Monday, January 21, 2013

புரட்சிகர எழுச்சிக்கான புறச்சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்வதற்கு - அகக்காரணிகளை வலுப்படுத்திடுவோம்




சீத்தாராம் யெச்சூரி
ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி 2012 டிசம்பர் 15-16 தேதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சர்வதேச சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது.  சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம் -இன்றும் நாளையும்என்ற தலைப்பில் இச்சந்திப்பு நடைபெற்றது. இதன் மீது தங்கள் கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு உலகில் தெரிவு செய்யப்பட்ட சில கம்யூனிஸ்ட் கட்சிகள் அழைக்கப்பட்டிருந்தன. உலக நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில்  உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரச்சனைகளும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளும் குறித்து விவாதிப்பதற்காக இச்சந்திப்பு நடைபெறுவதாக ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சியால் மிகவும் ஐயந்திரிபறத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு உதயமானதின் 90ஆவது ஆண்டு விழாவும் (சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசு 1922 டிசம்பரில் உதயமானது.) இதனுடன் சேர்ந்து கொண்டாடப் பட்டது.
இதில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளில் முக்கியமானவை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி, கியூபா கம்யூனிஸ்ட் கட்சி, பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி, போர்த்துக்கீஸ் கம்யூனிஸ்ட் கட்சி,கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி, உக்ரேன் கம்யூனிஸ்ட் கட்சி, பொஹிமியா மற்றும் மொராவியா கம்யூனிஸ்ட் கட்சி, லெபனீஸ் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் ரஷ்யன் சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சியும்  (சிபிஆர்எப்-Communist Party of Russian Federation) ஆகும்.
ரஷ்யாவில் சமீபத்தில் நடைபெற்றத் தேர்தல்களில் ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி கணிசமான அளவிற்கு முன்னேறியுள்ள பின்னணியில் இச்சந்திப்பு நடைபெற்றது. நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் 20 விழுக்காடு வாக்குகளை ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி பெற்று, டூமா என்கிற ரஷ்ய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தன்னுடைய பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் உள்ள 30 நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் ஆறு நிலைக்குழுவின் தலைமைப் பொறுப்பிற்கு சிபிஆர்எப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சந்திப்பினைத் தொடங்கி வைத்த ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுத் தலைவரான கெனடி ஜுகானோவ், மாஸ்கோவில் நீண்ட காலத்திற்குப் பின்னர் உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சந்திப்பு நடைபெறுவதாகக் குறிப்பிட்டார். மேலும் இந்த ஆண்டானது , சோவியத் யூனியன் உதயமான 90ஆம் ஆண்டுடன், இரண்டாவது உலக யுத்தத்தில் திருப்பு முனையாக அமைந்த, ஹிட்லரின் பாசிஸ்ட் ராணுவம் நிர்மூலமாக்கப்பட்டு, 27 ஜெனரல்களுடன் மூன்று லட்சம் பாசிஸ்ட் படையினர் சரண் அடைந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்டாலின்கிராடு வெற்றியின் 70ஆம் ஆண்டு தினமுமாகும்.  இதன்பின்னர், பாசிஸ்ட் படையினர் பின்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்த மூன்றாண்டுகளில், பெர்லினில் ஹிட்லரின் தலைமையகமான ரெய்ச்ஸ்டாக்கில் செங்கொடியை உயர்த்தியதை அடுத்து அவர்கள் முழுமையாக முறியடிக்கப்பட்ட செய்தி உலகுக்குப் பறைசாட்டப்பட்டது.
ஜுகானோவ் பேசுகையில், உலகப் பொருளாதார நெருக்கடி குறித்தும் வரவிருக்கும் காலங்களில் அது மேலும் மோசமாகும் என்றும் தெரிவித்தார். இந்த வட்டமேசை சந்திப்பில் பங்கேற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் பொதுவாக இரு அம்சங்களில் ஒத்துப்போகின்றன என்று அவர் தெரிவித்தார். அதாவதுஅனைத்துக் கட்சிகளும் மார்க்சிசம்-லெனினிசத்தில் நம்பிக்கை கொண்டுள்ளவை என்பதோடு, முதலாளித் துவத்தைத் தூக்கி எறிந்து, சோசலிசத்தை நிறுவி உண்மையான மனிதகுல விடுதலையை எய்துவதன் மூலம் மட்டுமே தற்போதுள்ள முதலாளித்துவ நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும் என்பதிலும் நம்பிக்கை கொண்டவைகளாகும் என்றும் அவர் தெரிவித்தார்.  அதன் அடிப்படையில், எதிர்காலத்தில் புதியதொரு சோசலிச சமுதாயத்தைக் கட்டிடவரலாற்றிலிருந்தும் அதன் அனுபவங்களிலிருந்தும்  நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  சீத்தாராம் யெச்சூரி இச்சந்திப்பில் பங்கேற்று உரைநிகழ்த்தினார். இச்சந்திப்பில் ஒவ்வொரு கட்சி சார்பாகவும் இரு சுற்றுக்கள் பேசுவதற்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டது.  முதல் சுற்றில் ஒவ்வொருவருக்கும் இருபது நிமிடங்கள் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. முதல் சுற்றில் அனைவரும் பேசியபின்னர் அவர்கள் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் இரண்டாவது சுற்றில் அனைவரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள். சர்வதேச நிலை குறித்து அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடுகளையும் அனைத்துக் கட்சியினரும் புரிந்துகொள்ள விவாதங்கள் உதவின. அதேபோன்று தங்கள் நாடுகளில் தாங்கள் மேற்கொண்டுவரும் உத்திகள் மற்றும் போராட்டங்கள் குறித்தும் அனைவரும் விளக்கினார்கள். இக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
‘‘இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஜுகானோவ் கூறியதைப்போல, உண்மையில் நீண்ட காலத்திற்குப்பின் நாம் மாஸ்கோவில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.  கம்யூனிஸ்ட் கட்சிகளின் இதுபோன்றதொரு கூட்டத்தில் நான் 1987இல், சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மாபெரும் அக்டோபர் புரட்சியின் 70ஆம் ஆண்டு தினத்தில் கலந்துகொண்டேன். அதன்பின் நடைபெற்ற நிகழ்வுகள் சோவியத் யூனியன் தகர்விற்கும், எதிர்ப்புரட்சி வெற்றி பெறவும் இட்டுச் சென்றதை நாம் அனைவரும் அறிவோம்.
தாங்கள் விடுத்திருந்த அழைப்பில், அனைத்துக் கட்சியினரும் சுதந்திரமாகத் தங்கள் கருத்துக்களைக் கூறலாம் என்று ஐயந்திரிபறக் குறிப்பிட்டிருந்ததால் நான் என் உரையைத் தயார் செய்து எடுத்துவரவில்லை. அதற்காக மொழிமாற்றுநர்கள் அருள்கூர்ந்து என்னை மன்னித்தருள வேண்டுகிறேன். ஜுகானோவ்  கூறிய கருத்துக்களின் மீது ஒருசிலவற்றை மட்டும் கூற விரும்புகிறேன்.
அவர்கூறியதைப் போல, வரலாற்றின் அனுபவங்களிலிருந்து முறையாகப் படிப்பினைகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசில் சோசலிசம் வீழ்ச்சிய்டைந்தது குறித்து உலகில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளில் பலதங்களுக்குள் பகுப்பாய்வினைச் செய்து, சொந்த முடிவுகளுக்கு வந்துள்ளன.  1992 ஜனவரியில் நடைபெற்ற எங்கள் கட்சியின் 14ஆவது கட்சிக் காங்கிரசில் எங்கள் பகுப்பாய்வினை நாங்களும் செய்திருக்கிறோம்.  ஆயினும் இதன் ஒரு பகுதியாக இருந்த ரஷ்யக் கம்யூனிஸ்ட்டுகள் இதுகுறித்து அலசி ஆராய்ந்து ஒரு மதிப்பீட்டிற்கு வரும்வரை, நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் அனைத்தும் முழுமையடைந்தது என்றோ போதுமானதென்றோ இயற்கையான முறையில் சொல்ல முடியாது.  கடந்த இருபதாண்டு காலமாக அத்தகையதொரு மதிப்பீட்டினை உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக  அத்தகையதொரு ஆய்வு தங்களிடமிருந்து  இதுவரை வரவில்லை. இப்போதாவது ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி   இந்த இடைவெளியை - மிக முக்கியமான இந்த இடைவெளியை - நிரப்பிட முன்வரும் என்று நாங்கள் நம்புகிறோம். அவ்வாறு அது மேற்கொள்ளும் ஆய்வு சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு சோவியத் யூனியன் சோசலிசக் குடியரசில் சோசலிசத்தின் எழுபதாண்டு கால அனுபவங்களை முறையாகப் புரிந்து கொள்ளவும் மதிப்பீடு செய்யவும் உதவிடும்.
 மனிதகுல வரலாற்றில் முதன்முறையாக  மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து ஒரு சோசலிச சமூகத்தைச் உருவாக்கிய காலம் அது, பாசிசத்தின் தோல்விக்கு அதனுடைய பங்களிப்பு, அதனைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளிலிருந்து காலனியாதிக்கங்கள் முடிவுக்கு வந்தமை, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மிகவும் குறுகிய காலத்திலேயே வலுவானதொரு அரணாக மாறியது அனைத்தும் இக்காலகட்டத்தில்தான் நடைபெற்றது. இவ்வளர்ச்சிப் போக்குகள் அனைத்தும் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியவைகளாகும். எதிர்கால மனிதகுல நாகரிகத்தினை வடிவமைத்திட்டவைகளாகும். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக இவை அனைத்தும் இப் போது  கடந்த காலமாகிப்போனது.
கடந்த கால அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் ஐந்து அம்சங்களை நான் முன்வைக்க விரும்புகிறேன். முதலாவது, மார்க்சிசத்தின் சாராம்சம், லெனின் கூறியதைப் போன்று ‘‘துல்லியமான நிலைமைகளிலிருந்து துல்லியமான பகுப்பாய்வினை மேற்கொள்ளவேண்டும்’’ ('உடிnஉசநவந யயேடலளளை டிக உடிnஉசநவந உடினேவைiடிளே') என்பதில் அடங்கியிருக்கிறது என்கிற உண்மை இந்த அனுபவங்களிலிருந்து உறுதியாகி இருக்கிறது. இரண்டாவதாக, சோவியத் யூனியன் தகர்வு எந்தவிதத்திலும் மார்க்சிச-லெனினிசத்தின் ஆக்கபூர்வமான அறிவியலை மறுதலித்திடவில்லை. அதேபோன்று சோசலிச சமுதாயத்தை அமைத்திட வேண்டும் என்கிற மனிதகுலத்தின் தூண்டுதலையும் அது மறுதலித்திட வில்லை. மூன்றாவதாக, நாம் முன்பு தவறாகக் கருதிக் கொண்டிருந்ததைப்போன்று, முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறிச்செல்லும் இடைப்பட்ட காலம் அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. இது, வர்க்கப் போராட்டம் உக்கிரமாக நடைபெற்றஏற்றத் தாழ்வுகளும், முன்னோக்கிச் செல்லுதலும் அதே போன்று பின்னோக்கிச் செல்லுதலும் மாறி மாறி நடைபெற்ற காலமுமாகும். இருபதாம் நூற்றாண்டு முன்னோக்கிச் சென்ற காலமாக இருந்த அதே சமயத்தில், நூற்றாண்டு முடியும் தருவாயிலும், இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பின்னோக்கிச் செல்லும் காலமாக இருந்தது. நான்காவதாக, முதலாளித்துவம் என்பது அது என்னதான் கடும் நெருக்கடிக்கு உள்ளானபோதிலும் தானாக நிர்மூலமாகிவிடாது. இறுதியாக, வரலாற்றின் குறிப்பிட்ட எந்தக் காலத்திலும், முன்னேறிவரும் சோசலிச சக்திகளின் இடைமாற்றக் காலத்தின்போது, அடிப்படைத் தீர்மானிக்கும் சக்தி, ’வர்க்க சக்திகளின் சமநிலை வலிமையை சரியாக மதிப்பீடு செய்வதையும் மற்றும் துல்லியமான முறையில் அரசியல் கொள்கைகளை உருவாக்குவதையும் சார்ந்தே இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், இத்தகைய வர்க்கசக்திகளின் சமநிலை வலிமை  ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகவே இருக்கிறது.
தற்போதைய அரசியல் நிலைமை
தற்போதைய அரசியல் நிலைமை குறித்து ஆறு அம்சங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். முதலாவதாக, இன்றைய நிலைமைகளைப் பயன்படுத்திக்கொண்டு, ஏகாதிபத்தியம்  உலகின் மீது தன்னுடைய ஒருதுருவக் கோட்பாட்டை அரக்கத்தனமாகத் திணித்திட விரும்புகிறது. பொருளாதாரம், அரசியல், ராணுவம், சமூகம், கலாச்சாரம் என்று அனைத்துத் துறைகளிலும் அவ்வாறு திணித்திட வேண்டும் என்று அது விரும்புகிறது.  இரண்டாவதாக இது சர்வதேச நிதி மூலதனத்தின் தலைமையின் கீழ் உலக மூலதனமானது பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு உச்சபட்ச லாபம் (யீசடிகவை அயஒiஅளையவiடிn) என்கிற தன்னுடைய கருணையற்ற குறிக்கோளை அடைந்திட நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கும் காலமாகும். ஆயினும், சர்வதேச நிதிமூலதனத்தின்  வெளிப்பாடு   ஏகாதிபத்தியம் தொடர்பாக லெனினது புரிதலை எந்தவிதத்திலும் மறுதலித்திடவில்லை. தொழில்துறையினருக்கும் வங்கிகள் மூலதனத்திற்கும் இடையிலான பிணைப்பு நிதி ஆதிக்கத்திற்கு இட்டுச் செல்லும் (நேஒரள நெவறநநn iனேரளவசயைட யனே யெமேiபே உயயீவையட டநயனiபே வடி கiயேnஉயைட டிடபையசஉhநைள) என்கிற லெனினது புரிதல் எவ்விதத்திலும் மறுதலிக்கப்படவில்லை.  உச்சபட்ச லாபம் என்கிற தங்கள் வெறியைத் தீர்த்துக் கொள்வதற்காக உலகையே தங்களது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர அவர்கள் முயன்று கொண்டே இருப்பார்கள்.  ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகள் தவிர்க்கமுடியாத வகையில் யுத்தங்களுக்கு இட்டுச்செல்கின்றன.  லெனின் ஏகாதிபத்தியம் தொடர்பாகக்கூறிய கருத்துக்கள் அவ்வாறு அவர் கூறி பத்தாண்டுகள் முடிவதற்கு முன்னாலேயே முதல் உலகப் போர் எழுந்ததன் மூலம் மெய்ப்பிக்கப்பட்டது. இது இரண்டாம் உலகப் போரின் மூலம் மீளவும் உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாறு ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்களை உள்நாட்டு யுத்தமாக - அதாவது ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் ஒரு வர்க்கப் போராக  மாற்றி அதனுடைய சங்கிலியில் எங்கு பலவீனமான கொக்கி இருக்கிறதோ அதனை உடைத்தெறிய வேண்டும் என்கிற லெனினது புரட்சிகர தந்திரோபாய புரிதலையும்  மிகச்சரி என்று மீளவும் உறுதிப்படுத்தி இருக்கிறது.  ரஷ்யப் புரட்சி லெனினது இந்தப் புரிதலை மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தியது.
இன்றைய தினம், சர்வதேச நிதி மூலதனம் என்பது குறிப்பிட்ட ஒரு ஏகாதிபத்திய மையத்தில் மட்டும் சுருங்கிக் கொண்டிருக்கவில்லை.மாறாக அது உலகம் முழுதும்  உச்சபட்ச லாபம் என்கிற குறிக்கோளை எய்திட வேண்டும் என்ற வெறித்தன்மையுடன் செயல்பட்டுக் கொண்டிருக் கிறது.   இவை அனைத்தும் இன்றைய தினம் மறுதலிக்கப்பட்டிருக்கிறதா? இல்லை. மாறாக,  ’’அதிகரித்துக் கொண்டிருக்கும் உலக முதலாளித்துவம் ஏகாதிபத்தியக் காலகட்டத்தில்  நிதிமூலதனத்தால் ஆதிக்கம் செலுத்தப்படும், தொழில்துறை, வணிகத்துறை போன்ற மற்ற அனைத்து வகையான மூலதனங்களும் அதன் வலைக்குள் சிக்கிக்கொள்ளும் மற்றும் அதன் தலைமையின் கீழ் கொண்டுவரப்படும்’’ என்கிற ஏகாதிபத்தியம் குறித்த லெனினது கணிப்பினை மிகச்சரி என்று இன்றைய நிகழ்ச்சிப் போக்குகள் மெய்ப்பித்திருக்கின்றன. இன்றையதினம் லெனின் சொல்லிவைத்தாற் போன்று இவை மிகவும் சரியாக நடந்து கொண்டிருக்கின்றன. லெனின்அவருடைய கால கட்டத்திலிருந்த துல்லியமான நிலைமைகளை மிகவும் துல்லியமாகப் பரிசீலித்து ஏகாதிபத்தியம் குறித்த  அவரது புரிதலை பிரயோகித்து, ரஷ்யப் புரட்சியை வெற்றிகரமாக நடத்திமுடித்தார்.  அந்தக் காலகட்டம்தான் இன்றைய தினம் மாறியிருக்கிறதே யொழிய, லெனினது பகுப்பாய்வு அல்ல.
மூன்றாவதாக, இன்றைய தினம் சர்வதேச நிதி மூலதனத்தின் உலகளாவிய ஆதிக்கம் சுரண்டலை மேலும் பல்வேறு துறைகளுக்கு விரிவு படைத்திருக்கிறது. சுகாதாரம், கல்வி, மின்சாரம் போன்று எண்ணற்ற துறைகள் அதன் கொள்ளை லாப வேட்டைக்கு இன்றைய தினம் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன. நான்காவதாககொள்ளை லாபம் ஈட்டவேண்டும் என்பதையேக் குறியாகக்கொண்ட  அதனுடைய தங்குதடையற்ற சுரண்டல்தான் இன்றைய உலகப்பொருளாதார நெருக்கடிக்கு முதற்காரணமாகும். இந்நெருக்கடி இன்றைய தினம் அதன் ஐந்தாவது கட்டத்தில் இருக்கிறது. உலக மக்களில் பெரும்பான்மையோரின் வாங்கும் சக்தி குறைந்ததன் காரணமாகவே கூர்மையான வீழ்ச்சியுடன் இது தொடங்கியது. அதீத உற்பத்தி நெருக்கடியை எதிர்பார்த்து உலக முதலாளித்துவம் அதலிருந்து மீண்டுவிட வேண்டும் என்பதற்காக மக்களுக்கு மிக எளிதான விதத்தில் கடன்கள் அளிக்க முன்வந்தன. இவ்வாறு கடன் வாங்கிய மக்கள் அதனைச் செலவழிப்பதன் மூலம் தாங்கள் பெறும் கொள்ளை லாபம் தொடரும் என்று அது கருதியது. ஆனால் கடன் வாங்கிய மக்கள், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து நெருக்கடியின் மூன்றாவது கட்டம் ஏற்பட்டது. அது, 2008ஆம் ஆண்டைய உலக நிதி மந்தநிலைக்கு (படடியெட கiயேnஉயைட அநடவனடிறn) இட்டுச் சென்றது. இந்நெருக்கடியிலிருந்து மீள வேண்டும் என்பதற்காக வளர்ந்த நாடுகள் என்று கூறப்படும் முதலாளித்துவ நாடுகள் தங்கள் நாடுகளில் உள்ள முதலாளிகளுக்கும், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய அளவில் நிவாரணங்கள் (hரபந யெடை-டிரவ யீயஉமயபநள)  வழங்கின. இவ்வாறு கார்ப்பரேட் திவால்நிலைமைகள் அந்தந்த நாடுகளின் அரசுகளின் திவால் நிலைமைகளாக மாற்றப்பட்டதை அடுத்து நெருக்கடியின் நான்காவது கட்டம் ஏற்பட்டது. பின்னர் முதலாளித்துவ நாடுகள் தங்கள் திவால்நிலைமையைச் சமாளிப்பதற்காகத் தாங்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு அளித்து வந்த சமூகநலத் திட்டங்கள் அனைத்தையும் வெட்டிச் சுருக்கின. இது நெருக்கடியின் ஐந்தாவது கட்டமாகும். அரசுகளின் இந்நடவடிக்கைகளினால் மக்களின் வாங்கும் சக்தி மீண்டும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெட்டிக் குறைக்கப்பட்டது. இது நெருக்கடியின் ஆறாவது கட்டத்திற்கு இட்டுச் செல்வதற்கான காரணங்களாகும். எனவேதான் வரவிருக்கும் ஆண்டு மிகவும் மோசமாக இருக்கும் என்று ஜுகானோவ் கூறியதை நானும் ஒப்புக்கொள்கிறேன். உண்மையில், 2014ஆம் ஆண்டும் இந்த ஆண்டைவிட மேலும் மோசமாக இருக்கும் என்று அவர் கூறியதை விரிவுபடுத்தி நான் கூற விரும்புகிறேன். ஏனெனில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தாங்கள் வாங்கியுள்ள அபரிமிதமான கடன்களை மீண்டும் செலுத்த முடியா நிலை ஏற்பட்டு அவை மீண்டும் திவால்நிலைக்கு வரும்போது நிலைமைகள் மிகவும் மோசமாக இருக்கும். இந்நெருக்கடி தீர முதலாளித்துவ அமைப்பினால் விடை காண முடியாது. அதனுடைய அரசியல் மாற்றான, சோசலித்தால் மட்டுமே அதற்கு விடை காண முடியும்.
ஐந்தாவதாக, உலகம் முழுதும் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் எதிர்ப்பு அலைகள். லத்தீன் அமெரிக்க நாடுகள் ஓர் உத்வேகமூட்டும் உதாரணமாக முன்னிற்கின்றன. ஆயினும், இங்கும் கூட, சோசலிச கியூபாவைத் தவிர மற்ற நாடுகள் அனைத்தும் முதலாளித்துவ அமைப்பிற்குள்ளாகவே நவீன தாராளமயத்திற்கு மாற்றினை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நாடுகளில் நடைபெறும் போராட்டங்கள் முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றினை அளிக்கக்கூடிய விதத்தில் முன்னேறும் என்று நாம் நம்புவோமாக.
பிரதான கடமை
இறுதியாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகம் முழுதும் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வரும் எதிர்ப்பலைகளை ஒருங்கிணைத்திட வேண்டியது அவசியமாகும். உலகப் பொருளாதார நெருக்கடிக்கும் நவீன தாராளமயத்திற்கும் எதிராக உலகளாவிய வகையில் எதிர்ப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்து விட்டுள்ள யுத்தங்களுக்கு எதிராகவும் உலக அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூமி வெப்பமயமாதல் (உடiஅயவந உhயபேந) போன்றவற்றிற்கு எதிராகவும் உலகளாவிய வகையில் எதிர்ப்புகள் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தும். உலகளாவிய வகையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாக  ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.   இவ்வியக்கத்தின் அச்சாணியாக கம்யூனிஸ்ட்டுகள் நிற்க வேண்டும்.
இதனை எப்படிச் செய்யப்போகிறோம் என்பதே இன்றைய தினம் நம்முன் விவாதத்திற்கு வந்துள்ள முக்கிய அம்சம். இங்கு பங்கேற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒவ்வொன்றுமே  தங்கள் தங்கள் நாடுகளில் உள்ள வர்க்க சக்திகளின் சேர்மானங்களை புரட்சிகரமான முறையில் மாற்றி இருக்கின்றன என்பதில் ஐயமில்லை. புறச் சூழல் தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பை புரட்சிகரமாகத் தூக்கி எறியக்கூடிய அளவிற்கு  மிகவும் கனிந்துள்ளது என்றபோதிலும், லெனினிஸ்ட் அகக்காரணி, அதாவது மார்க்சிச-லெனினிசத்தின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கக் கட்சிகளின் தலைமையின் கீழ் சுரண்டப்படும் அனைத்துப் பிரிவினரின் வர்க்கப் போராட்டங்களின் வலுபலவீனமாகவே  இருப்பது தொடர்கிறது.  தற்போதுள்ள அகக்காரணிபுறச் சூழலை ஒரு புரட்சிகரமான எழுச்சிக்குப் பயன்படுத்தக்கூடிய அளவில் சக்திபடைத்ததாக இல்லை. அவ்வாறு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்கு கூடியுள்ள அனைத்து நாடுகளிலும் வந்துள்ள அனைத்துக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் முன் உள்ள பிரதானக் கடமையாகும்.
இந்தியாவில் எங்களுடைய அனுபவங்கள் என்ன என்பது குறித்து சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் உள்ள இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் நடைபெற்ற மத்திய அரசாங்கத்தின் மூலம் தங்களுடைய நிகழ்ச்சிநிரலை அமல்படுத்திட அனுமதிக்காது என்பதைப் புரிந்து கொண்ட ஏகாதிபத்தியமும் இந்திய ஆளும் வர்க்கங்களும் இடதுசாரி சக்திகள் வலுவாகவுள்ள இடங்களில் அதனைப் பலவீனமாக்குவதற்காகவும் அதனைத் தாக்குவதற்காகவும் ஒன்று சேர்ந்தன. இவர்களின் அரசியல் கூட்டணி மாமேதைகளான காரல் மார்க்சும் பிரடெரிக் ஏங்கல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் முதல் வரிகளில் கூறியுள்ள வாசகங்களை நினைவூட்டும்விதத்தில், இடதுசாரிகளின் கோட்டையாகத் திகழ்ந்த மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டனர். இம்மாநிலத்தில் கடந்த முப்பதாண்டு களாக  தொடர்ந்து ஏழு தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியிலிருந்தோம். 2009இல் நடைபெற்ற பொதுத் தேர்தல்களுக்குப்பின் 600க்கும் மேற்பட்ட நம் தோழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் நம்மீது தொடுத்துள்ள தாக்குதல்களை எதிர்த்துவரும் அதே சமயத்தில், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இத்தகையப் பகுதிப் போராட்டங்களின் மூலமாகத்தான் வலுவான வர்க்கப் போராட்டங்களைக் கட்டிட முடியும். எங்களுடைய அனுபவத்தில், இவ்வாறான போராட்டங்கள் மூலமாகவே, அகக்காரணியை  வலுப்படுத்திட முடியும் என்று கருதுகிறோம்.
இதேபோன்று மற்ற தோழர்களின் கருத்துக்களையும் அவர்கள் பெற்ற படிப்பினைகளையும் தெரிந்துகொள்வதில் ஆவலாக இருக்கிறேன்.
இறுதியாக, இந்த ஆண்டு மாஸ்கோ மிகவும் குளிராக இருக்கிறது. இத்தகைய கடும் குளிர்காலத்தின்போதுதான் லெனின் தலைமையில் அக்டோபர் புரட்சி மகத்தான வெற்றி பெற்றது என்கிற உண்மையும், இதேபோன்ற நிலைமைகளின் கீழ்தான் ஸ்டாலின் தலைமையில் பாசிசம் முறியடிக்கப்பட்டது  என்கிற உண்மையும் நம் அனைவருக்கும் உத்வேகம் ஊட்டக்கூடிய மூலக்கூறுகளாகும்.   தத்துவார்த்த உறுதியுடன் தீர்மானகரமான முறையில் செயல்பட்டால் அனைத்துவிதமான தடைகளையும் தகர்த்தெறிந்து புரட்சிகர இயக்கம் முன்னேற முடியும் என்பதனை இவை நமக்கு எப்போதும் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. 
இதுவரை என் உரையைக் கவனமாகக் கேட்ட உங்கள் அனைவருக்கும் நன்றி தோழர்களே.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
(தமிழில்: ச.வீரமணி)

No comments: