Tuesday, May 12, 2020



புலம்பெயர் தொழிலாளர்கள் உரியமுறையில் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்
வருமானவரி செலுத்தாத ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதம் 7500 ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு அளிக்க வேண்டும்
ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு 10 கிலோ உணவு தான்யங்கள் வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அளித்திட வேண்டும். இவை அனைத்தையும் உடனடியாகச் செய்திட வேண்டும்.
சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தல்
புதுதில்லி, மே 12-
 புலம்பெயர் தொழிலாளர்கள் உரியமுறையில் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், வருமானவரி செலுத்தாத ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதம் 7500 ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு அளிக்க வேண்டும், ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு 10 கிலோ உணவு தான்யங்கள் வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அளித்திட வேண்டும். இவை அனைத்தையும் உடனடியாகச் செய்திட வேண்டும். இம்மூன்று கோரிக்கைகளையும் உயர்த்திப்பிடித்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) முகநூல் காணொளிக்காட்சிமூலம் நடைபெற்றது. அப்போது சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
இன்று இரவு நமது பிரதமர் மீண்டும் தொலைக்காட்சியில் எட்டு மணிக்குப் பேசப் போவதாக கூக் கூறியிருக்கிறார்கள். அவர் என்ன சொல்லப் போகிறார்? நமக்குத் தெரியாது. அந்த சமயத்தில் அவர் சொன்ன பிறகுதான் தெரியும். நேற்று காணொளிக்காட்சி நடைபெற்ற முதல்வர்கள் கூட்டத்தில் பல பரிந்துரைகள் வந்தன. பல மாநிலங்களில் பல முதலமைச்சர்கள் தங்களுக்கு நிதி தேவை என்பதை வலியுறுத்தி இருக்கிறார்கள். அதேபோன்று பல முதலமைச்சர்கள், சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டபோது, தங்களைக் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.
புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனை, மாநில அரசுகளே சமாளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எந்த உதவியும் மத்திய அரசு இதற்காகச் செய்திடவில்லை. இவ்வாறு நிலைமைகள் இருக்கக்கூடிய நிலையில்தான் இன்றிரவு பிரதமர் தொலைக்காட்சியில் பேசப்போகிறார். அவர் என்ன சொல்லப் போகிறார், எவருக்கும் தெரியாது. இதுவரையிலும் தெரியாது.
சமூக முடக்கம் தொடங்கி இன்றுடன் 49 நாட்கள் கடந்துவிட்டன. சமூக முடக்கம் துவங்கிய சமயத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 566. இப்போது 49 நாட்களுக்குப்பின் அது 70756, இன்றைய தினம் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,293.
சமூக முடக்கத்தைப் பயன்படுத்தி நாம் என்ன சாதித்திருக்க முடியும்?
உண்மையிலேயே இதனைப் பயன்படுத்திக்கொண்டு மேலும் சிறந்த முறையில் அனைத்து மக்களையும் சோதனை செய்திருந்தால், இதனை மேலும் மிகச்சிறப்பாகக் கட்டுப்படுத்தி இருக்க முடியும். பல விஷயங்களை இது வரை செய்யவில்லை. குறைந்தபட்சம் இப்போதாவது செய்ய வேண்டும். செய்ய முடியும். செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
நேற்றையதினம் முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் பேசும்போது, இந்தியா இது தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகளை உலகம் பாராட்டியதாகக் குறிப்பிட்டார். அவர்கள் குறிப்பிட்டது கேரளாவைப் பற்றி. கேரளா மாடல், உலகளாவியமுறையில் அங்கீகரிக்கப்பட்டு ஏற்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் 35 சர்வதேச  புகழ்பெற்ற செய்தியேடுகள் தங்கள் முதல் பக்கத்திலேயே, எப்படிக் கேரளா மிகவும் வலுவான முறையில் கொரானா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தி இருக்கிறது என்று  பாராட்டியிருக்கின்றன.
கேரளா இதனைச் செய்யும்போது, மற்ற மாநிலங்கள் ஏன் செய்ய முடியாது? இதற்கு உங்களுக்குச் சரியான தரவுகள் தேவை. பின்னர் அதன்மீது அறிவியல்பூர்வமான அணுகுமுறை தேவை. அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும். அவ்வாறு இதுநாள்வரையிலும் எதுவும் செய்யப்படவில்லை.
நிலைமைகள் இவ்வாறிருக்கும் அதே சமயத்தில் இப்போது உங்களுடன் நான் பகரவிருக்கும் மிக முக்கியமான மற்றொரு விஷயம் என்னவென்றால், ஆட்சியாளர்களுக்கு இதைவிட வேறொரு முக்கியமான நிகழ்ச்சிநிரல் வைத்திருக்கிறார்கள் என்பதாகும்.
கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்றை எதிர்த்து முறியடிப்பதுதான் நம் அனைவருக்கும் மையமான பிரச்சனையாக இருக்கிறது. இதில் எவ்விதமான சமரசத்திற்கும் இடமில்லை. இதனை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் நாடும், நாட்டு மக்களும், அரசாங்கமும் செயல்படவேண்டும். அவ்வாறு செயல்பட்டு, இறப்போர் எண்ணிக்கையை எவ்வளவுக்குக் குறைக்க முடியுமோ அவ்வளவுக்குக் குறைத்திட வேண்டும். இதிலிருந்து ஏதேனும் விலகல் இருக்குமாயின், துரதிர்ஷ்டவசமாக அது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல. ஆனால், அவ்வாறுதான் இந்த அரசு செயல்பட்டுக்கொண்டிருப்பதுபோன்று தோன்றுகிறது.
கடந்தசில நாட்களாக நாம் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறோம்? அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசிடம் குவிக்கப்பட்டிருக்கின்றன. மாநில அரசுகளிடம் எதுவும் கேட்பதில்லை. தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்தும், குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில், தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. 8 மணி நேர வேலை 12 மணி வேலையாக மாற்றப்பட்டிருக்கிறது. பெரிய அளவில் வேலை இழப்புகள், பணி இறக்கங்கள், ஊதிய வெட்டுகள். இவ்வாறு தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ள அதே கார்ப்பரேட்டுகள்தான் பிரதமருக்கு, அவரது பிஎம்கேர்ஸ் நிதிக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்தியிருப்பது, சீர்திருத்தம் அல்ல மாறாக படுபிற்போக்குத்தனமாக மாற்றியிருப்பதை அனுமதிக்க முடியாது. இது எதிர்த்து முறியடிக்கப்படும்.
அதேபோன்று விவசாயத்துறையிலும் நிலங்களை, கார்ப்பரேட்டுகள் நேரடியாக வாங்கக்கூடிய விதத்தில் முடிவுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளுக்கு இருந்துவரும் பாதுகாப்புச்சட்டங்கள் அனைத்தும் ஓரங்கட்டப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக எண்ணற்ற சட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள். இவற்றை ஏற்க முடியாது. இவை எதிர்த்து முறியடிக்கப்படும். இவை அனைத்தும் நாட்டிலுள்ள சமத்துவமின்மையை அதிகப்படுத்திடும்.
பல பத்தாண்டுகளாகக் கடுமையாகப் போராடிப் பெற்ற தொழிலாளர்கள், விவசாயிகள் உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை அனுமதிக்க முடியாது.
அடுத்து, இந்தக் காலகட்டத்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மாற்றுக்கருத்தைக் கூறுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது தேசத்துரோகச் சட்டம் பாய்கிறது. செய்தியாளர்களுக்கு எதிராக அது பாய்கிறது, சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக அது பாய்கிறது, அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிற எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக அது பாய்கிறது. அவர்கள் அனைவரும் சட்டவிரோத தடைச்  சட்டம் அல்லது தேசியப் புலனாய்வுச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சிறைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. உச்சநீதிமன்றம்கூட கொரானா வைரஸ் தொற்றிலிருந்து சிறைவாசிகளைக் காப்பாற்றுவதற்காக அவர்களை பிணையில் அல்லது பரோலில் வெளியேற்றுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது.
அடுத்து குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகைப்பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அமைதியான முறையில் போராடியவர்களை இப்போது இத்தகைய அரக்கத்தனமான சட்டங்களின்கீழ் கைது செய்திருக்கிறார்கள்.
‘இதுவா கொரானா வைரஸ் தொற்றை எதிர்க்கும் நடவடிக்கைகள்? இந்த நோயை எதிர்த்து ஒரேவிதமான சிந்தனையுடன் போராட வேண்டும் என்பது இதுதானா?
இவ்வாறு இவர்களின் உண்மையான நிகழ்ச்சிநிரல் என்பது வேறாக இருக்கிறது.
அதீதமாக அதிகாரங்கள் குவிப்பு, இப்போதைய அரசமைப்புச் சட்டத்தை மறுதலித்தல், தொழிலாளர் நலச்சட்டங்கள் ஒழிப்பு, விவசாயிகள் பாதுகாப்புச்சட்டங்கள் ஒழிப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மிரட்டல், ஒரு குறிப்பிட்ட சமூக இனத்தினரை மட்டும் குறிவைத்துத் தாக்குதல் – ஆகிய இவை அனைத்தும் அதிர்ச்சியளிக்கக்கூடியவைகளாக இருக்கின்றன. இவ்வாறு மதவெறிதீயை ஒரு சமூகத்தினருக்கு எதிராக விசிறிவிடுவது இவர்களின் அடிப்படை நிகழ்ச்சிநிரலாக இருந்துவருகிறது.
இந்த அரசு கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடுகிறதா? அல்லது நாட்டு மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் விதத்தில் செயல்படுகிறதா?
இன்று நாட்டு மக்கள் முன்பு, அடிப்படையாக மூன்று பிரச்சனைகள் மிகவும் முக்கியமாகத் தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது. முதலாவதாக, புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனை. இன்றைக்கும்கூட லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள். பசி, பட்டினி. அவர்கள் போகிற பாதையில் அரசு நிறுவனம் ஒன்றுகூட முன்வந்து அவர்களுக்கு உதவிடவில்லை. அவர்கள் போகிறபாதையில் எங்கெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதோ அங்கே அவர்களுக்கு உதவிகள் செய்யப்படுகின்றன. உச்சநீதி மன்றத்தில் மார்ச் 31 அன்று இந்த அரசு என்ன சொல்லியது? நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களே இல்லை என்று சொல்லியது. உச்சநீதிமன்றமும் அப்படியே அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஏதேனும் ரயிலில் ஏறி ஊர்ப்போய்ச் சேரமுடியாதா என்ற ஏக்கத்துடன் ரயில் பாதைகளில் அவர்கள் நடந்து செல்கிறார்கள். அவர்கள்மீது ஓடும் ரயில்கள் ஏறி பிணமாகத்தான் அவர்கள் செல்ல வேண்டியிருக்கிறது.
இதுவா கொரானா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வழி?
49 நாட்களுக்குப்பின் இப்போதாவது இவர்கள் இலவசமாக ரயில்களில் பயணம் செய்ய பிரதமர் அறிவித்திட வேண்டும். ஆனால் என்ன நிலைமை? கார்ப்பரேட்டுகள், இவர்கள் மீண்டும் பணியில் வந்து சேரவில்லை என்றால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ வழி எதுவும் செய்து தரவில்லை, 49 நாட்களாகப் பட்டினியில் வாட விட்டீர்கள். இப்போது மிரட்டுகிறீர்கள். நினைவில்கொள்ளுங்கள். தொழிலாளர்கள் அடிமைகள் அல்ல. அவர்களுக்கு உரிமைகள் உண்டு. எனவே உரியமுறையில் திரும்பவும் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
அடுத்து இரண்டாவதாக, வருமானவரி செலுத்தாத ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதம் 7500 ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு அளிக்க வேண்டும்.
மூன்றாவதாக, ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு 10 கிலோ உணவு தான்யங்கள் வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அளித்திட வேண்டும். இவை அனைத்தையும் உடனடியாகச் செய்திட வேண்டும்.
இம்மூன்று கோரிக்கைகளையும் உயர்த்திப்பிடித்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்-
(ந.நி.)

No comments: