Thursday, May 10, 2018

ஜனரஞ்சக தேசியவாதம் : இந்தியப் பின்னணி: சீத்தாராம் யெச்சூரி



(தோழர் சீத்தாராம் யெச்சூரி, லண்டனில் 5.5.2018 அன்று ஆற்றிய உரை)
‘தேசியவாதம்’ மற்றும் ’ஜனரஞ்சகம்’ என்கிற இரு சொற்களுமே எண்ணற்ற வியாக்கியானங்களை அளிக்கக்கூடிய சொற்றொடர்கள்தான். இவ்விரு சொற்களின் பொருள்கள் குறித்தும் சண்டையிடக்கூடிய அளவிற்கான விவாதங்களை நான் முன்வைக்கப் போவதில்லை. மாறாக, இந்தியாவின் இன்றுள்ள பின்னணியில் ஜனரஞ்சகமான தேசியவாதம் (Populist Nationalism) எப்படி தலைதூக்கி இருக்கிறது என்பதைச் சுருக்கமாக விவாதிக்க விரும்புகிறேன். இது, இந்தியாவின் எல்லைகளைக் கடந்தும் தாக்கத்தை ஏற்படுத்திடும் என நம்புகிறேன்.
முதலாளித்துவ உலகில், முதலாளித்துவ (பூர்ஷ்வா) தேசியவாதம் என்பது எப்போதுமே முதலாளிகளின் நலன்களை மேம்படுத்துவதுதான். முதலாளிகள் ஆளும் வர்க்கமாக இருக்கும் வரையிலும், தேசியவாதம் என்பதுதான் நாட்டுப்பற்று என்று அழைக்கப்படும். அதே சமயத்தில்,  ஜனரஞ்சகம் என்பது தங்களின் அரசியல் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய விதத்தில், தங்களின்  ‘பொய்யான உணர்வு’க்கு ஒத்துப்போகக்கூடிய விதத்தில் மக்களின் உணர்வுகளை மாற்றியமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்வதாகும். முதலாளித்துவத்தின் கீழ், ஜனரஞ்சக தேசியவாதம் என்பது இவ்வாறு முதலாளிகளின் நலன்களை முன்னெடுத்துச்  செல்லும் அதே சமயத்தில், தங்களுடைய ஜனரஞ்சகக் குறிக்கோளின் அடிப்படையில் சமூகத்தை மாற்றியமைப்பதற்குத் தேவைப்படக்கூடிய விதத்தில் ஒருசில குழுக்களின் நலன்களை முன்னெடுத்துச் சென்றிட முயற்சிப்பதும் ஆகும். இவ்வாறு ஜனரஞ்சக தேசியவாதம் என்பது இவ்விரு குறிக்கோள்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
தேசியவாதம்
நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவத்தின் கட்டத்திலிருந்து மனிதகுல நாகரிகம் முன்னேறிய காலத்தில் தேசிய அரசுகள் தோன்றின.  இந்தக் கால கட்டத்தில் ஐரோப்பாவிலும் தேவாலாயத்திலிருந்து அரசைத் தனியே பிரிப்பதற்கான போராட்டம் நடைபெற்றது.  நிலப்பிரபுத்துவத்தைத் தூக்கி எறிந்து முதலாளித்துவம் வெற்றி பெற்றதென்பது, மனிதகுல நாகரிகங்கள் மன்னர்களாலும், மாமன்னர்களாலும் ஆட்சி செய்யப்பட்ட சமயத்தில் அவர்கள் அனைவரும் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்கிற மாயையிலிருந்து  மக்களை விடுவிப்பதிலும்,  அரசியல் அதிகாரத்தைத் தங்கள் வசம் ஈர்த்துக்கொள்வதிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றி பெற்றது. வெஸ்ட்பாலியாவின் ஒப்பந்தங்கள் 1648இல் கையெழுத்தாகி, நாடுகளின் இறையாண்மை தொடர்பான விதிகள் உருவானதைத் தொடர்ந்து, நாடுகளின் இறையாண்மைக் கொள்கைகளின் அடிப்படையில் சர்வதேச அளவிலான சட்டங்களும், சர்வதேச அமைப்பும் மிக விரிவான அளவில் நிறுவுவதற்கான வேலைகள் நடைபெற்றன. நாடுகளுக்கு இடையே சமத்துவம் கடைப்பிடிக்கப்பட வேண்டும், ஒரு நாடு இன்னொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடாக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும் போன்ற கொள்கைகள் வகுக்கப்பட்டன. இவற்றை வெஸ்ட்பாலியன் அமைப்பு என்றே அனைவரும் குறிப்பிட்டார்கள். வெஸ்ட்பாலியன் அமைதி குறித்து 1644க்கும் 1648க்கும் இடையே ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இவற்றால் ஏற்பட்ட ஒப்பந்தங்கள்தான் இன்றளவும் சர்வதேச சட்டங்களின் அடிப்படைகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.
இரண்டாம் உலகப்போரில் பாசிசம் முறியடிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து காலனிய நாடுகள் விடுதலை பெற்றுவந்த சமயத்தில், காலனிய நாடுகளில் விடுதலைக்காக மக்கள் நடத்திய போராட்டங்கள் சுதந்திரம் அடைந்த பல நாடுகளின் பண்புகளையே உருக்குபோன்று வீரஞ்செறிந்தமுறையில் மாற்றி அமைத்தன.  இந்தியா உட்பட  காலனியாதிக்கத்திற்கு எதிராக இந்நாடுகளில் நடைபெற்ற நீண்ட நெடிய போராட்டங்கள்தான் இந்நாட்டு மக்களின் போர்க்குணமிக்க பண்புகளையும் உருவாக்கின.
‘இந்தியா என்னும் சிந்தனை’  (‘Idea of Nation’)உருவான வரலாறு
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிரான மகத்தான மக்கள் போராட்டத்தின் வாயிலாகவே ‘இந்தியா என்னும் சிந்தனை’ உருவானது. ‘இந்தியா என்னும் சிந்தனை’ என்றால் என்ன? சுருக்கமாகச் சொல்வது என்றால், இந்தியா பல்வேறு வேற்றுமைகளுடன் கூடிய தேசிய இனங்களைக் கொண்டிருந்த போதிலும், அவற்றையெல்லாம் தாண்டி மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே சிந்தனையினராக,  ஒரே நாட்டினர் என்ற உணர்வோடு முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவில் வெஸ்ட்பாலியன் அமைதிக்குப் பின்னர் உருவான ப் போக்கை முழுமையாக மறுக்கும் விதத்தில் இது அமைந்திருந்தது. 
இப்போது, இவ்வாறு உருவாகியுள்ள மதச்சார்பற்ற ஜனநாயக நவீன இந்தியக் குடியரசைத் தங்களுடைய சித்தாந்தமான ‘இந்து ராஷ்ட்ரம்’ –ஆக மாற்ற வேண்டும் என்கிற குறிக்கோளுடன் ஆர்எஸ்எஸ்/பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வெஸ்ட்பாலியன் மாடலுக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறது. அதாவது நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள இந்துக்களுக்கு மற்ற மதங்களைச் சார்ந்தவர்கள், குறிப்பாக முஸ்லீம்கள் (இவர்களை இந்தியாவிற்குள்ளேயே இருக்கின்ற வெளிநாட்டு எதிரிகள் என்று அது வர்ணித்துக்கொண்டிருக்கிறது) தங்களுக்குக் கீழ்ப்பட்டு வாழ்ந்திட வேண்டும் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறது. இதற்காக இப்போதுள்ள “இந்திய தேசம்” என்பதை “இந்து தேசியவாதம்” என்று மாற்றியமைத்திட நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. உண்மையில், இவர்கள் கூறும் ‘பெரும்பான்மைவாதம்’ என்பது, அதாவது ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரம்’ என்பது, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக இந்திய மக்களால் உருவாக்கப்பட்ட ‘இந்தியா என்னும் சிந்தனை’யையே முற்றிலுமாக மறுதலித்திடும், ‘ஒரு புதுவிதமான அரசியல் உளவியல்’ ஆகும்.
ஆர்எஸ்எஸ்/பாஜக சிந்தனையாளர்கள் ‘இந்தியா என்கிற சிந்தனை’யையே தள்ளுபடி செய்கின்றனர்.  இதன்மூலம் அவர்கள் இந்திய மக்களின் சுதந்திரப் போராட்ட சகாப்தத்தையே மறுதலிக்கின்றனர். வெஸ்ட்பாலியன் ‘தேசியம்’ என்கிற கருத்தாக்கத்திலிருந்தும் இந்திய மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டத்திலிருந்தும்தான் இந்திய தேசியம் என்கிற கருத்தாக்கம் உருவானது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக, விடுதலை கோரி  நடைபெற்ற மகத்தான மக்கள் போராட்டத்திலிருந்து உருவான இந்திய தேசியம் (‘இந்தியா என்கிற சிந்தனை’) என்பதையே ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்கள் நிராகரித்திடவும், தங்களுடைய இந்திய (இந்து) தேசியம் என்பதை முன்னிறுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.    நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக உள்ள அகீல் பில்கிராமி, “இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் ஒன்றுபட்ட, உறுதியான, அளப்பரிய அணிசேர்க்கை என்பது இந்தியர் அனைவரும் ஒன்று என்கிற மாற்றுச் சிந்தனை மற்றும் ஒன்றுபட்டச் சிந்தனையில்லாமல் சாத்தியமாகி இருக்காது,” என்று உறுதிபடத் தெரிவித்தார்.  
இந்தியாவின் வேற்றுமை – மொழி, மதம், இனம், கலாச்சாரம் போன்றவை – உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில்,  அவை அனைத்தையும்விட பரந்த, விரிந்த ஒன்றாகும். இந்தியாவில் குறைந்தபட்சம் 1,618 மொழிகள், 6,400 சாதிகள், பெரிய அளவில் 6 மதங்கள் (இவற்றில் நான்கு இம்மண்ணிலேயே உருவானவைகளாகும்), இருப்பதாக அதிகாரபூர்வமாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.    மானுடவியலின்படி ஆறு விதமான இனக் குழுக்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்துதான் ஒரே நாடு என அரசியல்ரீதியாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பின் காரணமாகத்தான் இந்தியா 29 பெரிய அளவிலான மதக் – கலாச்சார விழாக்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. உலகில் உள்ள நாடுகளிலேயே பண்டிகைகளுக்காக அதிக விடுமுறைவிடும் நாடாகவும் இந்தியா அநேகமாக இருந்து வருகிறது. 
இவ்வாறு பல்வேறு வேற்றுமைகொண்ட மக்களையும் ஒருங்கிணைத்தவர்கள் பிரிட்டிஷார் என்று வாதிடுபவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். இந்தியத் துணைக்கண்டத்தை மதரீதியாக இரு நாடுகளாகப் பிரித்ததன் மூலம் பல லட்சக்கணக்கான மக்களைக் காவு கொண்ட நாட்டுப்பிரிவினைக்கு வழிவகுத்ததும் இதே பிரிட்டிஷார்தான் என்பதை மறந்துவிடுகிறார்கள்.   பிரிட்டிஷ் காலனியாதிக்கம் இவ்வாறு கறைபடிந்த வரலாற்றின் சொந்தக்காரர்கள்தான். பிரிட்டிஷ் காலனியாதிக்கம், எண்ணற்ற நாடுகளில் – இந்தியா மட்டுமல்லாது, ஆப்ரிக்காவில் சைப்ரஸ் மற்றும் பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் இவர்கள் இவ்வாறு பிரிவினையை ஏற்படுத்தி விட்டுச் சென்ற காயங்களின் ரணம் இன்னமும்  ஆறாமல் தொடர்கின்றன எனில் அதற்கு பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் அவமானகரமான வரலாற்றுப் பாரம்பர்யம்தான் முக்கியமான காரணமாகும்.  சுதந்திரத்திற்காக இந்திய மக்கள் தங்கள் வேற்றுமைகளையெல்லாம் ஓரங்கட்டிவைத்துவிட்டு ஒன்றுபட்டு நின்று போராடியதன் காரணமாகத்தான் பிரிட்டிஷ் இந்தியாவில் மட்டுமல்ல, 600க்கும் மேற்பட்டிருந்த மன்னர் சமஸ்தானங்களில் வாழ்ந்துவந்த மக்களும் ஒன்றுபட்டு, ஒற்றுமையுடன் போராடித்தான் இன்றைய இந்தியர் என்கிற உணர்விற்கு – நவீன இந்தியாவிற்கு – வடிவம் கொடுத்தவர்களாவார்கள்.
தேசியவாதம்:
சர்வதேச நிதிமூலதனத்தின் சேவையின் கீழ், ‘தேசம்’ (Nation) என்கிற வெஸ்ட்பாலியன் வரையறைகள், வர்த்தகமய முதலாளித்துவம் (mercantile capitalism) உயர்ந்தோங்கியிருந்த காலகட்டத்தில்தான் பூர்ஷ்வா முதலாளித்துவத்துடன் (bourgeois nationalism) தன்னை இணைத்துக்கொண்டு எழுந்தது.   ஒரு ‘நாட்டில்‘ உள்ள  அபரிமிதமான செல்வவளத்தைச் சூறையாடுவதன் மூலமும், தொடர்ந்து  நாட்டிலுள்ள தங்கள், வைரங்கள், மற்றும் இதர  கனிம வளங்களை  அடிமை உழைப்பாளர்களைக் கொண்டு, நேரடியாகவே சூறையாடுவதன் மூலமும்,  தங்களுடைய ஏகாதிபத்திய விரிவாக்கத்திற்கான வழிமுறைகளாகத்தான் இவர்கள் ‘தேசியவாதம்’ என்கிற சொல்லைப் பயன்படுத்து கிறார்களேயொழிய, அந்நாட்டிலுள்ள மக்களில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களின் நிலைமைகளை முன்னேற்றுவதற்கும் இதற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை.  இவர்களால் ‘தேசம்’ என்பது மக்களுக்கும் மேலான ஒன்று என்கிற முறையில் சித்தரிக்கப்படுகிறது. வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால், ஓர் ஏகாதிபத்தியம், மற்றொரு ஏகாதிபத்தியத்துடன் போர் தொடுக்கும் சமயத்தில் தங்கள் சார்பாக மக்களை அணிதிரட்டுவதற்காக இந்தச் சொல்லைப் பயன்படுத்திக் கொள்கிறது. போராடும் நாடுகளில் உள்ள தொழிலாளர்கள், தங்கள் சக தொழிலாளர்களை ஈவிரக்கமின்றி கொன்றுவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ‘தேசம்’ என்கிற சொல்லை, மக்களுக்கு மேலானதாக, தங்கள் “செல்வ வளத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான” ஒன்று என்ற முறையில்தான்  “முதலாளித்துவ தேசியவாதம்” (“பூர்ஷ்வா தேசியவாதம்”) என்ற சொற்றொடர் இருந்தது, இப்போதும் இருந்து வருகிறது.  
சர்வதேச நிதி மூலதனத்தின் உலக அளவிலான ஆட்சி மற்றும் தாக்குதல் காரணமாக,  முதலாளித்துவ தேசிய வாதம்.  மக்களில் பெரும்பாலோருக்கு வறுமையைத் திணித்து, சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களை மேம்படுத்துகிறது. ‘தேசியவாதம்’ என்ற பெயரில்  இந்தியா போன்ற நாடுகளில்  ஜனநாயகக் கட்டமைப்புக்குள்ளேயே, நவீன தாராளமய ஆட்சிக்கான அரசியல் ஆதரவு,  மக்களை மிகவும் பரிதாபமான முறையில் அச்சுறுத்துகிறது.
இந்தியாவில், தற்போது, கார்ப்பரேட்டுகளும், இந்துத்துவா மதவெறியர்களும் கை கோர்த்துக்கொண்டு, ‘தேசம்’ என்ற பெயரால் ஜனநாயக உரிமைகள் உட்பட மக்களின் ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் தியாகம் செய்திட வேண்டும் என்றும், மக்களின் நலன்களுக்கும் மேலானது ‘அபரிமிதமான தேசியவாதம்’ என்கிற சிந்தனை என்றும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.    இந்தியாவில் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள், “தேசத்தைப் பாதிக்கும் விதத்தில் பேச்சுரிமை இருக்க முடியாது,” என்று அடிக்கடி அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் கூறும் தேசியவாதத்தின் கருத்து, ஆர்எஸ்எஸ்-ஆல் தலைமை தாங்கப்படக்கூடிய இந்திய மதவெறியர்களின் பாசிஸ்ட் நிகழ்ச்சிநிரலை மேலும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில் அமைந்துள்ள ஒன்றுதான்.  இவர்கள் தற்போதுள்ள மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, தாங்கள் விரும்புவதுபோல ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரம்’- ஆக  முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்று கோருகிறார்கள்.
ஆர்எஸ்எஸ்,  தாங்கள் நிறுவ விரும்பும் “இந்து ராஷ்ட்ரம்” என்பதை சித்தாந்தரீதியாகவும், தத்துவார்த்தரீதியாகவும் நியாயப்படுத்தும் விதத்திலேயே  “தேசியவாதம்” என்பதைக் கட்டமைத்திருக்கிறது.  (இவர்கள் கூறும் இந்துத்துவா ராஷ்ட்ரத்திற்கும், இந்துயிசத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது.)  ஆர்எஸ்எஸ்-இன் மறைந்த தலைவரான எம்.எஸ். கோல்வால்கர், 1939இல் எழுதிய நாம் அல்லதுஅல்லது வரையறுக்கப்பட்ட நமது தேசம் என்னும் நூலின் முகப்புரையில், “இந்துக்கள்,  அயலக இனத்தைச் சேர்ந்த எவராலும் இந்த நாடு படையெடுக்கப்படுவதற்கு முன்பே இந்த மண்ணில் எட்டாயிரம் அல்லது பத்தாயிரம் ஆண்டுகளாக எவ்விதமான தகராரோ மற்றும் எவராலும் தொந்தரவுக்கு உள்ளாகாமலோ இருந்து வந்திருக்கிறார்கள்,” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர், “எனவே, இந்துக்கள் பூமியான இந்த பூமி, இந்துஸ்தான் என்று அழைக்கப்பட்டு வந்தது,”  என்றும் குறிப்பிட்டார். (We or Our Nationhood Defined – M.S. Golwalkar, 1939, Page 6).    
இந்துத்துவா மேலாதிக்கவாதிகள், இவ்வாறாக இந்துக்கள்தான் எப்போதும் இந்தத் தேசத்தில் இருந்தார்கள் என்றும், தொடர்ந்து இருந்து வருகிறார்கள் என்றும்  அறிவியல்பூர்வமற்ற முறையிலும், வரலாற்று ஆய்வின் அடிப்படையுமின்றி “நிறுவியதைத்” தொடர்ந்து, அத்தகைய இந்து  தேசத்தின் சகிப்புத்தன்மையற்ற, தத்துவார்த்த சாராம்சத்தையும் பதித்திடும் வேலையில் தொடர்கிறார்கள்.
“… இவ்வாறு நாம் மேற்கொண்டுள்ள ஆய்வானது, நம்மை மறுக்க இயலாத விதத்தில், … இந்துஸ்தான் இங்கேதான் தோன்றியது மற்றும் புராதன இந்து தேசமும் இங்கேதான் தோன்றி இருக்க வேண்டும், வேறெங்கும் அல்ல என்கிற முடிவுக்கே தள்ளிவிடுகிறது. இந்த தேசத்திற்குச் சொந்தமாயிராத மற்ற அனைவரும், அதாவது, இந்து இனம், மதம், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றுக்குச் சொந்தமாயிராத அனைவரும் இயற்கையாகவே உண்மையான ‘தேசிய’ வாழ்விலிருந்து விலகிவிடுகிறார்கள்.
“… இவற்றை ஏற்றுக் கொண்டு, தற்போதைய மந்த நிலையிலிருந்து இந்து தேசத்தை மீளவும் கட்டக்கூடிய விதத்தில், புத்துயிரூட்டி, விடுவிப்பதனைக் குறிக்கோளாகக் கொண்டு, செயல்படக்கூடிய இயக்கங்கள் மட்டுமே உண்மையில் ‘தேசிய’ இயக்கங்களாகும். அதில் செயல்படுபவர்கள் மட்டுமே தேசப் பற்றாளர்கள். இந்து இனத்தைப் பெருமைப்படுத்தக் கூடிய விதத்தில், லட்சியத்தை எய்திட வேண்டும் என்கிற ஆர்வத்துடன் அவர்கள் மட்டுமே செயல்படுகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் தேசத்தின் இலட்சியத்தைக் காட்டிக் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் அல்லது கருணையான பார்வையுடன் கூற வேண்டுமானால், இடியட்டுகளாக இருக்க வேண்டும்.” (கோல்வால்கர், 1939, பக்.43-44).
இவ்வாறு இவர்கள் வைக்கும் விளக்கம், ‘இந்தியா என்னும் சிந்தனை’ யை உணர்வதிலிருந்து அல்லது புரிந்துகொள்வதிலிருந்து  ஒருவரைப் பின்னுக்கு இழுக்கிறது. இவர்களால் முன்வைக்கப்படும் ஒரு தனித்த இந்துத்துவா தேசியவாதம் (exclusive Hindutva nationalism) என்பது இந்தியாவின் பின்னணியில் ஜனரஞ்சகமான தேசியவாதத்தை வரையறுக்கிறது.
இவ்வாறு  இவர்கள் முன்வைத்திடும் பிற்போக்குத்தனமான திட்டம் இந்தியாவில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, ஆர்எஸ்எஸ்/பாஜக கூட்டத்தினர் இந்திய வரலாற்றையே, இந்து புராணங்களில் கூறப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில் மாற்றிடவும், இந்தியத் தத்துவத்தை, இந்து இறையியலுடன் மாற்றிடவும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் உள்ள பாஜக அரசாங்கம், இளைஞர்களுக்கும்  மாணவர்களுக்கும் கற்பிக்கப்படும் உயர்கல்வித்துறையின் பாடத்திட்டங்களில் இந்துத்துவா சித்தாந்தத்தைப் புகுத்திடத் திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இவர்களின் ஜனரஞ்சகமான தேசியவாதம் வெற்றிபெறவேண்டுமானால் அதற்கு மிகவும் முக்கியம் மக்கள் பகுத்தறிவற்றவர்களாக மாறிட வேண்டும். அந்த வேலைகளில்தான் இந்திய ஆட்சியாளர்கள் இப்போது இறங்கி இருக்கிறார்கள்.  ஜார்ஜ் லூகாக்ஸ் எழுதிய “காரணம் கேட்பதை ஒழித்துக்கட்டுதல்” (“Destruction of Reason”) என்னும் நூலில் கூறியதைப்போல இந்தியாவின் இன்றைய பின்னணியில் தத்துவார்த்த பகுத்தறிவின்மை (philosophical irrationalism) தேவைப்படுகிறது. ஹிட்லருக்கு ஜெர்மனியின் பாதை இவ்வாறுதான் இருந்தது என்று லூகாக்ஸ் அடையாளப்படுத்தி இருக்கிறார். ”ஏகாதிபத்திய உலகில் பகுத்தறிவின்மை ஒரு சர்வதேசக் காட்சியாகும்,” என்று அவர் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.
பகுத்தறிவின்மை என்பது கேள்வி கேட்பதற்கு எதிரான ஒரு தத்துவார்த்தப் போக்கு ஆகும். அதன் பிரதான குறிக்கோள், அன்றைய ஐரோப்பிய அறிவொளிக் காலத்திலிருந்து இன்றைய ஏகாதிபத்திய உலகமயக் காலம்வரையிலும், மனித விவகாரங்களில் கேள்வி கேட்பதற்கு இருந்து வரும் அதிகாரத்தையும், எதார்த்த நிலைமைகள் குறித்த அறிவினை மக்களுக்கு அளிப்பதையும் சவாலுக்கு  அழைப்பதேயாகும்.  அறிவு எந்தக் காலத்திலும் முழு எதார்த்த நிலையினையும் விளக்கிட முடியாது. எனினும், பகுத்தறிவின்மை எதார்த்தத்திற்கும் அறிவுக்கும் இடையேயுள்ள தர்க்கவியல் உறவுமுறையினை மறுதலிக்கிறது. புறநிலை எதார்த்தம் (objective reality) நம்முடைய அறிவை விட மிகவும் வளமானது என்று லூகாக்ஸ் கூறுகிறார். இதன் இடைவெளியை. பகுத்தறிவின் அடிப்படையில் நிரப்பிடுவதற்குப் பதிலாக, பகுத்தறிவின்மையால் ஒட்டுமொத்த எதார்த்தத்தின்  அறிவினை ஒருவர் பெற்றிட முடியாது. ஒட்டுமொத்த எதார்த்தத்தையும் ‘நம்பிக்கை’ (‘fairth’) மற்றும்  ‘உள்ளுணர்வு’(‘intuition’) அடிப்படையில்தான் கிரகித்துக்கொள்ள முடியும். இதுதான் அறிவின் உயர்ந்தபட்ச வடிமாகக் கருதப்படுகிறது. ஜனரஞ்சகமான தேசியவாதம் மக்களுக்கு இத்தகைய ‘நம்பிக்கை’ யை ஊட்டிவளர்க்கிறது. இதன்மூலம், அது தன்னுடைய இரட்டை குறிக்கோளான, நவீன தாராளமய சீர்திருத்தங்களை முன்னெடுத்துச்சென்றிடவும், இந்தியாவை தனித்த இறையியல் இந்து நாடாக மாற்றிடவும் மக்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இவர்களின் இத்தகைய தத்துவார்த்த பகுத்தறிவின்மையானது ஆர்எஸ்எஸ்/பாஜக ஆட்சியாளர்களின் கீழ் இந்தியாவின் சமூக-அரசியல்-கலாச்சார வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் எதுகுறித்தும்,  கேள்வி கேட்காதே என்கிறது.
‘இந்தியா என்னும் சிந்தனை’ என்பது அனைத்தையும்  காரணத்துக்கு உட்படுத்துவதன் மூலம் எல்லாருக்குமான பொருளாதார நிகழ்ச்சிநிரலுக்காக வேலை செய்வது. இவர்கள் கூறும் எதையும் காரணத்துக்கு உட்படுத்தாதே என்பது சர்வதேச நிதி மூலதனத்துடன் கூடிக்குலாவிக் கொண்டு,  நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை  அமல்படுத்துவது. அதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைத் தங்கள் கொள்ளை லாப வேட்கைக்காக அடக்கி ஆள்வது.  நாட்டில் மக்கள் மத்தியிலிருந்துவரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய உணர்வினை மறுதலிப்பதுடன், இந்தியாவை ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக மாற்றிடும் நடவடிக்கைகள் மூலமாக, இந்தியாவில் உள்ள இருவிதமான இந்தியர்களிடையே – வறுமையில் வாடும் இந்தியர்களுக்கும், வளமாக உள்ள பணக்காரர்களுக்கும் இடையேயுள்ள – இடைவெளியை மேலும் விரிவாக்கும் விதத்தில் ஆட்சியாளர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  இவ்வாறு ‘இந்தியா என்னும் சிந்தனை’க்கு நேரெதிராக இன்றைய ஆட்சியாளர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நாட்டிலுள்ள நிலைமைகளைக்  காரணத்துக்கு உட்படுத்துவதன் மூலம் தலித்துகள், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் போன்று  விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்காக நாம் வேலைசெய்து கொண்டிருக்கிறோம். அவர்களோ எல்லாவற்றையும் காரணத்துக்கு உட்படுத்தக்கூடாது என்பதன் மூலம் சமூக பொருளாதார எதார்த்தநிலைகளிலிருந்து அவர்களை ஒதுக்கி வைத்திட முயல்கிறார்கள்.
நம் அரசமைப்புச்சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழிகளின்படி, “சாதி, இனம், பாலினம் எதுவாக இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாது அனைத்துக் குடிமக்களுக்கும் சமத்துவம்” வேண்டும் என்று நாம் கேட்கிறோம். அவர்களோ, அத்தகைய சமத்துவத்தை மறுக்கிறார்கள்.  அவர்கள்  தற்போது பின்பற்றிவரும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கும் இந்துத்துவா தேசியவாதத்தின்கீழ் மக்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கும் அவர்களுக்கு  இவ்வாறு  சமத்துவத்தை மறுப்பது தேவைப்படுகிறது.
காரணத்துக்கு உட்படுத்துவதன் மூலம், ஆட்சி அமைப்புமுறையிலிருந்து மதம் தனியே பிரிக்கப்பட வேண்டும் என்று நாம் கோருகிறோம். அவர்களோ,  மதவெறியை மூர்க்கத்தனமாக பிரயோகித்து, மக்கள் மத்தியில் பிளவினை உண்டாக்கிடும் வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள். இவ்வாறு இவர்களின் நடவடிக்கைகள், அரசமைப்புச்சட்டம் மதச் சிறுபான்மையினருக்கு உத்தரவாதப்படுத்தியுள்ள உரிமைகள் மீது தாக்குதல்கள் தொடுத்திருக்கின்றனர். அவர்களின்  உயிர் மற்றும் உடைமைகளையே சூறையாடிக் கொண்டிருக்கின்றனர். மதவெறியர்களின் தாக்குதல்களுக்கு அவர்களை இரையாக்கிக் கொண்டிருக்கின்றனர்.   
நாம், அனைத்தையும் காரணத்துக்கு உட்படுத்துவதன்மூலம், ‘இந்தியா என்னும் சிந்தனை‘யை  மேம்படுத்திட விரும்புகிறோம். அவர்களோ எதையும் காரணத்துக்கு உட்படுத்தக்கூடாது என்ற அடிப்படையில் நம் கல்வி அமைப்புமுறையையே விஷமாக்கிட முனைந்துள்ளார்கள். மேலும் அனைவருக்கும் கல்வி என்பதையும் நிராகரித்திடும் விதத்தில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருக்கிறார்கள். பகுத்தறிவு மற்றும் அறிவியல் அணுகுமுறையை மறுதலித்து வருகிறார்கள்.  அனைவரையும் சமமாகப் பாவிக்கும் வளமான சமத்துவக் கலாச்சாரத்தை, தங்களின் இந்து புராணமாக மாற்ற விரும்புகிறார்கள்.
இதுதான் இப்போது இந்தியாவில் ‘ஜனரஞ்சகமான’ ‘இந்துத்துவா தேசியவாதம்’ மற்றும் ‘இந்திய தேசியவாதம்’ ஆகியவற்றிற்கிடையே நடைபெற்று வரும் போராட்டமாகும்.  மதச்சார்பற்ற ஜனநாயகத்தை உயர்த்திப்பிடிப்பதற்கான நிகழ்ச்சிநிரல் வெற்றிபெற வேண்டும் என்பதன்பொருள் எதையும் காரணத்துக்கு உட்படுத்தும் தத்துவம், எதையும் காரணத்துக்கு உட்படுத்தாதே என்னும் தத்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெறுவது என்பதேயாகும். இதுதான் ‘இந்தியாவின் சிந்தனை’ என்பதன் ஆணிவேராகும்.
(தமிழில்: ச. வீரமணி)

No comments: