Monday, February 6, 2012

தத்துவார்த்தப் பிரச்சனைகள் தொடர்பான தீர்மானம்:சீத்தாராம் யெச்சூரி


தத்துவார்த்தப் பிரச்சனைகள் தொடர்பான தீர்மானம்
நகல் தீர்மானத்தை வெளியிட்டு சீத்தாராம் யெச்சூரி பேட்டி

புதுதில்லி, பிப். 7-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட இருக்கும் சில தத்துவார்த்தப் பிரச்சனைகள் தொடர்பான தீர்மானத்தின் வரைவு இன்று வெளியிடப்பட்டது.

‘‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு வரும் 2012 ஏப்ரல் 4 - 9 தேதிகளில் கோழிக்கோடில் நடைபெறுகிறது. அதில் நிறைவேற்றப் படுவதற்காக ‘சில தத்துவார்த்த பிரச்சனைகள் மீதான தீர்மானத்தின் வரைவு’ 2012 ஜனவரி 17 - 20 தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெற்ற மத்தியக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை இன்றைய தினம் (திங்கள் கிழமை) வெளியிட்டு செய்தியாளர்களிடையே அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

‘‘இத் தீர்மானம் 2008ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற கட்சியின் 19ஆவது அகில இந்திய மாநாட்டின் கட்டளைக்கிணங்க மத்தியக் குழுவால் தயார் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2005இல் புதுதில்லியில் நடைபெற்ற 18ஆவது அகில இந்திய மாநாட்டிலும் இதன் தேவை வலியுறுத்தப்பட்டது. இந்தியாவில் மக்கள் ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்கான புரட்சிகரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு உலகமயக் கொள்கைகள் விளைவித்துள்ள தத்துவார்த்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அதன் அடிப்படையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஏகாதிபத்தியத்தின் உலகமயத்தின் கீழ் இன்றைய உலக நிலைமைகள் குறித்து ஒரு புரிந்துணர்வை அலசி ஆராய்ந்து இத்தீர்மானத்தை பிரதிநிதிகளின் விவாதத்திற்காக முன்வைத்திருக்கிறது. ‘‘இவ்வாறாக, உலகைத் தன்குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென்கிற ஏகாதிபத்தியத்தின் பேராசையே, மனிதகுலத்திற்கு முழுமையான விடுதலை (emancipationn), சுதந்திரம் (liberationn) மற்றும் முன்னேற்றத்தைத் (progress) தர மறுப்பது தொடர்வதற்கு மூலாதாரமாகும்’’ என்று தீர்மானம் தன் முடிவுரையாகக் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும், ‘‘இந்தச் சூழ்நிலையில், குறிப்பாக உலகின் நிகழ்ச்சிப்போக்குகள் மிகவும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், இந்நிகழ்ச்சிப் போக்குகள் நம்மீது ஏவியுள்ள சவால்களையும், தத்துவார்த்தப் பிரச்சனைகளையும் ஓர் அறிவியல்பூர்வமான மார்க்சிய - லெனினிய ஆய்வின் மூலமாக வலுப்படுத்தி, மனிதகுல விடுதலை என்னும் பொன்னான மார்க்கத்துக்காக வர்க்கப்போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்கிற ஒரே சிந்தனையுடன் நம் புரட்சிகர நோக்கத்தை வலுப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்’’ என்று தீர்மானம் அடிக்கோடிட்டிருக்கிறது.

உலகமய சகாப்தத்தில் ஏகாதிபத்தியத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, கடந்த இருபதாண்டுகளில், கிழக்கு ஐரோப்பாவில் இருந்த சோசலிச நாடுகள் மற்றும் சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின் சர்வதேச சக்திகளின் சேர்மானம் என்பது ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக மாறியுள்ள நிலையில், ஏகாதிபத்தியம் தன் உலகளாவிய மேலாதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக, அரசியல்ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் - இவ்வாறு அனைத்துவழிகளிலும் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று தீர்மானம் குறிப்பிடுகிறது.

மூலதனக் குவியல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்தநிலையை அடைந்ததை அடுத்து, சர்வதேச நிதி மூலதனத்தின் வளர்ச்சி புதிய உலக ஒழுங்கை புதியமுறையில் கட்டவிழ்த்து விட்டது. இது முதலாளித்துவம் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு மேலும் வசதி செய்து தந்துள்ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் தன் குடையின்கீழ் கொண்டுவந்து, தன்னுடைய சர்வதேச நிதி மூலதனம் அனைத்து நாடுகளுக்குள்ளும் புகுந்து, எவ்விதத் தங்குதடையுமின்றி கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வழி ஏற்படுத்திக் கொண்டது. நிதித்துறை தாராளமயம் உட்பட பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள், வர்த்தக தாராளமயம் மூலமாக அனைத்து நாடுகளின் சந்தைகளிலும் பொருள்களின் விலைகளை நிர்ணயித்தல், அரசுக்குச் சொந்தமான சொத்துக்களைத் தனியார் வசம் தாரை வார்க்கச் செய்திடல், பொது மக்களின் பயன்பாட்டுக்கு இதுநாள்வரையிலும் இருந்து வந்த மின்சாரம், தண்ணீர், சுகாதாரப் பணிகள் போன்றவற்றையும் கல்வி, உடல்நலம் போன்ற சேவைகளையும் லாபம் ஈட்டும் தொழில்களாக மாற்றி அமைத்துள்ளது. நவீன தாராளமயம் என்பது இத்தகைய சீர்திருத்தங்களின் தத்துவார்த்த (ideological) மற்றும் சித்தாந்தக் (theoretical) கட்டமைப்பாகும்.

சர்வதேச நிதி மூலதனத்தின் தலைமையின் கீழ் இத்தகைய அரக்கத்தனமான மூலதனக் குவியல் என்பது உலக மக்கள்தொகையில் பெரும்பான்மையினருக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடும் நெருக்கடியைத் திணித்துள்ளது. இத்தகைய நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளே மேலும் மேலும் நெருக்கடிகளை அதிகப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளன.

உலக முதலாளித்துவத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியிலிருந்து அது மீள்வதற்காக, தங்கள் திவால் நிலையை தாங்கள் நிலைகொண்டுள்ள நாட்டின் திவால்நிலைமையாக மாற்றுவதில் அவை வெற்றி பெற்றன. இப்போது அந்நாடுகள் இந்த திவால்நிலைமையிலிருந்து மீள்வதற்காக தங்கள் நாடுகளில் மக்களுக்கு அளித்து வந்த சமூகநலத் திட்டங்களுக்கான செலவுகளைக் குறைத்திட முன்வந்துள்ளது. இது அம்மக்களின் மீது மேலும் கடுமையான தாக்குதலை ஏற்படுத்தும். இது, மக்களின் வாங்கும் சக்தியை மேலும் சுருக்கிடும். இது தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகமாக்கிடும்.

இந்த நிகழ்ச்சிப் போக்குகள் அனைத்தும், மனிதகுலத்திற்கு உண்மையான மற்றும் முழுமையான விடுதலை என்பது அதனை அனைத்து விதமான சுரண்டலிலிருந்தும் விடுவித்து, ஒரு சோசலிச சமுதாயத்தை அமைப்பதன் மூலமே சாத்தியம் என்கிற மார்க்சிய மூதுரையை உறுதிப்படுத்துகிறது.
அதிகரித்து வரும் கிளர்ச்சிகள்

முதலாளித்துவச் சுரண்டலின் பகற்கொள்ளைக்கு எதிராக உலக அளவில் எதிர்ப்புக் கிளர்ச்சிகள் அதிகரித்து வருவதையும் தீர்மானம் குறிப்பிடுகிறது. ‘‘இன்றைய உலக நிலையில், குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில் இது மிகவும் கூர்மையாக வெளிப்பட்டிருக்கிறது. முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான இத்தகைய எதிர்ப்புக் கிளர்ச்சிகள் உலகின் மற்ற பகுதிகளிலும் மேலும் வளரும். அமெரிக்காவில் நடைபெறும் ‘வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கம்’ மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நவீன தாராளமய உலகமயக் கொள்கைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் இயக்கங்கள் இதன் பிரதிபலிப்புகளேயாகும். இவ்வாறு, தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் அரிக்கப்படுவதற்கு எதிராக உலகம் முழுதும் இவ்வாறு அலை அலையாக எழுந்து வரும் போராட்ட அலைகள் எதிர்காலத்தில் புரட்சிகர போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் அவற்றை ஒருங்கிணைப்பதற்கான அடித்தளங்களாக அமைந்திடும்’’ என்று தீர்மானம் குறிப்பிடுகிறது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிகரித்து வரும் இடதுசாரி, முற்போக்கு நவீன தாராளமய எதிர்ப்பு மற்றும் ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் வளர்ச்சிகள் குறித்து தீர்மானம் ஆய்வு செய்து, ‘‘இந்நாடுகளில் வளர்ந்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட இடதுசாரி கூட்டணிகள், ஏகாதிபத்திய உலகமயம் மற்றும் முதலாளித்துவத்திற்குள்ளான நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு மாற்றாக உருவாகி வளர்ந்து வருகின்றன’’ என்று குறிப்பிடுகிறது.
வெனிசுலா, பொலிவியா மற்றும் ஈக்வேடார் நாடுகளில் அமைந்துள்ள தற்போதைய அரசாங்கங்கள் உறுதியான ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையில் இருப்பதைத் தீர்மானம் சுட்டிக்காட்டியிருக்கிறது. சோசலிச கியூபாவுடன் இணைந்து இந்நாடுகளும் தென் அமெரிக்கக் கண்டங்களில் உள்ள நாடுகளின் மகா சம்மேளனத்தை உருவாக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இவ்வாறு உருவாகும் மகாசம்மேளனம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சிகளுக்கு எதிரான போராட்டங்களை வலுப்படுத்திட ஒரு மாற்றாக அமைந்திடும். ‘‘ஏகாதிபத்திய உலகமயத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு இச்சக்திகள் ஒரு முக்கிய கூறாக அமைந்திடும். இவை, யுத்த எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, ராணுவ ஆக்கிரமிப்புகளுக்கு எதிர்ப்பு மற்றும் உலகமயத்திற்கு எதிரான அனைத்து இயக்கங்களையும் ஒன்றுபடுத்தும் ஒரு முக்கிய கூறாகவும் இவை அமைந்திடும். இந்த ஒற்றுமையானது ஒரு வலுவான உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டுவதற்கு ஏற்ற வகையில் உருவாக்கி, எதிர்காலத்தை புரட்சிகரமாக மாற்றியமைத்திடும் வல்லமையைப் பெற்றிடும்’’ என்றும் தீர்மானம் குறிப்பிடுகிறது.

சோசலிச நாடுகளில் சீர்திருத்தங்கள்
சோசலிச நாடுகளில் துவங்கப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்தும் தீர்மானம் ஆராய்ந்திருக்கிறது. மக்கள் சீனக் குடியரசு 1978இல் சீர்திருத்தங்களைத் தொடங்கியது. வியட்நாமும் கியூபாவும் 1990களிலும், வட கொரியா பின்னரும் இதேபோன்று சீர்திருத்தங்களைத் தொடங்கியுள்ளன.
தீர்மானத்தில் சீனாவில் நடைபெற்ற சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆய்வு செய்து குறிப்பிட்டிருப்பதாவது:
‘‘கடந்த முப்பதாண்டுகளில் சீனாவில் நடைபெற்றுள்ள சீர்திருத்தங்கள் அங்கு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் அளப்பரிய சாதனைகளைப் படைத்துள்ளன. கடந்த முப்பதாண்டகளில் தொடர்ந்து பத்து விழுக்காட்டுக்கு மேலான வளர்ச்சி விகிதம் என்பது முதலாளித்துவ நாடுகளின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நடைபெற்றுள்ள மகத்தான சாதனையாகும். ஆயினும், இதனை அடைவதற்கு அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் உற்பத்தி உறவுகளிலும் இன்றைய சீனாவின் சமூக உறவுகளிலும் மோசமான மாற்றங்களையும் முன்னுக்குக் கொண்டு வந்திருக்கின்றன என்பதும் தெளிவாகும். இத்தகைய முரண்பாடுகளை எப்படி வெற்றிகரமாக சரி செய்வது என்பதும், எப்படி அவை தீர்க்கப்பட விருக்கின்றன என்பதும் சீனாவின் எதிர்காலத்தை தீர்மானித்திடும்’’ என்று தீர்மானம் தொகுத்தளித்திருக்கிறது.

இந்தியாவில் உள்ள நிலைமைகள்
இந்தியாவில் சோலிசத்தை நிறுவுவதற்கான மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புரிந்துணர்வு 8.3 பத்தியில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதில் நாட்டில் தற்போது நிலவிவரும் மார்க்சிய எதிர்ப்பு பிற்போக்குத் தத்துவங்களை எதிர்த்து முறியடிக்க வேண்டியதன் தேவை வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

‘‘இந்தியாவில் உள்ள நிலைமைகளில், புரட்சிகரமான முறையில் நம்முன்னேற்றத்தை வலுப்படுத்துவதற்கு நம் பணி, நம் சமூகத்தில் துல்லியமான நிலைமைகளுக்கு ஏற்ப வர்க்கப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்தி பிரம்மாண்டமான மக்கள் போராட்டங்களைக் கட்டவிழ்த்துவிட வேண்டியதாகும்’’ என்று தீர்மானம் குறிப்பிடுகிறது.

இதனை எய்துவதற்கு, கட்சித் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள, நாடாளுமன்ற நடவடிக்கைகளையும், நாடாளுமன்றத்திற்கு வெளியே மேற்கொள்ள வேண்டிய பல்வேறுவிதமான போராட்ட வடிவங்களையும் தீர்மானம் விவரிக்கிறது.
‘‘... நாடாளுமன்றத்தின் அமைப்புகளில் நாம் மேற்கொள்ளும் பணி, மக்கள்திரள் போராட்டங்களை வலுப்படுத்தக்கூடிய விதத்தில் உபயோகப்படுத்திக் கொள்ளப்பட வேண்டும். நாடாளுமன்றப் பணி, தற்போதுள்ள முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அமைப்பிற்கு மாற்றை உருவாக்கிடும் வகையில் ஒரு வலுவான இயக்கத்தை வளர்த்தெடுக்கக்கூடிய விதத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியே நாம் புரிந்திடும் பணிகளுடனும் போராட்டங்களுடனும் இணைக்கப்பட வேண்டும்.’’ இவ்வாறு நாம் நடவடிக்கைகளை மேற்கொள்கையில் நாடாளுமன்றத்திற்கு வெளியேயுள்ள பணிகளை உதாசீனம் செய்யக்கூடிய அல்லது நாடாளுமன்றப் போராட்டங்களை மறுதலிக்கக்கூடிய வகையிலான திரிபுகளுக்கு எதிராக நாம் எச்சரிக்கையுடன் இருந்திட வேண்டும்.

தொழிலாளி வர்க்க ஒற்றுமையும், தொழிலாளி - விவசாயி ஒற்றுமையும்
தீர்மானத்தில் தொழிலாளி வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியது தொடர்பாகவும், வலுவான வகையில் தொழிலாளி விவசாயி ஒற்றுமையைக் கட்டவேண்டியது தொடர்பாகவும் தற்போதுள்ள துல்லியமான நிலைமைகள் குறித்து தீர்மானம் அலசி ஆய்வு செய்திருக்கிறது.

சாதீய ரீதியான அரசியல்
தீர்மானம், அடையாள அரசியல் மற்றும் அந்நிய நாடுகளின் ஆதரவுடன் இயங்கிடும் அரசு சாரா நிறுவனங்கள், குறிப்பாக சாதிய ரீதியில் மக்களை ஒன்று திரட்டும் அரசியல் குறித்து ஆய்வு செய்திருக்கிறது. ‘‘சமூகத்தில் நிலவும் வர்க்க ஒடுக்குமுறையையும் சமூக ஒடுக்குமுறையையும் அங்கீகரித்து அதன் அடிப்படையிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அமைந்திருக்கிறது. நம் நாட்டில் உள்ள சமூக பொருளாதார அமைப்பானது, முதலாளித்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ வர்க்கச் சுரண்டலுடன், சாதி, இனம், பாலினம் போன்று பல்வேறு அடிப்படையிலான சமூக ஒடுக்குமுறைகளையும் கொண்டிருக்கிறது. ஆளும் வர்க்கங்கள் வர்க்கச் சுரண்டலின் மூலமாக உபரிசைக் கசக்கிப் பிழிகின்றன. தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, அவை பல்வேறு வடிவங்களிலான சமூக ஒடுக்குமுறையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. எனவே, இத்தகைய சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை ஆகிய இரு வடிவங்களுக்கு எதிரான போராட்டத்தை ஒரே சமயத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்,’’ என்று தீர்மானம் அடிக்கோடிட்டுக் கூறுகிறது.

வகுப்புவாதம் (communalism)

‘‘இந்தப் பின்னணியில்தான் வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தையும், அனைத்துவிதமான மத அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டத்தையும் பார்க்க வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்பின் வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிச பாணி ‘இந்து ராஷ்டரம்’ போன்ற கோஷங்கள் நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை சீர்குலைத்து, நலிவடையச் செய்திடும். இத்தகைய சக்திகள் தொழிலாளர் வர்க்கத்திடையே பல்வேறு விதமான வகுப்புவெறியைத் தூண்டி தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையை சீர்குலைத்திடும். எனவே, வகுப்புவாதத்தை முறியடிக்கக்கூடிய விதத்தில் ஓர் உறுதியான போராட்டத்தை நடத்திடாமல், நாட்டில் புரட்சிகர முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை.

ஆண்-பெண் சமத்துவம் மற்றும் அடையாள அரசியல்
தீர்மானம், ஆண்-பெண் சமத்துவமின்மை மற்றும் அதனையொட்டி எழும் அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டியதன் தேவையை அடிக்கோடிட்டுக் கூறுகிறது. மேலும், நாட்டில் உள்ள பல்வேறு பிராந்திய மற்றும் இனங்களை ஒன்றுக்கொன்று எதிராக மோதவிடும் அடையாள அரசியலுக்கு எதிராக நம்முன் உள்ள புதிய சவால்கள் குறித்தும் தீர்மானம் எச்சரித்துள்ளது.

இவ்வாறு நம்மை எதிர்நோக்கியுள்ள பல்வேறு விதமான சவால்களைச் சுட்டிக்காட்டி அதனை எதிர்கொண்டு, முறியடித்து, முன்னேறுவதற்கான பாதையையும் தீர்மானம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

தீர்மானம் முழுமையாக, கட்சியின் றறற.உயீiஅ.டிசப இணைய தளத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. தீர்மானத்தின் மீது திருத்தம் அளிக்க விரும்பும் கட்சி உறுப்பினர்கள் மார்ச் 15க்குள் அனுப்பி வைக்கக் கோரப்பட்டிருக்கிறார்கள்.

(ச. வீரமணி)

No comments: