Monday, July 6, 2015

வேகமாகப் பரவும் ஊழல் கறை


ஊழல், உறவினர்களுக்குச் சலுகை மற்றும் சலுகை சார் முதலாளித்துவம் ஆகிய ஊழல் கறை மோடி அரசாங்கத்திலும், பாஜக மாநில அரசுகளிலும் இருப்பது இப்போது வெளியே வரத் தொடங்கி இருக்கின்றது. நரேந்திர மோடியும், பாஜகவும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஐமுகூ அரசாங்கத்தின் கீழ் நடைபெற்ற பிரம்மாண்டமான ஊழல்களை முன்னிறுத்தின. நரேந்திர மோடி, காங்கிரஸ் ஆட்சியின்கீழ் நடைபெற்ற ஊழல் மற்றும் சூறையாடல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று உறுதி அளித்திருந்தார். பாஜக அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவடைந்ததற்குப்பின்னர் மதுரா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், நாட்டைக் கொள்ளையடித்தவர் களுக்கு நல்ல காலம் கிடையாது, அவர்களுக் குக் கெட்ட காலம்தான் என்றார். மேலும் அவர், “எங்கள்ஆட்சியில் கடந்த ஓராண்டு காலத்தில் ஊழல்கள் அல்லது உறவினர்களுக்குச் சலுகை என்று ஏதேனும் சொல்ல முடியுமா?’’ என்றும் பீற்றிக் கொண்டார்.
பலூனில் ஓட்டை...
இவ்வாறு தற்பெருமை அடித்துக்கொண்ட பின், ஒருசில நாட்களிலேயே, இவர்கள் சவடால் அடித்த நேர்மை மற்றும் சுத்தமான அரசாங்கம் என்கிற பலூனில் ஓட்டை விழுந்துவிட்டது. மத்திய அமைச்சரவையின் மூத்த அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மிகவும் அருவருப்பான செயல் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இவ்வாறு அமைச்சரின் தரும சிந்தைக்கு ஆளாகிஆதரவினைப் பெற்ற நபர் வேறு யாருமல்ல, ஐபிஎல் கிரிக்கெட் ஊழல் `புகழ்’ லலித் மோடி என்பவர்தான். அமைச்சர், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு லலித் மோடி வழக்கு குறித்துபரிந்துரைத்திடுவதற்காக, முறையாகப் பின்பற்றப்பட வேண்டிய அனைத்து நடைமுறை களையும் புறந்தள்ளியது மட்டுமல்ல, அவரது கணவரும் மகளும் லலித் மோடியின் சார்பில் வாதிடும் வழக்குரைஞர்களாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு தன் அமைச்சரவை சகாவிற்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க பிரதமர் பிடிவாதமாக மறுத்து வருவதுடன், மோடியும் பாஜக தலைமையும் அவரது தவறான செயல்களை நியாயப்படுத்தி அவரைப் பாதுகாத்து வருகிறார்கள். லலித் மோடி விவகாரத்தில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, அந்த நபரைப் பாதுகாத்திட எப்படியெல்லாம் செயல்பட்டிருக் கிறார் என்ற விவரங்கள் வெளியாகி நிலைமைகளை மேலும் கறையாக்கியுள்ளன. வசுந்தரா ராஜே, ராஜஸ்தான் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, லலித் மோடி இங்கிலாந்தில் தங்கி இருப்பதற்காக அளித்துள்ள விண்ணப்பத்தில், அப்பேர்வழிக்கு நற்சான்று வழங்கி சாட்சிக் கையொப்பம் இட்டிருக்கிறார். இதில் மிகவும் மோசமான சங்கதி என்னவெனில், அவ்வாறு தான் கையொப்பமிட்டிருப்பதைக் கமுக்கமாக வைத்துக் கொள்ளுமாறும், இந்திய அதிகாரிகளுக்கு இத்தகவலை தெரிவிக்காமல் மறைத்துவிடுமாறும் அவர் அதில் கேட்டுக் கொண்டிருப் பதாகும்.
தேசவிரோத நடவடிக்கை
வசுந்தரா ராஜேயும் அவரது மகன் துஷ்யந்த்சிங்கும் (இவர் மக்களவை உறுப்பினர்) லலித்மோடியுடன் கொண்டுள்ள தொடர்பு என்பதுசலுகை சார் முதலாளித்துவப் பிணைப்புக்குரிய அனைத்து குணாதிசயங்களையும் கொண்டதாகும்.
துஷ்யந்த் நிறுவனத்தின் பங்குகளை அதன் பெயரளவேயான விலைமதிப்பை (face value-வை) விட பத்தாயிரம் மடங்குகள் விலை கொடுத்து லலித் மோடி வாங்கியிருக்கிறார் என்ற சங்கதி இதனை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஒரு நபர், தான் அளித்த நற்சான்றிதழ் குறித்து இந்திய அரசின் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவேண்டாம் என்றும் அதனை ரகசியமாகவைத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருப்பதானது அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும். இதுபோன்ற சமாச்சாரங்களை பாஜக பரிவாரங்கள் வழக்கமாகத் தேசவிரோத நடவடிக்கைகள் என்று அழைத்திடும்.
ஆனால் ராஜே தவறேதும் செய்யவில்லை என்றுபாஜக தலைமையும், பிரதமர் மோடியும் நாணமற்ற முறையில் அதனைத் துடைத்தெறியத் தீர்மானித்திருக்கிறார்கள். இவர்கள் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் “உறவினர் களுக்கான சலுகை” (nepotism) மற்றும் ஊழல் குறித்து பாஜக தலைவர்கள் இவையெல்லாம் “குடும்ப உறவுகள்” என்றும் “தனிப்பட்ட முறையிலான கடன் பரிவர்த்தனைகள்” என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். மத்தியில் பாஜக அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஓராண்டில் ஊழலற்ற ஆட்சியை அளித்திருக்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில்தான் பாஜகவின் மூத்த தலைவர்கள் (ஒருவர் மத்திய அமைச்சர், மற்றொருவர் முதலமைச்சர்) சம்பந்தப்பட்டுள்ள இவ்விரு ஊழல் நிகழ்வு களும் வெளிவந்திருக்கின்றன.
வியாபிக்கும் ஊழல்கள்...
இவ்வாறு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பது ராஜஸ்தான் முதல்வர் மட்டுமல்ல. மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ் சௌகான் தலைமையிலான பாஜக அரசாங்கமும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் வியாபம் ஊழல் அவக்கேட்டை மூடி மறைத்திட முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. தொழிற்கல்வித் தேர்வு வாரியம் நடத்திடும் தேர்வுகளில் மிக உயர்ந்த மட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் சம்பந்தப்பட்டதே இந்த வியாபம் ஊழலாகும். மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்று இது தொடர்பாகப் புலனாய்வு செய்துகொண்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நிலுவையில் இருக்கும் காலத்தில் இந்த ஊழலுடன் சம்பந்தப்பட்ட (குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது சாட்சிகள்) 40க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள் என்பது நம்பமுடியாத வகையில் நடந்துள்ளது.ஆயினும் இந்த விவகாரத்தைக் குழிதோண்டிப் புதைத்திட பாஜக அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. நீண்டகாலமாக ஆட்சியிலிருக்கும் மத்தியப் பிரதேச பாஜக அரசாங்கம் இவ்வாறு வியாபம் விவகாரத்தில் அவக்கேட்டைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறதென்றால், ஓராண்டேயான மகாராஷ்டிரா பாஜக அரசாங்கமும் பாஜக அமைச்சர்கள் பங்கஜா முண்டே மற்றும் வினோத் தாவ்டே சம்பந்தப்பட்டுள்ள இரு ஊழல் புகார்களில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இவ்விரு அமைச்சர்களும் முறையே எவ்விதமான டெண்டரும் கோராது,நடைமுறை விதிகளை முறையாகப் பின்பற்றாது, 206 கோடி ரூபாய் மற்றும் 191 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை வழங்கி இருக்கிறார்கள்.
அதானிக்கு வழங்கும் சலுகைகள்
மத்தியிலும் மாநிலங்களிலும் உள்ள பாஜக அரசாங்கங்கள் மிகவும் விரைவான முறையில் இவ்வாறு ஊழல் சகதியில் புரண்டு கொண்டிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. பெரு முதலாளிகள்-அரசியல்வாதிகள்-அதிகார வர்க்கத்தினரின் பிணைப்புடன் நடைபெற்றுவரும் நவீன தாராளமய ஆட்சிமுறையில் ஊழல் பின்னிப்பிணைந்த ஒன்று. இத்தகைய அமைப்பில் சலுகை சார் முதலாளித்துவம் இயல்பாய் அமைந்திருக்கும். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதற்கு கவுதம் அதானிக்கு வழங்கியுள்ள சலுகைகள் இதனைத் தெள்ளத் தெளிவாகக் காட்டும். உண்மையில், முந்தைய ஆட்சியாளர் களைவிட இவர்கள் மேலும் மூர்க்கத்தனமான முறையில் நவீன தாராளமயக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லவும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்திடவும் அவற்றின் மூலம் பல மடங்குஊழல் செய்யவும், பொதுச் சொத்துக் களைச் சூறையாடவும் துடித்துக் கொண்டி ருக்கிறார்கள். நரேந்திர மோடி வேண்டுமென்றே இந்தக் காட்சிகளையெல்லாம் பார்க்க மறுத்துக் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறார். இதற்கு அவர் வரவிருக்கும் காலங்களில் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
(ஜூலை 1, 2015)
தமிழில்: ச.வீரமணி


Sunday, July 5, 2015

இரண்டரை ஆண்டு இனிய நினைவுகள் : பிருந்தா காரத்



பிருந்தா காரத்

{பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏட்டில் வெளியானஅனைத்துக் கட்டுரைகள் குறித்தும்நன்கு ஆய்வு செய்து, அவற்றில் எந்த இடத்தில் தவறு அல்லது அது எப்படி கூர்மையான முறையில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றுதன் கருத்துக்களை முன்வைப்பார்தோழர் சுந்தரய்யா.}
பீப்பிள்ஸ் டெமாக்ரசி தன் 50ஆம் ஆண்டு தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. பீப்பிள்ஸ்டெமாக்ரசி 1972ஆம் ஆண்டில் அதன் ஏழாவது ஆண்டு தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோதுதான் நான் பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஆசிரியர் குழுவில் இணைந் தேன். நான் ஆசிரியர் குழுவில் இணைந்ததைத் தொடர்ந்து காப்பி, பிஸ்கட்டுகள் பரிமாறப்பட்டன. சுற்றிலும் ஒரே கொண்டாட்டம்தான். அப்போதுதான் பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் பணியாற்றிய அனைவருக்கும் நான் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டேன். ஆயினும் அந்த சந்தோஷமான சூழல் ஒருசில நிமிடங்களிலேயே மறைந்தது. கட்வா ரயில் நிலையத்தில் தோழர் மகாதேவ் பானர்ஜி என்கிற இளம் தோழர் ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட செய்தி எங்களுக்குக் கிடைத்து,
அந்தச் சூழலையே மிகவும் துயரத்தில் ஆழ்த்தி விட்டது. எங்கள் கூட்டம் கலைவதற்கு முன்னர் கொலை செய்யப்பட்ட தியாகிக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் மவுனம் அனுசரித்து எங்கள் கூட்டத்தை அன்றைய தினம் முடித்துக் கொண்டோம். அந்த சமயத்தில் மேற்கு வங்கத்தில் அரைப் பாசிச அராஜகம் மிகவும் தலைவிரித்தாடியது. தோழர்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளின் கீழ் வேலை செய்யத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். `இந்த வசதி எனக்கில்லை அந்த வசதி எனக்கில்லை’ என்று எவரும் எவரிடமும் முறையிடும் சூழலே கிடையாது. பீப்பிள்ஸ் டெமாக்ரசி அலுவலகம் மிகவும் சிறியதோர் இடத்தில் இருந்தது. இரு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஓர் அறை ஆசிரியர் குழுத் தோழர்கள் அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. மற்றோர் அறையை நிர்வாகப் பிரிவுத் தோழர்கள் பகிர்ந்துகொண்டார்கள். நிர்வாகப் பிரிவுத் தோழர்களுக்கு லீலா சுந்தரய்யா வழிகாட்டினார்.
வங்கதேச அகதிகள் பற்றி
கல்கத்தா பல்கலைக்கழகத்தின் மாணவர் கிளையில் நான் என் பணியைத் தொடர்ந்து செய்து வந்ததால், பீப்பிள்ஸ் டெமாக்ரசி அலுவலகத்திற்கு ஆரம்பத்தில் வாரத்தில் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை வந்து கொண்டிருந்தேன். 1970இல் நான் கட்சியில் சேர்ந்ததிலிருந்தே பீப்பிள்ஸ் டெமாக்ரசிக்கு அவ்வப்போது எழுதிக் கொண்டிருந்தேன். முறையாகநான் பதிவு செய்த முதல் அறிக்கை என்பது 1971இல் வங்க தேச யுத்தத்தின் விளைவாக புலம்பெயர்ந்து வந்திருந்த அகதிகள் முகாம்கள் குறித்து எழுதியதாகும்.
ஆனால் 1972 இறுதியில் அல்லது 1973 துவக்கத்தில்தான் நான் பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏட்டில் முழுநேர ஊழியரானேன். அவசர நிலைப் பிரகடனம் செய்யும் வரை நான் அங்கே பணியாற்றினேன். பின்னர் கட்சி என்னை தில்லிக்கு கட்சி மையத்தில் பணியாற்றப் பணித்ததால், நான் தில்லி வந்துவிட்டேன். இவ்வாறு சுமார் இரண்டரை ஆண்டு காலம் பீப்பிள்ஸ் டெமாக்ரசி குழுவில் நான் செயல்பட்டேன்.அந்த சமயத்தில் தோழர் எம். பசவபுன்னையா ஆசிரியர். அவர் லேக் பிளேசில் தங்கி இருந்தார். பீப்பிள்ஸ் டெமாக்ரசி அலுவலகம் லேக் பிளேசில் இருந்தவரை வாரந்தோறும் நடைபெறும் கூட்டங்களில் அவர் பங்கேற்பது வழக்கம் என்று எனக்குக் கூறப்பட்டிருந்தது.
ஆயினும் நான் சேர்ந்த சமயத்தில் பீப்பிள்ஸ் டெமாக்ரசி அலுவலகம் பெனியாபுகூர் என்னுமிடத்திற்கு மாற்றப்பட்டபின், அநேகமாகக் கூட்டங்களில் தோழர் பி.சுந்தரய்யாதான் பங்கேற்றார். உண்மையில் பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் பணியாற்றியது அறிவை விருத்தி செய்து கொள்ளக் கூடிய விதத்தில் அற்புதமான அனுபவமாக அமைந்திருந்தது.
சுந்தரய்யாவின் அறிவுரை
பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஆசிரியர் குழுவிலேயே நான்தான் மிகவும் இளையவள். அப்போது என் வயது 25தான். மிகவும் இளநிலை ஊழியராகவும் இருந்தேன். நான் அரசியல்ரீதியாகவும், ஸ்தாபனரீதியாகவும் வளர்ந்திட ஆசிரியர் குழுவில் பணியாற்றிய அனைத்துத் தோழர்களும் உதவினார்கள். அப்போது நான் சோனாலி வர்மா என்ற புனைபெயரில் வாராந்திரக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளின்படி பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் எழுதிக்கொண்டிருந்தேன். தோழர் சுந்தரய்யா ஆறு வாரங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்வார்.
இடைப்பட்ட காலத்தில் வெளியான பீப்பிள்ஸ் டெமாக் ரசி இதழ்களில் முக்கிய அடிக்குறிப்பிட்ட பக்கங்கள் சிலவற்றுடன் அவர் வந்து கலந்து கொள்வார். பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் வெளியான அனைத்துக் கட்டுரைகள் குறித்தும் நன்கு ஆய்வு செய்து, அவற்றில் எந்த இடத்தில் தவறு அல்லது அது எப்படி கூர்மையான முறையில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தன் கருத்துக்களை முன்வைப்பார். கட்சியின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்காத எதுவும் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏட்டில் வரக்கூடாது என்பதில் அவர் மிகவும் தெளிவாக இருந்தார். அதேபோல் போராட் டங்களை மிகைப் படுத்தி வர்ணிக்கக்கூடாது என்பதற் கும் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். இதுதொடர்பாக ஒரு சம்பவத்தை நினைவு கூர் கிறேன். பீகாரில் நடைபெற்ற பேரணி/ஆர்ப்பாட்டம் குறித்து முதல் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது.
50 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் பேரணி என்று தலைப்பிடப்பட்டிருந்தது. தோழர் பி.சுந்தரய்யா இது குறித்துக் கூறுகையில் “எப்படி இவ்வாறு அச்சுப்பிழை ஏற்படுத்த அனுமதித்தீர்கள்?’’ என்றார். “இதில் என்ன அச்சுப்பிழை இருக்கிறது?’’ என்று எங்களுக்கெல்லாம் ஒரே குழப்பம். பின்னர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது தோழர் அமர் தா எழுந்து, “இல்லை தோழர், செய்தியை வாசிக்கும் வாசகர்கள் உற்சாகம் கொள்வார்கள் என்பதற்காக நான்தான் 5,000 என்பதை 50,000 என்று மாற்றினேன்’’ என்றார். எங்களுக்கு வந்த சிரிப்பை மிகவும் கஷ்டப்பட்டுஅடக்க முயற்சித்தும் முடியாமல் அனைவரும் சிரித்துவிட்டோம். தோழர் பி.சுந்தரய்யாவும் சிரித்துக்கொண்டே, “இவ்வாறு செய்வது என்பது நம் வாசகர்களை மட்டுமல்ல, நம்மையும் நாமே முட்டாள்களாக்கிக் கொள்வது போன்றதாகும்,’’ என்றார்.
ஜோதிபாசுவின் வழிகாட்டல்
ஒருதடவை எங்கள் வாராந்திரக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தபோது தோழர் ஜோதிபாசுவும் வந்து கலந்து கொண்டார். அவர்தான் பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் முதல் ஆசிரியர். அறையில் பார்வையாளர்கள் வந்தால் அமர்வதற்காக நாங்கள் போட்டு வைத்திருந்த பழைய பிரம்பு நாற்காலி ஒன்றில் அமர்ந்துகொண்டு, ஒரு கட்டுரை குறித்து விமர்சனம் செய்தார், சில அச்சுப்பிழைகளைச் சுட்டிக்காட்டினார், பின்னர் வேலையெல்லாம் எப்படி இருக்கிறது என்று கேட்டறிந்தார்.
எங்கள் கிளையிலிருந்த அனைத்துத் தோழர்களுடனும் ஒரு மாபெரும் தோழர் மிகவும் எளிமையுடன் கலந்துரையாடியது எங்களுக்கெல்லாம் மிகவும் உத்வேகத்தை ஊட்டியது. எங்களுக்கு அண்டைவீட்டுக்காரர்களாக ஹரிகிருஷ்ண கோனாரும் அவரது குடும்பத்தினரும் வசிந்து வந்தார்கள். சில சமயங்களில் எங்களுக்கு அவர்கள் மாம்பழங்களைக் கொடுத்து அனுப்புவார்கள். தோழர் ஹரிகிருஷ்ண கோனாரே சில சமயங்களில் எங்கள் அறைக்கு வருவார். அவரிடம் அவரது போராட்டஅனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எங்களுக்கு அப்போது கிடைக்கும்.
அனைத்தையும் குறித்துக் கொள்வோம். பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் பணியாற்றும் அனைத்துத் தோழர்களுக்கும் அவரவர்களுக்கென்று சொந்த அனுபவங்கள் ஏராளம் உண்டு. என்னைப் பொறுத்தவரை பெனியாபுகூரில் சிறிய அலுவலகத்தில் நான் பணியாற்றிய இரண்டரை ஆண்டு காலத்தில் கட்சியின் குரலாக பீப்பிள்ஸ் டெமாக்ரசியை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியத்தை தலைவர்கள் வலியுறுத்தி வந்தது உட்பட நிறைய விஷயங்களுடன், கட்டுப்பாடு குறித்தும், குழுச்செயல்பாடு (team work) குறித்தும், கொடுத்த வேலையைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவேண்டிய முக்கியத்துவம் குறித்தும் நிறையவே கற்றுக்கொண்டேன்.
-தமிழில்: ச.வீரமணி


இந்துத்துவா பயங்கரவாதிகளைப் பாதுகாக்கும் ஈனச்செயல்


2008ஆம் ஆண்டு நடைபெற்ற மாலேகான் வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் சிறப்பு அரசுக் குற்றத்துறை வழக்குரைஞர்  திருமதி ரோகிணி சலியான் வெளிப்படுத்தி இருக்கும் விவரங்கள் மிகவும் ஆழமான மற்றும் அமைதியைக் குலைக்கும் விளைவுகளை உண்டாக்கக் கூடியவைகளாகும். திருமதி சலியான் கூற்றுப்படி தேசியப் புலனாய்வு ஏஜன்சியின்  அதிகாரி ஒருவர் அவரைச் சந்தித்து, இந்த வழக்கை மேலோட்டமாக நடத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் இந்த வழக்கில் ஆஜராக வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். இரண்டாவது மலேகான் வெடிகுண்டுத் தாக்குதலில் நான்கு முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள், 79 பேர் காயம் அடைந்தார்கள்.  மகாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு  ஹேமந்த் கர்காரே தலைமையில் இச்சம்பவம் குறித்து புலனாய்வு செய்தபோது இப்பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஓர் இந்துத்துவா தீவிரவாதக் குழுவே பொறுப்பு என்பதைக் கண்டறிந்தது. புலனாய்வு தீவிரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து பிரக்யா தாகூர், லெப்டினன்ட் கர்னல் புரோஹித் மற்றும் பலர் கைது செய்யப்பட்டார்கள். பின்னர், இந்துத்துவா பயங்கரவாதிகளின் வலைப்பின்னலின் பல்வேறு கண்ணிகள்தான் 2006ஆம் ஆண்டில் மலேகான் வெடிகுண்டு தாக்குதல், 2007இல் ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி வெடிகுண்டுத் தாக்குதல். 2007இல் ஆஜ்மீர் ஷரீப் வெடிகுண்டுத் தாக்குதல், 2007இல் சம்ஜுதா எக்ஸ்பிரஸ் வெடிகுண்டுத் தாக்குதல் மற்றும் 2008இல் மொடாசா வெடிகுண்டுத் தாக்குதல்களுக்குக் காரணம் என்று வெளிக்கொண்டுவந்தது. இவர்களது வலைப்பின்னல் விரிவடைந்தது. ஆர்எஸ்எஸ் - விசுவ இந்து பரிசத்திற்கு மிகவும் வேண்டியவரான  “ஸ்வாமி’’ ஆசிமானந்த் கைது செய்யப்பட்டார். மலேகான், மெக்கா மசூதி மற்றும் ஆஜ்மீர் ஷரீப் வெடிகுண்டுத் தாக்குதல்கள் சம்பவங்களையொட்டி ஏராளமான முஸ்லீம் இளைஞர்கள் பொய்யாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது நினைவுகூரத் தக்கது.
பிரக்யா தாகூரும் மற்றவர்களும் கைது செய்யப்பட்ட சமயத்தில் பாஜகவும் ஆர்எஸ்எஸ்-உம் அதனைக் கண்டித்ததும், இந்து “சாமியார்கள்’’ வேண்டும் என்றே அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு, பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள் என்று கூறின. மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர இவ்வழக்குகள் அனைத்திலும் தேசியப் புலனாய்வு ஏஜன்சி தன்னுடைய விசாரணை நத்தை வேகத்தில் நகர்த்தத் தொடங்கி, அவற்றை முழுமையாகக் கிடப்பில் போட முடிவு செய்திருப்பது வெளிப்படையாகவே தெரியத் தொடங்கிவிட்டது.  பயங்கரவாதக் குற்றங்களைச் செய்த கயவர்களைப் பாதுகாத்திட அரசு மிகவும் வெறித்தனமான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதை ரோகிணி சலியான் மிகவும் துணிந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். சங் பரிவாரத்தின் வக்கிரத்தனமான வாதங்களின்படி முஸ்லீம்கள் மட்டும்தான் பயங்கரவாதிகள், இந்துக்கள் அல்ல.
மேலும் மோடி அரசாங்கம் அரச பயங்கரவாதத்தையும் தூக்கிப்பிடிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது. குஜராத் மாநிலத்தில் இஷ்ரத் ஜஹன் என்கவுண்டர் கொலை என்பது மாநில அரசின் காவல்துறை அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட படுமோசமான கொலை என்பது மெய்ப்பிக்கப்பட்டு விட்டது. உச்சநீதிமன்றத்தின் கட்டளைக்கிணங்க இவ்வழக்கை விசாரித்த மத்தியப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), குஜராத் போலீஸ் அதிகாரிகள் மட்டுமல்லாது, சில உளவுத்துறை அதிகாரிகளும்  இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று முடிவுக்கு வந்தது. அரசின் விதிகளின்படி, மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்த அதிகாரிகள் மீது வழக்குத் தொடர வேண்டுமானால் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். எனவே மத்தியப் புலனாய்வுக் கழகம் அரசின் அனுமதியைக் கோரியது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.  இதன்மூலம், இஷ்ரத் கொலை வழக்கு மிக மோசமான முறையில் நீர்த்துப்போகச் செய்யப்பட்டு விட்டது. பாஜக அரசாங்கம்  இவ்வாறு குஜராத் மாநிலத்தில் அன்றைக்கிருந்த மோடி அரசாங்கத்தின் அசிங்கமான முகத்தோற்றத்தைப் பூசி மெழுகிட இன்றைக்குள்ள மத்திய மோடி அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பயங்கரவாதம் குறித்த அரசாங்கத்தின் மதவெறிக் கண்ணோட்டமும், இந்துத்துவா பயங்கரவாதிகள் புரிந்த தாக்குதல் சம்பவங்கள் சம்பநத்மான வழக்குகளை நீர்த்துப்போகச் செய்திட அது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும் மிகவும் ஆபத்தான முன்னறிகுறிகளாகும். இந்தத் தாக்குதல்களில் எண்ணற்ற முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். இவ்வழக்குகளில் நியாயம் கிடைக்காது என்கிற செய்தி அவர்களின் குடும்பங்களுக்குச் சென்றிருக்கிறது. இந்துத்துவா மத வெறியர்களுக்கும் ஒரு செய்தி சென்றடைந்திருக்கிறது. ஆனாலும் அது வேறுவிதமானது. அதாவது, “நாம் புரியும் கொலைபாதகச் செயல்களினால் விளையும் பாதிப்புகளிலிருந்து கேடயமாக இருந்து நம்மைக் காப்பாற்ற இங்கே ஓர் அரசாங்கம் இருக்கிறது,’’ என்பதே அந்தச் செய்தியாகும். 
(ஜூலை 1, 2015)

தமிழில்: ச.வீரமணி