Tuesday, October 8, 2013

முசாபர் நகர் கலவரத்திற்குக் காரணமான வன்முறையாளகளைக் கது செய்க-அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வேண்டுகோள்








புதுதில்லி, அக்.9-
முசாபர்நகர் கலவரத்தின்போது வன்முறையில் ஈடுபட்ட வன்முறையாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். வன்முறைக்கு ஆளான  பெண்களுக்கு மறையான சிகிச்சை (கவுன்சிலிங்) அளித்திட வேண்டும். அவர்களின் புனர்நிர்மாணப் பணிகளை முறையாகச் செய்திட வேண்டும். இவை தொடர்பாக மாதர் சங்கத்தினர் சார்பில் உ.பி. முதல்வரைச் சந்தித்திட உள்ளோம்  என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன் கூறினார். 
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் உண்மை கண்டறியும் குழு ஒன்று  முசாபர்நகர் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துத் திரும்பியுள்ளது. இது தொடர்பாக விளக்கிட செவ்வாய் அன்று தில்லியில் பெண் பத்திரிகையாளர் சங்க வளாகத்தில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அவர்கள் கூறியதாவது:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் தில்லி மாநில பொதுச் செயலாளர் சேபா பரூக்கி, உ.பி. மாநிலத் தலைவர் மது கார்க், லக்னோ செயலாளர் சீமா ரானா, தில்லி செயல் தலைவர் ஆஷா சர்மா, தில்லிப் பொருளாளர் அஞ்சனா ஜா, தில்லி துணைத் தலைவர் மைமூனா முல்லா ஆகியோர்  2013 அக்டோபர் 5 அன்று முசாபர்நகரில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்கள் தங்கியிருந்த முகாம்களுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார்கள்.  கலவரத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த ஏராளமான பெண்களையும் அவர்கள் சந்தித்தார்கள்.
தூதுக்குழுவினர் முதலில் புதானா வட்டத்தில் ஜோகியகேரா கிராமத்திற்குச் சென்றார்கள். இங்கு தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கலவரத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட ஃபுகானா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஃபுகானா கிராமத்தில் சுமார் 20-25 ஆயிரம் மக்கள் வசித்து வந்தார்கள். இவர்களில் 3500 பேர் முஸ்லீம்கள். இவர்களின் மீது செப்டம்பர் 8 அன்று காலை தாக்குதல் தொடங்கியது. இந்தப் பகுதியில் மட்டும் பெண்கள் கூட்டு வன்புணர்ச்சிக்கு ஆளானதாக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைவரும் முஸ்லீம் பெண்கள்.
பின்னர் தூதுக்குழுவினர் லோயி என்னும் மற்றொரு கிராமத்திற்குச் சென்றனர். ஹிசாட், லேக், பகாவ்தி, கராத், ஃபுகானா, ஸசன்பூர் முதலான கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்கே தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். 80 விழுக்காட்டினர் ஃபுகானா கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
முசாபர் நகர் குறித்து ...
முசாபர்நகர் குறித்து பொதுவாக தவறான தகவல்களே பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆண்-பெண் விகிதாசாரம் என்பது இங்கே 1000 ஆண்களுக்கு 889 பெண்கள் என்ற அளவில்தான் இருக்கிறது. குழந்தை பிறப்பில் விகிதாசாரம் இன்னும் மோசம். 1000க்கு 863தான். பெண்கள் படிப்பறிவு என்பது 58.69 விழுக்காடுதான். அதேசமயத்தில் சராசரி படிப்பறிவு விகிதம் 69.12 விழுக்காடாகும். பெரும்பகுதி பெண்கள் பத்தாம் வகுப்பிற்கு மேல் கல்வியைத் தொடர முடியா நிலை.
முசாபர்நகர் பகுதியில் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவது என்பது அடிக்கடி நடைபெறும் பகுதியாகும். இதில் இரு சமூகத்துப் பெண்களுமே பாதிக்கப்படுகிறார்கள். இக்குற்றச் செயல்களில் ஈடுபடும் கயவர்கள் இரு சமூகத்திலும் உண்டு.  அதேபோன்று கயமைத்தனம் செய்பவனும், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்ணும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஆயினும் இந்த எதார்த்த உண்மைகள் வேண்டுமென்றே இப்போது வன்முறையைத் தூண்டிவிட்டவர்களால் மூடி மறைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்ல, உத்தரப்பிரதேச மாநிலத்தில் ‘‘கவுரவக் கொலைகள்’’ தொடர்ந்து நடைபெறும் மாவட்டங்களில் முசாபர்நகர் மாவட்டமும் ஒன்று. சராசரியாக மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டுபேர் இம்மாவட்டத்தில் ‘‘கவுரவக் கொலை’’களால் கொல்லப்படும் கொடுமை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவற்றின் பின்னணியில் கட்டைப் பஞ்சாயத்துக்கள் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.  இதில் பாதிக்கப்படும் பெண்கள் இரு சமூகத்திலும் உண்டு.
உதாரணமாக, வன்முறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஃபுகானாவும் ஒன்று. இக்கிராமத்தில் கவுரவக் கொலைகள் என்பவை சர்வசாதாரணமாகும். சமீபத்திய வன்முறையில் இக்கிராமத்தில் முஸ்லீம் பெண்கள் வன்புணர்ச்சிகு ஆளாகி இருக்கிறார்கள். இதே கிராமத்தில் 2006இல் ஓர் இந்துப் பெண் நடுத்தெருவில் ஆடைகள் உறிக்கப்பட்டு, ‘‘கவுரவக்’’ கொலை செய்யப்பட்டுள்ளார். விஷயம் என்னவெனில், அந்த அளவிற்கு பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கச் சிந்தனை ஆழமாக இங்கே புரையோடிப் போயிருக்கிறது. இவர்களின் கொடூர மனப்பான்மைக்கு இரு இனத்துப் பெண்களுமே தப்பவில்லை.
இன்றையதினம் இரு இனத்தில் உள்ள இளம் பெண்களும் மிகவும் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லக்கூடப் பயப்படுகிறார்கள்.
இத்தகைய இடத்தைத்தான் ஆர்எஸ்எஸ்/பாஜக-வினர் தங்கள் மதவெறித் தீயை கிளறிவிட நன்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதற்குமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முஸ்லீம் மக்கள் மீது வன்முறையை ஏவிவிட்டுள்ளார்கள். இதில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது முஸ்லீம் பெண்களாகும்.
பாலியல் தாக்குதல்கள்
சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. பல வன்முறைச் சம்பவங்கள் குறித்து வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சில சம்பவங்கள் குறித்து மட்டுமே முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வளவுதான் அதன்பின் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் எதுவும் பெறப்படவில்லை. கயவர்கள் எவரும் கைது செய்யப்படவும் இல்லை. சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகியும் எந்தத் தொடர் நடவடிக்கையும் இல்லை.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான அனைத்துப் பெண்களையும் மாதர் சங்கத்தின் சந்தித்தனர். அவர்கள்  எப்படி வன்முறைக்கு ஆளானார்கள்?
வழக்குகளின் விவரம் வருமாறு: (பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).
1. சபா (சலீம் என்பவரின் மனைவி):  சலீம் துணிகளை சுமந்து சென்று விற்று வருபவர். சென்ற மாதம் 8ஆம் தேதி காலை கயவர்கள் (பத்லு, நிலு மற்றும் அமர்தீப்) கத்திகளுடன் சபாவின் இல்லத்திற்கு வந்தனர்சபாவைப் பிடித்துக்கொண்டு மூன்று பேரும் வன்புணர்ச்சி  செய்துள்ளனர். தடுக்க வந்த சலீமின் தம்பியைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்கள். பின்னர் பெட்ரோல் எடுத்து வந்து வீட்டைத் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். சபாவும் அவரது குடும்பத்தினரும் தப்பி ஓடிவந்து ஜோகியாகேராவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
2. சமீனா: சுமார் 10 மணியளவில் ரூபேஷ், ராம்வீர் மற்றும் பீம் அவரது வீட்டிற்கு வந்து அவரை வன்புணர்ச்சி செய்துள்ளார்கள். பின்னர் அவரது வீட்டைத் தீக்கிரையாக்கியுள்ளனர். அவரது 2 வயது குழந்தையையும் வீசி எறிந்துள்ளனர். இதில் அக்குழந்தைக்குக் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
3. குத்சியா: சுமார் பிற்பகல் 2 மணியளவில் ஐந்து பையன்கள் (அனைவரும் அவரது அண்டை வீடுகளைச் சேர்ந்தவர்கள்) - சுனில் (சாது என்பவரின் மகன்), தேவேந்தர் (ஹர்பால் என்பவர் மகன்), ரமேஷ் (விர்மா என்பவரின் மகன்), ராம்குமார் (பட்வாரி என்பவரின் மகன்), ஜோகிந்தர் (பிரதான் என்பவரின் மகன்) அவரது வீட்டிற்கு வந்தார்கள், குத்சியா அணிந்திருந்த உடைகளை ரமேஷ் கிழித்து எறிந்தான். சுனில், தேவேந்தர் மற்றும் ராம்குமார் அவரை வன்புணர்ச்சி செய்தார்கள். குத்சியா தப்பி ஓட முயற்சித்திருக்கிறார். ஆனால் அவர்கள் அவரைப்பிடித்து, சுவரில் அவரது தலையை மோதச் செய்துள்ளார்கள். இதில் அவர் மயங்கி விழுந்துவிட்டார். பின்னர் 4 மணியளவில் பாதுகாப்புப் படையினர் அங்கே வந்தசமயத்தில் அவர்களால் அவர் காப்பாற்றப்பட்டு, லோயி கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளார்.
4. ஃபரிதா (சல்மான் மனைவி): கயவர்கள் அவரது வீட்டிற்கு வந்த சமயத்தில் அவர் ரொட்டி தயார் செய்து கொண்டிருந்திருக்கிறார். கயவர்களைப் பார்த்ததும், தப்பி ஓட முயற்சி செய்திருக்கிறார். ஆயினும் அவர்கள் அவரைப் பிடித்துத் தாக்கி, வன்புணர்ச்சி செய்துள்ளார்கள். சச்சின், வேத்பால், ஷானி, அஜித் மற்றும் யோகேஷ் என்னும் ஐந்து பையன்களும் இவ்வாறு அவரை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டுச் சென்றுள்ளனர். மற்ற எவரும் அவரைக் காப்பாற்றுவதற்காக வரும்முன்னர் அவரே பக்கத்திலிருந்த காட்டிற்குள் தப்பிஓடி ஒளிந்திருந்து, லோயி கிராமத்தில் இருந்த மதராசா பள்ளிக்கு வந்திருக்கிறார்.
5. சல்மா (நாசீர் மனைவி): புகாமா கிராமத்தைச் சேர்ந்த இவரை 6 பேர் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளனர். இப்போது இவர் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்.
6. சபீனா : சபீனா தன்குடும்பத்திற்கு ஏற்பட்ட அவலங்களை விவரித்தார். கயவர்கள் இவரது வீட்டிற்கு வந்தபோது வீட்டிலிருந்தவர்கள் அவர்களை எதிர்த்துத் தாக்கியுள்ளனர். இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆயினும் அவர்கள் எதிர்ப்பை முறியடித்து, சபீனாவையும் அவரது இரு மகள்களையும் (வயது முறையே 16 மற்றும் 22) மானபங்கப்படுத்தியுள்ளனர். பின்னர் வீட்டை தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் காடு வழியே தப்பி ஜோகியாகேரா வந்து சேர்ந்தனர்.
இவ்வாறு வன்புணர்ச்சிக்கு ஆளான அனைவருமே மாதர் சங்கத்தினரிடம் தங்களிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டவர்கள் யார் என்று தங்களால் அடையாளம் காட்ட முடியும் என்று கூறியிருக்கிறார்கள். இவர்கள் காவல்நிலையத்தில் அளித்துள்ள முறையீடுகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகளிலும் கயவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆயினும் இவர்களில் எவரும் காவல்துறையினரால் இதுவரை கைது செய்யப்படவில்லை.
வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பல குழந்தைகள் காணாமல் போயுள்ளன. ஆயினும் இவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இவர்களைக் கண்டறிந்திட நிர்வாகத்தினரால் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
முகமது அல்டாப் தெருத்தெருவாகச் சுற்றித்திரிந்து துணிகளை விற்பனை செய்பவர். கலவரம் நடந்தபோது இவர் தன் ஐந்து வயதுப் பெண் குழந்தையுடன் தப்பி ஓடியபோது அக்குழந்தை இவரது பிடியிலிருந்து நழுவி விழுந்துவிட்டது. இன்னமும் அது கிடைக்கவில்லை.
நதீம் என்ற பெண் தன் ஐந்து மாதக் குழந்தை ரெஹனாவைத் தன் கைகளில் வைத்துக்கொண்டு ஓடியபோது மயங்கி விழுந்துவிட்டார். எழுந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை.
இதில் மிகவும் கொடுமை என்னவெனில், பெண்களிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டவர்கள், தங்கள் வீடுகளைத் தாக்கி, தீக்கிரையாக்கியவர்கள்தங்கள் சொந்தக் கிராமத்தைச் சேர்ந்த அக்கம்பக்கம் இருந்தவர்கள்தான். இவ்வாறு இவர்கள் மத்தியில் பாதுகாப்பற்ற விதத்தில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே இவர்கள் மீளவும் தங்கள் கிராமத்திற்குச் செல்ல மிகவும் அஞ்சுகிறார்கள்.
கலவரம் நடந்து ஒரு மாதம் ஆகிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் இன்னமும் தற்காலிகமான திறந்தவெளி முகாம்களிலேயே தங்கியிருப்பதால் சுகாதார சீர்கேட்டிற்கு மேலும் ஆளாகியுள்ளார்கள்.
முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் மிகவும் நன்கு திட்டமிடப்பட்டவைகளாகும். பாஜக/ஆர்எஸ்எஸ்-ஐச் சேர்ந்தவர்கள்மகாபஞ்சாயத்துக்கள் மற்றும் கட்டைப் பஞ்சாயத்துக்களைக் கைப்பற்றிக் கொண்டு இவற்றின் மூலம் இத்தாக்குதல்களை செய்துள்ளார்கள். 
ஜோலி என்னும் இடத்தில்மட்டும்தான் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மற்ற இடங்களில் எல்லாம் முஸ்லீம்கள்தான் பாதிக்கப்பட்டவர்கள்.
கலவரம் நடப்பதற்கு முன்பும் சரி, நடந்த பின்பும் சர் உத்தரப்பிரதேச மாநில அரசு மிகவும் பொறுப்பற்ற முறையிலேயே நடந்துகொண்டு வருகிறது. வன்முறையாளர்கள் மீது காலத்தே அது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அளவிற்குச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது.
இதில் மிகவும் கொடுமையான அம்சம் என்னவெனில் கலவரம் நடைபெற்ற சமயத்தில் மிகவும் நேர்மையாக நடந்துகொண்ட காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டிருப்பதாகும்.
ஒருசில பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்தபோதிலும், கலவரத்தை நடத்தியவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
தற்காலிக முகாம்களை தனிநபர் சிலர்தான் அமைத்துள்ளனர். இம்முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு அரசின் நிவாரண உதவி என்பது இன்னமும் முறையாகப் போய்ச்சேரவில்லை.
முகாம்களை நடத்துபவர்கள் மாதர் சங்கத்தினரிடம் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கோரினார்கள். இதனை அடுத்து மாதர் சங்கத்தினர் 65 முகாம்களுக்குத் தேவையான தார்பாலின்களை வழங்கி இருக்கிறார்கள்.
மாதர் சங்கத்தினர் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று வந்தது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
‘‘நிலைமை உண்மையில் மிகவும் பயங்கரமானது. மதவெறியை வன்முறை வெறியாட்டங்களை நடத்தியவர்கள், பெண்களின் பாதுகாப்பை இதற்குக் காரணமாகக் கூறியுள்ளனர்.  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் திரித்துக் கூறப்பட்டு, முஸ்லீம் மக்களுக்கு எதிராக வன்முறையை ஏவப் பயன்படுத்தப்பட்டள்ளன.  
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்காக இவ்வாறு முஸ்லீம் மக்கள் மீது வன்முறை ஏவப்பட்டிருக்கிறது என்பதை எங்களால் உணர முடிந்தது. ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தினர், குஜராத்திலிருந்து அனுப்பப்பட்ட அமித்ஷா உத்தரப்பிரதேசத்திற்கு வந்தபிறகு இவ்வாறு முஸ்லீம் மக்கள் மீது வன்முறை ஏவப்பட்டிருக்கிறது. கட்டைப் பஞ்சாயத்து, மகா பஞ்சாயத்து ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, முஸ்லீம் மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டுள்ளார்கள்.
நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக, முஸ்லீம் மக்களுக்கு  எதிராக, நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிராக இவ்வாறு இவர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள். இதுதான் நரேந்திர மோடி நாட்டுக்குக் காட்டக்கூடிய எதிர்காலமாகும். இது நமக்கு வேண்டாம். 
வன்முறையாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். வன்முறைக்கு ஆளான  பெண்களுக்கு மறையான சிகிச்சை (கவுன்சிலிங்) அளிக்கப்பட வேண்டும். அவர்களின் புனர்நிர்மாணப் பணிகளை முறையாகச் செய்திட வேண்டும். இவை தொடர்பாக மாதர் சங்கத்தினர் சார்பில் உ.பி. முதல்வரைச் சந்தித்திட உள்ளோம்.’’
இவ்வாறு சுதா சுந்தரராமன் கூறினார்.
மாதர் சங்கத்தினர் தாங்கள் சென்று வந்த விவரங்கள் குறித்து தில்லியில் செவ்வாய் அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கலவரத்தால் பாதிக்கப்பட்ட நபர்களில் சிலரையும் அழைத்து வந்திருந்தனர். அவர்களும் பத்திரிகையாளர்கள் மத்தியில் தாங்கள் எவ்வாறெல்லாம் தாக்கப்பட்டோம் என்பதை விவரித்தார்கள்.
(ச. வீரமணி)

 


No comments: