Friday, May 8, 2020




கொரானா வைரஸ் தொற்றை முறியடிப்பதில்
மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து நிற்கும்
-சீத்தாராம் யெச்சூரி
மூக முடக்கம் மே 17 வரைக்கும் நீட்டிக்கப்பட்ட போதிலும், மே 4க்குப் பின்னர் கட்டுப்பாடுகள் சற்றே தளர்த்தப்பட்டிருக்கின்றன.  இது அநேகமாக எதிர்பார்த்த ஒன்றுதான். மே 5 தேதியில், இந்தியாவில் 3,875 புதிய வழக்குகள் ஒரே நாளில் பதிவாகி இருக்கிறது. இது கடந்த ஒருவார காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளின் ஒரு நாளைய சராசரியுடன் ஒப்பிடும்போது இரண்டரை மடங்கு அதிகமாகும். மே 4க்கும் 5க்கும் இடையே 194 பேர் இறந்திருக்கின்றனர். இது இதுவரை ஒரு நாளில் இறந்தவர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, தொற்று பீடிக்கத் தொடங்கியபின்னர் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமானதாகும்.
வெறுமனே சமூக முடக்கம் மட்டும் கொரானா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கோ மற்றும் உயிர்களைப் பாதுகாப்பதற்கோ பயன்தராது என்று நாம் திரும்பத் திரும்பக் கூறி வருகிறோம். சமூக முடக்கம், இத்தொற்றால் ஏற்படக்கூடிய கடும் பாதிப்புகளை ஒத்திவைத்திடும். அவ்வளவுதான். ஆனால் இதனைத் தடுத்திட வேண்டும் என்றால் அதற்கு அனைத்து மக்களையும் முறையாகவும், அறிவியல்பூர்வமாகவும் சோதனை செய்து, ‘பாசிடிவ்’  என்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களைப் பிரித்து,  முழுமையாகத் தனிமைப்படுத்தி வைத்து, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் சிகிச்சை அளித்து, குணப்படுத்திட வேண்டும்.
கேரளா ஒரு முன் உதாரணம்
இதற்கு இடது ஜனநாயக முன்னணியின் தலைமையின் கீழ் கேரள அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஓர் உதாரணமாகும்.   கொரானா வைரஸ் தொற்றின் ஆபத்தை மிகவும் வலுவானமுறையிலும், அறிவியல்பூர்வமாகவும் எதிர்கொண்ட ஒரு மாநிலம் என்றும், அதாவது, சோதனை செய்து பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்தி, ஆதரவு அளித்த கேரளாவின் நடவடிக்கைகள், சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருக்கிறது.
துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் இந்தத் தொற்று வேகமாகப் பரவுவதற்கு முன்பே உரியமுறையில் முன்னெச்சரிக்கைகள் விடுத்தபோதும், ஆளும் பாஜக அரசாங்கம் அதனை முன்கூட்டியை தடுத்திட எவ்விதமான நடவடிக்கையும் எடுத்திடவில்லை. இத்தொற்று தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்களை சோதித்துப் பார்த்திடும் விகிதம் நம் நாட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. (அதாவது, பத்து லட்சம் பேர்களில் 864 பேருக்கு மட்டும் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. இது, ஸ்பெயினில் 41,332 பேர் என்பதுடன் ஒப்பிட்டால், நாம் எந்த அளவிற்குப் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இது 2020 மே 5 தேதியக் கணக்கு.)
சமூக முடக்கம் முறையாகப் பயன்படுத்திக்கொள்ளப்படவில்லை
சமூக முடக்கம் அறவிக்கப்பட்ட விதம்தான் புலம்பெயர் தொழிலாளர்களின் மிகவும் மோசமான நிலைமைக்குக் காரணமாகும். வெறும் 4 மணி நேர கால அவகாசத்தில் சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டதால் மாநில அரசாங்கங்களோ அல்லது மக்களோ இதனால் ஏற்படும் நிலைமைகளைச் சமாளிக்கத் தயாராயில்லாத நிலையில் இருந்தார்கள். திடீரென்று புலம் பெயர் தொழிலாளர்கள் வேலையையும், வருமானத்தையும், அவர்கள் தங்குமிடங்களையும் பறித்தது. இதனால் நிர்க்கதிக்கு உள்ளான அவர்கள் தொலைதூரங்களில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும் என்று வீதிகளில் திரண்டார்கள். ஒருவிதத்தில், எந்த நோக்கத்திற்காக சமூகமுடக்கம் அறிவிக்கப்பட்டதோ அதையே,  அதாவது கொரானா வைரஸ் தொற்றுக்கான நோய்க்கிருமிகள் பரவாமல் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தையே,  மனிதர்களுக்கிடையே இடைவெளி இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தையே, இது முறியடித்தது. சமூக முடக்கக் காலத்தை நம்முடைய சுகாதார வசதிகளை, சுகாதார ஊழியர்களுக்கான சுய பாதுகாப்புக் கருவிகள் பெறுதல், வெண்டிலேடர்கள் போன்றவற்றுடன்  போதுமான அளவிற்கு  மருத்துவ வசதிகளைப் பெருக்குதல்  ஆகியவற்றிற்குப் பயன்படுத்தி இருக்க வேண்டும். எனினும் இது நடக்கவில்லை. தேவையின் அடிப்படையில், பொதுப் பயன்பாட்டிற்கு தனியார் மருத்துவமனைகளையும் பயன்படுத்திட கட்டளைகள் பிறப்பித்திருக்க வேண்டும். ஸ்பெயின் போன்று சில நாடுகள் அனைத்துத் தனியார் மருத்துவ வசதிகளையும் தேசியமயமாக்கும் அளவிற்கு சென்றிருக்கின்றன.
வேலைகளை இழந்து, பசி-பஞ்சம்-பட்டினிக் கொடுமைக்கு ஆளாகும் மக்களைக் காப்பாற்றிட தேவையான அளவிற்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால் இந்தத் திசைவழியில் எதுவுமே நடந்திடவில்லை. வருமானவரி செலுத்தாத குடும்பத்தினருக்கு அடுத்த மூன்று மாத காலத்திற்கு, மாதந்தோறும் 7,500 ரூபாய் வீதம் ரொக்க மாற்று செய்யப்பட வேண்டும் என்று நாம் தொடக்கத்திலிருந்தே கோரிக் கொண்டு இருக்கிறோம்., மேலும், மத்திய அரசின் கிடங்குகளில் வீணாகிக் கொண்டிருக்கும் 77 மில்லியன் (7 கோடியே 70 லட்சம்) டன்கள் உணவு தான்யங்களை இலவச ரேஷன் மூலம் ஏழை மக்களுக்கு விநியோகிப்பதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அதன் மூலம் பசியால் வாடும் மக்களைக் காப்பாற்றிட வேண்டும் என்றும் கோரி வருகிறோம்.
மத்திய அரசாங்கம், இவற்றைச் செய்திட முன்வருவதற்கு மறுத்திருக்கிறது. குரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற பெயரில் பிரதமரின் பெயரில் தனியார் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, பல நூறாயிரம் கோடி ரூபாய்கள் வசூலிக்கப்பட்டிருக்கிறது, வசூலிக்கப்பட்டுக்கொண்டுமிருக்கிறது. இந்தத் தொகை, குரோனா வைரஸ் தொற்றை வலுவானமுறையில் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு,  போதுமானதற்கும் அதிகமாகவே இருக்கும்.
அளவுக்கு மீறிய அதிகாரக் குவிப்பு
மத்திய பாஜக அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களைக் கையாளும் விதம் மிகவும் மோசமானதாக இருக்கிறது. முதலாவதாக, மாநிலங்களுக்குத் தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளைக் கடந்த இரு காலாண்டுகளுக்கு அளித்திடாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. இதன் காரணமாக மாநில அரசாங்கங்கள், கொரானா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதற்குப் போதிய நிதி வசதி இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருப்பது மாநில அரசாங்கங்கள்தான். மாநில அரசாங்கங்களைக் கலந்து ஆலோசிக்காமல் திடீரென்று தேசிய சமூகமுடக்கத்தை மத்திய அரசு அறிவித்தது. இப்போது பல லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டியதும் மாநில அரசாங்கங்களின் பொறுப்புதான் என்றும் எனவே அவர்களுக்குத் தேவையான உதவிகளை மாநில அரசாங்கங்கள்தான் அளித்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது. கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற பெயரில் தான் உருவாக்கி இருக்கின்ற சிறப்பு நிதியத்திற்கு அனைத்து அரசு ஊழியர்களையும் கட்டாயப்படுத்தி ஒரு நாள் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டுள்ள மத்திய அரசு, அதிலிருந்து எவ்விதமான உதவியையும் இதுவரை செய்திடவில்லை.
மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ள 1.7 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பில், பாதிக்கும் மேலான தொகை ஏற்கனவே அறிவித்திருந்த மத்திய அரசுத் திட்டங்களுக்கானவையாகும். இந்தத்தொகை கூட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவேயாகும்.  இதனைக் குறைந்தபட்சம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாகவாவது, அதாவது சுமார் 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்திட வேண்டும், அதன் மூலம் மாநில அரசாங்கங்களுக்கு கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை அவைகள் மேற்கொள்வதற்குத் தாராளமான நிதி உதவியினைச் செய்திட வேண்டும்.
இதனைச் செய்திட மத்திய அரசு தவறும்பட்சத்தில், வருவாயைப் பெருக்கிட  மாநில அரசுகளுக்கு உள்ள ஒரேவழி  பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுவின் விலைகளை உயர்த்துவதுதான். இது, ஏற்கனவே கொரானா வைரஸ் தொற்றால் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள கோடிக்கணக்கான சாமானிய மக்களின்  துன்பதுயரங்களையும், சுமைகளையும் மேலும் அதிகப்படுத்திடும்.
இவையெல்லாவற்றையும்விட மிகவும் மோசமான விஷயம், இப்போது புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதற்காக இந்திய ரயில்வேயால் தொடங்கப்பட்டிருக்கிற சிறப்பு ரயில்களுக்கான போக்குவரத்துக் கட்டணத்தை மாநில அரசுகளே அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகும். இது கிரிமினல்தனமானதாகும். இது, நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின் 360ஆவது பிரிவின்கீழான நிதி அவசரநிலையாகும். இது, கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராக வலுவாகப் போராடுவதற்கான நம் சக்தியை ஆழமானமுறையில் அரித்துவீழ்த்துகிறது.
மாநில அரசாங்கங்களுக்கு நிதி உதவிகளை உடனடியாகச்செய்திட வேண்டும். ஆனால், மத்திய அரசாங்கம், இதனைச்செய்வதற்குப் பதிலாக, சிறப்பு ரயில்களை இயக்குவதற்காக இந்தியன் ரயில்வே 85 சதவீத செலவினத்தைச் செய்திருப்பதாக நொண்டிச் சமாதானங்களைக் கூறிக் கொண்டிருக்கிறது. ரயில்வே போக்குவரத்து மக்கள் பொதுப் போக்குவரத்தாகும். இதன் செலவினங்களை வெறும் லாப நட்டக் கணக்காகப் பார்க்கக் கூடாது. உலகில் உள்ள நாகரிகமான நாடுகள் அனைத்துமே பொதுப் போக்குவரத்தை ஒரு சேவையாகவும், மக்களின் ஒட்டுமொத்த நன்மைக்காகவும், பொருளாதார வளர்ச்சியின் உந்துவிசையாகவும் தான் இயக்கிக் கொண்டிருக்கின்றன.
மே 5 அன்று, உச்சநீதிமன்றம் புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனை மீதான பொதுநல மனு ஒன்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு நிதி அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு மத்திய அரசாங்கம், உச்சநீதிமன்றத்திடம் போக்குவரத்துக் கட்டணத்தை மாநில அரசுகள்தான் தர வேண்டும் என்று கூறி நீதிமன்றம் கூறியதை ஏற்க மறுத்திருக்கிறது. மேலும் தொழிலாளர்களிடமிருந்து பெற்ற தொகை எவ்வளவு என்று நீதிமன்றத்திடம் கூறவும் மறுத்துவிட்டது. இதன் விவரங்களை வெளிப்படுத்தவதற்கு தனக்கு எவ்விதமான அறிவுரைகளும் அரசால் வழங்கப்படவில்லை என்று அரசு வழக்குரைஞரான அட்டார்னி ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதுதான் பாஜக அரசாங்கத்தின் இரட்டை வேடம். பொய்ப்பிரச்சாரம் மற்றும் தவறான தகவல்களைச் சார்ந்தே அது இயங்கிக் கொண்டிருக்கிறது.
பாஜகவிற்கு கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற சிந்தனையைத் தவிர வேறெந்த சிந்தனையும் கிடையாது
கொரானா வைரஸ் தொற்றுக் காலத்தில்கூட மக்களின் நலன்கள் குறித்தோ மற்றும் அவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு குறித்தோ கவலைப்படாது, மத்திய அரசாங்கத்தின் ஒரே சிந்தனை தன்னுடைய கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகளை எப்படிக் காப்பாற்றுவது என்பதுதான். கோடானுகோடி மக்கள் வறிய நிலைக்கும், பசி-பஞ்சம்-பட்டினி நிலைக்கும் தள்ளப்பட்டுள்ள அதே சமயத்தில், அவர்களுக்கு எவ்விதமான நிதி உதவியும் செய்ய மறுத்திடும் அதே சமயத்தில், மத்திய அரசாங்கம், தேசிய சமூக முடக்கக் காலத்திலும்கூட, தன்னுடைய கூட்டுக் களவாணி கார்ப்பரேட்டுகள் வங்கிகளில் வாங்கியிருந்த கடன் தொகையான 68 ஆயிரத்து 800 கோடி ரூபாய்களைத் தள்ளுபடி செய்திருக்கிறது. இவர்கள் அனைவரும் பிரதமருக்கு மிகவும் நெருக்கமானவர்களாவார்கள். இதன் பெயர்தான் கருணையற்ற கூட்டுக்களவாணி முதலாளித்துவம் என்பதாகும். மக்களின் பசி-பஞ்சம்-பட்டினியைப் போக்க இவர்களிடம் பணம் கிடையாது. அவர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு ரயிலில் அனுப்பி வைத்திட பணம் கிடையாது. ஆனால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மக்களின் டெபாசிட் தொகைகளைக் கடனாகப் பெற்றுத் திருப்பிச்செலுத்தாது சூறையாடிய, தன்னுடைய கூட்டுக் களவாணி கார்ப்பரேட்டுகளைக் காப்பாற்றுவதற்கு அவர்களிடம் பணம் இருக்கிறது.
கொள்ளை லாபமே குறிக்கோள்
சமூக முடக்கக் காலத்திலும், முதலாளிகளாலும் கார்ப்பரேட்டுகளாலும் கிரிமினல்தனமான முறையில் கொள்ளை லாபம் ஈட்ட வேண்மென்கிற வெறி தொடர்கிறது. இந்தக் காலகட்டத்தில் ரிலயன்ஸ் நிறுவனம் 17.7 சதவீதம் தன் லாபத்தை அதிகரித்திருக்கிறது என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. உலக அளவில், அமெரிக்காவின் உயர் பத்து பில்லியனர்கள் தங்கள் செல்வாதாரங்களை 208 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கூடுதலாக சேர்த்திருக்கிறார்கள் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. அதேசமயம் மறுபக்கத்தில், கோடானு கோடி தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளார்கள், ஊதிய வெட்டுக்கு ஆளாகியுள்ளார்கள்.   தேசிய சமூக முடக்கம் தொடங்கியபின்னர், சுமார் 14 கோடி பேர் வேலைகளை இழந்து, வேலையில்லாதோர் பட்டாளத்துடன் இணைந்துள்ளார்கள் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) மதிப்பிட்டிருக்கிறது. முதலாளித்துவத்தின்கீழ் மனிதாபிமானமற்ற சுரண்டலின் கோர வடிவங்கள் இவையாகும்.
பல முதலாளித்துவ நாடுகள் கூட தங்களின் மக்களை இன்றைய இக்கட்டான நேரத்தில் காப்பாற்றுவதற்காக, பெரிய அளவில் நிதித்தொகுப்புகளை அளித்திருக்கின்றன. உதாரணத்திற்கு, ஜப்பான் தன்னுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20 சதவீதம் நிதித் தொகுப்பை அறிவித்திருக்கிறது. அமெரிக்கா 10 சதவீதம் அறிவித்திருக்கிறது. இதனை மேலும் உயர்த்தப்போவதாகவும் உறுதிமொழி அளித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் ஆட்சி செய்பவர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே ஒதுக்கியிருப்பது தொடர்கிறது. இதனை உயர்த்திட மறுத்து வருகிறார்கள்.
ஆனால் அதே சமயத்தில் மத்திய அரசாங்கம் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவினத்தில் பிரதமருக்காகப் பிரம்மாண்டமான முறையில் புதிய வீடு கட்டுவதற்காகவும், மத்திய விஸ்டா என்னம் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நாடாளுமன்றக் கட்டிடங்கள்  புதிதாகக் கட்டுவதற்குமான முன்மொழிவிற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. எனவே, இவர்களுக்குத் தங்கள் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்தச் செல்வதற்குப் பணம் இருக்கிறது. இத்துடன் கூடுதலாக, ‘பிஎம்கேர்ஸ்’ என்ற பெயரில் ஒரு சிறப்பு நிதியத்தையும் உருவாக்கி, கொரானா வைரஸ் தொற்றைப் பயன்படுத்தி அபரிமிதமாகப் பணத்தை வசூல் செய்திருக்கிறார்கள். ஆனாலும் இதிலிருந்தும் ஒரு காசு கூட கொரானா வைரஸ்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட சமூக முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு இதுவரையிலும் செலவு செய்திட முன்வரவில்லை. அதேபோன்று கொரானா வைரஸ் தொற்றை ஒழித்துக்கட்டுவதற்குத் தேவையானவற்றைச் செய்வதற்கும் பயன்படுத்திடவில்லை. இந்த சிறப்பு நிதியத்தில் சேர்ந்துள்ள தொகை குறித்து அரசாங்கத்தின் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்பட முடியாது. இதில் சேர்ந்துள்ள தொகை குறித்து எவ்விதமான வெளிப்படைத் தன்மையும் அல்லது கணக்கும் இல்லை.
கொரானா வைரஸ் தொற்று வெளிப்படுவதற்கு முன்பே நம் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் சென்றிருந்தது. இப்போது பாஜக மத்திய அரசாங்கமானது, நம் நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு கொரானா வைரஸ் தொற்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக தங்கள் மதவெறி நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதிலேயே குறியாக இருக்கிறது.
பயமுறுத்தும் எதேச்சாதிகாரம்
ஆளும் வர்க்கங்கள் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும்போதெல்லாம் எதேச்சாதிகாரமான முறையில் அரசாங்கம் மற்றும் மக்கள் மீது தங்களுடைய கட்டுப்பாடுகளை வலுப்படுத்திக்கொள்வதற்கான வேலைகளில் எப்போதுமே இறங்கிடும். இத்தகைய செயல்பாடுகள் இப்போதும் மிகவும் நாணமற்றமுறையில் நடந்துகொண்டிருக்கிறது.   அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து கூறுபவர்கள் அனைவரையும் மிகவும் அரக்கத்தனமான சட்டங்களான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் (UAPA) மற்றும் தேசியப் புலனாய்வு சட்டம் (NIA) ஆகியவற்றின்கீழ் பதிவு செய்யப்படுவது நடந்துகொண்டிருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அமைதியானமுறையில் கிளர்ச்சிகளை மேற்கொண்ட செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், புகழ்மிக்க வல்லுநர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மக்களின் ஜனநாயக உரிமைகளை இவ்வாறு காலில்போட்டு மிதிப்பதும், தங்களுக்கு எதிராகக் கருத்துக்கூறுபவர்களை வேட்டையாடுவதும் இக்காலகட்டத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரல் பின்பற்றப்படுவதை நோக்கி …
மிகவும் மோசமான அம்சம் என்னவெனில், இப்போதைய பாஜக அரசாங்கத்திற்கு ஆர்எஸ்எஸ்-இன் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர வேறெந்த சிந்தனையும் இல்லாமலிருப்பதாகும். பாஜக அரசாங்கம், தற்போதைய மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வெறிபிடித்த பாசிஸ்ட் அரசாக மாற்ற வேண்டுமென்கிற திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில்தான் குறியாக இருக்கிறது. கொரானா வைரஸ் தொற்றுப் பரவலுக்கே முஸ்லீம்கள், சிறுபான்மையினர்தான் காரணம் என்று இவர்கள் பரப்பிய வெறுப்புப் பிரச்சாரத்தின் விளைவாக சமூகத்தில் மக்கள் மத்தியில் வகுப்புவாத அடிப்படையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சித் திட்டம், அதனுடைய 7.14ஆவது பத்தியில் இந்த அம்சத்தைக் குறிப்பிட்டிருக்கிறது. அதாவது, பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வரும் சமயத்தில், அது ஆர்எஸ்எஸ்-இன் பாசிஸ்ட் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்லும் என்று பாஜகவின் ஆபத்துக்களைக் குறிப்பிட்டிருக்கிறது.
எனவே, கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தையும், பாஜக மத்திய அரசாங்கம் ஆளும் வர்க்கங்களும், அதன் கூட்டுக் களவாணி முதலாளிகளும் கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய விதத்தில்  மக்களைச் சுரண்டுவதை உக்கிரப்படுத்திக் கொண்டிருப்பதற்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. தொழிலாளர் நலச் சட்டங்கள் மிகவும் மோசமானமுறையில் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக, முதலாளிகள் நலச் சட்டங்களாக  மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.    எட்டு மணி நேர வேலை என்பது பல மாநிலங்களில் 12 மணி நேர வேலையாக மாற்றப்பட்டிருக்கிறது. தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின்  ஊதியங்களும் கடுமையான முறையில் வெட்டிக் குறைக்கப்பட்டிருக்கின்றன.
மற்றொரு பக்கத்தில், இந்த நிலைமையை மத்திய அரசாங்கம் தன்னுடைய எதேச்சாதிகாரக் கட்டுப்பாட்டை வலுப்படுத்திக் கொள்வதற்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. நம்முடைய அரசமைப்புச்சட்டம் வகுத்துத் தந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தைக் குப்பையில் தூக்கி எறிந்துவிட்டு, ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றங்களின் அடிப்படை உரிமைகளைச் சூறையாடி, அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் குவித்துக் கொண்டிருக்கிறது. கொரானா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தவதும், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதும் முழுக்க முழுக்க மாநில அரசுகளின் பொறுப்புதான்என்று மாநில அரசுகளைக் கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.  மத்திய அரசு மாநில அரசுகளுக்கு நிதி உதவி செய்யாதது மட்டுமல்ல, மாநில அரசுகளுக்குத் தான் பகிர்ந்து அளிக்க வேண்டிய சட்டபூர்வமான நிலுவைத் தொகைகளைக்கூட அளிக்க மறுத்து வருகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக அமைதியாகக் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள், புகழ்பெற்ற பிரமுகர்களைக் குறிவைத்துக் கைதுசெய்திருப்பதன் மூலமும், தங்களுக்கு எதிராகக் கருத்து கூறும் எவராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதன் மூலமாகவும், பாஜக மத்திய அரசாங்கம் தன்னுடைய சொந்த நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. அதன் மூலம், கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாட்டு மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை அரித்து வீழ்த்திக் கொண்டிருக்கிறது.
இறுதியாக, ஆட்சியாளர்கள் மதவெறித் தீயை விசிறிவிடுவதை உக்கிரப்படுத்தியிருப்பதும், சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை விரிவுபடுத்தியிருப்பதும், நாட்டில் குரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரின் ஒன்றுபட்டுப் போராட்டத்தினை அரித்து வீழ்த்திக் கொண்டிருக்கிறது. இத்தகைய முஸ்லீம் வெறுப்பு மனோபாவம் அதிகரிக்கப்படுவதற்கு எதிராக உலகில் பல நாடுகள் எதிர்வினையாற்றி இருக்கின்றன. ஆட்சியாளர்களின் இத்தகைய செயல்பாடுகள் உலகில் உள்ள பல நாடுகளிடமிருந்து இந்தியாவைத் தனிமைப்படுத்துவதோடு மட்டுமல்லாது, குரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நம் போராட்டத்தையும் பலவீனப்படுத்திடும்.
எனவே, இந்த அரசாங்கம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் இந்தியப் பொருளாதாரத்தை மீளவும் கட்டி எழுப்புவதற்கும் மற்றும் புதுப்பிப்பதற்கும் ஒரு குறைந்தபட்சத் திட்டத்தை அமல்படுத்த வைப்பதற்கு நிர்ப்பந்தம் அளித்திடும் விதத்தில் அதிகபட்ச அளவில் மக்களையும், அரசியல் கட்சிகளையும், வெகுஜன அமைப்புகளையும் மற்றும் மக்கள் இயக்கங்களையும் அணிதிரட்டுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள நம் அனைவரின் கடமையாகும். கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடும் இந்த சமயத்தில், பொருளாதாரத்திற்கான வரைபடத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது வெளியில் வெளியிட்டிருக்கிறது. இவற்றை நம் பிரச்சாரங்களின் போது மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்.
நாடு முழுதும் உள்ள நம் கட்சிக் கிளைகள் அனைத்தும் கோடானுகோடி மக்களுக்குத் தேவையான நிவாரணத்தை அளிப்பதற்கான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது தொடரும். இன்றைய தினம் எழுந்துள்ள ஆழமான சவால்களை எதிர்கொள்வதில் மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து நிற்பது என்றென்றும் தொடரும்.
(தமிழில்: ச.வீரமணி)


No comments: