Sunday, July 17, 2016

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை கிழித்தெறிக!

உச்சநீதிமன்றம், மிகவும் பாராட்டத்தக்க அளவில் தன்னுடைய தீர்ப்புரை ஒன்றில், ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்)சட்டத்தின் கீழ் அமைதிகுலைந்த பகுதிகளில் செயல்படும் ஆயுதப்படையினர், மக்களுக்குத் தண்டனை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று பிரகடனம் செய்திருக்கிறது. ஏதேனும் கிரிமினல் குற்றம் ஒரு ராணுவ வீரரால் மேற்கொள்ளப்பட்டால், கிரிமினல் நீதிமன்றத்தால் விசாரணை மேற்கொள்ளப்படுவதிலிருந்துபூரண விதிவிலக்கு’’ (““absolute immunity”) அவர் பெற்றுவிட முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மணிப்பூரில் சட்டத்திற்கு அப்பாற்பட்டு நடைபெற்றுள்ள அனைத்து மரணங்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது

இதுவரை இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடும்போது ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்)சட்டத்தின் கீழ் ஆயுதப் படைகளைச் சேர்ந்தவர்கள், மக்களைக் கொன்றால், அதற்காக அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படுவதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல்வேறு அத்துமீறல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. நிராயுதபாணிகளான மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். கடந்த அறுபதாண்டுகளாக ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் அமலில் இருந்துவரும் மணிப்பூரில், ஆயுதப் படையினரால் நூற்றுக்கணக்கான துப்பாக்கிச் சூடுகளும், சட்டத்திற்குப் புறம்பாக எண்ணற்றோர் கொல்லப்படுதலும் நடந்திருக்கின்றன. இவர்களது அக்கிரமச் செயல்களில் மிகவும் பரவலாக உலகுக்குத் தெரியவந்த சம்பவம் எதுவெனில், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ராணுவ வீரர்களால் தங்ஜன் மனோரமா என்னும் இளம்பெண் கைது செய்யப்பட்டு, கும்பல் வன்புணர்வுக்கு உள்ளாகி, பின்னர் கொலை செய்யப்பட்டதாகும். மனோரமா தப்பிச் செல்ல முயற்சிக்கையில் துப்பாக்கியால் சுடப்பட்டார் என்று ராணுவத்தின் தரப்பில் கூசாமல் பொய் சொல்லப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக யாரும் விசாரிக்கப்படவில்லை.

மணிப்பூரில் உள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவின் மீது உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு அளித்திருக்கிறது. இத்தீர்ப்பு, ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்)சட்டத்தின் கீழ் அமைதிகுலைந்த பகுதிகளில் செயல்படும் ஆயுதப்படையினர், மக்களுக்குத் தண்டனை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிராகக் கொடுத்துள்ள ஓர் அடியாகும். இது மணிப்பூருக்கு மட்டுமல்ல, ஜம்மு-காஷ்மீர் போன்ற மாநிலங்களுக்கும் பொருந்தும்.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்)சட்டத்தின் கீழ் பாதுகாப்புப் படையினருக்கு அளிக்கப்பட்டிருந்த வானளாவிய அதிகாரங்களைத் தடுத்துநிறுத்தக்கூடிய விதத்தில் செயல்படும் என்ற போதிலும், நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட இது போதுமானதல்ல. தேவை என்னவெனில், இந்த ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்)சட்டமே கிழித்தெறியப்பட வேண்டும் என்பதுதான். இதைத்தான் நீதிபதி ஜீவன் ரெட்டி குழு பரிந்துரைத்திருந்தது.நாட்டிற்குள் ஆயுதப்படையினர், நாட்டின் சர்வதேச எல்லைகளை ஒட்டியுள்ள பகுதிகளில், விதிவிலக்கான சூழ்நிலைகளில்தான் பயன்படுத்தப்பட வேண்டும்.

எல்லைகளுக்கு அப்பால் முகாமிட்டுள்ள சில குழுக்களிடமிருந்து அவ்வப்போது பயங்கரவாத வன்முறைகள் ஏற்படுகின்றன. திரிபுரா உட்பட சில வடகிழக்கு மாநிலங்களில் இவ்வாறு நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. திரிபுராவில், எல்லைக்கு அப்பாலிருந்து வந்த ஆயுத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதால், இடது முன்னணி அரசாங்கம் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தையும், அமைதி குலைந்த பகுதி என்ற பிரகடனத்தையும் விலக்கிக் கொண்டுவிட்டது. மாநிலக் காவல்துறையினராலோ அல்லது துணை பாதுகாப்புப் படையினராலோ கையாள முடியாத விதத்தில் எல்லைப் பகுதிகளில் அச்சுறுத்தல்கள் வருமானால் அவற்றை எதிர்கொள்ள ராணுவத்தை இறக்க வேண்டியது அவசியமாகலாம். அதுபோன்ற நிகழ்வுகள் வரும்போது, அவற்றிற்குப் பொருத்தமான விதத்தில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அத்தகைய சட்டங்கள், ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் போன்று இராட்சசத்தனமான அதிகாரங்களை அளித்திடக் கூடாது அல்லது குடிமக்கள் மீது ராணுவமே தண்டனை விதிக்கக்கூடிய விதத்தில் அவை அமைந்துவிடவும் கூடாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசாங்கத்தையும், ஆயுதப் படையினரையும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் பயன்பாட்டைத் தொடர்ந்து நியாயப்படுத்தி வருவதை மறுபரிசீலனைக்கு உட்படுத்திட வேண்டும்.
- ஜூலை 13, 2016
தமிழில்: . வீரமணி


No comments: