Thursday, May 21, 2020

மத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்:சீத்தாராம் யெச்சூரி



சீத்தாராம் யெச்சூரி
20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஊக்குவிப்புத் தொகுப்பு என்று பிரதமர் நரேந்திரமோடி கம்பீரமாக அறிவித்து, அதன் விவரங்கள் மத்திய நிதி அமைச்சரால் ஐந்து தவணைகளில் அறிவிக்கப்பட்டது. இவர்கள் அறிவித்துள்ள இந்த நிதித் தொகுப்பின்மூலம், மோடியும் பாஜக மத்திய அரசாங்கமும், கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்றையும் அதன்காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சமூக முடக்கத்தையும் தங்களுடைய இந்துத்துவா நிகழ்ச்சி நிரலையும், அரக்கத்தனமான முறையில் நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களையும் மேலும் வெறித்தனமாக அமல்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பது மீளவும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்றை முறியடிக்கிறோம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சமூக முடக்கக் காலம், ஆர்எஸ்எஸ்/பாஜக வகையினரால் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக, அதிலும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக, இந்துத்துவா மதவெறித் தீயை மேலும் தீவிரமாக விசிறிவிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இரண்டாவதாக, இந்தக் காலம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக அமைதியானமுறையில் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடத்தியவர்களில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர்களைத் தாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவர்கள் அரக்கத்தனமான சட்டப்பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் ஒருமுறை, இவர்கள் கைது செய்யப்படுவதில் மத விவரக்குறிப்புகள் விஷத்தனமான முறையில் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன.
மூன்றாவதாக, ஜனநாயக உரிமைகள், சிவில் உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்காகப் போராடுகிறவர்கள் மற்றும் தங்களுக்கு எதிராக மாற்றுக்கருத்துக்களைக் கூறுகிறவர்கள் அனைவரையும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தேசத்துரோகப் பிரிவு, சட்டவிரோத தடைச் சட்டம் (UAPA), தேசியப் புலனாய்வுச் சட்டம் (NIA) ஆகிய அரக்கத்தனமான சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்திற்கு எதிராகவும், அதன் கொள்கைகளுக்கு எதிராகவும் கருத்துக்களைப் பதிவு செய்கிற ஊடகவியலாளர்களும் துன்புறுத்தப்படுகிறார்கள், பலிவாங்கப்படுகிறார்கள் மற்றும் குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குகளில் பதிவு செய்யப்படுகிறார்கள். இவ்வாறு ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் மீதான தாக்குதல்களுடன் சேர்த்து, உழைக்கும் மக்கள், குறிப்பாக தொழிலாளர் வர்க்கம், சட்டரீதியாகப் பெற்றிருந்த உரிமைகள் மீதும் சட்டங்களைத் திருத்துவதன் மூலம் தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறார்கள். சமூக முடக்கக் காலத்தில் தொழிலாளர் நலச் சட்டங்கள் ஒருதலைப்பட்சமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உண்மையில், பாஜக மாநில அரசாங்கங்களில் சில, மூன்று ஆண்டு காலத்திற்கு தொழிலாளர்நலச் சட்டங்கள் அனைத்தையும் ‘சஸ்பெண்ட்’ செய்திருக்கின்றன. இவ்வாறு, கோவிட்-19 குரோனா வைரஸ் தொற்றை எதிர்க்கிறோம் என்ற போர்வையின்கீழ் உழைக்கும் மக்கள் கடுமையாகப் போராடி பெற்ற உரிமைகளின் மீது கூச்சநாச்சமின்றி தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறது.
நான்காவதாக, சமூக முடக்கக் காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு, நம்முடைய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சங்களாக விளங்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் கொள்கைகளுக்கு எதிராக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களின் உரிமைகளை முற்றிலுமாக மறுதலித்துக்கொண்டிருக்கிறது, அதிகாரங்கள் அனைத்தையும் தன்னகத்தே குவித்துக்கொண்டு தன்னை வலுப்படுத்தப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.      இவ்வாறு ஒரு சர்வாதிகார ஒற்றையாட்சி முறையை நிறுவக்கூடிய நடவடிக்கைகளில் வெறித்தனமாக இறங்கி, அனைத்து முடிவுகளும் மத்திய அரசாங்கத்தாலும், பிரதமராலும் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றால் மாநிலங்களின் சுமைகள் தாங்கமுடியாத அளவிற்கு அதிகரித்திருக்கின்றன.
நாடும், நாட்டு மக்களும் குரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்திடவும் அதிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் போராடிக் கொண்டிருக்கிற அதே சமயத்தில், மோடியின் தலைமையின்கீழ் இயங்கிடும் ஆர்எஸ்எஸ்/பாஜக மத்திய அரசாங்கம்  அவர்களின் உண்மையான நிகழ்ச்சிநிரலைப் பின்பற்றிக்கொண்டிருக்கின்றன.
சுய சார்பு அல்ல, மாறாக அடிபணிதல்
இந்தியாவின் சுய சார்பை மேம்படுத்தப்போகிறோம் என்ற பெயரில், மோடியால் பொருளாதார ஊக்குவிப்புத் தொகுப்பு முன்வைக்கப்பட்டிருக்கிறது. மோடிக்கு, எதை அறிவித்தாலும் அது தன்னுடைய சொந்தப் பங்களிப்பு என்பதுபோல் அறிவிக்கும் பழக்கத்தின் அடிப்படையில், இப்போது சுயசார்பு என்பதையும் ஏதோ புதிதான ஒன்று என்பது போலவும் அதனைத் தான் முன்னெடுத்துச்செல்லப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். பொருளாதாரம் மற்றும் அனைத்துத் துறைகளிலும் இந்தியாவில் சுய சார்பு என்கிற கருத்தாக்கம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒருங்கிணைந்த ஓர் அம்சமாக இருந்து வந்திருக்கிறது. தாதாபாய் நௌரோஜி மற்றும் இந்தியாவின் செல்வத்தை பிரிட்டிஷார் சூறையாடிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே, சுதந்திர இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையின் ஒருங்கிணைந்த பகுதியாக சுய-சார்பு இருந்து வந்தது. சுய சார்பு நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைத் தூண்களில் ஒன்றாக விளங்குகிறது.  
ஆனாலும், மோடியின் 20 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பு, இந்தியாவின் சுயசார்பை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, அதனை மேலும் அந்நிய மற்றும் உள்நாட்டிலுள்ள கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கு அடிபணியவைத்திடும் விதத்திலேயே அமைந்திருக்கிறது. இந்த முன்மொழிவுகள் நேரடியாகவே அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்ட வழிவகுத்துத் தந்திருக்கிறது. மேலும் இந்த நடைமுறையில், நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளாக மோடி அரசாங்கம் அமல்படுத்திவரும் கூட்டுக் களவாணி முதலாளித்துவத்தை அருவருப்பான அளவிற்கு வலுப்படுத்தும் விதத்தில் வாய்ப்பு வாசல்கள் மேலும் அகலத் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த முன்மொழிவுகள் அனைத்துமே நாட்டின் சொத்துக்களை மிகப்பெரிய அளவில் சூறையாடுவதற்கானவைகளே தவிர வேறல்ல. நம் நாட்டின் பொருளாதாரத்தின் அனைத்துப் பகுதிகளும் 74 சதவீதம் வரையிலும் இப்போது அந்நிய நேரடி முதலீட்டுக்கு அகலத்திறந்து விடப்பட்டிருக்கிறது. இவற்றில் ராணுவ உற்பத்தித் தளவாடங்களும், அணு எரிசக்தித்துறையும் அடக்கம். அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட இருக்கின்றன. இவை நிச்சயமாக மாபெரும் அளவில் ஊழலுக்கு வழிவகுத்திடும். இவ்வாறு கார்ப்பரேட் நலன்களுக்கு அடிபணியும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிதித்தொகுப்பைத்தான் மோடி-கோவிட்-குணப்படுத்தும் முறை! (Modi-Covid-cure!) எனச் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிதி ஊக்குவிப்புத் தொகுப்பின் விவரங்கள்
கோவிட்-19 குரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அதனையொட்டி மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற பின்னணியிலும் இந்த நிதித்தொகுப்பு மோடி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சுகாதார வசதிகள்: கோவிட்-19 குரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பிரதானமாகச் செய்யவேண்டியது என்னவெனில், நம் சுகாதார அமைப்பு முறைகளையும் அதன் கீழ் இயங்கும் துறைகளையும் வலுப்படுத்துவதேயாகும். சமூக முடக்கம், தொற்றைக் குணமாக்கிடாது. தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும், அதிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கும் நம்மை வலுப்படுத்தவதற்குத் தேவையான தயாரிப்புகளுக்கு போதிய அளவுக்கு அவகாசம் அளிப்பதற்கு மட்டுமே அது பயன்படும்.   இதற்கு நம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் இத்தொற்றிலிருந்து முதலில் அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் தேவையான சுய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கருவிகளை முறையாக அளித்திட வேண்டும். ஆயினும், சமூக முடக்கம் அறிவித்து 50 நாட்கள் கழிந்தபின்பும், இதுநாள்வரையிலும் அவர்களுக்கு இவ்வாறு போதிய அளவுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கதாகும்.
மருத்துவமனைகள்: கொரானா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது என்பதன் பொருள், அதற்குத் தேவையான அளவிற்கு நம் மருத்துவமனைகளில் இத்தொற்றுக்கு சிகிச்சை செய்வதற்கான அளவிற்குக் கணிசமான இடங்களை ஒதுக்க வேண்டும் என்பதாகும். இன்றையதினம் இந்தியாவில் ஆயிரம் மக்களுக்கு 0.8 மருத்துவர்கள் என்ற அளவிலும், 0.7 மருத்துவனைப் படுக்கைகள் என்ற அளவிலும்தான் நிலைமைகள் இருக்கின்றன. இது மிகவும் பரிதாபமான நிலையாகும். சமூக முடக்கக் காலத்தை, நம் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனாலும், இந்தத் திசைவழியில் மோடி அரசாங்கம் எதுவுமே செய்யாமல் இருக்கிறது. உலகில் பல நாடுகள், தங்கள் நாடுகளிலிருந்த தனியார் மருத்துவமனைகளை, கொரானா வைரஸ் தொற்று சவாலை சமாளிப்பதற்காக, பொது உபயோகத்திற்குப் பயன்படுத்திட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கின்றன. ஆனால் இந்தியாவில் அதுபோன்று எவ்விதக் கட்டளையையும் மோடி அரசாங்கம் பிறப்பித்திடவில்லை. கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிர்களைப் பாதுகாத்திட மிகவும் அவசியமாகத் தேவைப்படும் வென்டிலேடர்கள் போதுமான அளவிற்கு நம் நாட்டில் இல்லை, கடும் பற்றாக்குறை நீடிக்கிறது.
சோதனைகள்: சமூக முடக்கக் காலத்தில், மக்களில் எவருக்கேனும் ‘பாசிடிவ்’ எனப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்து பார்த்திட, மிகப்பெரிய அளவில், பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதுவும் நடந்திடவில்லை. இன்றையதினம், இந்தியா, உலகில் மிகவும் குறைவான அளவில் சோதனை செய்து பார்க்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்துவருகிறது. நம் நாட்டில் பத்து லட்சம் மக்களில் 1700 பேர் என்ற அளவில்தான் சோதனை செய்து பார்க்கப் பட்டிருக்கிறார்கள். பல நாடுகள் பத்து லட்சம் பேர்களில் ஒரு லட்சம் பேர்களை சோதனை செய்து பார்த்திருக்கின்றன. ஸ்பெயின், பத்து லட்சம் பேர்களில் 50 ஆயிரம் பேர்களுக்கும் மேலாக சோதனை செய்து பார்த்திருக்கிறது. சீனாவில், கொரானா வைரஸ் முதன்முதன் கண்டுபிடிக்கப்பட்ட வூஹான் பகுதியில் இரண்டாவது அலை ஏற்பட்டிருப்பதை எதிர்கொள்வதற்காக, இப்போது, மீண்டும் அனைவரும் சோதனை செய்து பார்க்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் எங்கே குரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருக்கிறது என்பதையும், எங்கே அது மிக வேகமாகப் பரவுகிறது என்பதையும் கண்டறிந்து அதிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்தாக அவர்களைத் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிப்பதற்கு, சோதனைகள் செய்து பார்க்கப்பட வேண்டியது அவசியம். இதுவும் இங்கே நடைபெறாதது, மிகவும் வருந்தத்தக்கதாகும். சமூக முடக்கம் அறிவிக்கப்பட்ட சமயத்தில் இந்தியாவில் உள்ள 91 மாவட்டங்களில் 191 பேர் ‘பாசிடிவ்’ எனக் கண்டறிப்பட்டு பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார்கள். இன்றையதினம் 550 மாவட்டங்களில் லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மே 8ஆம் தேதிக்குப் பின்னர், சராசரியாக 3600 பேர், ‘பாசிடிவ்’ எனக் கண்டறியப்பட்டு, தொற்றுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறாக, குரானா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்றவிதத்தில் நம் திறன்களை வலுப்படுத்திக் கொள்வதற்கு சமூக முடக்கக் காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளாமல், மோடி அரசாங்கத்தால் வீணடிக்கப்பட்டிருக்கிறது.
அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பு முறை கைவிடப்பட்டிருக்கிறது
எதார்த்த நிலை இப்படி இருந்தபோதிலும், சுகாதார இந்தியாவை உருவாக்குவதற்கு மிகவும் அடிப்படைத் தேவையாக விளங்கும்,  அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பு முறையை உருவாக்குவதற்கு, இப்போது மோடி அரசாங்கம் அறிவித்திருக்கிற நிதித்தொகுப்பு அநேகமாக எதுவுமே செய்திடவில்லை. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மிகச்சிறந்த சுகாதாரப் பாதுகாப்புத் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று பேசினார்களேயொழிய, அவற்றை உருவாக்குவதற்காக ஒரு காசு கூட ஒதுக்கீடு செய்திடவில்லை. இன்றையதினம் மத்திய அரசு, சுகாதாரத்திற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே செலவு செய்கிறது. இப்போது வெளியிடப்பட்டிருக்கிற நிதித்தொகுப்பு மூலம் இதனைக் குறைந்தபட்சம் 3 சதவீதமாகவாவது உயர்த்தி இருக்க வேண்டும். ஆனாலும், மோடி அரசாங்கம், இந்தியாவின் ஏழை மக்களுக்கு உதவி, நிவாரணம் அளித்து அவர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதைவிட, அதனுடைய சொந்த நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதிலேயே சுறுசுறுப்பாக இருக்கிறது.
மக்களின் நிலைமைகள்: இந்த நிதித்தொகுப்பு வந்திருக்கும் பின்னணியின் இதர அம்சம் மக்களின் நிலைமைகள் ஆகும். இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இரண்டாகப் பிரிந்ததற்குப்பின்னர், இந்த அளவிற்கு மிகப் பெரிய அளவில் மக்கள், தங்கள் சொந்த இடங்களுக்குப் போய்ச் சேருவதற்காக, பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரம் நடந்து செல்வது என்பதைப் பார்த்திருக்கவில்லை.  இதில் பலர் தங்கள் உயிர்களை இழந்திருக்கிறார்கள். இன்றும் நடந்துகொண்டிருக்கிறார்கள்.  ஐம்பது நாட்களுக்கும் மேலாக லட்சக்கணக்கானவர்கள் பசி-பட்டினியுடன், மிகவும் சோர்வடைந்து, பல இடங்களில் விபத்துக்களுக்கு ஆளாகி இன்னமும் நடந்து கொண்டிருக்கிறார்கள். நம் சொந்தச் சகோதர சகோதரிகளுக்கு, போக்குவரத்து வசதிகளை இலவசமாகத் தருவதற்கு, மோடி அரசாங்கம் மறுத்திருக்கிறது. இப்போது இவர்கள் வெளியிட்டுள்ள நிதித்தொகுப்பும், இன்றையதினம் இந்தியச் சாலைகள், முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சந்தித்துக் கொண்டிருக்கும் மனிதகுலத்தின் துயரார்ந்த அவலக் காட்சிகளைத் துடைத்தெறிய எதுவும் செய்திடவில்லை. அதேபோல், மக்களின் மத்தியில் அதிகரித்துக் கொண்டிருக்கும் பசிக்கொடுமையைப் போக்குவதற்கும் எதையும் அறிவித்திடவில்லை.
வேலையின்மைக் கொடுமை: இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (CMIE-Centre for Monitoring Indian Economy) சமூக முடக்கக் காலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 14 கோடியாக அதிகரித்திருப்பதாக மதிப்பிட்டிருக்கிறது. நகரங்களில் பத்து தொழிலாளர்களில் எட்டு பேர் தாங்கள் பார்த்து வந்த வேலைகளை இழந்துவிட்டதாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் மதிப்பிட்டிருக்கிறது.  நாட் கூலிப் பெற்று வந்தவர்கள், சிறிய பெட்டிக்கடை வர்த்தகர்கள், தலையில் சுமந்து வர்த்தகம் செய்தவர்கள் கோடானுகோடி பேர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்திருக்கின்றனர். திறன்படைத்த தொழிலாளர்கள் (skilled workers), ஊடகவியலாளர்கள் பலரும் தங்கள் வேலைகளை இழந்திருக்கிறார்கள் அல்லது ஊதிய வெட்டை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிதித்தொகுப்பு இவர்களின் துயர் துடைத்திட போதுமான அளவில் எதுவும் செய்திடவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கைகள்
இந்தப் பின்னணியில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வருமானவரி செலுத்த வேண்டிய நிலையில் இல்லாத, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அடுத்த மூன்று மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் 7500 ரூபாய் ‘நேரடி ரொக்க மாற்று’ (Direct Cash transfer) செய்திட வேண்டும் என்று கோருகிறது. இது, அவர்கள் உயிருடன் நீடித்திருப்பதற்கு அவர்கள் கைகளில் கொஞ்சம் பணம் இருப்பதற்கு உதவிடும். மேலும், பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைவு பரவிவருவதன் காரணமாக, தேவைப்படும் அனைவருக்கும் உணவு தான்யங்கள் இலவசமாக அளிக்கப்பட வேண்டியது அவசியத் தேவையாகும். ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு மாதத்திற்கும் 10 கிலோ உணவு தான்யங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இதற்கு மத்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் உள்ள 7 கோடியே 70 லட்சம் டன்கள் உணவு தான்யங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் இல்லங்களுக்கு போக்குவரத்து வசதிகளை இலவசமாக செய்துகொடுத்து அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
நிதி ஊக்குவிப்புத் தொகுப்பு
நிதி ஊக்குவிப்பு என்பதன் வரையறையின்படி, ஆட்சி புரிந்திடும் அரசாங்கம் நிதியாண்டிற்காக பட்ஜெட் செலவினத்தில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையைவிட கூடுதலாக செலவிடுவது என்பது பொருளாகும். அறிவிக்கப்பட்டிருக்கிற தொகுப்பில் பெரும்பாலானவை ஏற்கனவே அறிவித்த திட்டங்களேயாகும். அவை மறுபடியும் மேலும் ஒரு கட்டுப்போட்டு அளிக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான். இதில் கொடுக்கப்பட்டிருக்கிற அழுத்தம், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் கடன்கள் அளிக்கப்படும் என்பதைத் தவிர அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் நேரடிச் செலவினம் என எதுவும் கிடையாது. மிகவும் சரியாகச் சொல்வதென்றால், இவை அனைத்தும் நாட்டின் நிதிக் கொள்கையின் அடிப்படை அம்சங்களாகும். இவை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட வேண்டியவைகளாகும்.
இவர்கள் அறிவித்திருக்கிற நிதித் தொகுப்பில் உண்மையில் கூடுதலான செலவினம் என்பதைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, அது 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாகவே வருகிறது. அதாவது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவு. பல்வேறு பொருளாதார மேதைகள் பலவிதங்களில் கணக்கிட்டு, அரசாங்கத்தின் உண்மையான செலவினம் மற்றும் அது அறிவித்துள்ள அனைத்தும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.8 சதவீதத்திற்கும் 1.5 சதவீதத்திற்கும் இடையேதான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். இந்த ஊக்குவிப்புத் தொகுப்பு, இன்றைய நிலைமைகளில் எந்த ஊக்குவிப்பையும் அளிக்கப் போவதில்லை.
இந்த ஆண்டு, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள பட்ஜெட் செலவினம்,   30 லட்சத்து, 42ஆயிரத்து, 230 கோடி ரூபாய்களாகும். ஓர் ஊக்குவிப்பு என்பது, இதைவிடக் கூடுதல் தொகை என்று பொருளாகும். இவர்கள் பட்ஜெட்டில் அறிவித்த செலவினங்களையே செய்திருக்கிறார்களா, இல்லையா என்று எவருக்கும் தெரியாது. அரசாங்கத்தின் வருவாய்கள், கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்று வருவதற்கு முன்பே கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பது தெளிவாகும். சமூக முடக்கக் காலத்தில் அது மேலும் மோசமாக மாறியிருக்கிறது. எனவே, இவர்கள் அறிவித்துள்ள கூடுதல் செலவினமும் எந்த அளவிற்கு மேற்கொள்ளப்படும் என்பதும் மிகவும் நிச்சயமற்ற தன்மையேயாகும்.   கண்டிப்பாகச் சொல்லவேண்டுமென்றால், அரசாங்கம், அறிவித்துள்ள ஊக்குவிப்பு உண்மையில் மேற்கொள்ளப்படுகிறதா, இல்லையா என்பதை மதிப்பிடுவதற்கு, அது தன்னுடைய வருவாய்கள் மற்றும் செலவினங்களை காட்டும் பட்ஜெட் அறிக்கையை அறிவித்திட வேண்டும்.
முழுவீச்சில் தனியார்மயம் மற்றும் தாராளமயம்
நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருப்பதைப்போல, அனைத்துத் துறைகளும் அந்நிய நேரடி முதலீட்டிற்கும், உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கும், இப்போது அகலத் திறந்துவிடப்பட்டிருக்கின்றன. இந்தத் தனியார்மயம், நாட்டின் சொத்துக்களை அரசாங்கத்தின் தினச் செலவுகளுக்காக விற்பனை செய்வது போன்றதாகும். இது, ஓர் விவசாயி தன்னுடைய தினசரி செலவுகளுக்காக, தன்னுடைய நிலத்தை விற்பது போன்றதாகும். இச்செயல் பொருளாதார அறிவுடனும் செய்யப்படவில்லை, சாமானியப் பொது அறிவுடனும் கூட செய்யப்படவில்லை. எனினும், இது இரக்கமற்ற கொள்ளை லாப வேட்டைக்கான பாதையாகும். 
இவ்வாறு நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதற்கு, தொழிலாளர் வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு வந்துவிடக் கூடாது என்பதை உத்தரவாதப்படுத்துவதற்காகத்தான், எட்டு மணி நேர வேலை மற்றும் தொழிலாளர் வர்க்கம் கடுமையாகப் போராடிப் பெற்ற முக்கியமான உரிமைகள் அனைத்தையும் உள்ளடக்கிய தொழிலாளர் நலச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது, வெளிப்படையான சூறையாடல் மற்றும் சர்வாதிகாரத் தாக்குதல்களின் ஒரு கூட்டுக் கலவையாகும்.
வேளாண்மை: பொது முதலீடுகளின் மூலமாக விவசாய நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மீண்டும், விவசாயிகளுக்குக் கடன் வசதிகள் செய்துதரப்படும் என்று கூறியிருக்கிறார்கள். விவசாயிகள், ஏற்கனவே பெற்ற கடன் சுமைகளிலிருந்து மீளமுடியாமல் தற்கொலைகளைச் செய்துகொண்டிருக்கக்கூடிய தருணத்தில், புதிய கடன்களை அவர்கள் பெற முன்வருவார்களா என்பது அநேகமாக சந்தேகம்தான்.
இந்தத் தருணத்தில் என்னசெய்ய வேண்டும்? அறுவடைக் காலம் வந்திருக்கிறது. அறுவடை செய்த பயிர்கள் அரசாங்கத்தால் குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்து கொள்முதல் செய்யப்படாமல் இருக்கின்றன. இது குறித்தெல்லாம் ஒருவார்த்தை கூட இந்தத் தொகுப்பில் காணப்படவில்லை. அடுத்த விவசாயப் பருவமும் ஜூன் மாதத்தில் துவங்க இருக்கிறது. விதைகள் மற்றும் இடுபொருட்கள் பற்றாக்குறை கடுமையாக இருக்கிறது. விவசாயிகளுக்கு இவற்றையெல்லாம் அளிப்பதற்கு எந்த நடவடிக்கையும் இந்தத் தொகுப்பில் இடம்பெறவில்லை.    
 இந்தத் தொகுப்பில்  குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகள், சந்தைகள் குறித்தெல்லாம் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது இருந்துவரும் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தைக் கிழித்தெறிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்மூலம் உணவு தான்யங்கள் மாநிலங்களுக்கிடையே முறைப்படுத்தப்படாத விலைகளின் அடிப்படையில் விற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்றன. இது, எதிர்காலத்தில் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திடும். 
மாநிலங்களின் மீதான தாக்குதல்கள்
கொரானா வைரஸ் தொற்றை எதிர்த்து முறியடித்திடும் நடவடிக்கைகளில் மாநில அரசாங்கங்கள் முன்னணியில் நிற்கின்றன. அவற்றுக்கு உரிய வாய்ப்பு வசதிகளைச் செய்து தரவில்லை என்பது மட்டுமல்லாமல், இந்த நிதித்தொகுப்பானது அவர்களுக்கு சட்டப்படி அளிக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலைவைத் தொகைகள் அளிக்கப்படும் என்கிற உத்தரவாதத்தைக்கூட அளித்திடவில்லை. மாநில அரசாங்கங்கள் தற்போது தங்களுடைய மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 முதல் 5 சதவீதம் வரை கடன்பெறும் வரம்பை (borrowings) உயர்த்திக்கொள்ளலாம் என்று அனுமதித்திருக்கிறது. எனினும், இவ்வாறு வரம்பை உயர்த்தியிருப்பதன் பொருள் அநேகமாக எதுவும் கிடையாது. ஏனெனில், இவ்வாறு உயர்த்தியிருக்கும் கடன் வரம்பு, வணிக அடிப்படையில்தான் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அதிக வட்டி விகிதத்தில் மாநிலங்களைத் தள்ளி இருப்பது அவற்றுக்கு பெரிய அளவில் கடன் சுமைகளை ஏற்படுத்திடும். இந்திய ரிசர்வ் வங்கி மாநில அரசாங்கங்களால் வெளியிடப்படும் பத்திரங்களை ‘பிரகடனம் செய்யப்படும் ரெபோ விகிதத்தில்’ (declared repo rate) வாங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்தத் தொகுப்பு இது தொடர்பாக எதுவும் கூறவில்லை. எல்லாவற்றையும்விட மோசமான விஷயம் என்னவென்றால், மத்திய அரசாங்கம் தற்போது பேரிடர் நிவாரண நிதியத்தின்கீழ்  சட்டப்படி அளிக்கப்பட வேண்டிய மாற்றல்களைக் (statutorily mandated transfer) கூட, மாநிலங்களுக்கு ஓர் ஊக்குவிப்புத் தொகுப்பாக அளித்ததாக, அல்லது, மத்திய அரசு, மாநில அரசுகள்மீது காட்டிய தாராளம் என்பதுபோல் தம்பட்டம் அடித்துக்கொள்கிறது. மத்திய அரசாங்கம், பிஎம்கேர்ஸ் (PM CARES) என்னும் பெயரில் ஏற்படுத்திய தனியார் அறக்கட்டளையின்கீழ்  வசூலித்துள்ள ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களிலிருந்து, மாநிலங்களுக்கு குரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்காக நிதி உதவிகளைச் செய்திட வேண்டும்.
இந்த நிதித்தொகுப்பின் பல்வேறு அம்சங்கள் ஆய்வுசெய்து பார்க்கப்படும் போது, இவற்றில் பல நீண்டகால நடவடிக்கைகளாக இருப்பதையும், நாட்டின் பொருளாதாரத்திற்கோ, அல்லது, அவதிப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கோ, உடனடி ஊக்குவிப்பு அளிக்கக்கூடிய விதத்தில் எதுவும் இல்லாமல் இருப்பதையுமே காட்டுகின்றன. நிதித் தொகுப்பின் இதர அம்சங்கள் குறித்து தனியே ஆய்வு செய்யப்படும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொருளாதார செயல்திட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நடப்பு நிலைமையில் பின்பற்றப்பட வேண்டிய, பொருளாதார செயல்திட்டம் ஒன்றை பொதுவெளியில் வெளியிட்டு, அதில் தன்னுடைய பரிந்துரைகளையும் தெரிவித்திருக்கிறது. அதனைக் குடியரசத் தலைவர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறது. அதில் நாம், அரசாங்கத்தால் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பொருளாதாரத் திட்டம் என்ன என்பதை முன்வைத்திருக்கிறோம். பொருளாதார நெருக்கடியும் அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தாங்கொணா வேதனைகளும் தீர்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள், இடைக்கால நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் என்ன என்று அதில் குறிப்பிட்டிருக்கிறோம். இந்த மூன்று நடவடிக்கைகளையும்  இப்போது எடுத்திட வேண்டும்.
மத்திய அரசாங்கம் நமது பொருளாதாரத்தையும், மக்கள் நலனையும் சரி செய்ய நாம் அளித்துள்ள இந்த முன்மொழிவுகளை உடனடியாக உரிய அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. 
இந்த நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம் உடனடியாக மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து நிர்பந்தங்களையும் அனைத்து மக்களும், அரசியல் கட்சிகளும், மக்கள் இயக்கங்களும் ஒன்றிணைந்து அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி கேட்டுக் கொள்கிறது.” 
இந்த செயல்திட்டம், இந்தியப் பொருளாதாரத்தைப் பீடித்துள்ள அடிப்படை பிரச்சனை என்ன என்பதை சரியாக அடையாளம் காட்டியது. இந்தியப் பொருளாதாரம் ஏற்கனவே, குரோனா வைரஸ் தொற்று வருவதற்கு முன்பே, பொருளாதார மந்த நிலைக்குள் (recession ) நுழைந்துவிட்டது. இதன் காரணமாக மக்களின் தேவைகள் அனைத்து அளவிலும் கூர்மையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மக்களின் வாங்கும் சக்தி மிகவும் கூர்மையாக வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, பொருளாதாரத்தில் கிராக்கி இன்மை (lack of demand) ஏற்பட்டு, ஏராளமான தொழில் பிரிவுகள் மூடப்படுவதற்கும், பெரிய அளவில் வேலை இழப்புகள் ஏற்படுவதற்கும் இட்டுச்சென்றன. இந்த நிலைமை தேசிய சமூக முடக்கக் காலத்தில் மேலும் மோசமாகியது. ஆகையால், மக்களின் கைகளில் வாங்கும் சக்தியை அதிகரிக்கக்கூடிய விதத்தில் பொருளாதாரத்தை புதுப்பித்திட வேண்டிய முக்கிய பிரச்சனையை உடனடியான, குறுகிய கால மற்றும் நீண்டகாலப் பொருளாதாரத் திட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பொது முதலீடுகள்: இதனை கடன்கள் அளிப்பதன் மூலமாகச் செய்திடாமல், அரசாங்கம் நேரடியாக செலவு செய்வதன் மூலமாகவே மேற்கொள்ள முடியும். நம் நாட்டிற்கு அதிக அளவில் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டி எழுப்பிட மிகப்பெரிய அளவில் பொது முதலீட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவற்றை தனியார் மூலதனத்திடம் ஒப்படைப்பது என்பது எப்போதும் வெற்றி பெற முடியாது. ஏனெனில் அவர்கள் இவற்றுக்காக முதலீடு செய்வதிலிருந்து லாபத்தை எடுப்பதற்கு வெகு காலமாகும் என்பதால், அவர்கள் இதற்காக கடன்களை எழுப்புவார்கள். எனவே, உலகில் வளர்ச்சி அடைந்துள்ள நாடுகள் அனைத்துமே – அமெரிக்காவிலிருந்து மக்கள் சீனக் குடியரசு  வரையிலும் – அரசாங்கங்கள்தான் பொது முதலீடுகள் மூலமாக உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டி எழுப்புவதில் பிரதான பங்கினை ஆற்றி இருக்கின்றன. இன்றைய நிலைமைகளில் எவ்விதமான நிதித் தொகுப்பாக இருந்தாலும் இத்தகைய அணுகுமுறைதான் இருந்திட வேண்டும்.
இத்தகைய பொது முதலீடுகள் உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டி எழுப்பிட,  கோடானுகோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இட்டுச் செல்லும். தொழிலாளர்கள் தாங்கள் ஈட்டிய ஊதியங்களைச் செலவு செய்யத் தொடங்கிவிட்டார்களானால், உள்நாட்டுத் தேவை உயரத் தொடங்கிடும், பின்னர் அதன் காரணமாக, மூடிய தொழிற்சாலைகளும் மற்றும் நுண்ணிய சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளும் மீளவும் திறக்கப்படுவதற்கும் இட்டுச் செல்லும்.
இவற்றைச் செய்வதற்குப் பதிலாக இந்த அரசாங்கத்தின் நிதித்தொகுப்பு, கார்ப்பரேட்டுகளுக்கும் மற்றும் நுண்ணிய சிறிய மற்றும் நடுத்தர தொழில்பிரிவுகளுக்கும் முதலீடு செய்வதற்காகப் பெரிய அளவில் மூலதனத்தை அளிப்பதன் மீது கவனம் செலுத்தி இருக்கிறது. லாபம் கிடைக்கும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே எவரும் முதலீடு செய்திட முன்வருவார்கள். பொருளாதாரத்தில் கிராக்கி (demand) இல்லை என்கிறபோது, இத்தகைய முதலீடுகளின் மூலம் உற்பத்தியாகும் பொருள்கள் உள்நாட்டில் விற்க முடியாது. அவற்றை சர்வதேச அளவிலும் விற்க முடியாது. ஏனெனில உலகப் பொருளாதார நிலைமையும் மந்தமாகவே இருக்கிறது.
எனவே லாபம் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகளே இருக்க முடியாது.  எவ்வளவுதான் அரசாங்கம் நிதியைக் கொட்டிக்கொடுத்தாலும், எவ்வளவுதான் அத்தகைய நிதிச் செலவினத்தைக் குறைத்தாலும், பொருளாதாரத்தில் கிராக்கி இல்லையேல் அவற்றால் வேலை செய்ய முடியாது.
எனவே, மோடியின் 20 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பால் நம் பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்ட முடியாது. எனினும் இந்த நிதித்தொகுப்பின் உண்மையான நோக்கம், நாம் முன்பே கூறியதுபோல், முன்பு அறிவித்த திட்டங்களுக்கான மறுதொகுப்பேயாகும். மேலும், கொரானா வைரஸ் தொற்றாலும், சமூக முடக்கத்தாலும் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு மிகப்பெரிய அளவில் துன்ப துயரங்களை அளித்து அவர்களைச் சுரண்டல்களுக்கு உள்ளாக்கிடும் அதே சமயத்தில், நாட்டின் சொத்துக்களை எந்த அளவிற்கு வேகமாகச் சூறையாட முடியுமோ அந்த அளவிற்குச் சூறையாட வேண்டும் என்பதுமேயாகும்.
இவர்களின் இந்தப் பாதை, இந்தியாவின் பொருளாதார சுயசார்பின் நலன்களுக்கு எதிரானதாகும். இந்தப் பாதை, இந்திய மக்களின் நலன்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் வளத்திற்கு எதிரானவைகளாகும். இந்தப் பாதை கூட்டுக் களவாணி முதலாளித்துவத்திற்கு வசதி செய்து கொடுக்கும் பாதையாகும். அதன் மூலம் ஆளும் கட்சிக்கும் தெளிவாகத் தெரியக்கூடிய விதத்தில் ஆதாயங்கள் கிடைத்திடும் என்பதில் ஐயமில்லை. இந்த மக்கள் விரோதப் பாதையை ஏற்க முடியாது.
இப்போது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக முடக்கக் காலத்தின்கீழ், குரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் இப்போதைய நிலைமையில், நாட்டின் கோடானுகோடி மக்களின் உடனடித் தேவைகளுக்கு உடனடியாக உதவிடும் விதத்தில், இந்த அரசாங்கம் இந்தப் பாதையில் செல்வதை மாற்றுவதற்குத் தேவையான அளவுக்கு மக்களின் நிர்ப்பந்தங்களை வலுப்படுத்திட வேண்டும்.            
(தமிழில்:ச.வீரமணி)   



No comments: