Thursday, June 23, 2016

பணக்காரர்களின் வளர்ச்சிக்கான ஆட்சி

பணக்காரர்களின் வளர்ச்சிக்கான ஆட்சி

ஷ்யாம்
பிரதமர் நரேந்திர மோடி, ஈராண்டுகள் நிறைவுபெற் றதைக் கொண்டாடும் விதத்தில் வால்ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த நேர்காணலில், ஐமுகூ அரசாங்கம் கடந்தபத்தாண்டுகளில் செய்யாத அளவிற்கு சீர்திருத்தங்களை தன்னுடைய அரசாங்கம் கடந்த ஈராண்டுகளில் செய் திருக்கிறது என்று பீற்றிக் கொண்டார். அவர் கூறிடும் இந்த சீர்திருத்தங்கள் எல் லாம் என்னவென்று தெரிகிறதா?
அவரே குறிப்பிட்டிருப்பதைப்போல, இன்சூரன்ஸ் மற்றும் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தித்துறை போன்றவற்றை அந்நிய முதலீட்டுக்கு வெளிப்படையாகத் திறந்துவிட்டிருப்பதாகும். உலக அளவில் மிகவும் அதிகம் விற்பனையாகும் நிதி நாளேடு (financial daily) ஒன்றிற்கு மோடிஅளித்துள்ள பேட்டியில், தங்கள் அரசுவர்த்தகத்துறையினருக்கு அதிகம் செய்திருப்பதாகவும், குறிப்பாக அந்நிய வர்த் தகத்துறையினருக்கு ஐமுகூ செய்யாததைவிட அதிகமாகத் தங்கள் அரசு செய் திருக்கிறது என்றும் கூறியிருந்தார்.
மேலும்அவர், இந்தத் திசைவழியில் தான் செய்த அளவிற்குத் துணிச்சல் வேறெந்த அரசாங்கத்திற்கும் இல்லை என்றும் பீற்றிக் கொண்டார். மோடி வாய்ச்சவடால் வீரர் என்று எல்லோருக்கும் தெரிந்த போதிலும், இந்த ஒன்று மட்டும் உண்மையாகும். உண்மையில், மோடி அரசாங்கம்,இதற்குமுன் இந்தியாவில் ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் இருந்ததை விட அதீதமாகவே கார்ப்பரேட் ஆதரவு அரசாங்கமாக மிகவும் நாணமின்றி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கான இரண்டு முழு பட்ஜெட்டு களிலும் காணப்படும் வரி வருவாய் முன்மொழிவுகளே இவற்றை மிகவும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
2016ஆம் ஆண்டில், நிதி அமைச்சரால் மதிப்பிடப்பட்ட பட்ஜெட் முன்மொழி வுகள் அரசாங்கத்திற்கு நேரடி வரியில் 1,060 கோடி ரூபாய் நிகர இழப்பு (net loss) இருக்கும் என்றும், அதே சமயத் தில் மறைமுக வரி மூலமாக 20,670 கோடிரூபாய் நிகர ஆதாயம் (net gain) இருக்கும் என்றும் கூறியிருந்தது. 2015இல் நேரடிவரி மாற்றங்கள் 8,315 கோடி ரூபாய் வருவாய் இழப்பிற்கும், மறைமுக வரிகள் 23,383 கோடி ரூபாய் ஆதாயத்திற்கும் இட்டுச்செல்லும் என்றும் மதிப்பிடப் பட்டிருந்தது. இரண்டையும் ஒருங் கிணைத்தால், கடந்த ஈராண்டுகளில், நேரடி வரியில் 9,375 கோடி ரூபாய் நிகர இழப்பும், மறைமுக வரியில் 44,053 கோடி ரூபாய் நிகர லாபமும் என்றாகிறது. இதன் பொருள் என்ன என்று தெரிகிறதா?
நேரடி வரிகள் என்பது பிரதானமாக கார்ப்பரேட்டுகளிடமிருந்து அல்லது முதலாளிகளிடமிருந்து பெறப்படும் பிரதானமான வரிகள் ஆகும். பணக்காரர்கள் மட்டுமே அரசாங்கத்திற்கு அளிக்கின்ற வரியாகும். நீங்கள் பணக்காரர்களாக இருந்தால் நீங்கள் அதிகமாக வரி செலுத்த வேண்டும். மோடி அரசின் வரிமுன்மொழிவுகள் இவர்கள் செலுத்த வேண்டிய வரிகளில் வெட்டினை ஏற்படுத்தி இருக்கின்றன.
இவ்வாறு கார்ப்ப ரேட்டுகளுக்கும் பணக்காரர்களுக்கும் மிகவும் தெளிவான முறையில் சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அதே சமயத்தில், மறைமுக வரிகள் என்பவை பொருள்களை அல்லது சேவைகளை வாங்கு கின்ற ஒவ்வொருவரும் செலுத்த வேண்டிய வரியாகும். இந்தியா போன்ற ஒரு நாட்டில் இவ்வாறு பொருள்களை வாங்குபவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏழை மக்களாவர். இவ்வாறு நேரடி வரிகளை வெட்டுவது என்பது மற்றும் மறைமுக வரிகளை உயர்த்துவது என்பதன் பொருள் ஏழைகளிடமிருந்து வருமானங்களைப் பெற்று, பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் மாற்றுவது என்பதாகும். 2016-17 பட்ஜெட் ஆவணங்களைப் பரிசீலனை செய்கையில், 2015-16 ஆம் ஆண்டில் கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்பட்டிருந்த சலுகைகள் மற்றும் நேரடி வரிச் சலுகைகள் 68,711 கோடி ரூபாயாகும். அதாவது அரசாங்கத்திற்கு இவர்களிடமிருந்து வரவேண்டிய இத்தொகை இவர்களிடமிருந்து வசூலிக்கப்படாமல் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு 68,711 கோடி ரூபாய். அதாவது இந்தத் தொகையை வசூலித்திருந்தால் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு ஈராண்டுகளுக்கு இன்றைய நடப்பு அளவுகளில் நிதி ஒதுக்கப் போதுமான தொகையாகும். அல்லது மூன்று ஆண்டுகளுக்கு தேசிய சுகாதாரத் திட்டங் களுக்குப் போதுமான தொகையாகும். இவ்வாறு நேரடி வரிச் சலுகைகள் மட்டுமல்லாது, மறைமுக வரிச்சலுகைகளையும் சற்றே ஆராய்ந் தோமானால், சுங்கத் தீர்வை சலுகைகளில் (மொத்தத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு அல்லது 61,126 கோடி ரூபாய்)ஆபரணக் கற்கள் மற்றும் நகைகள் ((gems and jewellery)) துறைக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. கலால் வரியில் உப்புக்கு சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. உப்பு என்பது ஏழைகள் நுகர்வது அதற்கு வரிச்சலுகை, புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஆபரணக் கற்கள் மற்றும் நகை களுக்கு வரிச்சலுகை ஏன்? இவ்வாறு மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் அல்லது சுகாதாரத் திட்டத்திற்கு ஈராண்டுகளுக்கு தாராளமாக ஒதுக்கக்கூடிய தொகை, கார்ப்பரேட்டு களிடமிருந்து வசூலிக்கப்படாமல், அயல்நாட்டுப் பணக்காரர்கள் நகைகள் வாங்குவதற்காக அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டின் பட்ஜெட் உரையும் கூட நிலம் உட்பட பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களைத் தனியாருக்குத் தாரை வார்த்திடக்கூடிய விதத்தில், அதன் பங்குகளை தனியாருக்கு விற்பதற்குத் திட்டமிடப் பட்டிருக்கிறது. தனியார் எண்ணெய் நிறுவனங்களின் கார்ப்பரேட்டுகளுக்கு அபரிமிதமான சலுகைகள் அளிக்கக்கூடிய விதத்தில் கதவுகள் அகலமாகத் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.
உணவுப் பொருள்களை சந்தைப் படுத்துதலிலும் 100 சதவீதஅந்நிய நேரடி முதலீடு உருவாகிக் கொண்டிருக்கிறது. வேளாண் உற்பத்திப் பொருட்களை இணையம் (e-platform) மூலம் சந்தைப்படுத்துவதற்காக, வேளாண் உற்பத்தி சந்தைக் குழு சட்டம் (APMC Act)) திருத்தப்படுவதற்கும் முன்மொழிவுகள் தயாராயிருக்கின்றன. நுகர்வோருக்கு சிறந்த சேவை என்ற பெயரில் ஏகபோக வர்த்தகம் மற்றும் வேளாண் வர்த்தகநலன்களில் ஆதிக்கம்செலுத்துவோருக்கு வசதி செய்து கொடுக்கக்கூடிய விதத்தில் இந்த நடவடிக்கை இருக்கும் என்பதில் ஐயமில்லை.இதேபோன்றே இனி மத்திய அரசு வேளாண் உற்பத்திப் பொருள்களைக்கொள்முதல் செய்வதையும் பரவலாக்கல்’’ (““decentralisation என்ற பெயரில் கைவிடவும் முன்மொழியப்பட்டிருக்கிறது.
இதன் பொருள் என்னவெனில் மத்திய அரசுக்குச் சொந்தமான இந்திய உணவுக் கழகம் (FCI) இனி வேளாண் உற்பத்திப் பொருள்களைக் கொள்முதல் செய்யாது. இந்தப் பொறுப்பை ஆங்காங்கேயுள்ள மாநிலஅரசுகள் மற்றும் தனியாரிடம் ஒப்படைத்துவிடுகிறது. வேளாண் உற்பத்திப் பொருள்களைக் கொள்முதல் செய்திடும் வல்லமையை ஒருசில மாநில அரசுகள் மட்டுமே பெற்றுள்ள நிலையில், இதனால்ஆதாயம் அடையப்போவது தனியார் வர்த்தக நிறுவனங்கள் என்பது தெள்ளத் தெளிவான ஒன்று. பாதுகாப்புத் துறையில், 49 சதவீதம் வரையிலான அந்நியமுதலீட்டுக்கு எந்த அனுமதியும் தேவையில்லை, அதுதானியங்கி மார்க்கத்தின் automatic route))கீழ் வந்துவிடுகிறது. 49 சதவீதத்திற்கும் மேலான முதலீடு என்றால்தான் அந்நிய முதலீடு மேம்படுத்தல் வாரியத்தின் மூலம் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மேலும் அமைச்சர் அலுவல்துறை முதலீடு (portfolio investment)), அந்நிய நிறுவனங்களுடனான மூலதனமுதலீடு (foreign venture capital investment) ) போன்றவற்றிற்கு இதுவரை24 சதவீதம்வரைக்கும் தானியங்கி மார்க்கத்தின் மூலம் என்று இருந்தது, தற்போது49 சதவீதம் என்று உயர்த்தப்பட்டிருக்கிறது. தனியார் துறை வங்கிகளுக்கு அந்நிய நேரடி முதலீடு மற்றும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடு (FII - Foreign Institutional Investor investment))ஆகியவற்றின் கீழான உச்சவரம்பை அரசாங்கம் நீக்கிவிட்டது. இவை 74 சதவீதம் வரை இனி முதலீடு செய்திட லாம். இந்த நடவடிக்கை யெஸ் வங்கி, கோடாக் மகிந்திரா வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற தனியார் வங்கிகளுக்குப் பெரிதும் பயன் அளித்திடும்.காப்பி, ரப்பர், ஏலக்காய், பாமாயில் மரம் வளர்ப்பு மற்றும் ஆலிவ் எண் ணெய் தோட்டப் பண்ணைகள் போன்ற வற்றிற்கும் தானியங்கி மார்க்கத்தில் 100 சதவீதம் வரை அந்நிய முதலீட்டுக்குக் கதவுகள் திறந்துவிடப் பட்டிருக்கின்றன.
சுருக்கமாக ஒரே வாக்கியத்தில் சொல்வதென்றால், மோடியின் ஈராண்டு கால ஆட்சி என்பது பணக்காரர்களுடன் சேர்ந்து, பணக்காரர்களின் வளர்ச்சிக்கான ஆட்சியாக அமைந்துள்ளது. அதாவது, பணக்காரர்களின் கண்களுக்கு வெண்ணெய், உழைக்கும் மக்களின் கண்களுக்கு சுண்ணாம்பு(carrots for businessmen and sticks for the toiling masses).
தமிழில்: ச. வீரமணி


Saturday, June 18, 2016

மோடி, ராஜதந்திரியா? : பிரபீர் புர்கயஸ்தா


மோடி, ராஜதந்திரியா?

--பிரபீர் புர்கயஸ்தா
பிரதமர் மோடி கடந்த ஈராண்டுகளில் பல மைல்கள் பறந்திருந்த போதிலும், சுமார் 40 நாடுகளுக்குப் பயணத்தை மேற்கொண்டிருந்தபோதிலும், இவற்றால் சாதித்தது என்ன என்று பார்த்தோமானால் அநேகமாக ஒன்றுமே இல்லைஎன்பதேயாகும். சற்றே நுணுகி ஆராய்ந்தோமானால், நடைமுறையில் அமெரிக்காவின் அடிமையாக மாறியிருப்பது தெரிய வரும். அமெரிக்கா சமீபத்தில் அவர்களது நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதில் இந்தியாவை, நேட்டோ நாடுகளுக்கு இணையாகக் கொண்டு வந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் நம் நாட்டின் வான்வழி மற்றும் கடல்வழிப் போக்குவரத்தை அமெரிக்காவின் ராணுவம் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய விதத்தில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்த வான்வழி மற்றும் கடல்வழி ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு, அமெரிக்கா நம் நாட்டில் ராணுவத் தளங்களை நிறுவிக் கொள்ள அனுமதியும் அளிக்கும் நிலை உருவாகி இருக்கிறது.
மேலாதிக்கம்சரியும் சகாப்தத்தில்
உலகில் அமெரிக்காவின் மேலாதிக்கம் சரிந்து கொண்டிருக்கக்கூடிய சகாப்தத்தில், பல துருவ உலகம் உருவாகிக் கொண்டிருக்கக்கூடிய சூழலில், மோடி அரசாங்கம் அமெரிக்காவின் அடிவருடியாக மாறுவது அதிகரித்துக் கொண்டிருப்பது என்பது அதன் திவாலாகிப்போன தொலைநோக்குப் பார்வையையே காட்டுகிறது. சீனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற அமெரிக்காவின் குறிக்கோளுக்கு, இந்திய அரசு மிகவும் விருப்பத்துடன் அதன் இளைய பங்காளியாக மாறிக் கொண்டிருக்கிறது. அதன் மூலம் ஆசியாவின் மையத்திலிருந்து அமெரிக்கா செயல்படுவதற்கு இந்தியா அனுமதித்திருக்கிறது.முன்பெல்லாம், இந்தியா, பொருளாதாரரீதியில் பலவீனமாக இருந்த சமயத்திலும்கூட, உலகை தங்கள் போர்த்தந்திர நடவடிக்கைகளால் அடக்கி ஆள முயற்சி செய்த எந்தநாட்டுடனும் இந்தியா தன்னை இணைத்துக் கொள்ளாமல், நிர்ப்பந்தங்களுக்கு ஆட்படாமல் தனித்தே செயல்பட்டு வந்தது. ஆனால், இன்று இந்தியா - அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாறுவதற்கான நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
அணு விபத்தில் பொறுப்பு யாருக்கு?
மோடி அரசாங்கம், அமெரிக்காவிற்கு மேலும் பல சலுகைகளையும் அளித்துக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. அது அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து, அமெரிக்காவின் பெரும் மருந்துக் கம்பெனிகளின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து, நம் கண்டுபிடிப்பு உரிமைச் சட்டம் மற்றும் காப்புரிமைச் சட்டங்களில் (யீயவநவே டயறள) பல்வேறு மாற்றங்களைச் செய்து, அறிவுச்சொத்துரிமைக் கொள்கை ஆவணத்தை வெளியிட்டிருக்கிறது. அதேபோன்று அணுசக்தி ஒழுங்காற்றுச் சட்டத்திலும் பல்வேறு மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறது. அவற்றின் மூலம் ஃபுகுஷிமா போன்ற பேரிடருக்கு இட்டுச் செல்லும் அணு விபத்துக்கள் ஏற்படுமாயின், அவற்றிற்குக் காரணமான அணு உலைகளை வழங்கிய அமெரிக்க நிறுவனங்களுக்குப் பொறுப்பு எதுவும் கிடையாது என்கிற முறையில் சட்டத்திருத்தங்களைச் செய்து கொண்டிருக்கின்றது.
அண்டை நாடுகளுடன் உறவில் விரிசல்
மோடி அரசாங்கத்தின் அயல்துறைக் கொள்கையில் மிகப்பெரும் தோல்வி என்பது, அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா மற்றும் நேபாளத்துடனான உறவுகளில் படு தோல்வி அடைந்திருப்பதாகும். அண்டை நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளக்கூடிய விதத்தில் ஆழமான முறையில் தயாரிப்புகள் எதுவும் கிடையாது. அவசர அவசரமாகக் கூட்டங்கள், ஊடகங்களில் ஆர்ப்பாட்டமான விளம்பரங்கள், அவ்வளவுதான். இவை அண்டைநாடுகள் இந்தியாவுடன் கொண்டிருந்த உறவுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. நேபாளத்தில் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்படுவதில் இந்தியா தலையிட்டதாகப் பார்க்கப்படுகிறது. நேபாளத்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மாதேசி பிரிவு மக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்திய சமயத்தில் அதற்கு இந்தியா மறைமுகமாக ஆதரவு அளித்தது. 17 ஆண்டுகள் கழித்து நேபாளத்திற்கு முதன்முறையாகச் சென்ற பிரதமர் மோடி என்ற பெயரை அவர் பெற்ற போதிலும், மிக விரைவாகவே அந்த நல்லெண்ணத்தை அவர் சிதறடித்து விட்டார். உண்மையில், தற்போது நேபாளத்துடனான இந்தியாவின் உறவு மிகவும் அதலபாதாளத்திற்குச் சென்று அமிழ்ந்துள்ளது.
அமைதிப் பேச்சு எனும் குழந்தை
பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சமயத்தில் `சார்க்நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை அழைத்தபோது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் அழைத்தது நல்ல அறிகுறியாகத் தோன்றியது. ஆனால், விரைவிலேயே, பாகிஸ்தான் தூதர், ஹூரியத் தலைவர்களைச் சந்தித்தார் என்பதற்காக, இரு நாடுகளின் அயல்துறைச் செயலாளர்கள் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இவ்வாறு நன்கு வளர்ந்து உருவாகி பிறக்கும் நிலையிலிருந்த அமைதிப் பேச்சுவார்த்தை என்னும் குழந்தை பிறக்காமலேயே சிதைவடைந்து விட்டது.நவாஸ் ஷெரீப்பின் பேத்தியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக மோடி லாகூர் சென்றது, பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதல், புலன்விசாரணை அதிகாரிகளின் பயணங்கள் படுதோல்வி ஆகிய அனைத்துமே ஒருவிதமான சித்திரத்தை அளித்திருக்கின்றன. அதாவது, ஆரம்பத்தில் சந்திப்பதாக ஒப்புக்கொண்டு பல்வேறு நடவடிக்கைளை எடுத்தல்; பின்னர் இறுதியில் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளைச் சுமத்திக் கொண்டு பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொள்ளுதல் என்பதுதான் அது.அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு முன்னர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்துதல், சாத்தியமானவைகள் எவை எவை என்று ஆராய்ந்து அதுகுறித்து மட்டும் தயாரிப்புப் பணிகளைச் செய்தல், ஆழமான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு முன் எதைச் செய்ய வேண்டும் மற்றும் எதைச் செய்யக்கூடாது என்று கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்ற ராஜதந்திரங்கள் அனைத்தும் மோடி அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகளில் காணாமல் போய்விட்டன.

சீனாவுடன் உறவு சீர்குலைந்துள்ளது
சீனாவுடனான பேச்சுவார்த்தைகளிலும் இதுபோன்று தயாரிப்புகள் இல்லாததன் காரணமாக பேச்சுவார்த்தைகள் முறிந்துவிடுகின்றன. சீன ஜனாதிபதி ஜீ ஜின் பிங் அகமதாபாத் வந்து, பிரதமருடன் பேச்சுவார்த்தைகள் நடத்திவிட்டு, அவர் தன் நாட்டிற்குத் திரும்புவற்கு முன்பே, லடாக் குறித்த சர்ச்சைகளின் காரணமாக முறிந்துவிட்டது. தென் சீனக் கடலில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை சரி என்று இந்தியா ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலமும், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் கடல்வழி கப்பற்படை பயிற்சிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்து கொண்டு கூட்டு அறிக்கை வெளியிட்டதை அடுத்தும் இந்தியா - சீனா ஆகியவற்றிற்கிடையேயான உறவுகள் மேலும் சிதிலமடைந்துள்ளன. .நா. மன்றத்தில் மசூத் அசார் பயங்கரவாதியாகப் பிரகடனம் செய்யப்பட்ட சமயத்தில் அதற்கு சீனா தடை ஏற்படுத்தியது விமர்சிக்கப்பட வேண்டிய அதே சமயத்தில், இதற்குப் பழிக்குப்பழி வாங்கும் விதத்தில் சர்வதேச காவல்துறையால் பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்டு, சிவப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ள உய்கர் பகுதியைச் சேர்ந்த போராளி ஒருவருக்கு இந்தியா முதலில் விசா வழங்கிவிட்டு, பின்னர் சீனா நிர்ப்பந்தம் அளித்ததைத் தொடர்ந்து அதனை விலக்கிக் கொண்டிருப்பது, இந்தியாவின் ராஜதந்திர நடைமுறைகளை நல்லவிதமாகக் காட்டவில்லை. பாகிஸ்தான் விவகாரங்களில் நடந்து கொள்வதைப்போன்றே, சீனாவின் விவகாரங்களிலும் முன்னுக்குப்பின் முரணாக மோடி அரசாங்கம் நடந்து கொள்வது என்பது எந்த அளவிற்கு பிரச்சனைகளின் மீது அது ஆழமான முறையில் கவனம் செலுத்தவில்லை என்பதையும், தீர்வுகாணப்பட வேண்டிய அளவிற்குத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபடவில்லை என்பதையுமே காட்டுகின்றன.
அஜீத்டோவலின் ராணுவக் கண்
மோடியின் அயல்துறைக் கொள்கையானது, நமது அயல் உறவு துறை அமைச்சகம் மற்றும் அயல்துறை விவகாரங்களில் செயல்படும் தூதரக அதிகாரிகள் ஆகியவர்களுடன் கலந்தாலோசிக்காமல், அவர்களை முற்றிலுமாக வெட்டிவிட்டு செயல்படுவதுபோலவே தோன்றுகிறது. இது முழுக்க முழுக்க பிரதமர் அலுவலகத்தாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரச்சனையை மேலும் சிக்கலாக்கக்கூடிய விதத்தில், உலகளாவிய அரசியல் தொலைநோக்குப் பார்வையில்லாமல்ராமுன்னாள் அதிகாரியும் மற்றும் இப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான அஜித் டோவல், தன்னுடைய குறுகிய ராணுவக் கண்கொண்டே அயல்துறைக் கொள்கையைக் கையாண்டு வருகிறார்.
ஊடக ஊதாரித்தனம்
அடுத்து மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் பிரதானமாகச் செலுத்தப்படும் கவனம் என்பது, தூதரக செயல்பாடுகள் அல்ல என்பதும், வெறுமனே ஊடக ஆரவாரங்கள் மட்டுமே என்பதுமாகும். நியூயார்க் மேடிசன் கார்டன், சான் பிரான்சிஸ்கோவின் சார்க் டாங்க் மற்றும் லண்டனின் வெம்ப்ளி ஸ்டேடியம் ஆகிய அனைத்துமே ஊடக ஊதாரித்தனங்களுக்கு முழுமையான எடுத்துக்காட்டுகளாகும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் மோடி, ஓர் அர்த்தமுள்ள அயல்துறைக் கொள்கையைப் பின்பற்றுவதற்கு உருப்படியான நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக, தன்னை சந்தைப்படுத்திக் கொள்வதற்குத்தான் அதிக அளவில் ஆர்வத்துடன் காணப்பட்டார் என்பதையே பார்க்க முடிந்தது. மேலும் இந்தியாவின் அயல்துறைக் கொள்கையானது, மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சரான மகேஷ் சர்மா போன்ற சில்லரை அமைச்சர்களின் நடவடிக்கைகள் எவ்விதத்திலும் உதவிடவில்லை. இந்த நபர், ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வன்முறை நிகழ்வுகள்தான் இந்தியாவில் ஆப்பிரிக்க மாணவர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணம் என்கிற முறையில் பேசிக்கொண்டிருக்கிறார். இதேபோன்றே மோடியை வானளவாப் புகழும் மத்திய தகவல் - ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் ராதோர் பேசிடும் பேச்சுக்களும் மியான்மர் மற்றும் பாகிஸ்தானுடன் நல்லுறவுகளை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அமையவில்லை.
இஸ்ரேலுடன் கைகோர்ப்பு
பாலஸ்தீனப் பிரச்சனையைப் பொறுத்தவரை இந்தியா தற்போது இஸ்ரேலுடன் கைகோர்த்துக்கொண்டுவிட்டது என்பது உறுதியாகிவிட்டது. பாலஸ்தீனப் பிரச்சனைக்கு இந்தியா உதட்டளவில் சேவை செய்துவந்தபோதிலும், இந்தியா, பாலஸ்தீனத்தையும், இஸ்ரேலையும் சம தொலைவில் வைத்துக்கொண்டிருப்பதாகக் கூறி வந்த போதிலும், காசா பகுதியில் இஸ்ரேல், சர்வதேச சட்டங்களுக்கு விரோதமாக, யுத்தக் குற்றங்களைப் புரிந்துகொண்டிருப்பதையும், பாலஸ்தீனத்தைத் தொடர்ந்து ஆக்கிரமித்து இருப்பதையும், இப்போதும் இந்தியா ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறது, மேலும் மோடி இஸ்ரேல் செல்ல இருக்கிற சமயத்தில் இந்தியா - இஸ்ரேலுடன் 3 பில்லியன் டாலர் ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. 2015இல் காசா மீதான இஸ்ரேல் நடவடிக்கைகள் தொடர்பாக .நா.மனித உரிமைகள் கவுன்சிலில் தீர்மானம் வந்தபோது அதில் பங்கேற்காமல் இந்தியா வெளிநடப்பு செய்துவிட்டது. ரமல்லாவில் உள்ள அல்-கட்ஸ் பல்கலைக் கழகத்திற்கு இந்தியாவின் சார்பில் 30 கணினிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் தளவாடங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டபோது இஸ்ரேல் அதனைத் தடுத்துவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திட இந்தியா மறுத்துவிட்டது. இவ்வாறு மோடி ஆட்சியின் ஈராண்டு காலத்தில், இந்தியாவின் அயல்துறைக் கொள்கை குறித்து ஊடகங்கள் படாடோபமாக சித்தரித்தாலும், நடைமுறையில் அமெரிக்காவின் அடிமையாக மாறிவிட்டது என்பது நன்கு தெரிகிறது.
- தமிழில்: . வீரமணி