Sunday, June 12, 2016

பாஜகவின் வெறுப்பு அரசியல்

பாஜகவின்   வெறுப்பு அரசியல்
--பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
உத்தரப் பிரதேசத்தில் மதவெறித் தீயை விசிறிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜக  மாட்டுக்கறி அரசியலில்’’ ஈடுபட்டிருப்பது சமீப காலங்களில் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. முகமது அக்லாக் என்பவர் சென்ற ஆண்டு செப்டம்பரில் தாத்ரியில் பிசாரா கிராமத்தில் உள்ள தன் வீட்டில் உண்பதற்காக மாட்டுக் கறி வைத்திருந்தார் எனப் பொய்யாகக் கூறி கொல்லப்பட்டார்.  சில பாஜகவினர் உட்பட இவ்வாறு அக்லாக்கைக் கொலை செய்ததற்காக 18 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சென்ற வாரம், மதுராவில் உள்ள தடய அறிவியல் ஆய்வுக்கூடம் ஒன்றிலிருந்து வெளியாகியுள்ள ஓர் அறிக்கையானது, அக்லாக்கின் வீட்டிற்குச் சற்றுத் தொலைவில் பொது இடம் ஒன்றில் கைப்பற்றப்பட்ட கறியின் மாதிரி, பசுவிற்கு அல்லது அதன் மரபிற்கு’’ சொந்தமானது என்று கூறியிருப்பதை அடுத்து, அக்லாக் கொல்லப்பட்ட நிகழ்வைத் திசை திருப்பக்கூடிய விதத்தில் பாஜகவின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் இதனைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு தம்பட்டம் அடிக்கும் முயற்சிகளில் இறங்கி இருக்கிறார்கள்.
மதுரா ஆய்வுக்கூட அறிக்கை வெளியாகி இருக்கும் சூழ்நிலையே இரண்டகமானது, ஏனெனில் தாத்ரியில் உள்ள அரசாங்கக் கால்நடை மருத்துவமனை மருத்துவர் அக்லக்கின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட கறி, ஆட்டு இனத்தைச் சேர்ந்தது,’’ என்று கண்டு அதன்படியே தன் பூர்வாங்க அறிக்கையை அளித்திருக்கிறார்.  உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்வும் மதுரா அறிக்கையின் நம்பத்தக்க நிலை குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.  மதுரா ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்யப்பட்ட மாதிரி கறி, அக்லாக் வீட்டின் குளிர்பதன சாதனத்திலிருந்து (ரெஃப்ரிஜிரேட்டரிலிருந்து) எடுத்தது அல்ல. மாறாக வெளியே எங்கிருந்தோ எடுக்கப்பட்டது. மேலும், மாட்டுக் கறி வைத்திருப்பது சட்டவிரோதம் என்று எந்த சட்டமும் உத்தரப்பிரதேசத்தில் அமலிலும் இல்லை.
பிசாரா கிராமத்தில் ஒரு பசு அறுக்கப்பட்டு, அதன் கறி முஸ்லீம்களுக்கு விநியோகிக்கப்பட்டது என்று தொடர்ந்து பாஜக பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறது. இதற்குப் பயன்படுத்திக் கொள்வதற்காக மதுரா ஆய்வுக்கூட அறிக்கை கைப்பற்றப்பட்டிருக்கிறது.  பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், இந்து மதவெறியனுமான யோகி ஆதித்யநாத்  அக்லாக்கின் குடும்பத்தினருக்கு எதிராக பசு அறுக்கப்பட்டது என்று வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், அக்லாக் கொல்லப்பட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி இந்துக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கோரி வருகிறார். மத்திய கலாச்சாரத்துறை அமைச்சரான மகேஷ் சர்மா, மதுரா ஆய்வுக்கூடத்தின் அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ள உத்தரப்பிரதேச முதல்வர் மீது பாய்ந்திருக்கிறார். முசாபர்நகர் கலவரங்களில் தன் பங்களிப்பு காரணங்களால் பேர்போன சஞ்சீவ் பல்யான் என்கிற மத்திய அமைச்சரும்  அறுக்கப்பட்டதாகக் கூறப்படும் பசுவின் கறியை யார், யாரெல்லாம் சாப்பிட்டார்கள் என்று கண்டுபிடிப்பதற்காக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி இருக்கிறார்.
ஜூன் 6 அன்று பிசாரா கிராமத்தில் ஒரு மகாபஞ்சாயத்து நடந்திருக்கிறது. இவ்வாறு நடத்திட தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும், அதனை மீறி இந்த பஞ்சாயத்து நடந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் உள்ளூர் பாஜக மற்றும் சிவசேனைத் தலைவர்கள் கலந்து கொண்டிருந்திருக்கிறார்கள். கூட்டத்தில் என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள், தெரியுமா? இருபது நாட்களுக்குள், அக்லாக்கின் குடும்பத்தினருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டுமாம், இல்லையேல் அந்தக் குடும்பத்தினருக்கு எதிராக எழும் பொதுக் கோபத்தை’’ இந்தக்கூட்டத்தால் கட்டுப்படுத்திட முடியாது என்று அறிவித்திருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் வைக்கப்பட்ட ஒட்டுமொத்த வாதமும் என்னவெனில், பசுவைக் கொன்றவர்கள்தான்’’ உண்மையில் கிரிமினல்கள் என்பதும், பசுவைக் கொன்றவரைக் கொன்றவர்கள் அல்ல என்பதுமேயாகும்.
பாஜக தலைவர். அமித் ஷா. ஆத்திரமூட்டும் விதத்தில் அளிக்கப்பட்டுள்ள சஞ்சீவ் பல்யான் அறிக்கையைக் கண்டிக்க மறுத்திருக்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது. மதுரா ஆய்வுக் கூட அறிக்கையின் அடிப்படையில் அவர் கருத்துக்களைத் தெரிவித்திருக்க  வேண்டும் என்று மட்டுமே கூறியிருக்கிறார்.
பாஜக தலைமை. தாத்ரி மாட்டுக்கறி’’ சமாச்சாரத்தை மதவெறித் தீயை விசிறிவிட வேண்டும் என்பதற்காக ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறது என்பது மிகவும் தெளிவாகும். உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வருவதை மனதில் வைத்துக் கொண்டு, இத்தகைய கேவலமான இழிமுயற்சியில் இறங்கி இருக்கிறது. தாத்ரி நிகழ்வுக்குப்பின்னர் ஒருசில வாரங்களில் பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் பசுவை அறுத்து கறியைச் சாப்பிட்டார்கள் என்ற பிரச்சனையைக் கிளப்பி ஆதாயம் தேட பாஜக முயன்றதைப் பார்த்தோம். ஆனால். பீகார் வாக்காளர்கள் அவர்களது சீர்குலைவு நிகழ்ச்சிநிரலைச் சற்றும் பொருட்படுத்தவில்லை என்பது வேறு விஷயம். இத்தகைய படுகேவலமான மற்றும் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிகள் தேர்தல்களில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு நின்றுவிடாது, சமூகத்திலும் மதவெறி நஞ்சை ஊட்டி மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திடும்.  இதன் தொடர்ச்சியாகத்தான் ஜார்கண்ட் மாநிலத்தில் லடேஹார் என்னுமிடத்தில் ஒரு 13 வயது சிறுவன் உட்பட கால்நடைகளை விற்கும் இரு முஸ்லீம்கள் கொல்லப்பட்டு, மரத்தில் தொங்கவிடப்பட்ட கொடூரமான குற்றங்கள் நடந்தன.
மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம் அதனுடைய அமைச்சர்களும், கட்சித் தலைமையும் இதுபோன்று வெறுப்வை உமிழும் பேச்சுக்கள் மற்றும் தூண்டதல்களால் ஏற்படும் விளைவுகளுக்குப் பதில்சொல்லித்தான் ஆக வேண்டும். தேர்தல்கள் வரலாம், போகலாம். ஆனால் மக்கள் பாஜகவின் செயல்பாடுகளைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், அரசாங்க அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தி, அவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை விளைவித்து, சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதற்குச் சரியான முறையில் நீதி வழங்குவார்கள்.
(ஜூன் 8, 2016)
(தமிழில்: ச. வீரமணி)  


No comments: