ராஞ்சி, மார்ச் 5-
பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஒருபோதும் வரமுடியாது
என்றும் ஏனெனில் இரு கட்சிகளுமே கார்ப்பரேட்டுகள் மற்றும் பணக்காரர்களின் நலன்களுக்கு
சேவகம் செய்வதையே நோக்கமாகக் கொண்ட கட்சிகள் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கைகளுக்கு மாற்றாக,
மாற்றுக் கொள்கைகளை
முன் வைத்து மாற்றுக் கொள்கைக்கான போர் முழக்கப்பயணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
சார்பில் நாடு முழுதும் நடைபெற்று வருகிறது. கிழக்குப் பயணக்குழுவில் பொதுச் செயலாளர்
பிரகாஷ் காரத் பயணம் மேற்கொண்டு வருகிறார். இவர்களுடைய பயணக்குழு திங்கள் அன்று ஜார்கண்ட்
மாநிலத்தின் தலைநகரான ராஞ்சிக்கு வருகை புரிந்தது. ராஞ்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள்
கூட்டத்திலேயே பிரகாஷ்காரத் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
‘‘பாஜக தன்னுடைய தேசியக்குழுக் கூட்டத்தில், தாங்களே காங்கிரசுக்கு மாற்று என்றும்,
நாடு முழுதுக்கும் ‘‘குஜராத் மாடலை’’க் கொண்டுவருவோம் என்றும்
கூறியிருக்கிறார்கள். குஜராத் மாடல் என்பது கார்ப்பரேட்டுகளை எவ்விதக் கடிவாளமுமின்றி
கொள்ளை லாபம் அடிக்கஅனுமதிப்பது என்பதேயாகும்.
இதன் காரணமாகத்தான் அம்பானிகளும், அடானிகளும் ‘ஓஹோ’ என்று குஜராத் மாடலையும், நரேந்திர மோடியையும் புகழ்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலே, குஜராத் மாடல் நாட்டின் மிகமோசமான இனப்படுகொலைகளுக்கு சாட்சியமாக
அமைந்திருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உண்மையான மாற்றுக் கொள்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது.
எனவேதான் நாங்கள்அத்தகைய மாற்றுக் கொள்கைள் மீது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த
வேண்டும் என்பதற்காக, நாடு முழுதும் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். நிலச் சீர்திருத்தங்கள்,
வீட்டுமனைப் பட்டாக்கள்,
உணவுப் பாதுகாப்பு,
வேலைவாய்ப்பு,
சுகாதாரம் மற்றும் கல்வி
ஆகிய பிரச்சனைகளைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் மக்கள் கருத்தைத் திரட்டிக் கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.அடுத்த பிரதமர் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,
‘‘காங்கிரஸ் கட்சியோ
அல்லது பாரதீய ஜனதா கட்சியோ இனிமேலும் கட்டளைகளைப் பிறப்பிக்க முடியாது. ‘‘பிரதமர் பதவிக்கு’’
யார் வேட்பாளர் என்பதைப்
பொறுத்தவரை, இந்தியாவில் ஒன்றும் ஜனாதிபதி ஆட்சிமுறை அமலில் இல்லை என்று கூறினார். ``இவர்கள் பிரச்சாரம் வெறும்
கள்ளத்தனமானது, மோசடியானது’’ என்றார்.
பிரகாஷ் காரத் மேலும், ‘‘இடதுசாரிக் கட்சிகளின் முன்னேற்றம்
என்பது தேர்தல்களால் மட்டும் ஏற்படுவது அல்ல. நாம் மக்கள் போராட்டங்களின் மூலமாகத்தான்
முன்னேறி இருக்கிறோம். மேலும் வலுவான போராட்டங்களை உருவாக்க விரும்புகிறோம். அவை தேர்தல்
முடிவுகளிலும் பிரதிபலிக்கும்.’’ என்றார்.
‘‘மூன்றாவது அணி’’ குறித்து ஒரு செய்தியாளர் கேட்டபோது, பிரகாஷ் காரத், ‘‘மாற்றுக் கொள்கைகள் மீது ஒற்றுமையைக்
கட்டுவதிலேயே நாங்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். மாற்றுக் கொள்கை இல்லாமல்,
எந்தவொரு கூட்டணியும்
உருப்படியான பலனைக் கொண்டு வர முடியாது,’’ என்றார்.
மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்கையில், பிரகாஷ் காரத், ‘‘மேற்கு வங்கத்தில், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள்
தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கருத்துச் சுதந்திரம் இடருக்குள்ளாகி இருக்கிறது. விமர்சனம்
செய்வோர் சிறையில் அடைக்கப்படுகின்றனர்,’’ என்றார்.
மாற்றுக் கொள்கைக்கான கிழக்குப் பயணக்குழு ஜார்கண்ட் மாநிலத்தில் ராம்கார்,
ஹசாரிபாக் மற்றும் கொடேர்மா
பகுதிகளில் திங்களன்று பயணம் மேற்கொண்டது.
ராம்கார் நகரம், நிலக்கரிச் சுரங்கம் அமைந்துள்ள இடமாகும். திங்களன்று காலை இங்கு நடைபெற்ற பொதுக்
கூட்டத்தில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், நாட்கூலித் தொழிலாளர்களும் பெருவாரியாகக்
கலந்து கொண்டார்கள். அவர்கள் தலைவர்களிடம், நாளும் விலைவாசி உயர்வு குறித்து முறையிட்டார்கள்.
மத்திய நிலக்கரிச் சுரங்கங்களில், தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருப்பதாகவும்,
ஆனால் வேலையிலிருக்கும்
தொழிலாளர்களின் பணிச்சுமை அதிகரித்திருப்பதாகவும்
கூறினார்கள். முன்பு நான்கு தொழிலாளி செய்த வேலையை இப்போது ஒருவர் செய்ய வேண்டியிருப்பதாக ஒரு தொழிலாளி கூறினார்.
தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதிகளில் நிலக்கரிக் கழிவுகள் கொட்டப்படுவதாகவும் இவற்றால்
வெளியாகும் விஷவாயுக்கள் மக்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு கடும் பாதிப்பினை ஏற்படுத்தி
வருவதாகத் தொழிலாளர்கள் கூறினார்கள்.
ஹசாரிபாக்கில் நடைபெற்ற கூட்டத்தில் பெரும் திரளாகப் பெண்கள் பங்கேற்றனர். அண்டை
கிராமங்களிலிருந்து அவர்கள் அணிதிரண்டு வந்திருந்தனர். நாட்டில் பெண்கள் படும் அவலங்களையெல்லாம் சுபாஷினி
அலி கூறுகையில் அவர்கள் மிகுந்த கவனத்துடன் கேட்டனர். வறுமைக்கோட்டுக்குக் கீழானவர்களுக்குத்
தரப்பட வேண்டிய குடும்ப அட்டைகள் தங்களுக்குத்தரப்படவில்லை என்று அவர்கள் முறையிட்டார்கள்.
கொடேர்மா, ஜும்ரி திலாயா என்னும் பகுதியில் மாபெரும் கூட்டம் நடைபெற்றது. நாட்கூலித் தொழிலாளர்களும், விவசாயிகளும் கலந்து கொண்டார்கள். இங்குள்ள இளைஞர்களுக்கு உரிய வேலை கிடைக்காததாலும்,
கிடைத்தாலும் கூலி மிகவும்
அற்பமாக இருப்பதாலும் பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள்
நாட்டின் பிற பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்து சென்று விட்டார்கள் என்று கூறப்பட்டது.
50 ரூபாய்க்கும்
குறைவாக நாட்கூலி தரப்படுவதாகப் பலர் கூறினார்கள். ஆயினும் நகர்ப்புறங்களில் பணியாற்றும்
ஏழைத் தொழிலாளர்கள் செங்கொடியின்கீழ் அணிதிரண்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளிலும், பல இடங்களில் தலைமறைவாக இருந்தும் வேலை செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.
ராம்காரிலும் ஹசாரிபாக்கிலும் நடைபெற்ற கூட்டங்களில் பார்வர்ட் பிளாக் கட்சித்
தலைவர்கள் கலந்து கொண்டார்கள். ஜும்ரியாதாலியாவில் நடைபெற்ற கூட்டத்தில் சிபிஐ(மா-லெ)(லிபிரேசன்)
உட்பட இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றார்கள். அவர்கள் பிரகாஷ் காரத்,
பிமன் பாசு மற்றும்
பயணத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு மலர்க்கொத்துக்களை அளித்து கவுரவித்தார்கள்.
(தெபாசிஸ் சக்ரவர்த்தி, கணசக்தி செய்தி ஆசிரியர்)
No comments:
Post a Comment