பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்
இவ்வாறு சுற்றுக்குவிடப்படும் அலுவல் பட்டியல் எந்தக்காலத்திலும் அரசின் முன் அனுமதியுடன் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் மூலமாகத்தான் வெளியிடப்படும். ஆயினும், அன்றைய தினம், அயல்துறை அமைச்சர் மற்றும் சில மூத்த அமைச்சர்களின் மூலமாக அரசாங்கம் இதன் மீதான விவாதத்தை ஒத்தி வைத்திடவும், மாறாக, ரயில்வே பட்ஜெட் மீது விவாதத்தைத் தொடங்கிடவும் கோரியது. இவ்வாறு இதற்குமுன் எப்போதும் நடந்ததில்லை. அலுவல் பட்டியல் சுற்றுக்கு விடப்பட்டுவிட்டால், அது அவையின் சொத்தாகிவிடுகிறது. அதனை பின்னர் அரசாங்கம் உட்பட எவரும் மாற்ற முடியாது. ஆண்டாண்டு காலமாய் இருந்துவரும் இந்தநடைமுறை மற்றும் பழக்கத்தை மீறிட,பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் மேற்கொண்டுள்ள பிடிவாதமான நடவடிக்கை, இயற்கையாகவே அனைத்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் வலுவாக எதிர்கொண்டது.திருத்தப்பட்ட அலுவல் பட்டியல் சுற்றுக்கு விடப்பட்ட பின்னர் பாஜகஅரசாங்கம் தன் மனதை மாற்றிக்கொண்டுவிட்டது என்பது தெளிவு. இது தொடர்பாக, ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின்படி, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர், காஸா பகுதியில் இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல்களைக் கண்டிக்கும் விதத்தில் தீர்மானம் எதுவும் கொண்டுவரத் தயாரில்லை என தெரிவித்துவிட்டார்.
“உள்நாட்டு அரசியல் நம்முடைய அயல்துறைக் கொள்கையைப் பாதித்திடக் கூடாது,” என்று அவர் கூறியிருக்கிறார். அவர் மேலும், “இந்த விஷயம் மிகவும் உணர்வுப்பூர்வமானது” “highly sensitive”) என்றும் “அரசாங்கம் மேற்கொள்ளும் எவ்விதமான நடவடிக்கையும் எவ்விதமான பாதிப்புகளுக்கும் (“implications”) இடமளிப்பதாக இருக்கக்கூடாது” என்றும் தெரிவித்துள்ளார். இது அவையில் உறுப்பினர்கள் மத்தியில் ஆவேசத்தை எழுப்பியது. அமைச்சர் என்னவிதமான “பாதிப்புகள்’’ குறித்துப் பேசுகிறார் என்று கேட்டார்கள்.பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா `நல்லஉறவுகள்’ கொண்டிருப்பதால், நாடாளு மன்றம் இதனை விவாதிக்கக் கூடாது என்ற விதத்திலும் பாஜக சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வாதமாகும். இந்தியா, இலங்கையுடன் அதிகாரப்பூர்வமான முறையில் நல்ல உறவுகளைக் கொண்டிருக்கிறதுதான். ஆனாலும், இந்திய மீனவர்கள் இலங்கையால் இக்கட்டான நிலைக்கு அவ்வப்போது ஆளாகும்போது அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடப்பது தடுக்கப்படவில்லை. இந்தியா, வங்கதேசத்துடன் தூதரக உறவு கொண்டிருக்கிறதுதான். ஆயினும், வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்திருப்பவர்கள் பிரச்சனையை இந்த நாடாளுமன்றத்தில் எழுப்பிட பாஜகவையோ அல்லது பிரதமரையோ எதுவும் தடுத்திடவில்லை. இந்தியாவும், பாகிஸ்தானும் தூதரக உறவுகள் கொண்டிருப்பதும், பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருப்பதும் அனைவரும் அறிந்த உண்மை. ஆனாலும் அந்த நாடு நம்முடைய பாதுகாப்புக்கும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று திரும்பத் திரும்ப விவாதிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, மும்பையில் 26/11 பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்குப்பின் இத்தகைய விவாதங்கள், அதிகமானது. மேலும், நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் உள்நாட்டு அரசியல் சம்பந்தமாக அளித்துள்ள அறிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று. ஏனெனில், எந்தவொரு நாட்டின் அயல்துறைக் கொள்கையும் அந்த நாட்டின் உள்நாட்டுக் கொள்கையின் ஒரு விரிவாக்கமாக இருப்பதை இயல்பாகப் பார்க்க முடியும். அதனால்தான், பாஜக,பாலஸ்தீனத்திற்கு எதிராக வலுச்சண்டையில் ஈடுபட்டிருப்பதற்கு ஆதரவானநிலை எடுத்திருப்பதையும், பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டிருக்கும் வலுச்சண்டை கொள்கைகளுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதையும் மாநிலங்களவை உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களால் மிகவும் சரியாகவே பார்க்கப்படுகிறது.பாஜக அரசின் இந்த நடைமுறை நமது நாடு இதுவரை கடைப்பிடித்து வந்த அணுகுமுறைக்கு முற்றிலும் முரணானதாகும். நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முற்பட்ட காலத்திலிருந்தே, நம்முடைய விடுதலைப் போராட்ட காலத்திலிருந்தே, பாலஸ்தீனப் பிரச்சனையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்தியா தன் ஒருமைப்பாட்டைக் காட்டி வந்துள்ளது.
ஆட்சியில் எந்தக்கட்சி கோலோச்சினாலும், நம் நாட்டில் பாரம்பரியமாக இந்த அணுகுமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு முற்றிலும் முரணாக இப்போது பாஜக நிலை எடுத்திருக்கிறது. மகாத்மா காந்தி ஒரு தடவை, “பிரெஞ்சுக்காரர்கள் பிரான்ஸைப் பெற்றிருக்க முடியும் என்றால், ஆங்கிலேயர்கள் இங்கிலாந்தைப் பெற்றிருக்க முடியும் என்றால், பாலஸ்தீனியர்கள் பாலஸ்தீனத்தைப் பெற்றிட வேண்டும்,’’ என்று கூறினார். அவர் அவ்வாறு கூறி எழுபதாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. பாலஸ்தீனியர்களுக்கு இப்போதும் தங்கள் தாய்நாட்டுக்கான உரிமை மறுக்கப்படுவது தொடர்ந்துகொண்டிருக்கிறது. இன்றளவும் அவர்கள் மனிதாபிமானமற்றமுறையில் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.தற்போதைய பாஜக அரசாங்கம் இந்தியா இதுநாள்வரை கடைப்பிடித்து வந்த பாரம்பரியமான புரிதலிலிருந்து தடம்புரண்டு செல்லத் தொடங்கிவிட்டதாகவேத் தெரிகிறது. அதன் பித்தலாட்டம் ஜூலை 10 அன்று அயல்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையிலேயே தெரிந்தது.
அந்த அறிக்கையில், அவர், “இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே அதிகரித்து வரும் வன்முறை இந்தியாவிற்கு ஆழ்ந்த கவலையை அளிக்கிறது. குறிப்பாக, காஸாவில் அதிக அளவில் வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்று அப்பாவி மக்கள் துயரார்ந்த முறையில் கொல்லப்பட்டு வருகின்றனர், ஏராளமான சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. அதே சமயத்தில், இஸ்ரேலின் சில பகுதிகளிலும் ராக்கெட் தாக்குதல்கள் மூலம் எல்லை தாண்டிய தூண்டுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கு இந்தியா தன் கவலையைத் தெரிவித்துக்கொள்கிறது,’’ என்று கூறியிருந்தார். அந்த அறிக்கையில் மேலும், “பாலஸ்தீனப் பிரச்சனைகளுக்குஅமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று நாங்கள் இருதரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்,’’ என்றும் கூறப்பட்டிருந்தது.பாஜக அரசாங்கம் இதையே நாடாளுமன்றத்திலும் வலியுறுத்திக் கூறியிருக்க முடியும். அந்த சமயத்தில் இஸ்ரேல், காஸா பகுதியில் மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் ராணுவத் தலையீடு மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சிகள், குறிப்பாக இடதுசாரிகள், தங்கள் கண்டனத்தை எழுப்பியிருக்க முடியும்.
ஆயினும், பாஜக அரசாங்கம் மத்தியக் கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் அடிவருடியாக விளங்கும் ஒரு நாட்டினைக் குஷிப்படுத்தும் விதத்திலேயே நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, வலியச் சண்டை செய்பவனையும் அவனால் அடிவாங்கிக்கொண்டிருப்பவனையும் சமமாகப் பார்க்கும் விதத்தில் அறிக்கை விட்டிருப்பதிலிருந்து, இந்தியா ஒரு நடுநிலைப் பார்வையாளர் என்ற முறையிலேயே தன் பங்களிப்பினைச் செலுத்திட முன்வந்திருப்பது போல் தோன்றுகிறது. இது, இஸ்ரேலின் அரக்கத்தனமான ஆக்கிரமிப்பு நடைமுறைகளுடன் பாஜகவின் அரசியல் நடைமுறைகளும் ஒத்துப்போவதன் பிரதிபலிப்பேயாகும். பாலஸ்தீனப் பிரச்சனையின் மிக முக்கிய அம்சமே பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமித்திருப்பதேயாகும். தற்போது காஸா பகுதியில் நடைபெற்றுவரும் வான்வழித் தாக்குதல்கள் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான 66 ஆண்டுகால வன்முறை வரலாற்றின் தொடர்ச்சியாகும். 1967 ஜூன் மாதத்தில் ஆறு நாட்கள் யுத்தம் நடைபெற்று, இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங்க், கிழக்கு ஜெருசலம், காஸா, சிரியாஸ் கோலன் ஹைட்ஸ் மற்றும் பல பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சுமார் அரை நூற்றாண்டு கழிந்துவிட்டது. காஸா பகுதியில் இருக்கின்ற சுகாதார அமைச்சகத்தின் ஓர் அறிக்கையின்படி, தற்போதைய இஸ்ரேலின் அரக்கத்தனமான சண்டையில் குறைந்தது 196 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், 1,486 பேர் காயமடைந்துள்ளார்கள், 250க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் பிரதமர் நேடான்யாஹூ, `இஸ்ரேல் எவ்விதமான சர்வதேச `நிர்ப்பந்தத்தையும்’ பொருட்படுத்தாது என்று தடித்தனமாக கூறியிருப்பதிலிருந்து, இஸ்ரேல் காஸா பகுதிக்குள் தரைவழி மார்க்கமாக தாக்குதலைத் தொடுப்பதற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது நன்கு தெரிகிறது. நாம்இதனை அச்சுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஆதரவு எகிப்திய முன்மொழிவை பாலஸ்தீனியர்கள் நிராகரித்துள்ளதால், வான்வழித்தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டிருக்கின் றன. எகிப்திய முன்மொழிவு என்பது அரபு நாடுகளால் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் சரி என்று ஏற்றுக்கொள்ளும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. தங்கள் தாய்நாட்டிற்கான பாலஸ்தீனியர்களின் உரிமைகளுக்காக ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இந்தியாவும் குரல் எழுப்புவதற்கு பதிலாக, இப்போதைய பாஜக அரசாங்கம் இஸ்ரேலையும் அதன் புரவலரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் குஷிப்படுத்திடும் வகையில் வளைந்து கொடுப்பதாகவே தோன்றுகிறது. இச்செயல் பாலஸ்தீனியர்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு இந்தியா இதுநாள்வரை அளித்து வந்த ஆதரவிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் நம்பிக்கை துரோகம் இழைப்பதுபோல் நடந்துகொள்வது மட்டுமல்ல, நமதுநாடு இதுநாள்வரை மிகவும் உறுதி யானமுறையில் கடைப்பிடித்து வந்தஅயல்துறைக் கொள்கை நிலைப்பாட் டிற்கும் முற்றிலும் தலைகீழானதாகும்.
சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறி செயல்பட்டுக்கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு ஆதரவான முறையில் கைகட்டி வாய் பொத்தி இயங்க முன்வந்திருக்கும் பாஜக அரசாங்கத்தின் நிலைப்பாடும் அதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக மாறியிருப்பதும் நம் நாட்டு மக்களின் நலன்களுக்கு நல்லதல்ல என்பதோடு, இதுநாள்வரை ஒடுக்கப்பட்ட நாடுகள் மற்றும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் சுதந்திரமான நாடு இந்தியா என்று உலக நாடுகளின் மத்தியில் நிலவிவந்த இந்தியாவின் நற்பெயருக்கும் தீங்கு பயக்கக்கூடியதாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்காக இவ்வாறுகைகட்டி நிற்பது என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. நாட்டு மக்கள் சார்பாக உலகிற்கு உறுதியானமுறையில் தன் கருத்தினை வெளிப்படுத்தி இந்திய நாடாளு மன்றம் தன் இறையாண்மையை நிலை நிறுத்திட வேண்டும்.
தமிழில்: ச.வீரமணி
No comments:
Post a Comment