Friday, May 4, 2018

உலகை மாற்றுவது எப்படி?


உலகை மாற்றுவது எப்படி?

நாம், காரல் மார்க்சின் 200 ஆவது பிறந்த நாளைக்கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில்,அவர் இறந்து 135 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட பின்னர், மார்க்சிசம் இறந்துவிட்டது அல்லது பொருத்தமற்றதாக மாறிவிட்டது என்று பலராலும் பலமுறை கூறப்பட்டு வந்ததையும் மறந்துவிட முடியாது. எனினும், மார்க்சும், மார்க்சிய சிந்தனைகளும் மக்களின் கவனத்தை மீண்டும் கவ்விப் பிடித்திருக்கின்றன. சமூகம் மற்றும் வரலாற்றில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான மார்க்சின் தத்துவங்கள்தான் அதற்குக் காரணங்களாகும். அவை எந்தக் காலத்திலும் காலத்திற்குப் பொருந்தாத ஒன்றாகஇருந்ததே இல்லை.

தனித்துவம் மிக்க தத்துவம்
காரல் மார்க்ஸ், 200 ஆண்டுகளுக்கு முன், 1818 மே 5 அன்று பிறந்தார். அவர் தன்னுடைய 65 ஆவது வயதில் 1883 மார்ச் 14 அன்று இறந்தார். அவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும், பல்வேறு வகையிலான பணிகள் குறித்து ஏராளமாக எழுதியிருக்கிறார். அவைதான் மார்க்சிய சிந்தனை என்று அழைக்கப்படுவதன் ஆணிவேராகத் திகழ்கின்றன. மார்க்சும் அவரது சகா பிரடெரிக் ஏங்கெல்சும், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்று அறியப்படுகின்ற, வரலாறு குறித்த பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்தின் நிறுவனர்களாவார்கள். இப்பொருள்முதல்வாதக் கண்ணோட்டம், தர்க்கவியலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதால், இதர பொருளியல் தத்துவங்களிலிருந்து வேறுபட்டு தனித்துவம் மிக்க ஒன்றாக விளங்குகின்றது. வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டு, மார்க்சும் ஏங்கெல்சும், எப்படி பல்வேறுவிதமான உற்பத்தி முறைகளின் வளர்ச்சி மூலமாகவும் சமூகம் சுழல்கிறது மற்றும் மாறுகிறது என்றும் எப்படி முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவமாகிய கருப்பையிலிருந்து வெளிவந்தது என்றும் காட்டினார்கள்.
புரட்சிகரப் பாதையமைப்பு
மார்க்ஸ், அவருடைய மாபெரும் இலக்கியப் படைப்பான மூலதனத்தில், முதலாளித்துவம் ஓர் உற்பத்தி முறை என்ற முறையில் எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். உபரி மதிப்பை உறிஞ்சுவதற்காக உழைப்பு எப்படி ஒரு பண்டமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை வெளிக்கொண்டு வந்தார். மார்க்ஸ்தான், முதலாளித்துவம் சுரண்டலின் உலக அளவிலானதொரு முறையாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை முன்கூட்டியே ஊகித்து அறிந்தார். மார்க்ஸ் காலத்திற்குப் பின்னர், முதலாளித்துவம் ஏகாதிபத்தியம் என்னும் வடிவத்திற்கு மாறியது. பின்னர் லெனின், முதலாளித்துவத்தின் இந்த ஆய்வினை ஏகாதிபத்தியத்தின் உச்சகட்டம் என்ற நிலைக்கு மாறியிருப்பதாக முன்னெடுத்துச் சென்றார். வரலாறு குறித்து மார்க்சின் கருத்தாக்கம் என்பது, சாராம்சத்தில், வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகும். மார்க்சும் ஏங்கெல்சும்தான் விஞ்ஞான சோசலிசத்தின் சிற்பிகளாக மாறினார்கள். அவர்களால் 1848 இல் வெளியிடப்பட்ட மிகவும் ஒளி வீசக்கூடிய கம்யூனிஸ்ட் அறிக்கையில் அவர்கள் முதலாளித்துவத்திலிருந்து வர்க்கமற்ற சமுதாயத்திற்கு - கம்யூனிசத்திற்கு கடந்து செல்லும் புரட்சிகரமான பாதையை அமைத்து தந்தார்கள். மார்க்சின் கூற்றுப்படி, தத்துவம் என்பது செயலுக்கான வழிகாட்டியேயாகும். கம்யூனிஸ்ட் அறிக்கையில் தொழிலாளர் வர்க்கம், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்குத் தலைமை தாங்குமாறு அறைகூவல் விடுத்ததிலிருந்து, மார்க்ஸ் தொழிலாளர்களை அணிதிரட்டுபவராகவும் மாறினார். இத்தகைய முன்முயற்சியின் விளைவாகத்தான் 1864 இல் சர்வதேச தொழிலாளர் சங்கம்(International Working Men’s Association) நிறுவப்பட்டது.
லெனின் கூறியதை நினைவில் கொள்வோம்
மாமேதை லெனின் மார்க்சியத் தத்துவத்தை ஆக்கப்பூர்வமாக வளர்த்தெடுத்ததன் மூலமாக அதனை, 1917 நவம்பர் புரட்சிக்கான செயலூக்கமுள்ள சக்தியாக மாற்றினார். அதன்பின்னர் மார்க்சிய தத்துவம் மற்றும் அதன்நடைமுறை மூலமாக ஏராளமான புரட்சிகள் மற்றும் புரட்சிகர இயக்கங்கள் உருவாகின. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட புரட்சி தோல்வியுற்றது, அல்லது அது செல்லும் பாதையிலிருந்து தடம்புரண்டது என்றால் அவற்றிற்கு மார்க்சியத் தத்துவம் காரணமல்ல. அவற்றை வழிநடத்தியவர்கள் மார்க்சிய தத்துவத்தையும் அதன் நடைமுறையையும் சீர்குலைத்ததும், நீர்த்துப்போகச் செய்ததுமேயாகும். மார்க்ஸ், தன்னுடைய கருத்துக்களையும், சிந்தனைகளையும் சர்வ வல்லமை படைத்தவை என்றோ சாசுவதமானவை என்றோ எப்போதுமே கருதியதில்லை. அவர் செய்ததெல்லாம், சமூகத்தை அறிந்துகொள்வதற்கும், சமூகத்தில் எப்படி மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதற்கும் வழிமுறைகளை வகுத்து தந்ததேயாகும். இதுதொடர்பாக, மாமேதை லெனின் கூறியதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.லெனின், ‘‘மார்ச்சிய தத்துவத்தை ஏதோ முற்றிலுமானது என்றோ, அதிலிருந்து சிறிதும் மீறக்கூடாத ஒன்று என்றோ நாம் கருதியதில்லை. மாறாக, மார்க்சிய தத்துவம் என்கிற அறிவியல் அஸ்திவாரத்தின் மேல் நின்று சோசலிஸ்ட்டுகள் வாழ்க்கையுடனான அனைத்து அம்சங்களிலும் முன்னேறிச் சென்றிட வேண்டும் என்று உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்’’ என்று கூறியிருக்கிறார்.
பொன்னான லட்சியத்தை நோக்கி முன்னேற
மார்க்சிஸ்ட்டுகள்தான், அறிவுத்துறையின் அனைத்துமுனைகளிலும் ஏற்படும் வளர்ச்சிக்கேற்ப மார்க்சிய தத்துவத்தையும் காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொண்டும், வளர்த்துக் கொண்டும் இருக்க வேண்டும். அத்தகைய பெருமுயற்சிகள் மூலமாக மட்டுமே நம்மால் மனிதகுல விடுதலை என்னும் பொன்னான இலட்சியத்தை நோக்கிவெற்றிகரமாக முன்னேற முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகிலஇந்திய மாநாடு, அடுத்து ஓராண்டு காலத்திற்கு, காரல் மார்க்சின் சிந்தனைகளையும், மார்க்சிய தத்துவத்தையும் பிரச்சாரம் செய்து, மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது. இதற்காக எண்ணற்றக் கருத்தரங்கங்கள், பொது விவாதங்கள் நடத்திட வேண்டும். மார்க்சிய நூல்களை அனைத்து இந்திய மொழிகளிலும் கொண்டுவர வேண்டும். பல்வேறு தலைப்புகளில் வாசகர் வட்டங்கள் நடத்திட வேண்டும். இதுதான், இந்தியாவையும், உலகத்தையும் மாற்றுவதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு நம்மை நாமே உருக்கு போன்று பதப்படுத்திக்கொள்வதற்கான வழியாகும்.
(மே 2, 2018)
தமிழில்: ச.வீரமணி



No comments: