Sunday, May 17, 2020




தான்தோன்றித்தனமாக செயல்படும்போக்கை நிறுத்துக
-ஆர்.வைகை மற்றும் அண்ணா மாத்யு
(தொழிலாளர் நலச் சட்டங்கள் நாகரிகமான லட்சியங்களைக் கொண்டவைகளாகும். கொரானா வைரஸ் தொற்றைப் பயன்படுத்திக் கொண்டு, ஆட்சியாளர்கள் அவற்றைத் துருப்புச்சீட்டுகளாகப் பயன்படுத்தக் கூடாது.)
 கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்றால் உருவாக்கப்பட்டிருக்கிற பொது சுகாதார நெருக்கடி மூலமாக, நாம் மற்றுமொரு மாபெரும் துயரத்தின் சாட்சிகளாக இருக்கிறோம். அதாவது, இதனைப் பயன்படுத்திக் கொண்டு முதலாளிகளும், அவர்களுக்கும் மேலாக, அரசும் தொழிலாளர்களை நிர்க்கதியாகக் கைவிட்டிருக்கின்றன. 2005 பேரிடர் மேலாண்மைச் சட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தொழிலாளர்களின் உரிமைகள் காவு கொடுக்கப் பட்டிருக்கின்றன. அவர்களின் உணவு, தங்குமிடம் அல்லது மருத்துவ நிவாரணம் என எதற்கும் எவ்விதமான வழிவகைகளும் செய்து தரப்படவில்லை. அவர்கள் இதுவரையிலும் பெற்றுவந்த ஊதியங்களுக்கு எவ்விதமான உத்தரவாதமும் கிடையாது. அரசின் ரொக்கம் மற்றும் உணவு நிவாரணம் என்பவை பெரும்பகுதி தொழிலாளர்களுக்குச் சென்றடையவில்லை.

பசி-பஞ்சம்-பட்டினியால் பரிதவித்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்புவதற்காக நடக்கத் தொடங்கி இருக்கிறார்கள். போகிற வழியிலேயே பலர் இறந்துள்ளார்கள். சமூக முடக்கம் அறிவித்து ஒரு மாதம் கழிந்த பின்னர், இப்போதுதான் மத்திய அரசு, அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவதற்கு அனுமதித்து, பூடகமான முறையில் ஆணைகளைப் பிறப்பித்திருக்கிறது. இதன்பின்னர் உடனடியாக, முதலாளிகளின் அமைப்புகள் எல்லாம் தொழிலாளர்கள் இவ்வாறு செல்வதைத் தடுப்பதற்காகக் குரல் கொடுத்திருக்கின்றன. இவர்களின் குரலுக்குச் செவிமடுத்து அரசாங்கங்களும், முதலாளிகள் தொழில்களைத் தொடங்கினார்கள் என்றால் அவர்களுக்கு இடையூறு இல்லாது தொழிலாளர்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக, அவர்கள் பயணம் செய்வதற்கான போக்குவரத்து வசதிகளைத் தாமதப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
முதலாளிகள் தற்போது தொழிலாளர் நலச் சட்டங்கள் தளர்த்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனையொட்டி உத்தரப்பிரதேச மாநில அரசு, மகப்பேறு பயன்கள் மற்றும் பணிக்கொடைச் சட்டம், 1948 தொழிற்சாலைகள் சட்டம், 1948 குறைந்தபட்ச ஊதியங்கள் சட்டம், 1946 தொழில்நிறுவனங்கள் (நிலையாணைகள்) சட்டம், 1926 தொழிற்சங்கங்கள் சட்டம் உட்பட அநேகமாகத் தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தையும் கிடப்பில் போடுவதற்காக ஓர் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறது. பல மாநில அரசாங்கங்கள், தங்கள் மாநிலங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் நாட்டிலுள்ள பல சட்டங்களை அமல்படுத்துவதற்கு, விலக்கு அளித்திருக்கின்றன. நாட்டிலுள்ள இந்தியத் தொழில்களின் கூட்டமைப்பு (The Confederation of Indian Industry) தொழிலாளர்களுக்கு 12 மணி நேர ஷிப்ட் முறையைப் பரிந்துரைத்திருக்கிறது. அரசாங்கங்களும் வேலைக்கு அழைக்கப்பட்டால் தொழிலாளர்கள் உடனே வந்து சேர்ந்து கொள்ள வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அவர்கள் தண்டனைக் குரிய நடவடிக்கைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்றும் கட்டளைகள் பிறப்பித்திருக்கின்றன.
இவ்வாறு, நாட்டில் உள்ள முறைசாராத் தொழிலாளர்கள் ஸ்தாபனரீதியாகக் கைவிடப்பட்டபின்னர், முதலாளிகள் தரப்பில், அரசு தான்தோன்றித்தனமாகச் செயல்படும்போக்கை மறுபடியும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், ஸ்தாபனரீதியாகவுள்ள தொழிலாளர்களையும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றும் ஒரு முறையைக் கொண்டுவர வேண்டும் என்றும் விரும்புகின்றனர். இதன்மூலம், நாடாளுமன்றத்தால் ஸ்தாபனரீதியான தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்புகளைப் பறித்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
காலனியாதிக்கக் காலத்துச் சுரண்டல்முறை
அஸ்ஸாம் தேயிலைத் தோட்டங்களில், பிரிட்டிஷ் தோட்ட உரிமையாளர்களுக்காக  1819 வங்க முறைப்படுத்தல் VII என்னும் சட்டத்தின்மூலமாக, ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்னும் ஒரு காட்டுமிராண்டித்தனமான அமைப்புமுறை அறிமுகப்படுத்தப்பட்டதை ஆட்சியாளர்களின் இப்போதைய நடவடிக்கை நினைவுபடுத்துகிறது. இந்த சட்டத்தின்படி தோட்டத் தொழிலாளர்கள் ஐந்து ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையின்கீழ் வேலை செய்திட வேண்டும். இவர்கள் வேலை செய்யாமல் ஓடிவிட்டார்களானால் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப் படுவார்கள். பின்னர், வங்கத்தில் 1863 பூர்வீகத் தொழிலாளர்கள் போக்குவரத்துச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது, தோட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மீது செலுத்திவந்த கட்டுப்பாட்டை வலுப்படுத்தியது. அவர்களுக்கு, தொழிலாளர்களை வேலைவாய்ப்பு மாவட்டத்தில் இருத்தி வைப்பதற்கும் தொழிலாளர்களுக்கு ஆறு மாதங்கள் வரையிலும் சிறையில் அடைப்பதற்கும் வகை செய்தது.  பின்னர், 1865 வங்கச் சட்டம் VI நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் சிறப்பு குடியேற்றக் காவல்துறையினர் (Special Emigration Police) வரவழைக்கப்பட்டு, அவர்கள் மூலம் தோட்டத் தொழிலாளர்கள் வெளியேறுவது தடுக்கப்பட்டது. வெளியேறிய தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டு, தண்டனைகள் அனுபவித்தபின்னர் மீண்டும் தோட்டங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.  பிரிட்டிஷ் இந்தியாவில் 150 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்ததோ அதேபோன்ற பயங்கரமானதோர் ஒற்றுமையை இன்றையதினம் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தொழிற்சாலைகளில் வேலை செய்த தொழிலாளர்களும் கடும் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அவர்கள் நாளொன்றுக்கு 16 மணி நேரம், அற்பக் கூலிக்கு வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.  இவர்களின் எதிர்ப்பின் விளைவாகத்தான் 1911இல் தொழிற்சாலைகள் சட்டம் உருவாக்கப்பட்டு, ஷிப்டுககளுக்கான வேலைநேரம் 12 மணி நேரம் என அறிமுகப்படுத்தப்பட்டது.  எனினும் குறைந்த ஊதியங்கள், தான்தோன்றித்தனமானமுறையில் ஊதிய வெட்டுகள் மற்றும் இதர கடினமான நிலைமைகள் தொழிலாளர்களை ‘கடன் அடிமைத்தனத்திற்குள்’ தள்ளின.
இந்தியாவில், தொழிலாளர் நலச் சட்டங்கள், தொழிலாளர்களின் போராட்டங்களால் உருவாகி இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை காலனியாட்சிக் காலத்தில் தொழில் அதிபர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக, விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர்கள் மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாகும். 1920களிலிருந்து, சிறந்த வேலை நிலைமைகள் கோரி, எண்ணற்ற வேலைநிறுத்தங்களும், கிளர்ச்சிப் போராட்டங்களும் அலை அலையாக நடைபெற்றன. இதன் விளைவாக தொழிற்சங்கத் தலைவர்கள் பலர் இந்தியப் பாதுகாப்பு விதிகளின் (Defence of India Rules) கீழ் கைது செய்யப்பட்டார்கள்.
தொழிலாளர்களின் கோரிக்கைகள் நம் அரசியல்கட்சித் தலைவர்களால் ஆதரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பிரிட்டிஷார் தொழிலாளர்கள் குறித்து ராயல் கமிஷனை நியமனம் செய்திட நிர்ப்பந்திக்கப்பட்டது. அது, 1935இல் ஓர் அறிக்கை அளித்தது. அப்போது உருவான 1935 இந்திய அரசாங்கச் சட்டம், சட்டங்களை உருவாக்குவதில் இந்தியர்களுக்கு அதிக அளவில் பிரதிநிதித்துவம் அளிப்பதற்கு வகை செய்தது. இவற்றின் விளைவாக இன்றைய தொழிலாளர் நலச் சட்டங்கள் பலவற்றிற்கு முன்னோடியாக பல சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஒப்பந்தத் தோட்டத் தொழிலாளர் சட்டம், 1951 தோட்டத் தொழிலாளர் நலச் சட்டம் என்ற வடிவத்தில் மாற்றியமைக்கப்பட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளித்தது.
ஜனநாயகத்தின் மூலம் கண்ணியமான வாழ்க்கை
நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகளின்கீழ், நாடாளுமன்றம் தொழிலாளர்களைப் பாதுகாத்திட நடவடிக்கைகளை மேற்கொண்டது. தொழிற்சாலைகள் சட்டம், தொழிலாளர்களுக்கு ஷிப்டுகளுக்கு 8 மணி நேர வேலை வரையறுத்தது. இதற்குமேல் வேலை செய்தால் கூடுதல்நேர ஊதியங்கள் வழங்கிடவும், வாராந்திர விடுமுறைகள் வழங்கிடவும், ஊதியங்களுடன் கூடிய விடுப்பு வழங்கிடவும், சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு முதலானவற்றிற்கு நடவடிக்கைகள் எடுத்திடவும் வகை செய்தது. தொழில் தகராறு சட்டம் (The Industrial Disputes Act), வேலைநிறுத்தங்கள்/கதவடைப்புகள், நியாயமற்ற வேலைநீக்கங்கள் மற்றும் ‘டிஸ்மிஸ்’ செய்யப்படுதல் முதலானவற்றைத் தவிர்ப்பதற்காக தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் மூலமாக ஊதியம் மற்றும் இதர தகராறுகளைத் தீர்த்திட வாய்ப்புகள் அளித்தது. குறைந்தபட்ச ஊதியச்சட்டம், அளிக்கப்படும் ஊதியத்தைவிடக் குறைவாக அளித்தால் உயிர்வாழ்வதற்குச் சாத்தியமில்லை என்ற அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதம் செய்தது. இந்தச் சட்டம் அனைத்தும், அரசமைப்புச் சட்டத்தின் 21 மற்றும் 23 ஆகிய பிரிவுகளின்கீழ் சுரண்டலுக்கு எதிராக உயிர்வாழ்வதற்கான உரிமை மற்றும் இதர உரிமைகளையும் பாதுகாத்திட அரசுக் கொள்கையின் வழிகாட்டும் நெறிமுறைகளை (Directive Principles of State Policy) நடைமுறைப்படுத்தவதற்கு உதவின.  தொழிலாளர்களின் வாழ்க்கை, அடிமைத்தனத்திலிருந்து கண்ணியமிக்க ஒன்றாக மாற்றுவதற்கு, தொழிற் சங்கங்கள் முக்கியமான பங்கினை செலுத்தின. தொழிலாளர்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கும், பொருளாதார நீதி கிடைப்பதற்கும் தொழிற்சங்கங்களுக்கு இருக்கும் பங்கினை ஒதுக்கி வைத்திட முடியாது.
உச்சநீதிமன்றம், தன்னுடைய  கிளாக்சோ லாபரட்டரி (எதிர்) தலைமை அதிகாரி, தொழிலாளர்நலம், (1983) (Glaxo Laboratories v. The Presiding Officer, Labour (1983)) என்னும் வழக்கில், தொழில் வேலைவாய்ப்பு (நிலையாணைகள்) சட்டம், 1946 குறித்துக் குறிப்பிட்டிருப்பதாவது:
முதலாளிகள் தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டக் காலத்தில், தொழில் உறவுகள் மிகவும் கடுமையாக இருந்தன. நிர்வாகம்தான் உச்சபட்ச எஜமானன். தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துக்கொண்டு வேலை முடிந்ததும் தூக்கி எறிந்துவிடும் விதத்தில் சட்டத்தைப் பெற்றிருந்தனர். தொழிலாளர்களுக்கும் முதலாளிக்கும் இடையேயான உறவு சமமற்றவர்களுக்கு இடையேயான ஒப்பந்தமாகவே இருந்தது… சமூக நீதியின் வளரும் கருத்துக்கள் மற்றும் சமூக-பொருளாதார நீதியின் விரிவான அளவீடுகள் தொழிற்சாலைகளில் சமத்துவமற்ற பங்காளிகளுக்கு இடையே, அதாவது மூலதனத்தைக் கொண்டுவரும் முதலாளிகளுக்கும், தங்கள் ரத்தத்தையும், வியர்வையையும் முதலீடாகப் போடுகின்ற தொழிலாளர்களுக்கும் இடையேயிருந்திடும் சமத்துவமற்றப் போக்கினைச் சட்டத்தின்படி பாதுகாக்கவேண்டியது அவசியமாகும். … ஒப்பந்தம் இரு சமத்துவமற்ற நபர்களால் பேசித்தீர்க்கப்படக்கூடிய விதத்தில் அமைந்துவிடக் கூடாது. மாறாக அவை சட்டரீதியாக அமல்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு உருவான சட்டங்களை எல்லாம் ஒழித்துக்கட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் எவ்விதமான நடவடிக்கையும், தொழிலாளர்களை நூறாண்டு காலத்திற்குப் பின்னுக்குத் தள்ளிவிடும். இந்தச் சட்டங்களின் அரசமைப்புச்சட்ட லட்சியங்களை அடிக்கோடிட்டுத்தான், இந்தச் சட்டங்களுக்கு விதிவிலக்கு அளித்திட, கண்மூடித்தனமான அதிகாரங்களை (blanket powers) ஆட்சியாளர்களுக்கு நாடாளுமன்றம் வழங்கிடவில்லை. தொழிற்சாலைகள் சட்டம் 5ஆவது பிரிவு, மாநில அரசாங்கங்களுக்கு பொது அவசரநிலைக் காலத்தில் மட்டும் விலக்கு அளிப்பதற்கு அதிகாரம் அளிக்கிறது.  பொது அவசரநிலைஎன்பதற்கு, நாட்டின் பாதுகாப்பு அல்லது நாட்டின் எல்லையில் ஏதேனும் ஒரு பகுதியில், யுத்தம் அல்லது வெளிநாட்டினரின் ஆக்கிரமிப்பு அல்லது உள்நாட்டில் இடையூறு, போன்று அச்சுறுத்தல் ஏற்பட்டு, கடுமையான அவசரநிலை என்று விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போது நாட்டின் பாதுகாப்புக்கு அப்படியெல்லாம் எவ்விதமான அச்சுறுத்தலும் இல்லை. பொது நிறுவனங்களிலும்கூட வேலை நேரங்கள் அல்லது விடுமுறைகள் குறித்து விலக்கு அளிக்க முடியாது. தொழில் தகராறுகள் சட்டத்தின் 36-பி பிரிவு, அரசாங்கத் தொழில்நிறுவனங்களுக்கு, அவற்றுக்குப் புலனாய்வுகள் மற்றும் குடியேற்றங்கள் (settlements) ஏற்பட்டால் மட்டுமே விலக்கு அளிக்க வேண்டும், என்கிறது.
சட்டபூர்வமான ஆதரவு இல்லை
எனவே, மாநில அரசாங்கங்களின் உத்தரவுகள் நாட்டிலுள்ள சட்டங்களின் ஆதரவினைப் பெறவில்லை. தொழிலாளர் நலம் என்பது அரசமைப்புச்சட்டத்தின்கீழ் பொதுப் பட்டியலில் (concurrent list) இருக்கிறது. தொழிலாளர்நலச் சட்டங்களில் பல மத்தியச் சட்டங்களாகும். உத்தரப்பிரதேச அரசாங்கம், தொழிலாளர்நலச் சட்டங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பிரயோகிக்கப்படாது என்று கூறியிருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள், குறைந்தபட்ச ஊதியங்கள், மகப்பேறு மருத்துவப் பயன்கள், பணிக்கொடைகள் முதலான அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாத்திடும் சட்டங்கள்கூட ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டிருக்கின்றன. எப்படி ஒரு மாநில அரசாங்கம், ஒரேவரியில் தடாலடியாக, மத்தியச் சட்டங்களை ரத்து செய்திட முடியும்?
அரசமைப்புச்சட்டம், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற சட்டங்களை செயலற்றதாக்கும்விதத்தில்,  மாநிலங்கள் பிறப்பிக்கும் அவசரச்சட்டத்திற்கு (ordinance) ஏற்பளிப்பு அளிப்பதற்கு வகைசெய்திடவில்லை.  தொழிலாளர் சம்பந்தப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் தற்போது பல சட்டங்களாலும், ஜனநாயகமுறையில் மேற்கொள்ளப்படும் பரஸ்பர விசாரணை மன்ற தீர்ப்புகளாலும்  நிர்வகிக்கப்படுகின்றன.  இவற்றில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் நடைமுறை சமத்துவம் (procedural equality) அளிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நடைமுறைகள்தான் நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்கின்றன.
ஆயுள் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எதிர்) டி.ஜே. பகதூர் & இதரர்கள் (1980) தீர்வறிக்கையில், உச்சநீதிமன்றம், ஊழியர்களின் பணிநிலைமைகளில் எந்தவிதமான மாற்றங்களும் பேச்சுவார்த்தைகள் அல்லது சட்டத்தின் ஜனநாயக நடைமுறைகள் மூலம் மட்டுமே இருந்திட முடியும் என்று உயர்த்திப்பிடித்திருக்கிறது. மத்திய அரசாங்கம் போனஸ் இல்லை என மறுத்து ஒருதலைப்பட்சமானமுறையில் மேற்கொண்ட முயற்சியை நிராகரித்து, நீதிமன்றம் கூறியதாவது: அடிப்படை விழுமியங்களை நினைவுபடுத்திக்கொள்வதன் மூலமாக மட்டுமே அடிப்படைத் தவறுகளைத் தவிர்த்திட முடியும். fundamental errors can be avoided only by remembering fundamental values” என்றும், இல்லையேல், சட்டவிரோத இடைவெளியே (lawless hiatus) ஏற்படும் என்றும் கூறியிருக்கிறது.
மாநில அரசாங்கங்கள் பிறப்பித்துள்ள ஆணைகளும், அவசரச்சட்டங்களும் ஜனநாயகவிரோதமானவை மற்றும் அரசமைப்புச்சட்டத்திற்கும் எதிரானவைகளாகும். தொழிலாளர்களுக்கு இப்போது இருந்துவரும் நிலைமைகள் தொடர வேண்டும்.
உலக அளவில் இயங்கிடும் நிறுவனங்கள் காலனித்துவத்தின் கருவிகளில் தங்களுடைய மூலக்கூறுகளைப் பெற்றிருந்தன என்பதையும், அவர்களின் பாரம்பர்ய மரபு, சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய மூலதனத்தால் மரபுரிமையாகப்பெற்றவை என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
இத்தகைய காலனியகாலத்திய மனோபாவம் மீண்டெழுவது என்பது சமூகத்திற்கு ஆபத்தான ஒன்று, பலலட்சக்கணக்கான மக்களின் நலன்களுக்கும் எதிரானது, தொழிலாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு இடர் ஏற்படுத்தும் என்பது மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தினருக்கும் இடரினை ஏற்படுத்திடும்.
மூலதனத்திற்கும், தொழிலாளருக்கும் இடையே சமத்துவமற்ற கூட்டுபேர சக்தி உள்ள நிலையில், நாட்டில் உள்ள முறைப்படுத்தும் சட்டங்கள்தான் ஒருவிதமான எதிர்சமநிலையை அளித்து, தொழிலாளர்களின் கண்ணியத்தை உறுதி செய்கிறது. அரசாங்கங்கள், தொழிலாளர்களுக்கான வேலைகளில் மனிதாபிமான நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு உத்தரவாதம் செய்யவேண்டிய அரசமைப்புச்சட்டக் கடமையைப் பெற்றிருக்கின்றன. தொழிலாளர்களின் சுகாதாரம் மற்றும் பலம், பொருளாதார அவசியத்தின் சக்திகளால் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடாது. இவ்வாறு தொழிலாளர் நலச் சட்டங்கள் நாகரிகமான லட்சியங்களைக் கொண்டவைகளாகும். கொரானா வைரஸ் தொற்றைப் பயன்படுத்திக் கொண்டு, ஆட்சியாளர்கள் அவற்றைத் துருப்புச்சீட்டுகளாகப் பயன்படுத்தக் கூடாது.
(கட்டுரையாளர்கள், மதராஸ் உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களாகப் பயிற்சிசெய்து கொண்டிருக்கிறார்கள்.)
நன்றி: The Hindu
தமிழில்: ச.வீரமணி


No comments: