேரலுக்கு 40 டாலர்கள் என்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இவ்வாறு 106 டாலரிலிருந்து 26 டாலராக வீழ்ச்சி அடைந்தபோதிலும்,  இந்த அரசு என்ன செய்தது? டீசல் மற்றும் பெட்ரோல்களின் விலைகளைத் தொடர்ந்து ஏற்றியது. சுத்திகரிக்கப்பட்டு,  பெட்ரோல் பம்புகளுக்கு ரூ. 25.10 கொடுக்கப்பட்டபோதிலும், மக்களுக்கு லிட்டருக்கு ரூ.54.30க்கு விற்றது. இவ்வாறு இரு மடங்கு விலை வைத்து மக்களுக்கு விற்றது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.62.56 ஆகும். இது தில்லியின் நிலை. சுத்திகரிப்பு நிலையங்களில் இதற்கு ஆகும் செலவு வெறும் ரூ.22.94தான். இதைவிட 40 ரூபாய் அதிகமாக மக்களிடம் கறக்கப்படுகிறது. ஏன்? ஏனெனில் இந்த அரசாங்கம் தான் இதற்குக் காரணமாகும். 
இந்த அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீதான கலால் வரியை ஒன்பது தடவைகள் உயர்த்தி இருக்கிறது. இதன் விளைவாக பெட்ரோலுக்கு லிட்டருக்கு 40 ரூபாய் அதிகமாக மக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று டீசலுக்கு லிட்டருக்கு 35 ரூபாய் அதிகமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவைதான் நாடு முழுதும் ஒட்டுமொத்தமாக பணவீக்கம் உயர்வதற்குக் காரணமாகும்.
இவ்வாறு பணவீக்கம் உயர்ந்ததற்கு முழுமையாக மத்திய அரசே காரணம். எந்தவொரு மாநில அரசும் கிடையாது. மக்களைக் கசக்கிப்பிழிந்து இந்த அரசு தன் வருவாயை அறுவடை செய்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு எரிபொருள் கட்டணங்களை உயர்த்துவதன் மூலம் மக்களை ஒரு பக்கத்தில் கசக்கிப்பிழியும் அதே சமயத்தில் வேறு பல வழிகளிலும் அவர்களைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறது.
கடந்த இரு ஆண்டுகளாக இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ள செஸ் (cess) என்னும் கூடுதல் வரி விதிப்பைப் பாருங்கள். புதிய செஸ் வரிகள் என்பவை யாவை?  இது தொடர்பாக ஒரு நீண்ட பட்டியலே வெளியிடப்பட்டிருக்கிறது.   இவ்வாறு புதிய செஸ் வரிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. 2015-16ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சேவை வரி (service tax) 12.36 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.  தூய்மை இந்தியா (ஸ்வாச் பாரத்) செஸ் வரி 0.5 சதவீதம், கிருஷி கல்யாண் செஸ் வரி 0.5 சதவீதம், வாகனங்கள் மீதான உள்கட்டமைப்பு செஸ்வரி, வாகனங்களின் வகைக்கேற்ப 1 சதவீதத்திலிருந்து 4 சதவீதம் வரை, சுத்தமான சுற்றுச்சூழல் செஸ்வரி (இது முன்பு சுத்தமான எரிசக்தி செஸ் வரி என்று அழைக்கப்பட்டது) இப்போது இரண்டு மடங்காகி இருக்கிறது. இவையன்னியில் எண்ணெய் வளர்ச்சி செஸ்வரி. இது டன்னுக்கு 4500 ரூபாயாக இருந்தது, இப்போது 20 சதவீதம் மதிப்பீட்டு வரியாக (ad valorem) அதிகரிக்கப்பட்டிருக்கிறது. Ad valorem என்பதன் பொருள்  வரிகளையும் சேர்த்து என்ன விலையோ அது. இதன்மீது 20 சதவீதம் எண்ணெய் வளர்ச்சி செஸ் வரி விதித்திருக்கிறார்கள். அடுத்து இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வி செஸ்வரி. இது 2015ஆம் ஆண்டுவரை 64 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்விக்காக இதிலிருந்து ஒரு காசு கூட செலவழிக்கப்படவில்லை.  இந்த செஸ்வரிகள் அனைத்தும் அரசின் கஜானாவிற்குத்தான் சென்று கொண்டிருக்கின்றன. இந்த அனைத்து செஸ்வரிகளையும் ஒருங்கிணைத்தால் இவை சாமானிய மக்கள் மீதான கூடுதல் சுமையாகும்.  இத்தகைய செஸ்வரிகளும் விலைவாசி உயர்வுக்குக் காரணமாகும்.
இந்த செஸ்வரிகளை யார் செலுத்துகிறார்கள்? நுகர்வோர்தான் செலுத்துகிறார்கள். இவ்வாறு நுகர்வோர் அனைத்து செஸ்வரிகளையும் செலுத்தும்போது அது பணவீக்கத்திற்கு இட்டுச் செல்கிறது.
இந்த செஸ்வரிகளிலிருந்து மாநில அரசுகளுக்கு எதுவும் செல்வதில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உண்மையில் செஸ்வரி மூலம் ஈட்டப்படும் தொகை முழுவதுமாக மத்திய அரசுக்குத்தான் சொந்தம். இதில் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படாது.
இன்றையதினம் பணவீக்கம் அதிகரிக்கிறது என்றால் அதற்கு மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள்தான் காரணம். மத்திய அரசு மட்டுமே இதற்குப் பொறுப்பாகும். எனவே, என்ன செய்யப்பட வேண்டும்?
நாடு முழுவதும் மிகவும் வறிய நிலையில் உள்ளது. நாட்டின் வேலையின்மையின் வளர்ச்சி விகிதம் குறித்து இங்கே பேசிய அனைத்து உறுப்பினர்களும் தெரிவித்தார்கள்.
மாண்புமிகு வணிகத்துறை அமைச்சர் 1.35 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டிருப்பதாக மக்களவையில் தெரிவித்திருக்கிறார். ஒவ்வோராண்டும் வேலை சந்தைக்குள் புகுந்து கொண்டிருக்கும் இளைஞர்கள் எத்தனை பேர் தெரியுமா? 1 கோடியே 30 லட்சம் இளைஞர்களாகும். ஆனால் உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் வேலைகளோ 1 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். அதாவது 1 சதவீதம் மட்டுமே.
இவ்வாறு வேலைவாய்ப்பின்மையும், விலைவாசி உயர்வும் உண்மையில் மக்களைக் கொன்றுகொண்டிருக்கிறது.  இவை சொல்லொண்ணா அளவிற்கு வறுமையை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு மக்கள் மீது நேரடியான தாக்குதல்களை மத்திய அரசு ஏவிக் கொண்டிருக்கிறது.
மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளைக் குறைத்திட மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும். வருவாயைப் பெருக்குவதற்காக மக்களை இவ்வாறு பல வழிகளில் கசக்கிப்பிழியும் மத்திய அரசு, அவர்களின்  குறைந்தபட்ச வாழ்க்கைத் தேவைகளுக்காக, அவர்களின் வாழ்வுக்காக ஏதாவது செய்திட வேண்டும். பெட்ரோலியப் பொருட்களின் மீது ஒன்பது தடவைகள் கலால் வரியை உயர்த்தி இருக்கிறது. எண்ணற்ற செஸ் வரிகள் மூலம் ஏராளமாக வசூல் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக இவற்றிலிருந்து என்ன செய்திருக்கிறார்கள்?
அடுத்து, இந்த அரசு உடனடியாகச் செய்ய வேண்டிய வேலை என்பது, அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின் மீதான ஊக வர்த்தகத்தைத் (forward trading and futures trading) தடை செய்திட வேண்டும். இது மிகவும் முக்கியம். ஏனெனில் ஊக வர்த்தகம் அனைத்தையும் தங்கள் கைகளுக்குள் எடுத்துக் கொள்கிறது. முன்பு அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் பயறு வகைகள், ஜீனி, உருளைக் கிழங்கு மட்டும்தான் இதன்கீழ் இருந்தது. இப்போது  அனைத்து அத்தியாவசியப் பண்டங்களும் இதன் கீழ் வந்திருக்கிறது. இதற்குத் தடை விதிக்க வேண்டும்.
முன்பொருதடவை இவ்வாறு தடை விதித்தோம். அத்தியாவசியப் பண்டங்களை ஊக வர்த்தகத்திலிருந்து விலக்கி வைத்தோம். ஆறு மாதங்களுக்குள்ளாகவே அவற்றின் விலைகள் வீழ்ச்சி அடைந்தன. ஆயினும் அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளாமல் இருக்கிறோம். இதனை இந்த அரசு உடனடியாகச் செய்தாக வேண்டும்.
அடுத்து முக்கியமான பிரச்சனை, விலைவாசி உயர்வு அல்லது பணவீக்கம் ஆகும். பணவீக்கம் என்பது என்ன?
பொருளாதாரத் தத்துவத்தின் அடிப்படையில், பணவீக்கம் என்பதன் பொருள் வருமானம் நுகர்வோரிடமிருந்து பெற்று உற்பத்தியாளருக்கு மறுவிநியோகம் செய்யப்படுகிறது  என்பதாகும். அதாவது, நுகர்வோர் அதிகம் கொடுத்தால், உற்பத்தியாளர் அதிகம் ஈட்டுகிறார் என்று அர்த்தம். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் ஏழைகளிடமிருந்து பிடுங்கி பணக்காரர்களிடம் கொடுப்பது என்று அர்த்தம். இத்தகைய மறுவிநியோகம்தான் இப்போது நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.  இதன்காரணமாக நாட்டில் நாட்டு மக்களிடையே இருந்த ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகமாகி இருக்கின்றன. 
இன்றைய தினம் நாட்டில் 100 (அமெரிக்க டாலர்) பில்லியனர்களைப் பெற்றிருக்கிறோம்.  அதாவது  நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கிலிருந்து, பாதி அளவு வரைக்கும் இடையிலான சொத்தின் மதிப்பை மேற்படி நூறு பில்லியனர்களும் பெற்றிருக்கிறார்கள்.
நம் நாட்டின் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு என்ன கூறுகிறது? இந்தியாவில் உள்ள 90 சதவீதம் குடும்பங்கள் மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஈட்டிக் கொண்டிருக்கிறது. இந்த 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஒருசில மாதங்களுக்கு முன்புதான் வெளிவந்திருக்கிறது.
இதுதான் வித்தியாசம். பணவீக்கம் என்பதன் பொருள் நாட்டிலுள்ள ஏற்றத்தாழ்வை மேலும் அதிகப்படுத்துவது என்பதேயாகும். அதாவது ஏழைகளிடமிருந்து கசக்கிப் பிழிந்து வாங்கி, பணக்காரர்களுக்குக் கொடுப்பது.
இத்துடன் இந்தியாவில் மேலும் ஒரு கூடுதலான அம்சத்தையும் பார்க்கிறோம். பொருளாதாரத் தத்துவங்கள் இதனை விளக்கிடவில்லை.
நம் நாட்டில் உண்மையில் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்தவர்கள் இதனால் பயனடையவில்லை. இவ்வாறு விவசாயிகள் உற்பத்தி செய்த பொருள்களை வாங்கி விற்கும் இடைத்தரகர்கள்தான் அதிகமான அளவில் பயன் அடைந்திருக்கிறார்கள்.
உதாரணமாக பருப்புகள் குறித்து எடுத்துக் கொள்வோம்.  நாம் பருப்பு வகைகளை வாங்குகிறோம். ஒரு விவசாயி தான் உற்பத்தி செய்த பருப்பை விற்பதற்காக அவருக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவிற்கு ரூ.50.50 கொடுக்கிறோம். ஆனால் சந்தையில் அதன் விலை என்ன தெரியுமா? ரூ. 120. அதே பருப்பை இறக்குமதி செய்வதற்கு என்ன விலை கொடுக்கிறோம், தெரியுமா? ரூ. 152. மக்களுக்கு அளிப்பதற்காக இவ்வாறு இறக்குமதி செய்கிறோமாம். நம் விவசாயிக்குக் கொடுப்பது கிலோவிற்கு ரூ.50.50. ஆனால் அதனை சந்தையில் விற்கும்போது அதன் விலை ரூ.120. யார் ஆதாயம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்? இவ்வாறு பொருளாதாரத் தத்துவத்தையே இங்கே நாம் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு இந்தியாவில், பணவீக்கத்தின் காரணமாக நுகர்வோர் அவதிப்படவில்லை, உற்பத்தியாளர் ஆதாயம் அடையவில்லை. மாறாக நுகர்வோரும் அவதிப்படுகிறார், பொருள்களை உற்பத்தி செய்த விவசாயிகளும் அவதிப்படுகிறார்கள், ஆனால் இடையில் வந்துள்ள இடைத்தரகர்கள் ஆதாயம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.  இவ்வாறு அரசின் கொள்கைகளால் இத்தகைய இடைத்தரகர்கள்தான் கொழுத்திருக்கிறார்கள். இதனைக் கட்டுப்படுத்திட வேண்டும் என்று கோருகிறோம்.
நீங்கள் உண்மையிலேயே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் இத்தகைய இடைத்தரகர்களின் ஊக வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துங்கள்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

(.நி.)

No comments: