Sunday, October 6, 2013

மதவெறியைக் கிளறிவிட பாஜக முயற்சி



பல ஆண்டுகளுக்குப்பின்னர்,  இறுதியாக, மத்திய உள்துறை அமைச்சர் நாட்டின் பல மதச்சார்பற்ற சக்திகளின் வேண்டுகோளுக்கு இணங்க,  பயங்கரவாத வழக்குகள் தொடர்பாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தவறான முறையில் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை சரி செய்திடவும் அதன்மூலம் உயிருக்கும் சுதந்திரத்திற்கும் நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளை அவர்களுக்கு மீண்டும் அளித்திடவும் ஒப்புக்கொண்டிருக்கிறார். அனைத்து முதலமைச்சர்களுக்கும் அவர் எழுதியுள்ள ஒரு கடிதத்தில்,  பயங்கரவாத வழக்குகளில் தவறான முறையில் சிறையில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் எவரும் இருத்தி வைக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வாறு ‘‘இரண்டகமான’’ முறையில் கைதுகளில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்திடவும் பரிந்துரைத்திருக்கிறார்.

புலனாய்வு அமைப்புகளால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவதாகப் பல புகார்கள் மத்திய அரசுக்கு வந்திருக்கின்றன.... சிறுபான்மை இளைஞர்களில் சிலர் தாங்கள் வேண்டும் என்றே குறிவைத்துத் தாக்கப்படுவதாகவும்,  தங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் உணரத் தொடங்கியுள்ளார்கள். தேவையற்ற முறையில் இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவதற்கு அப்பாவி இளைஞர்கள் எவரொருவரும் சிக்க வைக்கப்படக்கூடாது என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது,” என்று ஷிண்டே தன்னுடைய கடிதத்தில் எழுதியிருக்கிறார். அவர் மேலும், பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மை காட்டக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். ஆயினும் பயங்கரவாத வழக்குகளைப் புலனாய்வு அமைப்புகள் கையாளும்போது மத மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பேணக்கூடிய விதத்தில் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். ஷிண்டேயின் கடிதத்திற்கு எதிராக பாஜக துள்ளிக்குதிக்கும் என்பது எதிர்பார்த்ததுதான். ஷிண்டே அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுவதாகவும், நாட்டை வகுப்புவாத அடிப்படையில் பிரிக்க முயற்சிப்பதாக வும் பாஜக,  குற்றம் சுமத்தி இருக்கிறது. 2011இல் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் நடைபெற்ற சமயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சட்டவிரோதமாகக் கைதுசெய்யப்பட்டு, சிறைகளில் வாடுவதாகவும்,  இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவதாகவும்,  குறிப்பாக ஆஜ்மீர் ஷெரிப், மாலேகான் மற்றும் ஹைதராபாத் மெக்கா மசூதி ஆகியஇடங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இவ்வாறு அவர்கள் கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும் பிரச்சனையை எழுப்பியது. இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் இந்துத்துவா பயங்கரவாதிகளின் திட்டமிட்ட வேலைகளே என்று புலனாய்வுகளின் மூலம் நன்கு தெரிந்த பிறகும் கூட, முஸ்லிம் இளைஞர்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

பின்னர், 2012 நவம்பரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிக்குழு ஒன்று, குடியரசுத் தலைவரைச் சந்தித்து,  மனு ஒன்றையும் தாக்கல் செய்தது. அந்த மனுவில் குறிப்பிட்டிருந்த விவரங்கள் வருமாறு: நாட்டின் பல பகுதிகளிலும் நடை பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக புலனாய்வு அமைப்புகளால் முஸ்லிம் இளைஞர்கள் தவறான முறையில் கைது செய்யப்பட்டு, வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். சில வழக்குகளில் இந்த இளைஞர்கள் பத்து அல்லது பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாகவே சிறையிலடைக்கப் பட்டிருந்து, கடைசியில் நீதிமன்றங்களால் இவர்கள் அப்பாவிகள் என்று கூறப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டவர்கள் மீது இரக்கம் கொண்டு நம்பகமான குழுக்கள் மற்றும் அமைப்புகள் சில, இவ்வழக்குகளின் விவரங்களை சேகரித்து வெளியிட்டிருக்கின்றன. அவற்றை ஆராயுங்கால்,  இந்த வழக்குகள் பலவற்றில் முஸ்லீம் இளைஞர்களுக்கு எதிராகப் புலனாய்வு அதிகாரிகள் ஒருதலைப்பட்சமான கண்ணோட்டத்துடன் செயல்பட்டுள்ளனர் என்பதையும், அப்பாவி இளைஞர்களுக்கு எதிராகப் பொய்யாகப் புனையப்பட்ட சாட்சியங்களைத் தாக்கல் செய்துள்ளனர் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளன. புலனாய்வு அமைப்புகள் தங்கள் புலன்விசாரணைகள் மூலம் ‘‘வழக்குகள்’’ போட வேண்டும் என்பதில்தான் குறியாக இருந்திருக்கிறார்களே யொழிய, உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்வதை உத்தரவாதப்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.’’ ‘‘மிகவும் கொடூரமான முறையில் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட அமைப்புகள் அத்தகையத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்க முன்வராத சமயங்களில்,  கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் நிலைமை மிகவும் பரிதாபமானவை. இவர்கள் தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இத்தகைய செயல்பாடுகள், நம் மதச்சார்பற்ற ஜனநாயகக் கொள்கைகள் மீதே கறையை உண்டாக்குகின்றன. அதே சமயத்தில், அப்பாவி மக்கள் கைது என்பதன் பொருள் உண்மையான கயவர்களை சுதந்தரமாக உலவ விடுகிறோம் என்பதாகும்.’’ மேற்படி மனுவில் தவறான முறையில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தவர்கள் தொடர்பான 22 வழக்குகளைப் பட்டிய லிட்டிருந்தோம். 2006இல் மாலேகான் வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த ஒன்பது முஸ்லிம் இளைஞர்கள், தவறான முறையில் கைது செய்யப்பட்டார்கள் என்பதும், அவர்கள் ஆறு ஆண்டு காலத்திற்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்து, பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பதும் இப்போது தெரிய வந்திருக்கிறது. அதே போன்று 2007 ஹைதராபாத் மெக்கா மசூதி வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 27 முஸ்லிம் இளைஞர்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகள் அனைத்திலிருந்தும் நிரபராதிகள் என்று கூறப்பட்டு ஐந் தாண்டுகளுக்குப் பின் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதேபோன்று கர்நாடகாவில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் கைது செய்யப்பட்ட ஐவரில் இரு முஸ்லிம் இளைஞர்கள் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் நிரபராதிகள் எனக் கூறப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது. அதேபோன்று அது ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு, இனத்தினருக்கு, நிறத்தினருக்கு அல்லது பிராந்தியத்தினருக்கு மட்டும் சொந்தம் என்றும் கூற முடியாது.

பயங்கரவாதச் செயல் என்பது தேச விரோதச் செயல் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. ஆயினும்,  பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில்,  அப்பாவி இளைஞர்களை,  அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்காக,  பலியாக்கிடக் கூடாது. இவ்வாறு செய்வது என்பது நாட்டின் சுதந்திரத்தையே,  நாட்டின் நீதிபரிபாலன அமைப்பையே கேலிக்குரியதாக்கி விடும். பயங்கரவாத வழக்குகளில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் அடிக்கடி இன்னல்களுக்கு உட்படுத்தப்படுவது அவ்வப்போது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் கவலை அளிக்கும் விஷயமாகும். இதனை ஏற்க முடியாது. இது நம் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்னும் கட்டமைப்பிற்கே விரோதமானதாகும். உள்துறை அமைச்சரின் கடிதத்திற்கு எதிரான ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தின் கோபம் புரிந்து கொள்ளக்கூடியதே. ஏனெனில் இவர்களைப் பொறுத்தவரை,  இவர்கள் நவீன இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற தன்மையை மறுதலிப்பவர்கள். இன்றைய நவீன இந்தியக் குடியரசை,  ஆர்எஸ்எஸ்-இன் கொள்கையை உயர்த்திப்பிடிக்கக்கூடிய விதத்தில் ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிச இந்து ராஷ்ட்ரமாகமாற்ற வேண்டும் என்பதே இவர்களது குறிக்கோளாகும். இவர்கள் மதச் சிறுபான்மையினருக்கு சுதந்திரத்தையும் நீதி அமைப்பில் சமத்துவத்தையும் உறுதியளிக்கக்கூடிய விதத்தில் மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் எதிர்ப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. எனவேதான் அரசின் இந்த முயற்சியானது, முஸ்லிம்களை முகஸ்துதிசெய்வதாகவும், வாக்குவங்கி அரசியலாகவும் அவர்களால் கருதப்படுகிறது. உண்மையில் சொல்லப்போனால், ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம்தான் நம் நாட்டில் மதப் பெரும்பான்மையினரின் வாக்குகளை ஒருமுனைப் படுத்துவதற்காக நாட்டின் பல பகுதிகளில் மதவெறித் தீயை விசிறிவிடுவதன் மூலம் மதவெறியைக் கூர்மைப்படுத்தி,  தங்களுடைய வாக்குவங்கி அரசியலின் மோசமான வடிவத்தை நடைமுறைப்படுத்தும் கேவலமான குற்றச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. நம் நாட்டில் மதச்சிறுபான்மையினரின் சமூக -பொருளாதார வாழ்நிலை குறித்து நீதியரசர் சச்சார் குழு அளித்த பரிந்துரைகள் கண்டு நாடே அதிர்ச்சிக்குள்ளாகியது. இவரது அறிக்கையைத் தொடர்ந்து வெளியான நீதியரசர் ரங்கனாத் மிஷ்ரா ஆணையத்தின் அறிக்கையானது, மதச் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு, இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. உண்மையில் நிலைமைகள் இவ்வாறு இருந்த போதிலும், முஸ்லிம் மக்களுக்காக ஏதேனும் நடவடிக்கை வந்தால், அவர்கள் முகஸ்துதிசெய்யப்படுவதாக ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் அலறுகிறது.

இவ்வாறு இவர்கள் கூறுவதன் மூலம் தங்கள் மதவெறிப்பிரச்சாரத்தை அவர்கள் கூர்மைப்படுத்துகிறார்கள் என்பதே இதன் உண்மைப் பொருளாகும். ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தால் தங்களின் எதிர்கால பிரதமர் வேட்பாளர் குஜராத் முதல்வர் மோடிதான் என்று கூறி அதற்குக் காரணம் குஜராத் மாநிலத்தை அவர் வீர்யம் மிக்க குஜராத்தாக மாற்றி இருப்பதுதான் என்றும் தம்பட்டம் அடித்து வந்தது. இப்போது நாட்டின் மனிதவள ஆற்றல் அட்ட வணையின்படி தேசிய சராசரியில் குஜராத் மிகவும் பின்தங்கியிருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. மேலும் தற்போது வெளியாகியுள்ள, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரின் தலைமையில் இயங்கிய மாநிலங்களின் பலவகை வளர்ச்சி அட்டவணைகளைப் பரிசீலனை செய்த குழுவின் அறிக்கையானது, பலமுனைகளில் குஜராத் முன்னேறியிருப்பதாகத் தம்பட்டம் அடிக்கப்பட்டதையும் தரைமட்ட மாக்கியுள்ளது. அந்த அறிக்கையில், நாட்டின் வளர்ச்சி அட்டவணையில் குஜராத் 12ஆவது இடத்தினை வகிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. இதுதான் பாஜக மாநில அரசான குஜராத்தின் ‘‘வீர்யம்’’ ஆகும். 2014 பொதுத் தேர்தலின்போது தங் களுடைய பிரச்சாரத்தின் அடிப்படையாக மதவெறித் தீயை விசிறிவிட்டு மத வெறியைக் கூர்மைப்படுத்துவது என்ற அடிப்படைக்கு ஆர்எஸ்எஸ்/பாஜக திரும்பி யிருக்கிறது என்பது தெளிவாகி இருக்கிறது. எனவேதான்,  பாஜக தலைவர் மத்திய உள்துறை அமைச்சரின் கடிதம் அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுகளுக்கு எதிரானது’’ என்றும் உள்துறை அமைச்சர், முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தைத் திரும்பப் பெற பிரதமர் கட்டளையிட வேண்டும்’’ என்றும் கூறியதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. அவர் மேலும்,  காங்கிரஸ் கட்சிதான் நாட்டில் மிகப்பெரிய வகுப்புவாதக் கட்சி. முன்னதாக, பிரதமர் இந்தியாவின் வளங்களில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை என்று கூறியிருந்தார். இப்போது பயங்கரவாதம் என்ற பெயரால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தவறாக சிறையில் அடைக்கப்படாது இருப்பதை முதலமைச்சர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்’’ என்றும் இதுபோன்று மேலும் பலவும் எழுதியிருக்கிறார்.
மேற்கு உத்தரப்பிரதேசத்தில் முசாபர் நகர் கலவரங்களுக்குப்பின் உருவான பதற்ற நிலைமை இன்னமும் தொடர்கிறது. 

நாட்டின் பிற பகுதிகளிலும் இதுபோன்று பதற்றத்தை உருவாக்குவதற்கான திட்டங்களை அவர்கள் கைவசம் வைத்திருக்கிறார்கள் என்பதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. பாஜகவின் தேர்தல் ஆதாயத்திற்காக நாட்டின் பிற பகுதிகளில் மதவெறித் தீயை விசிறிவிட ஆர்எஸ்எஸ்/பாஜக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அனுமதித்திடக் கூடாது. நவீன இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை ஒரு முனைப்படுத்திடவும், நாட்டின் நலன்களைப் பாதுகாத்திடவும் இது அவசிய மாகும்.

(தமிழில்: ச. வீரமணி)



No comments: